நம் குரல்

Thursday, March 31, 2011

அப்புவும் நானும்என்னை எதிர்பார்க்கவில்லை
அப்புவின் கண்களில் மிரட்சியும் பயமும்
உள்நுழைந்த என்னை எதிர்கொண்டன

அவன் கைகளில்
பறந்துவிட்ட ஏதோ பறவையின்
மிருதுவான சிறகுகள் மிஞ்சியிருந்தன

பறிபோகுமோ என்ற பதட்டமோ
சிறகு இறுக்கிய கைகள்
பின்னால் பதுங்கின

அறை முழுதும்
சிறகசைத்த பறவைகளின் கீச்சொலியும்
அவற்றின் பிம்பங்களும் நிறைந்திருந்தன

நீட்டிய பொம்மையை நிராகரித்து
வேகமாய் ஓடிக் கட்டிலுக்கடியில் இருந்த
கரடியைத் தாவியணைத்தான்

அங்கே நிராதரவாய்
காயங்களோடு சில மிருகங்கள்
ஒதுங்கிக் கிடந்தன

சுவர்களில் அவன் புதைத்து வைத்த
மிருகங்கள் வெளியேறி ஓசையெழுப்பியதை
ஆசையாக ரசித்தான்

அறையின் மூலையில்
அவன் கிழித்து வீசியெறிந்திருந்த
படத்திலிருந்து வெளியேறிய கடவுள்
அழுதுகொண்டிருந்ததைக் கண்டான்
கைகளைத் தட்டிக் கொண்டாடினான்

அவன் கைகளில் சிக்கிப்
பொம்மையாகும் வழியறியாது
வெளியேறினேன்

(பாலமுருகன் எழுதிய அப்பு பற்றிய 3 கவிதைகளைப் படித்த
காரணத்தினால் என்னை மறந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அப்பு
என்னோடு இருந்ததை உணர்ந்தேன். அதைக் கவிதையாக எழுத
மனம் விழைந்தது. அதன் விளைவே இந்தப் படைப்பு.
பாலமுருகனுக்கு நன்றி)


Monday, March 28, 2011

யார் ஆண்டாலும்


தேர்தல் பரபரப்பின்
சாலைப் புழுதியில் சிக்காது
தெருவோர மண்ணில் முடங்கி
கால்நீட்டி ஆகாயம் வெறித்து
பெருமூச்சுவிட்ட
கிழவனின் நெஞ்சக் குளத்தில்
ஆசைக் குமிழிகள்
உருவாகி உருவாகி உடைந்தன
யார் வருவார் ஆட்சிக்கு?
எவர் தருவார்
அதிக இலவசங்கள்?
ஆடு வாங்க லோன் கிடைக்குமா?
அடுப்புக்குக் கேஸ் கிடைக்குமா?
மிக்ஸியும் கிராண்டரும்
சொன்னபடி வீடுவருமா?
போனமுறை சொன்ன டிவி
இனியாகினும் கண்ணில் வருமா?


ஆவதும் நீரால்..


அற்றை நாளில் வள்ளுவரும்
நற்றிணைப் பாடலில்
கபிலரும் மொழிந்தனர்
நீரின்றி அமையா உலகு
இற்றை நாளில்
கடல்பொங்கி மொழிந்தது
நீரின்றி அழியா வாழ்வு

ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்
பொய்யாய்ப் போனது முதுமொழி
ஆவதும் நீரால்
அழிவதும் நீரால்
மெய்யாய் ஆனது நிகழ்மொழி

நீலிக்கண்ணீர் முதலைக்கண்ணீர்
எல்லாம் காய்ந்து போய்விடும்
இது ஆழியில் எழுந்த
ஊழிக்கண்ணீர்
உயிர்களைத் தின்றும்
உறுபொருள் சிதைத்தும்
அசுரப்பசியைத் தீர்க்கும்

வாழ்வோ விளையாட்டோ
எல்லை கடந்தால் என்றும்
தீராத தொல்லைதான்
நீர் கரையை உடைத்து
எல்லையைக் கடந்தால்
தீராத இடும்பைதான்


உழைப்புக்கு வியர்வை
உறவுக்குச் செந்நீர்
அன்புக்குக் கண்ணீர்
இனக்காப்புக்கு உயிர்நீர்
உயிர்மூச்சுக்கு மழைநீர்

நீரால் நிறைந்து
நீரால் கரைந்து
நீரால் வரைந்த கோலம் நாம்
நீர்க்குமிழி போல
நினைக்கும் கணத்தில்
உடைந்து மறையும் மாயம் நாம்

உதிரம் பாலாக்கி
உழைப்பை எருவாக்கி
ஊனுருக்கி சேய் வளர்ப்பாள்
அந்தத் தாயைப் பழிக்கவில்லை

எண்ணிமாளா உயிர்களை
தன்னிலே புதைத்துவிட்டு
எஞ்சிய உயிர்களை
கண்ணீரில் நனையவிட்ட
தண்ணீரைப் பழிக்கின்றேன்
நான் தண்ணீரைப் பழிக்கின்றேன்

