நம் குரல்

Saturday, January 2, 2016

நானறிந்த இராஜகுமாரன்




வாசிப்பின் சுவையறிந்து நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமாகிய எத்தனையோ படைப்பாளிகளில் இராஜகுமாரனும் ஒருவர். படிவம் மூன்று முதலே ஏடுகளுக்கு நான் எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது வாசகர் கடிதங்களோடு சிறு சிறு கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தேன். 1978ஆம் ஆண்டில் வானம்பாடி வார இதழின் வருகை எனக்குள் துயில் கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பிக் கவிதையுலகில் என்னையும் ஆற்றுப்படுத்தியது. கவிதைக்குள் என்னை ஈர்த்த படைப்பாளிகளில் இராஜகுமாரனும் முக்கியமானவர். வானம்பாடி வார இதழ் மூலம்தான் இவரின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதி.குமணன்,  இராஜகுமாரன், அக்கினி, தியாகு, பாலு என அணிவகுத்த ஆசிரியர் குழுவில் இராஜகுமாரனைத் தனித்த ஆளுமையாக அடையாளம் காண முடிந்தது.

நான் எழுதிய முதல் கவிதை வானம்பாடியில் ‘மங்குகள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. அது குறித்து ‘என் முதல் கவிதை’ என்ற கட்டுரையில், இராஜகுமாரன் அல்லது அக்கினி கைபட்டு என் கவிதை சற்று மாற்றங்களோடு வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளேன். என் கவிதைப் பயணத்தைத் தொடக்கி வைத்தவர்களில் இவரையும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.

வானம்பாடியில்  வெளிவந்த இராஜகுமாரனின் ‘சாசனங்கள்’ கட்டுரைத் தொடர் அற்புதமான படைப்பாகும். நான் மிகவும் விரும்பி வாசித்த தொடராகும். மலேசியத் தமிழ் இலக்கிய வெளியில் அத்தகைய கனமான, மாறுபட்ட சிந்தனையைக் காண்பது அரிது. இராஜகுமாரன் யார் என்று பலருக்கும் அறிமுகப்படுத்திய கட்டுரைகளாக அமைந்தன. அது நூல் வடிவம் பெற்றிருந்தால் மலேசிய இலக்கியத்திற்குச் சிறந்த படைப்பு கிடைத்திருக்கும். ஒரு படைப்பாளியின் விழித்திருந்த இரவுகள், காலத்தில் கணக்கின் வராமல் காற்றில் கலந்து மறைந்துபோவது எத்தனை துயரமானது, இழப்புக்குரியது என்பதை ஒரு படைப்பாளியாக என்னால் உணர முடிகிறது.


சிறுகதை வடிவத்திலும் இராஜகுமாரன் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர். வெறும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துவிடும் மலேசியச் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டதாக இவரின் சிறுகதைகள் அமைந்துள்ளன.  நல்ல வேளையாக அவை தொகுக்கப்பட்டு ‘மனமெல்லாம் கைகள்’ என்ற தலைப்பில் நூலாக வந்துவிட்டன. புறத்தைவிட  கதைப்பாத்திரங்களின் அகத்தை ஆராயும் உளவியல் பார்வைகொண்ட கதைகளாக அவற்றை எழுதியுள்ளார்.

1983ஆம் ஆண்டு ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நான் பயின்ற காலம். தமிழ் ஓசையில் பணியாற்றிய  இராஜகுமாரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். கல்லூரியில் இடுபணிக்காக அவரின் சிறுகதைகள் குறித்து அவரோடு பேசவேண்டும் என்றேன். மறுக்காமல் வரச் சொன்னார். மறுநாள் மாலை சென்றேன். அலுவலகத்தில் வேலை முடிந்த கையோடு,  தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையையும் விரிவாக விளக்கினார். மிகுந்த மனநிறைவோடு விடைபெற்றேன். நான் சிறுகதைத் துறையில் கால் பதித்த காலக்கட்டம் அது. அவரின் விளக்கம் படைப்பாளியான எனக்குப் பயனாக அமைந்தது.

‘இராத்திரிப்பூ’ இவர் எழுதிய நாவலாகும். மாதந்தோறும் ‘ஒரு வெள்ளியில் ஒரு நாவல்’ திட்டத்தில் குயில் நிறுவனத்தின் வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. அந்த நாவலில் இடம்பெறும் ஒரு கருத்து ஏனோ இன்னமும் என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ‘மரணம் ஒரு வீட்டின் கதவைத் தட்டும்போது, அந்த வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் இன்னொரு வீட்டைத் தேடிப் போய்விடும்’. எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள் இவை. மரணத்தின் மாயக்கரம் பிரச்சினைகள் மீது போர்வையைப் போர்த்திவிட்டு அவற்றின் தீவிரத்தைக் குறைத்து விடுகின்றன  என்பதை உணர்த்தும் வரிகள் இவை.

இராஜகுமாரன் வெளியிட்டு வரும் நயனம் இதழ், இந்நாட்டுத் தமிழ் இதழியல் வரலாற்றில் இவரின் பெயரைத் தவறாமல் பதிவு செய்யும் என்பது உண்மை. இதனால், ‘நயனம் இராஜகுமாரன்’ என்ற அடைமொழியே இன்று இவருக்கு நிலைத்துவிட்டது. தமிழகத்தின் குமுதம் இதழின் மலேசியப் பதிப்போ என்று எண்ணும் அளவுக்குக் கையடக்க அளவில் வாசகர் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் நயனம் இதழ் வெளிவந்தது. ஏடுகளில் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இலக்கியத்தை வாசிக்கும் இதயங்களை அரவணைத்து புதிய படைப்புகளை அறிமுகம் செய்தது. நயனத்தின் அழகில் ஈர்க்கப்ப்ட்டு அதன் தீவிர வாசகனாய் நானும் மாறினேன். ஒவ்வொரு வாரமும் நயனத்தின் வருகைக்கு ஏக்கத்தோடு காத்திருந்து அதன் படைப்புகளை வாசித்து மகிழ்வேன். இன்று நயனம் மாத இதழாகி வாசகர் எண்ணிக்கையும் குறைந்திருக்கலாம். ஆனால், பல படைப்பாளிகளுக்குத் தன் கதவுகளை அகலத் திறந்துவிட்டு எழுத வழங்கிய வாய்ப்புகளை  யாரும் மறுக்க முடியாது.

நயனத்தில் எழுத எனக்கும் வாய்ப்புகள் வழங்கினார். என் இரண்டு தொடர்கள் நயனத்தில் வெளிவந்தன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்துக்கு மேற்கொண்ட இலக்கியப் பயண அனுபவத்தை, ‘இலக்கியப் பயணத்தில் ஹைக்கூ பாடகன்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதினேன். ஒவ்வொரு வாரமும்  இவரே தலைப்புகள் எழுதி தொடரைச் சுவையாக்கினார். ஓவியர் வேலவன் பக்க அமைப்பில் மெருகூட்டினார். பின்னர், அது நூலாக வடிவம் பெற்றபோது, இராஜகுமாரன்  அணிந்துரை எழுதி நூலுக்குச் சிறப்புச் சேர்த்தார்.

