நம் குரல்

Friday, November 21, 2014

இருந்ததும் இருப்பதும்

      
என்ன இருக்கிறது என்று கேட்டார்கள்
எதைச் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்
நான் இருப்பதாகச் சொல்வது
அவர்களுக்குத் திருப்தி இல்லாமல் போகலாம்
அல்லது அவர்களுக்குத் தேவையில்லாமல் போகலாம்
ஒரு பொருட்டாகக் கருதாமல் போகலாம்

ஒன்றும் இல்லையா என்று அடுத்த கேள்வி
நிறைய இருந்தன, இப்போது சந்தேகமாக இருக்கிறது என்றேன்
ஒன்றை மட்டும் சொன்னால் சரியாக இருக்குமா?
இந்த ஒன்றை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டால்?
ஒவ்வொன்றும் ஒரு மாதிரி என்றால் நம்புவார்களா?

இருக்கிறதா இல்லையா தெளிவாகச் சொல்
குரலில் கடுமை ஏறியது
இருப்பதாக எனக்குப் படுகிறது.
உங்களுக்கும் இது இருக்குமா எனத் தெரியவில்லை என்றேன்
இருப்பதெல்லாம் கண்ணுக்குப் புலப்படுமா?
கண்ணுக்குப் புலப்படுவதெல்லாம் உண்மையில் இருக்குமா?

ஏன் அது இல்லை? இது இருக்கிறது என்று கேட்டார்கள்
அது இது என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை
இரண்டும் ஒன்றுதான் என்றேன்
அதுதான் இதுவாக இருக்கிறது
இதுவே அதுவாக ஆகலாம் என்றேன்

நேற்று இருந்தது இல்லையா என்று கேட்டார்கள்
அது இன்னும் நேற்றில்தான் இருக்கிறது என்றேன்
இன்று அதுதான் நிறம் மாறியிருக்கிறது
நேற்றிலிருந்து பார்த்தால் இன்றில் தெரியும் என்றேன்

ஏன் அதுபோல இது இல்லை என்று தொடர்ந்தார்கள்
அதுபோல் இது இருக்கிறது நம்புங்கள் என்றேன்
சந்தேகத் தோரணையில் என்னை வெறித்தார்கள்

இருப்பதாகச் சொன்னார்கள் அது இல்லையா என்றார்கள்
இன்று இருப்பது நாளையே இல்லாமல் போகலாம்
இன்று இருந்த இடத்தில் நாளை அதன் தடயம் ஏதும்
மிஞ்சலாம் என்றேன்

நாளை இது இருக்குமா? இறுதியாய்க் கேட்டார்கள்
உறுதியாய்ச் சொல்வது சிரமம் என்றேன்
நாளைதான் தெரியும்
நாளைக்கு வாருங்கள் என்றேன்


2 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதை குறித்து கருத்துரைத்தற்கு நன்றி. ஆழ்மனம் என்னையுமறியாமல் ஏதேதோ சிந்தனைவயப்படும்போது இந்த மாதிரி
    வரிகள் வருகின்றன.

    ReplyDelete