நம் குரல்

Sunday, February 28, 2010

எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்

என்னையும் தமிழனாய் இப்புவிக்கு ஈந்த
அன்னையே தமிழே என் ஆவி கலந்தவளே
செம்மொழி நீயானாய் என் சிந்தையில் தேனானாய்
எம்மொழிக்கும் என்னென்றும் நீயே தாயானாய்!

இன்று பொதுவிடுமுறை. ஓய்வெடுக்கும் நாள். ஆயினும், நம் சமுதாயத்தின் முக்கியமான கல்விப் பிரச்சினை குறித்து விளக்கம் பெறவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் அனைவரும் உற்சாகத்தோடு அன்பு அழைப்பினை ஏற்றுத் திரண்டிருக்கிறீர்கள். முதலில் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்)

இந்த விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதிவு பெற்ற இயக்கமாக இது செயல்பட்டு வருகிறது. அதற்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, எஸ்.பி.எம். நடவடிக்கைக் குழு என்ற பெயரில் பல பணிகளை அமைதியாக எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இன்றி மேற்கொண்டு வந்தது. இதனை இங்கே இருக்கும் உங்களில் பலர் நன்கு அறிவீர்கள்.

நோக்கம்

மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் முக்கிய நோக்கங்கள் மூன்று: நோக்கம் ஒன்று, எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது. 340ஆகக் குறைந்த தமிழ் இலக்கியப் பாட மாணவர் எண்ணிக்கையை அரும்பாடுபட்டு பல விதமான முயற்சிகளுக்குப் பிறகு நான்காயிரமாக (4000) உயர்த்தினோம். இதற்குப் பல நல்லுள்ளங்களும் சமுதாய அமைப்புகளும் நமக்குக் கைகொடுத்தன. குறிப்பாக, மாநிலந்தோறும் இருக்கும் தமிழ் மொழிப்பிரிவு உதவி இயக்குநர்களின் பங்கு மிக முக்கியமானது.

மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் முக்கியமாக, எம்.ஐ.இ.டி மூலம் 5000 மாணவர்களுக்கு இலக்கியப் பாட நூல்களைப் பெற்றுத் தந்தோம். இம்முயற்சிக்கு உமா பதிப்பக உரிமையாளர் ஐயா சோதிநாதன் அவர்கள் உற்ற துணையாக இருந்தார். அவருக்கு நமது நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நோக்கம் இரண்டு, இந்தப் பாடம் தொடர்பான ஆசிரியர்களின் செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பது. ஆசிரியர்களுக்குக் கருத்தரங்குகள் வழி இலக்கியம் கற்பிக்கத் தேவையான பயிற்சியினை வழங்குவது. மாணவர்களுக்கு மாநிலந்தோறும் தேர்வுக் கருத்தரங்குளை நடத்துவது.

நோக்கம் மூன்று. தமிழ் இலக்கியம் கற்பிக்கும் இடைநிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளி தமிழாசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்று நோக்கங்களை முன்வைத்து நம் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம்.

ஆலோசகர் திரு மூர்த்தி

ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு வேண்டும். அது கட்டுப்கோப்பான இயக்கமாகச் செயல்படவேண்டும். அதற்குத் தலைவராக வருபவர் ஈராண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தால் போதும். தலைமைத்துவப் போராட்டத்தைத் தவிர்ப்போம். தேவையான பயன்மிகு செயல்திட்டங்களை மேற்கொள்வோம் என இந்தக் கழகத்தின் உருவாகத்திற்கும் செயல்பாட்டுக்கும் பின்னால் ஒருவர் உந்துசக்தியாக ஒருவர் இருந்து இயக்கி வருகிறார். அவர் வேறுமல்ல. நமக்கு அரிய லோசனைகளை வழங்கிவரும் கழகத்தின் ஆலோசகர் திரு மூர்த்திதான் அவர், மூர்த்தி பெரிது. அவர் கீர்த்தியும் பெரிதுதான் என்று இந்த வேளையில் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

10 பாடம் - அதிர்ச்சி

மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் நம் முயற்சி வெற்றிபெற்று வந்த வேளையில்தான் எஸ்.பி.எம், தேர்வில் 10 பாடங்கள் என்ற அதிர்ச்சி அறிவிப்பைக் கல்வி அமைச்சு கடந்த ண்டு வெளியிட்டது. நம் முயற்சியெல்லாம் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகின.

கல்வி அமைச்சின் முடிவானது தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதை நேரிடையாக சிரியர்கள் என்ற முறையில் நாம் உணர்ந்தோம். உணர்ந்ததைக் கல்வி அமைச்சோடு நடைபெற்ற சந்திப்புக் கூட்டங்களில் பல சமுதாய இயக்கங்களோடு இணைந்து தெளிவாக எடுத்துரைத்தோம். நம் ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளாக வெளியிட்டன.

நம் பிரதிநிதி

அமைச்சரவையில் நம் சமூகத்தின் பிரதி நிதியாக இருக்கும் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் இந்தப் பத்துப் பாடங்கள் என்ற கட்டுப்பாடு நமக்குப் பெரும் பாதிப்பு என்பதை முழுமையாக உணர்ந்து, நம் கோரிக்கையை அமைச்சரவையில் தொடர்ந்து பலமுறை முன்வைத்தார். எஸ்.பி.எம். 12 பாடச் சிக்கலுக்குத் தீர்வு காண அமைச்சரவையின் பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டார் என்பதில் இருந்து அவரின் பங்களிப்பை நாம் அறிந்துகொள்ள முடியும்.

பாராட்டு

மாண்புமிகு டத்தோ சுப்ரமணியம் அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் கேள்வி எழுப்பியதால்தான் 10 பாடங்கள் என்ற கட்டுப்பாடு 10 + 2 என்று மாறியது. இப்பொழுது நாம் எழுப்பிய கோரிக்கைக்கு ஏற்ப 12 பாடங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான டத்தோ அவர்களை நம் தமிழ் இலக்கிய சிரியர் கழகம் மனதாரப் பாராட்டுகிறது. “இனி முடியாது” என்று பலர் மனம் தளர்ந்து போன நிலையில் “முடியும்” என்று சாதித்துக் காட்டினார் டத்தோ. இந்த வேளையில் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களுக்கு நம் கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.

மீண்டும் ர்வம்

டத்தோ அவர்களின் முயற்சியால்தான் இன்று மீண்டும் தமிழும் தமிழ் இலக்கியப் பாடமும் மாணவர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. 12 பாடங்கள் என்ற அறிவிப்பு வந்த பிறகு, மாணவர்கள் மீண்டும் ர்வத்தோடு இப்பாடங்களுக்குப் பதிந்துகொண்டு வகுப்புகளுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

மழை விட்டும் தூறல்..

மழை விட்டும் தூறல் விடாத கதையாக, 12 பாடங்கள் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வந்த பிறகும்கூட இன்னும் சில பள்ளிகளில் பழைய நிலைதான் என்ற வருத்தமான செய்திகள் காதுக்கு வருகின்றன. அப்படி இருந்தால் இந்த விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு அப்படிபட்ட சிக்கல்கள் களையப்படும் என நம்புகிறோம்.

பொன்னான வாய்ப்பு

இது போராடிக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டு போதுமென நாம் ஓய்ந்துவிடக்கூடாது. நம் வெற்றிக்குப் பொருள் இல்லாமல் போய்விடும். உரிமையைக்காக்க, நாம் காட்டிய வேகத்தைச் செயலிலும் காட்ட வேண்டும். 10 000 மாணவர்கள் தமிழ் எடுக்கும் வேளையில் 4 000 மாணவர்கள் மட்டும் இலக்கியம் எடுக்கிறார்கள் என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. இந்த எண்ணிகையை உயர்த்த மலேசியத் தமிழ் இலக்கிய சிரியர் கழகம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



தனிப்பட்ட முயற்சிகள் பலன் தரா. இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தமிழ் பயிலும் மாணவர்களை இலக்கியமும் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். உங்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ, கைகொடுக்க சிரியர் கழகம் காத்திருக்கிறது.


சிரியர்கள் வழிகாட்டிகள்
சமுதாயக் கட்டமைப்பில் சிரியர்கள் மிக முக்கியமானவர்கள். சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருந்து சமூகச் சிக்கலுக்குத் தீர்வைச் சொல்பவர்கள். நாமுண்டு நம் குடும்பமுண்டு என்று சுயநல வேலி அமைத்துக்கொண்டு, கைகட்டி ஒதுங்கி நின்றால் இழப்பு நம் சமுதாயத்திற்குத்தான்.

வாருங்கள். ஒரணியாக இணைவோம். மாணவர் - சிரியர் நலன் ஒன்றையே ஒரே நோக்கமாகக் கொண்ட இந்த சிரியர் கழகத்தில் இன்னும் இணையாதவர்கள் இணையுங்கள். நம் முயற்சிக்கெல்லாம் இனி ஒல்லும் வகையெல்லாம் உதவப்போகிற அமைச்சர் மாண்புமிகு டத்தோ எஸ். சுப்ரமணியம் அவர்களின் ஒத்துழைப்போடும் உங்கள் அனைவரின் தரவோடும் இன்னும் பல இலக்குகளை எட்டிப்பிடிக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புவோம்.

விடைபெறும்முன் உங்கள் சிந்தனைக்கு ஒரு கவிதை

தமிழ்க்கல்வி போற்றுதும்
தமிழ்க்கல்வி போற்றுதும்

அரைத்தமிழர் எண்ணிக்கை
அரிதாகி மறைய

உயிர்த்தமிழ் நாட்டில்
உரிமையாய் உலவிட

தீந்தமிழ் உயிரில்
தேனாய்ப் பாய்ந்திட

இனமான உணர்வினை
ஈங்குநாம் காத்திட

ஒங்குபுகழ் தமிழைப்
பாங்காய் வளர்த்திட

இலக்கண இலக்கிய
இன்தமிழ் மாந்திட

புன்மையில் தமிழர்கள்
புதைவதைத் தடுத்திட

பண்பாட்டு வேர்களில்
பாயும் நஞ்சு விலகிட

தகவல் ஊடகம்
வாடும் தமிழ் நிமிர்ந்திட

வன்முறைப் பழக்கம்
வழக்கொழிந்து போக

தமிழ் இதழ் இங்கு
இன்னும் பல தோன்றிட

தமிழரின் சபைகளில்
தலைமையைத் தமிழ்காண

தமிழ்க்கல்வி போற்றுதும்
தமிழ்க்கல்வி போற்றுதும்

உயிர்த்தமிழ் நாட்டில்
உரிமையாய் உலவிட

தமிழ்க்கல்வி போற்றுதும்

அனைவருக்கும் நன்றி கூறி அமைகிறேன், வணக்கம்

(26.2.2010 நாளன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில்,
மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஏற்பாட்டில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற எஸ்.பி.எம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பாடங்கள் விளக்கக்
கூட்டத்தில் நான் ஆற்றிய உரை)

நமக்கு இல்லையா நல்ல தமிழ் நாவல்?


14 ஆண்டுகளுக்கு முன் (1994) மயில் வார இதழில் இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இதே தலைப்பில் கட்டுரை எழுதவேண்டிய சூழல்தான் இன்னும் நிலவுகிறது என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு இங்குப் பதிவு செய்கிறேன்.

மலேசியத் தமிழ் நாவல்களில் தரமான நாவல் எனத் தகுதிபெற ஒன்றுமில்லை என்ற கருத்துக்கு எதிர்வினையாற்றியும் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம், தேர்வுகளுக்கு மலேசிய நாவல்களே பாட நூல்களாகத் தேர்வாகவேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தேன்.

நம் நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு 51 ண்டுகள் கடந்துவிட்டன. சுமார் நாற்பது ண்டுகளுக்கு மேலாக நம் மாணவர்களுக்குத் தமிழக படைப்புகளையே அரிய படைப்புகளாக அடையாளங்கட்டி அவற்றைப் படிக்கும் வாய்ப்பினை வழங்கி வருகிறோம். இதனால் உள்நாட்டுப் படைப்புகளும் படைப்பாளர்களும் ஒதுக்கப்பட்டு வருவதை யாரும் ஒரு பொருட்டாகக் கருதாத நிலை என் தங்கத்தின் அடர்த்தியை அதிகமாக்குவதால் மீண்டும் இது குறித்து எழுத வருகிறேன்.

ஒரு நூறாண்டு கால மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதை, சிறுகதை, கட்டுரை, புதுக்கவிதை போன்று நாவல் இலக்கியமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. விடுதலைக்கு முந்திய காலக்கட்டத்தில் (1910-1957) சுமார் இருபது நாவல்கள் மட்டுமே வந்துள்ளன. தமிழக, இலங்கைப் பின்னணியைக்கொண்டு நகர்ப்புறத் தமிழர்களால் படைக்கப்பட்ட இந்த நாவல்களில் அங்காங்கே ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளும் அளவில்தான் மலேசியத் தோட்டப்புறச் சமுதாயம் காட்டப்பட்டது.

ஆனால், விடுதலைக்குப் பிந்திய காலக்கட்டம் தொடங்கி 2008வரை நூற்றுக்கும் குறையாத நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தோட்டப்புறச் சமுதாயப் போராட்டமும் நவீன வாழ்வின் சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தொடக்க காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் இங்குக் கொண்டு வரப்பட்ட கதைகளையும் ஆங்கிலேயர்-ஜப்பானியர் ட்சியில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளையும் பதிவு செய்யும் முயற்சி எழுபதுகளுக்குப் பின் எழுதப்பட்ட நாவல்களில் காணமுடிகிறது. இது குறித்து விரிவாக முனைவர் வே.சபாபதியின் ‘விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டில் காணலாம்.

க.வேங்கடரத்தினம் எழுதிய கருணாகரன் அல்லது காதலின் மாட்சி (1917) என்ற நாவலும் க.சுப்ரமணியம் எழுதிய பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் (1918) என்ற நாவலும் நம் தொடக்க கால நாவல்களாகும். ஆனால், நம் மலேசிய மண்ணின் மணம் கமழும், நம் வாழ்க்கைப் போராட்டங்களை ஆழமாகப் பதிவு செய்யும் முயற்சிகளைப் பின் வந்த பல நாவல்களில் காணமுடிகிறது. துயரப்பாதை (கா.பெருமாள்), மரவள்ளிக்கிழங்கு (சா..அன்பானந்தன்), இலட்சியப்பயணம் (ஐ.இளவழகு), செம்மண்ணும் நீல மலர்களும் (எம்.குமரன்), புதியதோர் உலகம் (அ.ரெங்கசாமி), சயாம் மரண ரயில் (ர்.சண்முகம்), வானத்து வேலிகள் (ரெ.கார்த்திகேசு), ஆடும் மஞ்சள் ஊஞ்சள் (பா.சந்திரகாந்தம்), தீமலர் (சு.கமலா) போன்ற சில நாவல்கள் நம் வாழ்க்கையைப் பதிவு செய்யும் முயற்சிகளில் வெற்றிபெற்றுள்ளதைக் காண முடிகிறது. இவை தவிர்த்து, அச்சிலே வந்து இன்னும் நூலுருவில் வராத நாவல்கள் நிறைய உள்ளன.

