நம் குரல்

Wednesday, December 22, 2010

சிந்திக்கிடக்கிறோம்



தெருவில் அவிழ்க்கப்பட்ட
நெல்லிக்கனி மூட்டையாய்
சிந்திக்கிடக்கிறோம்
சந்தி சிரிக்கிறது
நம்மில் இதனைச்
சிந்திப்பார் யாருமில்லையா?

ஓரணியில் நின்றபோது
உரக்கக் குரல் கொடுத்தோம்
அதிகாரத்தின் காதுகளில்
நாரசாரமாய் ஒலித்தது

இறுகிக் கிடந்த
தாழ்ப்பாள் நெகிழ்ந்தது
அவ்வப்போது அவசர உதவிகள்
எட்டிப் பார்த்தன

பசித்த வயிற்றுக்குக்
கொஞ்சம் உணவும்
பாராட்டு மடலும் கிடைத்தது

கைகோர்த்துக் களித்தோம்
திருவிழாவாய்த் திரண்டோம்
சின்னச் சின்ன இன்னலுக்கும்
காயங்களுக்கும்
கடைக்கண் பார்வை கிட்டியது

இன்றோ
உடைந்து கிடக்கிறோம்
எட்டாய்..
ஒன்பதாய்..

நாளை
இன்னும் உடைவோம்
நம்மைச் சில்லறையாய் மாற்ற
யார் யாரோ காத்திருக்கிறார்கள்

எழுதுகோல்கள் ஏடுகளில்
தாறுமாறாய் விளையாடின
இன்னும் உடைபடுவதற்கான
வியூகங்களை வகுத்தன

அறிக்கை மன்னர்கள்
எங்கெங்கும் முளைத்தார்கள்
ஏடுகளில் திருமுகம் காட்டித்
திட்டித் தீர்த்தார்கள்

கலகச் செய்திகள்
ஏடுகளில் கற்கண்டுச் செய்திகளாய்
இனிப்பு காட்டின

இனி,
கூவிக் கூவி
குரல் கொடுத்தாலும்
எந்தக் கொம்பனுக்காவது எட்டுமா
நம் சந்தைக் குரல்?

இரைச்சலில் இன்னும்
இழந்துகொண்டிருக்கிறோம்
நம் சுயத்தை

கட்டியிருந்த கயிறுகளைக்
கழற்றுவதாக நினைத்து
அணிந்திருந்த ஆடைகளை
அவிழ்த்த அநியாயத்தை
எங்குபோய் அறிவிப்பது?

மக்கள் சந்தையில்
நெல்லிக்காயாய் உருள்கிறோம்
கால்மிதியில் நசுங்காமல்
நம்மைக் காப்பதெப்படி?


இன்னும்...



இன்னும் கசிகிறது
காது மடல்களில்
இன ஒற்றுமைக்காய் ஒலித்த
துங்குவின் பேச்சு

இன்னும் தெரிகிறது
மங்கலாய்
பட்டொளி வீசிப் பறந்த
அன்றைய கூட்டணிக் கொடி

இன்னும் நிழலாடுகின்றன
அன்றைய பல்லினத் தலைவர்களின்
கைகோர்த்த காட்சிகள்

இன்னும் ஒலிக்கிறது
அன்றைய வானொலிகளின்
உற்சாக எழுச்சி உரைகள்

இன்னும் கேட்கிறது
சயாம் மரண இரயிலின்
தண்டவாள இடுக்குகளில்
சமாதியான உறவுகளின் ஓலம்

இன்னும் பிழிகிறது
நாட்டுக்காய் உயிரிழந்த
இராணுவ வீரர்களின் தியாகம்

இன்னும் மணக்கிறது
கைகளில்
வேறுபாடு மறந்து ஒன்றாய்க்கூடிச்
சுவைத்த உணவுகள்

இன்னும் சுவைக்கின்றன
அன்றைய ஏடுகளில்
நிரம்பி வழிந்து உணர்வூட்டிய
அருமைப் படைப்புகள்

