நம் குரல்

Friday, December 26, 2014

கடவுள்கள் விற்பனைக்கு





  கோயில் வாயிலில் கம்பீரமாக எழுந்து நிற்கும்
  கோபுர அழகை அள்ளிப் பருகியவாறு நெருங்கி
  வலது பக்கம் திரும்பி
  சிறிய நடைபாதையோரம் நடந்தால்
  கையேந்தும்  மனிதர்களுக்கு எதிரே
  வரிசை பிடிக்கும் கடைகளில் காணலாம்
  விதம்விதமாய்க் கடவுள்களை

  கண்ணாடிப் பிரேமில் நிலைகொண்டவாறு
  ஆயுதங்களோடு அபயக்கரம் நீட்டியவாறு
  மௌனம் பூத்த முகத்தில் காட்சி தந்தவாறு
  கருணைபொழியும் புன்னகை சிந்தியவாறு
  கோபக்கனலில் பொங்கியவாறு
  அணிமணி அலங்காரங்களில் மின்னியவாறு
  விற்பனைக்குக் காத்திருக்கிறார்கள் கடவுள்கள்

  கடைகளிலிருந்து தூதுவர்களின்வழி
  அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள்
  நம்மோடு அழைத்துச் சென்றால்
  நம் சிக்கல்கள் தீர வழி பிறக்குமென்றும்
  நம் இன்னல்கள் இல்லாதொழியுமென்றும்
  நம் கனவுகள் கைகூடுமென்றும்
  நம் இல்லங்களில் மகிழ்ச்சி நிறையுமென்றும்
  நம் பாதைகளில் முட்கள் மறையுமென்றும்
  நம் தீவினைகள் தீருமென்றும்

  அங்கிருந்து திரும்பி நடந்து
  கோபுரம் கடந்து உள்ளே நுழைகையில்
  எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகங்கள் மலர
  பார்வையால் விசாரித்தவாறு
  நம்மை வரவேற்கின்றன

  வழிபாட்டுக்குத் தம்மால் துணைவர முடியுமென்றும்
  தலவரலாறு தமக்குத் தெரியுமென்றும்
  சிறப்பு வழியில் போகமுடியுமென்றும்
  குறைந்த செலவே ஆகுமென்றும்
  பிடிவாதமாய்ப் பின்தொடரும் கால்கள்

  எல்லாம் தவிர்த்து உள்ளே நடந்து
  பார்வை மறைக்கும் கூட்டத்தின் ஊடே
  தெரிந்ததாய்க் கற்பிதம்செய்து
  கைகூப்பி வணங்கித் திரும்புகிறோம்
  மனம் நிறைய அமைதியை நிறைத்தவாறு
 

Sunday, December 7, 2014

புதிய கவிதை நூல்கள்

'திசைகள் தொலைத்த வெளி', 'இன்னும் மிச்சமிருக்கிறது' ஆகிய என் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. 296 பக்கங்கள் கொண்ட 'இன்னும் மிச்சமிருக்கிறது' நூல், முப்பது ஆண்டுகளில் (1978 - 2006) நான் எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பாகும். இரு நூல்களும் சிங்கை பாலு மணிமாறனின் தங்கமீன் பதிப்பக வெளியீடாகும்.  நூல் வெளியீடு இனிமேல்தான்( 2014).




Monday, November 24, 2014

தேசியமொழி மாதக் கொண்டாட்டம்


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், டேவான் பகாசா டான் புஸ்தாகா ஆதரவோடு தேசியமொழி மாதக் கொண்டாட்டத்தைக் கோலாலம்பூர் நேதாஜி மண்டபத்தில் கடந்த 22.11.2014 அன்று நடத்தியது. 



தேசிய மொழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் திருக்குறளைத் தேசியமொழியில் மொழிபெயர்த்து விளக்கமளித்தனர். பரிசுபெற்ற சிறுகதைகளின் சுருக்கத்தை வாசித்தனர். ஜாசின் ஏ.தேவராஜனின் மலாய்க் கவிதைகளைப் படைத்தனர். மா.இராமையாவின் சிறுகதை நூலை (தேசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை) தேவராஜன் அறிமுகப்படுத்திப் பேசினார். 


மன்னர் மன்னன் தலைமையில் நடைபெற்ற கருத்தாய்வில் சீ.அருண், தமிழ் இலக்கியங்கள் தேசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முயற்சிகள் குறித்துப் பேசினார். நான், தேசிய இலக்கியத்தில் தமிழ் இலக்கியம் இணைக்கப்பட வேண்டியதின் 
அவசியம் குறித்துப் பேசினேன். 



டேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் மொழித் திட்டமிடல் பிரிவின் அதிகாரி, புவான் ஹரிணி யூசூவ் தேசிய மொழியில் எழுதும் தமிழ்ப் படைப்பாளிகளை உருவாக்கும் தம் அமைப்பின் முயற்சிகளை விளக்கினார்.

எழுத்தாளர் சங்கச் செயலாளர் ஆ.குணநாதனும்  துணைத் தலைவர் டாக்டர் ரெ.கார்த்திகேசுவும் முன்னதாகச் சங்கத்தின் முயற்சிகளையும் எதிர்பார்ப்பினையும் விரிவாக விளக்கினர். 







நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் எழுத்தாளர் சங்கம் டேவான் பகாசா டான் புஸ்தாகா
அமைப்போடு இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. தேசிய மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை உருவாக்குவது எழுத்தாளர் சங்கத்தின் நோக்கமல்ல. நம் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தேசிய மொழியில் மொழிபெயர்ப்பதும் தமிழ் இலக்கியம் குறித்து தேசிய மொழியில் பதிவு செய்வதுமாகும். 

நல்ல முயற்சி.  இது தொடர வேண்டும்.

Friday, November 21, 2014

இருந்ததும் இருப்பதும்

      
என்ன இருக்கிறது என்று கேட்டார்கள்
எதைச் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன்
நான் இருப்பதாகச் சொல்வது
அவர்களுக்குத் திருப்தி இல்லாமல் போகலாம்
அல்லது அவர்களுக்குத் தேவையில்லாமல் போகலாம்
ஒரு பொருட்டாகக் கருதாமல் போகலாம்

ஒன்றும் இல்லையா என்று அடுத்த கேள்வி
நிறைய இருந்தன, இப்போது சந்தேகமாக இருக்கிறது என்றேன்
ஒன்றை மட்டும் சொன்னால் சரியாக இருக்குமா?
இந்த ஒன்றை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டால்?
ஒவ்வொன்றும் ஒரு மாதிரி என்றால் நம்புவார்களா?

இருக்கிறதா இல்லையா தெளிவாகச் சொல்
குரலில் கடுமை ஏறியது
இருப்பதாக எனக்குப் படுகிறது.
உங்களுக்கும் இது இருக்குமா எனத் தெரியவில்லை என்றேன்
இருப்பதெல்லாம் கண்ணுக்குப் புலப்படுமா?
கண்ணுக்குப் புலப்படுவதெல்லாம் உண்மையில் இருக்குமா?

ஏன் அது இல்லை? இது இருக்கிறது என்று கேட்டார்கள்
அது இது என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை
இரண்டும் ஒன்றுதான் என்றேன்
அதுதான் இதுவாக இருக்கிறது
இதுவே அதுவாக ஆகலாம் என்றேன்

நேற்று இருந்தது இல்லையா என்று கேட்டார்கள்
அது இன்னும் நேற்றில்தான் இருக்கிறது என்றேன்
இன்று அதுதான் நிறம் மாறியிருக்கிறது
நேற்றிலிருந்து பார்த்தால் இன்றில் தெரியும் என்றேன்

ஏன் அதுபோல இது இல்லை என்று தொடர்ந்தார்கள்
அதுபோல் இது இருக்கிறது நம்புங்கள் என்றேன்
சந்தேகத் தோரணையில் என்னை வெறித்தார்கள்

இருப்பதாகச் சொன்னார்கள் அது இல்லையா என்றார்கள்
இன்று இருப்பது நாளையே இல்லாமல் போகலாம்
இன்று இருந்த இடத்தில் நாளை அதன் தடயம் ஏதும்
மிஞ்சலாம் என்றேன்

நாளை இது இருக்குமா? இறுதியாய்க் கேட்டார்கள்
உறுதியாய்ச் சொல்வது சிரமம் என்றேன்
நாளைதான் தெரியும்
நாளைக்கு வாருங்கள் என்றேன்