நம் குரல்

Sunday, March 8, 2015

காக்க காக்க மிதவாதம் காக்க


      எப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் இப்போது தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகள் யுத்தம் ஓயாத இரத்த பூமியாக முகம் மாறியிருக்கின்றன. மனித உயிர்கள் மதிப்பற்றுப் போய்விட்டன. ஒவ்வொரு நாளும் மனிதர்கள் ஆடு, மாடுகளைப்போல் கழுத்தறுக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்படுகிறார்கள் அல்லது எரியூட்டப்படுகிறார்கள்.  இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் முனைப்பில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை முற்றாகத் துடைத்தொழிக்கும் முயற்சியில் இவற்றைச் செய்கிறார்கள். இவர்கள் முயற்சியின் முனை முறிக்க, பன்னாட்டு இராணுவம் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அவ்வளவு விரைவில் முடிந்துபோகும் நாடகமாக இது தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது.

      உலகப் பந்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயம் என்று நாம் ஒதுங்கிப் போய்விட முடியாது. பக்கத்து ஊர் முச்சந்தியில் நிகழ்ந்த சண்டை நம் தெருவுக்கும் வந்து  அடுத்து நம் வீட்டுக்குள் நுழையும் தருணத்துக்கும் வந்துவிட்டது. அண்மையில் ஜோகூரைச் சேர்ந்த 14 வயது பெண் எகிப்துக்குச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. அங்கிருந்து சிரியா சென்று அவர் தன் காதலனுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளோடு இணையத் திட்டமிட்டிருந்தார். தீவிரவாதிகளின் சித்தாந்தம் எந்த அளவுக்கு நம் நாட்டின் இளையோரிடையே ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்று போதும்.

      காவல்துறையின் கணக்குப்படி இதுவரை ஏழு மலேசியப் பெண்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணையச் சென்றுள்ளனர். ஆனால், அதே எண்ணிகையிலான பெண்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுளனர்.  இதுவரை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடுவதாகத் தொடக்கத்தில் செய்தி வந்தது. இப்போது, அந்த எண்ணிக்கை 50 ஆக இருக்கலாம் என்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயரும் எனத் தெரிகிறது.  கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி, மலேசியத் தொழிற்சாலை ஊழியரான அகமட் தர்மிமி மர்ஜூக்கி, தற்கொலைப் படையினரோடு சேர்ந்து ஈராக் இராணுவ தலைமையகத்தை வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தைக்கொண்டு தாக்கி வெடிக்கச் செய்து மாண்டுபோனபோது, இங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

      அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாதத்தினால் ஈர்க்கப்பட்ட 19 பேர்  பாதுகாப்பு குற்றச்செயல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள இரவு விடுதிகள், மதுபானத் தொழிற்சாலைகள்  போன்றவற்றின்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கூறிய சம்பவங்கள் மூலம், தீவிரவாதமும் பயங்கரவாதமும் மக்களின் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்துவரும் ஆபத்தை உணர்ந்த அரசு, நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன் மூலம்


நடப்பிலிருக்கும் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்துவதோடு குற்றம் தடுப்புச் சட்டத்தையும் முன்மொழிந்தது.  தீவிரவாதத் தடுப்புச் சட்டம் இம்மாதம் நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      அரசாங்கத்தின் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கை, இங்குத் தீவிரவாதத்தின் வேகத்தைக் குறைக்க முடியுமா என்ற ஐயத்தை எழுப்புகிறது. இங்குப் பெருகிவரும் சம்பவங்களும் கைது நடவடிக்கைகளும் இதனை மெய்ப்பிக்கின்றன. காரணம் என்ன? தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்ப யாரும் நம் நாட்டு எல்லையைக்  கடக்க வேண்டியதில்லை. இணையதளங்கள், முகநூல் பக்கங்கள் வாயிலாக, இளையோரின் அறைக்குள் நுழைந்து அவர்களை மிக நூதனமாக மூளைச் சலவை செய்து,  தங்கள் இயக்கத்தில் இணைந்து இறைவனின் அருட்கொடையைப் பெறுமாறு ஈர்க்கப்படுகிறார்கள். இதனால்தான் அரசின் தீவிர முயற்சிகள் பலனளிக்காமல் போகின்றன. தீவிரவாதத்தில் இணைந்தாரின் புள்ளி விபரங்களை மட்டும் தரமுடிகிறது. பலரைத் தடுக்க முடியாமல் போகிறது.

      அண்மையில்,  சீனப் புத்தாண்டின்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் பாணியில் முகமூடியணிந்த நால்வர் மலேசிய நீதிமன்ற நடவடிக்கையில் மனநிறைவு கொள்ளாது நீதிமன்றங்களைத் தாக்கப்போவதாக வீடியோ பதிவின் மூலம் மிரட்டல் விடுத்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் எனச் சந்தேகிப்படும் அவர்களில் இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அதனையடுத்து, காவல்படைத் தலைவரைக் கொல்லப்போவதாக இன்னொரு வீடியோ பதிவு வெளியானது. பல்கலைக்கழக மாணவர்களும் தீவிரவாதச் சித்தாந்தம் விரித்த வலையில் சிக்கத் தொடங்கிவிட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

      நிலைமை மோசமாகாமல் தடுப்பது எப்படி? இணைய தளங்களில் தீவிரவாதிகள் மேற்கொள்ளும் பிரச்சார பாணியைப் பின்பற்றித் தீவிரவாதத்தின் பொய்முகத்தை, அவர்களின் முகமூடியைக் கிழித்து வெளிச்சம்போட்டுக் காட்டுவதைத்  தவிர வேறு வழியில்லை. மேடைப்பேச்சும் சமய உரைகளும் இந்த விஷயத்தில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஆனால், இணையத்தள போரில் தீவிரவாதிகளோடு மோதி வெற்றிப்பெற முடியுமா? சந்தேகம்தான். அவர்களின் நூதனப்போரில் இதுவரை நாம் தோல்வியைத்தான் தழுவி வந்துள்ளோம்.




     
மாற்றுவழிகளையும் சிந்திக்க வேண்டிய சூழலில் உள்ளோம். தன் மதத்தின் மீதுகொண்ட அதிதீவிர பற்றும் தவறான வழிகாட்டல்களும் ஒருவரை மற்ற மதத்தாரை எதிரிகளாகக் காணும் மோசமான நிலையை உருவாக்கிவிடும். பல்லின மக்கள் வாழும் மலேசியச் சூழலில் இத்தகைய மனப்போக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். ஒரே மலேசியா என்ற கொள்கைவழி இன ஒற்றுமையை வளர்க்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இத்தகையோரின் செயலால் வீணாகிவிடும். எனவே, மக்களின் மனங்களில் பிற மதம் பற்றிய தவறான எண்ணங்கள் விஷவிதைகளாகப் பதியமாவதை அரசு தடுக்கும் முயற்சியில் முனைப்பு காட்ட வேண்டும். ஒரு தரப்பினர் மற்றத் தரப்பினரின் மதம், இனம், பண்பாடு பற்றி இழிவுசெய்தால் வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து அத்தகைய செய்கையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அவர்கள் அரசியல் தலைவர்களாகவோ, பொது இயக்கங்களின் பொறுப்பில் உள்ளவர்களோ இருந்தாலும் கடும் சட்ட நடவடிக்கை வேண்டும்.


      தீவிரவாதமும் பயங்கரவாதமும் அழிவைத்தான் கொண்டுவரும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சிகள் தேவை. மிதவாதம் மலேசியர்களின் வாழ்க்கை முறையாக மாறினால் இங்குத் தீவிரவாதத்தின் வேரை அறுக்க முடியும். அதற்கான முயற்சியை யார் மேற்கொள்வது? ஸ்டார் ஆங்கில நாளிதழ், அண்மைய காலமாக, மிதவாதத்தின் குரல் (voices of moderation) என்ற இயக்கத்தைத் தொடங்கி, அதன் தொடர்பான கட்டுரைகளையும் அந்த  இயக்கத்துக்குக் குரல் கொடுக்கும் பலரின் கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மலாய்ச் சமூகத்தின் முக்கியமான 25 பேர் கையெழுத்திட்ட கடிதம் மூலமாக இந்த மிதவாத இயக்கத்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

      மலேசியாவில் தீவிரவாதத்தின் குரல் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ள சூழலில் இந்த அணுகுமுறை சிறந்ததொன்றாகக் கூறலாம். பேச்சுரிமை என்ற போர்வையில் சக மலேசியர்களின் மதத்தையும் இனத்தையும் மொழியையும் பண்பாட்டினையும் இழிவுசெய்யும் போக்கினை இந்த இயக்கம் கண்டிக்கிறது. ஒரு சிலரின் அடாவடியான பேச்சை எல்லாரும் வேடிக்கை பார்த்துப் பேசாமல் இருப்பதால் அதுபோன்ற தீவிரவாத பேச்சு தொடர்கிறது. மலேசியர்கள் ஒருங்கிணைந்து தீவிரவாதக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இங்கு இனங்களிடையே தொடர்ந்து நல்லிணக்கம் நிலவும். அந்த முயற்சியை ஸ்டார் ஆங்கில நாளிதழ் முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து, பலர் இந்த இயக்கத்துக்குத் தங்களின் ஆக்ககரமான கருத்துகளை வழங்கி வருகின்றனர்.