இன்னும் ஓடுகின்றன
நம் வீறுகண்டு பின்வாங்கிய
காலனித்துவ கால்கள்

இன்னும் நனைக்கிறது
இனவுணர்ச்சி கலவாத
தலைவர்களின் அன்புரைகள்

இன்னும் எரிகிறது
மூவினமும் சேர்ந்து மூட்டிய
சுதந்திரத் தீபம்

இன்னும் உயருகின்றன
மூவின மக்களின்
உழைக்கும் கரங்கள்

இப்படி இன்னும் இன்னும்
விரிந்துகொண்டே இருக்கின்றன
நிறம் வெளுக்காத
பழைய காட்சிகள்

எண்ணி எண்ணிப் பார்க்கும்
எந்த நெஞ்சிலும்
உணர்வுப்பூக்கள் மொட்டவிழும்

எந்தச் சூழலிலும்
நம் ஒற்றுமைத் தூண்கள்
உறுதிபெறும்

எந்த இடர்களையும்
நம் இணைந்த கைகள்
இடுப்பு முறிக்கும்

எந்த இன்னலிலும்
எல்லா இனக் கைகளும்
ஆதரவாய் முன்னே நீளும்

எந்த வெற்றியையும்
தம் வெற்றியாய்
உள்ளங்கள் ஏந்திக்கொள்ளும்

எந்த நிலையிலும்
தேசியத்தைச் சுவாசமாய்
இதயங்கள் நிரப்பிக்கொள்ளும்


காத்திருப்பு



ஏக்கத்தைச் சுவாசித்தபடி
வாசலில் என் காத்திருப்பு
நீளுகிறது நீண்ட காலமாய்

வண்டி வண்டியாய்
வந்து இறங்கி
எனைத் தாண்டி
வாசலைக் கடக்கும்
சொற்கள்..சொற்கள்..

வாசனைமிகும் சொற்கள்
வண்ணம்பூசிய அலங்காரச் சொற்கள்
போலி உணர்வில் பிசைந்த சொற்கள்
ஆரவார அணிவகுப்புச் சொற்கள்

அவற்றை அள்ளி முகர்ந்து
உள்ளே புதைந்திருக்கும்
மனித முகங்களைத் தேடுகிறேன்

சொற்களிடையே மங்கலாய்த்
தோன்றி மறையும் சில முகங்கள்
எனை நோக்கிப் புன்னகைக்கின்றன

கடந்துபோகும் சொற்களின்
உயிர்த்துடிப்பு கேட்க
காதுகளைக் கூர்மையாக்கிறேன்

மௌனத்தைப் பூசியபடி
வாசலில் வேகம்காட்டி மறைகின்றன
எனை ஏமாற்றியவாறு
சொற்கள்.. சொற்கள்

என் காத்திருப்பின்
நீளத்தை நீட்டியபடி..

Saturday, December 11, 2010

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பு (சை.பீர்முகம்மது)



இலக்கிய வகைகளில் நாவலை அடுத்துத் தோன்றிய சிறுகதை இன்று வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கையும் பெரும் வரவேற்பையும் பெற்றிருப்பதை மறுக்க முடியாது. நாவலைப் போன்று முழு வாழ்க்கையையோ வாழ்க்கையின் பல கூறுகளையோ பதிவுசெய்யும் நிலை சிறுகதைக்கு இல்லை. வீட்டின் சன்னலைத் திறந்தால் கண்ணுக்குத் தெரிகிற காட்சி போன்று வாழ்வின் ஒரு சிக்கலை, அனுபவத்தை, மனநிலையை அல்லது உணர்வுநிலையைப் பதிவு செய்யும் ஆற்றல் மிக்கது சிறுகதை இலக்கியம். பரபரப்பான இன்றைய அவசர யுகத்தில் ஒரு பேருந்துப் பயணத்திலோ இரயில் பயணத்திலோ சில மணித்துளிகளில் படிக்கும் வகையில் வாசகன் நெஞ்சுக்கு நெருக்கமாக சிறுகதைகள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் வாசிப்பவர் மனங்களைத் தொடுவதாக, உணர்வூட்டி எழுச்சியடையச் செய்வதாக, ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதாக, சிந்தனைத் தீக்குச்சிகளைத் கொளுத்திப் போடுவதாக சிறுகதைகள் அமைவதுண்டு.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைத் துறையில் தனக்கென அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சை.பீர்முகம்மது. 1959இல் சிறுகதைகள் மூலமாக இலக்கியத்துறையில் நுழைந்து இன்று கவிதை, நாவல், பயணக்கட்டுரை எனப் பல தளங்களில் பயணித்து வருகிறார். ‘வெண்மணல்’ சிறுகதைகள், ‘பெண்குதிரை’ நாவல், ‘கைதிகள் கண்ட கண்டம்’ பயணக்கட்டுரை, ‘மண்ணும் மனிதர்களும்’ வரலாற்றுப் பயணக்கட்டுரை, ‘திசைகள் நோக்கிய பயணம்’ கட்டுரைகள் - இவை படைப்பிலக்கியத்திற்கு இவர் இதுவரை அளித்துள்ள பங்களிப்பாகும். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் 50 ஆண்டுச் சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டும் என்ற இவரின் பரந்த நோக்கையும் அயராத உழைப்பையும் இதன்வழி அறிய முடிகிறது.

