Tuesday, May 8, 2012

புதுக்கவிதை புனையாதே (நாடகம்)


காட்சி 1
(விஜயபுரி நாட்டின் தலைநகர் ராஜபாளையம். பரபரப்பு மிகுந்த நகரின் நடுவேயுள்ள மேடையில் பறை அறிவிப்போனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அவனின் அறிவிப்பைக் கேட்க மக்கள் ஆவலுடன் மேடையை முற்றுகையிடுகின்றனர்.)

பறை அறிவிப்போன்: நாட்டு மக்களுக்கோர் புதுச்செய்தி. நற்றமிழ்ப் புலமை மிக்க இலக்கணப் புலிகளுக்கு இனிக்கும் செய்தி! புதுக்கவிதைப் பிரியர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி! மரபுக் கவிதை மன்னர் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் இனி, பேச்சும் மூச்சும் மரபாக இருக்கவேண்டும் என்பது மன்னரின் ஆணை! புதுக்கவிதை என்று புலம்புவோர் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களின் எழுதுகோல்கள் பறிமுதல் செய்யப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள்.

(வழிபோக்கர் இருவர் பறையறிவிப்பு கேட்டு காதைக் கடிக்கிறார்கள்)

வழிபோக்கன் 1: அநியாயமாக இருக்கிறதே! இந்த அக்கிரமத்தைக் கேட்க நாதியில்லையா? நீதி இங்கே செத்து விட்டதா?

வழிபோக்கன் 2: யாரப்பா நீ?

வழிபோக்கன் 1: நானா? என்னைத் தெரியாதா? நான் தான் புதுக்கவிதைப் போராளி நவீனன்.

வழிபோக்கன் 2: ஓ! புதுக்கவிதைப் போராளியா? ஏனப்பா புலம்புகிறாய்? எது அநியாயம்?

வழிபோக்கன் 1: இதுவரை மரபோ, புதிதோ மக்கள் தாங்கள் விரும்பியதைச் சுதந்திரமாக எழுதினார்கள். இனி இதைத்தான் எழுதவேண்டும் எனச் சட்டம் போடுவது அநியாயம் இல்லையா?

வழிபோக்கன் 2: அது எப்படி அநியாயம் ஆகும்? புதுக்கவிதை என்று கண்டதைக் கிறுக்கி, நல்ல தமிழ் ஏடுகளில் குப்பைகொட்டியவர்களின் கொட்டத்தை அடக்குவது எப்படி ஐயா அநியாயம் ஆகும்? இது நல்ல காரியம்தானே?

வழிபோக்கன் 1: ஆமாம். மரபுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் யார்? மரபுக்கவிஞரோ?

வழிபோக்கன் 2: இல்லையப்பா. வெறும் வழிபோக்கன்தான்.

வழிபோக்கன் 1:  வெறும் வழிபோக்கனுக்கே இவ்வளவு வாய்க்கொழுப்பா? நிறுத்தும் ஐயா, நிறுத்தும். ஏதேது விட்டால் புதுக்கவிதை எழுதுவோரை நாடு கடத்துவதற்கும் சிபாரிசு செய்வீர்கள் போலிருக்கிறதே! இருக்கட்டும், இருக்கட்டும் புதுக்கவிதை ஆட்சி ஒரு நாளைக்கு புலராமலா போகப்போகிறது? அப்போது மரபைக் கட்டி அழுபவர்கள் மண்டியிட்டே ஆகவேண்டும்.

வழிபோக்கன் 2:  அப்படி ஒருக்காலும் நடக்காது. முதலில் உம் வாயைக் கழுவும். அருவருப்பாகப் பேசி என்னிடம் அறை வாங்கிக் கொள்ளாதீர்கள்.

வழிபோக்கன் 1:  அறை வாங்குவதா? உம்மை உதைக்காமல் போனால் புதுக்கவிதை என்னை மன்னிக்காது..

(இருவரும் குத்துக்களைப் பறிமாறிக்கொண்டு சட்டையைக் கிழித்துக்கொண்டு தரையில் உருள.. புலவர் கவிராயரின் தாடி கையோடு வந்துவிட நவீனன் அதிர்ச்சி அடைகிறான்.)

வழிபோக்கன் 1: ஆ.. தாடி.. அப்படியானல் நீங்கள் யார்? ஏன் இந்த மாறுவேடம்?

(வழிபோக்கன் 2 முகம் மறைத்து ஓடுகிறான்)

வழிபோக்கன் 1: இவரைப் பார்த்தால் அரண்மனைப் புலவர்போல் உள்ளதே! புலவர்க்கு ஏன் மாறுவேடம்? உளவு பார்க்க வந்தாரோ? வழக்கமாய் மன்னர்தானே மாறுவேடத்தில் வருவார்? அதுதானே மரபு! இது மரபுக்கு மீறிய செயலாக உள்ளதே! ஒன்றும் புரியவில்லையே!

(திரை)
காட்சி 2
(நகரை ஒட்டியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீடு. அங்குத் தன் அறையில் எழுதுகோலோடும் ஏடுகளோடும் போராடிக்கொண்டிருக்கிறான் புதுக்கவிதைப் போராளி நவீனன். உள்ளே நுழைகிற அவன் மனைவி மல்லிகா, மன்னனின் ஆணையை நினைவூட்டி அவனை வம்புக்கிழுக்கிறாள்)

நவீனன்: (எழுதிய கவிதையை வாசிக்கிறான்) நட!  இன்றுமட்டுமல்ல. நாளையும் உன்னுடையதுதான் நட! வெற்றி தேவதை உன் விலாசத்தை விசாரிக்கும்வரை நட!
   உன் கனவுகளைக் கலை! உறக்கத்தை உதறு! சோம்பலைச் சமாதியாக்கு! அவநம்பிக்கையை அறு! சுறுசுறுப்புக்குச் சுருதியேற்று! உத்வேக எண்ணங்களை உனக்குள் விதை! வெற்றிக்கனி மடியில் விழும் வரை நட! (முகத்தில் பெருமித உணர்வு தென்படுகிறது)

மல்லிகா: என்ன இது? இன்னுமா புதுக்கவிதை எழுதுகிறீர்கள்? மன்னரின் ஆணை உங்கள் காதுக்கும் வந்ததுதானே?

நவீனன்:  வராமலா? வந்தது! காதுக்கு வந்ததைக் காதளவில் நிறுத்தி கதவடைப்பு செய்துவிட்டேன். என் உயிரனைய புதுக்கவிதையை எழுதாதே என்று எந்தக் கொம்பன் சொன்னாலும் காது கொடுத்துக் கேளேன். எனைத் தொந்தரவு செய்யாதே மல்லிகா போய்விடு!

மல்லிகா:  என்ன இது விபரீதம்? மன்னரின் ஆணையை - மக்கள் தலைவனின் கட்டளையைக் குடிமக்கள் மீறுவது மரபல்லவே! உங்களுக்கு இது மறந்தா போய்விட்டது?

நவீனன்:  மறப்பேனா? மரபையே மீறிவிட்டுப் புதுக்கவிதைப் போர்க்களத்தில் வாள் ஏந்திப் போராட வந்துவிட்டவன் நான். என்னிடம் போய் மன்னரின் ஆணையை மீறுவது பற்றி அளக்க வந்துவிட்டாயாக்கும்! போ..போ! நான் கவிதையை எழுதி முடிக்கவேண்டும். பொங்கிவரும் என் கற்பனையைக் கெடுக்காதே!

மல்லிகா: ஐயையோ.. புதுக்கவிதை போதை தலைக்கு ஏறி என்னன்னவோ கூறுகிறீர்களே! இனி மேலாவது உங்கள் புதுக்கவிதை அறுவைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்த்தால் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?
நவீனன்:  புதுக்கவிதையின் மகத்துவம் தெரியாதவளே! என்ன வார்த்தை கூறிவிட்டாய்? அறுவை என்று கூறி என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற எப்படித் துணிந்தாய்? புதுக்கவிதையில் உன்னைத் திட்டித் தீர்க்கும் முன் எட்டிப்போய்விடு!

