நம் குரல்

Sunday, May 15, 2011

நமக்கு ஒரு மலாய்மொழி நாளேடு மலருமா?



இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்காமல் ஏதோ தமிழ் நாளேடுகளுக்கு எதிரான கருத்தாகத் தவறாக இதனைப் புரிந்துகொள்ளவேண்டாம். இங்கே உணர்ச்சிக்கு இடந்தராமல் அறிவுபூர்வமாக, ஆழமாகச் சிந்திக்குமாறு அன்போடு விழைகிறேன்.

மலேசியா சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியரின் நிலை மனநிறைவு தரும் வகையில் இல்லை. எல்லாத் துறைகளிலும் இன்னும் மற்ற இனங்களைவிட பின் தங்கியே உள்ளோம். அடையாளக் அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவற்றிலும் கோட்டை விட்டுவிட்டு அதற்காக அரசாங்கத்திடம் மனுசெய்யும் அவல நிலை நீடிக்கிறது. விரைவில் பொதுத் தேர்தல் வரப்போவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. நமது தேவைகள், கல்வி, பொருளாதாரம், சமயம் போன்றவற்றில் நிலவும் மனக்குறைகள், சமுதாயம் எதிர்நோக்கும் சிக்கல்கள் இவை யாவும் அரசின் காதுகளுக்குச் சென்று சேருகிறதா?

நம் பிரச்சினைகளை நம் தமிழ் நாளேடுகளில் எழுதுகிறோம். விலாவாரியாக அலசுகிறோம். கணக்கில்லாமல் அறிக்கைகளை வெளியிடுகிறோம். இவற்றையெல்லாம் அரசு கவனித்து நடவடிக்கை எடுக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆனால், இவை எந்த அளவுக்கு அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது? 54 ஆண்டுகளாக நமக்குள்ளேயே பழங்கதை பேசிக் காலம் கடத்திய கதையாகத்தான் இதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஊடகத்துறையில் நமக்கும் அரசுக்கும் இடையே தொடர்புப்பாலமாக ஒன்று இல்லாத நிலைமைதான் இன்றுவரை நீடிக்கிறது. நம் பிரச்சினைகளை மற்ற மொழி ஏடுகளில் (மலாய், ஆங்கிலம்) எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நம் இனத்தின் மனக்குறைகள் நமக்குள்ளேயே விவாதிக்கப்பட்டு காலப்போக்கில் மறக்கப்படும் அவலம்தான் இன்றுவரை நீடிக்கிறது. மலாய்க்காரர்களுக்கு ‘உத்துசான் மலேசியா’, ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ்கள் உள்ளன. சீனர்களுக்கு ‘ஸ்டார்’ ஆங்கில நாளிதழ் இருக்கிறது.

நம்மைப் பற்றி மலாய் ஏடுகளில் குறைகூறித் திட்டி எழுதினால் உடனே தவறாமல் மொழிபெயர்த்து மறுநாளே வெளியிட்டு நம்மவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். ஆனால், மலாய் ஏடுகளில் நம் தமிழ் நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மொழிபெயர்ப்பு வருகிறதா என எண்ணிப் பாருங்கள்.

நம் தலைவர்கள் நம் பிரச்சினைகளை அரசுக்குக் கொண்டு சென்று அவற்றுக்குத் தீர்வுகாண முயன்று வருவதை மறுக்க முடியாது. ஆனால், அது முழுமையான, உடனடி பலனைத் தரும் என்று எதிர்பார்க்க முடியுமா? நம் இனத்தின் உண்மையான மன உணர்வுகளை, கொத்தளிப்புகளை, அவசரத் தேவைகளை உடனே அரசின் காதுக்கு எட்டச் செய்ய முடியுமா? அமைச்சரவைக்குக் கொண்டு போக வேண்டுமானால் ஒரு வாரம்வரை காத்திருக்க வேண்டுமே!