Wednesday, March 16, 2011

நடுநிசி நாய்களும் எச்சரிக்கை மணியும்


இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் எனக்கு இல்லை. படத்திற்கு எதிர்ப்பு என்ற செய்தியும் படம் குறித்த விமர்சனமும் என் ஆர்வத்தைக் கிளறிவிட்டன. முகநூலில் கே.பாலமுருகனின் சுருக்கமான விமர்சனம் வேறு என் ஆர்வத்தை மேலும் தூண்டியது. கௌதம் மேனன் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையும் சேர செந்தூல் திரையரங்கிற்குப் போனேன். படம் பார்க்க மூன்று பேர்தான் இருந்தோம். ஐந்து பேர் இருந்தால்தான் படத்தை ஓட்டமுடியும் என்று டிக்கெட் முகப்பிடத்தில் கூறிவிட்டார்கள் (படம் இரண்டு வாரங்களாக ஓடுகிறது. எனவே ஆள்கள் குறைந்ததில் ஆச்சரியமில்லை). எப்படியோ 6 பேர் சேர்ந்தோம். படம் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றோம்.

எதிர்பார்த்தபடியே கௌதம் மேனன் ஏமாற்றவில்லை. ஆல்பெரெட் ஹிச்கோக்கின் ‘சைக்கோ’, மூடுபனி, சிவப்பு ரோஜாக்கள், மன்மதன் போன்ற படங்களின் சாயல் இருந்தாலும் நடுநிசி நாய்கள் தனித்து மனத்தில் பதிகிறது. சமுதாயத்தில் நல்லவர்களாக நடமாடும் மனிதர்களில் மனம் பிறழ்ந்தவர்களும் குரூர தன்மை உடையவர்களும் கலந்து கிடக்கும் நிலையை இந்தப் படம் எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது.

பம்பாயில் வசிக்கும் ஒரு சிறுவன் (சமர்) எட்டு வயதிலேயே தன் மோசமான தந்தையினால் பாலியல் களியாட்டங்களில் பங்குகொள்ள வற்புறுத்தப்படுகிறான். அவை அவனை ஆழமாகப் பாதிக்கின்றன; ஆறாத ரணமாகிப் பின்னர்க் கொடுங்கனவுளாகி அவனை இம்சிக்கின்றன. அவனின் நிலையறிந்த அண்டை வீட்டு நடுத்தர வயது மாது(மீனாட்சி), போலீஸ் துணையோடு அவனைக் காப்பாற்றுகிறார். அவனின் தந்தை தற்கொலை செய்துகொள்ள அவனை அந்த மாதே வளர்க்கிறார்.

பதின்ம வயதையடைந்திருந்தாலும் அவனால் மனத்தில் ஆழப் பதிந்த கொடுங்கனவிலிருந்து மீளமுடியவில்லை. தாயாகப் பேணிக்காக்கும் அவரையே நேசிக்கிறான்; பலாத்காரம் செய்கிறான். இந்தக் காட்சியும் படத்தில் அது நீண்டுபோனதும் பலத்த எதிர்ப்புக்குக் காரணமாகிவிட்டன. சிறுவயது பாதிப்புகள் எவ்வளவு ஆழமாய் ஒருவனைப் பாதிக்கும் என்பதைத்தான் கதைப்போக்கு உணர்த்துகிறது.

குற்ற உணர்விலிருந்து மீள மீனாட்சி திருமணம் செய்துகொள்கிறார். அவன் (சமர் வீரா என பெயர் மாறுகிறது) அதை ஏற்றுக்கொள்ள முடியாது மீனாட்சியின் கணவனைக் கொலை செய்கிறான். மீனாட்சி அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில காலத்திற்குப் பிறகு காலமாகிறார். வீரா பம்பாயிலிருந்து சென்னை திரும்புகிறான். சென்னையில் பல பெண்களை ஏமாற்றித் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய் கொலை செய்கிறான்.

மீனாட்சி கோர முகத்தோடு மருத்துவமனையிலிருந்து நலமடைந்து வீராவுடன் சென்னை வீட்டில் வசிப்பதாகவும் அவன் செய்யும் கொலைகளுக்கு அவளே தூண்டுதலாகவும் இருப்பதாகவும் காட்டப்படுகிறது. ஆனால், அது அவனின் மனத்தின் பிறழ்ச்சியிலால் ஏற்பட்ட கோளாறு என முடிவில் நமக்குத் தெரியவருகிறது. சமர், மீனாட்சி, வீரா என மூவரின் ஆளுமையினால் ஒருவன் ஆட்டிப்படைக்கப்படுவதை கௌதம் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார்.

