நம் குரல்

Sunday, June 15, 2014

ஒரு கனவு நனவாகிய தருணம்...


என் அன்பு மகள்  கனிமொழியாள் நேற்று (14.6.2014)  மருத்துவத்துறையில் பட்டம் பெற்றாள். மணிப்பால் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வு மலாக்கா நகரில் நடைபெற்றது.  இந்த இனிய நன்னாளில் உறவினர்களும் உடன் வந்து மகிழ்வைப் பகிர்ந்துகொண்டனர். 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்' நிலையை நானும் என் அன்பு மனைவியும் அடைந்தோம். கல்வியில் தங்களின் இலக்கை எட்டிப் பிடிக்கும் பிள்ளைகளைக் காண்பதைவிட பெற்றோருக்கு வேறு என்ன பெரும் மகிழ்ச்சி இருக்க முடியும்?








Wednesday, June 4, 2014

வீடு திரும்புதல்




‘உலகம் என் வீட்டு வாசல்படியில் இருந்துதான் துவங்குகிறது. தெருக்கள், கிராமங்கள், நகரங்கள், கடல், மலை என்று உலகம் தன்னை எத்தனையோ கிளைகளாக விரித்துக்கொண்டு இருந்தபோதிலும் எனது பயணத்தில் அவை கண்ணுக்குத் தெரியாத ஒரு சங்கிலியால் என் வீட்டோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன்’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘தேசாந்திரி’ நூலின் முன்னுரையில் எழுதிய இந்த வரிகளைப் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாசித்தபோது நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த பழைய வீட்டின் நினைவலைகளில் நீந்தத் தொடங்கினேன்.

இளம் வயதில் நான் வாழ்ந்த வீட்டிலிருந்து பயணப்பட்டுக் கால்கள் வெகுதொலைவுக்குச் சென்று விட்டாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சங்கிலி என் பழைய வீட்டின் நினைவுகளோடு சேர்த்துப் பிணைத்திருப்பதை நான் உணர்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த வீடு தோட்டப்புறத்தில் ‘லயங்கள்’ எனப்படும் தொடர்வீடுகளில் அமைந்திருந்தது. என் வாழ்வில் பதினெட்டு ஆண்டுகளைச் சாயம் இழந்த அந்தப் பலகை வீட்டில் கழித்தேன். தோட்டத்தில் மகாமாரியம்மன் கோயிலுக்கு இடப்பக்கமாக இருந்த இரண்டு லயங்களின் வீடுகளில் எங்கள் வீடும் இருந்தது. உண்மையில் என் குடும்பத்துக்கு உரிமையான வீடு அல்ல. தோட்டத்தில் வேலை செய்யும் வரை தொழிலாளர்களுக்கு உரிமையான வீடு.  வீட்டுக்கு முன்னே ஆட்டுக்கொட்டகை, கோழிக்கூண்டு, காய்கறித்தோட்டம், தென்னை மரங்கள், ரப்பர்த்தோட்டம் எனப் பசுமை போர்த்திய நிலம். வீட்டிற்கு முன்னே அண்ணாந்து நோக்கினால் தொலைவில் உயரமான இடத்தில் தோட்ட நிர்வாகியின் பங்களா தெரியும். அது தொழிலாளி - முதலாளி இடையே வர்க்கபேதத்தைக் கண்முன் நிறுத்தும் காட்சியாக விரியும்.

எப்போதும் உயிர்ப்போடு இருக்கும் தெரு. குறிப்பாக, மாலை வேளைகளில் பரபரப்பான மனிதர்களின் நடமாட்டம் அதிகமிருக்கும். வீட்டிற்கு வெளியே, பால் மரங்களைச் சீவும் உளிகளை அல்லது கத்திகளைக் கூர்மைப்படுத்துவது, ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது, குப்பைகளைக் கூட்டி முன்புறத்தைத் தூய்மை செய்வது, காய்கறித் தோட்டத்தில் வேலை செய்வது என அவரவரும் ஏதாவது வேலையில் மூழ்கியிருப்பார்கள். சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாட்டில் ஆர்வமாயிருப்பார்கள்.  வீடுகள் அருகருகே அமைந்திருந்ததால் பேச்சில் தோட்ட மண்ணுக்கே உரிய கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும்.

