நம் குரல்

Monday, October 7, 2013

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் - மாதிரித் தேர்வுத் தாள்கள்



இந்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்று தமிழ்க்கல்வி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை 1990களில் மிகவும் குறைந்து, இந்தப் பாடம் தேர்வுப்பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியர்களும் சமூக இயக்கங்களும் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் (இலக்கியகம்) முழு மூச்சாக முயன்றதால் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. கடந்த ஆண்டு, இலக்கியகத்தின் முயற்சியால் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மூலம் அரசின் உதவிபெற்று இலக்கியப் பாட நூல்கள் இரவல் முறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடம் தொடர்பான கற்றல் கற்பித்தலில் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு  மாணவருக்கும் ஆசிரியருக்கும் உதவும் நோக்கில் நான் எழுதிய இலக்கிய வழிகாட்டியான ‘தேர்வுக்களம்’ நூலை, மலேசிய இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) மார்ச் மாதம் (2013) வெளியிட்டது. ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவை நிறைந்த பயனை நல்கியதாக நாடு முழுவதுமிருந்து வந்த எதிர்வினை மிகுந்த மனநிறைவைத் தந்தது. இனி, நம் மாணவருக்கு எப்படி உதவலாம் என்று எண்ணிப் பார்த்ததின் விளைவே இந்த மாதிரித் தேர்வுத் தாள்களும் முழுமையான விடைகளும் அடங்கிய நூல்.

தேர்வில் சிறந்த தேர்ச்சிக்கு விடா முயற்சியும் தொடர்ப் பயிற்சியும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மற்றத் தேர்வுப் பாடங்களில் எண்ணிறந்த பயிற்சி நூல்களும் மாதிரித் தேர்வுத் தாள்களும் உள்ளன. ஆனால், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவு. அந்தக் குறைநீக்க இந்த நூல் நிச்சயம் உதவும். ஐந்து மாதிரித் தேர்வுத் தாள்களும் அவற்றுக்கான முழுமையான விடைகளும் இந்நூலில் உள்ளன. அத்துடன், கூடுதலாக  நாடகம், நாவலையொட்டிய சூழல் கேள்விகளும் விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றோடு தேர்வுக் கேள்விகளுக்கு விடையளிக்கும் நுணுக்கங்கள் குறித்து விரிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

2015வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் மூன்று முதல் ஐந்துவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம். 168 பக்கங்களில் அழகிய வடிவமைப்பில் குறைந்த விலையில் இந்நூல் வெளிவந்துள்ளது. சமுதாயப் பணிகளில் முனைப்புக் காட்டும் சமூக இயக்கங்கள் மனம் வைத்தால் நம் மாணவர் சமூகத்திற்கு இந்நூலை இலவயமாக வழங்க முடியும்.

இதனைப் பெற விழைவோர் 012 6025450 என்ற எண்ணில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

ந.பச்சைபாலன்