ஓர் இனம் மற்ற இனத்தின் மதம் பற்றிய அறிதலும் புரிதலும் கொண்டிருக்க வேண்டும். மற்ற மதங்களை இழிவாக நினைக்காத மனப்போக்கினை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் தீவிரவாதத் தீப்பொறியைக் கொளுத்திப்போட ஓர் அரைகுறை சமயவாதியால் எளிதில் முடியும்.

நம் நாட்டைப் பேரிடரோ பெருந்துன்பமோ சூழ்ந்தால் அப்போது தீவிரவாதம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிடும். அண்மையில் ஒரு மாத காலம் சில மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தபோது யாரும் தீவிரவாதம் பேசாமல் ஒருங்கிணைந்து மதம், இனம், மொழி பாராமல் சகோதரத்துவத்தோடு உதவிக்கரம் நீட்டினர். வெள்ளம் வடிந்தது. மீண்டும் மிரட்டும் பேச்சும் அச்சுறுத்தும் கருத்தும் மிரட்டும் தொனியும் தலைகாட்டத் தொடங்கிவிட்டன.

தீவிரவாதம் தீது என்ற தலைப்பில் முன்பு நான் எழுதிய கவிதையின் சில வரிகள் இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.

தேசிய கீதங்களையெல்லாம்
உலக மயமாக்குவோம் இப்படி:

காக்க காக்க
அகிம்சை காக்க

போக்க போக்க
தீவிரவாதம் போக்க

நீக்க நீக்க
மதவெறி நீக்க

நோக்க நோக்க
ஒன்றாய் நோக்க

சக மனிதனை ஒன்றாய் நோக்கும் உள்ளம் வராதவரை, தீவிரவாதம் மனித மனங்களை முட்டி முளைத்து விருட்சமாய் வளர்ந்து எழுந்து நிற்பதை யாரும் தடுக்க முடியாது. 

Wednesday, March 4, 2015

இறுதி அழைப்பு

     


அகால நேரத்தில் உறக்கத்தின் பிடியிலிருந்தவனை
பிடிவாதமாய் எழுப்பியது கைப்பேசி
எதிர்பாராத அழைப்பு அவனிடமிருந்து
உடைந்த குரலில் பேசத்தொடங்கினான்
என்னைப் பேசவிடாமல்

என் கவிதைகளைப் படித்துள்ளதாகவும்
என்னை ஒருமுறை சந்தித்ததாகவும்
மரணம்குறித்த என் கவிதைகள் பிடிக்குமென்றும்
என் கவிதைகளில் அவன் இருந்ததாகவும்
இனியும் தன்னைப் பற்றி எழுதுமாறும்
கூறியவாறு அழத்தொடங்கினான்

இனிமேல் தாங்கமுடியாதென்றும்
நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்
கண்ணீர் வற்றிவிட்டதாகவும்
முயற்சிகளெலாம் முடிந்துபோனதாகவும்
எனவே இனி அழைக்கமுடியாதெனவும்
போய் வருவதாகவும் தொடர்பைத் துண்டித்தான்

அதிர்ந்துபோய் பலமுறை அழைத்தும்
அவன் தொடர்பு கிடைக்கவில்லை
மரணம் குறித்த என் எல்லாக் கவிதைகளையும்
மனம் வாசித்துப் பார்த்தது
அவனைத் தேடிப் பார்த்தது
முகமில்லா அவனே ஒவ்வொன்றிலும்
சோகமாய் வந்து நின்றான்

மனைவியின் சேலையை மின்விசிறியில் சுற்றி
கட்டடிடத்தின் மேல்தளத்தில் நின்று
விஷத்தை வாயில் ஊற்றிக்கொண்டு
எண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குச்சி தேடி
தண்டவாளத்தில் இரயிலுக்குக் காத்திருந்து
வாகனத்தைப் பாலத்தை நோக்கிச் செலுத்தி
அவன் தயாராகிக் கொண்டிருந்தான்

அவனின் இறுதி யாத்திரையைத் தடுப்பதறியாது
அவனுக்காக எழுதத்தொடங்கினேன்
இன்னொரு மரணக் கவிதை

மரணத்தின் எல்லையை நெருங்கும்போதெலாம்
அவனைத் தடுக்க முயன்றேன்
மூர்க்கமாய் மோதத் தொடங்கினான்
என் சொற்களோடு

Sunday, March 1, 2015

சிற்றிதழ் முயற்சிகள்: தீராக் கனவுகள்



     நம் நாட்டில் நாளிதழ்களும் வார, மாத ஏடுகளும் எழுத்தாளர் இயக்கங்களும் நீண்ட காலமாக இலக்கியத்தை வளர்க்கும் பணியைச் செய்து வருகின்றன. நாவல், மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை என எல்லா இலக்கிய வடிவங்களின் வளர்ச்சியும் அவற்றைச் சார்ந்தே அமைந்துள்ளது. 140 ஆண்டுகளாக நம் மலேசியத் தமிழ் இலக்கியம் ஞாயிற்றுக்கிழமை இலக்கியமாக ஒரு வட்டத்தில் உழன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. ஒரு தொடர்கதை, ஒரு சிறுகதை, சில கவிதைகள் என ஞாயிறு இதழ்கள் தம் இலக்கியப் பணிக்கு எல்லை வகுத்துச் செயல்படுகின்றன. எனவே, இலக்கியத்தின் தீவிர நகர்வுக்குச் சிற்றிதழ் தேவை என்ற எண்ணம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் படைப்பாளிகளிடம் எழுந்தது.

மலேசியத் தமிழரும் தமிழும் எனும் நூலில், முனைவர் முரசு நெடுமாறன், மலேசியாவில் நடந்த சிற்றிதழ் முயற்சிகளைப் பதிவு செய்துள்ளார். 1941இல் போர் நடந்த காலத்தில் வெளிவந்த தமிழ்கொடி, 46க்குப் பிந்திய இலக்கிய இதழ்களில்  கா.இராமநாதனையும் பின்னர் தி.சு.சண்முகத்தையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சோலை' திங்களிதழ்,  1954 முதல் 1956வரை எழுத்தாளர் மா.செ மாயதேவன் மூலம் கையெழுத்து இதழாகத் தொடங்கிப்  பின்னர்  அச்சு இதழாக வந்த 'திருமுகம்', கரு.இராமநாதனை ஆசிரியராகக் கொண்டு ஈப்போவிலிருந்து 1956இல் வெளிவந்த 'மலைமகள்' போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சுதந்திரத்துக்குப் பிறகு, 1958இல் வெளிவந்த 'நவரசம்', 1965இல் கருத்து மோதல்களுக்கு வாய்ப்பளித்த 'பொன்னி', 1999இல் மா.இராமையா அவர்கள் வெளியிட்ட 'இலக்கியக்குரிசில்' என இலக்கியம் சார்ந்த இதழியல் முயற்சிகளைப் பட்டியலிடலாம். இவ்விதழ்களில் சில மட்டுமே இன்று வாசிப்புக்குக் கிடைக்கின்றன. மற்றவை இதற்கு முந்தைய ஆய்வாளர்களுக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் உள்ளவையே. வாசிக்கக் கிடைத்த இவ்விதழ் அனைத்துமே அவ்வப்போதைய இலக்கியப் படைப்புகளைப்  பிரசுரிக்க முனைப்புக்  காட்டின.

      சிற்றிதழ் என்றால் என்ன? நம் இலக்கியச் சூழலில் இதன் தேவை என்ன? நம் நாட்டில் நாள், வார, மாத ஏடுகளும், எழுத்தாளர் இயங்கங்களும் நீண்ட காலமாக இலக்கியத்தை வளர்க்கும் பணியைத்தானே செய்து வருகின்றன? இதற்குத் தனியாக ஒரு களம் தேவையா? என்று நீங்கள் கேட்கலாம். அதிகார பலமும் பொருளாதார பலமும் இல்லாதவர்களின் வெளிப்பாடாகவும், குரல் நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், வாசகனைக் கவர்வதற்காக சமரசம் செய்துகொள்ளாமலும், மாற்றுச் சிந்தனையை முன்வைத்தும், வண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் குறைவான அச்சுத் தரத்தோடும் வெளிவரும் இதழ்களாகச் சிற்றிதழ்களை அடையாளங் காணலாம். ஆனால், இன்று இந்த அளவுகோல்களில் சிலவற்றில் தொழில்நுட்ப வசதிகள்  மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

      நாளிதழ்களிலும் வார, மாத ஏடுகளிலும் இலக்கியத்துக்கான பக்கங்கள் குறைவு. அவை, அவ்வப்போது படைப்புகளை வெளியிட்டும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வந்தாலும் தொடர்ச்சியான இலக்கியச் சிந்தனைக்கும் விவாதத்துக்கும் அவற்றில் வாய்ப்புகள் குறைவு. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள சாத்தியமில்லை. எனவே, சிற்றிதழ்களே அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும். ஆக்கப்பூர்வமான இலக்கிய விவாதங்களை முன் வைக்க, புதிய படைப்பு முயற்சிகளை ஊக்குவிக்க, காய்தல் உவத்தல் இல்லாமல் விமர்சனங்களை வரவேற்க, நவீன இலக்கியத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்த, உலக இலக்கியத்திலும் தமிழ் இலக்கியப் பரப்பிலும் நிகழ்ந்துவரும் மாற்றங்களை அறிவிக்க சிற்றிதழ்கள் பங்காற்ற முடியும்.