நம் தலைவர்களில் தமிழ் தெரியாத தலைவர்கள் இப்பொழுது உருவாகி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வானொலிப் பேட்டியில் இளைஞர் தலைவர் ஒருவர், தமக்குத் தமிழ் தெரியாது என்றும் தம் மனைவி தமிழ் நாளிதழ்களைப் படித்துத் தமக்குச் சமுதாயச் செய்திகளைச் சொல்லி உதவுவதாகச் சொன்னார். இப்படி நம் நிலைமை மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத, தமிழைத் தெளிவாகப் பேசத்தெரியாத நம்மில் சில தலைவர்களை நம்பி இனி காலத்தைக் கடத்த முடியுமா? இவர்கள் சமுதாய உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொண்டு அரசுக்கு முறையாக, தெளிவாகச் சொல்லி உரிமைக்குப் போராடி வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

எனவேதான், 54 ஆண்டுகளில் நாம் செய்த தவற்றைத் திருத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நமக்கும் அரசுக்கும் சரியான தொடர்பினை ஏற்படுத்த நமக்குச் சொந்தமான ஒரு மலாய் நாளிதழையோ வார இதழையோ நாம் வெளியிட வேண்டும். அது நம் இனத்தின் உணர்வுகளை, குறைகளை, அரசுக்குப் புரியும் மொழியில் பேசவேண்டும். உடனடி செயல் நடவடிக்கைக்கு அது வழிகோலட்டும். நம் இனம் குறித்த மலாய் ஏடுகளில் வெளிவரும் எதிர்மறையான கருத்துகளுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றும்.

‘இண்டர்லோக்’ மலாய் நாவல் பிரச்சினையில் என்ன நடந்தது? நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை எல்லா ஏடுகளிலும் சூடு பறந்தது. நாம் கண்டனம், போலீஸ் புகார், நாவல் எரிப்பு, சந்திப்புக் கூட்டம் என பல வழிகளில் நம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எல்லாம் முறையாக அரசின் காதுக்குப் போனதா? கேள்விக்குறிதான். மலாய் ஏடுகளில் ‘இண்டர்லோக்’ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு பிரச்சினைக்குப் போய்விட்டார்கள். நாமோ இன்னும் இது குறித்துத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்; விடாமுயற்சியோடு தொடர்ந்து அறிக்கைகளை வெளியிடுகிறோம்.

நம் தமிழ் நாளேடுகளில் பத்தி (columnist) எழுத்துகளை எங்காவது பார்க்க முடிகிறதா? நாளேட்டின் ஆசிரியர் கூறும் கருத்துகளும் கேள்வி பதில்களும் போதுமா? மற்ற மொழி நாளேடுகளில் ஒவ்வொரு நாளும் பலதுறை அறிஞர்கள் தம் கருத்துகளை முன் வைத்து எழுதுகிறார்கள். இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம் என எத்தனையோ துறைகளில் அறிவுசார்ந்த சிறந்த சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். நம்மிடையேயும் பல்துறை அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான களம் தமிழ் ஊடகங்களில் இருக்கிறதா? தமிழ் நாளேடுகள் அத்தகைய பத்தி எழுத்துகளுக்கு வாய்ப்பு வழங்குகிறதா? நமக்கான ஒரு மலாய்மொழி நாளேட்டில் அவர்களில் சிந்தனைகள் அரங்கேறி அவை நமக்கும் அரசின் பார்வைக்கும் வைக்கப்பட்டால் அதன் விளைவு எப்படி அமையும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இத்தனைக்கும் நம் சமூகத்தில் மலாய் மொழியில் புலமைபெற்ற கல்வியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் சிந்தனைகள் சமுதாய வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் பயன்படாமல் வீணாகிக்கொண்டிருக்கிறது. ஏதோ நாம் தமிழ் மட்டும் அறிந்த ஒரு சமூகமாகவும் மற்ற ஏடுகளில் ‘உங்கள் கடிதம்’ பகுதிக்கு மட்டும் எழுதி நம் மனக்குறைகளை எப்போதாவது முன்வைக்கும் இனமாகவும் இருக்கிறோம்.