எங்கள் வீடு இரண்டு அறைகள் கொண்ட எளிய சிறிய வீடு. அப்பா, அம்மா, அத்தை, அண்ணன், அக்காள், நான், தம்பிகள் இருவர் என எண்மர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு வசதியில்லாத வீடுதான். ஆனாலும் அது மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. வரவேற்பறையே உணவருந்தும் இடமாக, படிக்கும் அறையாக, படுக்கையறையாக பல அவதாரங்கள் பூண்டது. வீட்டிற்கு முன்னே இருந்த எங்கள் ஆட்டுக்கொட்டகையிலிருந்து ஆட்டுக்குட்டிகள் வீட்டிற்கு ஓடிவரும். பசும்பா¨ப் போத்தலில் நிரப்பி அவற்றுக்குக் கொடுப்பேன். வாசலில் நாய்க்குட்டி எங்கள் வீட்டின் இன்னோர் உறுப்பினராகி எங்களை வரவேற்கும்.

இரவில் பதினொன்று மணிக்குமேல் தோட்டத்தில் மின்சார விநியோகம் இல்லை. தோட்டமே இருளில் மூழ்கி விடும். எத்தனையோ இரவுகள் படிப்பதற்காக மெழுகுவர்த்திகளோடு போராடியிருக்கிறேன். ஒருமுறை பாய்விரித்த தரையில் படிப்பதற்காகப் பயன்படுத்திய மெழுகுவர்த்தியை அணைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை ஐந்து மணிக்கு அண்ணன் பதற்றத்தோடு எழுப்பினார். அதிசயமாய் அன்று என் தலையிலிருந்து நழுவிய தலையணை புகைந்துகொண்டிருந்தது. வீடு முழுக்க கடும்புகையின் ஆட்சி. எல்லாரும் பயந்துபோனோம். தலையணையைக் கொண்டுபோய் வெளியே வீசியபோது அதில் கனன்ற தீ என்னைக் கடந்துபோன ஆபத்தை உணர்த்தியது. இன்னொரு முறை பலகைச் சட்டத்தில் வைத்த மெழுகுவர்த்தியால் தீப்பற்றிக்கொள்ள எப்படியோ  கண்விழித்த அத்தை அதை அணைத்தார்.

தீபாவளிக்குப் புதிய சட்டையோ காலணியோ கிடைக்காத காரணத்தால் போர்வைக்குள் புதைந்துகொண்டு அப்பா அம்மாவோடு முரண்டு பிடித்தது, உடன்பிறப்புகளோடு சண்டையிட்டது, ஆடு தொலைத்து அப்பாவிடம் அறை வாங்கியது, அம்மாவிடம் ஏதோ வருத்தம் ஏற்பட்டு அப்பா கோபித்துக்கொண்டு ஒரு நாள் வீட்டை விட்டுப் போனபோது ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றது, அம்மா மேல் பலகையில் ஒளித்துவைத்த பிஸ்கெட்டை எடுக்க அலமாரியில் ஏறியபோது, அலமாரி சாய்ந்து தம்பியின் மேல் விழுந்தது, விளையாடும்போது அண்ணனின் தலையைச் சன்னல் சட்டத்தில் பிடித்துத் தள்ளிக் காயத்தை ஏற்படுத்தி அது நெற்றியில் மாறாத தழும்பானது, எல்லாரும் தூங்கும் பின்னிரவு நேரத்தில் அவ்வப்போது விழிப்பு வந்து, குசினியில் (சமையலறையில்) அம்மா மறைத்துவைக்கும் மைலோ, ஹோர்லிக்க்ஸ் மாவை அள்ளி வாயில் போட்டது, கடுமையான குளிர்காய்ச்சலில் அப்பா படுத்த படுக்கையாகி அவதிப்பட்டது, இப்படி நினைவுகளை விலக்கிப் பார்த்தால் எத்தனையோ காட்சிகள் அந்த வீட்டில் அரங்கேறியதை என் மனம் அவ்வப்போது அசைபோடுகிறது. மகிழ்ச்சியில் நனைத்த, துன்பத்தில் துவைத்த பல நிகழ்வுகள் அடிமனத்தில் ஆழத்தில் இன்னும் அப்படியே அதன் கனம் குறையாமல் மூழ்கிக் கிடக்கின்றன. பூமியின் மடியில் ஏதோ ஒரு புள்ளியில் கூரான ஆயுதத்தால் நெம்பியவுடன் குபுக்கென பொங்கிவரும்
திரவம்போல் இப்பொழுது எழுதுகோல் தீண்டியவுடன் பழைய நினைவுகள் புற்றீசல்போல் புறப்படுகின்றன.