தொடர்ந்து, ‘என் எழுதுகோலே நெம்புகோலாக’ என்ற கவிதைத் தொடரையும் நயனத்தில் எழுத வாய்ப்பினை வழங்கினார். “எத்தனை வாரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சுதந்திரமாக எழுதுங்கள்” என்றார். ஐம்பது வாரங்கள் எழுதினேன். இவ்வாண்டு வெளிவந்த ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ கவிதை நூலில் அந்தக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இவர் கவிதைத் துறையிலும் தன் பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். புதுக்கவிதைக்காகக் குரல் கொடுத்த தொடக்ககாலப் படைப்பாளர்கள் அணியில் இருந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் தொகுத்த ‘புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’ கவிதை நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது.

எத்தனை கவிதைகள்
படுக்கை கொப்புளங்களாக
மன முதுகில்
பழுக்கின்றன

விடிந்தால்
எழுத்துக்கூட்டங்களின்
அனுபவ அலுப்பில்
விமர்சன சந்நியாசிகளின்
குறட்டை தாலாட்டில்
லயித்த
இலக்கிய சோம்பேறித்தனத்தால்

இன்று ஒரு கவிதை
எழுதாமல் வீணாகிவிட்டது

(பறிக்கப்படாத பூக்கள்)

இராஜகுமாரனின் மனத்தில் பூத்த எத்தனையோ கவிதைகள் இப்படித்தான் ஏட்டில் முகங்காட்டாமல் மறைந்துவிட்டனவோ? தொடர்ந்து எழுதியிருந்தால் இவரின் மாறுபட்ட சிந்தனையைக் கவிதைகளில் நாம் தரிசித்திருக்க முடியும். நயனத்தில் ‘புது நிலவு’ என்ற பெயரில் எழுதினார். அவை காதல் மனத்தின் பதிவுகளாக, இளைய உள்ளங்களை ஈர்க்கும் கவிதைகளாக அமைந்தன.

‘இணையம்’ என்ற சொல்லை உலகுக்கு வழங்கியவர் இராஜகுமாரன். கோலாலம்பூரில் நூல் வெளியீடுகள், இலக்கியச் சந்திப்புகளில் கலந்துகொண்டு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார்.  ஆதி.குமணன் இன்று நம்மிடையே இல்லை. அந்தக் குறை தீர்க்க ஆதி.இராஜகுமாரனாக நம்மிடையே வலம் வரும் இவர், இலக்கியம் நேசிக்கும் இதயங்களில் என்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார் என்பது உறுதி.

மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள்: கனவுகளின் காலம்



அண்மையில் இரண்டு மலேசியத் தமிழ்ப்படங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இரண்டுமே நம்பிக்கை ஊட்டும் படைப்புகள். குறைந்த எதிர்பார்ப்புகளோடுதான் திரையரங்கம் போனேன். ஆனால், இரண்டுமே மிகுந்த மனநிறைவைத் தரும் வகையில் அமைந்து மகிழ்ச்சியைத் தந்தன. இரண்டு படங்களின் கதைகளும்  ஒரே மையப்புள்ளியில் இருந்து தொடங்குகின்றன. வன்முறைக்குள் சிக்கிக்கொண்டு வாழ்வைத் தொலைத்துவிட்டுத் தடுமாறும் நம் சமூகத்தின் பதிவாக இவை அமைந்துள்ளன. ஆயினும், இயக்குநர்கள் மாறுபட்ட அணுகுமுறையில் கதை நகர்த்திச் சென்று தத்தம் முத்திரையைப் பதித்துள்ளனர்.

மறவன்

அக்டோபர் மாதம் திரைக்கு வந்த படம் மறவன். அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் என்யூ செண்டரில் கிள்ளான் பண்டார் புத்ரி, சரவணன் கருணை இல்லத்தின் வளர்ச்சி நிதிக்காக மீண்டும் திரையேறியது. அரங்கம் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் ஆச்சரியமூட்டியது. படம் பார்த்து முடித்தபோது எல்லாக் கூறுகளிலும் மனநிறைவைத் தந்த படமாக மறவன் திரைப்படம் இருந்ததை உணர்ந்தேன்.  இயக்குநர் புவனேந்திரனின் திட்டமிட்ட கடும் உழைப்பில் சிறந்த படைப்பாக மறவன் உருவாகியுள்ளது.




மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பால்மரம் சீவி குறைந்த வருமானத்தில் சிரமத்தை எதிர்நோக்கும் ஒருவன் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தானே போய் வம்பில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கிறான். குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளைத் திருடுதல், போதைப்பொருள் கடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலில் சிக்கிக்கொண்டு  குமரேசன் படும் அவஸ்தை மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.  படத்தில் இன்னொரு கதையாக, சில இளைஞர்கள் குறுக்கு வழிக்குப் போகாமல்  அரசின் உதவியோடு விவசாயத்தில் ஈடுபட்டு முன்னேற முனைப்புக் காட்டுகின்றனர்.




உயிர்ப்பான வசனங்கள், இயல்பான நடிப்பு, சிறந்த ஒலி – ஒளிப்பதிவு, நகைச்சுவை, பிரச்சாரம் இல்லாமல் இயல்பான கதைப்போக்கு, அடுத்து என்ன..என்ன என்ற எதிர்பார்ப்பை  ரசிகர்களிடம்  ஏற்படுத்தும் பாங்கு என ஒவ்வொன்றையும் நுணுக்கமாகச் சிந்தித்து  இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.  குறிப்பாக, வில்லனாக  நடித்த ஹரிதாஸ் மிகச் சரியான தேர்வு. இவரின் குரலும், நடிப்பும் வசனமும் உச்சரிப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. சில இடங்களில் பயமுறுத்துகின்றன. வசனமே பேசாத துணைவில்லன் பார்வையால் மிரட்டுகிறார். படம் முழுக்க மோதிக்கொள்ளும் இருவரின் காதல் அழகிய கவிதை! ஒரு வெண்பொன் மாலை, வான் வெண்பனி பொழியும் வேளை, குளிருக்குக் குளிரை ஊட்டும் பெண்ணைக் கண்டேனே பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்.



குமரேஷ், டேனிஸ், ஹரிதாஸ், லோகன், சீலன், ஷான், கவிதா தியாகராஜன், சங்கீதா கிருஷ்ணசாமி, புஸ்பா நாராயண் என நடிகர்களின் பங்களிப்பு மனநிறைவைத் தருகிறது. கையில் கிடைத்த கேமராவைத் தூக்கிக்கொண்டு நானும் படமெடுக்கிறேன் என்று படம் எடுத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. திரைப்படத்துறையின் நுணுக்கங்களை/ வித்தைகளைக் கற்றுக்கொண்டு நம்பிக்கைப் படைப்புகளைத் தரும் காலமிது. இதை நிரூபிக்கும் படம் மறவன்.



