நம் குரல்

Friday, July 15, 2011

யாருமற்ற நாளில்


யாருமற்ற நாளில்
பேய்களோடு கழிந்தது பொழுதெனக்கு
பேய்களோடு பேசக்கூடாது என்று
அப்பா சொன்னதும் காரணமாயிருக்கலாம்
என் பேய் சகவாசத்துக்கு

சன்னல் கதவுகள் படபடக்க
வேகமாக வீசிய காற்றின் கைபிடித்து
வீட்டுக்குள் ஏதோ நுழைவது போலிருந்தது
கைகளில் படபடத்த
‘கல்லறையின் கூச்சல்’ நாவலின் பக்கங்களில்
பதுங்கிருந்த பேய்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்து
என்னோடு பேசத்தொடங்கின

ஒவ்வொரு பேய்க்கும் ஒவ்வொரு கோர முகம்
எல்லாப் பேய்களையும் ஒரே முகத்தோடு
கற்பனை செய்த தவறெனக்குத் தெரிந்தது

பேய்களிடமும் நிறைய கதைகள் இருந்தன
ஊர் முழுக்கச் சுற்றிச் சேகரித்த கதைகளைச்
என்னிடம் சொல்லத் தொடங்கின
தூக்குப்போட்டு இறந்த தொங்கவீட்டு முனியாண்டி
கங்காணியால் கர்ப்பமாகி தீயில் கருகிய மாலா
சுடுகாட்டு முச்சந்தியில் பஸ்சுக்குள் சிக்கிய மோகன்
குளிக்கப்போய் காணாமல் போன மனோகரன்
காதலன் கைவிட்டதால் மாத்திரைகளை விழுங்கிய உமா

கதைகளிலிருந்து வெளியேறிய புதிய பேய்கள்
என்னைச் சுற்றி நின்று உற்றுப் பார்க்க
நாவலில் பக்கங்களில் மேலும் சில பேய்களோடு
பேசத் தொடங்கினேன்

பேய்களோடு பேசும் அனுபவம்
திகிலாக இருந்தாலும் பிடித்திருந்தது
நள்ளிரவு தாண்டியும் ஆளில்லாத வீட்டில்
விருப்பத்தோடு அலையும்
பிரியமான பேய்களை அழைத்துக்கொண்டு
முச்சந்திச் சுடுகாடுவரை போய்
விட்டுவிட்டுத் திரும்பினேன்


No comments:

Post a Comment