நம் குரல்

Thursday, January 13, 2011

ஓராயிரம் உதடுகள்


போர்க்களத்திலிருந்து
இறுதி நிலவரத்தோடு
புறப்பட்டு வருகிறேன்

மனம் வெதும்பி
வேதனைத் தீயில் கருகாதே
என் மாணவத் தோழா!

விசாரித்துப் பார்த்தேன்
வெற்றி முகாமில் உன் பெயர்
உச்சரிக்கப்படவில்லை

ஏவுகணையும் எறிகணையும்
உன்னை உலகம் கடத்தியதாக
ஊரெங்கும் பேச்சு

நீ வித்தைகளைப்
படித்துக் கிழிக்கவில்லையாம்
படித்தனயாவும் உன்னைக்
கிழித்துப்போட்டதாக
ஊருக்குள் உயிரோடு உலவுகிறது
ஒரு கிசுகிசு

வியூகங்களையெல்லாம் யோசிக்காமல்
போர்க்களம் நோக்கி
அவசரமாய்ப் புறப்பட்டதாக
உன் மீது வருகிறது குற்றச்சாட்டு

முன்பு வாயெல்லாம் பற்கள்
இன்று கவலைக் குளங்களில்
உன் கண்கள்

எழுந்து வா தோழா!
தனிமைச் சிறைக்குள் புகுந்து
உடைந்து போகாதே!

கண்ணீர் நதியில் மூழ்கி
கரைந்து போகாதே

சோகங்களைக் கைகுலுக்கிச்
சொந்தம் பாராட்டாதே

சூழ்ச்சிகளின்
சூட்சமம் அறி

வெற்றி தேவதையின்
முகவரி தேடு

எதிர்வரும் தடைகளை
உடைத்துப் போடு

அடுத்த போருக்கு
ஆயுதம் தயாரி

அசுரப் பயிற்சிக்கு
உன்னை ஆளாக்கு

இதுவே இறுதிப் போரென
உன்னிடம் இயம்பிய
புல்லன் யார்?

இன்னும் இருக்கிறது
போர்க்களம்

உன்னை அலங்கரிக்க
வெற்றி மகுடமும்
உன் பெயரை உச்சரிக்க
ஓராயிரம் உதடுகளும்
காத்துக்கிடக்கின்றன!

No comments:

Post a Comment