நம் குரல்

Monday, March 28, 2011

ஆவதும் நீரால்..


அற்றை நாளில் வள்ளுவரும்
நற்றிணைப் பாடலில்
கபிலரும் மொழிந்தனர்
நீரின்றி அமையா உலகு
இற்றை நாளில்
கடல்பொங்கி மொழிந்தது
நீரின்றி அழியா வாழ்வு

ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்
பொய்யாய்ப் போனது முதுமொழி
ஆவதும் நீரால்
அழிவதும் நீரால்
மெய்யாய் ஆனது நிகழ்மொழி

நீலிக்கண்ணீர் முதலைக்கண்ணீர்
எல்லாம் காய்ந்து போய்விடும்
இது ஆழியில் எழுந்த
ஊழிக்கண்ணீர்
உயிர்களைத் தின்றும்
உறுபொருள் சிதைத்தும்
அசுரப்பசியைத் தீர்க்கும்

வாழ்வோ விளையாட்டோ
எல்லை கடந்தால் என்றும்
தீராத தொல்லைதான்
நீர் கரையை உடைத்து
எல்லையைக் கடந்தால்
தீராத இடும்பைதான்


உழைப்புக்கு வியர்வை
உறவுக்குச் செந்நீர்
அன்புக்குக் கண்ணீர்
இனக்காப்புக்கு உயிர்நீர்
உயிர்மூச்சுக்கு மழைநீர்

நீரால் நிறைந்து
நீரால் கரைந்து
நீரால் வரைந்த கோலம் நாம்
நீர்க்குமிழி போல
நினைக்கும் கணத்தில்
உடைந்து மறையும் மாயம் நாம்

உதிரம் பாலாக்கி
உழைப்பை எருவாக்கி
ஊனுருக்கி சேய் வளர்ப்பாள்
அந்தத் தாயைப் பழிக்கவில்லை

எண்ணிமாளா உயிர்களை
தன்னிலே புதைத்துவிட்டு
எஞ்சிய உயிர்களை
கண்ணீரில் நனையவிட்ட
தண்ணீரைப் பழிக்கின்றேன்
நான் தண்ணீரைப் பழிக்கின்றேன்

2 comments:

 1. வணக்கம் பாலா,

  உங்களின் நிகழ்மொழி நன்று. மனித நேயம் விழிகளை ஈரப்படுத்தினாலும்...அதையும் தாண்டிய சில உணர்வுகள்.....

  இந்த ஊழிக் கண்ணீர்
  தமிழனின் வேதனைக்கண்ணீர்.

  நான்கு இலட்சம் தமிழர்களை
  சயாம் மரண ரயில்வேயில்
  பழிகொடுத்த ஒரு வர்க்கத்திற்கு
  இயற்கை கொடுத்திருக்கும் பதிலடி..

  எல்லை கடந்தால்
  என்றும் தீராத தொல்லைதான்..
  சிந்திக்க வைக்கும் வரிகள்.
  மனிதன் தன் வாழ்வியலின் கோட்பாடாக இந்த வரிகளை வைத்துக்கொண்டால்...
  உலகம் அமைதிபெறும். இயற்கையின் சீற்றமும் குறையும்.

  வாழ்த்துகள் பாலா

  ReplyDelete
 2. நம் வாழ்க்கையே நீரால் பின்னப்பட்டிருக்கிறது.
  கண்ணீர், விந்து, இரத்தம், வியர்வை இப்படி எல்லாமே
  நீரின் வடிவம்தானே! தாயின் கருவறையிலும் நீர் வாழ்க்கைதான்.
  இங்கே, வாழ்க்கையை முடித்துவைத்து நீரே முடிவுரை எழுதிவிட்டது.

  கவிதையோடு பயணிக்கும் உங்களுக்கு நன்றி சேகர்.

  ReplyDelete