வாழ்ந்த வீட்டைப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், மனைவி பிள்ளைகளுக்குக்  காட்டுவதற்காக அழைத்துப் போனேன். தோட்டத்தின் முகமும் முகவரியும் மாறிக்கிடந்தன. சுங்கைசோ தோட்டம் ‘தாமான் தெராத்தாய்’ எனும் நாமம் தாங்கி நின்றது. தோட்டத் தொழிலாளிகளுக்குப் புதிய வீடுகள் கட்டப்பட்டதால் பழைய வீடுகள் அழிக்கப்பட்டிருந்தன. ஆனால், எப்படியோ மாரியம்மன் கோயிலுக்கு இடப்பக்கம் இருந்த எங்கள் லயத்தின் வீடுகள் கொஞ்சம் உடைப்புகளோடு நின்றுகொண்டிருந்தன. பழைய மண்சாலையின் தடத்தில் பாதைதேடி மண்டியிருந்த புதரை விலக்கிக்கொண்டு நடந்தோம். வீடுகளின் சிதலங்கள் இறைந்து கிடந்தன.

ஏழு வீடுகளைக் கடக்கிறோம். உயிரோட்டமான பழைய தெருவும் அங்கு நடமாடிய மனிதர்களின் முகங்களும் என் கண்முன் நிழலாடின. செல்லையா, ராமாயி, குப்பாயி, சின்னக்காளை கங்காணி, உத்திரம், மீனாட்சி, கிருஷ்ணவேணி எல்லாம் எங்கே போனார்கள்? காலச் சுழற்சியில் நம்மோடு பழகியவர்கள் எங்கெங்கோ போய்விடுகிறார்களே! அந்தத் தெருவில்தானே நான் சிறு பையனாய் வயது ஒத்த தோழர்களோடு ஓடியாடி விளையாடினேன். என்னுள் மையங்கொண்ட உணர்வலைகள் அவிழ்ந்து  சோகமாக நிறம் மாறத்தொடங்கின.

எட்டாவதாக இருந்த என் வீட்டிற்கு வருகிறேன். ஆங்காங்கே  பெயர்ந்துபோன பலகைகள். வீட்டின் சிதலங்கள் இறைந்து கிடந்தன. பச்சைத் தாவரங்கள் ஆளற்ற வீட்டை முற்றுகையிடத் தொடங்கியிருந்தன. நான் ஒரு கணம் வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். இப்படி ஒரு நாள் வீட்டைப் பார்க்கத் திரும்பி வருவேன் என்று எப்போதாவது நினைத்திருப்பேனா? இந்த வீட்டு வாசலில்தானே அண்ணன், அப்பாவைக் கிடத்தி வைத்து அழுது புலம்பினேன். எத்தனை நாள் இந்த வீட்டு வாசலில் அமர்ந்து வானொலியில் பழைய பாடல்களையும் வானத்தில் நிலாவையும் ரசித்திருப்பேன். கண நேரத்துக்குள் கால இயந்திரத்தில் பயணித்து பழைய வாழ்க்கையில் மனம் தலை நனைத்தது. காட்சிகளை மாற்றிப்போடும் காலத்தின் மந்திரக் கைகளை எண்ணி வியந்தேன்.

