நம் குரல்

Friday, December 22, 2017

கண்ணில் விழும் காட்சிகள்


கண்ணில் வரும் காட்சி எல்லாம்
கண்மணிய உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் விழுந்து தன்னைக் கடந்துபோன பெண்ணைப்பற்றி ஆணொருவன் பாடுவதாக கவிஞர் வைரமுத்து இயற்றிய பாடல் வரிகள் இவை. நம் வாழ்க்கைப் பயணத்தில் இப்படி எத்தனையோ காட்சிகள் கண்ணில் விழுந்து காணாமல் மறைகின்றன. அவற்றில் சிலவற்றையாவது கேமராவிலும் திறன்பேசியிலும் பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் தேர்ந்த புகைப்படக் கலைஞன் அல்லன். புகைப்படம் குறித்த ஆழமான அறிவோ பின்புலமோ இல்லாதவன். கையில் அதிநவீன கேமராவும் இல்லை. வித்தியாசமான காட்சியைக் கண்டால் அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும்தான் முன்நிற்கும். திரைப்படங்களில் கேமரா வழி காட்சிகளைப் பதிவு செய்யும் நேர்த்தியை, அழகை இரசிக்கும் என் மனம் இதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

2009ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது ஊட்டிக்குப் போயிருந்தோம்.  அங்கு ஓர் இரவு தங்கிவிட்டுக் காலையில் பேருந்தில் பயணித்து ஊட்டியைச் சுற்றிப் பார்க்கப் போனோம். பற்கள் தந்தியடிக்கும் கடுமையான குளிர். அப்போது சாலை வளைவில் கண்ட ஒரு காட்சி மனத்தைக் கௌவிக் கொண்டது. சாலையோரச் சுவரில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக ஒட்டியவாறு வரிசையாக அமர்ந்திருந்தன. குளிரில் நடுங்கியவாறு அவை கைகளை நீட்டியதைக் கவனித்தோம். பேருந்தை நிறுத்தச் சொன்னோம்.

குரங்குகளுக்குக் கையிலிருந்த பிஸ்கெட்டுகளைத் தந்தோம். சுற்றுப்பயணிகளிடம் உணவுப்பொருள்கள் கிடைக்கும் என்பதை நன்கறிந்த குரங்குகள். குரங்குகளுக்குப் பின்னால் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடும் வெள்ளைத் திரையாய்ப் படர்ந்த பனியும் அழகான காட்சியாய் கண்முன் விரிந்தது.   பேருந்தில் இருந்தவாறு இந்தக் காட்சியைக் கேமராவில் பதிவு செய்தேன்.

பின்னாளில் ஒரு கவிதைக்கான காட்சியாய் இது என் மனத்தில் நிலைகொண்டது எனக்கே வியப்பைத் தருகிறது. குரங்குகள் ஏன் அவ்வளவு நெருக்கமாய் ஒன்றுக்குள் ஒன்று புதைந்தவாறு நின்றன? கடுங்குளிர்தானே காரணம்? குளிர் இல்லாத நேரத்தில் விலகிக்கொள்ளும் அல்லவா?
குரங்குகள் இடத்தில் நம் மலேசியர்களைப் பொருத்திப் பார்த்தேன். அந்நியர் ஆட்சியெனும் கடுங்குளிர் நம்மைத் துன்பத்தில் தள்ளியபோது அன்பு, சகோதரத்துவம், சகிப்புத்தன்மை என நற்பண்புகளால் நாம் பிணைக்கப்பட்டு ஒற்றுமையுணர்வு மேலோங்கி நின்றது. ஆனால், இன்று? குளிர்விட்டுப் போச்சு. எல்லாரும் விலகி நிற்கிறோம். ஒற்றுமைக்காக ஓர் அமைச்சை ஏற்படுத்தி திட்டங்கள் தீட்டி ஒற்றுமையை உருவாக்குவது பற்றிப் பேசுகிறோம்.
               


கடந்த ஆண்டு, நான் பிறந்து வளர்ந்த ரவாங், சுங்கைசோ தோட்டத்தில் (இப்பொழுது தாமான் தெரத்தாய்) மகாமாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு நடைபெற்றது. இரைதேடி கூட்டை விட்டுப் பறந்துபோன பறவைகள் மீண்டும் கூட்டைத் தேடித் திரும்பியதுபோல தோட்டத்தைவிட்டுப் போனவர்கள் பெருந்திரளாகக் கோயிலில் கூடி இருந்தார்கள். நானும் மனைவியோடு அங்கிருந்தேன்.


கோயிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு இச்சடங்கின் மூலம் கோயிலில் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்குத் தெய்வீகத்தன்மை புதிப்பிக்கப்படுகிறதோ இல்லையோ அங்குக்  கூடும் மனிதர்கள் புதுப்பிக்கப்படுகிறார்கள். குடத்தில் நீர்நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படும்போது தெய்வத்தன்மை பெறுமாம். குடமுழுக்கின்போது புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்தப் புனித நீர் தம் மீது பட்டால் பாவம் எல்லாம் தொலைந்துபோகும் என்ற நம்பிக்கையில் அனைவரும் கோபுரம் நோக்கி இருந்தார்கள். சூரிய ஒளிபட்டு புனிதநீர் மெல்லிய தூறலாய்த் தெரிந்த காட்சியைத் திறன்பேசியில் பதிவு செய்தேன்.

தமிழகப் பயணத்தின்போது சாமி கும்பிட்டுவிட்டுக் குடும்பத்தோடு ஒரு கோயில் வளாகத்தைச் சுற்றிவந்தபோது கண்ட காட்சி இது. எந்தக் கோயில் என்று நினைவில் இல்லை. “வாங்க, வாங்குங்க” என்று வியாபாரிகள் இடைமறித்தார்கள். 

ஒரு கடையில் சாமி படங்களை விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம், “கொஞ்சம் நில்லுங்கள். படமெடுத்துக்கொள்கிறேன்” என்றபோது, “ஐயோ, முகத்தைக்கூட இன்னும் அலம்பலையே, கொஞ்ச இருங்க தம்பி, முகத்த துடைச்சிகிறேன்” என அவசரமாய்த் துடைத்துக்கொண்டு சாமி படங்கள் அருகே நின்று கொண்டு கேமராவுக்கு முகம் காட்டினார். இந்தப் படமும் பின்னாளில் கருவாக மனத்தில் விழுந்து கடவுள்கள் விற்பனைக்கு எனக் கவிதையாக உயிர் கொண்டது.நண்பர்களோடு இலங்கைக்குச் சுற்றுப்பயணம் போயிருந்தேன். வடக்கில் யாழ்ப்பாணம், ஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டு மத்தியில் உள்ள மலைநகரமான கண்டியில் மதிய உணவுக்காக ஓர் உணவகத்திற்குப் போனோம். உயரமான மலைப்பகுதியை ஒட்டி உணவகம் அமைந்திருந்தது. கண்ணாடிவழி  பார்த்தால் தொலைதூரத்தில் மலைகள். அவற்றை முத்தமிட்டுப் போகும் மேகங்கள். மலைகளுக்குப் பாலூட்டும் அருவிகள். கீழே  எட்டிப் பார்த்தால் படுபாதாளம்.

உணவுக்குப் பிறகு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் பலராமன். மற்றொரு பக்கம் ராமாவும் தேவராஜனும். நடுவில் கோமகன். ஏதோ சதித் திட்டம் பற்றித் தீவிரமாக விவாதிக்கும் அல்லது முக்கிய மந்திராலோசனை நடத்தும் மனிதர்களாய்த் தெரிந்தார்கள். அவர்களும் கட்டமிட்ட கண்ணாடிவழி தெரிந்த காட்சிகளும்  சற்று மாறுபட்டதாய்த் தோன்ற திறன்பேசியில் பதிவு செய்தேன்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு (மலை நகரம்) தமிழகம், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலையுச்சிக்குப் போக இருபது கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலையில் பயணிப்பதே ஒரு திகில் அனுபவம். பழைய திரைப்படங்களில் பார்த்ததுதான். மலைக்குப் போனால் இயற்கையழகு கொஞ்சும் சூழல் நம்மைக் கவர்ந்திழுக்கும். காடு, மலை என எங்கும் பச்சை ரத்தம் பாய்ந்த பசுமை வார்ப்பு.

அங்குப் போயிருந்தபோது ஏற்காடு ஏரியில் படகுப் பயணம் செய்து, பூங்கா, அருவி, கோயில் எனச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தங்கும் விடுதிக்குச் சென்றோம். விடுதியின் முகப்பில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். தற்செயலாக விடுதியின் மேல் நோக்கிப் பார்த்தேன். அங்கே சில தலைகள் தெரிந்தன. விடுதியின் ஒரு பகுதியைப் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்து பணியாளர்கள் கீழ் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வை, தங்களை மறந்துவிட்டுக் கடந்துபோகும் வாழ்வையும் அது மறுத்துவிட்ட வளத்தையும் உழைக்கும் வர்க்கம் மௌனமாய் வேடிக்கை பார்ப்பதாய் எனக்குத் தோன்றியது. மறவாமல் அதனைக் கேமராவில் பதிவு செய்தேன்.சரவாக் மாநிலத்தின் வடக்கில் கடற்கரையோரம் அமைந்துள்ளது மிரி நகர். பெட்ரோலியம் கிடைக்கும் இடமென்பதால் வளர்ச்சிபெற்ற நகராக மாறியுள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானிய இராணுவம் இங்குதான் கரையிறங்கிச் சரவாக்கில் தாக்குதலைத் தொடங்கியது. ஆங்கிலேயரின் தலைமையிலான கூட்டுப்படைகள் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளைத் தாக்கி முற்றாக அழித்துவிட்டாலும் சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எண்ணெய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கிறது மிரி.

கேர்ட்டின் பல்கலைக்கழகத்தில் பயின்ற என் மகன் தமிழினியனைக் காண குடும்பத்தோடு மிரி போயிருந்தபோது அருகிலிருந்த கடற்கரைக்குப் போனோம். மாலை நேரம். மேற்கு வானத்தில் சூரியன் மறைவதைக் காண சுற்றுப்பயணிகள் திரளாக வருகிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. பதினைந்து இருபது நிமிடங்களில் சூரியன் மறையத் தொடங்கும் தருணங்களில் வானம் பல வண்ணங்களில் புனையும் கோலங்கள் கண்களுக்கு இயற்கை படைக்கும் அற்புத விருந்து. அதை ஆசை தீர அள்ளிப் பருகினோம். அதைப் பலரும் பதிவுசெய்யும் தருணம் இன்னும் அழகாயிருந்தது. அதை மறவாமல் நான் பதிவு செய்தேன்.தஞ்சை என்றாலே பலரின் நினைவில் தவறாமல் நிழலாடுவது இராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயில் அல்லது பிரகதீஸ்வரர் ஆலயம். உள்ளே நுழையும்போதே 216 அடி உயரமுள்ள கோபுரம் நமக்குள் ஆச்சரியத்தை அள்ளி இறைத்து வரவேற்கும். கோயிலைச் சுற்றி உயர்ந்து நிற்கின்றன சுவர்கள். கோபுரத்திற்கு எதிரே உள்ள பதினாறுகால் மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பெற்ற மிகப்பெரிய நந்தி ஓர் ஆச்சரிய அழகுப் படைப்பு. தமிழரின் கட்டடக்கலையின் சிறப்பை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உலகுக்கு அறிவிக்கும் அற்புதச் சான்று இந்தக் கோயில்.

இந்தக் கோயிலுக்கு வருவோர் தவறாமல் கோயிலின் முன் பகுதியில் நின்று உயர்ந்த கோபுரத்தின் கம்பீரத்தைக் கேமராவிலும் கையடக்கக் கருவியிலும் பதிவுசெய்யயும் முனைப்பைக் காணலாம். தமிழகப் பயணத்தைக் கட்டுரையாக்கிய என் நூலின் முகப்பிலும் கோபுரப் படத்தைத்தான் தேர்வு செய்தேன். பின்புறமாய் கோபுரத்தைச் சுற்றிவருகையில் அங்குக் கண்ட காட்சி மனத்தில் அழகாகப் பதிந்தது. தனியாக சிறு கட்டடமும் அதன் அருகே கம்பீரம் காட்டும் கோபுரமும் முன்னே பரந்து விரிந்த வானமும் தனி அழகாகத் தெரிந்தன. அதையும் பதிவு செய்ய என் மனம் விழைந்தது.
சிலாங்கூரில் மலையேறிகளின் விருப்பமான இடங்களில் முக்கியமானது செமினியில் உள்ள பொராகா குன்று (Broga Hill). வார இறுதியில் நூற்றுக்கணக்கில் மலையேறும் ஆர்வமுடையோர் இங்கு வருகிறார்கள். கினபாலு மலை ஏறுவதற்கு முன் பயிற்சிபெறும் குன்றாக இது விளங்குகிறது. கினபாலு மலை இதைவிட பத்து மடங்கு உயரமானாலும் இங்கே ஐந்து முறை ஏறி இறங்கினால் கினபாலு மலையேறும் அனுபவத்திற்குத் தயாராகிவிடலாம் என்கின்றனர் மலையேறும் வல்லுநர்கள்.  400 மீட்டர் உயரமுள்ள இக்குன்றை ஒரு மணி நேரத்தில் ஏறிவிடலாம்.


இங்கே, காலைக்கருக்கலில் ஏறி உச்சியை அடைந்து, பொழுது புலரும் முன்பே சூரிய உதயத்திற்குக் காத்திருக்கும் அனுபவம் அலாதியானது. அதற்காகத் தவம் இருப்பதுபோல் பலரும் இங்கே வந்து காத்திருக்கிறார்கள். இருள் விலக்கி வானில் வண்ணம் குழைத்துத் தலைநீட்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் அற்புத இயற்கைக் காட்சியாகக் கண்களை நிறைக்கின்றன. இயற்கையோடு இரண்டறக் கலக்கும் மனித மனம் அடையும் ஆனந்தம் அளவிடற்கரியது. அந்த அனுபவத்துக்காக நானும் ஒரு நாள் பிள்ளைகளோடு போனேன். சூரியன் வெளிப்பட்ட பிறகு, அங்குத் தென்பட்ட தொலைதூரத்து மலையும் மேகங்களும் குன்றைத் தழுவிய லாலான் புதர்களும் பாறைகளும் அழகிய காட்சியைச் சமைத்து இதய அறைகளில் ஒட்டி வைத்தன. அதை மறவாமல் பதிவு செய்தேன்.

No comments:

Post a Comment