      
அதோடு நம் கலை, இலக்கியச் சாதனைகளை, சறுக்கல்களை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொள்ள, வாசகர் கடிதங்களோடு நின்றுவிடுகின்ற வாசகனைத் தீவிர  இலக்கியத்துக்கு ஆற்றுப்படுத்த, கட்சி – அணி பேதமின்றி பொதுவெளியில் எழுத்தாளர்களை – வாசகர்களை ஒருங்கிணைக்க நமக்குச் சிற்றிதழ்கள் தேவைப்படுகின்றன. சிறந்த இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம், மொழிபெயர்ப்புப் படைப்புகள், நேர்காணல்கள், இலக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான பதிவுகள், புதிய நூல்கள் பற்றிய அறிமுகங்கள் எனச் சிற்றிதழ்கள் பரவலான தளத்தில் செயல்படமுடியும்.

      1976ஆம் ஆண்டு ‘Dewan Sastera’ என்ற தீவிர இலக்கிய இதழ் வெளிவந்த பிறகு, மலாய் இலக்கிய உலகம் புதிய உத்வேகத்தைப் பெற்றது எனலாம். அங்கு எழுதுவோர் எண்ணிக்கையும் உயர்ந்தது. தீவிர இலக்கியத்தின் மீது நாட்டம் கொண்டோரும் அதிகரித்தனர். நூல்களுக்கான விற்பனைச் சந்தையும்  விரிவடைந்தது. மலாய் இலக்கியம், நாளிதழ்களையும் வார, மாத ஏடுகளையும் மட்டும் நம்பியிருந்தால் இன்றைய வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது.

      தமிழகத்தில் தீவிர இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் சிற்றிதழ்களைத்தான் நாடவேண்டும். 2004இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்துக்கு மேற்கொண்ட இலக்கியப் பயணத்தில் நானும் இணைந்திருந்தேன். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன் முனைவர் ரெ. கார்த்திகேசு என்னைத் தியாகராய நகரிலுள் புக்லேண்ட் கடைக்கு அழைத்துச் சென்றார். அதுவரை கேட்டறியாத இருபதுக்கும் குறையாத சிற்றிதழ்கள் அங்கிருக்கக் கண்டேன். நமக்கு நன்கு அறிமுகமான காலச்சுவடு, தீராநதி, புதிய பார்வை ஆகிய இதழ்களைத் தவிர்த்து புது எழுத்து, அட்சரம், வனம், மாற்று, புது விசை, படித்துறை, ரசனை, உயிர்மை, இனிய  நந்தவனம் என நிறைய இதழ்கள் வெளிவருகின்றன. சிற்றிதழுக்கான தீவிரம் சில இதழ்களில் இல்லாவிட்டாலும் புதிய இலக்கில் இலக்கியம் பற்றிப் பேசும் இதழ்களாக அவை இருந்தன.

      அத்தகைய சிற்றிதழ் முயற்சி நம் நாட்டில் வெற்றிபெறவில்லையே என எண்ணிப் பார்க்கையில் ஏமாற்றம்தான் அப்பொழுது எழுந்தது. தமிழகத்தின் முக்கிய நகர்களில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்புகளில் “உங்கள் நாட்டில் சிற்றிதழ் உண்டா?” எனக் கேள்வி எழுந்தபோது “இல்லை” என்ற பதிலைத்தான் தந்தோம். நம் இலக்கியத்தை மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் சிற்றிதழின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. அதன் விளைவாக, மறு ஆண்டில் முனைவர் ரெ.காவோடு இணைந்து முகம் (டிசம்பர், 2005) எனும் சிற்றிதழைப் பெரும் போராட்டத்தோடு கொண்டு வந்தேன். எம்.ஏ.இளஞ்செல்வனின் இலக்கியப் பங்களிப்புப் பற்றிய கட்டுரைகள் அதில் பெற்றன. அவற்றை முனைவர் ரெ.கா. எழுதினார். சிற்றிதழை வெளியிடும் கனவு இனிமையானது. ஆனால், செயல்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். ஓர் இதழோடு போதிய ஆதரவின்றி அந்தக் கனவு முயற்சியைக் கைவிட்டேன்.



      தீவிரத்தன்மையோடு  இயங்கும் சிற்றிதழ்களைத் இங்குத் தமிழில் வெளியிடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அவர்களில் சீ.அருண், வழக்கறிஞர் பசுபதி, ம.நவீன், கே.பாலமுருகன், ஏ.தேவராஜன் ஆகியோரின் முயற்சிகள் முக்கியமானவை. மலேசியாவின் முதல் இதழாக செம்பருத்தியைக் குறிப்பிட வேண்டும். எழுத்தாளர் மா.சண்முகசிவா அவர்களின் தூண்டுதலால் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தொடங்கிய இவ்விதழ்  முற்றிலுமாக அதிகாரத்துக்கு எதிரான குரலை அதில் வெளிவந்த இலக்கியங்கள், கட்டுரை, சிறுகதை மூலமாகப் பதிவு செய்தது. சிற்றிதழ் சூழலில் அனுபவம் கொண்ட இலங்கைத் தமிழரான கணபதி கணேசனை ஆசிரியராக கொண்டு நடத்தப்பட்ட காலத்தில் (1998) அவ்விதழ் மிகவும் தீவிரமாக இடதுசாரி சிந்தனையில் செயல்பட்டது. மேலும் சிற்றிதழுக்கே உரிய காத்திரத்துடன் ஓர் இயக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் இலக்கியத்துக்கான முக்கியத்துவம் மிகக்குறைந்த அளவே இருந்தது. மேலும் பரீட்சார்த்தமான இலக்கிய முயற்சிகள் அதில் நடைபெறவில்லை.

      கவிஞர் சீ.அருண் அருவி’ (1998 – 2001) இதழை வெளியிட்டார். மொத்தம் 11 இதழ்கள் வெளிவந்தன. வெளிநாட்டுப் பொறுப்பாளர்களாகச் சிலரை நியமித்து வெளிநாடுகளுக்கும் இதழ்களை அனுப்பினார். வெளிநாட்டுப் படைப்புகளையும் இதழில் இடம்பெறச் செய்தார். புதுக்கவிதைகளோடு மரபுக்கவிதைகளையும் வெளியிட்டார்.  அதிகமாகப் புதுக்கவிதைகளை இடம்பெறச் செய்து படைப்பாளர்களின் சுதந்திரமான கற்பனைக்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.


     
புதுக்கவிதையை நவீன கவிதையாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கியப் பங்கினை மௌனம்கவிதை இதழ்வழி ஜாசின் ஏ.தேவராஜன் மேற்கொண்டார். 2009இல் தேவராஜன் முயற்சியில் 15 இதழ்கள் வெளிவந்தன. படைப்பிலக்கியத்திலும் கவிதை வளர்ச்சியிலும் தீராத காதல் கொண்ட தேவராஜனின் தனிப்பட்ட முயற்சியில் இந்த இதழ் வெளிவந்தது. பொருளாதார அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு பலரையும் தொடர்புகொண்டு கவிதைகளைப் போராடிப் பெற்று மிக நேர்த்தியான பக்க அமைப்போடு இவர் மௌனைத்தை வெளியிட்டு வந்தார். மூத்த படைப்பாளிகளோடு பல புதியவர்களுக்கும் மௌனம் களம் அமைத்துக் கொடுத்தது. எழுத்தாளர் தினச் சிறப்பிதழாக 168 பக்கங்களில் (ஜூன் - ஆகஸ்ட் 2009) கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளையும் இணைத்து வெளியிட்டது இதுவரை யாரும் மேற்கொள்ளாத ஒரு முயற்சியாகும்.

      ஒவ்வோர் இதழிலும் வரும் கவிதைகளைப் பற்றிய விமர்சனத்தை மறு இதழிலேயே வெளியிட்டுப் படைப்பாளர்களிடம் படைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததும் சிறந்த அணுகுமுறையாகும். மௌனத்துக்கு எழுதத்தொடங்கி தங்கள் கவிதைமொழியில் புதிய தடத்தைக் கண்ட படைப்பாளிகளை காணமுடிகிறது. மௌனத்துக்கான கவிதை எதிர்பார்ப்பைப் புரிந்து, புதிய கவிதைமொழியில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளும் உண்டு. புதிய படைப்பாளிகளை உருவாக்கும் முயற்சியில், கவிதைமீது ஆர்வத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் அடைய முயன்றதை மௌனம்இதழ் மௌனமாகச் சாதித்துக் காட்டியது.