நாவல் இலக்கிய வளர்ச்சிக்குப் பல அமைப்புகள் பங்கினை வழங்கியுள்ளன. தமிழ் நேசன் நாளிதழ் (நாவல் எழுதும் போட்டி), வானம்பாடி வாரஇதழ் (மாதமொரு நாவல் திட்டம்), மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் இப்படிப் பல தரப்பினரின் பங்களிப்பினை யாரும் மறுக்கமுடியாது.

குறிப்பாக, அண்மைய காலத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தொய்வடைந்திருக்கும் நாவல் இலக்கியத்திற்கு உயிரூட்டும் வகையில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், ஓம்ஸ் குழுமம் இவற்றோடு இணைந்து இரண்டுமுறை நாவல் போட்டியை நடத்தியுள்ளது. முதற்போட்டியில் பரிசு பெற்ற நாவல்களான லங்காட் நதிக்கரை (அ.ரெங்கசாமி), மண்புழுக்கள் (சீ.முத்துசாமி) கிய இரண்டையும் எழுத்தாளர் சங்கம் நூல்களாக வெளியிட்டுள்ளது. இரண்டாம் போட்டியில் வெற்றிபெற்ற மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை (சிதனா), நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்) கிய இரண்டையும் இப்பொழுது நூலாக்கும் முயற்சியில் எழுத்தாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் சங்கம் நடத்திவரும் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப்பரிசளிப்புத் திட்டத்தில் கடந்த 2007 இன் சிறந்த நாவலாக பா.சந்திரகாந்தத்தின் அமுதசுரபிகள் நாவல் தேர்வுபெற்று ரிங். 7000யைப் பரிசுத்தொகையாகப் பெற்றது.

இப்படிப் பல நாவல்கள் நல்ல நாவல்களாக அடையாளங் காணப்பட்டும் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைத்து விட்டு, இன்னும் தமிழக நாவல்களையே நம்பியிருப்பது ஏன் என்பதற்கான விடை யாருக்கும் புரியாத, தெரியாத பரம இரகசியமாகவே உள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாவல் கருத்தரங்கில் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சில விதிகள் சில தகுதிகள்’ எனப் பல்கலைக்கழக விரிவுரையாளரால் மழுப்பப்பட்டது.

மலேசிய தேர்வு வாரியத்தைப் பொறுத்தவரை ‘நல்ல நாவல்’ என்பதற்கான அளவுகோல் அல்லது வரையறை தளர்த்த முடியாத சில கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒன்று, தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் பாடநூலாகத் தேர்வு பெறும் நாவல், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குக் கேள்வி தயாரிக்கப் போதுமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, தேர்வை எதிர்நோக்கும் 17 வயது மாணவர்களுக்குப் பொருத்தமான கதைக்களத்தைக் கொண்டிருக்கவேண்டும். மூன்றாவதாக, காலங்காலமாக தமிழக நாவலைத் தேர்வுசெய்யும் மரபைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் (இல்லாவிட்டால் இத்தகைய மரபைப் போற்றிய முன்னோர்கள் மன்னிக்கமாட்டார்கள்)

தமிழக நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம் நாவல்கள் நல்ல நாவல்களா என்று முடிவுசெய்ய வேண்டியதில்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும். இந்த மண்ணிலே நம் எழுத்தாளர்கள் நம் உண்மையான வாழ்க்கையை மிகைபுனைவு இன்றி பதிவுசெய்திருந்தாலே அவை நல்ல நாவல்களாக ஏற்றுக்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் நாவல்களை மாணவர்ப் பதிப்புகளாகக் கொண்டுவரலாம். இதன்வழி கேள்வி தயாரிக்கத் தேவையான உள்ளடக்கம் இருப்பதையும் உறுதி செய்யலாம். இது குணப்படுத்தக்கூடிய நோய்தான். இந்நோய்க்கு மருந்து இருக்கிறது. மனம் வைத்தால் மருத்துவத்தைத் தொடங்கி விடலாம்.

மலேசிய நாவல்களே நம் மாணவர்களுக்குப் பாட நூல்களாக அமையவேண்டும் என்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். பின்வரும் மூன்று காரணங்கள் முக்கியமானவை.

அ) நம் நாவல்களுக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. போட்டிகளில் நாவல்கள் சிறந்த நாவல்களாகப் பரிசுகளைப் பெறுகின்றன. ஆனால், சமூக அங்கீகாரம் இல்லை. மாணவர்கள் மூலமாக பரவலாகச் சமூகத்தில் சென்று சேரும்பொழுது அவற்றுக்குச் சமூக அங்கீகாரம் கிடைக்கும். தமிழ் எழுத்தாளர் சங்கம் இருமுறை தமிழகத்திற்கு மேற்கொண்ட இலக்கியப் பயணம் மூலமாக இன்று, பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் நம் நாட்டுப் படைப்புகள் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் நம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டு அங்கீகாரம்கூட சாத்தியமாகிவிட்டது. உள்நாட்டு அங்கீகாரத்திற்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறோம்.

) இந்நாட்டு இளையோர்கள் நம் இனத்தின் வரலாற்றையும் நம் வாழ்க்கைப் போராட்டங்களையும் இலக்கியம் வழி அறிந்து தெளியும் வாய்ப்பினை நாம் வழங்கவேண்டும். இந்நாட்டுக்கு வந்த நம் முன்னோர்கள் தொடக்கத்தில் எதிர்நோக்கிய சிக்கல்களையும் இன்னல்களையும் அவர்கள் அறியும் நிலையை இலக்கியம் வாயிலாக உருவாக்கவேண்டும். இதை விடுத்து அவர்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத இன்னொரு நாட்டு மக்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் போராட்டங்களையும் முன் வைப்பதால் என்ன பயன் விளையப்போகிறது?

இ) இந்நாட்டு நாவல்கள் மாணவர்களுக்குத் தேர்வு நூல்களாகத் தேர்வுபெற்றால்தான் தொடர்ந்து இத்துறையில் புதிய நாவல்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக இருக்கும். மாணவர்களுக்குப் பொருத்தமான நாவல்களைப் படைக்க எழுத்தாளர்களைத் தூண்டும். இல்லாவிட்டால் நாம் நடத்தும் நாவல் போட்டியும் நாவல் கருத்தரங்கும் ஏதோ ஒப்புக்கு நடத்தும் இலக்கிய விழாக்களாக அமைந்துவிடும்.

எம்மாதிரியான நாவல்கள் பாடநூல்களாக அமைந்தால் சிறப்பு என்று எண்ணிப் பார்த்தேன். இன்று நகர்ப்புறத்தில் விளிம்பு மனிதர்களாகி நாம் எதிர்நோக்கும் இன்னல்கள் கதைகளாக வருகின்றன. நவீன வாழ்க்கையின் சிக்கல்களும் பதிவாகின்றன. இவற்றைவிட தொடக்க காலத்தில் சஞ்சிக்கூலிகளாக நம்மவர்கள் இந்நாட்டில் குடியேறிய வரலாற்றுச் செய்திகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள் பாட நூல்களாக அமைந்தால் நம் தொடக்க கால வரலாற்றினை நம் இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். ஆங்கிலேயர் - ஜப்பானியர் காலனித்துவ ஆட்சியில் நம்மவர்கள் பட்ட இன்னல்களை மையமிட்ட நாவல்கள் குறிப்பாக, சயாம் மரண ரயில் அமைப்பதில் கொடுமைக்கு ஆளான கதைகளைப் பதிவுசெய்த நாவல்கள் முக்கியமானவை. தோட்டப்புற வாழ்வில் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய போராட்டங்கள் பற்றிய நாவல்களும் வந்துள்ளன. இவையும் மாணவர்களுக்கு ஏற்ற நாவல்களாக அமையும்.

இந்தோனேசிய நாவல்களை நம்பியிருந்த மலாய் இலக்கிய உலகம், பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த காலனி உணர்விருந்து மீண்டு உள்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து பரிந்துரைத்து, இன்று எல்லா நிலைகளிலும் நம் நாட்டு மலாய் எழுத்தாளர்களின் படைப்புகளே தேர்வுக்குரிய நூல்களாக உள்ளன. நாமும் காலனி உணர்விலிருந்து மீள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
‘அக்கரையில் விளைபவையே
சத்து
இக்கரையில் வருவதெல்லாம்
சொத்தை’

என்ற இரசனைப் பிடிவாதம் இன்னும் நம்மை ஆட்டுவிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். இந்நாட்டு நாவல் இலக்கிய வளர்ச்சிக்குத் மலேசியத் தேர்வு வாரியமும் தனது பங்கினையாற்றவேண்டும். அப்படியொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு நம் நாட்டு நாவல்களே தேர்வுக்கான பாட நூல்களானால் நம் நாவல் வளர்ச்சியில் இன்னுமொரு மைல்கல்லாக அது திகழும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம் பிள்ளை தானே வளரும் என்பதெல்லாம் சத்தியமாய் இந்த நாவல் விஷயத்தில் நடக்காது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் பிள்ளை சவலையாய்க் கிடப்பது யார் கண்களுக்கும் தெரியாமல் போனது எப்படி? எண்ணியெண்ணிப் பார்க்கிறேன். எனக்கு வியப்பாக இருக்கிறது.

உரக்கப் பேசும் மௌனம்

1.
மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தற்பொழுது சிற்றிதழ்கள் முளைவிடும் காலம் என்று துணிந்து கூறலாம். நம் நாட்டில் இதுவரைக்கும் நூற்றுக்கும் குறையாத இதழ்கள் வலம் வந்து கால நதியில் கலந்து காணாமல் போய்விட்டன. அவற்றிலிருந்து மாறுபட்டுத் தீவிர இலக்கியத் தாகத்தோடு புதிய சிற்றிதழ்கள் வெளிவருவது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

சீ.அருண் ‘அருவி’ கவிதை இதழைச் சில ண்டுகள் வெளியிட்டு வந்தார். ‘முகம்’ அறிமுக இதழ் வெளிவந்து நின்றுபோனது. ‘காதல்’ சில இதழ்களோடு காணாமல் போனது. ம.நவீனின் ‘வல்லினம்’ இதழ் கலை, இலக்கிய இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. கெடா கே. பாலமுருகன் ‘அநங்கம்’ இதழை வெளியிட்டு வருகிறார். இந்த ண்டு தொடக்கம் முதல் ஜாசின் கவிஞர் ஏ.தேவராஜன் ‘மௌனம்’ எனும் தற்காலக் கவிதைக்கான சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.

சிறுகதை, கட்டுரை, கவிதை என இலக்கியப் படைப்புகளால் நம் நாட்டு நாள், வார, மாத ஏடுகளை நீண்ட காலம் அலங்கரித்து வருபவர் ஏ. தேவராஜன். அதோடு, பாடல், பலகுரல் வண்ணம், நிகழ்ச்சி அறிவிப்புப் பணி, ஓவியம் என பன்முகம் கொண்டவர். இவரின் தொடர்ச்சியான எழுத்துத் தவம் நமக்கு வியப்பைத் தருவதாகும். கவிதை உலகில் பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைப்பவர். இவரின் தீவிர இலக்கிய ஈடுபாட்டின் நீட்சியாக இந்தக் கவிதை இதழ் முயற்சியைக் காண்கிறேன்.

‘நினைத்த நேரம் வெளிவரும் இதழ்’ என்ற அறிவிப்போடு 5 இதழ்கள் வந்துள்ளன. அனைத்தும் நம்பிக்கை தருவனவாக உள்ளன. முக்கியப் படைப்பாளிகளான பலரின் கவிதைகளைத் திரட்டி அச்சேற்றியிருப்பதில் தேவராஜனின் உழைப்பு தெரிகிறது. கவிதைகளை நேர்த்தியாகத் தொகுத்துப் பக்க அமைப்பிலும் கவனம் செலுத்தி ஏற்ற ஓவியங்கள், படங்களை இணைத்துக் காண்பாரை ஈர்க்கும் வண்ணம் இதழை உருவாக்கியிருக்கிறார்.

இதழின் பல கவிதைகள் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது உறுதி. நவீன வாழ்வின் சிதைவுகளை, விளிம்பு மனிதர்களின் வேதனையை, நிகழ்கால சமுதாய நடப்பை, மனத்தில் மக்கி மடிந்துபோகும் உணர்வுகளின் பதிவை, தொலைதூரத்தில் கேட்கும் நம்மினத்தின் இன்னல்களைக் கலைமுலாம் பூசி நம் கையில் தந்துவிடுகின்றன பல கவிதைகள். நல்ல கவிதைகளைத் தேடிப் படிக்க முடியாத வாசகனுக்குப் பயன் தரும் வகையில் மொழிபெயர்ப்புக் கவிதைகள், எடுத்துக்காட்டுக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் தீவிர இலக்கிய வளர்ச்சிக்குச் சிற்றிதழ்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இங்கேயும் தீவிர இலக்கியம் முகம் காட்டத் தொடங்கிவிட்டது. கவிதை குறித்த உரையாடல்களை, விமர்சனங்களை, சிந்தனைகளை முன்வைக்க ‘மௌனம்’ களம் அமைத்துத் தருகிறது. அணியெனும் பிணி இல்லாமல் படைப்பாளர்கள் ‘மௌனம்’ இதழில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். கவிதையை நேசிக்கும் கவிதைக் காதலர்களையும் வாசகர்களையும் தம் கவிதை அணியில் இணைப்பதில் தேவராஜன் வெற்றிபெற்றுள்ளார்.

2.
இவ்வேளையில் ‘மௌனம்’ எப்படி உருவானது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். கடந்த ண்டு டிசம்பர் மாதம் சிரியர் பணி நிமித்தமாக தேவராஜனும் நானும் பினாங்கு மாநிலத்தில் ஒரு வாரம் தங்கும் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம். அப்பொழுது கவிதைப் போக்குக் குறித்தும் அதற்கு ஏடுகளில் கிடைக்கும் மரியாதை குறித்தும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

நீண்ட காலமாக கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவரும் தேவராஜனின் மனமெங்கும் தங்கம் நிறைந்திருப்பதை அன்று கண்டேன். புதிய முயற்சிகளுக்கு ஏடுகளில் இடமில்லை என்பதோடு புரியாத கவிதைகள் என்ற முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதை வருத்தத்தோடு கூறினார். கவிதை குறித்த சிந்தனைகளுக்கும் புரிதல்களுக்கும் ஏடுகளில் இடமில்லை என்பதையும் இருவரும் ஒப்புக்கொண்டோம். இதற்கு வழிகாண வேண்டும் என்ற சிந்தனை வயப்பட்டவராக தேவராஜன் அந்த ஒரு வாரமும் இருந்ததாக எனக்கு நினைவு.