இயக்குநர் புவனேந்திரன் ஆறு ஆண்டுகள் தமிழகத்தில் பல படங்களில் பணிபுரிந்து திரைப்படக்கலையை உள்வாங்கிகொண்டு இப்பொழுது திரைப்பட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நம்பிக்கை ஊட்டும் இயக்குநர்! இவரிடன் இன்னும் எதிர்பார்க்கலாம். இப்படத்தை இன்னும் பார்க்காதவர்கள் நமக்குப் பக்கத்தில் இருக்கும் சிலாங்கூரின் பண்டார் ரிஞ்சிங்,  புரோகா, செமினி போன்ற ஊர்களின் இயற்கை அழகை தரிசிக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள்.


ஜாகாட்


ஜாகாட் திரைப்படம் பார்க்க அண்மையில் என்யூ செண்டர் திரையரங்கு சென்றபோது என் இருக்கைக்கு இரு பக்கமும் சீனர்கள். முன்னும் பின்னும் சீனர்களின் முகங்கள். வேறு படத்திற்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆங்கில, சீன ஏடுகளில் விமர்சனம் படித்துவிட்டு அவர்கள் ஆர்வத்தோடு வந்திருந்தார்கள். மற்ற இனத்தாரையும் ஈர்த்ததில் ஜகாட் வெற்றிபெற்றுள்ளது.
இப்படம், இந்திய சமுதாயத்தின் கடந்துவந்த பாதையின் இருண்ட பகுதிகளை மீண்டும் பதிவு செய்து நம் கண் முன்னே காட்சிகளாக்கிக் காட்டுகிறது. 1990களில் தோட்டப்புறங்களை விட்டுப் புறம்போக்கு நிலங்களில் குடியேறி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களை நம் கண்முன்னே நடமாடவிட்டு அவர்களின் அவலங்களை உரக்கப் பேசுகிறது. வழக்கமாகச் தமிழ்ச் சினிமாவில் காணும் காதல், டூயட், நகைச்சுவை, கதாநாயகனைச் சுற்றிக் காட்டப்படும் பிம்பம் என அனைத்தையும் முற்றாகப் புறக்கணித்துவிட்டு இரத்தமும் சதையுமாக ஓர் இனத்தின் அவலத்தைப் பதிவு செய்யும் முயற்சி இப்படம். துணிந்து இம்முயற்சியில் ஈடுபட்டுக் கடும் உழைப்போடும் சமரசமில்லாமலும் இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சஞ்சய் மற்றும் அவர்தம் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.



படத்தில் பிரச்சாரம் இல்லை. சொல்ல வந்த கருத்துகளை திரைமொழியான காட்சியாக்கிக் காட்டுவதில் முனைப்புத் தெரிகிறது. படம் தொடங்கும்போதே ஒரு சிறுவனின் மனத்தில்  திரைப்படங்களில் காணும் வன்முறையும் சமயத்தில் காணும் வன்முறையும் பாதிப்புகளை ஏற்படுத்துவது காட்சியாக்கிக் காட்டப்படுகின்றன.  தொடர்ந்து பல காட்சிகளில், குறைந்த வசனங்களில் அழுத்தமான முகபாவங்களாலும் உடல்மொழியாலும் கதை நகர்த்தப்படுகிறது.

ஒரு குடும்பத்தை மையமாக்கி அந்தக் குடும்பத்தின்  வெவ்வேறு மனிதர்கள் வன்முறைக்கு இரையாகும் நிலை காட்டப்படுகிறது.  அப்போய் கதைப்பாத்திரத்தில் சிறுவனாக  நடித்துள்ள ஹர்விந்த்குமார் முகபாவனையால் நம்மை ஈர்க்கிறர். அவரின் அப்பாவாக வரும் மணியம் (குபேந்திரன்)வறுமையில் சிக்கிக்கொண்ட மனிதராக,  முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வன்முறையில் ஈடுபட்டு இழப்பைச் சந்தித்து ஒதுங்கி வாழும் பாலா, குண்டர் கும்பலில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து மீளத் தவிக்கும் மெக்சிகோ என ஒவ்வொரு கதைப்பாத்திரமும்  நம் மனங்களில் அழுத்தமாகப் பதிகின்றது.



மலேசியச் சூழலை நம் கண்முன்னே காட்டும் பிற இன கதைப்பாத்திரங்களும் படத்தில் வலம் வருகின்றன. குண்டர் கும்பலுக்கு ஆள் சேர்க்கும் சீனர், லஞ்சம் வாங்கிக்கொண்டு குண்டல் கும்பலைக் கண்டு கொள்ளாத போலீஸ் அதிகாரி எனச் சமரசமின்றி உண்மைகளைப் போட்டு உடைக்கும் துணிவும் படத்தில் கவனிக்கத் தக்கது.

மாணவனின் இயல்பறிந்து அரவணைக்காமல் அவனை வகுப்பறையிலிருந்து நாடுகடத்தும் போக்குப்  படத்தில் சுட்டப்படுகிறது. அப்போய் சற்று மாறுபட்டுச் சிந்திக்கிறான். ஆனால், வகுப்பில் புறக்கணிக்கப்படுகிறான். இளம்தலைமுறையினர் வன்முறைக்குப்  போகாமல் தடுத்தாற்கொள்ளும் கல்வி வேண்டும் என்ற சிந்தனை பரிமாறப்படுகிறது.



சஞ்சய், யுவராஜன், சிவா பெரியண்ணன் ஆகியோரின் வசனங்கள் ஆர்ப்பட்டமில்லாத கதையின் போக்குக்குப் பொருந்தி வருகின்றன. சினிமாத்தனம் இல்லாமல் நம் கதையை உள்ளவாறு சமூகப் பொறுப்புணர்ச்சியோடு முன்வைத்த படம் ஜாகாட் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரசனையின் பள்ளத்தில் கிடக்கும் நம் ரசிகர்களைக் கைத்தூக்கிவிட்டு, உண்மையான சினிமா பற்றிய புரிதல்களுக்குத் திசைகாட்டும் முயற்சி ஜாகாட். இன்னும் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டும்.


மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறிவரும் தருணம் இது.  மறவன், ஜாகாட் ஆகிய இரண்டு படங்களும் அந்தக் கனவுக்கான தொடக்கப் புள்ளியில் இருப்பதை திரைப்பட விமர்சகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். நம் மண்ணில் உருவாகும் முயற்சிகளுக்கு நம் பங்களிப்பும் சேர வேண்டாமா?