மகளுக்கு ஏழு வயது. மகனுக்கோ ஐந்து வயது. என் அனுபவத்தை உணரவோ நெருங்கி வரவோ முடியாத நிலை. இருந்தும் அவர்களிடமும் மனைவியிடமும் அங்கு நிகழ்ந்த என் பழைய வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். தூய்மையான நகர்ப்புற வாழ்க்கையில் வளரும் என் பிள்ளைகளுக்கு அந்தப் புதை மண்டிய சூழலும் உருக்குலைந்து நிற்கும் வீடுகளும் முகச்சுளிப்பை ஏற்படுத்தின. புதைந்துபோன நினைவுகளைச் சேகரித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

ஓராண்டுக்குப் பிறகு நண்பரைச் சந்திக்க அங்குச் சென்றபோது, எல்லா வீடுகளும் முற்றாக அழிக்கப்பட்டு புல்லும் புதரும் மூடிமறைத்திருக்கக் கண்டேன். வீடுகளுக்கு முன்னே இருந்த சில மரங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. வீடு பற்றிய நினைவுகளைச் சில கவிதைகளில் அவ்வப்போது பதிவுசெய்துள்ளேன். இதோ அவற்றில் நான்கு கவிதைகள்:

 கவிதை 1

பாதை நெடுக புற்கள் மண்டி
சிமெண்டுத் தரை மண்ணில் புதைய
சாயம் வெளுத்த பலகை மக்கி
பச்சைத் தாவரம் எங்கும் பரவ
கலைந்து கிடந்த வீட்டின் முன்னே
நான் நின்றேன் தனியாக
மனைவி பிள்ளைகளோடு

என் முன்னே
இன்னும் நிறம் வெளுக்காத வீடு
படுத்துறங்கிய சிமெண்டுத் தரை
என் புத்தக அலமாரி
அழகான லயங்கள்
என்னோடு விளையாடும் தோழர்கள்
வாசலில் படுத்திருக்கும் நாய்
வீட்டுக்கு ஓடிவரும் செவல ஆட்டுக்குட்டி
சாயுங்கால பரபரப்பு மனிதர்கள்
இரவில் நிலா பார்க்கும் பிராஞ்சா
அப்பா, அண்ணனைக் கிடத்தி
கத்திக் கதறிய வாசல்..

என் கையைப் பிடித்து இழுத்து
மகள் கூறுகிறாள்:
“அப்பா, இந்த வீட்லயா இருந்தீங்க?
வாங்க போகலாம்”
                 
கவிதை 2

நினைவின் நதியில்
நீந்தி நீந்திக்
கரையேறிக்கொண்டிருக்கிறது
பழைய வீடு

அதன் சன்னலோரத்தில்
மாலைநேரத் தேநீர்க் கோப்பையோடு
மகிழ்ச்சி பொங்கும்
என் முகத்தை மாட்டி வைத்திருக்கிறது

உள்ளேயிருந்து வெளியேறும்
எல்லா முகங்களும்
கரைந்து போகாமல் சேமிக்கிறது

உடைந்த பலகைகள்
உருக்குலைந்த சிமெண்டுத்தரை
இவற்றின் சித்திரத்தைத்
தன்மேல் வரைந்திருக்கிறது

கரையேறிய வீடு
என் வீட்டிற்குள் நுழைந்து
ஓவியமாய் நிற்கும்
அதன் படத்தில் நுழைந்து
என்னையும் உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது

                  கவிதை 3

மௌனம் பூசிய வீட்டின் சுவரில்
காது வைத்துக் கேட்டேன்
விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது
எனக்கு மட்டும் புரிந்த
அதன் முனகல் மொழி

கோபத்தின் உச்சியில்
வீசியெறிந்ததையும்
அன்பின் நெகிழ்ச்சியில்
கரைந்ததையும்
காதுகளில் ரகசியமாய்ப்
பரிமாறப்பட்டதையும்
ஒன்றுவிடாமல் தனக்குள் வாங்கிச்
சேமித்து வைத்திருக்கிறது

தனிமை என்னைத் தழுவும்போதெல்லாம்
சேமித்த மொழிகளை
என் முன்னே அவிழ்க்கத் தொடங்குகிறது
அவற்றோடு குரல்களும் முகங்களும்
சேர்ந்தே வருகின்றன

ஆண்டுக்கொருமுறை சாயம் பூசி
அதன் நிறத்தை மாற்றினாலும்
பழைய மொழிகளைச்
சுருதி மாறாமல்
ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது

அதன் மேல் தலைநீட்டிப் பார்க்கும்
பல்லியைப்போல்
சேமித்த அதன் மொழிகளுக்குள் நுழைந்து
கரையேறிக்கொண்டிருக்கிறது மனம்

                     கவிதை 4

 வெளியில் பயணப்பட்ட
கால்களின் பாதைகள் எல்லாம்
தொடங்கிய இடம் தேடி வர
தன் கதவுகளைத் திறந்து
உள்ளிழுத்துக்கொள்கிறது வீடு

எல்லா அறைகளிலும்
இன்னும் சொல்லாத கதைகள்
புதைந்து கிடக்க
தன் இதழ்களில்
புன்னகையைப் படரவிடுகிறது

வீட்டிலிருந்து புறப்பட்ட
பல இரகசிய வழிகளில்
கசிந்துகொண்டிருக்கின்றன
குதூகலமும் கண்ணீரும்
கனவுகளும் கற்பனைகளும்

உள்ளே நுழையும்
ஒவ்வொருவரையும் படமெடுத்துக்கொண்டு
வெளியே செல்ல அனுமதிக்கிறது வீடு

வாழ்ந்த வீட்டை வெறும் பலகையாலும் செங்கல்களாலும் சிமெண்டாலும் பூசி உருவாக்கப்பட்ட பொருளாக மட்டும் நினைக்க முடியவில்லை. என்னோடு நெருங்கிய உறவாகவே அதை நினைக்கிறேன். வீடு வெறும் வீடு மட்டுமல்ல. அது பால்யத்தின் சந்தோச கணங்களின் சரணாலயம். இளம்பருவத்தில் கனவுகள் மலர்ந்த மலர்வனம். மகிழ்ச்சியையும் துன்பத்தையும் இருகை நீட்டி பகிர்ந்துகொண்ட உறவு. நம் பழைய முகத்தின் பிம்பத்தை தன் சுவர்களில் ஒட்டிவைத்து நமக்கு நினைவுபடுத்தும் கண்ணாடி. காலத்தின் கைகள் கலைத்துப்போட்டாலும் நினைக்கும் கணத்தில் பழைய கோலத்தில் எழுந்து நிற்கும் ஓவியம்.

                    ‘மனிதர்கள் தொலைந்த ஒரு நாளில்
                    வீடு முகம் மாறிப்போனது’

என்று கவிஞர் அ.வெண்ணிலா எழுதுகிறார். வாழ்ந்த வீட்டை இழந்தவர்களால்தான்  இந்த வரிகளில் இழையோடும் சோகத்தை உள்வாங்கி உய்த்துணர முடியும். வீட்டையும் உடைமைகளையும் மண்ணையும் வாழ்வையும் இழந்து முள்வேலிகளுக்குள் சிறையாகிக் கிடக்கும் ஈழத்து மக்களைவிட யாரால் இந்த வேதனையை ஆழமாய் உணர முடியும்?
       

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..



வெளிச்சம் தவிர்த்த இருளில் தனிமை இருந்தது
அந்தத் தனிமை இதமாக இருந்தது
தனிமையில் சுதந்திர உணர்வு கலந்திருந்தது
தனிமையில் வேவு பார்க்கும் கண்கள் இல்லை
வாயிலிருந்து விரும்பியவாறு சொற்கள் உதிர்ந்தன
கால்கள் விரும்பிய திசையில் பயணப்பட்டன
தனிமையில் இரகசியங்கள் இருந்தன
இரகசியங்கள் மனத்தில் மறைந்திருந்தன
இரகசியங்கள் சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தன
இரகசியங்களில் அழுக்குகள் இருந்தன
இரகசியங்களில் காயங்கள் இருந்தன
இரகசியங்களில் கண்ணீர்த் துளிகள் இருந்தன
இருளில் எதுவும் வெளியில் தெரியவில்லை
இருளின் தனிமை கம்பளியாய்ப் போர்த்தியிருந்தது
அந்தத் தனிமை சுகமாய் இருந்தது
வெளிச்சம் பரவியதால் இருள் மறைந்தது
இருளிலிருந்த தனிமை தன்னை இழந்தது
ஒளிவெள்ளம் அதன் கண்களைக் கூசச் செய்தது
தனிமையின் சுதந்திர உணர்வு குறைந்தது
வாய்ச்சொற்கள் நிதானிக்கத் தொடங்கின
கால்கள் யோசிக்கத் தொடங்கின
இகசியமாய் மறைந்திருந்த அழுக்குகள் காயங்கள்
கண்ணீர்த்துளிகள் ஒளிவெள்ளத்தில் அம்பலமாயின
இன்னும் இரகசியமேதும் மிஞ்சியுள்ளதா?
சுற்றிலும் வேவு பார்க்கும் கண்கள்