பணி முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் விடைபெற்றபோது, தேவராஜன் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். உடனே ஒரு கவிதை இதழைத் தொடங்கவேண்டும். கவிதைத் துறைக்கு நிலையான ஒரு பங்களிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவோடு பேருந்தில் ஏறினார். சொன்னபடியே மூன்றாவது வாரத்தில் 48 பக்கங்களில் முதல் ‘மௌனம்’ இதழ் என்னைத் தேடி வந்து வியப்பில் ழ்த்தியது. பினாங்கு மாநிலத்தில் மனத்தில் விழுந்த விதை, ஜோகூர் மண்ணில் முளைவிட்டுக் கிளை விட்டது.

3.
இதுவரை வெளிவந்துள்ள 5 இதழ்களையும் ஒரு பருந்துப் பார்வையாகப் பார்க்கையில் தேவராஜனின் அசுர உழைப்பைப் பார்க்க முடிகிறது. ‘நயனம்’ சிரியர் திரு. இராஜகுமாரன் கேட்டதுபோல் “எப்படி இவரால் இத்தனைக் கவிதைகளைத் திரட்ட முடிந்தது?” என நானும் கேட்க விழைகிறேன். விடாப்பிடியாக இருந்து பலரிடம் கவிதைகளைக் கேட்டு வாங்கி அச்சு வாகனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மற்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஏடுகளில் சராசரி கவிதைகள் எழுதும் படைப்பாளர்கள் ‘மௌனம்’ இதழில் தங்களின் மாறுபட்ட கவிதைகளை எழுதியிருப்பது ‘மௌன’த்தின் வெற்றியாகும். வழக்கமான கவிதைகளை விடுத்து மௌனத்தின் போக்கும் நோக்கும் உணர்ந்து கவிதைகளை வழங்கியுள்ளனர்.

புதிய படைப்பாளிகளின் வரவும் ‘மௌனம்’ இதழுக்குத் தனிச் சிறப்பை அளிக்கிறது. அதே வேளையில் மூத்த படைப்பாளிகளையும் ஒதுக்கிவிடாமல் அவர்களையும் அரவணைத்து மௌனத்தில் பாகுபாடு இல்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார். சிலர் புனைபெயர்களில் உலவிக்கொண்டு முகங்காட்டாமல் கவிதைகளால் பேசியுள்ளனர்.

‘புரிதல்’ மௌனத்தில் அழுத்தமான முத்திரையைப் பத்திக்கும் பகுதி. இதுவரை வாசக மனங்களுக்குப் புலப்படாத படைப்பாளனின் உள்முகத்தைத் திரை விலக்கிக் காட்டும் பகுதி. வெறும் எழுத்துகளால் பக்கங்களை நிரப்பாமல் மாறுபட்ட ஓவியங்களால் அழகு செய்து வாசகர் மனங்களைக் கவிதைகளுக்கு அழைத்துச் செல்லும் பாங்கு மௌனத்தின் தனிச் சிறப்பாகும்.

தேவராஜன் எனும் மிகப் பொருத்தமான கவிஞனின் மேற்பார்வையில் 5 இதழ்களிலும் ‘மௌனம்’ உரக்கப் பேசியிருக்கிறது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் சிந்திக் கிடக்கும் அவனின் வியர்வைத் துளிகளை அவற்றின் ஊடே பயணம் போகும் நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர முடியும்.

Wednesday, February 24, 2010

ரேணிகுண்டா (பட விமர்சனம் குறித்து..)

அன்புள்ள பாலமுருகனுக்கு வணக்கம்.

ரேணிகுண்டா பட விமர்சனம் சற்று வித்தியாசமாக இருந்தது.
படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தங்கள் விமர்சனம்
படித்தபோது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னைத்
துரத்துகிறது.

வழக்கமான சினிமாவாக இல்லாமல் மாற்றுச் சினிமாவாக இப்படம்
அமைந்திருப்பதை உணரமுடிகிறது. விமர்சனம் படித்தவுடன் ஜானி,
டப்பா, மாரி, பாண்டுரங்கன், ஆகிய ஐவரும் மனத்திற்குள்
சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டார்கள்

இளம் குற்றவாளிகளை மையப்படுத்தி, திரைக்கு முன்னால்
அமர்ந்திருப்பவர்களை உள்ளே ஈர்த்துக்கொள்ளும் கலையில்
இயக்குநர் வெற்றி பெற்றிருப்பதை
தங்கள் விமர்சனம் தெளிவாக்குகிறது.

வழக்கமான சினிமா உலகின் ஆர்ப்பாட்டங்களுடன் சமரசம்
செய்து கொள்ளாமல் தனித்து நிற்கும் இம்மாதிரி மாற்றுப்
படங்களுக்காகத்தான் நல்ல ரசிகன் காத்திருக்கிறான்.

நம்பி வரும் ரசிகனை அவமானப்படுத்துவது போன்று
பல படங்கள் அமைந்துவிடுகின்றன.
ரேணிகுண்டா ரசிகனின் ரசிப்புத்தன்மையை அங்கீகரிக்கிறது.

ஒரு நல்ல கவிதையைப்போன்று மனத்திற்குள் ஆழமான உணர்வு
அலைகளை எழுப்பித் தமிழ் சினிமா மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஒரு நல்ல படத்தை முன்மொழிந்தமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
ந. பச்சைபாலன், மலேசியா
http://www.patchaibalan.blogspot.com/

Tuesday, February 23, 2010

மதாபிமானம்



அழாதீர்கள்!
உங்கள் கண்ணீர்த்துளிகளைத் துடைக்க
எங்கள் கைகள் நிச்சயம் நீளும்

வறுமை உங்களைத் தின்றுத்தீர்ப்பதை
வேடிக்கை பார்க்க
எங்கள் மனம் எப்படி ஒப்பும்?

போர் அரக்கனின் கொடூரப் பிடியிலிருந்து
உங்களை மீட்டெடுத்துப்
புனர்வாழ்வு தரும் பணிகளில்
எங்களின் பங்களிப்பு தவறாமல் உண்டு

இயற்கைப் பேரிடரின் கொடுங்கனவிலிருந்து
உங்களைக் காப்பாற்றிக் கைதூக்கிவிட
நாங்களும் இருக்கிறோம்

உங்கள் சுமைகளை இறக்கி வைக்க
உங்கள் வாழ்வாதாரத்திற்கு
வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்

திக்கற்றுத் திரியும்
உங்கள் வாரிசுகளுக்குப் புதுவாழ்வு தருவது
எங்கள் பொறுப்பு

உலகப்பந்தின் எந்த மூளையில்
நீங்கள் இருந்தாலும் தேடி வருவோம்

எல்லாமும் சாத்தியம், நம்புங்கள்
யினும் ஒரு சின்ன நிபந்தனை!

நீங்கள் எங்கள் மதத்தினராய்
இருந்தால் போதும்!

