நம் குரல்

Sunday, March 22, 2015

இளையோரை ஈர்க்காத இலக்கியம்


      மலேசியத் தமிழ் இலக்கியம், இன்னமும் முதிர்ந்த படைப்பாளிகளின் ஆடுகளமாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலும் முப்பது வயதைக் கடந்தவர்களே அதிகமான படைப்புகளை வழங்கி வருவதைக் காணலாம். விதிவிலக்காகச் சில இளைய படைப்பாளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகங்காட்டுகிறார்கள். இன்னமும் பழைய படைப்பாளிகளின் எழுத்துகளைத்தான் நம் இலக்கியத்தின் சாதனைகளாக நாம் அடையாளம் காட்டி வருகிறோம். மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, இளஞ்செல்வன், ப.சந்திரகாந்தம், மு.அன்புச்செல்வன், முரசு நெடுமாறன், சீ.முத்துசாமி, அ.ரெங்கசாமி, காரைக்கிழார், கோ.புண்ணியவான் என்று தொடரும் இலக்கிய ஆளுமைகளின் பட்டியலில் அவர்களுக்குப் பின் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதற்கான புதிய இளைய படைப்பாளிகள் உருவாகி வருகிறார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். குறிப்பாக, பதின்ம வயதில் இலக்கியம் நேசிக்கும் இளையோர் எங்கே என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

      நம் கல்விச் சூழலில் இளைய படைப்பாளிகள் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதுதான் உண்மை. தமிழ்ப்பள்ளியில் ஆறாண்டுக் கல்வியோடு இடைநிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவதே போராட்டமாக இருக்கிறது. வாரத்திற்கு மூன்று பாடவேளை (1 ½  மணி) மட்டும் தமிழ்ப்பாடம் நடக்கிறது. இந்தக் குறைந்த நேரத்தில் தமிழ் படித்துத் தேர்வுக்குத் தயாராகுகிறார்கள். தமிழ்ப்பாடத்தில் இடம்பெறும் இலக்கியக் கூறுகள் தேர்வை மையப்படுத்தி அமைவதால் அதைத்தாண்டி இலக்கியம் வாசிக்கும் நிலைக்கு அவர்கள் பயணிப்பதில்லை. பள்ளி நூலகத்தில் இலக்கியம் நோக்கி அவர்களை ஈர்க்கும் நூல்களும் அதிகம் இருப்பதில்லை. பள்ளியில் நடைபெறும் கருத்தரங்கம், பயிலரங்கம் யாவும் தேர்வில் விடையளிக்கும் நுணுக்கத்தைக் கற்றுத்தரும் களங்களாகவே அமையும். தமிழ்மொழித் தேர்வில், சிறுகதை, நாடகம் எழுதும் கேள்விகள் இடம்பெற்றாலும் மாணவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகிய இரண்டையும் 11 ஆண்டுகளில் முடித்துவிட்டு தமிழில் தேர்ச்சியோடு வெளிவரும் மாணவர்கள் இலக்கியம் படைப்பது பற்றிய அனுபவமும் ஆர்வமும் இல்லாமல் உயர்கல்விக் கல்விக்கூடங்களை நோக்கி நகர்கிறார்கள்.

      தமிழோடு இலக்கியமும் பயிலும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். இரண்டு பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி (ஏ+) பெறுவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. இதைச் சொல்லித்தான் ஆசிரியர்கள் மாணவர்களை இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யுமாறு ஊக்கமூட்டுகிறார்கள். நாவல், நாடகம், கவிதை ஆகிய இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதும் இலக்கியப் படைப்பில் ஈடுபடச் செய்வதாகும். ஆனால், நடப்பதென்ன? இடைநிலைப்பள்ளியில் இலக்கியம் பயின்றதோடு மாணவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.    