      ம.நவீனின் சிற்றிதழ் முயற்சிகள் முக்கியமானவை. காதல், வல்லினம், பறை எனப் பல இதழ்களில் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார். காதல் மொத்தம் 10 இதழ்கள் (2005 முதல் 2006) வெளிவந்தன. நவீன இலக்கியத்தை நோக்கிஎன்ற இலக்கோடு நேர்த்தியான படைப்புகளோடும் பக்க அமைப்போடும் காதல்வெளிவந்தது. முதல் முறையாக, தீவிர இலக்கியம் குறித்து விரிவான தளத்தில் விவாதங்களும் படைப்புகளும் முன் வைக்கப்பட்டன. இலக்கியம் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் நாளிதழில் இடம்பெறும் ஒரு பகுதி என்ற நிலை மாறி இலக்கியத்துக்கான ஓர் ஆடுகளத்தை காதல்ஏற்படுத்தியது. முதல் முறையாக பல படைப்பாளிகளின் ஆளுமைகள் விரிவாக இதனில் இடம்பெற்றன. நவீன இலக்கியச் சிந்தனை இந்நாட்டில் வளர, இலக்கிய ஆளுமைகளை இங்கு வரவழைக்கும் முயற்சியில் காதல்இறங்கியது.
                  
                                                   
      காதல்இதழ் நின்றுபோனதும் அதுபோன்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற உந்துதலில் ம.நவீன் தம் நண்பர்களின் துணையுடன் வல்லினம்இதழை 2007 முதல் வெளியிட்டார். இலக்கியச் சிற்றிதழுக்கான ஒரு தளம் காதல்இதழில் அமைந்து விட்டதால் அதே தீவிரத்தன்மையோடும் காத்திரத்தோடும் வல்லினம் வெளிவந்தது மீண்டும் பொருளாதாரச் சிக்கல் எழுந்ததால் வல்லினம் 9ஆவது இதழ் முதல் (செப்டம்பர் 2009) இணைய இதழாக வெளிவருகிறது. அச்சு வாகனத்தில் இல்லாத ஒரு வாய்ப்பு இணைய வாகனத்தில் வல்லினத்திற்கு அமைந்தது. மலேசிய படைப்புகளை உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளில் வாழும்  தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் விமர்சனர்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சி இதன்வழி வெற்றி பெற்றிருக்கிறது. வல்லினத்தில் வெளிவரும் படைப்புகள் நூலாக்கம் பெற்றுள்ளன.

      தற்பொழுது, வல்லினத்தின் வெளியீடாக, பறை ஆய்விதழ் (2014) வெளிவருகிறது. குறிப்பிட்ட ஒரு தலைப்பை ஒட்டி பல்வேறு நோக்கிலிருந்து பார்வையைக்  குவித்து அதை ஆய்விதழாகப் பிரசுரமாக்கிப் புதிய வாசிப்புக்களத்தை வல்லினம் குழுவினர் மலேசிய இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காலத்துக்கு ஏற்ற மாற்றமாகவே இதைக்  கருத முடிகிறது.


      

அடுத்து, கே.பாலமுருகனின் முயற்சியில் அநங்கம்’ (மேகம் என்று பொருள்) சிற்றிதழ் ஜூன் 2008 தொடங்கி ஏழு இதழ்கள் வெளிவந்தன. மலேசியத்  தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைப்பது என்ற இலக்கோடு இந்த இதழ் பயணத்தைத் தொடங்கியது. நவீன இலக்கியச் சிந்தனையைக் கொண்ட படைப்புகளை (கவிதை, விமர்சனம், நேர்காணல், சிறுகதை, கட்டுரை) வெளியிட்டது. அநங்கம் சிறுகதைச் சிறப்பிதழ் குறிப்பிடத்தக்கது. இதன் 8ஆவது இதழ் பறைஎன்ற பெயர் மாற்றம் பெற்று ஓர் இதழ் மட்டும் வந்தது. தற்பொழுது களம் இலக்கிய இதழை (பிப்ரவரி, 2015 முதல்) அ.பாண்டியன், தினகரன் ஆகியோருடன் இணைந்து வெளியிடுகிறார். தீவிர இலக்கியம் நோக்கி வாசகனை ஆற்றுப்படுத்த, முதலில் இலக்கியம் மீதான ஆர்வத்தையும் இரசனையையும் ஏற்படுத்தும் நடுநிலை முயற்சியாக களம் திகழ்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் என்ற சூழலில் தேங்கியிருந்த நம் இலக்கியம் 2000ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களின் வருகையால் புதிய நம்பிக்கையைத் தரும் வகையில் மாற்றங்கண்டு வருகிறது. ஆனால், பொருளாதாரச் சிக்கலால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெளிவரும் சிற்றிதழ்கள் நின்றுபோகின்றன. பறை இதழ்போல் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் பரந்த வாசகர் தளத்தை எல்லாச் சிற்றிதழ்களும் ஏற்படுத்த முடியும். களம் முதல் இதழிலேயே தன் எல்லையை எட்டியுள்ளது.

எது உங்கள் இலக்கிய முகம்?” என்று வெளிநாட்டினர் கேட்டால் நாம் எதைக் காட்டப் போகிறோம்?

முகம் அறிமுக இதழில் நான் எழுதிய இந்த வரிகளே நினைவுக்கு வருகின்றன: இந்த முகம் முகமூடி இல்லாமல், அரிதாரம் பூசி நடிப்பு காட்டாமல் உள்ளதை உள்ளவாறு காட்ட வருகிறது. எழுத்து பொழுதுபோக்காய், விலை குறைந்த மலிவுச் சரக்காய் உலவிக்கொண்டிருக்கும் மனிதச் சந்தையில், எழுத்து குறித்த நம்பிக்கையை, அதன் மீது உயர்ந்த மதிப்பை இளையோர் நெஞ்சங்களில் எழுதிட இந்த முகம் வருகிறது.

நம் உண்மையான இலக்கிய முகத்தைக் காட்ட, சிற்றிதழ்கள் கடும் உழைப்பில் உருவாகிக் காத்திருக்கின்றன. அவற்றை அரவணைப்பது இலக்கியத்தை நேசிக்கும் உண்மை வாசகர்களின் முக்கியக் கடமையாகும். செய்வோமா? 


Friday, February 20, 2015

அறிக்கைகள் எழுதி இன்புற்று..


   ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதை ஆர்வத்தோடு தொடங்கவும் சுவைமிகுந்ததாக மாற்றவும் நாளிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  மலேசியாவின் மக்கள் தொகையில் நாம் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் நாளிதழ்கள் எண்ணிக்கையில் முதல் நிலையில் இருக்கிறோம். சிறிய சமூகத்தில் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை ஏழு என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. பிற இனத்தவரோடு ஒப்பிட்டால் நாம் குறைவாகத்தான் வாசிக்கிறோம். இதற்குப் புள்ளி விபரம் தேவையில்லை. நாம் வாழும் சுற்றுச் சூழலை ஆழ்ந்து அவதானித்தாலே போதும்.

      ஏழு தமிழ் நாளிதழ்கள் என்றாலும் அவற்றின் உள்ளடக்கமும் செய்திகளின் வகைமையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தமிழ் நாளிதழ்களை  மலாய், ஆங்கில, சீன நாளிதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ வேறுபாடுகளைக் காணலாம். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அறிக்கைகளைக் கூறலாம். மற்றமொழி நாளிதழ்களில் யாரும் விருப்பம்போல் அறிக்கைகள் வெளியிட முடியாது. அரசியல், சமுதாய இயக்கங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கருத்துகள் செய்திகளாக இடம்பெறும். தலைவர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே நிருபர்கள் நின்றுகொண்டு தேவையானவற்றை மட்டும் அளந்து கொடுக்கிறார்கள். அறிக்கைகள் மிக அரிதாகத்தான் வெளிவரும். அதிலும் நீண்ட அறிக்கைகளுக்கு அறவே வாய்ப்பில்லை.  ஒரு சமுதாயச் சிக்கலென்றால் இரு தரப்பின் கருத்துகளுக்கும் இடமளிக்கிறார்கள். வீணான அறிக்கைப் போருக்கு வாய்ப்பில்லை.  

