நம் குரல்

Wednesday, February 17, 2010

மலேசிய ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை (ஆய்வுக் கட்டுரை)


ஜப்பானிய இலக்கியத்திலிருந்து தமிழுக்கு வந்த ஹைக்கூ கவிதை சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் ஆனது. மூன்று வரிகளில் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளின் காட்சிகளை அழுத்தமாய், ஆர்வமாய்க் கோடிட்டுக் காட்டும் தன்மையுடையது. “ உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்குப் பிடித்தது ஹைக்கூதான். அது சின்னதாய் இருக்கும் பெரிய அற்புதம்” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

மூன்று வரிகள் கொண்ட எளிய வடிவமாக இருந்தாலும் ஹைக்கூ நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள் பதியமிட்டுள்ளது. ஹைக்கூ கவிதைகளின் இறுக்கம், சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் அதனை வாசிப்போரை கவிதானுபவத்தில் மூழ்க வைக்கும் ஆற்றல் மிக்கது எனலாம்.

தமிழ்க் கவிதை வரலாற்றில் புதுக்கவிதைக்குப் பிறகு தோன்றிய கவிதை வடிவமாக ஹைக்கூ ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானில் 16 ம் நூற்றாண்டில் தோற்றம் கண்ட இந்தக் கவிதை வடிவம் உலக இலக்கியங்களைப் போன்றே தமிழிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாகவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தில் 1980இல் வலுவாகக் காலூன்றத் தொடங்கின. மலேசியாவில் தொண்ணூறுகளில் முகங்காட்டத் தொடங்கின.

ஜப்பானிய கவிதைகளில் “ரென்கா” என்பது ஒரு வகை பழம் பாட்டு ஆகும், இந்தக் குறும்பாட்டிலிருந்து மேலும் இறுகியும் குறுகியும் தோன்றிய வடிவம்தான் ஹைக்கூ. ஜப்பானிய அரசியலில் Tokugawa காலப்பகுதியில் (1600 - 1850) ஜப்பானிய கவிதை உலகம் ஹைக்கூவின் ஆற்றலை முழுமையாகக் கண்டது எனலாம். அதுவரை பிரபுக்கள், புத்த பிக்குகளின் கைகளில் மட்டுமே சிக்கியிருந்த இலகிய உலகம் விரிவும் மாற்றமும் கண்டது. கவிதை வடிவமும் ஹைக்கூ என்ற புதிய திசையில் செல்லத் தலைப்பட்டது. ஜப்பானிய ஹைக்கூவின் நால்வர் என பாஷோ, பூஸன், இஸா, ஷிகி கியோரைக் குறிப்பிடுவர் ஆய்வாளர்கள்.

இக்கட்டுரை, மலேசிய ஹைக்கூ கவிதைகளில் காணும் சமுதாயப் பார்வையை ஆராய்ந்து பார்க்கும் நோக்கில் எழுதப்பட்டதாகும்.

மலேசியாவில் ஹைக்கூ கவிதைகள்

மலேசியாவில் ஹைக்கூ கவிதைகள் தோன்ற தமிழக ஹைக்கூ கட்டுரைகளும் கவிதைகளும் அடிப்படையாக இருந்துள்ளன. குறிப்பாக கவிக்கோ அப்துல் ரகுமானின் “மின்மினிகள்” என்ற கட்டுரை மலேசியாவில் 1991இல் ஹைக்கூ கவிதைகளின் தோற்றத்திற்கு வழியமைத்துள்ளது. ஹைக்கூ கவிதை அறிமுகமாகிய 19 ண்டுகளில் இக்கவிதைகளை எழுதுவதில் வெகு சிலரே ர்வங்காட்டி வருகின்றனர். அவர்களில் ஏ.ஏஸ்.குணா, ஏ.தேவராஜன், கோ.புண்ணியவான், சுவாசிப்பவன், ப.இராமு ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஹைக்கூ கவிதைகளின் பாடுபொருள்கள்