      தேர்வுக்கு அதிகமான பாடங்களில் தயாராகவேண்டியிருப்பதால் மாணவர்களின் கவனம் முழுதும் பாடநூல்களில் குவிந்து அவற்றிலேயே கூடுகட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். நாட்டு நடப்பும் சமூக நடப்பும் பற்றிய சிந்தனையும் கவனமும் இன்றித் தனித்து வாழ்கிறார்கள். பள்ளிநேரம் முடிந்து பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். வெளியே டியூஷன் வகுப்புகளுக்கும் போகிறார்கள். வார இறுதியிலும் அத்தகைய வகுப்புகள் தொடர்கின்றன. ஞாயிறு ஏடுகளில் வரும் இலக்கியப் படைப்புகளைச் சுவைக்க நேரமும் மனமும் இருப்பதில்லை. இத்தகைய சூழலில் வளரும் இளையோர் இலக்கியத்தைத் தங்களில் வாழ்வில் ஓர் அங்கமாக நினைப்பதில்லை. எனவே, அவர்கள் படைப்பிலக்கியத்தில் இயற்கையாகவே ஈடுபடுவதில்லை.

      இடைநிலைக்கல்வி முடித்துப் பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிக்கும் போகும் மாணவர்களின் நிலையும் இதேதான். தமிழ்த்துறைகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும் காலத்தில் இலக்கியம் மீது காட்டும் ஆர்வம் வியப்பைத் தரும். இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், இலக்கியப் போட்டிகளை நடத்துதல், இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்தல் என இலக்கியம் மீது அளவிறந்த ஈடுபாடு காட்டுவோர் கல்வி முடித்து வெளியேறிய பிறகு  இலக்கிய உலகிலிருந்து முற்றாக விலகிக்கொள்கிறார்கள். இலக்கிய ஈடுபாடு என்பது புள்ளிகள் பெறுதல் என்பதைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. விதிவிலக்காகச் சிலர் மட்டும் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.  மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையால் ஆயிரக்கணக்கான தமிழில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக முடிந்தது. ஆனால், எத்தனை படைப்பிலக்கியவாதிகளை உருவாக்க முடிந்தது என்பது ஆய்வுக்குரிய சிந்தனையாகும்.

      இளையோர் இலக்கியத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப் போவதற்குத் தகவல் ஊடகங்களும் காரணமாக உள்ளன. எல்லாம் சினிமா, எதிலும் சினிமா என்பதே வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் தாரக மந்திரமாக உள்ளது. அறிவிப்பாளர்கள் வாயைத் திறந்தாலே சினிமாத் தகவல்களாக அள்ளிக் கொட்டுகிறார்கள். எழுத்தாளர் அறிமுகம், நூல் அறிமுகம், இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல் போன்றவை இடம்பெற்றால் இலக்கியம் பற்றி உயர்ந்த மதிப்பை மக்கள் மனங்களில் உருவாக்க முடியும். நடிகர்களைக் கொண்டாடும் ஊடகங்கள் எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துகளையும் கொண்டாடும் மனப்போக்கைக் கொண்டிருப்பதில்லை. எனவே, இளையோர்கள் தாங்கள் காணும் யதார்த்த உலகில் இலக்கியத்திற்கான சமூக மதிப்பு இல்லாத நிலையைப் பார்த்து அதில் ஈடுபாடு காட்டாமல் விலகிக்கொள்கிறார்கள்.



      
மேற்கூறிய அனைத்துத் தடைகளிலிருந்து இளையோரை மடைமாற்றி இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்துவது எப்படி? எழுத்தாளர் அமைப்புகள் மனம் வைத்தால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளையோரை படைப்பிலக்கியத்தில் உருவாக்க முடியும். மலேசிய  எழுத்தாளர் சங்கம் இளையோரை மையமிட்ட பட்டறைகளை, கருத்தரங்குகளை (சிறுகதை, கவிதை) நடத்தி வந்துள்ளது. இளையோருக்கான இலக்கிய விருதுகளை ஏற்படுத்தி வழங்கியுள்ளது. ஆனால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஆனந்த விகடனின் மாணவர்ப் பத்திரிகையாளர் திட்டம் போல்  இளையோர் எழுத்தாளர் திட்டத்தை இங்குச் செயல்படுத்தினால் எழுதும் ஆர்வமுள்ளோரை அடையாளம் கண்டு தொடர் முயற்சியால் அவர்களைத் தீவிர இலக்கியம் நோக்கி வழிநடத்தலாம். அவர்களின் படைப்புகளை நூலாக்குவதன் மூலம் எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடலாம்.

      அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படும் மலாய் மொழி வளர்ச்சி நிறுவனமான டேவான் பஹாசா டான் புஸ்தாகா நீண்ட காலமாக, இளையோரை மையமிட்ட பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களின் எழுத்தாற்றலைப் பட்டைதீட்டி வருகிறது. அவர்களின் படைப்புகளை நூலாக்கி வருகிறது. இதன் விளைச்சலாக இன்று சந்தையிலே குவிந்து கிடக்கும் எண்ணற்ற மலாய் நாவல்களைக் குறிப்பிடலாம். உயர்கல்விக்கூடங்களில் பயின்ற மலாய் இளையோர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவல்களை எழுதி வெளியிடுகிறார்கள். நமக்கு அத்தகைய மொழி வளர்ச்சி மையம் உருவாக வேண்டும். அதன்வழி பல்வேறு இலக்கியப் பணிகளை அரசின் உதவியோடு மேற்கொள்ளலாம். இளையோரை இலக்கியம் நோக்கி ஈர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

      இடைநிலைப்பள்ளியில் ஒன்றாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம்வரை மலாய், ஆங்கிலப் பாடங்களுக்கு நாவல், நாடகம், கவிதை நூல்கள் இணைநூல்களாக உள்ளன. இலக்கியத்தின் பல்வேறு வடிவங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழ், சீன மொழிப்பாடங்களுக்கு அத்தகைய இணைநூல்கள் இல்லை. தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளிவரை வாசிப்பு நூல்கள் இணைக்கப்பட்டால் வாசிப்பின் சுவையை மாணவர்கள் உணரும் சூழல் உருவாகும். அவை பல்வேறு இலக்கிய வடிவங்களிலான நூல்களாக அமைந்தால் நிறைந்த பயனைத் தரும்.


      
இளைய படைப்பாளிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. உலகின் பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தாங்கள் இலக்கியத்தில் ஈடுபட தங்களின் ஆசிரியர்கள் வகுப்பறையில் வாசிப்பின் சுவைகாட்டி தங்களை ஈர்த்த கதையைப் பகிர்ந்துள்ளார்கள். ஆசிரியர்கள் இலக்கியத்தின் சுவைஞர்களாக மாறினால், அல்லது படைப்பிலக்கியவாதிகளாக இருந்தால் தம் மாணவர்களையும் இலக்கியம் நேசிக்கும் மனம் கொண்டவர்களாக மாற்ற முடியும். அதுவே, எழுதும்  ஈடுபாட்டை உருவாக்கும். தேர்வுக்காக மட்டும் மாணவரை உருவாக்கும் பட்டறையாக வகுப்பறையை எண்ணாமல் மனித மனங்களை மேம்படுத்தும் இலக்கியம் எனும் விருந்தைப் பரிமாறும் இடமாக மாற்ற வேண்டும்.

இளையோரை மையமிட்ட இலக்கியப் போட்டிகளை நடத்துவதும் இளையோரை இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்தும் அரிய முயற்சியாகும். மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையும் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கமும் ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகளில் மாணவர்க்கான பிரிவையும் ஏற்படுத்தி அவர்களை எழுதத் தூண்டி வருகின்றன. இத்தகைய போட்டிகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப்பட வேண்டும். போட்டிகளுக்கு எழுதத் தொடங்கிய பலர் பின்னாளில் எழுத்துலகில் தீவிரமாகச் செயல்பட்ட கதைகள் உண்டு.