      ஆனால், தமிழ் நாளிதழ்களோ அறிக்கைகளின் சரணாலயமாகத் திகழ்கின்றன. இயக்கங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எல்லா நிலைப் பொறுப்பாளர்களும் அவரவர் பங்குக்கு அறிக்கை எழுதுகிறார்கள். ஆதரவு அறிக்கை, கண்டன அறிக்கை, சமூக நலன் அறிக்கை என பல்வேறு ரூபத்தில் அறிக்கைகள் வருகின்றன. சில நாள்களில் செய்திகளின் இடங்களை அவை நிரப்பி விடுகின்றன. சிலர் ஒவ்வொரு நாளும் காலையில் நாளிதழ்களைப் புரட்டிவிட்டு அறிக்கை எழுதத் தொடங்கிவிடுகின்றனர். ஓர் இயக்கத்தின் தலைவரைக் காலை பத்து மணியளவில் அவரின் அலுவலகத்தில் சந்திக்கப் போயிருந்தேன். நாளிதழ்களைப் படித்துவிட்டு அப்பொழுதே அறிக்கை எழுதிக்கொண்டிருந்தார். அறிக்கைப் போரில் தம் இயக்கமும் தாமும் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதைபதைப்பு பலரிடம் நிலவுவதை உணரமுடிகிறது. இயக்கத்தின் ஆண்டு அறிக்கையில் அறிக்கைகளையும் செயல் திட்டத்தில் இணைத்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நாளிதழ்களில் ஒரே அறிக்கை மயமாக உள்ளது. சிலர் அறிக்கை எழுதுவதற்கே இயக்கத்தை ஆரம்பித்தார்களோ எனச் சந்தேகமாக உள்ளது.

      அப்படியென்றால் நாளிதழுக்கு அறிக்கை எழுதுவது தவறா என்று நீங்கள் வினவலாம். ஒரு சமுதாயச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தக்க நேரத்தில் அறிக்கைவழி எழுப்பப்படும் குரல்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது. தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் அறிக்கைகள் என்பவை பலரும் ஒன்றுகூடி ஒரு பிரச்சினை குறித்துக் கலந்துபேசி கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் களமாக இருக்கின்றன. வாசகர்கள் சுற்றி நின்று கலந்துரையாடலைக் கேட்டுத் தம் எண்ணங்களோடு அவற்றைப் பொருத்திப் பார்க்கிறார்கள். எத்தனையோ முக்கியமான பிரச்சினைகள் நம் சமூகத்தில் எழுந்தபோது எழுதிக் குவிக்கப்பட்ட அறிக்கைகள் அவற்றின் தீர்வுக்கு வழியமைத்துள்ளன என்பதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, எஸ்.பி.எம். தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்ற பிரச்சினை எழுந்தபோது தேர்வில் 12 பாடங்கள் வேண்டும். தமிழும் இலக்கியமும் பயில வாய்ப்பு வேண்டும் என்று அறிக்கைகள்வழி வைக்கப்பட்ட  கோரிக்கைகள் சிக்கலின் தீர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. மேலும், நாளிதழ்களில் வெளிவரும் அறிக்கைகள்வழி மக்களின் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

      நம் சமூகம் தொடர்பான பிரச்சினைகளின் அலசல்கள் மற்ற மொழி ஏடுகளில் குறைவாக வருகின்றன அல்லது அவ்வப்போது ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளும் அளவில்தான் வருகின்றன. இதன் காரணமாகவும் நமக்குள்ளே விரிவாகப் பேச அறிக்கைகள் பயன்படுகின்றன. அதற்காக, எதற்கெடுத்தாலும் அறிக்கை, எப்பொழுதும் அறிக்கை எனப் பலர் அறிக்கைக் கனவிலேயே இருப்பதுதான் நமக்குள் வருத்தத்தை விதைப்பதாக உள்ளது.

      நாளிதழ்களில் வரும் அறிக்கைகள், அதன் தொடர்பான தரப்பின் பார்வைக்குப் போகிறதா என்பது நாம் இன்னொரு கோணத்தில்  சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக, அரசின் பார்வைக்கு ஒவ்வொரு அறிக்கையின்வழி முன்வைக்கப்படும் சிக்கல்கள் போய்ச் சேருகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சிலும் தமிழ் நாளிதழ்களில் வரும் கருத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? அதற்காக, தமிழ் தெரிந்த அரசு அதிகாரிகள் எல்லா அரசாங்க இலாகாவிலும் நியமனம் பெற்றுள்ளார்களா? இத்தகைய நியமனத்துக்கான பரிந்துரையை நம்மைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளனவா?

      நமக்குள் தீர்த்துக்கொள்ளும் நமக்கான பிரச்சினையெனில் நாம் தமிழில் அறிக்கைகள் எழுதி நாளிதழில் வெளியிடலாம். ஆனால், அரசின் பார்வைக்கு அனுப்பவேண்டுமெனில் தமிழில் மட்டும் எழுதினால் போதுமா? அந்த அறிக்கைகளை நம் தலைவர்கள் படித்துப் புரிந்துகொண்டு நமக்காக சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியுமா? தமிழ் தெரியாத தலைவர்கள் பெருகிவரும் சூழலில் எந்த அறிக்கையைப் படித்து அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள்?  “அறிக்கையெல்லாம் எதுக்குங்க? எஸ்.எம்.எஸே போதும்” என நவீனத்துக்குத் தாவிவிட்ட தலைவர்களிடையே இன்னும் எந்த நம்பிக்கையில் நாம் தமிழில் அறிக்கைகள் எழுதிக் குவிக்கிறோம்?

      எனவே, சிக்கல்களுக்கு விரைந்து தீர்வுகாண தமிழ் நாளிதழ்களுக்கு அறிக்கை  எழுதி அனுப்பியதோடு அதை மலாய்மொழியில் மொழிபெயர்த்து அதன் தொடர்பான தரப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அறிக்கை எழுதியதன் பலனை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் நாம்  எழுதிய அறிக்கைகளை நறுக்கியெடுத்துக் கோப்புகளில் அடுக்கி அழகு பார்த்து நம்மை நாமே பாராட்டிக்கொள்வதால் பயனேதும் விளையாது என்பதை உணரவேண்டும்.

      “தமிழில் எழுதினால் போதாதா? மலாய்மொழியில் வேறு எழுதவேண்டுமா?” எனக் கேட்போரின் பார்வைக்குப் பின்வரும் இரண்டு  நிகழ்வுகளை முன்வைக்கிறேன்.


நிகழ்வு 1

      ஈப்போவைச் சேர்ந்த நம் நாடு நாளிதழ் நிருபர் மு.ஈ ரமேஸ்வரியின் கவனத்துக்கு ஆயர் கூனிங் பகுதி மக்கள் ஈக்களால் எதிர்நோக்கும் பிரச்சினை வருகிறது. குடியிருப்பாளர் பகுதிக்கு அருகிலிருக்கும் கோழிப்பண்ணையிலிருந்து பெருக்கெடுக்கும் ஈக்களால் அங்கிருக்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, மழைக்காலங்களில் நிலைமை மோசமாகி அவர்களின் இயல்பு வாழ்க்கையையும், வியாபாரம் மற்றும் உணவகங்களையும் பெரிதும் பாதித்துள்ளது.  “வீட்டில் நிம்மதியாய் உணவு சாப்பிட முடியவில்லை; தண்ணீர் குடிக்க முடியவில்லை, இதற்கு என்றுதான் தீர்வு பிறக்குமோ எனத் தெரியாமல் தவிக்கிறோம்” என்ற அவர்களின் மனக்குமுறலைச் செய்தியாய் வெளியிட்டிருந்தார் மு.ஈ ரமேஸ்வரி.
     


நாளிதழில் செய்தி வந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை இவரே தாப்பா மாவட்ட சுகாதார இலாகாவின் பார்வைக்குக் கொண்டுபோயிருக்கிறார்.  நாளிதழை வாங்கிப் பார்த்த அதிகாரிகள் “இவ்வளவு மோசமாவா இருக்கு? எங்களுக்கு தெரியாம போச்சே என ஆச்சரியம் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் தாப்பா மாவட்ட கால்நடை இலாகாவின் தலைமை அதிகாரி டாக்டர் சித்தி நோர்சுபாயிடாவைச் சந்தித்து நாளிதழ் செய்தி குறித்த தகவலையும் விளக்கத்தையும் ரமேஸ்வரியே வழங்கினார். விபரங்களைக் கேட்டறிந்த அவர், அது குறித்து பேராக் மாநில கால்நடை இலாகா, மாநில அமலாக்கப்பிரிவு மற்றும் சுகாதார இலாகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் ஒரு வாரத்திற்குள் தீர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவதாக நம்பிக்கை தெரிவித்தார். எதனால் ஈ அதிகரிப்பு ஏற்படுகிறது என இலாகாக்கள் ஆயிர் கூனிங் பகுதிக்கு சென்று ஓர் உடனடி ஆய்வையும் நடத்தும் எனத் தெரிவித்த அவர் கிடைக்கப்பெறும் ஆய்வின் முடிவின்படி அதன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு ஈக்களின் தொல்லையிலிருந்து மக்கள் விடுபட்டிருக்கின்றனர்.

ஈக்கள் பிரச்சினைக்கே இவ்வளவு முயற்சிகள், ஆய்வுகள் என்றால் மற்றப் பிரச்சினைகளுக்கு என்ன நிலைமை என்ன எண்ணிப் பாருங்கள். செய்தியை எழுதிய நிருபரே அதனை மலாய்மொழியில் கடிதமாய் எழுதிக்கொடுத்துத்தான் இதனை அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கிறார். அரசு கோப்புகளில் தமிழ் நாளிதழ்ச் செய்தியை நறுக்கி வைக்க முடியாதே! 

