வாசிப்பின் சுவை உணர்ந்து நான் எழுதத்
தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமான பெயர் செர்டாங் எல்.முத்து. மறைந்த என்
அண்ணன், ந.பச்சையப்பன் எல்.முத்துவின்
எழுத்தின் மீது மிகுந்த மதிப்பு
கொண்டிருந்தார். சிறுகதை எழுத்தாளரான என் அண்ணன் மூலமாகவே பல
படைப்பாளர்கள் எனக்கு அறிமுகமானார்கள். எல்.முத்துவின் சிறுகதை ஏடுகளில் வரும்போது
அதைப் பற்றித் தம் நண்பர்களிடம் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதன் காரணமாக
எல்.முத்துவின் சிறுகதைகளை நான் தேடிப் படிக்கத் தொடங்கினேன். எம்.ஏ.இளஞ்செல்வன், சீ.முத்துசாமி, ஆ.நாகப்பன்,
சாமி.மூர்த்தி, பி.கோவிந்தசாமி என்று நான் விரும்பி வாசிக்கத் தொடங்கிய பட்டியலில் எல்.முத்துவும்
இருந்தார்.
அப்போது
நான் இடைநிலைப்பள்ளியில் பயின்ற காலம். தகவல் அமைச்சின் வெளியீடான உதயம் இதழ் கண்ணையும்
கருத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருந்தது. எம்.துரைராஜ்
அதன் ஆசிரியராக இருந்தார். உதயத்தில் மாதந்தோறும் எல்.முத்துவின் நேர்காணல்
கட்டுரை தொடர்ந்து வந்தது. வெற்றிபெற்ற பலரையும் நேர்காணல் கண்டு வாசகனிடத்தில் தன்முனைப்பை ஊட்டும் கட்டுரைகளை
எழுதி வந்தார். அவற்றையும் தொடர்ந்து வாசித்து வந்தேன். அவரின் மொழிநடையும் மொழி
ஆளுமையும் வாசிக்கும் உள்ளங்களை எளிதில் ஈர்ப்பதை நான் உணரத் தொடங்கினேன்.
வெற்றிபெற்ற பலரை நேர்காணல் கண்டதால் தானும் ஊக்கம்பெற்றுச் செர்டாங் விவசாயப்
பல்கலைக்கழகத்தில் எளிய பணியில் இருந்தவர்,
கட்டுமானத்துறையில் ஈடுபட்டுப் பின்னாளில் வெற்றிபெற்ற தொழில் அதிபராக உயர்ந்ததை
அறிந்தேன்.
அவரின்
‘விரதங்கள்’ சிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டு விழாவில் என் அண்ணன் கலந்துகொண்டு நூலைப்பெற்று வந்தார். மலேசியத்
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை வெற்றிபெற்ற
அல்லது தேர்வுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பாக அது இருந்தது. அந்நூலை மிகுந்த
ஆர்வத்தோடு படித்ததை இப்போது நினைத்துப்
பார்க்கிறேன். ‘விகார விவகாரங்கள்’,
அந்தரங்க மன அசைவுகள்’, ‘நிர்வாணங்கள்’, புறக்கணிப்புகள்’ எனச் சிறுகதைகளின் தலைப்புகளே வாசகனை
வாசிக்கத் தூண்டுபவை. எளிய கதையானாலும் சொல்லும் முறையால்,
எழுத்து நடையால் கனமான படைப்புகளாக, வாசகனின் மனத்தில்
அழுத்தமான பாதிப்புகளை விதைக்கும் வண்ணம் சிறுகதைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, கதைமாந்தர்களின் மனவோட்டங்களை ஆராய்ந்து உளவியல் பார்வைகொண்ட
படைப்புகளாக அவை இருந்தன. அகன்ற வாசிப்பும் சிறந்த கதைகளைப் படைக்க வேண்டும் என்ற
துடிப்பும் கடுமையான உழைப்பும் இளவயதிலேயே எல்.முத்துவின் சிறுகதை வெற்றிக்குக்
காரணங்களாக அமைந்தன.
எல்.முத்துவின்
சிறுகதைகளை ஆழ்ந்து படித்த காரணத்தால், நான்
தொடக்கத்தில் எழுதிய சிறுகதைகளில் அதன் பாதிப்புகள் என்னையுமறியாமல் படியத்
தொடங்கின. என் சிறுகதைத் தொகுப்பான ‘மௌனம் கலைகிறேன்’ நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைத் தலைப்புகளில் இதனைக் காணலாம். நிர்மலமான
மனங்கள், மாறுவேடப் புருசர்கள்,
ரணங்கள், மன விகாரங்கள், பூரணத்துவம்
போன்ற தலைப்புகள் குறிப்பிடத்தக்கவை. வாசகனை ஈர்த்து கதைக்குள்ளே இழுக்க தலைப்பு
சற்று மாறுபட்டதாக இருக்கவேண்டும் என்ற முனைப்பு நான் எல்.முத்துவிடம்
கற்றுக்கொண்டது.
அது
மட்டுமன்று. அத்தொகுப்பில் இடம்பெற்ற சில கதைகளில் கணவன் மனைவி இடையே எழும் உளவியல்
சிக்கலை ஆராயும் கதைகளும் இருந்தன. திருமணமாகாத 23 வயதிற்குள்ளாக நான் அத்தகைய
சிறுகதைகளை எப்படி எழுதினேன்? “எப்படி இப்படியெல்லாம்
எழுதுற?” என்று நண்பர்கள் கேட்டதுண்டு. வாழ்க்கை அனுபவம்
இல்லாவிட்டாலும் வாசிப்பு அனுபவம் படைப்புலகத்தில் புதிய கதவுகளைத் திறந்துவிட்டு நம்மை உள்ளே அழைத்துப்
போகிறது. எல்.முத்துவோடு எம்.ஏ.இளஞ்செல்வனும் ஜெயகாந்தனும் இன்னும் சிலரும்
அத்தகைய அனுபவங்களை மனத்தில் நிறைத்து
கற்பனா உலகத்தில் தனித்துப் பயணிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்.
2009ஆம்
ஆண்டில் ‘என் கனவுகளும் கொஞ்சம் கவிதைகளும்’, ‘இலக்கியப் பயணத்தில் ஹைக்கூ பாடகன்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா காஜாங் நகரில் நடைபெற்றது. எல்.முத்துவை அன்போடு
அழைத்தேன். என் அருமை நண்பர் இராஜனோடு வந்தார். சிறப்பு வருகையாளராய் உரையாற்றினார். தொழில் அதிபராய் உயர்ந்து இலக்கியத்திலிருந்து விலகியிருந்தாலும் அவரின்
அடிமனத்தின் ஆழத்தில் இலக்கியத்தின் மீதான காதல் குறையவில்லை என்பதை அவரின் உரை
பறைசாற்றியது. என் படைப்புலகத்தையும் அவர் பாதித்திருக்கிறார் என்பதறிந்து
நெகிழ்ச்சியோடு நிகழ்வில் நினைவு கூர்ந்தார். அதன் பிறகு,
என்னைத் தம் இல்லத்திற்கு ஒரு நாள் அழைத்தார். தம் அன்பு மனைவியோடு
உபசரித்தார். என் நூல்களின் ஐம்பது
தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை ஜோகூரில் உள்ள மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாகக்
கூறினார்.
இடையிலே, அவர் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொண்டேன். அவரோடு நெருங்கிப் பழகும்
வாய்ப்பு குறைந்தது. ஆனால், அவர் தொடர்ந்து கோயில்
திருப்பணிகளுக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் அள்ளிக்கொடுத்து ஆதரவு அளித்து
வந்ததை அறிவேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்காகப் பெரும் பொருளுதவி
செய்தார்.
கடந்த
9.6.15 செவ்வாய்க்கிழமை (அவரின்
இறப்புக்கு முதல் வாரத்தில்) கைப்பேசியில் அழைத்தேன். காஜாங்கில் மீண்டும் என் இரு
கவிதை நூல்களின் வெளியீட்டு விழா. அழைத்தேன். நீண்ட நேரம் மகிழ்வோடும் குறையாத
அன்போடும் உரையாடினார். தன் தொழில், குடும்பம், இலக்கியம் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொண்டார். “அழைப்பிதழ்ல பேரு
எல்லாம் வேண்டாங்க. நான் நிகழ்ச்சிக்கு வரேன். நிகழ்ச்சி தகவலை, அழைப்பிதழை வாட்ஸ்ப்பல அனுப்புங்க போதும். உங்களுக்கு என் ஆதரவு
என்னைக்கும் இருக்கும்.”
நூல் வெளியீட்டு விழாவில் அவர் இல்லை. நிகழ்வில்
ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் அவரை நினைவு கூர்ந்தோம். 2009இல் என் நூல் வெளியீட்டு
விழாவில் அவர் கலந்து கொண்டபோது பிடித்த படங்களை மனம் மீண்டும் புரட்டிப்
பார்த்தது. மனம் கனத்தது. ‘எத்தனையோ மரணங்கள் எனைக் கடந்து போனதுண்டு.
எத்தனையோ மரணங்கள் எனை நனைத்துப் போனதுண்டு’ என்று நான்
எப்போதோ எழுதிய வரிகளில் மீண்டும் என் மனம் மூழ்கியெழுந்தது. சில மரணங்களில் நீதி
இல்லை; இரக்கம் இல்லை; நியாயம் இல்லை.
மனம் ஒப்புக்கொள்ள முடியாத அநீதி மட்டும் எஞ்சியிருக்கிறது. எல்.முத்து – அவர்தம்
அன்புத் துணைவியார் மரணங்களில் அதுதான்
மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.
“சமூகத்தின்பால்
எனக்கேற்பட்ட சுகமான- வேதனையான இருவேறு உணர்ச்சி வேறுபாடுகளால் எழுந்த உணர்வுகளின்
பீறிடலால் என் இதயத்தில் கொப்பளித்து
நின்ற குருதியை மையாகப் பேனாவில் இறக்கி,
சத்தியத்தின் சிந்தனை முரண்படாமல் இக்கதைகளை ஆக்கியுள்ளதாக நான் உணர்கிறேன்” என்று
தன் சிறுகதை நூலில் எல்.முத்து குறிப்பிடுகிறார்.
சத்தியத்தின்
பாதையில் நின்று அற்புதமான படைப்புகளைத் தந்த இனிய இலக்கிய உள்ளம் எல்.முத்து. ‘படைப்பாளிக்கு மரணமில்லை’ என்ற கூற்றுதான்
எல்.முத்துவை நேசித்த அனைத்து உள்ளங்களில் ஆறுதலைத் தரும் மருந்தாக இருக்கிறது.