இவரோடு இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய பலர் துறவறத்துக்குப் போனாலும் இவரோ 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியான இலக்கியத் தவத்தை மேற்கொண்டு வருகிறார். சிறுகதை வயலில் இறங்கி இவர் தொடர்ந்து உழைத்தற்குச் சான்றாக - அறுவடையை அளந்து பார்ப்பதுபோல் இவரின் 20 கதைகள் அடங்கிய ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ சிறுகதைத்தொகுப்பு திகழ்கின்றது.தொடக்ககால சிறுகதை முதல் அண்மையில் எழுதப்பட்ட சிறுகதை வரை இவரின் 50ஆண்டுகால இலக்கியத் தடத்தையும் இந்தக் கதைசொல்லியின் இலக்கியப் பரிணாமத்தையும் இக்கதைகள் பேசுகின்றன.
ஓர் இலக்கியப் பிரதி என்பது சாதாரண வாசகனைப் பொறுத்தவரை அது அவனது வாசிப்புத் தட்டில் பரிமாறப்பட்ட சுவையான படையல். அவனது புலன்களுக்குக் கிளர்ச்சியூட்டி மொழியால் வசீகரித்து கணநேர இன்பத்துக்குள் ஆழ்த்தினாலே போதும். அவன் பிறவிப் பயனை அடைந்து விடுவான். அதற்குப் பிறகு அந்த இலக்கியப் பிரதிக்கும் அவனுக்குமான உறவு, தொடர்பு அற்றுப்போய்விடும். ஆனால், ஓர் இலக்கியப் படைப்பை, படைப்பாளனின் பின்னணியோடு ஆழ்ந்து நோக்கினால்தான் படைப்பாளனின் வாழ்வு குறித்த பார்வைகள், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் எத்தனிப்பு, மொழி ஆளுமை, படைப்பை உருவாக்குவதில் அவனுக்கு வசப்பட்ட செய்தொழில் நேர்த்தி, எல்லாவற்றையும் சொல்லிவிடாமல் வாசகனுக்கும் மிச்சம் வைக்கும் பாங்கு, நேரிடையாகச் சொல்லாமல் குறியீட்டு உத்தியில் சொல்லும் நிலை, அவனின் பலம் - பலகீனம் யாவும் புலப்படும். இத்தகைய பருந்துப்பார்வையோடு கூடிய விழிப்புணர்வோடு இந்தச் சிறுகதைத் தொகுப்பை அணுகினால்தான் இதனை ஆழமாகப் புரிந்துகொண்டு அனுபவித்து ரசிக்க முடியும்.

50 ஆண்டுகள் காலக் கட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதால் இவை பல்வேறு கதைக்களங்களைக் கொண்டிருக்கின்றன. தொடக்கத்தில், சமூகத்தின் விளிம்பு மனிதர்களை, அவர்களின் அவலங்களை, வாழ்க்கை நெருக்கடிகளைப் பதிவு செய்யும் எத்தனிப்பைச் சில கதைகளில் காண முடிகிறது. ‘சிவப்பு விளக்கு’, ‘உண்டியல்’, ‘நெஞ்சின் நிறம்’, ஆகிய கதைகளில் பிச்சைக்காரர்களின் அவல நிலையைக் காட்டும் அதே வேளையில் சமூகப் போக்கையும் இடித்துரைக்கும் கோபத்தையும் உணர முடிகிறது. ‘சிவப்பு விளக்கு’ சிறுகதையில் தன்னோடு பிச்சையெடுத்த அமீது, ஆபெங் ஆகிய இருவரும் முறையே அரசு உதவிலும் சுய முயற்சியிலும் முன்னேறிவிட, காளிமுத்து அனாதையாக இறந்துபோகிறான். அரசின் ஆதரவுக் கரம் நீளாமல் சுயமுயற்சியும் இல்லாமல் தவிக்கும் இன்றைய தமிழர்களின் நிலையை இக்கதை அன்றே பதிவுசெய்திருக்கிறது. ‘உண்டியல்’ சிறுகதையில் நூலகம் அமைக்க நிதி கேட்டு உண்டியல் ஏந்தும் தொண்டர்களுக்கு மனிதர்கள் யாரும் உதவ முன்வராதபோது ஒரு பிச்சைக்காரன் பணம் தந்து உதவுகிறான். ‘நெஞ்சின் நிறம்’ சிறுகதையில் பேருந்து டிக்கெட் வாங்க பணம் இல்லாத பள்ளிக் குழந்தையைக் கண்டெக்டர் இறக்கிவிட முனைந்தபோது ஒரு பிச்சைக்காரன் உதவ முன்வருகிறான்.