நிகழ்வு 2

ரவாங், சூப்பர் மைண்ட் டைனமிக்ஒருங்கிணைப்பாளரும் தன்முனைப்புப் பேச்சாளருமான மு.கணேசன் மற்றும் அவர்தம் குழுவினரின் அயராத  முயற்சியினால் சிலாங்கூர் மாநில நூலகங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் எழுதிய 81 நூல்களை இடம்பெறச் செய்யும் முயற்சி 2013இல்  வெற்றி பெற்றது. நூலக இலாகா நூல்களை விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டது.  ஆனால், கடந்த ஆண்டு,  9 நூலகங்களுக்கு மட்டும், தலா இரண்டு நூல்களாக 18 நூல்கள் மட்டும் போதும் என அறிவித்தது. நூலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பெரும்பாலான நூலகங்களில் தமிழ் வாசகர்களின் வருகை குறைவு என்பது கண்டறியப்பட்டதாம். இந்த அறிவிப்பு எழுத்தாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும், சூப்பர் மைண்ட் டைனமிக் இயக்கம் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து  எழுத்தாளர்களை, சமூக இயக்கங்களை அறிக்கை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தது. நாளிதழில் பல அறிக்கைகள் வந்தன. சிலர் மலாய் மொழியில் நேரடியாக சிலாங்கூர் மாநில நூலக இலாகாவுக்கு மின்னஞ்சல் வழி முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். நாளிதழ் அறிக்கைகளை மொழிபெயர்த்ததோடு நாளிதழ் செய்திகளையும் தலையங்கத்தையும் மாநில  மந்திரி பெசாரின் பார்வைக்கு அனுப்பினார் மு.கணேசன்.



அதன் பிறகே, மந்திரி பெசாருக்கே இப்படியொரு பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, கல்விப்பகுதிக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரிடம் “வாங்கும் நூல்களின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?” என வினவியிருக்கிறார். அவர், “அப்படியா? ஏன் குறைக்கப்பட்டது?” என மாநில நூலக இலாகா இயக்குநரிடம் கேட்க, அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, பினாங்கு போயிருந்த மு.கணேசனை விரைந்து வரச்சொல்லி, கலந்துபேசி, 79 நூல்கள் ( 2 நடமாடும்  நூலகங்கள் செயல்படாததால்) வாங்கும் திட்டத்தைத் தொடர்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்பொழுது சிலர் நாளிதழில், பொங்கி எழுவோம் என வீரவசனம் பேசுவதுபோல இந்தப் பிரச்சினையிலும் அறிக்கைகளை எழுதிவிட்டு நம் கடமை முடிந்ததாகச் செயல்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பிறந்திருக்குமா?

நம் சமூகத்தில் மட்டும் விவாதிக்கும், பேசித் தீர்க்கும் பிரச்சினையெனில் தமிழில் எழுதுவோம். அவை அரசின் காதுக்கும் எட்டவேண்டிய பிரச்சினையெனில் தமிழில் அறிக்கை எழுதியதோடு அரசின் பேசுமொழியாக இருக்கும் மலாய் மொழியிலும் எழுதி அது தொடர்பான தரப்புக்கு அனுப்புவோம்.

தமிழில் மட்டும்தான் எழுதுவோம் எனச் சிலர் அடம்பிடிக்கலாம். ‘அறிக்கைகள் எழுதி இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியார் பராபரமே’ என இவர்களை ஒதுக்கிவிட்டு, பிரச்சினைகளின் முடிச்சவிழ்க்கும் செயல்களில் மற்றவர்கள் முனைப்புக் காட்டவேண்டும். தமிழ் தெரியாத, தமிழ் நாளிதழ்கள் வாசிக்காத தலைவர்களை இனி நம்பிப் பயனில்லை.



Sunday, February 15, 2015

தங்கமீன் பதிப்பகமும் மலேசிய நூல்களும்



தாம் எழுதிய  படைப்புகளை நூலாக்கிப் பார்ப்பதுதான் எழுத்தாளர் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது துன்பக் கனவு போன்றது. படைப்புகளை எழுதி ஏடுகளுக்கு அனுப்பிவிட்டு, அவை அச்சு வாகனத்தில் வருவதைக் காண்பதோடு பலர் மனநிறைவு அடைகிறார்கள். அவற்றை நூலாக்குவதில் உள்ள சிரமத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய முயற்சிகளில் ஈடுபடாதவர்கள் இங்கு அதிகம். நூலைப் பதிப்பிப்பதோடு வேலை முடிவதில்லை. தொடர்ந்து,  நூல் வெளியீடு, நூல் விற்பனை என இருப்பதால் நமக்கேன் வம்பு எனப் பெரும்பாலோர் நூல் கனவைக் கைவிட்டு ஒதுங்கிவிடுகின்றனர்.

இந்நாட்டில் மலாய் மொழியில் எழுதுவோருக்கு இத்தகைய சிரமங்கள் ஏதும் இல்லை. எழுதுவோடு அவர்கள் கடமை முடிந்து விடுகிறது. அவர்கள் படைப்புகளைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு நூலாக்கி விற்பனை செய்வதை மலாய்மொழி வளர்ச்சிக் கழகம் (டேவான் பகாசா டான் புஸ்தாகா) மேற்கொள்கிறது. சிங்கப்பூரில் தேசியக் கலை மன்றம் (National Art
council) மூலம் தமிழ் எழுத்தாளர்கள் நிதி உதவி பெற்று நூல்களை வெளியிடுகிறார்கள்.

மலேசியாவில் நம் தமிழ் எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட ஏன் அரசு  உதவுவதில்லை? அதற்கான முயற்சியை நம் அரசியல் கட்சிகளோ, தமிழ் எழுத்தாளர் சங்கமோ இதுவரை மேற்கொண்டதாகத் தகவல் ஏதும் இல்லை. சக்தி அறவாரியம் மூலம், டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் பிரதமரை அணுகி நிதி உதவிபெற்று, இதுவரை மொத்தம் 15 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த முயற்சி, தேர்தல் காலத் திட்டமா  அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



டேவான் பகாசா டான் புஸ்தாகா போன்ற ஒரு மொழி மையத்தை நாம் அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் நூல்களை வெளியிடும் பணி செம்மையாக நடைபெறும் என்ற சிந்தனையை அமரர் முனைவர் கலியபெருமாள் போன்ற மூத்த படைப்பாளிகள் முன்வைத்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். அவரவரும் அரசிடம் செயல்திட்ட வரைவைச் சமர்ப்பித்து நிதி பெறுவதில் முனைப்பு காட்டுகிறோமே தவிர, பயன்நல்கும் நிலையான திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. எனவே, நம் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு இன்னல்கள் அடுத்த நூற்றாண்டுக்கும் தொடரும் எனத் திண்ணமாய் நம்பலாம்.

உமா பதிப்பகம், ஜெயபக்தி, வல்லினம் போன்ற பதிப்பகங்கள் இந்நாட்டு நூல்களை அவ்வப்போது  பதிப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகமும் இணைந்துள்ளதை மகிழ்வோடு இங்குப் பதிவு செய்கிறேன். இந்தத் தங்கமீன் பதிப்பகத்தை நடத்தி வருபவர் தமிழகத்தில் பிறந்த பாலு மணிமாறன்.

அவரை இங்கு, அப்பாவி சோழன் என்றால் பலருக்கும் தெரியும். 1990களில் மக்கள் ஓசையில் வாரம் ஒரு சிறுகதை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இவர். அரும்பு வார ஏட்டில் பி.ஆர்.இராஜனோடு கைகோர்த்துப் பயணித்தவர். அவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி  (எங்கே நீ வெண்ணிலவே?) அந்த நூல் வெளியீட்டை ஆதி.குணனன் தலைமையில் இங்கு வெளியிட்டவர். எம்.ஏ.இளஞ்செல்வனோடு  இலக்கியச் சர்ச்சையிலும் முனைப்பு காட்டியவர். இரண்டு ஆண்டுகள் மலேசியாவில் வாழ்ந்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலையிட மாற்றலாகிச் சென்றவர்.