தேசியம் ( சிறுகதை)

கோலாலம்பூர் ராஜா லாவுட் சாலையை அணைத்தவாறு கம்பீரமாக நிற்கும் அந்த ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை அண்ணாந்து பார்த்தார் இளங்கண்ணன். மாலை மங்கி இருள் கௌவத்தொடங்கிய பொழுது. கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண விளக்குகள் அந்த முப்பது மாடி தங்கும் விடுதியின் மேனியை வெளிச்ச வெள்ளத்தால் நனைத்திருந்தன.

ஏற்பாட்டு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தேறப்போகிறது. யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு. அதற்குப் பின்னணியில் தான் இருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுதே இனம்புரியாத மகிழ்ச்சி அவர் மனத்தின் கரைகளில் பேரலையாய்ப் புரண்டது.

இப்பொழுதுதான் இரவு மணி 7.00. இன்னும் நிகழ்ச்சி தொடங்க ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் அழைக்கப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்களை வரவேற்பதில் கழகத்தின் செயற்குழுவினர் முனைப்பாக இருந்தனர். இளங்கண்ணன் விடுதியின் முகப்பில் கட்டப்பட்ட தமிழிலும் மலாய் மொழியிலும் அமைந்த பதாகைகளின் நேர்த்தியை இரசித்தார். ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய இலக்கியவாதிகளுக்கு விருதளிப்பு விழா’ இளம்பச்சை நிறம் பின்னணியில் இருக்க, பொன்னிற எழுத்துகளில் பதாகைகள் கம்பீரம் காட்டின. பக்கத்தில் புன்னகை நாயகனாக முக்கியப் பிரமுகர்.

“தலைவரே, இங்க பாருங்க. யாரு வந்திருக்கான்னு..” துணைத்தலைவர் தமிழ்மாறன் அழைத்தார். இளங்கண்ணன் திரும்பினார். அங்கே கழகத்தின் முன்னாள் தலைவர் சேதுபதி. “என்னையா, என்னன்னமோ செய்றீங்க. ஏதும் வில்லங்கம் வந்திடாதே? எல்லாம் சரியாதானே போவுது? நாலு பேர விசாரிச்சு பார்த்துதானே செய்றீங்க?” நியாயமான பயம் அவர் சொற்களில் எட்டிப்பார்த்தது. பதினைந்து ண்டுகள் எழுத்தாளர் கழகத்தை நேர்த்தியாக வழிநடத்தியவர். ஒல்லும் வகையெலாம் இலக்கியப் பணியாற்றி ஈராண்டுகளுக்கு முன் இளங்கண்ணனிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தவர்.

“அப்படியெல்லாம் ஒன்னும் காது தலைவரே. சரியா திட்டமிட்டு எல்லாரும் கலந்து பேசிதான் இதுலே இறங்கியிருக்கோம். நமக்கு வெற்றி கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். நீங்களும் பார்க்கப் போறீங்க”

“எது எப்படியோ, சட்டச் சிக்கல் வரக்கூடாது. ஒங்களுக்கு அப்புறமும் நம்ம கழகம் இருக்கணும். அதுக்கு மூடுவிழா செய்துட்டு போயிடாதீங்க” முதுமையில் உடல் தளர்ந்தாலும் உள்ளத்தின் உறுதி தெரிந்தது.

இளங்கண்ணன் சேதுபதியோடு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் நுழைந்தார். யிரம்பேர் அமரக்கூடிய அருமையான மண்டபம். அரைப்பகுதி நிறைந்துவிட்டது. வருகையாளர்களில் தமிழ் எழுத்தாளர்களோடு மலாய், சீன எழுத்தாளர்களும் இருந்ததைப் பார்க்க சேதுபதிக்கு வியப்பாக இருந்தது. அவர் காலத்தில் அப்படியொரு முயற்சியில் இறங்கியதில்லை. அவர்களில் சிலருக்குச் சேதுபதியை இளங்கண்ணன் அறிமுகப்படுத்தினார். மேடையிலிருந்து மெல்லிய இசை புறப்பட்டு மண்டபம் முழுமைக்கும் பரவி வருகையாளர்களின் இதயங்களைத் தாலாட்டிக்கொண்டிருந்தது.

இப்படியொரு இலக்கிய விழாவை மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் பொறுப்பேற்று நடத்தலாம் என்ற சிந்தனையை இளங்கண்ணன் செயலவைக் கூட்டத்தில் முன் வைத்தபோது முதலில் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, அடுத்துத் தலைவர் பதவிக்குக் குறிவைத்துக் காத்திருந்த செயலாளர் கவிஞர் அறவாணன் கடுமையாக மறுத்துப் பேசினார்.

“தலைவர் பேசறது எனக்கு என்னவோ சரியாப் படல. இது தமிழ் எழுத்தாளர்களுக்காக உள்ள அமைப்பு. இங்கே நம்ம நடவடிக்கை எல்லாம் தமிழ் எழுத்தாளர்களுக்கு பயன் தருவதா இருக்கணும். இத விட்டுட்டு சீன, மலாய் எழுத்தாளர்ன்னு போனம்னா அப்புறம் சிக்கல்தான்.”

“நம்ம எழுத்தாளர் கழகம் தமிழ் எழுத்தாளர் நலம் காக்கும் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. னா, இந்த குறுகிய வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்க. 1969 இல் நாட்டில் இனக்கலவரம் நடந்த பிறகு 1971இல் தேசிய பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதே சமயத்துல தேசிய இலக்கியம் என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டது. மலாய் மொழியில் எழுதும் படைப்புகள் மட்டும் தேசிய இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தது. இது உங்க அனைவருக்கும் தெரியும்” இளங்கண்ணன் வரலாற்றைத் துணைக்கழைத்தார்.

“இது பழைய கதை தலைவரே. கடந்த முப்பத்தெட்டு வருசமா இதுதானே இங்க நிலை. இத மாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கையில்ல” செயற்குழு உறுப்பினர் குணசேகர் வாய்திறந்தார்.

“நம்பிக்கைதானே வாழ்க்கை குணசேகர். நாம நம்ம சக்திக்கு ஏற்ப முயற்சி செய்வோம். நாம ஒன்றுபட்டு ஒற்றுமையா செயல்பட்டா தமிழ் இலக்கியத்துக்கு இந்த நாட்டுல அங்கீகாரத்தை எப்படியாவது வாங்கிடலாம்” இளங்கண்ணனின் சொற்களில் நம்பிக்கை ரவாரித்தது.

“கேட்க நல்லா இருக்கு தலைவரே. ஒன்னு செய்வோம். அடுத்த மாசம் ண்டுக்கூட்டம் வருது. வழக்கம்போல தீர்மானம் போடுவோம். அரசுக்கு அனுப்பிவைப்போம்.” செயற்குழு உறுப்பினர் திருமதி சாருமதி தன் பங்குக்குப் பேசினார்.

“எத்தனை தீர்மானம்? எத்தனை மகஜர்? எல்லாம் என்னா ச்சு? வறண்டு போன நிலத்துல எத்தனை முறை மண்வெட்டியால கொத்துனாலும் தண்ணி வராது. நம்ம அணுகுமுறையை மாத்தணும். அதற்குத்தான் இந்த லோசனை. நான் சொல்றத கொஞ்சம் ழமா சிந்திச்சுப் பாருங்க” செயற்குழுவினரின் சம்மதத்தைப் பெற்றுவிடுவதில் தலைவர் உறுதியாக இருந்தார்.

“தலைவரே, டேவான் பஹாசா டான் புஸ்தாகா அதிகாரிங்க வந்திருக்காங்க. வாங்க” தமிழ்மாறன் அழைத்தார். அறவாணனோடு சேர்ந்து நிகழ்ச்சி நிரலைச் சரிபார்த்துக்கொண்டிருந்த இளங்கண்ணன் அவர்களை அன்போடு அழைத்துச் சென்று முன்னிருக்கைகளில் அமரவைத்தார். தலைவர் பொறுப்புக்கு வந்தவுடன் மலாய் இலக்கியம் வளர்க்கும் அந்த அமைப்போடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டவர் அவர்.

“சரிங்க தலைவரே, நம்ம தமிழ் இலக்கியத்தையும் தேசிய இலக்கியமா அரசு அங்கீகரிக்க என்ன காரணத்த முன் வைக்கப்போறோம்? இது சாத்தியமா?” செயற்குழு உறுப்பினர் மாதவன் ர்வம் பொங்கக் கேட்டார்.

“மலாய்க்காரர், சீனர், இந்தியர்ன்னு மூன்று இனமும் சேர்ந்து ஒற்றுமையா இருப்பதுதானே மலேசியாவுக்குப் பெருமை. நாட்டு வளர்ச்சிக்கு சீனரும் இந்தியரும் தந்த அயராத உழைப்பை, அர்ப்பணிப்பை யாரும் மறுக்க முடியுமா? இந்த இரண்டு இனங்களும் தங்கள் மொழியைப் படிக்க, பண்பாட்டைக் கடைப்பிடிக்க இங்க எந்த தடையும் கிடையாது. உயர்கல்வி வரைக்கும் தங்கள் மொழியில படித்துப் பட்டம்பெற வாய்ப்பு இருக்கு. இந்த இனங்களோட இலக்கியமும் அப்படித்தானே மதிக்கப்படணும். உரிய அங்கீகாரத்தை பெறணும். இதுநாள் வரைக்கும் யாரும் கேட்கல. அதுனால கிடைக்குல. இனி கேட்போம். அதை கொடுக்க வேண்டியது இந்த பரிவுமிக்க அரசின் கடமைன்னு உணர வைப்போம். அதற்கான சிறு துளி முயற்சிதான் இந்த இலக்கிய விழா” தன் மனத்தின் கரைகளில் பிரவகித்த உணர்வுகளை இளங்கண்ணன் கொட்டிவிட்டார்.

“அப்படி போடுங்க தலைவரே. இந்த மண்ணுல எழுதுற சோங்கும் குப்புசாமியும் யாரைப் பத்தி எழுதுறாங்க? இங்குள்ள வாழ்க்கையைதானே? இது குறைந்த பட்சம் கவனிக்கப்படவேண்டாமா? சக படைப்பாளியை மதிச்சி அங்கீகரிக்க வேண்டாமா? அந்த இலக்கை அடைய இது உதவும்னா நான் வரவேற்கிறேன்.” துணைத்தலைவர் தமிழ்மாறனின் உறுதியான தொனி தலைவருக்கு றுதலாக இருந்தது. மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியது.

“சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளரும் சீன எழுத்தாளரும் சிங்கப்பூர் அரசால் பரிந்துரைக்கப்பட்டு சியான் விருதைப் பெறுகிறாங்க. இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த சிறப்பை அடைந்திருக்காங்க அத்தகைய நிலை இங்கு இல்லையேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. எத்தனை பேரு இங்க பிரதிபலன் பார்க்காம எழுதிக் குவிச்சி ஓய்ந்து போயிட்டாங்களே..அவங்கள நினைச்சுப் பாருங்க..” உதவித்தலைவர் கண்ணனும் அதே சிந்தனை வட்டத்துக்குள் வந்து விட்டார்.

வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் ஒட்டுமொத்த செயற்குழுவும் ஒரே முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

மண்டபம் ஏறக்குறைய நிறைந்துவிட்டது. கபேனா, பேனா போன்ற மலாய் எழுத்தாளர் அமைப்புகளிலிருந்து நிறைய நண்பர்கள் அழைப்பை ஏற்று வந்திருந்தார்கள். சீன எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் திரளான படைப்பாளிகள் ர்வத்தோடு கலந்துகொள்ள வந்திருந்தனர்.

விருது பெறும் மூன்று இலக்கியவாதிகளுக்கும் முன் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் காத்திருந்தனர். இளங்கண்ணன் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 7.40. இன்னும் விழாவுக்குத் தலைமை தாங்கும் முக்கியப் பிரமுகர், சமுதாயத் தலைவர்கள் வரவேண்டும். வந்தவுடன் விழா தொடங்கிவிடும். வி.ஐ.பி அறை அவர்களுக்காகக் காத்திருந்தது.

“சரிங்க தலைவரே, இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம்? விவரமா சொல்லுங்க” செயற்குழு உறுப்பினர் மாதவன் ர்வம் பொங்கக் கேட்டார்.

“மலாய், சீன, தமிழ் இலக்கியவாதிகளில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ள மூவரைத் தேர்வு செய்து விருதும் பணமும் வழங்கி சிறப்பு செய்வோம். இந்த விழா தலைநகரில் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடக்கவேண்டும்”

“இலக்கியவாதிகள் தேர்வு?” அறவாணன் கேள்விக்கணையை வீசினார்.

“தமிழ் இலக்கியவாதியைத் தேர்வு செய்ய ஓர் அறிஞர் குழுவை நியமிப்போம். மலாய், சீன இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுக்க மலாய், சீன எழுத்தாளர் அமைப்புகள் நமக்குத் துணையாய் இருப்பாங்க.”

“கொஞ்சம் செலவாகும்போல இருக்கு தலைவரே?” பொருளாளர் அமுதவாணன் பணத்தில் குறியாக இருந்தார்.

“கொஞ்சமில்ல. செலவு நிறையவே கும். ளுக்கு குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட்டாவது கொடுத்தாதான் இந்த விருதுக்கும் நம்ம முயற்சிக்கும் பெருமை. இல்லனா பத்தோடு பதினொன்னு. அத்தோடு இது ஒன்னுன்னு போயிடும்”

“க மூனு பேருக்கு முப்பதாயிரமா? ஒரு நாவல் போட்டியையே நடத்திடலாம்போல இருக்கு தலைவரே. ஏற்பாட்டுச் செலவும் நிறைய வரும்போல இருக்கே” யிரம் இரண்டாயிரத்துக்குக் காசோலையில் கையெழுத்திடும் அமுதவாணன் தலைவர் தந்த அதிச்சியில் இருந்து மீளவில்லை.

“அதையும் நடத்துவோம். எனக்குத் தெரிந்த சில பிரமுகர்கள், தொழில் அதிபர்களிடம் இதைப்பற்றி பேசியிருக்கேன். எல்லாம் சரியா கைகூடி வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க எல்லார் ஒத்துழைப்பும் முழுமையா இருந்தா இதற்கு மேலேயும் சாதிக்கலாம்.”

“விழாவுக்கு யார் தலைமை தாங்கிறதுன்னு நீங்க சொல்லவே இல்லையே தலைவரே” சாருமதி குரலில் ர்வம் எட்டிப்பார்த்தது.

“வேறு யாரு? இந்த மாதிரி விழாவுக்குத் தலைமை தாங்க மிகச் சரியானவர் நம் நாட்டுப் பிரதமர்தான்”

“பிரதமரா? அவர் வருவாரா? இது சாத்தியமா?” பலரும் வியப்பு காட்டினார்கள்.

“ஏன் எல்லாருக்கும் இந்த சந்தேகம்? அவர் ஒட்டுமொத்த மலேசியாவுக்கும்தானே பிரதமர்? எந்த ஒரு இனத்துக்கும் தனிப்பட்ட பிரதமர் இல்லையே. அதிலும் மிக முக்கியம் வாய்ந்த இந்த விழாவுக்கு மிகச் சரியான தேர்வு நம்ம பிரதமர்தான். நம்ம எதிர்பார்ப்பு, ஏக்கம், உணர்வு, கனவு எல்லாம் அவர் காதுக்கு மட்டுமல்ல நெஞ்சுக்கும் போகணும். நாம அழைக்கிறோம். அவர் வருவார். இது சாத்தியம்தான்.” பிரதமரை நேரில் பார்த்து அழைப்பு விடுத்து அவரின் வருகையை உறுதிப்படுத்திவிட்டு வந்தவரைப்போல இளங்கண்ணன் தீர்மானமாகப் பேசினார். பலரின் மனக்கண்ணில் அப்பொழுதே விழா காட்சிகள் படமாக ஓடத்தொடங்கிவிட்டன.

இரவு மணி 7.50. பிரதமர் தங்கும் விடுதியின் முன் காரில் வந்து இறங்கினார். இளங்கண்ணனோடு செயற்குழுவினரும் முக்கிய மலாய், சீன எழுத்தாளர்களும் சமுதாயத் தலைவர்களும் அவரை முன்நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து, மூவினங்களின் பண்பாட்டுச் சிறப்பைக் காட்டும் வகையில் நடனங்கள் படைக்கப்பட்டன. வரவேற்புரைக்குப் பின் இளங்கண்ணன் மேடையேறினார். “எங்கள் அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் அவர்களே, இங்கே மூன்று இனங்களிடையே ஒற்றுமை மிக மிக முக்கியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். குறைகூறல்களுக்குக் காதுகொடுக்கும் உங்களின் வெளிப்படையான போக்கு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதோ, இந்த விழாவும் மூவின ஒற்றுமையை மையப்படுத்தியே நடக்கிறது. இலக்கியம் மூலமாகவும் நாம் ஒன்றுபட முடியும். இந்த நாட்டில் இலக்கியம் படைக்கிற ஒவ்வொரு படைப்பாளியையும் அரசு அரவணைக்க வேண்டும். திறமை இருந்தால் உரிய அங்கீகாரம் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். தேசிய இனங்களாக மூன்று இனங்களும் இருக்கும்பொழுது இவர்களின் இலக்கியங்களும் தேசிய தகுதியைப் பெற வேண்டும். தேசியம் என்ற உணர்வு பெருகினால் இங்கே நம்மிடையே உறவு வலுப்பெறும். உண்மையான இன ஒருமைப்பாடு இங்கே சாத்தியமாகும்..”

தேசிய மொழியில் தன் மனத்தில் உழன்றுகொண்டிருந்த எண்ணங்களை ஒளிவுமறைவின்றி இளங்கண்ணன் வெளிப்படுத்தினார். அறிவுபூர்வமான அவரின் கருத்துகளைக் கூட்டத்தினரின் கைதட்டல் வழிமொழிந்தது. “தலைவரு சொல்ல வேண்டியத அழுத்தமா சொல்லிட்டாரு. இனி நடக்கிறது நடக்கட்டும்.” தமிழ்மாறன் அறவாணனின் காதைக் கடித்தார்.

அடுத்து, இலக்கிய விருதுபெறும் மூன்று இலக்கியவாதிகளான நாவலாசிரியர் அஸ்மான் பூத்தே, கவிஞர் தமிழழகன், எழுத்தாளர் தோக் யா போங் கிய மூவரும் மேடைக்கு அழைக்கப்பட்டுப் பிரதமரால் சிறப்பு செய்யப்பட்டனர். ஒவ்வொருவரும் விருதோடு பத்தாயிரம் ரிங்கிட்டுகளையும் பரிசாகப் பெற்றனர். மேடையின் அகன்ற திரையில் அவர்கள் ஒவ்வொருவரின் எழுத்துலகச் சாதனைகள் படமாகக் காட்டப்பட்டன.

நிகழ்வின் முத்தாய்ப்பாக உரையாற்ற பிரதமர் வந்தபொழுது அவரின் முகத்தில் ழ்ந்த பூரிப்பைக் காண முடிந்தது. “மூன்று இன எழுத்தாளர்கள் ஒரே மேடையில் இந்நாட்டில் சிறப்பிக்கப்படுவது இதுதான் முதல் முறையென்று நான் நினைக்கிறேன். இப்படியொரு விழா இதுவரை நாட்டில் ஏன் நடத்தப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அரசு முன்நின்று நடத்தியிருக்க வேண்டிய நிகழ்ச்சி இது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் கழகம் முயற்சியில் இந்த விழா நடந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்குப் பாராட்டுக்கள். இன்று விருது பெற்ற மூன்று இலக்கியவாதிகளுக்கும் என் பாராட்டுகள். இந்த விழா மூலம் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு நீங்கள் முன் வைத்துள்ளீர்கள். இந்நாட்டில் இலக்கியம் படைக்கிற இலக்கியவாதிகளை இனப்பாகுபாடின்றி அரவணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். இது குறித்து அமைச்சரவையில் விரிவாகப் பேசப்போகிறேன். இன்றைய விழா என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கிய விழாவாக நினைக்கிறேன். இலக்கியம் மூலமாக இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்றால் அந்த முயற்சியில் அரசு ஈடுபடும்......”

பிரதமர் மனம் நெகிழ்ந்து விழாவில் நீண்ட நேரம் பேசினார்.

மறுநாள் ஏடுகளில் விழா பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்றன.

இரண்டு வாரங்களுக்குப் பின் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அறவாணன் இளங்கண்ணனிடம் கேட்டார். “சரிங்க தலைவரே, இந்த முறை நாம சிரமப்பட்டு விழாவை பிரதமரை வரவழைத்து சிறப்பா நடத்திட்டோம். இனி அடுத்த வருசம்?

இளங்கண்ணனின் இதழ்களில் அரும்பிய புன்னகையே அதற்குப் பதிலாக அமைந்தது.

Friday, February 19, 2010

கடற்கரை யோகம்





நீங்கள் வராத நாளில்
நான் மட்டும் சென்றிருந்தேன்
அந்தக் கடற்கரைக்கு

நம் அரட்டைகள் இல்லாத
அந்தக் கணங்களில்
என்னுடன் உரக்கப் பேசியது காற்று

நம் சிரிப்பலைகளில் தவறவிட்ட
அலைகளின் செல்லச் சிணுங்கல்கள்
காதுமடல்களை நனைத்தன

கால் விரல் இடுக்குகளில் மறைந்து
என்னுடன் பயணிக்க விழைந்தன
மண் துகள்கள்

தொலைத்தூரத்து மஞ்சள் வானத்திலிருந்து
குளிப்பதற்காக கடலுக்குள் இறங்கியது
அந்திச் சூரியன்

நம்மைப்போல கூட்டமாகக் கதைபேசி
எங்கோ அவசரமாகப் பயணப்பட்டன
மேகங்கள்

நாம் இதுவரை காணத்தவறிய
சின்னஞ் சிறு நண்டுகள்
மணலில் விளையாடக் கண்டேன்

நாம் பேசியிருந்த தருணங்களில்
வேகங்காட்டிய மணித்துளிகள்
மெல்ல மெல்ல நகர்ந்தன
வினாடிகளாய்....

நீங்களும் போய் வாருங்களேன்
அந்தக் கடற்கரைக்கு ஒருநாள்
தனியாக..