நம் குரல்

Tuesday, May 18, 2010

பிண ஊர்தியின் பின்னால்



தொடங்கிவிட்டது
பூக்களும் மாலைகளும் குவிந்த
திரும்ப முடியாத பயணம்

பின்னால் ஓங்கி ஒலித்த அழுகுரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து
மறைந்தன

நீள்துயிலில் ஆழ்ந்த மனிதனின்
பழைய காட்சிகளை மனத்திரையில்
ஓட்டிப்பார்க்கிறேன்

என்னோடு உடன்வரும்
உங்களின் வாயிலிருந்து
தத்துவ முத்துகள் உதிர்கின்றன

விடைபெற்றவனின்
வாழ்வதிகார நூலின் பக்கங்களைப்
பலர் அவசரமாகப் புரட்டி
விமர்சனங்களை முன் வைக்கிறீர்கள்
முடிந்துபோன கணக்கில்
இலாபம் நட்டம் பார்க்கிறீர்கள்

இவனோடு மறைந்துபோகும்
இரகசியங்கள் எத்தனை?
இறுதியாகச் சொல்ல நினைத்துச்
சொல்ல முடியாமற் போனது?
இனி இவனின் கைப்பேசி எண்ணை?

மின்சுடலையை அடைய
எஞ்சியுள்ள நேரத்தைச் சலிப்போடு
கணக்குப் பார்க்கிறோம்

நாம் உணராமலே
நமக்குப் பின்னால்
நமக்காக அலங்கரிக்கப்பட்ட வண்டியும்
வழியனுப்பும் கால்களும்..

எண்ணிப் பாருங்கள்



கடவுள் குறித்துக்
கிண்டலும் கேலியுமாய்
அவன் எழுதிய
நீண்ட கவிதையில்
எண்ணிப் பார்த்தேன்

ஆறு இடங்களில்
கடவுள் இருந்தார்

Sunday, May 16, 2010

காலந்தோறும் கவிதைமொழி



‘மௌனம் 9’ இதழில் இடம்பெற்ற கவிதைகளும் பிற படைப்புகளும் எனக்குள் பல்வேறு சிந்தனைகளைக் கிளறிவிட்டன. எம்.ஜி. சுரேஸின் கவிதை குறித்த விமர்சனம் எளிமையான புரிதலுடன் அமைந்திருந்தது. கடவுள் குறித்த புண்ணியவான், கே. பாலமுருகன் கவிதைகளும் பா.அ.சிவம், அகிலன், மகேந்திரன், நவீன், சை பீர்முகம்மது போன்றோரின் படைப்புகளும் தனித்துத் தெரிந்தன. அவற்றைப் படித்து அசை போட்டதின் விளைவாகக கவிதை குறித்த என் பார்வையை உங்கள் பக்கம் திருப்புகிறேன்.

வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் எதுதான் கவிதை என்பது தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியாத, எளிதில் புரிந்துகொள்ளமுடியாத, புதிரான நிலையே இன்னும் நிலவுகின்றது. யாப்பு இலக்கணத்தோடு மரபு மாறாமல் எழுதப்படுவதே கவிதை என்று ஒரு சாராரும் மரபு என்கிற சிறையிலிருந்து விடுபட்டுச் சொற்கள் கொண்டாடும் சுதந்திர விழாவே கவிதை என்று ஒரு சாராரும் முரண்படும் நிலை தமிழ்க் கவிதைச் சூழலில் இன்னும் காணக்கூடிய காட்சியாக உள்ளது.

மரபுக் கவிதையிலிருந்து விலகி, அலங்காரங்களை விடுத்துத் தனக்கென பாதையமைத்துக் கவிதை புறப்பட்டபோது அது புதுக்கவிதை என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘புது’ என்ற சொல்லும் உதிர்ந்து இன்று கவிதை என்ற பெயரோடு ஏடுகளில் வலம் வருகின்றது.

மரபுக் கவிதை வடிவத்திற்கு எதிராகக் கலகக் குரலாக உருவெடுத்த கவிதை காலந்தோறும் தனக்கான மொழியை புனரமைக்கும் முயற்சியில் உள்ளது. 1970 அல்லது 1980களில் மலேசியாவில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளுக்கும் புத்தாயிரத்தில் எழுதப்படும் (நவீன) கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆழ்ந்து நோக்கினால் இதனை உணர முடியும்.

ஒரு காலக்கட்டத்தில் எழுதப்படும் கவிதை போன்று இன்னொரு காலக்கட்டத்திலும் கவிதை இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கவிதை எழுதவரும் புதிய படைப்பாளிகள் தாம் வாழும் காலத்தின் கவிதை மொழியை அவதானித்து உள்வாங்கிக்கொண்டு அதே பாணியில் எழுதத்தொடங்குகிறார்கள். பலர் அந்தக் கவிதை மொழியின் பிடியில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தேங்கிவிடுகிறார்கள். ஒரு சிலரே, அதிலிருந்து விடுபட்டுத் தங்களுக்கான கவிதை மொழியைக் கண்டடைகிறார்கள்; அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.

மனித மனம் எப்பொழுதும் புதுமையை நாடும் இயல்புடையது. அதற்கேற்ப காலந்தோறும் மனிதனின் கவிதைக்கான மொழியும் மாறுவது இயற்கையானது. மரபிலிருந்து முரண்பட்டு வந்த புதிய கவிதையும் பல்வேறு மாற்றங்களைக் கடந்து இன்று நவீன கவிதையாக நம்மிடம் மாறுபட்ட மொழியில் பேசுகிறது. ‘நவீன’ என்ற சொல்லும் நிலைக்காது. அதுவும் காலப்போக்கில் உதிர்ந்துபோகும். கவிதைக்கான மொழி புதிய தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். ‘நாங்கள் நவீன கவிஞர்கள்’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் படைப்பாளிகள் எவ்வளவு காலத்திற்கு இந்த அடைமொழியோடு வலம் வரமுடியும்?

ஒரு காலக்கட்டத்தில் கவிதை எழுதுகிற கவிஞர்கள் தங்களின் முந்தைய படைப்பாளிகளை நோக்கி, “நீங்கள் எழுதின யாவும் கவிதைகளல்ல. எல்லாம் குப்பைகள். உங்களைக் கவிஞர்களாக நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை” என்று சாணி வாரி வீசும் மனப்போக்கு அவர்களின் அறியாமையைத் தாங்களே அறிவிப்பதாக இருக்கிறது.

“நவீனத்துவம், பின்நவீனத்துவம் வெற்றி பெறுமா?” என சை. பீர்முகம்மது கேள்வி எழுப்புகிறார். கவிதையில் இந்த இலக்கியப் போக்குகள் வெற்றி பெறுமா என்பது முக்கியமல்ல. வடிவத்தில் மட்டுமல்ல. உள்ளடகத்திலும் சொல்லின் சூட்சமம் அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதிலும் இன்றைய கவிதை புதுமைக் கோலம் பூணுகிறது. கவிதையின் நிரந்திரமான கோரிக்கை நவீனமாக, புதுமையாக இருப்பது என கவிஞர் சுகுமாரன் கூறுவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

இன்றையை நவீன கவிதை பழைய பிரச்சார பாணியை விடுத்து, அழகியல் கூறுகளைப் புறமொதுக்கி, சொல் விளையாட்டுகளை விட்டு விலகி, அலங்காரங்கள் இல்லாமல் உரைநடைத் தன்மையிலேயே வாசகனை நெருங்கி வருகிறது. இன்றைய கவிதை இதுவரை சொல்லாத வாழ்வின் கணங்களைப் பதிவு செய்கிறது; எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது; மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிறது; எழுதி எழுதி சலித்துப்போன வழக்கமான சொல்லாடல்களை விலக்குகிறது; மனத்தின் ஆழங்களை திறந்து காட்டுகிறது. மொத்தத்தில் படைப்பாளிகள் தங்களைப் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள கவிதை மொழி நெகிழ்ந்து கொடுக்கிறது.

நவீன் கூற்றுப்படி இங்கு யாரும் எதையாவது கிறுக்கி ‘இது பின் நவீனத்துவக் கவிதை’ என்றெல்லாம் சேட்டைகள் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை. அவரவர் தமக்கான சேறும் சகதியும் நிறைந்த கவிதை வயலில் இறங்கி தம்மால் ஒல்லும் மட்டும் நாற்று நடும் பணியில் ஈடுபடுகிறார்கள். நல்ல விளைச்சலை நாடியே விவசாயம் நடக்கிறது. சில வேளைகளில் அல்லது பல வேளைகளில் வெறுங்கையோடு வரப்புகளில் அமர்ந்து விடுகிறார்கள். தொடர்ந்து, அடுத்த நாற்று நடும் வேளைக்குக் காத்திருக்கிறார்கள்.

எழுத வந்த உடனேயே, ஒரு படைப்பாளி நவீன குளத்தில் குதித்து நீச்சலடிக்க முடியும் என எதிர்ப்பார்க்க முடியாது. பரந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் புதிய கவிதை மொழியின் தாக்கம் தொடர்ந்தால் எந்தப் படைப்பாளியும் நவீன கவிதைச் சாரலில் தலைநனைக்க முடியும்; உள்ளடக்கப் புதுமையான படைப்புகளை வழங்க முடியும்.

“கவிதையில்எல்லாம்அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
சந்தேகமின்றி, இந்த நிபந்தனையுடன்
வெற்றுத்தாளில் நீ முன்னேற வேண்டும்”
- லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிக்கனார் பாரா

(ந. பச்சைபாலன், மௌனம் இதழ் 10,
ஏப்ரல் 2010)

Tuesday, May 11, 2010

விடைபெறும் நேரம்..




வந்துகொண்டிருக்கின்றன
எதிரெதிர் திசைகளில்
நாம் போக வேண்டிய ரயில்கள்

நம்மை உற்றுப் பார்த்தபடி
தன் தாயிடம் தாவிப் பதுங்கி
ஏதோ பேசுகிறது ஒரு குழந்தை

கட்டண கழிப்பிட வாசலில்
சில்லறைகளைச் சேகரித்தபடி
யாரிடமோ பேசுகிறாள்
அந்த மலாய்ப்பெண்

இருக்கையில் சாய்ந்தபடி
உரத்த குரலில் சிரிப்பினூடே
கைப்பேசியில் யாரையோ சீண்டும்
தலைநரைத்த முதியவர்

ஒவ்வொருவரும் தனியாகவோ
அருகில் இருப்பவரிடமோ
பேசியபடி இருக்கிறார்கள்

கழியும் காலத்தை அறிவித்தபடி
சுவரின் கடிகார முட்கள்
நகர்கின்றன

உன்னிடம் விடுபட்ட உரையாடலை
எங்கே தொடருவது?
எண்ணும் வேளையில்
நீயோ நானோ
போகவேண்டிய ரயிலின் சத்தம்
தொலைவில் கேட்கிறது

நிச்சயமில்லாத பொழுதுகளில்
ஏதாவது கணங்களில்
நிகழலாம்
நம் அடுத்த சந்திப்பு