இடம் மாறினாலும் இதயம் ஒன்றுதானே? அதிலும் இவரின் மனமோ இலக்கிய மனம். அங்கும் இலக்கியப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். முதலில், தங்கமீன் இணைய இதழைத் தொடங்கினார். அதில், சிங்கப்பூர், மலேசிய இலக்கிய ஆக்கங்களை வெளியிட்டதோடு, அங்குள்ள சமூக, கலை, ஊடக, விளையாட்டுத் துறைகளில் சாதித்துள்ள தமிழர்கள் பற்றிய அரிய தகவல்களைப் பதிவேற்றினார். அது இணைய வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு தங்கமீன் வாசகர் வட்டத்தைத் தொடங்கினார். விரிவான களத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தவும் வாசகர்களிடையே சந்திப்பு – கலந்துரையாடல் வழி படைப்பாற்றலை வளர்க்கவும் அது கைகொடுத்தது. சிறுகதைப் போட்டி, கவிதைப்போட்டிகளும் நடத்தித் தேர்வாகும் படைப்புகளை நூலாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தமிழகப் படைப்பாளரகளை வரவழைத்து இலக்கிய நிகழ்வுகளும் நூல் வெளியீடுகளும் நடத்தினார். இப்பொழுது தங்கமீன் வாசகர் வட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் எம்.சேகர். இவர் நம் நாட்டு பூச்சோங் எம்.சேகர்தான், இப்பொழுது சிங்கப்பூரில் தமிழாசிரியர்.



தங்கமீன் வாசகர் வட்டத்தின் இலக்கியச் செயல்பாடுகளே தங்கமீன் பதிப்பகம் உருவாகக் காரணமாக அமைந்தன. இதன் மூலம் சிங்கப்பூர், மலேசிய படைப்புகளைத் தேர்வுசெய்து நூலாக்கும் பணியில் இறங்கினார் பாலு மணிமாறன். இதுவரை மொத்தம்  30 நூல்கள். அவற்றில் மலேசிய நூல்கள் 11. பீர்.முகம்மது, கோ. புண்ணியவான், கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், ந.பச்சைபாலன், வாணி ஜெயம், சீ.முத்துசாமி, பெ.சூரியமூர்த்தி, ஆகியோரின் நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல் உருவாக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தித் தரமான வடிவமைப்போடு நூல்களைப் பதிப்பித்து  வருகிறார். இதன் காரணமாகத் தங்கமீன் பதிப்பக நூல்கள் தனிக் கவனத்தைப் பெறுகின்றன. 2013ஆம் ஆண்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதை வென்ற மலேசியா, சிங்கப்பூரின் இரண்டு சிறந்த நூல்களும் இவரின் பதிப்பித்ததாகும்.

சிங்கப்பூரைத் தவிர்த்துத் தமிழக மண்ணியிலும் தாம் பதிப்பிக்கும் நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பாலு மணிமாறன். அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூரின்  பெண் எழுத்தாளர்களான கமலாதேவி அரவிந்தன், நூர்ஜஹான் சுலைமான், சூரிய ரத்னா, ரம்யா ரமேஸ்வரன் ஆகிய நால்வரின் ஆறு நூல்களின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் கல்கி ஆசிரியர் வெங்கடேஷ், பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்கமீன் முயற்சியைப் பாராட்டினர்.

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலத்தில் சென்னையில் மலேசியப் படைப்பாளரிகளின் மூன்று நூல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வையும் பாலு மணிமாறன் தனியாக ஏற்பாடு செய்தார். சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் (நாவல்கள்), பந்திங் சூரியமூர்த்தியின் பெட்டி வீடு (கவிதைகள்), நான் எழுதிய இன்னும் மிச்சமிருக்கிறது (கவிதைகள்) ஆகிய நூல்களே அவையாகும். அந்நிகழ்வில் கலந்துகொண்டு சீ.முத்துசாமியின் நாவல்களை ஆய்வுசெய்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, தமிழக எழுத்தாளர்களுக்கு நிகரான படைப்பாளியாக சீ.முத்துசாமி திகழ்வதை வியந்து பாராட்டினார்.

தங்கமீன் பதிப்பகம் வழி, நம் மலேசிய நூல்கள் சிங்கப்பூர், தமிழகம் ஆகிய இடங்களில் வாசகரிடையே அறிமுகமாவது நம் இலக்கியத்தை பரந்த வாசகத் தளத்துக்கு அழைத்துச் செல்லும் சிறந்த முயற்சியாகும். பீர்.முகம்மது, ஜாசின் தேவராஜன், கே.பாலமுருகன் ஆகியோரை அழைத்துச் சிங்கப்பூரில் அவர்களின் நூல் வெளியீடுகளை நடத்தியுள்ளார் பாலு மணிமாறன்.


சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைப்பது கற்களாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட ஜோகூர் பாலம். அதுமட்டுமல்ல. இன்னொரு பாலமும் உண்டு. அஃது இலக்கியப் பாலம். இரு நாடுகளுக்கிடையே அத்தகைய இலக்கியப் பால நிர்மாணிப்பில் தங்கமீன் பதிப்பகமும் பாலு மணிமாறனும்  முனைப்பு காட்டி வருவது பாராட்டுக்குரியது.

இந்த ஆண்டு மேலும் பல தரமான மலேசிய நூல்களை வெளியிட தங்கமீன் பதிப்பகம் விரும்புகிறது. தரமான  படைப்புகள் தங்களிடம் இருப்பதாக நினைப்பவர்கள் பாலு மனிமாறனோடு தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்  +6582793770  (thangameen@hotmail.com)



Saturday, February 14, 2015

ம.இ.காவில் பிரளயம் : இழப்புகளின் காலம்



என்ன நடக்கிறது ம.இ.கா.வில்? கட்சியின் பதிவு ரத்தாகிவிடுமா?  ஏன் ஏடுகளில் இத்தனை அறிக்கைகள்? யார் சொல்வது உண்மை? தலைவர் ஏன் எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்?  மறுதேர்தலை நடத்துவதில் என்ன பிரச்சினை? ஆறு லட்சம் உறுப்பினர்களும் அரசியல் அகதிகளாக ஆகிவிடுவார்களா?

ம.இ.காவின் உறுப்பினரோ இல்லையோ, இந்நாட்டின் ஒவ்வோர் இந்தியனும் மனம் நொந்து கேட்க விரும்பிய கேள்விகள் இவையாகத்தான் இருக்கும். சிலர் தங்களின் ஆதங்கத்தை ஏடுகளில் அறிக்கைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் காட்சிகளை ரசித்து மகிழ்கிறார்கள். பெரும்பாலோர் முகஞ்சுழித்து அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்துபோகும் நாளுக்குக் காத்திருக்கிறார்கள். ஆனால், சிக்கல்கள் கையாளப்படும் நிலையைப் பார்க்கும்போது எல்லாம் தீர்வதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும்போல்தான் தெரிகிறது.

ம.இ.கா. பத்தோடு பதினொன்றாக முளைத்த அரசியல் கட்சியல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், ஆகஸ்ட் 1946இல் தோற்றம் கண்ட கட்சியாகும்.  அம்னோ, ம.சீ.சாவோடு இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்த கட்சி. இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், சமயம், சமூக வளர்ச்சிக்காக  அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சி. ஆனால், 79 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட இக்கட்சியின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது எல்லாம் பொய்யாய், கற்பனையாய், பழங்கதையாய்ப் போய்விடுமோ என்ற வருத்தமே மேலோங்குகிறது.

எல்லாச் சிக்கல்களுக்கும் பிள்ளையார் சுழியிட்டது ம.இ.காவில் நடந்த தேர்தல்தான். உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவைக்கான தேர்தலை முறையாக நடத்தியிருந்தால் பிரச்சினைகள் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது. தேர்தலைக்கூட முறையாக நடத்தத் தெரியாத கட்சி என்ற அவப்பெயர் சூழ்ந்து கட்சியின் தோற்றத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட விதம் ஒரு திகில் நாடகத்தைப் பார்க்கும் பரபரப்பு உணர்வை எல்லாரிடமும் ஏற்படுத்திவிட்டது. வாக்குகளை வாங்கப் பணம் தண்ணீராய் அள்ளி இறைக்கப்பட்டதும் கட்சியின் அடுத்தக் கட்ட தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சிக்குச் சிறப்பைச் சேர்க்காது.

நம் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் தலைமைத்துவப் போராட்டம் பெரும் சிக்கலாய் உருவெடுத்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் தொடங்கி, கோயில் நிர்வாகம், சமூக இயக்கங்கள், அரசியல்வரை பதவிகளுக்காகப் அதிகமாகப் போராடுவதும் அடித்துக்கொள்வதும் இயல்பாகிவிட்டது. உளவியல் பார்வையில், இந்திய சமுதாயத்தின் மனப்போக்காக, தனித்த அடையாளமாக,  இயல்பான ஓர் கூறாக இது மாறியுள்ளது. சமுதாய நலனை முன்நிறுத்தும் சிறந்த பண்புகளைப் போற்றும் மனப்பாங்கு இல்லை. விட்டுக்கொடுத்தல், அனைவரையும் அரவணைத்தல், மாற்றுக்கருத்தை மதித்தல், குறை பொறுத்து நிறை காணல், பதவியில் நீண்ட காலம் ஒட்டிகொள்ளாமல் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளித்தல் என எத்தனையோ தலைமைத்துவப் பண்புகள் மறைந்துவிட்டன. தலைமைத்துவப் பண்புகளைப் போற்றாத சமுதாயம் மீட்சி பெற வாய்ப்பில்லை.