மல்லிகா:  போதும் உங்கள் வீராப்பு! புதுக்கவிதையில் என்னைத் திட்டினாலும் தீட்டினாலும் எல்லாம் இனி வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே போய் உங்கள் வீரதீரத்தைக் காட்டி  விடாதீர்கள்! பிறகு மாட்டிக் கொள்வீர்கள்!

நவீனன்: வீட்டில் மட்டுமல்ல! நாட்டிலும் நடு ரோட்டிலும் எங்கும் என் புதுக்கவிதையின் போரொலி ஒலித்துக்கொண்டே இருக்கும். மரபு என்கிற மாய வலையால் என்னைக் கட்டிப்போட முடியாது!

மல்லிகா:  அப்படியானால் நீங்கள் சிறைக்குப் போகவும் தயாரா?

நவீனன்:  சிறைக்கு என்ன? தூக்குமேடைக்குப் போகவும் சித்தமாக இருக்கிறேன்! அழைப்பு வரட்டும்! காத்திருக்கிறேன்!

(அப்போது வீட்டின் கதவு ‘படபட’ வென்று கதவு தட்டப்படுகிறது.)
யார் உள்ளே,  கதவைத் திறங்கள்!

நவீனன்: இதோ அழைப்பு வந்துவிட்டது! விடைகொடு மல்லிகா!

மல்லிகா:  ஐயோ! வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டீர்களே! (அழுகிறாள்)

மல்லிகா கதவைத் திறக்கிறாள். அரண்மனைக் காவலர்கள் இருவர் முகத்தில் கோபம் கொப்பளிக்க விரைவாக உள்ளே நுழைந்து, மன்னரின் ஆணையை மீறிய நவீனனைத் தரதரவென்று இழுத்துச் செல்கிறார்கள்

காட்சி 3
(மரபுக்கவிதை மன்னர் விஜயவர்மனின் அரச சபை. புலவர் பெருமக்கள் பட்டுப் பீதாம்பரங்களில் பழைய மிடுக்கோடு வீற்றிருக்கின்றனர். நூற்றுக்கும் குறையாத புதுக்கவிதைப் போராளிகள் நவீனன் தலைமையில் குற்றவாளிகளாகக் குவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உடல்களில் ஆங்காங்கே காயங்கள் தென்படுகின்றன)

புலவர் கவிராயர்:  மரபுக் கவிதையின் மானங்காத்த மன்னா! வாழ்க நின் வீரம்! ஓங்குக உன் புகழ்!

விஜயவர்மன்: புலவர்பெருமானே! நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களைக் கைது செய்துவிட்டோம். இனி புதுக்கவிதை எழுத இந்த விஜயபுரியில் ஆள் இருக்க மாட்டார்கள்.

புலவர்: ஆமாம் இருக்க மாட்டார்கள். நாம் இருக்க விட்டால்தானே!

விஜயவர்மன்:   ஹாஹா.. இனி மரபுக்கவிதைக்குப் பொற்காலம்தான்! ஆமாம், யார் இந்த நவீனன்? புதுக்கவிதைப் போராளியாம்! பொடியன்! யாரெங்கே? இழுத்து வாருங்கள்!

(நவீனனை இழுத்து வருகிறார்கள்)

விஜயவர்மன்: எவ்வளவு கொழுப்பு உனக்கு? பேச்சும் மூச்சும் மரபாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டும் அலட்சியப்படுத்தி விட்டாயே. மரபில்லா கவிதை உயிரற்ற உடல் என்பது சிறு குழந்தைக்கும் புரியுமே!

நவீனன்: மன்னர் மன்னா! மறுத்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். இலக்கணத்துக்குள் சொற்களை அடுக்கு அழகு பார்ப்பதுதான் கவிதை என்று பிழையாகப் பொருள் கொள்ள எங்கள் மனம் ஒப்ப மறுக்கிறது. நாங்கள் கவிதையைக் காப்பாற்றிக் போர்வாளாகக் கைகளில் ஏந்தி இருக்கிறோம்!

புலவர்:  வேடிக்கையாக இருக்கிறது மன்னா! இவர்களா கவிதையைக் காப்பாற்றியவர்கள்? கவிதை எனும் அற்புதமான வாளை வளைத்து நெளித்து பல்குத்தும் குச்சியாகப் பயன்படுத்தும் இந்தப் பாவிகளை மன்னிப்பதும் பாவம் மன்னா!
நவீனன்: தவறு கவிராயரே! தவறு! மரபு என்னும் அச்சை வைத்துக்கொண்டு நீங்கள் அச்சு முறுக்காக கவிதைகளைச் சுட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள்தானே ஏழைகளின் வேதனையை அவர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாகப் பாடினோம். இதை மறுக்க முடியுமா?

புலவர்:  எதுகையும் மோனையும் இல்லாமல் தத்து பித்து என்று உளறுவதுதான் புதுக்கவிதையா? வாக்கியங்களை உடைத்துப் போட்டால் போதுமா?

விஜயவர்மன்: நியாயமான கேள்வி! கவிதை என்ன மலிவாய்க் கிடைக்கும் கடைச் சரக்கா?

நவீனன்: மன்னா! இங்கே இலக்கணப் புலிகள் கவிதையின் வடிவத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். நாங்களோ உள்ளடக்கத்தைத்தான் உரசிப் பார்க்கிறோம்.

புலவர்:  மன்னா! ஜோக்குகளைக்கூட கவிதையென்று கூறும் இவர்களின் நாக்குகளைக் அறுக்கவேண்டும்.

நவீனன்: இவர்கள் நாக்கைத்தான் அறுக்க வேண்டும் மன்னா!

புலவர்: மன்னா, தீர்ப்பை வழங்கிவிடுங்கள்

(மன்னர் சற்று குழப்படைகிறார்.)

விஜயவர்மன்:  சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு வாய்ப்போர் தேவைதான். ஆனால், அது அக்கப்போராக ஆகிவிடக்கூடாது. இனி, இந்த கவிதைச் சர்ச்சை நாளையும் தொடரும். சபை கலையலாம்.


காட்சி 4
(மல்லிகாவின் வீடு. கணவன் கைது செய்யப்பட்டதால் கவலையாக இருக்கிறாள்.
அப்போது ஊர்த்தலைவன் மாரிமுத்து அங்கே வருகிறார்.)

மாரிமுத்து: மல்லிகா! ஏன் கவலையாக இருக்கிறாய்? உன் கணவனைக் கைது செய்து ஒரு திங்கள் ஆகிவிட்டதே! இன்னுமா விசாரணை முடியவில்லை?

மல்லிகா: (அழுதுகொண்டே) ஆமாம் ஐயா! போனவர் போனவர்தான். இன்னும் இல்லம் திரும்பவில்லை. புதுக்கவிதை எழுதுவது அப்படி என்ன பொல்லாத குற்றமோ தெரியவில்லை. இந்தக் கவிதைச் சண்டை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை.

மாரிமுத்து: (வேதனையோடு) இந்த ஜென்மத்தில் தீராது மல்லிகா!

மல்லிகா: இதை நீங்களாவது தட்டிக் கேட்கக்கூடாதா?

மாரிமுத்து: கேட்கலாமா? உள்ளூர்த் தலைவன் மாரிமுத்து என்று எனக்குப் பெயர்! ஆனால் உள்ளூரின் சிக்கலை மேலிடத்தில் சொல்லவும் வழியில்லை! பசியும் பஞ்சமும் நம்மை வாட்டி வதைக்கின்றன. பல குடும்பங்கள் வறுமை நோயால் வாடி வதங்குகின்றன.

மல்லிகா: மன்னர் என்னதான் செய்கிறார்?

மாரிமுத்து: அவருக்கும் புலவருக்கும் கவிதைச் சண்டைதான் முக்கியம். நாடும் மக்களும் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? நாட்டு நடப்பு மன்னருக்குத் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. வறுமையும் பஞ்சமும் நமக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்களோ என்னவோ!

மல்லிகா: ஐயா, இதை விடக்கூடாது. மக்களை மறந்துவிட்ட இலக்கியத்தை நாலு வார்த்தை நறுக்கின்னு கேட்டாதான் என் மனசு ஆறும்! புறப்படுங்க!

மாரிமுத்து: உன்னுடைய துணிவைப் பாராட்டுகிறேன் மல்லிகா! பொறுத்தது போதும்! இனி பொங்கி எழுவோம். மக்களா? இலக்கியமா? பார்த்து விடுவோம்!
வா, போகலாம்.

காட்சி 5
(அரச சபையில் சூடான விவாதம் நடக்கிறது. மன்னர் கவிஞர்களின் வாய்ச்சண்டையை ரசித்தபடி சிம்மாசனத்தில் சரிந்திருக்கிறார். இடையிடையே குபீரென்று வாய்விட்டுச் சிரித்துப் பூரிக்கிறார். மாரிமுத்து தலைமையில் மக்கள் திரண்டு வருகிறார்கள்)

மாரிமுத்து: வீராதி வீரரே! எங்கள் விஜயவர்மரே! மக்களின் குறைதீர்க்க உங்களை வேண்டிப் பணிகிறோம்., மன்னா

மன்னர்: யார் நீ?

மாரிமுத்து: ராஜபாளையத்தின் உள்ளூர்த் தலைவன் மாரிமுத்து

மன்னர்: என்ன குறை உங்களுக்கு திடீரென்று? ஏன் இவ்வளவு கூட்டம்? நாட்டில் கொள்ளையர் கொட்டம் கூடி விட்டதா? வானம் பொய்க்காமல் பொய்த்து விட்டதா? கடந்த ஆண்டு பஞ்சம் இந்த ஆண்டும் தலைநீட்டி விட்டதா? என்னதான் நடக்கிறது நாட்டிலே?

மல்லிகா: உங்கள் அத்தனைக் கேள்விகளுக்கும் ஆம் என்பதுதான் எங்களின் பதில் மன்னா?

மன்னர்: யார் இந்தப் பெண்?

மாரிமுத்து: உங்களால் சிறைபிடிக்கப்பட்ட நவீனனின் மனைவி மல்லிகா

மன்னர்: ஓ.. நவீனனின் மனைவியா?

மாரிமுத்து: மன்னாதி மன்னா! எங்கள் கவலைகளுக்கும் கொஞ்சம் காது கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறோம்.

மன்னர்: எனக்கும் இங்கே தீராத கவலைதான். மரபுக் கவிதையா? புதுக்கவிதையா? என்கிற அதிமுக்கியமான முடிவுக்காக இங்கே தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நாட்டு நடப்பை நோட்டமிடுவதில் சற்று சுணக்கமாக இருந்துவிட்டேன்.. (சமாளிக்கிறார்)

மாரிமுத்து: மன்னா! கவிதையைப் பற்றிக் கவலைப்பட நீங்களும் புலவர் பெருமக்களும் இருக்கிறீர்கள். ஆனால், எங்களைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

மன்னர்: ஏன் நான் இல்லையா? மக்களை அடியோடு மறந்துவிட்ட மன்னனாக என்னை நினைத்துவிட்டீகளா?

மல்லிகா: மன்னா! அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியதைச் சொல்கிறேன். மரபுக்கவிதையோ புதுக்கவிதையோ, அது சமூக நோய்களுக்கு மருந்தாக இருக்க வேண்டும்.

மன்னர்: நீ சொல்வதும் சரிதான். நான் மறுக்கவில்லை!

மாரிமுத்து: மானுடத்தை வலியுறுத்த வேண்டும். நம்பிக்கை நசிந்த உள்ளங்களைத் தட்டிக்கொடுத்து எழுச்சி ஊட்ட வேண்டும்.

மன்னர்: என் கருத்தும் இதுதான். மாற்றமில்லை.

மாரிமுத்து: கவிதை என்றால் அதிலே கவித்துவம் வேண்டும். அழகு வேண்டும்.

மல்லிகா: வாழும் கவிதை வடிவத்தில் இல்லை மன்னா?

மன்னர்: என்ன கூறினாய்?

மல்லிகா: வாழும் கவிதை வடிவத்தில் இல்லை மன்னா!

மன்னர்: ஆகா! என்ன அற்புதமான சிந்தனை! எப்படிச் சொல்கிறோம் என்பதிலேயே சண்டையிட்டு எதைச் சொல்ல வேண்டும் என்பதில் கோட்டை விடலாமா? சே.. வீணான விவாதத்தில் ஒரு திங்களைக் கழிந்து போனதே!

நவீனன்: மன்னா, இதைத்தான் நானும் சொல்கிறேன். அவரவர் தமக்குப் பிடித்த வடிவத்தில் எழுதட்டும்! நல்ல கவிதைகளைக் காலம் அடையாளம் காணட்டும்!

புலவர்: மன்னா!

மன்னர்: போதும் புலவரே! போதும். என் தவறு எனக்குப் புரிந்து விட்டது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி! புதுக்கவிதை என்பது சொற்கள் கொண்டாடும் சுதந்திர விழா! அதைத் தடுக்க வேண்டாம். மக்கள் விரும்பியதை எழுதட்டும்! மரபையும் போற்றுவோம், புதிய மரபுகளையும் வரவேற்போம்.

புலவர்: இருந்தாலும் மன்னா, புதுக்கவிதையைப் போய் எப்படி..?

மன்னர்: மக்கள் மாறிவிட்டார்கள் புலவரே! இனியும் நம் அரசு மாறாவிட்டால் நம் அரசையே மக்கள் புரட்சியால் மாற்றிவிடுவார்கள். அதற்கு முன் நாம் மாறிவிடுவோம். வரலாற்றை நீங்கள் படிக்கவில்லையா? வரலாற்றின் படிப்பினை மிக முக்கியம் புலவரே!

(எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம்)

மன்னர்: எல்லாரையும் விடுதலை செய்யுங்கள். இனி, கவிதை எழுத விஜயவர்மன் ஆட்சியில் கட்டுப்பாடுகள் இல்லை மக்கள் பஞ்சம் போக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவை என் ஆணை!

நவீனன்:  கவிதையின் விலங்கு உடைத்த விஜயவர்மன் வாழ்க
மல்லிகா:  வீராதி வீரர் விஜயவர்மன் புகழ் ஓங்கட்டும்
மாரிமுத்து: மக்கள் நலம் காக்கும் மகேசன் வாழ்க!

(திரை)

நாளிதழ் இல்லா வீடு





கனவுகளின் கரைதொட்டுக் கரைதொட்டு
நழுவிக்கொண்டிருக்கிறது அந்த வீடு

அதனுள் நுழைந்து வெளியேறும் காற்றில்
நிறைகின்றன அனுமானத் துகள்கள்

தன் உள்வெளியெங்கும்
நவீனத்தின் பூச்சுகளால்
அலங்கரித்துப் பார்த்துப் பூரிக்கிறது

நாளிதழ் இல்லா அந்த வீட்டில்
சன்னல்கள் இருந்ததில்லை

அங்கிருந்து கிளைவிடும் பாதைகள்
எங்கும் புறப்படாமல்
வாசலிலேயே தேங்கி விடுகின்றன

காலைப் பொழுதுகளில்
சோம்பலோடு  நெட்டி முறிக்கிறது
ஞாயிற்றுக்கிழமையில்
இன்னும் தாமதமாக

வரவேற்பறை நிலைப்பேழையில்
அலங்காரப் பொருள்களை நிறைத்து
வருவோரிடம் பகட்டு காட்டுகிறது

எப்போதாவது கசங்காத நாளிதழ்களை
வரவேற்பறையில்
வருவோர்க்கு வைத்திருக்கிறது

தனக்குள் நடமாடும்
மனிதர்களின் சொற்களைப் பறித்துக்கொண்டு
அவர்களை மௌனமாக்கிப் பார்க்கிறது

நடிகர்களைத் தனக்குள் பேசவிட்டு
அவர்களின் இரைச்சலையே
தனது மொழியாக்கிப் பேசுகிறது

பழைய நாளிதழ் வாங்கும் சீனன்
தன்னை மௌனமாய்க் கடக்கையில்
தன் இல்லாமை நினைந்து
மௌனமாய் விம்முகிறது

Sunday, January 1, 2012

கால மகளே!



கால மகளே
உன் காலடியில்
உதிர்ந்து கிடக்கின்றன
முன்னூற்றுச் சொச்சம் பூக்கள்

மீண்டும் வசந்தம்
உன் கூந்தலை
வருட வருகிறது

புத்தாண்டு புனைந்து
புன்னகைக்கிறாய் நீ
நீ நடக்கையில்
காலச்சக்கரம் சுழல்கிறது

காலமகளே உன்றன்
வயதறியோம் நாங்கள்
எங்கள் வசதிக்காகவே
உன் நாமம்

நீ நடந்த பாதையில்
பயங்கரவாதத்தின்
இரத்த வாந்தி

தின்று செரித்த
தீவிரவாதத்தின் ஏப்பம்
காதுகளுக்குக் கேட்கிறது

ஏவுகணைகளை ஏற்றிக்கொண்டு
வெள்ளைப் புறாக்களை
வானில் விடும்
வல்லரசுகள்

பசிக்கு இரை தேடி
இரையான
பட்டினி மனிதர்கள்

வன்முறையை விளக்கென்று
விரும்பி விழுந்த
இளம் விட்டில்கள்

சினிமாக் கனவுகளில்
சிக்கிச் சிக்கித் தொலைந்த
நல்லவர்கள்

காலமகளே நீ
கண் கலங்குகிறாய்
உன் கடைவிழி திரள்கின்றன
கண்ணீர்ப் பூக்கள்

உன் வருகை பார்த்து
உலகப் பந்தைப் பற்றுகிறது
பரபரப்புக் காய்ச்சல்

எங்கும் இறைந்து கிடக்கிறது
வெளிச்ச வெள்ளம்

இதோ எங்கள்
கைநிறைய கவிதைகள்
வாய் நிறைய வாழ்த்துகள்

மனம் நிறைய
பிரார்த்தனைகள்

Saturday, December 31, 2011

நிலாவும் சில ஹைக்கூக்களும்



நிலா.

வானம் எழுதும் வெள்ளைக் கவிதை நிலா.

கவிஞர்களுக்குப் பாடுபொருளாகவும் காதலுக்குச் சாட்சியாகவும் வருவது நிலா.
இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தில் மனிதனின் கண்களுக்குச் சின்னதாய்த் தெரியும் பெரிய அற்புதம் அதே நிலாதான்.

ஹைக்கூவுக்கும் அதுதானே நிலை. ஹைக்கூ சின்னதாய் இருக்கும் பெரிய அற்புதம். பார்க்கத்தான் அது மூன்று வரி கவிதை வடிவம். அந்த எளிய வடிவத்தில் ஊறிவரும் நுண்ணிய உணர்வுகள் படிப்பாரைப் பிணிக்கும் தன்மை கொண்டவை.

ஹைக்கூ கவிதைகளின் இறுக்கம், சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் அதனை அனுபவிப்போரை ஒரு கவிதானுபவத்தில் தள்ளிவிடும்.
ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையில் தம் மனத்தைப் பறிகொடுத்து இயற்கையைக் கவிதையாக்கி அதில் மனம் தோய்பவர்கள். எனவே இயற்கையைப் பாடும் அவர்களுக்கு நிலா தவிர்க்க முடியாத ஒரு பாடுபொருளாகிறது.

மசாஹிடேவின் வீடு தீவிபத்தில் எரிந்து சாம்பலாகிறது. நாமாக இருந்தால் துன்பத்தில் துவண்டுபோவோம். நம் நம்பிக்கை நசிந்து போகும். குறைந்த பட்சம் மனத்துக்குள்ளாக இரங்கற்பா இயற்றி ஆறுதல்கொள்வோம்.

ஆனால், மசாஹிடே வீடு எரிந்துபோனாலும் இடிந்துபோகாமல் நிற்கிறார். அவநம்பிக்கை கிஞ்சிற்றும் அவர் மனத்தை நெருங்கவில்லை. எரிந்துபோன வீட்டைப் பார்க்கப் போனவர் நிலாவைப் பார்த்து உற்சாகமாகிறார். “பரவாயில்லையே, வீடு எரிந்துபோனதுகூட ஒரு வகையில் நல்லதுதான்” என நிலாவை ரசிக்கத் தொடங்குகிறார்.

என் வீடு எரிந்துபோனதால்
நன்றாகப் பார்க்க முடிகிறது
உதிக்கும் நிலாவை

வெளியே போய்விட்டு வாசலுக்கு வந்து, கதவைத் திறக்க முயன்றபோது சாவி தொலைந்துவிட்டதை உணர்ந்து திண்ணையில் அமர்ந்த கவிஞன் கண்களில் நிலா தென்படுகிறது. நிலாவை ரசிக்கக் கிடைத்த வாய்ப்பாக அதைக் கருதுகிறான்.


தொலந்தது வீட்டுச்சாவி
திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
-ராஜ முருகுபாண்டியன்

மார்கழி மாதம். இருள் இன்னும் விலகாத காலைப்பொழுது. வாசலில் தண்ணீர் தெளித்த மித்ராவுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சிந்தி விழுந்த நீர்த்துளிகளில் முகம் காட்டும் நிலா அழகிய கோலத்தைப் போடுவதைக் கண்டு ரசிக்கிறோம். கோலம் போட வந்தவர் இயற்கைக் கோலத்தில் இதயம் இழக்கிறார்.

மார்கழிக் கருக்கல்
வாசலில் தண்ணீர் தெளித்தேன்
கோலம் போட்டது....நிலா
-மித்ரா

ஒரு நிலா இராத்திரி. படகேறிப் பயணம் போகவேண்டிய நிலை. ஆனாலும் துடுப்பைத் தொட கவிஞருக்கு மனம் வரவில்லை. ஏன் தெரியுமா? நீரைப் பார்க்கிறார். அங்கே அழகிய நிலா அமைதித் துயில் கொண்டிருந்தது.

துப்பைத் தொட மாட்டேன்
அக்கரைக்கென்ன அவசரம்
நிலவின் தூக்கம்
-மித்ரா

நிலாவை அண்ணாந்து பார்த்து ரசிப்பதைவிட, அதனைப் பக்கத்தில் வரவழைத்து ரசிக்க உத்தி சொல்கிறார் கவிஞர். அதுவும் குளிக்கும் நிலாதான் கண்ணுக்கு அழகாக இருக்கும் என்பதால் குளத்துக்கும் அதில் நீருக்கும் ஏற்பாடு செய்யச் சொல்கிறார்.

குளமொன்றை வெட்டு
குறைவின்றி நீரை நிரப்பு
குளிக்க வரும் நிலவு
-அமுதபாரதி

ஒருமுறை ஆங்கில இதழொன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு நிலாப் படம் கண்ணில் விழுந்து என் இதயத்தைக் கௌவிக்கொண்டது. நீரில் உடைந்து கிடந்தது நிலா. அந்த உடைந்த நிலாவைத் தன் மடியில் ஏந்தித் தாலாட்டிக்கொண்டிருந்தது தண்ணீர்.

நிலா உடையாது. ஆனாலும் உடைந்து கிடந்தது. காட்சி பொய்தான். ஆனாலும் அழகான பொய் அல்லவா? இப்படித்தான் அழகான பொய்களால் நாம் கவரப்படுகிறோம். ஒரு வகையில் பார்த்தால் அப்படி உடைந்துகிடப்பதே நிலாவுக்குத் தனி அழகாகத் தெரிந்தது.

உடைந்தால் என்ன?
இதுவும் அழகுதான்
குளத்தில் நிலவு

நான் பிறந்து வளர்ந்த தோட்டத்துக்குப் போகிறேன். தோட்டத்தின் முகவரியே மாறிக்கிடக்கிறது. பழைய லயன்கள் இருந்த இடத்தில் புது வீடுகள் முளைத்திருந்தன. தோழர்களைத் தேடுகிறேன். மோகன், இராமனைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. என்னோடு ஒன்றாக ஆடு மேய்த்து மங்கு துடைத்த மனோகரன் சாராயத்தில் சமாதியாமே!

இரவு வேளைகளில் தோழர்களோடு சிரித்து மகிழ்ந்து, பேய்க்கதை பேசிக்கொண்டு நடக்கும் மண்சாலையில் நான் மட்டும் நடக்கிறேன் தனியாக. வானத்தைப் பார்க்கிறேன். நிலாவின் கீழ் நடந்த எங்கள் வாழ்க்கை மாறிக்கிடக்கிறது. ஆனால், நிலா..

பழைய தோழர்காள் இல்லை
தோட்டச் சாலையில் என்னோடு
அதே நிலா

அவள் விதவை. பொட்டையும் பூவையும் இழந்தவள். காலம் அவள் மீது வெள்ளை அடித்து வேடிக்கை பார்க்கிறது. ஒரு நாள் அவள் அண்ணாந்து வானம் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் ஏக்கம் கொப்பளிக்கிறது. நிலாவை ரசித்துக்கொண்டிருந்த நான் அவளைப் பார்க்கிறேன். நிலா ஒன்றுதான். சிலருக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. சிலருக்குள் ஏக்கத்தை விதைக்கிறது. பொருள் ஒன்றுதான். பார்ப்பவர் மனநிலையால் வேறுபடுகிறது. இப்பொழுது அவளின் மனநிலையோடு நானும் வானத்தைப் பார்க்கிறேன். கொடுத்த வைத்த நிலா. எப்பொழுதும் மங்களகரமாய் இருக்கிறது.

வானில் நிலா
அண்ணாந்து பார்க்கும்
விதவை

இயற்கையிடமிருந்து மனிதன் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கின்றான். முன்பு இரவு வேளையில் ஊருக்கெல்லாம் ஒரு பெரிய விளக்கு இருந்தது. அது வானில் இருந்தது. அதனால்தான் மனிதன் நிலவோடு நெருக்கமாயிருந்தான்.

இன்று ஊரெல்லாம் கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண விளக்குகள் கண்சிமிட்டுகின்றன. வெளிச்ச வெள்ளத்தை வாரி இறைக்கின்றன. வானத்தை அண்ணாந்து பார்க்கும் அவசியம் மனிதனுக்குக் குறைந்து வருகிறது. எனவே, நிலவின் பங்கு வாழ்வில் நீங்கி வருகிறது. காதலர்களும் கவிஞர்களும்தாம் நிலவின் மீது இன்னமும் கண்வைத்து வருகின்றனர்.

என்றாவது மின்சாரம் தடைப்பட்டால், ஊர் விளக்குகள் அணைந்துபோனால் அன்றுதான் நிலாவுக்கு ரசிகர்கள் நிறைவார்கள். அவர்களும் உண்மையான ரசிகர்கள் அல்லர். தவணை முறையில் ரசிக்கிற கட்டாய ரசிகர்கள்.

அப்படியொரு மின்வெட்டு ராத்திரியில்தான் நான் சில நிலா ரசிகர்களைச் சந்தித்தேன். சந்தித்துச் சிந்தித்ததைச் சொற்களுள் சிறைவைத்தேன்.

மின்வெட்டு ராத்திரி
அண்ணாந்து பார்த்தபடி
நிலா ரசிகர்கள்

பாலைப் பொழிந்து பௌர்ணமி நிலா, உலாவரும் ரம்மியமான இரவுப்பொழுது. நான் எழுதுகோலோடும் வெள்ளைத்தாளோடும் வீட்டிற்கு வெளியே வருகிறேன்.

இரவில் கண்விழித்து என்னைப்பார்க்கும் நிலாவைப் பார்க்கிறேன். எனக்குள் ஹைக்கூ கற்பனைகள் அரும்புகின்றன. எழுதத் தொடங்கினேன். திடீரென்று எங்கிருந்தோ கறுப்பு மேகங்கள் சூழ்ந்து நிலாவின் ஒற்றைக் கண்ணையும் மூடமுனைகின்றன.

ஹைக்கூ எழுதுபவர்களுக்கு நிலா பாடுபொருளாவது ஒரு நிலை. அந்த நிலா வெளிச்சத்தின் துணையோடு ஹைக்கூ எழுத முனைந்த என் நிலை இன்னொரு நிலையில்லையா?

இடையூறாக வந்த கறுப்பு மேகத்திற்கு ஹைக்கூவிலேயே அவசரத் தந்தி அனுப்பினேன் இப்படி:

கறுப்புமேகமே கருணைசெய்
நிலவொளியில்
இன்னொரு ஹைக்கூ

இயற்கையை ஆராதிக்கும் ஹைக்கூவில் நிலாவுக்கு உன்னதமான இடமுண்டு. நிலாவை அதன் அழகுக்காக மட்டும் கொண்டாடாமல், இந்தப் பிரபஞ்சத்தின் மர்மங்களை - மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளைத் திடீரென திரை விலக்கிக் காட்டும் படைப்பாக ஹைக்கூ புதிய பரிமாணத்தில் இறக்கி வைக்கிறது.

ஹைக்கூ நிலவை மட்டும் பாடவில்லை. நிலவையும் பாடுகிறது. சமூக அவலங்களை அடித்துத் துவைக்கிற ஆவேசத்தோடும் புறப்பட்டு வருகிறது.

நிலாவைச் சினிமாவில் மட்டும் பார்த்து ரசிக்கிற மனிதர்கள் கூடிவரும் ஒரு நூற்றாண்டில் பயணப்படுகிறோம்.

வாருங்கள்!

வானம், யுகம் யுகமாக நிலா என்னும் வெள்ளைக் கவிதையை வரைந்துகொண்டே இருக்கிறது. இதயம் நனைய நனைய அதன் அழகை ஆராதிப்போம்.

பரபரப்பாகப் பறந்துகொண்டிருப்பவர்களே! கொஞ்சம் நின்று செல்லுங்கள். இந்த நிலாவின் கதையைக் கொஞ்சம் கேட்டுச் செல்லுங்கள்!