வெளிச்ச வெள்ளம் பரவி
உடலெங்கும் ஊடுருவினாலும்
ஒளிமழையில் நனைந்து அனுபவிக்க
நகர்ந்துகொண்டே இருக்கின்றன
கால்கள்
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..
     

வாழ்வு தேடி..



நகரப் பெருவெளியின் இடுக்குகளில்
கட்டடக் காடுகளின் கிளைகளில்
கூடுகட்ட இடம்தேடி
அலுத்துத் திரும்புகின்றன
அந்தப் பறவைகள்

ஆகாயம் கொத்தும் அதன் அலகுகளில்
தட்டுப்படுகின்றன
அவற்றின் நினைவுச் சரங்களில்
கோர்க்கப்பட்ட மணிகளாய்
நகரப் பெருவெளியின் மண்ணில் புதைந்த
பழைய காடும் அதன்  பசுமையும்

எங்காவது வீதியோரத்தில்
தானியங்களை வீசும்
கருணைக் கைகளை எதிர்பார்த்து
அவை ஏமாந்து திரும்புகின்றன

எதிர்பாராத் தருணங்களில்
கொடூரக் கைகளிலிருந்து
வந்து விழும்
கற்களால் விரட்டப்படுகின்றன

நிச்சயமின்மை விரவிக்கிடந்தாலும்
ஒவ்வொரு நாளும்
கூடு கட்டும் ஆசையைச் சுமந்தபடி
மீண்டும் மீண்டும் பறந்து
நகரக் காற்றைச் சுவாசிக்கின்றன

காற்றுவெளியில் கசிந்து கரையும்
அதன் சோக இராகங்களில் சுருதிகள்
யார் காதுக்கும் எட்டுவதில்லை

பறவையாய்ப் படைக்கப்பட்டதால்
பறந்துகொண்டே இருக்கின்றன

பரபரக்கும் கால்கள்
அவற்றைப் புறக்கணித்தவாறு
தம் போக்கில் பயணப்பட்டாலும்

பறந்துகொண்டே இருக்கின்றன
சுயநலத்தில் தோய்ந்த
இரக்கமில்லா இதயங்கள் மிதக்கும்
வெளியைக் கடந்தபடி

குளிர்விட்டுப் போனதால்..




அந்த மலைப்பகுதியின் காலைப்பொழுதில்
உடலில் ஊடுருவி நடுங்க வைக்கும்
குளிரை விசாரித்தபடி
வளைவான சாலையின் இடுப்பில்
பயணமான பேருந்தின் வெளியே
கண்ணில் பதிந்தது அந்தக் காட்சி

உடலோடு ஒட்டிய குளிராடை எனினும்
குளிர்வதை தாங்காது மிக நெருக்கமாய்
இடைவெளி இல்லாது நெருக்கியபடி
சாலையோரச் சுவரில் ஏறி அமர்ந்தபடி

பழகிப்போனதால் கைகளை நீட்டி
யாசிக்கும் அழகான குரங்குகளை நோக்கி
நீட்டினோம்
கைகளிலிருந்த பிஸ்கட்டுகளை

குரங்குகளைப் போலவே
மனிதர்களும்

குளிர்விட்டுப் போனபின்னே
தங்களிடையே இடைவெளி தெரிய
தள்ளி நின்று முறைத்துப் பார்த்து
ஒன்று மற்றொன்றைத் தள்ளிவிட்டு
ஏதாவது கிடைக்குமென்று கையைநீட்டி
தன் உறவுக்கு மட்டும் சேகரித்தபடி
தம் கூட்டத்துக்கு மட்டும் வாய்ப்பு என்றபடி
தோல் நிறம் மாறுபட்டவனை வெறுத்தபடி