Wednesday, August 5, 2015

எல்.முத்து எனும் இலக்கிய உள்ளம்



               வாசிப்பின் சுவை உணர்ந்து நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமான பெயர் செர்டாங் எல்.முத்து. மறைந்த என் அண்ணன், ந.பச்சையப்பன் எல்.முத்துவின் எழுத்தின்  மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். சிறுகதை எழுத்தாளரான என் அண்ணன் மூலமாகவே பல படைப்பாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். எல்.முத்துவின் சிறுகதை ஏடுகளில் வரும்போது அதைப் பற்றித் தம் நண்பர்களிடம் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதன் காரணமாக எல்.முத்துவின் சிறுகதைகளை நான் தேடிப் படிக்கத் தொடங்கினேன். எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி, ஆ.நாகப்பன், சாமி.மூர்த்தி,  பி.கோவிந்தசாமி என்று நான் விரும்பி வாசிக்கத் தொடங்கிய பட்டியலில் எல்.முத்துவும் இருந்தார்.

            அப்போது நான் இடைநிலைப்பள்ளியில் பயின்ற காலம். தகவல் அமைச்சின் வெளியீடான உதயம் இதழ் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருந்தது. எம்.துரைராஜ் அதன் ஆசிரியராக இருந்தார். உதயத்தில் மாதந்தோறும் எல்.முத்துவின் நேர்காணல் கட்டுரை தொடர்ந்து வந்தது. வெற்றிபெற்ற பலரையும் நேர்காணல் கண்டு  வாசகனிடத்தில் தன்முனைப்பை ஊட்டும் கட்டுரைகளை எழுதி வந்தார். அவற்றையும் தொடர்ந்து வாசித்து வந்தேன். அவரின் மொழிநடையும் மொழி ஆளுமையும் வாசிக்கும் உள்ளங்களை எளிதில் ஈர்ப்பதை நான் உணரத் தொடங்கினேன். வெற்றிபெற்ற பலரை நேர்காணல் கண்டதால் தானும் ஊக்கம்பெற்றுச் செர்டாங் விவசாயப் பல்கலைக்கழகத்தில் எளிய பணியில் இருந்தவர், கட்டுமானத்துறையில் ஈடுபட்டுப் பின்னாளில் வெற்றிபெற்ற தொழில் அதிபராக உயர்ந்ததை அறிந்தேன்.

            அவரின் விரதங்கள் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் என் அண்ணன் கலந்துகொண்டு நூலைப்பெற்று வந்தார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை வெற்றிபெற்ற அல்லது தேர்வுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பாக அது இருந்தது. அந்நூலை மிகுந்த ஆர்வத்தோடு படித்ததை இப்போது  நினைத்துப் பார்க்கிறேன். விகார விவகாரங்கள்’, அந்தரங்க மன அசைவுகள்’, நிர்வாணங்கள்’, புறக்கணிப்புகள் எனச் சிறுகதைகளின் தலைப்புகளே வாசகனை வாசிக்கத் தூண்டுபவை. எளிய கதையானாலும் சொல்லும் முறையால், எழுத்து நடையால் கனமான படைப்புகளாக, வாசகனின் மனத்தில் அழுத்தமான பாதிப்புகளை விதைக்கும் வண்ணம் சிறுகதைகள் உருவாக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கதைமாந்தர்களின் மனவோட்டங்களை ஆராய்ந்து உளவியல் பார்வைகொண்ட படைப்புகளாக அவை இருந்தன. அகன்ற வாசிப்பும் சிறந்த கதைகளைப் படைக்க வேண்டும் என்ற துடிப்பும் கடுமையான உழைப்பும் இளவயதிலேயே எல்.முத்துவின் சிறுகதை வெற்றிக்குக் காரணங்களாக அமைந்தன.


            
    எல்.முத்துவின் சிறுகதைகளை ஆழ்ந்து படித்த காரணத்தால், நான் தொடக்கத்தில் எழுதிய சிறுகதைகளில் அதன் பாதிப்புகள் என்னையுமறியாமல் படியத் தொடங்கின. என் சிறுகதைத் தொகுப்பான மௌனம் கலைகிறேன் நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைத் தலைப்புகளில் இதனைக் காணலாம். நிர்மலமான மனங்கள், மாறுவேடப் புருசர்கள், ரணங்கள், மன விகாரங்கள், பூரணத்துவம் போன்ற தலைப்புகள் குறிப்பிடத்தக்கவை. வாசகனை ஈர்த்து கதைக்குள்ளே இழுக்க தலைப்பு சற்று மாறுபட்டதாக இருக்கவேண்டும் என்ற முனைப்பு நான் எல்.முத்துவிடம் கற்றுக்கொண்டது.

            அது மட்டுமன்று. அத்தொகுப்பில் இடம்பெற்ற சில கதைகளில் கணவன் மனைவி இடையே எழும் உளவியல் சிக்கலை ஆராயும் கதைகளும் இருந்தன. திருமணமாகாத 23 வயதிற்குள்ளாக நான் அத்தகைய சிறுகதைகளை எப்படி எழுதினேன்? “எப்படி இப்படியெல்லாம் எழுதுற?” என்று நண்பர்கள் கேட்டதுண்டு. வாழ்க்கை அனுபவம் இல்லாவிட்டாலும் வாசிப்பு அனுபவம் படைப்புலகத்தில் புதிய  கதவுகளைத் திறந்துவிட்டு நம்மை உள்ளே அழைத்துப் போகிறது. எல்.முத்துவோடு எம்.ஏ.இளஞ்செல்வனும் ஜெயகாந்தனும் இன்னும் சிலரும் அத்தகைய  அனுபவங்களை மனத்தில் நிறைத்து கற்பனா உலகத்தில் தனித்துப் பயணிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.

            2009ஆம் ஆண்டில் என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும்’, இலக்கியப் பயணத்தில் ஹைக்கூ பாடகன் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா காஜாங் நகரில் நடைபெற்றது. எல்.முத்துவை அன்போடு அழைத்தேன். என் அருமை நண்பர் இராஜனோடு வந்தார். சிறப்பு வருகையாளராய்  உரையாற்றினார். தொழில் அதிபராய் உயர்ந்து  இலக்கியத்திலிருந்து விலகியிருந்தாலும் அவரின் அடிமனத்தின் ஆழத்தில் இலக்கியத்தின் மீதான காதல் குறையவில்லை என்பதை அவரின் உரை பறைசாற்றியது. என் படைப்புலகத்தையும் அவர் பாதித்திருக்கிறார் என்பதறிந்து நெகிழ்ச்சியோடு நிகழ்வில் நினைவு கூர்ந்தார். அதன் பிறகு, என்னைத் தம் இல்லத்திற்கு ஒரு நாள் அழைத்தார். தம் அன்பு மனைவியோடு உபசரித்தார்.  என் நூல்களின் ஐம்பது தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை ஜோகூரில் உள்ள மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறினார்.


            
        இடையிலே, அவர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொண்டேன். அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு குறைந்தது. ஆனால், அவர் தொடர்ந்து கோயில் திருப்பணிகளுக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் அள்ளிக்கொடுத்து ஆதரவு அளித்து வந்ததை அறிவேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்காகப் பெரும் பொருளுதவி செய்தார்.

