கால மகளே
உன் காலடியில்
உதிர்ந்து கிடக்கின்றன
முன்னூற்றுச் சொச்சம் பூக்கள்
மீண்டும் வசந்தம்
உன் கூந்தலை
வருட வருகிறது
புத்தாண்டு புனைந்து
புன்னகைக்கிறாய் நீ
நீ நடக்கையில்
காலச்சக்கரம் சுழல்கிறது
காலமகளே உன்றன்
வயதறியோம் நாங்கள்
எங்கள் வசதிக்காகவே
உன் நாமம்
நீ நடந்த பாதையில்
பயங்கரவாதத்தின்
இரத்த வாந்தி
தின்று செரித்த
தீவிரவாதத்தின் ஏப்பம்
காதுகளுக்குக் கேட்கிறது
ஏவுகணைகளை ஏற்றிக்கொண்டு
வெள்ளைப் புறாக்களை
வானில் விடும்
வல்லரசுகள்
பசிக்கு இரை தேடி
இரையான
பட்டினி மனிதர்கள்
வன்முறையை விளக்கென்று
விரும்பி விழுந்த
இளம் விட்டில்கள்
சினிமாக் கனவுகளில்
சிக்கிச் சிக்கித் தொலைந்த
நல்லவர்கள்
காலமகளே நீ
கண் கலங்குகிறாய்
உன் கடைவிழி திரள்கின்றன
கண்ணீர்ப் பூக்கள்
உன் வருகை பார்த்து
உலகப் பந்தைப் பற்றுகிறது
பரபரப்புக் காய்ச்சல்
எங்கும் இறைந்து கிடக்கிறது
வெளிச்ச வெள்ளம்
இதோ எங்கள்
கைநிறைய கவிதைகள்
வாய் நிறைய வாழ்த்துகள்
மனம் நிறைய
பிரார்த்தனைகள்