நம் குரல்

Friday, May 6, 2011

பால்யத்தின் பக்கங்கள்


நினைவுகளின் நீரோடையில்
கால் நனைக்கிறேன்
திரும்ப முடியாத பாதைகளில்
எனைத் திரும்பத் திரும்ப
அழைத்துப் போகிறது

பாதை நெடுக
காய்ந்து உதிர்ந்த இலைகளினூடே
படபடத்து விரிகின்றன
என் பால்யத்தின் பக்கங்கள்

பக்கங்கள் தோறும் பதிந்துகிடக்கும்
பழைய முகங்கள் பழகிய குரல்கள்
எனக்குக் கண்ணாமூச்சி காட்டி
இதய ஓடைகளுக்குள் ஒளிகின்றன

இதயத்தில்
இருக்கைபோட்டு அமர்ந்து
கதைகள் பேசி
கனவுகள் வளர்த்தவர்கள்
எழுந்துபோய்விட்ட பிறகு
அந்த வெற்றிடம்
எதையும் இட்டு நிரப்ப முடியாமல்
வெறுமையாய் நீளுகிறது

வெறுமையை விலக்கிப் பார்த்தால்
கனவு விதை தின்று நிமிர்ந்த மரங்கள்
அடர்த்தியாகிப் பக்கங்களை
அழகு செய்கின்றன

அழகான பக்கங்களில்
இலைகளில் கலந்து சிரிக்கும் பூக்களாய்
எத்தனையோ சொல்ல மறந்த கதைகள்
கொஞ்சம்
சொல்ல முடியாத கதைகள்



வெல்லப்போவது யாரு?


நகரில் வீடுகள் தோறும் வளர்கின்றன
தின்று கொழுத்து
வாலாட்டித் திரியும்
தினவெடுத்த மிருகங்கள்

அந்நியர் யாரும் எதிர்ப்பட்டால்
சீற்றம் நிறைந்த உறுமலோடு
அனல் கக்கும் பார்வையோடு
கடைவாயில் எச்சில் ஒழுக
அவர் மீது பாய எத்தனிக்கின்றன

உரிமையாளரின் அதட்டலையும் மீறி
திமிறிக்கொண்டு நம்மை முறைக்கின்றன
ஒரு பிடி சதை கிடைக்குமா
ஏக்கப்பார்வை எட்டிப்பார்க்கிறது

எப்போதோ கேட்ட
வளர்த்தவனையே கடித்த நாய்கள் கதைகள்
பயவிதைகளை உள்ளே தூவியிருக்கின்றன

நானும் வளர்க்கிறேன்
ஒரு பொல்லாத மிருகத்தை
தனக்கான தீனியை
என்னை வற்புறுத்தித் தேடித்தின்று
என்னை மிஞ்சிக்
கொழுத்துக்கொண்டிருக்கிறது

இப்படி வளர்ந்து பெரிதாகும்
என்று அறிந்திருந்தால்
என்னையே வென்றுவிடும்
வீரியம் அதனுள் விளையுமென்றால்

கலகம் செய்து என்னையே
கலைத்துப் போடுமென்றால்
உயிரிரக்கம் இல்லாமல்
என்னையே கடிக்க முனையுமென்றால்

வாலாட்டி என்னை நாடியபோதே
விட்டு விலகியிருப்பேன்
எட்டி நடந்திருப்பேன்
அன்றி..
தெருமுனையில் எங்காவது விட்டிருப்பேன்

கொன்று தொலைக்க வேண்டும் இதனை
இன்று தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே
முடிகிறது என்னால்

அதைக்கொல்ல நானும்
எனைக்கொல்ல அதுவும்
தொடரும் போராட்டத்தில்
வெல்லப்போவது யாரு?


எல்லாம் இழந்தும்..


அரிதாய்க் கிடைத்த விடுப்பில்
அத்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன்
எப்போது போனாலும் அதே சிரிப்பு
இப்பொழுதெல்லாம் பொக்கை வாயோடு

என்னைப் பார்த்ததும் பாசம் நிறையும்
பார்வை நலம் விசாரித்தது
எழுபதாண்டு முதுமை ஆனமட்டும்
அவரை உருக்குலைத்திருந்தது

தோல்களின் சுருக்கம்
கூன்விழுந்த உடல்
வெளுத்துவிட்ட கேசம்
தடுமாறும் சொற்கள்
மங்கிய பார்வை
அந்திம காலத்தின் நெருக்கத்தில்
அத்தை இருந்தார்

அத்தையின் இழப்புகள் எத்தனை?
எண்ணிப் பார்த்தேன்
புற்றுநோய்க்கு மாமா
சாலை விபத்துக்கு மூத்தவன்
போலீஸ் தடுப்புக்காவலுக்கு இளையவன்

ஒவ்வொருவராக விடைபெற்றுப்போய்
தனித்து நின்றும்
சோகத்தின் சாயல் படியாத முகத்தைப்
கண்களுக்குள் படமெடுத்க்து வந்தேன்

திரும்பும் வழியில் பார்த்தேன்
எல்லாம் உதிர்ந்தும்
வெறும் கைகளைப் பரப்பி
அழகாய் நின்றது மரம்
அத்தையைப்போலவே

Sunday, May 1, 2011

யாரும் யாருடனாவது..


யாரும் யாருடனாவது
இருக்க வேண்டும் என்கிறீர்கள்

தனியாக இருப்பதைக்
தகுதிக் குறைவாகச் சொல்கிறீர்கள்

நான் அங்கே போய்விட்டதாக,
நான் இங்கேதான் இருப்பதாக
அவரவர் கணக்கில்
என்னைப் பதிந்துகொள்கிறீர்கள்

குழுவாகச் சேர்ந்து கல்லெறியும்
கூட்டத்தில் என் முகம் தேடுகிறீர்கள்

ஆள் சேர்ந்தால்தான் முன்மொழிந்து,
வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்ற
வசதியென்கிறீர்கள்

என்னைச் சுற்றிக் கட்டப்பட்ட கயிறுகளை
எப்போதோ கழற்றிவிட்டேன் என்கிறேன்
நம்ப மறுக்கிறீர்கள்

என்னை இதுகாறும் புதைத்த
பொதுமையிலிருந்து மீட்டெடுத்துத்
தனிமையிடம் தந்துவிட்டேன் என்கிறேன்
கேலி பேசுகிறீர்கள்

கட்டற்ற காற்றோடு கைகுலுக்கி
திசைகளற்ற வெளிகளில் கைவீசி நடப்பதின்
இன்பத்தைச் சிலாகித்துப் பேசுகிறேன்

வெறுப்பை உமிழ்ந்தவாறு
என்னைக் கணக்கிலிருந்து கழித்துவிட்டு
யாருடனாவது சேர்ந்துகொள்ள
புறப்படுகிறீர்கள்

(தங்கமீன் இணைய இதழ், சிங்கப்பூர்)
www.thangameen publications (April issue)

Saturday, April 23, 2011

ஸ்ரீமுருகன் நிலையம் - கல்விப் பணியில் 28 ஆண்டுகள்



‘ஸ்ரீமுருகன் நிலையம்’

இந்நாட்டு இந்தியரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர். பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பாதம் பதிக்க உதவியும் உத்வேகமும் ஊட்டிவரும் கல்வி நிலையம். இது திருமுருகனின் திருப்பெயரால் தகைசார்ந்த டத்தோ டாக்டர் தம்பிராஜாவாலும் அவர்தம் மாணவர் படையாலும் தொடங்கப்பட்ட அமைப்பு. பலரின் கடுமையான உழைப்பால் திட்டமிட்ட பணியால் இன்று நாடு முழுதும் கிளைகள் பரப்பி, 28 ஆண்டுகளாகச் சிறந்த சமூக அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஸ்ரீமுருகன் நிலையம் என் வாழ்வின் உயர்வுக்கு வழியமைத்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 1985 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியினை முடித்து (ரவூப்) பகாங் மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எப்படியாவது படித்துப் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எண்ணம் தீயாக என்னுள் கொளுந்துவிட்டு எரிந்த வேளை. எங்கே போய்ப் படிப்பது என்று தவித்தபோது ஸ்ரீமுருகன் நிலையம்தான் கைகொடுத்தது. ரவூப் நகரிலிருந்து நானும் காராக் நகரிலிருந்து நண்பன் ஆவுடையாரும் ஒவ்வொரு வார இறுதியில் செந்தூல் தம்புசாமித் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்ட ஸ்ரீமுருகன் நிலைய ஆறாம் படிவ வகுப்புகளில் சேர்ந்து படித்தோம்.

அங்குக் கிடைத்த முறையான வழிகாட்டலும் தன்முனைப்பு உரைகளும் எனக்குள் உத்வேக விதைகளைத் தூவின. போய்ச் சேர்ந்த மறுவாரமே சரித்திரப் பாடத்தில் தேர்வு. மோசமான புள்ளிகள் கிடைத்தன. தேர்ச்சி பெறாதவர்கள் வகுப்புக்கு முன்னால் அழைக்கப்பட்டோம். அவமானமாக இருந்தது. ஆனால், அந்த அவமானம்தான் பிறகு தேர்வுகளில் எனக்கு வெகுமானத்தைப் பெற்றுத் தந்தது. பாங்கி தேசியப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத்தில் இளங்கலையும் முதுகலையும் பெற்று இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன்.

காஜாங் ஸ்ரீமுருகன் நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராக என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். ஏழு லட்சம் வெள்ளிக்கும் மேலான மதிப்புடைய சொந்த 3 மாடிக் கட்டடத்தில் காஜாங் ஸ்ரீமுருகன் நிலையம் கல்விப் பணியாற்றி வருகிறது. தன்னலமற்ற சேவையாளர்கள் இணைந்துள்ள அமைப்பில் நானும் ஓர் அங்கமாக இருப்பதைப் பெருமையாக எண்ணுகிறேன். என் கனவுகளை நனவாக்கிய ஸ்ரீமுருகன் நிலையத்தின் திருப்பெயரை மனம் மறவாமல் உச்சரிக்கிறது.

அண்மையில் (ஏப்ரல் 17) பெட்டாலிங் ஜெயா ஹில்டன் தங்கும் விடுதியில் ஸ்ரீமுருகன் நிலையத்தின் தேசிய நிலையிலான கருத்தரங்கில் கலந்துகொண்டேன். 28ஆம் ஆண்டாக நடந்த கருத்தரங்கு. நாடு முழுவதுமிருந்தும் நானூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். வழக்கம்போல் சூடான உரைகளும் சுடச்சுடத் தகவல்களும் கிடைத்தன.

ஸ்ரீமுருகன் நிலையத்தின் தோற்றுநர் டத்தோ டாக்டர் தம்பிராஜா, இணை இயக்குநர் திரு. சுரேந்திரன் ஆகிய இருவரின் உரைக்குப் பிறகு, நாட்டின் 13ஆவது தேர்தல் குறித்த சிந்தனைகளைத் துணை அமைச்சர் டத்தோ தேவமணி முன் வைத்தார். 12ஆவது தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் - அதன் விளைவுகள், பிரதமரின் திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார். அதே தலைப்பில், அரசியல் ஆய்வாளர் திரு. அன்புமணி பாலனும் பேசினார். மழைக்குப் பிந்திய காளான்களாக முளைக்கும் அதிகமான அரசு சார்பற்ற அமைப்புகளினால் நம் போராட்டங்கள் நீர்த்துப்போகும் நிலைமையை விளக்கினார்.


ஸ்ரீமுருகன் நிலையத்தின் இணை இயக்குநர் திரு. பிரகாஸ்ராவ் அரசின் உபகாரச் சம்பளம் குறித்த விளக்கத்தை அளித்தார். கருத்தரங்கில் அனைவரையும் கவர்ந்த இன்னொரு முக்கிய அங்கம் மலாய்மொழி வல்லுநர் டாக்டர் கதிரேசனின் ‘இண்டர்லோக்’ நாவல் குறித்த கண்ணோட்டம். அவரின் எட்டு பக்க ஆய்வுக் கட்டுரையில் ஆறு பக்கங்களில் அப்துல்லா ஹ¤சேனின் படைப்புத்திறனைப் பாராட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஆனால், கடைசி இரண்டு பக்கங்களில் இரண்டு காரணங்களை முன்வைத்து பள்ளிகளில் இந்நாவல் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். இந்நாட்டுக்கு வந்த இந்தியர்கள் தாழ்ந்த குடிகள் என இழிவுபடுத்துவதாலும் இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்ற சிந்தனையை இன்றைய தலைமுறைக்கு அழுத்தமாகக் கூறுவதாலும் பயன் ஒன்றும் விளையாது. இதனால் இன ஒற்றுமைக்கு பெரும் பாதகம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருத்தை அழுத்தமாக முன்வைத்திருந்தால் ம.இ.கா அனுப்பிய குழுவினர் தம் வாதத்தில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், கதைப்போக்கில் காணும் குறைகளை முன்வைத்து நம் போராட்டத்தில் தோற்றிருக்கிறோம் என டாக்டர் கதிரேசன் கூறினார். நிறைவு அங்கத்தில் துணை அமைச்சர் டத்தோ பழநிவேல் உரையாற்றினார்.