நின்று செல்லுங்கள்
நின்று செல்லுங்கள் - கொஞ்சம்
கண்டு செல்லுங்கள்

பாலில் நனைந்த
பௌர்ணமி நிலவு
வான்வெளி யெங்கும்
வலம் வருவதனால்

நின்று செல்லுங்கள் - கொஞ்சம்
கண்டு செல்லுங்கள்

அவிழ்ந்து கிடக்கும்
அழகுகள் இங்கே
நிமிர்ந்து பாருங்கள் - இதயம்
திறந்து பாருங்கள்

வெள்ளைக் கவிதை
விழிக்கும் நேரம்
கொள்ளை அழகில் - இதயம்
குளிக்க வாருங்கள்

அழகிய விளக்கு
ஆயிரம் இருந்தும்
ஓர் விளக்கு - இங்கே
உயர்வினை அடையும்

கவினுறு காட்சி
களிக்க வாருங்கள்
கண்ணுக்கு விருந்து
அளிக்க வாருங்கள்
வானம் குழந்தை
ஈன்ற பொழுதை
விண்மீன் கூடி
விழா யெடுப்பதை

ஓர்கண் திறந்து
உலகை இறைவன்
நேர்முக மாக
நின்று ரசிப்பதை

கண்டு செல்லுங்கள் - கொஞ்சம்
நின்று செல்லுங்கள்



Sunday, December 18, 2011

நானொரு நாடகம் பார்க்கிறேன் (சிறுகதை)



“மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப் புள்ளியில் கண்கள் நிலைகுத்தின. அதற்குமேல் என்னால் புள்ளிகளை வாசிக்க முடியவில்லை. கோபம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என் முகமாற்றத்தை மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

எத்தனை விதமான முயற்சிகள்! எவ்வளவு பயிற்சிகள்! பல மாத உழைப்பின் அறுவடையை அளந்து பார்க்கக் காத்திருந்தவனுக்குப் பலன் ஒன்றுமில்லை என்றால் எழும் ஏமாற்றம்தான் என்னையும் துவைத்தது. அரையாண்டுத் தேர்விலேயே இப்படியென்றால் உண்மையான எஸ்.பி.எம். தேர்வில்? நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருந்தது. தேர்வில் ஒட்டுமொத்தத் தமிழ்மொழித் தேர்ச்சி இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்தால்...

தேர்வுத் தாளைத் தயக்கத்தோடு வாங்கினான் கோபால். என் முகத்தில் பரவிய கோபத்தின் கடுமையை உணர்ந்திருக்க வேண்டும்.

“மன்னிச்சிடுங்க சார். இந்த தடவ என்னால பாஸாக முடியல்ல.. அடுத்த தடவ முயற்சி செய்யிறேன்.. எல்லார் முன்னுக்கும் என்ன ஏசாதீங்க சார்..” அருகில் வந்து தாழ்ந்த குரலில் கூறினான். தலை கவிழ்ந்திருந்தது.

“அவமானப்படக்கூடாது என்ற விழிப்பு உணர்வு இருக்கிறது. ஆனால், உழைப்பதற்கான முயற்சி இல்லையே. இங்க உன்ன மாதிரிதானே எல்லாருக்கும் பாடம் நடத்துறேன். எல்லாரும் அக்கறையா பாடத்துல கவனமா இருக்கிறாங்க. ஆனா நீ.... வகுப்புலேயும் கவனமில்ல. வீட்டுப் பாடங்களும் செய்யிறதில்ல.. தாய்மொழியிலேயே தடுமாறுனா எப்படி? எவ்வளவு பயிற்சி கொடுத்திருக்கிறேன். அதையெல்லாம் செய்திருந்தா இப்படி மோசமா இருக்குமா? எப்பப்பார்த்தாலும் ஒரே சிரிப்பு, கும்மாளம். நீயெல்லாம்..” நாக்கு நுனியில் வந்துவிட்ட சொற்களைச் சிரமப்பட்டுத் தடுத்தேன்.

வகுப்பு அமைதியாகிவிட்டது. இருபத்தைந்து மாணவர்களில் ஒருவன் மட்டும் தேர்ச்சிபெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூறு விழுக்காடு வெற்றிக்குக் காய்களை நகர்த்தியவன் கடைசி வினாடியில் தோல்வியைச் சந்தித்தால்..
கோபால் பேசாமல் போய் அவன் இடத்தில் அமர்ந்துவிட்டான். குற்றம் இழைத்தவனின் வேதனையைப்போல் அவன் முகம் வாடிவிட்டது.

அதற்குமேல் பாடத்தில் என்னால் மனம் ஒன்றிச் சொல்லித்தர முடியவில்லை. தேர்வுக் கேள்வியில் சிரமமான பகுதிகளை விளக்கினேன். கட்டுரை என்றாலே மாணவர்க்குக் கசப்பு மருந்தாகிவிடுகிறது. அதில்தான் பலர் புள்ளிகளை இழந்திருந்தார்கள்.

வகுப்பு முடிந்து ஆசிரியர் அறைக்குத் திரும்பினேன். மனம் அமைதியடையாமல் முரண்டு பண்ணியது. கோபாலைப் போன்ற மாணவர்களுக்கு ஆசிரியரின் மனவேதனை புரியுமா?

“சார், இன்னொரு வாய்ப்பு கொடுங்க. நான் எப்படியாவது..” பின்னாலேயே வந்து நின்றான் கோபால்.

“எதற்கு இன்னொரு வாய்ப்பு? அடுத்தமுறை 20 எடுத்து என்ன அவமானப்படுத்தவா? இங்க பார் கோபால். நானும் உன்னை மாதிரிதான் படிப்பில ரொம்ப பின்தங்கி இருந்தேன். ஆனா, நல்லா படிச்சி உயர்ந்த நிலைக்கு வருனும்னு கடுமையா உழைச்சேன். சும்மா வெட்டிக்கதை பேசி காலத்த கழிக்கல. உனக்கு எப்பப் பார்த்தாலும் ஆட்டம் பாட்டம். நான் கொடுக்கிற பாடங்களைச் செய்தாலே போதும். ஆனா நீ செய்யமாட்டே. உனக்குத்தான் படிப்பில ஆர்வம் இல்லையே” ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

“அப்படி இல்ல சார். கொஞ்சம் விளையாட்டா இருந்திட்டேன். சார், நீங்க வேணும்னா பாருங்க. அடுத்த பரீச்சயில நல்ல மார்க் எடுக்கிறேன். இதுக்காக என்ன நாடகத்தில இருந்து எடுத்திடாதீங்க.. உங்களுக்குத்தான் தெரியுமே. நான் நல்ல நடிப்பேன் சார்”

அடுத்த மாதம் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள நாடகப்போட்டிக்காக எங்கள் பள்ளி நாடகக் குழுவில் பங்குபெற கோபாலும் பெயர் கொடுத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு நாடகப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தோம். இம்முறை முதல் இடத்தைக் குறிவைத்து நாடக வேலையைத் தொடக்கியிருந்தேன். கோபாலும் நடிக்கும் திறமையுள்ளவன்தான். ஆனாலும், தமிழ்ப் பாடத்திலேயே தடுமாறும் இவனுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? தமிழில் தேர்ச்சிபெற்ற மற்றவர்களுக்கு அதைத் தரலாமே!

“ஓ, உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? முதல்ல தமிழ்ல உன் திறமையை காட்டு. அப்புறம் நாடகம் பத்தி யோசிக்கலாம். உன்னைவிட தமிழ்ல நல்ல மார்க் எடுத்த கண்ணன், அமுதன், முகிலன் இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்” கோபால் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் முகாமிட்டன. ஒன்றும் பேசவில்லை. போய்விட்டான்.

பள்ளி வேலையில் மூழ்கினாலும் என் எண்ணமெல்லாம் கோபாலைச் சுற்றியே வட்டமிட்டது. எப்படியாவது அவனைத் தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சியை நோக்கி நகர்த்தவேண்டும். மூன்று ஆண்டுகளாகப் பெற்ற நூறு விழுக்காடு தேர்ச்சியை ஒரு மாணவனால் தவறவிடக்கூடாது. குதிரையை மல்லுக்கட்டி ஆற்றுக்குக் கொண்டுபோகலாம். தண்ணீரை அதுதானே குடிக்கவேண்டும்?

@ @ @ @ @ @

மாணவர் வருகைப் பதிவேட்டில் முகவரி இருந்ததால் கோபாலின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. சாலையோர வீடமைப்புப் பகுதியில் நுழைந்து இரண்டாவது வரிசையில் காரை நிறுத்தி வீட்டை நெருங்கினேன்.