நம் சமூகத்தில் ஐம்பது விழுக்காட்டினர் தேசியப் பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்புகின்றனர். சமூகத்தில் தமிழ் படிக்கத் தெரியாத ஒரு பகுதியினர் எதைப்படித்து நம் சமூகப் போக்கை, சிக்கல்களை அறிந்துகொள்வார்கள்? அவர்களுக்குச் சமுதாயச் சிந்தனையை ஊட்டி நம் இனத்தின் பக்கம் ஈர்த்து அரவணைப்பது எப்படி? இனத்தின் நீரோட்டத்தில் கலக்காமல் தனித்து நிற்கும் அவர்களை ஒரு மலாய் ஊடகத்தின் வாயிலாக இனமான உணர்வை ஊட்டி, பண்பாட்டின் சிறப்பை உணர்த்தி, நம்மோடு இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ‘இண்டர்லோக்’ தமிழில் எழுதினால் அவர்களால் படித்துப் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், அதையே மலாய்மொழியில் கவிதையாக, கட்டுரையாக அவர்களும் எழுதுவார்கள். மற்றவர் எழுதியதையும் படிப்பார்கள்.

எங்காவது வீடுடைப்பு, கோயில் தகர்ப்பு, சமூகச் சிக்கல் என்றால் நாம் தமிழ் நாளேடுகளில் செய்தியோடு தமிழ்மொழியோடு மலாய் மொழியில் எழுதப்பட்ட பதாதை அல்லது சுவரொட்டியை ஏந்திய முகங்களின் படங்களைப் பார்க்கலாம். ஏன் தமிழில் மட்டும் வாசகங்களை எழுதாமல் மலாய்மொழியிலும் எழுதுகிறோம். அப்படியாவது சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு அல்லது அரசுக்கு தெரியட்டும்; புரியட்டும். அப்படியாவது சிக்கல் தீரட்டுமே என்ற நோக்கத்தில்தானே? அதே நோக்கத்தை விரிவாக்கி நமக்கான ஒரு மலாய்மொழி நாளேடாகக் கற்பனை செய்து பாருங்கள். பல சிக்கல்களை அரசின் காதுகளுக்கு நேரடியாக நாம் கொண்டுபோக முடியும்.

‘ஒரே மலேசியா’ கொள்கையை அரசு அமல்படுத்திப் பல்லின மக்களின் ஒற்றுமையை வலியுறுத்திப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஓர் இனம் மற்ற இனங்களின் பண்பாட்டை, சமயத்தைத் தெரிந்துகொண்டால்தானே உண்மையான ஒற்றுமை மலரும்? நம் இனத்தின் பண்பாடு, சமயம், இலக்கியம் பற்றி அறிந்து நம்மைப் புரிந்துகொள்ள மற்ற இனங்களுக்கு இங்கே வாய்ப்பு உள்ளதா? ஒரு மலாய் மொழி நாளேட்டை நாமே நடத்தினால் இதைச் சாத்தியமாக்கலாம்.

நாம் நம் மொழியில் உரக்கக் குரல் எழுப்புகிறோம். அரசுக்கு அது கேட்கிறது என உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். அரசுக்குப் புரிகிற மொழியில் காதுக்குப் பக்கத்தில் போய்க் கத்திக் குரல் எழுப்பிப் பார்க்கலாம். இதற்குப் பிறகும் புரியவில்லை, தெரியவில்லை, ஏன் தெளிவாகச் சிக்கலைச் சொல்லவில்லை என்று சாக்குப்போக்குச் சொல்ல முடியாது அல்லவா?

நமக்குத் தமிழ் நாளேடு மிகவும் முக்கியம். அதை யாரும் மறுக்க முடியாது. அவற்றோடு நின்றுவிட்டால் நமக்குத்தான் பெருத்த நட்டம். பல உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நமக்குத் கூடுதல் பலமாக மலாய் நாளேடு அமையும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

நான் உறுதியாக நம்புகிறேன். நமக்கு மலாய் நாளிதழ் இருந்தால் முன்னைவிட இன்னும் தெளிவாக உடனே அரசின் பார்வைக்கு நம் சிக்கல்களைக் கொண்டுபோக முடியும். செய்வோமா? பூனைக்கு யார் மணி கட்டுவது?


No comments:

Post a Comment