கணவன் -  மனைவி உறவில் எழும் சிக்கல் போன்றதுதான் ஓர் அரசியல் கட்சியில் அதன் தலைவர்களிடையே எழும் சிக்கல்கள். கணவன் மனைவியிடையே எழும் ஊடல் இயல்பானது; மிகவும் அவசியமானது. ஆழமான அன்புக்கும் நெருங்கிய உறவுக்கும் அதுவே பாலம் அமைக்கிறது. ஆனால், அஃது உணவில் உப்புபோல் சிறு அளவாக இருக்க வேண்டும். உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் என்கிறார் வள்ளுவர். ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம், உணவில் இடும் உப்புபோல் சிறு அளவாக இருக்கவேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.

இன்று, ம.இ.கா.வில் நடக்கும் குளறுபடிகளுக்கு இது மிகவும் பொருந்துகிறது. தலைவர்களிடையே பிணக்கும் கருத்து வேறுபாடுகளும் தோன்றுவது இயல்பு. ஆனால், அது உப்பாக இருக்கவேண்டுமே தவிர அதுவே உணவாகிவிடக்கூடாது. தலைவர்கள். சிக்கல்களை விரைந்து தீர்க்க முயல வேண்டும். அதைவிடுத்து, காலத்தை நீட்டித்த காரணத்தால் மனைவி பலமுறை கைப்பேசியில் அழைத்தும் குறுந்தகவல் அனுப்பியும் கணவன் வீராப்புக் கோபம் காட்டி முறுக்கிக்கொண்டு நின்றதால் இன்று அக்கம் பக்கத்தார், உறவு என்றில்லாமல் நாடே வேடிக்கை பார்க்கும் நிலையில் குடும்பச் சண்டை பெரும்பகையாய் மாறிவிட்டது.

கட்சி நடத்திய தேர்தல் செல்லாது எனச் சங்கங்களின் பதிவதிகாரி கடிதம் அனுப்பிய பிறகு, விரைந்து செயல்பட்டுத் தேர்தல்களுக்கு நாள் குறித்து விரைந்து செயல்பட்டிருந்தால் கால விரயம் ஏற்பட்டு வீண் அறிக்கைப் போர்களும் நிகழ்ந்திருக்காது. இது, ஏதோ மேல்நிலைத் தலைவர்களை மட்டும் பாதிக்கும் சிக்கல்கள் அல்ல. மேல்நிலைத் தலைவர்களிடையே ஏற்படும் மோதலும் பிளவும் கீழ்நிலை வரை (மாநிலம், தொகுதி, கிளை) பெரும் பிளவையும் பிணக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்பதை பலரும் உணர்வதில்லை. சாமிவேலு – சுப்ரா மோதல்கள் சமுதாயத்தை இரு கூறாக்கி நீண்ட காலம் பிளவுபடுத்தியதை மறுக்கமுடியுமா? அதேபோன்ற சமுதாயப்பிளவு இப்பொழுது தொடங்கியிருக்கிறது. ம.இ.கா. வளாகத்தில் ஒற்றுமைப் பொங்கலைக் கொண்டாடுவது சிறப்புதான். ஆனால், நாடு முழுமையும் சமுதாயத்தில் பல பிரிவாய் வேற்றுமையால் மீண்டும் சிதறத் தொடங்கியுள்ள ம.இ.கா. உறுப்பினர்களை எப்படி ஒருங்கிணைப்பது?

சில வேளைகளில் மௌனமொழி சிறந்த மொழிதான். மறுக்கவில்லை. ஆனால், கட்சியின் தலைவர் பல வேளைகளில் மௌனம் காப்பது பெரும் குழப்பத்துக்கு இட்டுச்சென்றுள்ளது. என்ன நடக்கிறது என ஏடுகளையும் தகவல் ஊடகங்களையும் நாடுவோர் என்ன நடக்கிறது?’ எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இப்படியிருக்குமோ? இல்லை அப்படியிருக்குமோ?’ என ஏதோ முடிவுகளுக்கு வந்துள்ளனர். குறிப்பாக, இப்படியே போனால் நாம் அரசியல் அகதிகள் என்ற கூற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை பலரின் அறிக்கைகள் பிரதிபலித்தன. அகதிகள் என்ற சொல் பயந்த இயல்புகொண்ட சமுதாயத்தை மேலும் பயமுறுத்திவிட்டதது. இதன் விளைவாய் இன்னொன்றையும் காணலாம். தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் பலருக்கு பெரும் வாய்ப்பாய்ப் போய்விட்டது. அவரவரும் விருப்பத்துக்கு அறிக்கை வெளியிட்டு ஏடுகளில் கோபமுகம் காட்டுகிறார்கள். இதுவும் பெரும் பிளவுக்கு வழியமைக்கும் என்பதை மறுக்க முடியாது. அவரவரும் அறிக்கை எழுதி, அறிக்கை படித்து இன்புற்றியிருப்பதன்றி வேறொன்றும் அறியார் பராபரமே எனப் பாடத்தோன்றுகிறது.



ம.இ.காவில் ஏற்பட்டுள்ள குழப்பம் ம.இ.கா. என்ற கட்சியை மட்டுமல்ல. நம் சமுதாயத்தையும் பாதித்துள்ளது.  பல்லின மக்கள் வாழும் சூழலில், நாம் மரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ நம் செயல்கள்தாம் அடித்தளம். நாம் சூழலை மறந்துவிட்டுக் அடிதடிச் சண்டையில் மும்முரம் காட்டினால், அதை அப்படியே படம்பிடித்து முதல் பக்கச் செய்தியாக்க பிறமொழி ஏடுகள் காத்திருக்கின்றன. அதுதான் அண்மையில் நடந்தது. ம.இ.கா. கூட்டங்களில் நாற்காலிகள் பறந்த காலங்கள் உண்டு. அந்தக் காட்சிகள் அரங்கேறும் காலம் மீண்டும் திரும்பும்போல் இருக்கிறது. அந்தக் காட்சிகளுக்காக கேமராக்கள் பசியோடு காத்திருக்கின்றன.

போர் மேகங்கள் உடனே விலகாமல் ம.இ.காவை சூழ்ந்துகொண்டு இருப்பதால் இன்னும் எத்தனையோ இழப்புகள் உள்ளன. தங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக ம.இ.காவின் உதவியை நாடி வருபவர்களைக் கவனிப்பதற்கு நேரமேது? ஒவ்வொரு நாளும் முப்பது நாற்பது பேரைச் சந்தித்துப் பிரச்சினைகளைத் தீர்த்த காலம்போய் “வேணாம்பா, அவங்களே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. நாம போனா எங்க கவனிக்கப்போறாங்க” என ஒதுங்கிப்போகும் நிலைதான் இன்றைய நிலை.

ம.இ.கா. தலைவர்களின் நேரம், உழைப்பு, பணம் என அனைத்தும் குவிமையமாக ஒன்றை நோக்கியே செலவழிக்கப்படுகின்றன. நாடு முழுதும் உள்ள மாநில, தொகுதி, கிளைத் தலைவர்கள் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து விளக்கக்கூட்டங்கள், ஆதரவுக்கூட்டங்கள், எதிர்ப்புக்கூட்டங்கள், சந்திப்புக் கூட்டங்கள் எனப் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிக் களைத்துத் திரும்புகிறார்கள். பொங்கி எழுவோம் என வீர முழக்கங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. ஆக்கத்திற்குச் செலவழிக்க வேண்டிய அனைத்தும், இன்று நெல்லுக்கு இறைக்கவேண்டிய நீரைப் புல்லுக்கு இறைத்த கதையாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

மிக முக்கியமான காலக்கட்டத்தில், நம் இந்திய சமூகம் தொடர்ந்து எல்லாவிதமான இன்னலிலிருந்து மீட்சி அடைவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து உரிமைக் குரலெழுப்பிப் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால், நாம் சூழலின் தீவிரத்தன்மை புரியாமல் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறோம்.  

எத்தனை இழப்புகள் நமக்கு. கேட்டுப்பெற வேண்டிய உரிமைகளை இழக்கிறோம். சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழக்கிறோம். இன்னும் மிச்சமிருக்கிற தன்மானத்தை இழக்கிறோம். ம.இ.கா. என்ற கட்சியின் மீது இந்திய சமூகம்கொண்ட ஆதரவை இழக்கிறோம். நம் சமூகத்தின், இழப்புகளின் காலமாக மட்டுமே இன்றைய நிலையை என்னால் அவதானிக்க முடிகிறது.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு? செயலாற்றல்மிக்க, நாவன்மைமிக்க, அனைவரையும் அரவணைக்கும் தன்மைமிக்க, பிரச்சினைகள் வந்தால் விரைந்து தீர்க்கும் புதிய தலைமைத்துவம் ம.இ.காவை வழிநடத்தும் நாள் எந்நாளோ, அந்நாளே சமூகத்தின் விடிவுக்கு வழிகாட்டும் நாளாக மலரும். அந்த நாளுக்காகச்  சமூகம் காத்திருக்கிறது.