            கடந்த 9.6.15  செவ்வாய்க்கிழமை (அவரின் இறப்புக்கு முதல் வாரத்தில்) கைப்பேசியில் அழைத்தேன். காஜாங்கில் மீண்டும் என் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா. அழைத்தேன். நீண்ட நேரம் மகிழ்வோடும் குறையாத அன்போடும் உரையாடினார். தன் தொழில், குடும்பம், இலக்கியம் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொண்டார். “அழைப்பிதழ்ல பேரு எல்லாம் வேண்டாங்க. நான் நிகழ்ச்சிக்கு வரேன். நிகழ்ச்சி தகவலை, அழைப்பிதழை வாட்ஸ்ப்பல அனுப்புங்க போதும். உங்களுக்கு என் ஆதரவு என்னைக்கும் இருக்கும்.”



            நூல் வெளியீட்டு விழாவில் அவர் இல்லை. நிகழ்வில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் அவரை நினைவு கூர்ந்தோம். 2009இல் என் நூல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டபோது பிடித்த படங்களை மனம் மீண்டும் புரட்டிப் பார்த்தது. மனம் கனத்தது. எத்தனையோ மரணங்கள் எனைக் கடந்து போனதுண்டு. எத்தனையோ மரணங்கள்  எனை நனைத்துப்  போனதுண்டு என்று நான் எப்போதோ எழுதிய வரிகளில் மீண்டும் என் மனம் மூழ்கியெழுந்தது. சில மரணங்களில் நீதி இல்லை; இரக்கம் இல்லை; நியாயம் இல்லை. மனம் ஒப்புக்கொள்ள முடியாத அநீதி மட்டும் எஞ்சியிருக்கிறது. எல்.முத்து – அவர்தம் அன்புத் துணைவியார் மரணங்களில்  அதுதான் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

            “சமூகத்தின்பால் எனக்கேற்பட்ட சுகமான- வேதனையான இருவேறு உணர்ச்சி வேறுபாடுகளால் எழுந்த உணர்வுகளின் பீறிடலால் என் இதயத்தில் கொப்பளித்து  நின்ற குருதியை மையாகப் பேனாவில் இறக்கி, சத்தியத்தின் சிந்தனை முரண்படாமல் இக்கதைகளை ஆக்கியுள்ளதாக நான் உணர்கிறேன்” என்று தன் சிறுகதை நூலில் எல்.முத்து குறிப்பிடுகிறார்.


            
          சத்தியத்தின் பாதையில் நின்று அற்புதமான படைப்புகளைத் தந்த இனிய இலக்கிய உள்ளம் எல்.முத்து.படைப்பாளிக்கு மரணமில்லை என்ற கூற்றுதான் எல்.முத்துவை நேசித்த அனைத்து உள்ளங்களில்  ஆறுதலைத் தரும் மருந்தாக இருக்கிறது.


Sunday, March 29, 2015

காணாமல் போகும் மாணவர்கள்



பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் படிவத் தமிழ் மாணவன் கண்ணன் காணாமல் போனான்

தமிழ் நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணனுக்கு என்ன ஆனது என அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் எழும். இந்தச் செய்தியால் சமூகத்தில் ஒரு பரபரப்புக் காய்ச்சலே பரவும். இப்படியொரு செய்திக்காகக் காத்திருக்கும் அறிக்கை மன்னர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? கல்வி அமைச்சு விரைந்து செயல்பட்டு கண்ணனைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வேண்டாம்’. இப்படியெல்லாம் அறிக்கைகள் ஏடுகளை அலங்கரிக்கும்.

மேற்குறிப்பிட்ட செய்தி கற்பனைச் செய்தியன்று. ஒவ்வோர் ஆண்டும் கண்ணனைப்போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் காணாமல் போகும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழைத் தேர்வுப் பாடமாகப் பயின்ற மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்ற பிறகு, பி.எம்.ஆர். தேர்விலும் எஸ்.பி.எம். தேர்விலும் தமிழைப் புறக்கணிக்கும் நிலை முப்பது விழுக்காட்டை நெருங்கிவிட்டது.

கீழ்க்காணும் மாதிரி அட்டவணை, யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இடைநிலைப்பள்ளி சென்ற பிறகு படிப்படியாகச் சரிந்து போவதைக் காட்டுகிறது.


தேர்வு
மாணவர் எண்ணிக்கை
காணாமல் போன மாணவர்கள்
விழுக்காடு
யூ.பி.எஸ்.ஆர்.
14 471


பி.எம்.ஆர்.
12 306
2 165
 14.96%
எஸ்.பி.எம்.
10 657
3 814
 26.36%


இது பற்றித் தமிழ்ச்சமூகம் எந்தவிதமான சலனமுமின்றித் தாமுண்டு தமக்கே உரிய மற்ற சிக்கல்களுமுண்டு என அவற்றிலே உழன்றுகொண்டிருக்கிறது. வழங்கப்பட்ட உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டுப் பிறப்புப் பத்திரங்களுக்கும், அடையாள அட்டைகளுக்கும் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி என்றால் உரத்தக் குரல் கொடுப்பவர்களும் இது பற்றிக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள, இந்நாட்டில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி வருகிறது.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் ஏன் காணாமல் போகிறார்கள்? அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது? இவை பற்றி எண்ணிப்பார்த்தேன். எண்ணிப் பார்த்ததை உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழைவிட்டு விலகிப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு.  தமிழ்ப்பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்தும் ஒரு பகுதி மாணவர்கள் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும்  வாசிப்பு, எழுத்து போன்ற அடிப்படைத் திறன்களை அடையாமல் இடைநிலைப்பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளியோடு தமிழுக்கு முழுக்குப் போட்டுவிட்டு இனி தமிழோடு உறவே வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.

பள்ளியில் கால அட்டவணையில் தமிழ் சேர்க்கப்பட்டுச் சொல்லித் தரப்பட்டாலும் தமிழ் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். தமிழில் தங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள். யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் தோல்வி அல்லது குறைந்த தேர்ச்சி பெற்ற அனுபவம் அவர்களைப் பயமுறுத்துகிறது.



இவர்களில் சிலர், படிவம் ஒன்றிலும், படிவம் இரண்டிலும் தமிழ் படிப்பதாகப் பாவனை செய்தாலும் படிவம் மூன்று வந்தவுடன் பி.எம்.ஆர். தேர்வில் தமிழோடு தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள்.  தமிழ் வகுப்பில், தேசிய, சீனப் பள்ளிகளில் படித்த தமிழறியாத மாணவர்கள் தமிழ் படிக்காமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திற்குப் பிந்திய தமிழ் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் தமிழ் வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.  பெரும்பாலும் போக்குவரத்துச் சிக்கலைக் காரணம் காட்டி வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்.

மாணவர்கள் தமிழ் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைக்குப் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். தமிழ்ப்பள்ளியில் பயின்றவரை தம் பிள்ளைகளின் கல்வியில் ஓரளவு அக்கறை செலுத்திவரும் அவர்கள், இடைநிலைப்பள்ளியில் பிள்ளைகள் தொடர்ந்து தமிழைப் படிக்கிறார்களா என்று கவனிக்கத் தவறுகின்றனர். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு முழுக்குப் போடுகிறார்கள். பாடங்கள் கூடிவிட்டன. அவற்றோடு சிரமமாக இருக்கும் தமிழையும் பிள்ளைகள் சுமக்கவேண்டாமேஎன்று பெருமனத்தோடு பெற்றோரே முடிவுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி.எம்.ஆர். தேர்வுக்குப் பிறகு, படிவம் நான்கில் பாடங்கள் கூடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் படிவம் நான்கில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் சரிகிறது.

என் மகனுக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை. எனவே, தமிழ் வகுப்பில் என் மகனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று பெற்றோரே எழுதிய கடிதங்களைப் பெற்ற ஆசிரியர்கள் உண்டு. தமிழில் குறைவான புள்ளிகளைப் பெறுவதால் ஒட்டுமொத்தத் தேர்ச்சியும் வீழ்ச்சியடைவதும் இதற்குக் காரணமாகிறது.

இதனை ஆழ்ந்து நோக்கினால், பெற்றோர் - மாணவர் மனநிலைக்கு இன்னொரு காரணமும் மறைவாக இருப்பதை உணரலாம். தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளியோடு போதும். மருத்துவம், பொறியியல், கணினி, போன்ற உயர்கல்விக்குத் தமிழ் பயன்படாது. எனவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ் வேண்டாம்என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வயிற்றுக்காக எந்த மொழியையும் எந்தப் பாடங்களையும் படிக்கலாம். ஆனால், வாழ்க்கை மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆழமான தமிழ் உணர்வு பெற்றோருக்கும் மாணவருக்கும் இருந்தால்தான் தமிழ் புறக்கணிப்புக் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்குப் பிறகு, தமிழ் ஆசிரியர் இல்லாத, தமிழ் வகுப்புகள் நடைபெறாத இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் நிலையோ இன்னும் மோசமானது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி இருந்தும் தொடர்ந்து தமிழைப் படிக்கமுடியாத நிலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை அங்கு இழந்து வருகிறோம். உணர்வுள்ள பெற்றோர்கள் மட்டும்  விடாப்பிடியாக வெளியில் எங்காவது தமிழ், தமிழ் இலக்கிய கூடுதல் வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.

தாய்மொழி வகுப்புகள் நடைபெற வேண்டுமானால் பள்ளியில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற கல்விச் சட்டமும் சில வேளைகளின் சிக்கலை ஏற்படுத்துகிறது. 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் எவ்வளவு போராடினாலும் தமிழ் வகுப்புகள் தொடங்குவது சிரமம்தான்.

மேற்கூறிய காரணங்களைத் தவிர்த்து, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே தமிழ் மாணவர்கள் எண்ணிக்கைச் சரிவுக்குக் காரணமாவது உண்டு.  தமிழ்மொழியில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தால் தமிழ்மொழித் தேர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால் அவர்களிடம் தேர்வைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறும் நிலை உள்ளது. பி.எம்.ஆர். தேர்வில் விடுபடும் மாணவர்கள் அதன் பிறகு, படிவம் நான்கில் தமிழ் வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பர். பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விழுக்காடு அப்பள்ளியின்  தன்மானப் பிரச்சினையாக மாறிவருவதால் தேர்ச்சிபெற வாய்ப்புள்ள மாணவரை மட்டும் தேர்வுக்கு அனுப்பும் சூழலில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் காணும் என்பது திண்ணம்.



எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளது. பல தரப்பினரின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 20.45 விழுக்காடாக இருப்பது (தேர்வெழுதிய 14 471 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களில்) ஏமாற்றத்தைத் தருகிறது. அறிவியல் துறைசார்ந்த உயர்கல்வியில் முனைப்பு காட்டினாலும் தமிழ் இலக்கியத்தின் பயன் அறிந்து அதைப் படித்துச் சுவைக்க மாணவர்களை ஆற்றுப்படுத்தவேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் ஆகிய இரு தரப்பினருக்கும் உண்டு. கீழ்க்காணும் பட்டியல் தமிழ் இலக்கியத்தின் நிலையைக் காட்டுகிறது.


தேர்வு
மாணவர் எண்ணிக்கை
வேறுபாடு
விழுக்காடு
யூ.பி.எஸ்.ஆர்
14 471


எஸ்.பி.எம்.தமிழ் இலக்கியம்
 2 960
(20.45%)
11 511
79.55%


நம் சமூகத்தின்  இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்தக் கவனமும் தமிழ்ப்பள்ளிகளைச் சுற்றியே வருகிறது.  தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்ற உணர்வு பெற்றோர்களிடையே மேலோங்கி உள்ளது. அதோடு, தங்களின் தமிழ்க்கடமை முடிந்துபோனதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பும் உழைப்பும் இடைநிலைப்பள்ளிகளில் நீர்த்துப்போவதை எப்பொழுது உணரப்போகிறோம்?

தமிழ்க்கல்வி குறித்து நாம் ஆயிரம் ஆராய்ச்சி மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தலாம். ஆனால், யாரை மையமிட்டு அவற்றை நடத்துகிறோமோ அவர்களே காணாமல் போகிறார்கள் என்னும்போது நம் முயற்சிகளால் என்ன பயன் விளையப்போகிறது?

தமிழ் எங்கள் உயிர்என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி நிதி திரட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுமொழியாகத் தமிழை நிலைநிறுத்தினார். இன்றைய சூழலில், ‘இடைநிலைப்பள்ளியில் தமிழைக் காப்போம்என்னும் அறப்போராட்டத்தைச் சமூக இயக்கங்கள் தொடங்கிக் கடுமையாகப் போராடினால் ஒழிய இச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்காது.

தமிழ் மாணவரே! தமிழ் மாணவரே
தமிழைப் படிக்கத் தயங்கு கின்றேரே!
தமிழைத் தமிழ் மாணவர் படிக்காமல்
இமிழ்கடல் உலகில் எவர் படிப்பாரே

நம் கவிஞர் பொன்முடி பாடிய இந்தக் கவிதையை இன்னும் எத்தனை காலத்திற்குப் பாடிக்கொண்டிருப்பது?