இளையோர் வாசிப்பதற்கான இலக்கியப் படைப்புகள் மலேசியாவில்  குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கான இலக்கியப் படைப்புகளை இளையோரிடம் நீட்டி அவற்றின் சுவையறிந்து, புரிந்து இலக்கியப் படைப்பு நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகாது. இளையோர் எதிர்நோக்கும் சிக்கல்களும் வாழ்க்கை அனுபவங்களும் கொண்ட படைப்புகள் அவர்களுக்குப் பரிமாறப்படவேண்டும். அவையே, இலக்கியத்தைப் புரிந்துகொண்டு அனுபவிக்க அவர்களுக்கு உதவும். மலாய் மொழியில்  எண்ணற்ற இளையோர் இலக்கிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. 2013ஆம் ஆண்டில், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு இணைந்து, சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டியை நடத்தி 20 கதைகளை நூலாக்கியது. பாராட்டுக்குரிய இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.


      
ஒரு நாளில், பல மணி நேரம் சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவளிக்க இளையோர் தயாராக இருக்கிறார்கள். தங்களுக்குச் சம்பளம் தரும் நிறுவனங்களைவிட இந்தச் சமூக வலைத்தளங்களுக்கு பல மணி நேர உழைப்பைக் கொட்டுகிறார்கள். எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உற்றறிந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். நூறு பக்க நாவலை வாசிப்பதுகூட மலைப்பைத் தருகிறது. ஏடுகளைப் புரட்டித் தகவலை அறியும் ஆர்வம் குன்றி வருகிறது. முகநூலில் ஒரு லைக் போடுவதையே எழுத்துப் பணியாக நினைக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து, தமக்கு வந்ததை மற்றவருக்கு அனுப்பி வைப்பதையே எழுத்துச் செயல்பாடாக எண்ணிச் செயல்படுகிறார்கள்.

ஒவ்வொன்றையும் இலாப நோக்கோடு சிந்திக்கும் வணிகச் சூழலில் சமுதாயமும் நாடும் சிக்கியுள்ளன. பொருளாதார நோக்கில் இது பயன் தருமா என இலக்கியத்தையும் தங்களில் வணிகத் தராசில் நிறுத்துப் பார்க்கிறார்கள். பயன் தராத ஒன்றுக்கு மெனக்கெட பெற்றோர்களும் பிள்ளைகளும் தயாராக இல்லை. இலக்கியத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் அதனை உதாசினப்படுத்துவதில்லை. மொழியின் சுவையைக் காட்டியதும், இனத்தின் வரலாற்றைப் பதிவு செய்ததும், மொழியின் செழுமையைப் போற்றிக் காத்ததும், மனங்களைப் பண்படுத்தியதும், தன்னம்பிக்கை ஊட்டி வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை தந்ததும் இலக்கியமே என்பதறிந்தால் இலக்கியம் சுவைக்காத இளையோரை எண்ணிப்பார்ப்பது மிகுந்த வேதனையைத் தரும்.

1 comment:

  1. வணக்கம்
    ஐயா.
    நல்ல விவாத பொருளாக எடுத்துள்ளீர்கள். சின்ன வயதில் எமது தமிழ்சுவை இளம் மனதில் விதைக்கப்பட வேண்டும்..தாங்கள் சொல்லிய மூத்த இலக்கிய வாதிகளுடன் மலேசிய இலக்கிய வளச்சி குன்றி விடுமா?என்ற ஐயம் ஏற்படுகிறது..இப்போது இருக்கிற இலக்கிய வாதிகள் பாடசாலை மட்டத்தில் மணவர்களுக்கு இடையில் போட்டிகளை நடத்தி ஊக்கி விக்க வேண்டும்.

    வான வில் தொலைக்காட்சியில் மாணவர் முழக்கம் என்ற பேச்சு திறன் போட்டி நடத்து முடிந்து விட்டது அதில் மாணவர்களின் ஆர்வத்தை பார்க்க முடிந்தது.. சிறப்பான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete