நம் குரல்

Sunday, March 8, 2015

காக்க காக்க மிதவாதம் காக்க


      எப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் இப்போது தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகள் யுத்தம் ஓயாத இரத்த பூமியாக முகம் மாறியிருக்கின்றன. மனித உயிர்கள் மதிப்பற்றுப் போய்விட்டன. ஒவ்வொரு நாளும் மனிதர்கள் ஆடு, மாடுகளைப்போல் கழுத்தறுக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்படுகிறார்கள் அல்லது எரியூட்டப்படுகிறார்கள்.  இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் முனைப்பில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை முற்றாகத் துடைத்தொழிக்கும் முயற்சியில் இவற்றைச் செய்கிறார்கள். இவர்கள் முயற்சியின் முனை முறிக்க, பன்னாட்டு இராணுவம் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அவ்வளவு விரைவில் முடிந்துபோகும் நாடகமாக இது தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது.

      உலகப் பந்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயம் என்று நாம் ஒதுங்கிப் போய்விட முடியாது. பக்கத்து ஊர் முச்சந்தியில் நிகழ்ந்த சண்டை நம் தெருவுக்கும் வந்து  அடுத்து நம் வீட்டுக்குள் நுழையும் தருணத்துக்கும் வந்துவிட்டது. அண்மையில் ஜோகூரைச் சேர்ந்த 14 வயது பெண் எகிப்துக்குச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. அங்கிருந்து சிரியா சென்று அவர் தன் காதலனுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளோடு இணையத் திட்டமிட்டிருந்தார். தீவிரவாதிகளின் சித்தாந்தம் எந்த அளவுக்கு நம் நாட்டின் இளையோரிடையே ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்று போதும்.

      காவல்துறையின் கணக்குப்படி இதுவரை ஏழு மலேசியப் பெண்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணையச் சென்றுள்ளனர். ஆனால், அதே எண்ணிகையிலான பெண்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுளனர்.  இதுவரை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடுவதாகத் தொடக்கத்தில் செய்தி வந்தது. இப்போது, அந்த எண்ணிக்கை 50 ஆக இருக்கலாம் என்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயரும் எனத் தெரிகிறது.  கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி, மலேசியத் தொழிற்சாலை ஊழியரான அகமட் தர்மிமி மர்ஜூக்கி, தற்கொலைப் படையினரோடு சேர்ந்து ஈராக் இராணுவ தலைமையகத்தை வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தைக்கொண்டு தாக்கி வெடிக்கச் செய்து மாண்டுபோனபோது, இங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

      அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாதத்தினால் ஈர்க்கப்பட்ட 19 பேர்  பாதுகாப்பு குற்றச்செயல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள இரவு விடுதிகள், மதுபானத் தொழிற்சாலைகள்  போன்றவற்றின்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கூறிய சம்பவங்கள் மூலம், தீவிரவாதமும் பயங்கரவாதமும் மக்களின் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்துவரும் ஆபத்தை உணர்ந்த அரசு, நாடாளுமன்றத்தில் வெள்ளையறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன் மூலம்


நடப்பிலிருக்கும் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்துவதோடு குற்றம் தடுப்புச் சட்டத்தையும் முன்மொழிந்தது.  தீவிரவாதத் தடுப்புச் சட்டம் இம்மாதம் நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      அரசாங்கத்தின் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கை, இங்குத் தீவிரவாதத்தின் வேகத்தைக் குறைக்க முடியுமா என்ற ஐயத்தை எழுப்புகிறது. இங்குப் பெருகிவரும் சம்பவங்களும் கைது நடவடிக்கைகளும் இதனை மெய்ப்பிக்கின்றன. காரணம் என்ன? தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்ப யாரும் நம் நாட்டு எல்லையைக்  கடக்க வேண்டியதில்லை. இணையதளங்கள், முகநூல் பக்கங்கள் வாயிலாக, இளையோரின் அறைக்குள் நுழைந்து அவர்களை மிக நூதனமாக மூளைச் சலவை செய்து,  தங்கள் இயக்கத்தில் இணைந்து இறைவனின் அருட்கொடையைப் பெறுமாறு ஈர்க்கப்படுகிறார்கள். இதனால்தான் அரசின் தீவிர முயற்சிகள் பலனளிக்காமல் போகின்றன. தீவிரவாதத்தில் இணைந்தாரின் புள்ளி விபரங்களை மட்டும் தரமுடிகிறது. பலரைத் தடுக்க முடியாமல் போகிறது.

      அண்மையில்,  சீனப் புத்தாண்டின்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் பாணியில் முகமூடியணிந்த நால்வர் மலேசிய நீதிமன்ற நடவடிக்கையில் மனநிறைவு கொள்ளாது நீதிமன்றங்களைத் தாக்கப்போவதாக வீடியோ பதிவின் மூலம் மிரட்டல் விடுத்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் எனச் சந்தேகிப்படும் அவர்களில் இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அதனையடுத்து, காவல்படைத் தலைவரைக் கொல்லப்போவதாக இன்னொரு வீடியோ பதிவு வெளியானது. பல்கலைக்கழக மாணவர்களும் தீவிரவாதச் சித்தாந்தம் விரித்த வலையில் சிக்கத் தொடங்கிவிட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது.

      நிலைமை மோசமாகாமல் தடுப்பது எப்படி? இணைய தளங்களில் தீவிரவாதிகள் மேற்கொள்ளும் பிரச்சார பாணியைப் பின்பற்றித் தீவிரவாதத்தின் பொய்முகத்தை, அவர்களின் முகமூடியைக் கிழித்து வெளிச்சம்போட்டுக் காட்டுவதைத்  தவிர வேறு வழியில்லை. மேடைப்பேச்சும் சமய உரைகளும் இந்த விஷயத்தில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஆனால், இணையத்தள போரில் தீவிரவாதிகளோடு மோதி வெற்றிப்பெற முடியுமா? சந்தேகம்தான். அவர்களின் நூதனப்போரில் இதுவரை நாம் தோல்வியைத்தான் தழுவி வந்துள்ளோம்.
     
மாற்றுவழிகளையும் சிந்திக்க வேண்டிய சூழலில் உள்ளோம். தன் மதத்தின் மீதுகொண்ட அதிதீவிர பற்றும் தவறான வழிகாட்டல்களும் ஒருவரை மற்ற மதத்தாரை எதிரிகளாகக் காணும் மோசமான நிலையை உருவாக்கிவிடும். பல்லின மக்கள் வாழும் மலேசியச் சூழலில் இத்தகைய மனப்போக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். ஒரே மலேசியா என்ற கொள்கைவழி இன ஒற்றுமையை வளர்க்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இத்தகையோரின் செயலால் வீணாகிவிடும். எனவே, மக்களின் மனங்களில் பிற மதம் பற்றிய தவறான எண்ணங்கள் விஷவிதைகளாகப் பதியமாவதை அரசு தடுக்கும் முயற்சியில் முனைப்பு காட்ட வேண்டும். ஒரு தரப்பினர் மற்றத் தரப்பினரின் மதம், இனம், பண்பாடு பற்றி இழிவுசெய்தால் வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து அத்தகைய செய்கையை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். அவர்கள் அரசியல் தலைவர்களாகவோ, பொது இயக்கங்களின் பொறுப்பில் உள்ளவர்களோ இருந்தாலும் கடும் சட்ட நடவடிக்கை வேண்டும்.


      தீவிரவாதமும் பயங்கரவாதமும் அழிவைத்தான் கொண்டுவரும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சிகள் தேவை. மிதவாதம் மலேசியர்களின் வாழ்க்கை முறையாக மாறினால் இங்குத் தீவிரவாதத்தின் வேரை அறுக்க முடியும். அதற்கான முயற்சியை யார் மேற்கொள்வது? ஸ்டார் ஆங்கில நாளிதழ், அண்மைய காலமாக, மிதவாதத்தின் குரல் (voices of moderation) என்ற இயக்கத்தைத் தொடங்கி, அதன் தொடர்பான கட்டுரைகளையும் அந்த  இயக்கத்துக்குக் குரல் கொடுக்கும் பலரின் கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மலாய்ச் சமூகத்தின் முக்கியமான 25 பேர் கையெழுத்திட்ட கடிதம் மூலமாக இந்த மிதவாத இயக்கத்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

      மலேசியாவில் தீவிரவாதத்தின் குரல் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ள சூழலில் இந்த அணுகுமுறை சிறந்ததொன்றாகக் கூறலாம். பேச்சுரிமை என்ற போர்வையில் சக மலேசியர்களின் மதத்தையும் இனத்தையும் மொழியையும் பண்பாட்டினையும் இழிவுசெய்யும் போக்கினை இந்த இயக்கம் கண்டிக்கிறது. ஒரு சிலரின் அடாவடியான பேச்சை எல்லாரும் வேடிக்கை பார்த்துப் பேசாமல் இருப்பதால் அதுபோன்ற தீவிரவாத பேச்சு தொடர்கிறது. மலேசியர்கள் ஒருங்கிணைந்து தீவிரவாதக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இங்கு இனங்களிடையே தொடர்ந்து நல்லிணக்கம் நிலவும். அந்த முயற்சியை ஸ்டார் ஆங்கில நாளிதழ் முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து, பலர் இந்த இயக்கத்துக்குத் தங்களின் ஆக்ககரமான கருத்துகளை வழங்கி வருகின்றனர்.
ஓர் இனம் மற்ற இனத்தின் மதம் பற்றிய அறிதலும் புரிதலும் கொண்டிருக்க வேண்டும். மற்ற மதங்களை இழிவாக நினைக்காத மனப்போக்கினை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் தீவிரவாதத் தீப்பொறியைக் கொளுத்திப்போட ஓர் அரைகுறை சமயவாதியால் எளிதில் முடியும்.

நம் நாட்டைப் பேரிடரோ பெருந்துன்பமோ சூழ்ந்தால் அப்போது தீவிரவாதம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துவிடும். அண்மையில் ஒரு மாத காலம் சில மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தபோது யாரும் தீவிரவாதம் பேசாமல் ஒருங்கிணைந்து மதம், இனம், மொழி பாராமல் சகோதரத்துவத்தோடு உதவிக்கரம் நீட்டினர். வெள்ளம் வடிந்தது. மீண்டும் மிரட்டும் பேச்சும் அச்சுறுத்தும் கருத்தும் மிரட்டும் தொனியும் தலைகாட்டத் தொடங்கிவிட்டன.

தீவிரவாதம் தீது என்ற தலைப்பில் முன்பு நான் எழுதிய கவிதையின் சில வரிகள் இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.

தேசிய கீதங்களையெல்லாம்
உலக மயமாக்குவோம் இப்படி:

காக்க காக்க
அகிம்சை காக்க

போக்க போக்க
தீவிரவாதம் போக்க

நீக்க நீக்க
மதவெறி நீக்க

நோக்க நோக்க
ஒன்றாய் நோக்க

சக மனிதனை ஒன்றாய் நோக்கும் உள்ளம் வராதவரை, தீவிரவாதம் மனித மனங்களை முட்டி முளைத்து விருட்சமாய் வளர்ந்து எழுந்து நிற்பதை யாரும் தடுக்க முடியாது. 

No comments:

Post a Comment