நம் குரல்

Monday, February 21, 2011

காற்று வெளியில் நிறைந்து..

பழைய நினைவைச் சுமந்தபடி
ஊருக்குத் திரும்பிய நாளில்
காத்திருந்து வரவேற்ற
துக்கச் செய்தியாய்
எங்களை அதிர வைத்தாய்

புல்லாங்குழலில் நுழைந்து
விடைபெற்ற காற்றாய்
நீ புறப்பட்டுப் போயிருந்தாய்
தடயங்கள் இல்லையெனினும்
எங்கும் நீயே நிறைகிறாய்

காற்று வெளியில் சிதறும்
உன் கானமழையின் துளிகளை
ஆசை ஆசையாய் மீண்டும்
மனக் கைகளில் ஏந்துகிறோம்
அவை உயிர்வரை ஊடுருவி
முழுமையாய் நனைக்கின்றன

உன்னுடையது அதிசய வானம்
எவ்வளவு அழுது தீர்த்தாலும்
இந்த மழையின் தீவிரம் தீராது
நனைந்த மனசுகளில் படரும்
ஈரம் என்றும் காயாது

எங்கள் வாலிபப் பொழுதுகளின்
இனிய வசந்தங்களில்
உன் வருகைக்கான
தடயங்களைச் சேகரிக்கிறோம்

பல இதயங்களின்
இனிய சந்திப்புக்கு நீயே
சாட்சியாயிருக்கிறாய்

வாயசைத்த உதடுகளில் பின்னால்
நீ மறைந்திருந்து தோன்றினாய்
உயிர் மீட்டும் குரலாய்
இதய அறைகளில் தேங்கினாய்

கிராமத்து வயல் வரப்புகளில்
ஓடித் திரியும் காற்றாய்
மனவெளிகளில் உலவினாய்

மலைகளின் பாறைகளில் ஏறி
பெயர் எழுதிவைக்கும்
சிறுவர்களின் ஆசை உனக்கிருந்ததா?
அறியோம்!

இதோ இசையை மோகிக்கும்
மனமெங்கும் உன் அழியாத பெயர்
அழகிய கல்வெட்டுகளாய்..

இதோ
காற்றுவெளியில் கசியும்
கானமழைக்குக் காது கொடுக்கிறோம்
நீ இன்னமும் நிறைகிறாய்...

(மலேசிய வாசுதேவன் நினைவாக)



1 comment:

  1. இரண்டு நாட்களாக மனதுக்குள் கசிந்துக் கொண்டிருக்கும் ஈரங்களுக்கு ஒத்தடம் கொடுத்தன உங்களின் மனவரிகள்...மாபெரும் கலைஞனின் இழப்பை வரலாறுகளாக இனி வரும் சமூகம் பேசும்.
    காதல் வைபோகமே...காணும் நன்னாளிதே...
    கல்லூரியின் சுவர்கள் இன்னமும் இந்த வரிகளைச் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கும்.

    ReplyDelete