ஹைக்கூ கவிதைகளின் பாடுபொருள் வரையறைகளைக் கடந்தது. மனித நேய வெளிப்பாடு ஹைக்கூவில் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. இயற்கைக்கு மீளல், எளிய உயிர்களை நேசித்தல் என்ற எல்லைக்குள் இருந்த ஹைக்கூவின் பாடுபொருள் தமிழில் அந்த எல்லையைத் தாண்டியுள்ளது. ஜப்பானில் காதல் பற்றிய ஹைக்கூவைக் காண்பது அரிது. ஆனால், தமிழில் ஹைக்கூக்கள் சமூக அவலங்களுக்கு உரத்த குரல் கொடுப்பதோடு காதலர்களின் அவஸ்தைகளுக்கும் காதுகொடுக்கின்றன. ஹைக்கூவின் தன்மை மாறாமல் எதையும் பாடலாம் என்ற நிலை இன்று தமிழில் நிலவுகிறது.

மலேசிய ஹைக்கூ பன்முகங் கொண்டதாக உள்ளது. மற்ற பாடுபொருள்களைவிட, தங்கள் சமூகத்தின் வேதனையை, வலியை, அவலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தைக் காண முடிகிறது.

சமுதாயப் பார்வை

ஹைக்கூவில் சமுதாயச் சிந்தனை வெளிப்படையாகி, கவிஞனின் குரல் உரத்து ஒலிப்பதைக் கேட்க முடியாது. சமுதாயச் சிக்கல்களை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதோ தீர்வு காண முயல்வதோ ஹைக்கூவில் இல்லை. “நெம்புகோல் கவிதைகளைத் தருவோம் என்னும் அறிவிப்போ புரட்சிக்கு அழைக்கும் அறைகூவலோ அரசியல் வாடையோ போர் நிகழ்ச்சியோ எதுவுமில்லை” என்பார் நிர்மலா சுரேஷ்.

ஹைக்கூ கவிதைகளில் கவிஞனின் சமுதாயப் பார்வை மிக மென்மையாக இழையோடியிருப்பதைக் காணலாம். மிக நுணுக்கமாக ஒரு காட்சி அல்லது அனுபவப் பதிவு மூலமாகத் தன் சமுதாயப் பார்வையை வாசகனுக்குப் பரிமாறுகிறான் கவிஞன்.

மலேசிய ஹைக்கூ கவிதைகளில் தங்கள் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு அவலங்கள், சிக்கல்கள் குறித்துக் கவிஞர்கள் தங்கள் பார்வையைப் பதிவுசெய்துள்ளனர். முழுமையில்லாத, தெளிவற்ற காட்சிகளாக அவை இருந்தாலும் கவிதைகளை விரிவாக்கி அவற்றினுள் இழையோடும் சிந்தனையை அடையாளம் காண்பது வாசகனின் கடமையாகிறது.

அ) ஏழைகளின் அவலம்

1957இல் காலனித்துவ ட்சியிலிருந்து மீண்ட மலேசியா கடந்த 52 ஆண்டுகளில் பல துறைகளில் துரித வளர்ச்சி கண்டு 2020இல் ஒரு மேம்பாடடைந்த நாடாக உருவாகும் தீவிர முயற்சியில் உள்ளது. 1970 முதல் அறிமுகமான புதிய பொருளாதாரக் கொள்கை வறுமையை ஒழிக்கவும் மலாய், சீன, இந்திய இனங்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் முயன்று வருகிறது. இந்தக் கொள்கை மலாய்க்காரர்களின் சொத்துடைமையை உயர்த்துவதில் வெற்றிகண்டுள்ளது. ஆனால், இந்தியர்களிடையே முன்னேற்றம் இன்னும் நீண்ட தூர இலக்காக இருந்து வருகிறது. தோட்டப்புறங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது அங்கு வாழ்ந்த இந்தியர்கள் நகர்ப்புறங்களை நோக்கிப் படையெடுத்தனர். புறம்போக்குவாசிகளாகி அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஹைக்கூ கவிதைகளுக்குப் பாடுபொருளாகியுள்ளன.

புறம்போக்கு வீடுகள்
பலகைகளில்
மகாதீர் படங்கள்
ந.பச்சைபாலன்

புறம்போக்கு வீடு
தார்மார்பில் குழந்தை
வெளியே புல்டோசர்
தமிழமுதன்

அரசு அல்லது தனியார் நிலங்களில் வீடு கட்டிக்கொண்டு வாழும் விளிம்பு மனிதர்கள் தங்கள் வீட்டுப் பலகைகளில் நாட்டின் பிரதமர் மற்றும் தலைவர்களின் படங்களை மாட்டிவைக்கின்றனர். அவை அவர்களின் நாட்டுப் பற்றைப் பறைசாற்றுவதாக இருந்தாலும் உண்மையில் அவற்றைத் தங்களின் வீடுகளைக் காக்கும் கவசங்களாக அவர்கள் நினைக்கின்றனர். வீடுகள் எந்நேரத்திலும் இடித்துத் தரைமட்டமாக்கப்படலாம் என்ற அச்ச உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர்.

ஏழைக்காக இதயம் கசியும் கவிஞர்களின் இன்னும் சில ஹைக்கூக்கள் இதோ:

வலைக்குள் வஞ்சனை
வௌவால் ராஜவிறால்
வயிற்றில் பசி
கோ.புண்ணியவான்

அடுப்பைச் சுற்றிக் குழந்தைகள்
உலை வைக்க அரிசியில்லை
கொதித்தாள் அம்மா
ப.இராமு

சத்துவுணவுக்கூடம்
முதல் வரிசையில்
ஏழை மாணவன்
ஏ.எஸ்.குணா

) கோயில்களின் நிலை

கோயில் வெறும் ன்மிக மையமாக, திருவிழாவுக்கும் வழிபாட்டுக்கும் உரிய இடமாக மட்டும் இல்லாமல் சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மையமாக மாறவேண்டும் என்ற உணர்வினைக் கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பத்துமலைத் தைப்பூசம்
உண்டியலைப் பார்த்தபடி
ஏழைச்சிறுமி
ந.பச்சைபாலன்

பத்துமலைத் தைப்பூசம்
பக்தரிடம் கையேந்தும்
குரங்குகள்
கண்ணன்

கோயில்களில் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்களின் பணம் கோயில் பணிகளுக்கே முடங்கிப்போகாமல் சமுதாயப் பணிகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற சிந்தனையை இங்கே காண்கிறோம். கோயில்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பாளர்கள் மனம் வைத்தால் வெளியே உதவிக்காக ஏங்கும் ஏழைகளுக்குப் பல வழிகளில் உதவலாம். பல ஏழைக்குழந்தைகளின் உள்ளத்தில் அறிவுத் தீபத்தை ஏற்றி வைக்கலாம்.

கோயிலில்
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தமிழில் அர்ச்சனை
சுவாசிப்பவன்

நம் கோயில்களில் தாய்த்தமிழை வெளியே நிறுத்திவிட்டு இறைவனை வணங்க உள்ளே போகிறோம். தமிழ்மொழி செம்மொழி என்ற அறிவிப்பில் மட்டும் அகமகிழ்ந்து பூரித்தால் போதுமா? நம் வழிபாட்டு மொழியாக அது மாறவேண்டாமா? சுவாசிப்பவன் நமக்குள் சிந்தனைத் தீக்குச்சிகளைக் கொளுத்திப்போடுகிறார். கோயில்களை மையமிட்ட மேலும் இரண்டு ஹைக்கூக்கள்:

கோயிலை உடைக்காதீர்கள்
இன்னும் பாக்கி இருக்கிறது
அவள் நேர்த்திக்கடன்
ந.பச்சைபாலன்

கோயில் விளக்குகள்
பெரிய எழுத்துகளில்
நன்கொடையாளர் பெயர்
தமிழமுதன்

இ) தோட்டப்பாட்டாளிகளின் போராட்டம்

சஞ்சிக்கூலிகளாகத் தமிழக மண்ணிலிருந்து மலாயாவுக்கு (மலேசியாவுக்கு) ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் காட்டையும் மேட்டையும் திருத்தி ரப்பரைப் பயிரிட்டு நாட்டுக்கு வளத்தைத் தேடித் தந்தார்களே தவிர தம் வாழ்வில் உயர்வின்றி, மாதச் சம்பளத்திற்கும் அடிப்படை வசதிகளுக்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்துபவர்களாக, விளிம்பு நிலை மனிதர்களாக இருந்த நிலை குறித்து ஹைக்கூ கவிஞர்கள் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனர். இடைத்தேர்தல் வந்தாவது தங்களின் இடர்களைத் தீர்க்காதோ, வாழ்வில் ஒளிவெள்ளம் பரவாதோ என அவர்கள் ஏங்குகிறார்கள்.


செம்மண் சாலையில் தமிழன்
அண்ணாந்து வெறித்தான்
மலேசியக் கொடி
ந. பச்சைபாலன்

தோட்டத்தில் ஒளிவெள்ளம்
சட்டமன்ற உறுப்பினர்
திடீர் மரணம்
ஏ. தேவராஜன்

தோட்டப்புற வாழ்க்கையில் அதிகாலை மழை என்பது இயற்கை எழுதும் நட்டக்கணக்காகும். மழை பெய்தால் பால்மரம் சீவும் பாட்டாளிகள் வேலைக்குப் போக முடியாது. அந்த வேதனையை விளம்பும் சில ஹைக்கூக்கள்:

மழைத்திட்டி
கப்பல் விடும் பிள்ளை
கண்ணீரில் அம்மா
ஏ. தேவராஜன்

அதிகாலை மழை
வானத்தை வெறிக்கும் அப்பா
கைகளில் காண்டா வாளி
ந.பச்சைபாலன்

பால் நிறைந்த மங்குகள்
பதறும் அம்மா
கொட்டும் மழை
செல்வகுமார்

ஈ) சாதியம்

மலேசியாவில் சாதியால் விளையும் கொடுமைகள் இல்லை. னால், சாதிய உணர்வுகள் வாழ்வில் எல்லா நிலைகளிலும் (காதல், திருமணம், அரசியல்) நீக்கமற நிறைந்துள்ளன. அண்மைக் காலமாக சாதி அமைப்புகளை ஏற்படுத்தி குழு உணர்வோடு செயல்படும் நிலைமைகள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சமுதாயப் பிணி குறித்த சிந்தனையும் ஹைக்கூ கவிதைகளில் பதிவாகியுள்ளது.

அரிசியில் கல் எடுத்தவாறு
பாட்டி பேசுகிறாள்
சாதி
ந.பச்சைபாலன்

சாதி மாநாட்டு மலரில்
சிரித்தபடி
தலைவர்கள்
கண்ணன்

அரிசியில் கல் இருந்தால் சமைக்க முடியாது என்று பாட்டிக்குத் தெரிகிறது. எனவே, கற்களைப் பொறுக்குகிறாள். னால், அவள் வாய் திறக்கையில் சாதி மொழிகளை உதிர்க்கிறாள். சமுதாயத்தில் கல்லாகக் கிடக்கும் சாதியை நீக்கவேண்டும் என்று பாட்டிக்குத் தெரியவில்லையே என்ற தங்கத்தை இ·து அறிவிக்கிறது. மேடையில் சமுதாய நலன் குறித்துப் பல சிந்தனைகளை உரத்துப் பேசும் தலைவர்கள் சாதி அமைப்புகளுக்குப் பிளவுபடாத தரவை நல்கித் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்துவதை இரண்டாவது ஹைக்கூ இடித்துரைக்கிறது.


உ) தமிழ்ப்பள்ளியின் நிலை

மலேசியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் ஆயிரத்துக்கும் குறையாத தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. ரப்பர் தோட்டங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. இப்போது 523 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அரசின் மானியம் பெற்றுப் பல பள்ளிகள் புதிய கட்டட வசதிகளைப் பெற்றிருந்தாலும் இன்னும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் ஏழ்மைக் கோலத்தில் காட்சி தருகின்றன. அரசின் தரவுக் கரம் இன்னும் நீள வேண்டும் என்ற இதய வேண்டுதலோடு பதிவான பார்வை இது:

கம்பீரமாய்க் கோயில்
அருகில் வர்ணமிழந்த
தமிழ்ப்பள்ளி
ந. பச்சைபாலன்

ஒழுகும் தமிழ்ப்பள்ளி
சுவரில் நனைகிறது
இரட்டைக் கோபுரம்
ந.பச்சைபாலன்

ஊ) திருநாள் அவலங்கள்

தீபாவளித் திருநாள் போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் எதிர்மறைப் போக்குகள் குறித்த பார்வையையும் ஹைக்கூ கவிதைகளில் காண முடிகிறது. தீபாவளி நாளில் வீட்டுக்கு விருந்தினர் வருவார்களே எனக் காத்திருந்து வரவேற்று உபசரித்தது ஒரு காலம். இன்றைய நிலையிலோ யாரும் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதே பலரின் இதய வேண்டுதலாக உள்ளது.

பூட்டிய கதவு
தொலைக்காட்சியில்
தீபாவளி நிகழ்ச்சிகள்
வீரபாண்டியன்

சமுதாயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் சினிமா மோகத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேலும் வளர்த்து விடுகின்றன. பொழுது என்னும் போதையில் இளையோரைத் தள்ளிவிடுவதோடு அவர்களின் வாசிப்புப் பழக்கத்திலும் வாய்க்கரிசி போட்டுவிடுகிறது. இனத்தின் பண்பாட்டுச் சிறப்பைப் பறைசாற்ற வேண்டிய தீபாவளி வாழ்த்து அட்டைகளில் நடிகர்கள் முகங்காட்டுவதும் கவிதைகளில் சுட்டப்படுகிறது.

கைபடாமல் தீபாவளி இதழ்கள்
தொலைக்காட்சியில்
சினிமா நிகழ்ச்சிகள்
ந.பச்சைபாலன்
தீபாவளித் திருநாள்
இளைஞர்கள் குவிந்தார்கள்
திரையரங்கில்
தயாளன்

வாழ்த்து அட்டைகள்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்
நடிகர்கள்
செல்வகுமார்
சமுதாயத்தைப் பீடித்த பிணிகளில் ஒன்றான குடிப்பழக்கத்தைச் சாடும் போக்கையும் தீபாவளி ஹைக்கூ கவிதைகளில் காணமுடிகிறது.

தீபாவளி சிறப்பிதழ்கள்
வண்ணத்தில்
மதுவிளம்பரங்கள்
கண்ணன்

நேற்று தீபாவளி
குப்பைத் தொட்டியில்
காலி பாட்டில்கள்
ந.பச்சைபாலன்

எ) சமய நல்லிணக்கம்

மலேசியா பல்லின மக்களையும் பல சமய நம்பிக்கைகளையும் கொண்ட நாடு. எனவே, இனங்களிடையே சமய நல்லிணக்கம் பேணப்படுவதால் இன ஒற்றுமை நீடிக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். இனங்களிடையே எப்போதாவது எழும் சமய பிணக்குகள் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளப்படுகின்றன. சமயத்தின் பெயரால் மக்கள் தமக்குள் பிரிவினையை ஏற்படுத்திப் பகைமை பாராட்டும் நிலை கூடாது என்ற சிந்தனை ஹைக்கூவில் பதிவாகியுள்ளது.

கோயிலும் பள்ளிவாசலும்
அருகருகே
பள்ளிப்பாடப் புத்தகம்
ந.பச்சைபாலன்


ஏ) போதைப்பொருள் பழக்கம்

மலேசியாவில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான இளையோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் உள்ளது. ஆண்டுதோறும் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களைப் பராமரிக்க அரசு பல மில்லியன் ரிங்கிட்டுகளைச் செலவளித்து வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் பல துறைகளில் துரித முன்னேற்றமடைந்தாலும் இந்தச் சமுதாயச் சிக்கல் அரசுக்குத் தீராத தலைவலியாக உள்ளது. இந்த அவலத்தை அறிவிக்கும் ஹைக்கூ இது:

சுதந்திரச் சதுக்கம்
பக்கத்தில் பங்கீடானது
போதைப்பொருள்
ந.பச்சைபாலன்

ஐ) அரசியல் டம்பரம்

அமைதியான அரசியலைவிட ஆடம்பரமும் பகட்டும் நிறைந்த அரசியலே இன்று கவனத்தைக் கவர்வதாக உள்ளது. செல்வாக்குப் பெற்ற ஊடகங்கள் தம் நுண்பெருக்கிக் கண்களால் இந்த பகட்டான அரசியலுக்கு விளம்பர மாயையை உருவாக்குகின்றன. இதனால் ஒரு சின்னஞ் சிறிய சமூக நிகழ்வான மயான மண்டப திறப்பு விழா கூட ஒரு ஆடம்பர நிகழ்வாக ஆவதை இந்த ஹைக்கூ இடித்துரைக்கிறது.

தடபுடல் ஏற்பாடு
அமைச்சர் திறந்து வைத்தார்
மயான மண்டபம்
செல்வகுமார்

முடிவுரை

ஹைக்கூ கவிதைகள் அடிப்படையில் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் எளிய உயிர்களுக்கு இரங்குதலையும் பாடுபொருளாகக் கொண்டவை. அதனால்தான் “ஹைக்கூ உலகம் அன்பு உலகம்; சிறிய உயிர்களுக்காகவும் இதயம் நெகிழும் இனிய உலகம்; திணையளவும் திணை வேறுபாடு இன்றிப் பிணைந்திருக்கும் பேருலகம்” என்பார் முனைவர் நிர்மலா சுரேஷ். யினும், இந்த ஜப்பானிய கவிதை வடிவம் தமிழுக்கு வந்த பிறகு அதன் பாடுபொருள் பன்முகங்கொண்டதாக மாறியுள்ளது.

குறிப்பாக, மலேசிய ஹைக்கூ கவிதைகளில் சமூகத்தை ஊடறுத்து அதன் போக்குகளையும் அவலங்களையும் படைப்பாளர்கள் அவதானித்து உள்வாங்கிக்கொண்டு அவற்றைக் குறைந்த சொற்களில் படையலாக்கி வாசகனின் பந்திக்கு அனுப்பியுள்ளதைக் காண்கிறோம். சமூகத்தின் நடப்புகள் அவர்களின் பார்வையில் பதிவாகியுள்ளதை இக்கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன. குறைந்த சொற்களில் அமைவதால் ஹைக்கூ முழுமையற்றதாகவும் தெளிவற்றதாகவும் தோன்றக்கூடும். ஆனால், வாசகன் முயன்றால் படைப்பாளியின் சிந்தனையை எட்டிப்பிடிக்க முடியும்.
ஹைக்கூவில் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுவதும் கூடாது என்பதால் இவற்றில் உணர்ச்சிப் பிரவாகங்களும் இல்லை.

சமூகச் சிக்கல்களுக்கு இக்கவிதைகள் தீர்வுகளை முன் வைக்கவில்லை. அப்படித் தீர்வுகளை முன்வைப்பது ஹைக்கூ கவிதையின் இலக்கணத்திற்கு முரணாகும். “ஹைக்கூ கவிதையில் விமர்சனங்கள் இல்லை; முடிவுகள் இல்லை” என்பார் கென்னத் யசூதா. ஒலிபெருக்கியின் முன்நின்று, “இதனால் உங்கள் அறிவிப்பது என்னவென்றால்” என்ற பாணியிலான கொள்கை விளக்கமோ பிரசார நெடிகளோ ஹைக்கூவில் இல்லை.

சமூகப் பொறுப்புணர்ச்சியோடு படைக்கப்பட்ட இக்கவிதைகள் நம் மனக்குளத்தில் கல்லெறிகின்றன. அவை, எழுப்பும் அலைகளை நாம் ழ்ந்து நோக்கினால் நம் சிந்தைக்கு இனிய விருந்தாகும் விந்தையை உணரமுடியும்.

1 comment:

  1. இதில் உள்ள அனைத்தையும் நீங்கள் ஹைக்கூ என்கிறீர்களா சார்?

    ReplyDelete