நம் குரல்

Friday, November 21, 2014

மரண வீட்டிலிருந்துமரண வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்
ஒரு சொல்லையும் செலவு செய்யாமல்
ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமல்
ஒரு முகத்தையும் ஏறெடுக்காமல்
ஒரு முகத்தை மட்டும் நினைவிலேந்தி

மரண வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்
விடைபெற்றுப் போனவன்
இறுதியாய்ப் பேசிய சொற்கள்
இறுதியாய்ச் சிந்திய புன்னகை
இறுதியாய்க் கழித்த நிமிடங்கள்
இறுதியாய்க் கொண்ட ஆசைகள்
என்னைப் பின் தொடர்கின்றன

மரண வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்
நடுக்கூடத்தில் கால்நீட்டியவன் எழுந்து
ஏதோ நூலின் பக்கங்களைப் புரட்டுகிறான்
கனவுகளை ஓவியமாய் வரைகிறான்
பிடித்த பாடலை உரக்கப் பாடுகிறான்
பரிமாறும் உணவைச் சுவைக்கிறான்
பிள்ளைகளின் தலைமுடியைக் கோதுகிறான்
உடலில் வியர்வையை வழிய விடுகிறான்
என் கைகளைப் பற்றிக் குலுக்குகிறான்

மரண வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்
காற்றில் கலக்கின்றன பெருமூச்சுகள்
வண்ணம் தோய்ந்த காட்சிகள்
மகிழ்ச்சி அதிர்வலைகள்
கடந்துபோன கணங்கள்
யாருமறியாச் சில  இரகசியங்கள்

மரண வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்
எனக்கு முன்னே இருள் கவிழும் பாதை
எனக்கு முன்னே யாருமில்லாத தனிமை
எனக்கு முன்னே நீளும் கூர்நகங்கள்
எனக்கு முன்னே எழும் ஓலங்கள்

மரண வீட்டிலிருந்து வெளியே வருகிறேன்
எனக்குப் பக்கத்தில் என்னோடு
நிறைய கால்கள்2 comments:

 1. வணக்கம்
  ஐயா

  கவிதை அருமையாக உள்ளது திகில் நிறைந்த சொல் வீச்சுக்கள் மனதை பயம் காட்டுகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அண்மையில் ஒரு மரணம் என் மனத்தை உலுக்கியது. மரணம் குறித்த நினைப்பு எப்பொழுதும் ஒரு நிச்சயமற்ற வாழ்வின் யதார்த்தத்தை முகத்தில் அறைந்து போகிறது. அதைப் பதிவுசெய்ய விழைந்தேன். இந்தக் கவிதை பிறந்தது.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete