நம் குரல்

Thursday, January 27, 2011

விடுதலை


விடுதலை 1

விட்டு விலகாத இருள் வடிந்து
வழியெங்கும் வெளிச்ச வெள்ளம்
கைபிணைத்த விலங்குகள் நொறுங்கிவிட்டன

வாருங்கள்!
ஒரே உணர்வில் ஒரே சிந்தனையில்
கைகளை உயர்த்தி எங்களோடு இணையுங்கள்

பேசுங்கள் பேச்சுரிமைக்குப் பஞ்சமில்லை
ஆயினும் மெதுவாகப் பேசுங்கள்
வரம்புக்குள் கேளுங்கள்
நினைத்ததெல்லாம் பேசாதீர்கள்

இழிசொற்கள் முதுகில் மேயும்
பொருட்படுத்தாதீர்கள்
கட்டிய ஆடை அவிழ்க்கும்
முயற்சிகள் அரங்கேறும்
அலட்டிக்கொள்ளாதீர்கள்
விடுதலைத் தீபத்தைக் கைகளிலேந்தி
விடுதலை கீதத்தை உரக்கப் பாடி
புறப்படுங்கள்!
கரை புரளும் உங்களின் உற்சாகம் கண்டு
ஆனந்தம் எங்களுள் ஆரவாரிக்கிறது


விடுதலை - 2

விடுதலையை உச்சரித்த உதடுகளை
தேடித் தேடித் தின்றுத் தீர்த்தன
இதயமில்லாத ஆயுதங்கள்

முள்வேலிக்குள் முடங்கிய
எஞ்சிய முகங்களிலும் முகாமிட்டது
மரணத்தின் கோர பிம்பங்கள்

வல்லரசுகள் அப்பாவிகளாய் ஒதுங்க
மதமென்றால் முண்டாசு தட்டுவோர்
கண்டும் காணாமல் விலக

ஒரு தலைமுறைக்கே
வாய்க்கரிசி போட்ட சாதனையில்
பூரித்துக் கிடக்கிறது இழிந்தவர்களின் பூமி

பக்கமிருந்தோருக்குப் பரிதவிப்பு இல்லை
கைகளைக் கட்டிக்கொண்டு
வேடிக்கை பார்ப்பதில் நாம் வெற்றி பெற்றோம்

ஒவ்வொரு விடியலிலும்
அறிக்கைகளோடு அரசியல் நடத்தும்
நமக்குப் புரியுமா?

விடுதலை வேள்விக்காக
உடல்களையே தானம் தந்து
கல்லறைகளில் முன்னுரை எழுதிய உன்னதம்

No comments:

Post a Comment