படம் முழுதும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகில் பரவி நம்மை இருக்கையின் நுனிக்குத் தள்ளுகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமரா இரவின் இடுக்குகளையும் விட்டு வைக்காது தேடிப் பதிவுசெய்கிறது. குறிப்பாக ஒலிப்பதிவு திகிலுக்குச் சுதி சேர்க்கிறது. வழக்கமான தமிழ்ச்சினிமாவில் வரும் நகைச்சுவை, பாட்டுகள், என எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு திகிலில் சமைத்த உணவைப் பரிமாறியிருக்கிறார் கௌதம்.

படத்தில் நான்கு நாய்கள் வருகின்றன. அவைதான் நடுநிசி நாய்களா என நண்பர் ஒருவர் கேட்டார். உண்மையில் கௌதம் சொல்ல வரும் நாய்கள் வேறு. இன்றைய நவீன வாழ்க்கையில் இரவில் நடமாடுவது பலருக்கு இயல்பாகிவிட்டது. பலரும் பலரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்; பழகுகிறார்கள். ஆனால், மனிதர்களில் நல்லவர்களாக முகங்காட்டும் எல்லாரும் நாம் நினைப்பதுபோல நல்லவர்களா? அல்லது அவர்களில் சிறுவயது பாதிப்புகளினால் மனநோய்க்கு ஆளாகி, ஆனால் தங்களில் இன்னொரு முகத்தை மறைத்துக்கொண்டு வேறு முகத்தைக் காட்டி இயல்பாகப் பழகும் மனிதர்களா?

இது பெண்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியாக எனக்குப் படுகிறது. சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டாம். நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்சாரில் ஒரு சீனப் பெண், பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கடத்தப்பட்டு பல மணி நேரம் விடிய விடிய காரில் திகில் பயணத்தில் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்குப்பின் கொலை செய்யப்பட்டு தீமூட்டி எரிக்கப்பட்டதை நாம் செய்தியாகப் படிக்கவில்லையா?

‘நடுநிசி நாய்கள்’ எனக்கு அந்த சம்பவத்தைத்தான் நினைவூட்டியது. அதே போன்ற கடத்தல் சம்பவம் படத்திலும் வருகிறது. நடுநிசி நாய்கள் பசிவெறியோடு தம் கோர முகத்தை மறைத்துக்கொண்டு வாலாட்டிக்கொண்டு வழியில் போவோரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பயணிக்கும் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். அந்த அபாய எச்சரிக்கை மணியைத்தான் கௌதம் மேனன் அடித்திருக்கிறார்.

வழக்கத்தை மறுதலித்துவிட்டு புதிய திகில் அனுபவம் பெறவேண்டுமா? ‘நடுநிசி நாய்கள்’ நமக்காகக் காத்திருக்கின்றன.
Sunday, March 13, 2011

இறந்தும் வாழ்வேன்


நோயோ மூப்போ எதிர்பாரா நிகழ்வோ
ஒரு நாள் என்னையும் தீண்டும்
காலடி நசுங்கி மறையும் சிற்றெறும்பாய்
என்னைக் கழித்துவிட்டு
கடந்துபோகும் காலம்

கண்ணாடி பிரேமில் புகைப்படமாகி
வீட்டுக்கு வருவோரைப்
பழைய புன்னகையில் வரவேற்பேன்

சோகக் குளிரில் உள்ளொடுங்கிய
உறவுப் பறவைகள்
கொஞ்ச நாளில்
மீண்டும் சிறகசைக்கும்

என் தோழர்கள்
என்னை அருகில் அழைத்து
என் பழைய நாட்களில்
கொஞ்சம் வாழ்ந்து பார்ப்பார்கள்

எங்காவது ஓர் இலக்கிய நிகழ்வில்
ஒரு நிமிட மௌன அஞ்சலியாய்
நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவேன்

என் கைவிரல் ஸ்பரிசத்தில் சிலிர்த்த
வீட்டின் பூச்செடிகள்
என் வருகைக்கு ஏங்கும்

நான் தமிழ் இதழ்கள் வாங்கிய
ஒட்டுக்கடை குப்புசாமி நினைவில்
எப்போதாவது வந்து போவேன்

என் கைரேகை பதிந்த நூல்கள்
நிலைப்பேழைக்குள் சிறையாகும்

என் பிரிவறியாத இடங்களிலிருந்து
என் பெயர் தாங்கி
கடிதங்கள் அழைப்புகள் வரும்

என் மாணவர்களின்
ஆசிரியர் தின நினைவுகளில்
எட்டிப் பார்ப்பேன்

மனித நினைவுகளின் பிடியிலிருந்து
கொஞ்சங் கொஞ்சமாக நழுவி
பிரபஞ்சப் புள்ளியாய்
தொலைவில் மறைவேன்

காலத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்த
என் கவிதைகள் நூலாகி
எங்காவது நூலகத்தின்
புத்தக அடுக்குகளில் காத்திருந்து...

உங்களில் யாராவது எடுத்துப்
பக்கங்களைப் புரட்டி
வாசிக்கத் தொடங்கினால்..

நான் விழித்துக்கொள்வேன்!