Sunday, March 22, 2015

இளையோரை ஈர்க்காத இலக்கியம்


      மலேசியத் தமிழ் இலக்கியம், இன்னமும் முதிர்ந்த படைப்பாளிகளின் ஆடுகளமாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலும் முப்பது வயதைக் கடந்தவர்களே அதிகமான படைப்புகளை வழங்கி வருவதைக் காணலாம். விதிவிலக்காகச் சில இளைய படைப்பாளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகங்காட்டுகிறார்கள். இன்னமும் பழைய படைப்பாளிகளின் எழுத்துகளைத்தான் நம் இலக்கியத்தின் சாதனைகளாக நாம் அடையாளம் காட்டி வருகிறோம். மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, இளஞ்செல்வன், ப.சந்திரகாந்தம், மு.அன்புச்செல்வன், முரசு நெடுமாறன், சீ.முத்துசாமி, அ.ரெங்கசாமி, காரைக்கிழார், கோ.புண்ணியவான் என்று தொடரும் இலக்கிய ஆளுமைகளின் பட்டியலில் அவர்களுக்குப் பின் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதற்கான புதிய இளைய படைப்பாளிகள் உருவாகி வருகிறார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். குறிப்பாக, பதின்ம வயதில் இலக்கியம் நேசிக்கும் இளையோர் எங்கே என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

      நம் கல்விச் சூழலில் இளைய படைப்பாளிகள் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதுதான் உண்மை. தமிழ்ப்பள்ளியில் ஆறாண்டுக் கல்வியோடு இடைநிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவதே போராட்டமாக இருக்கிறது. வாரத்திற்கு மூன்று பாடவேளை (1 ½  மணி) மட்டும் தமிழ்ப்பாடம் நடக்கிறது. இந்தக் குறைந்த நேரத்தில் தமிழ் படித்துத் தேர்வுக்குத் தயாராகுகிறார்கள். தமிழ்ப்பாடத்தில் இடம்பெறும் இலக்கியக் கூறுகள் தேர்வை மையப்படுத்தி அமைவதால் அதைத்தாண்டி இலக்கியம் வாசிக்கும் நிலைக்கு அவர்கள் பயணிப்பதில்லை. பள்ளி நூலகத்தில் இலக்கியம் நோக்கி அவர்களை ஈர்க்கும் நூல்களும் அதிகம் இருப்பதில்லை. பள்ளியில் நடைபெறும் கருத்தரங்கம், பயிலரங்கம் யாவும் தேர்வில் விடையளிக்கும் நுணுக்கத்தைக் கற்றுத்தரும் களங்களாகவே அமையும். தமிழ்மொழித் தேர்வில், சிறுகதை, நாடகம் எழுதும் கேள்விகள் இடம்பெற்றாலும் மாணவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகிய இரண்டையும் 11 ஆண்டுகளில் முடித்துவிட்டு தமிழில் தேர்ச்சியோடு வெளிவரும் மாணவர்கள் இலக்கியம் படைப்பது பற்றிய அனுபவமும் ஆர்வமும் இல்லாமல் உயர்கல்விக் கல்விக்கூடங்களை நோக்கி நகர்கிறார்கள்.

      தமிழோடு இலக்கியமும் பயிலும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். இரண்டு பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி (ஏ+) பெறுவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. இதைச் சொல்லித்தான் ஆசிரியர்கள் மாணவர்களை இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யுமாறு ஊக்கமூட்டுகிறார்கள். நாவல், நாடகம், கவிதை ஆகிய இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதும் இலக்கியப் படைப்பில் ஈடுபடச் செய்வதாகும். ஆனால், நடப்பதென்ன? இடைநிலைப்பள்ளியில் இலக்கியம் பயின்றதோடு மாணவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.    

      தேர்வுக்கு அதிகமான பாடங்களில் தயாராகவேண்டியிருப்பதால் மாணவர்களின் கவனம் முழுதும் பாடநூல்களில் குவிந்து அவற்றிலேயே கூடுகட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். நாட்டு நடப்பும் சமூக நடப்பும் பற்றிய சிந்தனையும் கவனமும் இன்றித் தனித்து வாழ்கிறார்கள். பள்ளிநேரம் முடிந்து பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். வெளியே டியூஷன் வகுப்புகளுக்கும் போகிறார்கள். வார இறுதியிலும் அத்தகைய வகுப்புகள் தொடர்கின்றன. ஞாயிறு ஏடுகளில் வரும் இலக்கியப் படைப்புகளைச் சுவைக்க நேரமும் மனமும் இருப்பதில்லை. இத்தகைய சூழலில் வளரும் இளையோர் இலக்கியத்தைத் தங்களில் வாழ்வில் ஓர் அங்கமாக நினைப்பதில்லை. எனவே, அவர்கள் படைப்பிலக்கியத்தில் இயற்கையாகவே ஈடுபடுவதில்லை.

      இடைநிலைக்கல்வி முடித்துப் பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிக்கும் போகும் மாணவர்களின் நிலையும் இதேதான். தமிழ்த்துறைகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும் காலத்தில் இலக்கியம் மீது காட்டும் ஆர்வம் வியப்பைத் தரும். இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், இலக்கியப் போட்டிகளை நடத்துதல், இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்தல் என இலக்கியம் மீது அளவிறந்த ஈடுபாடு காட்டுவோர் கல்வி முடித்து வெளியேறிய பிறகு  இலக்கிய உலகிலிருந்து முற்றாக விலகிக்கொள்கிறார்கள். இலக்கிய ஈடுபாடு என்பது புள்ளிகள் பெறுதல் என்பதைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. விதிவிலக்காகச் சிலர் மட்டும் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.  மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையால் ஆயிரக்கணக்கான தமிழில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக முடிந்தது. ஆனால், எத்தனை படைப்பிலக்கியவாதிகளை உருவாக்க முடிந்தது என்பது ஆய்வுக்குரிய சிந்தனையாகும்.

      இளையோர் இலக்கியத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப் போவதற்குத் தகவல் ஊடகங்களும் காரணமாக உள்ளன. எல்லாம் சினிமா, எதிலும் சினிமா என்பதே வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் தாரக மந்திரமாக உள்ளது. அறிவிப்பாளர்கள் வாயைத் திறந்தாலே சினிமாத் தகவல்களாக அள்ளிக் கொட்டுகிறார்கள். எழுத்தாளர் அறிமுகம், நூல் அறிமுகம், இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல் போன்றவை இடம்பெற்றால் இலக்கியம் பற்றி உயர்ந்த மதிப்பை மக்கள் மனங்களில் உருவாக்க முடியும். நடிகர்களைக் கொண்டாடும் ஊடகங்கள் எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துகளையும் கொண்டாடும் மனப்போக்கைக் கொண்டிருப்பதில்லை. எனவே, இளையோர்கள் தாங்கள் காணும் யதார்த்த உலகில் இலக்கியத்திற்கான சமூக மதிப்பு இல்லாத நிலையைப் பார்த்து அதில் ஈடுபாடு காட்டாமல் விலகிக்கொள்கிறார்கள்.