மாலை மணி ஆறு. வீட்டில் பேச்சொலி கேட்டது. எட்டிப்பார்த்தேன். “அடியே, உன்னையும் உன் குடும்பத்தையும் அடியோடு அழிக்காம விடமாட்டேன். நீ அழுது ஒண்ணும் இங்கே சாதிக்கமுடியாது.” தொலைக்காட்சியில் ஏதோ நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. கோபாலின் மொத்தக் குடும்பமே நாடகத்தின் உருக்கமான காட்சியில் சிறையாகி இருந்தது. சோகத்தைக் கிலோ கணக்கில் யாரோ பிழிந்துகொண்டிருந்தார்கள். தொடர் நாடகங்கள் பார்ப்பது நம்மவரின் முக்கிய அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிவிட்டதா? இதனைச் ‘சைத்தான் பெட்டி’ என்று சொல்வது சரியாகத்தான் இருக்குமோ? கோபாலைக் காணவில்லை.

“வணக்கங்க. நான் கோபாலின் தமிழ் ஆசிரியருங்க. கோபால் விசயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கோபால் இல்லீங்களா?” கேள்வியோடு உள்ளே நுழைந்தேன்.

“வாங்க, உக்காருங்க சார். கோபாலு வீட்டுல இல்லையே. எங்க போயிருக்கான்? பந்து விளையாடத்தானே?” கோபாலின் அப்பா கிருஷ்ணன் தன் மனைவியிடம் உறுதிப்படுத்திகொண்டு என்னை ஏறிட்டார். கலைந்த தலைமுடி. சவரம் காணாமல் முகத்தை அப்பியிருந்த வெள்ளைத் தாடி. அவர் நாடக மயக்கத்தில் இருந்தார்.

“என்ன விசயம் சார்? தப்பு ஏதும் பண்ணிட்டானா? அவன் சாதுவாச்சே” கோபாலின் அம்மாவின் முகத்தில் கேள்விக்குறிகள்.

“தப்பு ஒண்ணும் செய்யிலங்க. தமிழ்ப் பாடத்துல கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாம இருக்கான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். பயிற்சிங்க கொடுத்தா செய்யறதில்ல. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப்போக வந்தேன்.” சொல்லிவிட்டு இருவரின் முகங்களைக் கூர்ந்து நோக்கினேன்.

“நல்லா சொல்லுங்க சார். வீட்டுல எங்க படிக்கிறான்? எப்பவும் பந்து விளையாட்டுதான். திடலே கதின்னு கிடப்பான். சாயங்காலம் ஆச்சுன்னா கூட்டாளிங்க வந்திடுவாங்க. அப்புறம் ஆள பார்க்க முடியாது. நீங்க தண்ணி சாப்பிடுங்க சார்” தன்னளவில் எந்தக் தப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் தொனி கிருஷ்ணன் குரலில் தெரிந்தது.

“ஆமாங்க சார். நாங்க என்னா அவன படிக்கவேண்டாம்னா சொல்றோம். வீட்டுல இருந்தாலும் நல்லா டிவியில நாடகத்த பார்த்துக்கிட்டு பொழுத போக்குறான். நாடகம்னா அவனுக்கு அவ்வளவு உசுரு.” கோபாலின் அம்மா நிலைமையை விளக்கினார்.

“நீங்கதான் அவன் படிக்கிற சூழ்நிலைய வீட்டுல ஏற்படுத்தணும். சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்களே டிவிய பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் கோபாலுக்கு எப்படி படிப்புல ஆர்வம் வரும்.” வேறுவழியில்லை. நேரடியாக என் உள்ளக்கிடக்கையைக் கொட்டிவிட்டேன். மூடிமறைத்துப் பேசிப் பயனில்லை.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நாங்க வயசான காலத்துல டிவிய பார்த்துகிட்டு காலத்த கழிக்கிறோம். இவனுக்கு எங்க போச்சு புத்தி? படிக்கிற இவனுக்கு தெரியணும் சார். நாளைக்கி படிச்சி வேலைக்குப் போனா அவந்தான நல்லா இருப்பான்” கிருஷ்ணனின் சொற்களில் சூடு ஏறியிருந்தது. பழியைத் தூக்கி அப்படியே மகனின் மீது போட்டுவிட்டார்.

தொலைக்காட்சி கம்பீரமாகக் கொலுவீற்றிருந்த முன் அறையில் தமிழ் நாளிதழோ நூல்களோ இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லை. சுவரில் நடிகர்கள் விஜயும் அஜீத்தும் ஸ்டைல் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள் தனியாக அமர்ந்து படிப்பதற்கான எந்த வசதியும் அங்கில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. கோபாலுக்கும் தமிழுக்கும் தூரம் நீண்டிருப்பதற்கான காரணம் எனக்குப் புரியத் தொடங்கியது.

“கோபாலுக்காக நீங்க கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுக்கணும். பிள்ளைகளுக்காக நாம தியாகம் செய்ய தயாரா இருந்தாதான் அவங்கள வாழ்க்கையில கரை சேர்க்கலாம். வீட்டுல கோபால் படிக்கிறதுக்கு வசதி இருக்கா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....” சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.

நான் விடைபெற்றேன். நெஞ்சம் முழுக்க ஏமாற்றம் நிறைந்திருந்தது.

“அவன் வந்தா சொல்றேங்க சார். பார்ப்போம். ஆண்டவன் அவனுக்கு ஒரு வழிகாட்டாமலா போவான்” இப்போது பாரத்தை ஆண்டவன் மீது தூக்கிப் போட்டுவிட்டு எனக்கு விடைதந்தார்.

வீட்டின் முன்பகுதியைக் கவனித்தேன் அது கவனிப்பாரற்றுப் புல் மண்டிக்கிடந்தது.

@ @ @ @ @ @ @ @

“புறா மூலம் தூது அனுப்பினேனே கிடைத்ததா? ஏன் இன்னும் மறுமொழியில்லை? என எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி இருக்கிறான். என்ன செய்யட்டும் மன்னா? கட்டளையிடுங்கள்” அமைச்சர் முகத்தில் கேள்விக்குறிகள் நிறைந்தன.
“பகை மன்னன் பாண்டியன்தானே? என்ன திமிர் அவனுக்கு? வரட்டும் பார்த்துவிடுவோம். நம் பலம் தெரியாமல் நம்மோடு மோதுகிறான் அந்தப் புல்லன். புறாவுக்கு நேர்ந்த கதிதான் அவனுக்கும். புரிய வைப்போம்” மன்னர் மீசையை முறுக்கினார்.

பள்ளி மண்டபத்தில் நாடக ஒத்திகை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி தவறவிட்ட வெற்றிக்கோப்பையை இம்முறை எப்படியாவது வாகைசூட வேண்டுமே? கடுமையான முயற்சியில் இறங்கிவிட்டோம். அமைச்சர், தளபதி, புலவர், ராணி என எல்லாப் பாத்திரங்களும் கனகச்சிதமாகப் பொருந்தினார்கள். மன்னருக்குத்தான் முறுக்கு போதவில்லை. வாயில் நுழைந்த தமிழும் சிதைந்துகொண்டிருந்தது. குரலில் கம்பீர மிடுக்கும் குறைந்தது. வேறு வழியில்லை. மன்னரை மாற்றிப் பார்த்தேன்.

அப்பொழுதும் திருப்தியில்லை. புதிய மன்னருக்குத் தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணியது. மூன்று நாள் பயிற்சி கொடுத்தால் மன்னரைத் தேற்றலாம் என நினைத்தேன். அது அவ்வளவு எளிதில்லை என்பது புரிந்தது. இன்னும் கொஞ்சம் மிரட்டினால் மன்னர் அழுதுவிடுவார் போலிருந்தது. வேறு வழியில்லை அவரை வைத்துத்தான் எப்படியாவது ஒப்பேத்த வேண்டும்.

“சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. முயற்சி பண்றேன். என்னால முடியும். போன வருசம்கூட நடிச்சேனே” பள்ளி முடிந்து மண்டபத்தில் நடக்கும் ஒத்திகைக்கு நாள் தவறாமல் வந்து ஒரு மூலையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கோபால்தான் மனு செய்தான்.

“இப்பதானே கொடுத்த பாடங்கள செய்ய ஆரம்பிச்சிருக்க. பார்ப்போம். தமிழ்ல நாற்பது புள்ளிய தாண்டுனா உன்ன பரிசீலிக்கலாம். அதுவரைக்கும் நீ வேடிக்கைதான் பார்க்கணும் கோபால்” நான் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவன் முகம் வாடியதைக் கவனிக்கத் தவறவில்லை.

“புல்லனே! யாரிடம் மோதுகிறாய்? இமயத்தில் புலிக்கொடி பொறித்த வீர மரபில் வந்தவர்கள் நாங்கள். உங்களின் தலைகளைப் பந்தாடாமல் எங்கள் வாள்கள் உறையில் உறங்காது” மன்னர் வாளை உருவியபடி எதிரியைப் பார்த்துக் கர்ஜித்தார். குரலில் கடுமை போதவில்லை. பயம்தான் எட்டிப்பார்த்தது. நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

நாடகப் போட்டிக்கு மாணவரை அழைத்துப் போக பெற்றோரின் அனுமதி, உணவு ஏற்பாடு, பேருந்து என பல பணிகளை முடிக்கவேண்டியிருந்தது. இடையிடையே மன்னர் எனக்குள் எட்டிப்பார்த்து என்னைப் பயமுறுத்தினார்.

@ @ @ @ @ @ @ @ @

கோபாலிடமிருந்து வீட்டுப்பாடம் வருவது ஆச்சரியம்தான். ஆனால், வந்தது. எழுத்துப்பிழைகள் குறைந்தபாடில்லை. ஆனாலும், முயற்சியின் முதல்படியில் ஏறத்தொடங்கியிருந்தான். அடிக்கடி ஆசிரியர் அறைக்கு வந்து என்னை எட்டிப்பார்த்தான். பேச்சுக் கொடுத்தான். வீட்டுப்பாடத்தை நீட்டினான். வகுப்பில் கும்மாளத்தைக் குறைத்தான்.

நாடகப்போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள். தொடர்ந்து மன்னரோடு போராடும் சக்தியை நான் இழந்துகொண்டிருந்தேன். நாடகத்தைத் தூக்கி நிறுத்தப்போகும் பாத்திரம் மன்னர்தான், அவரே தடுமாறிச் சொதப்பிக்கொண்டிருந்தால்...

“சார், இந்தாங்க நேத்து நீங்க கொடுத்த கட்டுரை. முடிச்சிட்டேன் சார். வகுப்பறையில் பயிற்சி நூல்களைத் திருத்திக் கொண்டிருந்தவன் தலைநிமிர்ந்தேன். கோபால் கட்டுரை எழுதித் தருவது அபூர்வம். இப்படியாவது தமிழில் தேர்ச்சியை நோக்கி நகர்வானா? மனம் எதிர்பார்ப்புகளை அடுக்கியது.

“ஒரே ஒரு வாய்ப்பு. கொடுத்து பாருங்க. உங்க பேர காப்பாத்துவேன் சார்” கோபாலின் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருந்தது.

“இல்ல கோபால். உன் முயற்சி போதாது. இன்னும் நீ தீவிரமா உழைப்பை தரணும். அது உன்னால முடியுன்னு நான் நம்புறேன்”

@ @ @ @ @ @

நாடகப்போட்டியில் இம்முறை ஒன்பது பள்ளிகள் கலந்துகொண்டன. நான்காம் ஆண்டாக நடக்கும் நிகழ்வென்பதால் எல்லாப் பள்ளிகளும் நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு கடுமையான போட்டியைத் தந்தன. இலக்கிய நாடகமென்பதால் பலவிதமான உடைகளில் மாணவர்கள் சரித்திரக் கதைமாந்தர்களாய் உருமாறி மேடையைக் கலக்கிக்கொண்டிருந்தனர்.

கடைசிக் குழுவாய் எங்கள் பள்ளி மாணவர்கள் மேடையேறினர். நான் நம்பிக்கையோடு சரித்திரப் பாத்திரங்களோடு ஒன்றிப்போனேன்.

“எம் மண்ணில் கால் வைத்தால் பகைவனின் தலையைப் பந்தாடாமல் விடமாட்டோம். புல்லனுக்கு நம் வீரத்தைப் புரிய வைக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். நினைத்ததை அடைந்தே தீருவோம்.” மன்னர் உணர்ச்சிப் பிழம்பாய்ப் பொங்கினார். ஒவ்வொரு பாத்திரத்தின் உடையும் வாளும் அணிகளும் நாடகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருந்தன.

மண்டபத்தில் உள்ளோரின் கையொலி போட்டியின் முடிவைச் சொல்லாமல் சொல்லியது. நாடகம் முடிந்து, திரை மூடியது. மேடைக்குப் பின்னால் நின்றிருந்த என்னை நோக்கி என் நாடகக் குழுவினர் வந்தனர். கோபால் மகுடத்தைக் கழற்றிக் கையில் வைத்திருந்தான். நான் அவனை ஆரத் தழுவிக் கொண்டேன்.

தமிழ் நேசன் (18.12.2011)

Thursday, December 15, 2011

முகம் தொலைத்தல்



முகம் மலர்த்தல் எளிது
சிறு புன்னகை, புன்முறுவல்
இதழ்களிடையே தவழவிட்டால் போதும்

முகம் சுளித்தல் எளிது
வாய் இதழ்கள் பிதுக்கி
கண்களில் சிறு வெறுப்பை
உமிழ்ந்தால் போதும்

முகம் மறைத்தல் எளிது
இரு கைகள் கொண்டு
முகத்தை மூடினால் போதும்

முகம் பார்த்தல் எளிது
கண்ணாடி அருகே சென்று
முகம் காட்டினால் போதும்

முகம் மாற்றல் எளிது
முகத்தின் அளவுக்கேற்ப
முகமூடி இருந்தால் போதும்

அவற்றினும் எளிது
முகம் தொலைத்தல்

முகநூலையே நாள்முழுக்க
பார்த்துக் கொண்டு
அதனிலேயே
மூழ்கியிருந்தால் போதும்


நினைவடுக்குகளில்



ஒன்றின்மேல் ஒன்றாய் அழுந்திக்கிடக்கும்
நினைவின் அடுக்குகளில்
ஏதேனும் ஒன்றை உருவினாலும்
பழைய முகத்தின் சாயல்
தூசி படிந்த கண்ணாடிக் காட்சியாய்
உயிர் பெறுகிறது

ஒவ்வொன்றிலும்
கடந்துபோன கணங்களின் துயரமோ
மகிழ்ச்சித் துளியோ
சொல்லமுடியாத உணர்வின் கசிவோ
ஏதோ ஒன்று ஒட்டியிருக்கிறது

ஒவ்வொன்றிலும்
யார் யாரோ உடன் வந்து
பெயர் சொல்லி
முகம் காட்டுகிறார்கள்
ஒவ்வொருவரும் இப்போதும்
ஏதோ சொல்ல நினைத்துத் தயங்குகிறார்கள்

ஒவ்வொன்றிலும்
எனை நோக்கிய
பாராட்டுகள், குற்றச்சாட்டுகள், கசப்புகள்
வேதனைகள், கடுஞ்சொற்கள், துரோகங்கள்
வாசிக்கப்படுகின்றன

ஒவ்வொன்றிலும்
எல்லாக் காட்சிகள் மறைந்தும்
ரசமிழந்த கண்ணாடியின் மேல்
காயாமல் எஞ்சியுள்ளன
சில கண்ணீர்த் துளிகள்