மாலை மணி 4.30க்கு கருத்தரங்கு நிறைவுபெற்றது. தங்கும் விடுதியை விட்டு வெளியேறும் போது இந்தக் குறள்தான் என் நெஞ்சில் இனித்தது:

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்


Sunday, April 17, 2011

எதை இம்முறை?


ஒவ்வொரு முறையும் தங்கத் தட்டில்
எங்கள் விசுவாசத்தை இட்டு நிரப்பி
உங்கள் காலடியில்
தாரை வார்த்துக்
கைகளை ஏந்தினோம்

எங்களைப் புரிந்துகொண்டதுபோல்
புன்னகையைப் பரிசளித்தீர்கள்
உங்கள் இதழ்களின் மலர்ச்சியை
இதயங்களில் ஏந்தி
புளகாங்கிதம் அடைந்தோம்

ஒவ்வொரு முறையும்
காறி உமிழ்ந்தீர்கள்
கைக்குட்டையையும் தந்தீர்கள்
எச்சிலைத் துடைத்தோம்
எரிச்சலை மறந்தோம்

ஒவ்வொரு முறையும்
காவடிகள் ஏந்தி
கருணை வரம் வேண்டி
அதிகாரப் படிகள் ஏறினோம்
எங்கள் பக்தியை மெச்சினீர்கள்.

ஒவ்வொரு முறையும்
அடிப்படைத் தேவைகளுக்காக
உங்கள் மனக் கதவுகளைத்
தட்டித் தட்டித் தளர்ந்தோம்
கதவுகளுக்குப் பின்னால்
உங்களின் பரிவான குரல்
கேட்டுக்கொண்டே இருந்தது

அவ்வப்போது
காயம் ஆறாப் புண்களைக்
கிளறுவீர்கள் சீழ் வடியும்
மறவாமல் உடனே
களிம்பு தடவுவீர்கள்
கிளர்ச்சி பெறுவோம்

எப்போதாவது
கிச்சுகிச்சு மூட்டுவீர்கள்
வாய் வலிக்கச்
சிரித்து வைப்போம்

பசியால் அழுதோம்
நொறுக்குத் தீனிகளைக்
கைகளில் கொடுத்து
பைகளில் சில்லறைகளைத் திணித்து
சமாதானம் சொன்னீர்கள்

மீண்டும்
தங்கத்தட்டு ஏந்தி
உங்கள் காலடி நோக்கி வருகிறோம்
தட்டில் எதை இட்டு நிரப்புவது
இம்முறை?

சிந்திக்கத் தூண்டுகிறது
கொஞ்சம் மிச்சமாய்
உணர்விலும் உயிரிலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
சூடும் சுரணையும்


Saturday, April 16, 2011

நடுப்பகல் நாய்கள்

வீடுகள்தோறும் காத்திருந்து
ஏக்கத்தோடு எதையும்
ஏறிட்டுப்பார்க்கும்

அதன் கண்களில்
அடர்ந்து நிறைந்து வழியும்
சொல்லமுடியாத அடர்ந்த சோகம்

காலை உண்ட உணவு கரைந்துபோக
பசியோடு வாசலைப்
பார்த்துக் காத்துக்கிடக்கின்றன

சோம்பலாகக் கழியும் பகற்பொழுதின்
தூக்கத்தின் மயக்கத்தில்
ஏதும் ஒலி கேட்டால்,
யாரும் முன்னே கடந்துசென்றால்
குரல் கொடுத்துத் தன்னிருப்பை
உறுதிசெய்கின்றன

கண்முன்னே
நாய் ஏதும் கடந்தால்
ஆசையாய்க் கவனிக்கின்றன

வாசல்களைத் தொட்டு வீட்டுக் கதவுவரை
வெயில் மெதுவாக ஊர்ந்து
உடல் மேல் படர்கையில்
அவை உக்கிரமடைகின்றன

வீட்டின் பாதுகாப்பு உண்டென்ற நினைப்பில்
அலுலக வேலைகளில் மூழ்கியிருக்கும்
அதன் முதலாளிகளின் நினைவில்
அவை எட்டிப்பார்ப்பதில்லை

அவற்றைப்போலவே
வீடுகளின் சன்னல்களின் வழியாய்
வருவோர் போவோரையெல்லாம்
வெளிப்பார்வையால் விசாரித்தவாறு
விரக்தியால் புன்னகைக்கிறார்கள்
நடுப்பகல் மனிதர்கள்