      
மேற்கூறிய அனைத்துத் தடைகளிலிருந்து இளையோரை மடைமாற்றி இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்துவது எப்படி? எழுத்தாளர் அமைப்புகள் மனம் வைத்தால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளையோரை படைப்பிலக்கியத்தில் உருவாக்க முடியும். மலேசிய  எழுத்தாளர் சங்கம் இளையோரை மையமிட்ட பட்டறைகளை, கருத்தரங்குகளை (சிறுகதை, கவிதை) நடத்தி வந்துள்ளது. இளையோருக்கான இலக்கிய விருதுகளை ஏற்படுத்தி வழங்கியுள்ளது. ஆனால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஆனந்த விகடனின் மாணவர்ப் பத்திரிகையாளர் திட்டம் போல்  இளையோர் எழுத்தாளர் திட்டத்தை இங்குச் செயல்படுத்தினால் எழுதும் ஆர்வமுள்ளோரை அடையாளம் கண்டு தொடர் முயற்சியால் அவர்களைத் தீவிர இலக்கியம் நோக்கி வழிநடத்தலாம். அவர்களின் படைப்புகளை நூலாக்குவதன் மூலம் எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடலாம்.

      அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படும் மலாய் மொழி வளர்ச்சி நிறுவனமான டேவான் பஹாசா டான் புஸ்தாகா நீண்ட காலமாக, இளையோரை மையமிட்ட பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களின் எழுத்தாற்றலைப் பட்டைதீட்டி வருகிறது. அவர்களின் படைப்புகளை நூலாக்கி வருகிறது. இதன் விளைச்சலாக இன்று சந்தையிலே குவிந்து கிடக்கும் எண்ணற்ற மலாய் நாவல்களைக் குறிப்பிடலாம். உயர்கல்விக்கூடங்களில் பயின்ற மலாய் இளையோர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவல்களை எழுதி வெளியிடுகிறார்கள். நமக்கு அத்தகைய மொழி வளர்ச்சி மையம் உருவாக வேண்டும். அதன்வழி பல்வேறு இலக்கியப் பணிகளை அரசின் உதவியோடு மேற்கொள்ளலாம். இளையோரை இலக்கியம் நோக்கி ஈர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

      இடைநிலைப்பள்ளியில் ஒன்றாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம்வரை மலாய், ஆங்கிலப் பாடங்களுக்கு நாவல், நாடகம், கவிதை நூல்கள் இணைநூல்களாக உள்ளன. இலக்கியத்தின் பல்வேறு வடிவங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழ், சீன மொழிப்பாடங்களுக்கு அத்தகைய இணைநூல்கள் இல்லை. தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளிவரை வாசிப்பு நூல்கள் இணைக்கப்பட்டால் வாசிப்பின் சுவையை மாணவர்கள் உணரும் சூழல் உருவாகும். அவை பல்வேறு இலக்கிய வடிவங்களிலான நூல்களாக அமைந்தால் நிறைந்த பயனைத் தரும்.


      
இளைய படைப்பாளிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. உலகின் பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தாங்கள் இலக்கியத்தில் ஈடுபட தங்களின் ஆசிரியர்கள் வகுப்பறையில் வாசிப்பின் சுவைகாட்டி தங்களை ஈர்த்த கதையைப் பகிர்ந்துள்ளார்கள். ஆசிரியர்கள் இலக்கியத்தின் சுவைஞர்களாக மாறினால், அல்லது படைப்பிலக்கியவாதிகளாக இருந்தால் தம் மாணவர்களையும் இலக்கியம் நேசிக்கும் மனம் கொண்டவர்களாக மாற்ற முடியும். அதுவே, எழுதும்  ஈடுபாட்டை உருவாக்கும். தேர்வுக்காக மட்டும் மாணவரை உருவாக்கும் பட்டறையாக வகுப்பறையை எண்ணாமல் மனித மனங்களை மேம்படுத்தும் இலக்கியம் எனும் விருந்தைப் பரிமாறும் இடமாக மாற்ற வேண்டும்.

இளையோரை மையமிட்ட இலக்கியப் போட்டிகளை நடத்துவதும் இளையோரை இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்தும் அரிய முயற்சியாகும். மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையும் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கமும் ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகளில் மாணவர்க்கான பிரிவையும் ஏற்படுத்தி அவர்களை எழுதத் தூண்டி வருகின்றன. இத்தகைய போட்டிகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப்பட வேண்டும். போட்டிகளுக்கு எழுதத் தொடங்கிய பலர் பின்னாளில் எழுத்துலகில் தீவிரமாகச் செயல்பட்ட கதைகள் உண்டு.

இளையோர் வாசிப்பதற்கான இலக்கியப் படைப்புகள் மலேசியாவில்  குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கான இலக்கியப் படைப்புகளை இளையோரிடம் நீட்டி அவற்றின் சுவையறிந்து, புரிந்து இலக்கியப் படைப்பு நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகாது. இளையோர் எதிர்நோக்கும் சிக்கல்களும் வாழ்க்கை அனுபவங்களும் கொண்ட படைப்புகள் அவர்களுக்குப் பரிமாறப்படவேண்டும். அவையே, இலக்கியத்தைப் புரிந்துகொண்டு அனுபவிக்க அவர்களுக்கு உதவும். மலாய் மொழியில்  எண்ணற்ற இளையோர் இலக்கிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. 2013ஆம் ஆண்டில், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு இணைந்து, சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டியை நடத்தி 20 கதைகளை நூலாக்கியது. பாராட்டுக்குரிய இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.


      
ஒரு நாளில், பல மணி நேரம் சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவளிக்க இளையோர் தயாராக இருக்கிறார்கள். தங்களுக்குச் சம்பளம் தரும் நிறுவனங்களைவிட இந்தச் சமூக வலைத்தளங்களுக்கு பல மணி நேர உழைப்பைக் கொட்டுகிறார்கள். எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உற்றறிந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். நூறு பக்க நாவலை வாசிப்பதுகூட மலைப்பைத் தருகிறது. ஏடுகளைப் புரட்டித் தகவலை அறியும் ஆர்வம் குன்றி வருகிறது. முகநூலில் ஒரு லைக் போடுவதையே எழுத்துப் பணியாக நினைக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து, தமக்கு வந்ததை மற்றவருக்கு அனுப்பி வைப்பதையே எழுத்துச் செயல்பாடாக எண்ணிச் செயல்படுகிறார்கள்.

ஒவ்வொன்றையும் இலாப நோக்கோடு சிந்திக்கும் வணிகச் சூழலில் சமுதாயமும் நாடும் சிக்கியுள்ளன. பொருளாதார நோக்கில் இது பயன் தருமா என இலக்கியத்தையும் தங்களில் வணிகத் தராசில் நிறுத்துப் பார்க்கிறார்கள். பயன் தராத ஒன்றுக்கு மெனக்கெட பெற்றோர்களும் பிள்ளைகளும் தயாராக இல்லை. இலக்கியத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் அதனை உதாசினப்படுத்துவதில்லை. மொழியின் சுவையைக் காட்டியதும், இனத்தின் வரலாற்றைப் பதிவு செய்ததும், மொழியின் செழுமையைப் போற்றிக் காத்ததும், மனங்களைப் பண்படுத்தியதும், தன்னம்பிக்கை ஊட்டி வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை தந்ததும் இலக்கியமே என்பதறிந்தால் இலக்கியம் சுவைக்காத இளையோரை எண்ணிப்பார்ப்பது மிகுந்த வேதனையைத் தரும்.