‘ஆண்டவனுக்கு ஆண்டவன்’, ‘வெடித்த துப்பாக்கிகள்’ ஆகிய இரண்டும் வரலாற்றுப் பதிவுகளாக அமைந்துள்ளன. ‘ஆண்டவனுக்கு ஆண்டவன்’ சிறுகதையில் சயாம் மரண ரயில்வே அமைக்கும் பணியில் வெறி பிடித்த ஜப்பானியர்களிடம் மாட்டிக்கொள்ளும் சந்தனசாமி, பின்னர் கொடுமைக்கார கர்னல் இம்மாசாகியால் தப்பித்து மலாயாவுக்குத் திரும்புகிறான். திடீர் திருப்பம் அதிர்ச்சியூட்டுகிறது. மனிதாபிமானத்தை எழுத்தாளரின் எழுதுகோல் உயர்த்திப் பிடிக்கிறது. ‘வெடித்த துப்பாக்கிகள்’ சிறுகதையில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடப் புறப்படும் குழுவில் மூன்று வீரர்கள் ஓர் அதிகாரியைக் கொல்ல முயல, அம்மூவரின் உயிரையும் அந்த அதிகாரியே காப்பாற்றுகிறார். இங்கும் மனிதாபிமானமே வெற்றிபெறுகிறது.

இவற்றிலிருந்து மாறுபட்ட கதைக்களங்களையும் மற்ற கதைகளில் காணமுடிகிறது. சமூகப் பொறுப்புணர்ச்சியையும் அவலம் கண்டால் பொங்கும் அறச்சீற்றத்தையும் இவரின் கதைகளில் அடிநாதமாக இழையோடி வருவதைக் காணலாம். பழம்பெருமை பேசிக் காலங்கழித்தல், ஏழ்மையிலும் சினிமாப் பித்திலும் மாட்டி அல்லறுதல், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தஞ்சமடையும் மனிதர்கள், கோயில் பொறுப்புகளில் உள்ளவர்கள் கலையையும் கலைஞர்களையும் மதிக்காத அவலம், அதிகாரத்தை தவறாகச் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகள், சாதியால் உண்டாகும் பிணக்குகள் என பல்வேறு களங்களில் இவரின் கதைகள் உருவாகியுள்ளன.

அண்மைய சிறுகதைகளில் சமூகச் சிக்கலை முன்னிலைப்படுத்தும் கதைகளுக்கு நிகராக தனி மனித உணர்வுகளை மையப்படுத்தும் கதைகளிலும் இவரின் கவனம் திரும்பியிருப்பதைச் சில கதைகள் உறுதிப்படுத்துகின்றன. ‘உக்கிரப் பாம்பு’ சிறுகதையில் சக பால்வெட்டுத் தொழிலாளி தங்கமாவின் வளர்ச்சி கண்டு பொறாமைத் தீயில் சிக்கி அல்லலுறுகிறாள் தனலெட்சுமி. ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ கதையில் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் நட்புக்கு முதல் மரியாதை செய்யும் பயாஸ்கோப் மாரி வாசகன் நெஞ்சில் நிறைகிறான்.

கதை சொல்லும் கலையில் இந்தக் கதை சொல்லி நன்கு தேர்ந்திருப்பதை ஒவ்வொரு கதையும் மெய்ப்பிக்கின்றது. கதைகளை வாசிக்கத் தொடங்கினாலே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும் வகையில் ஆற்றொழுக்கு போன்ற மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கிறது. அங்கதமும் கிண்டலும் கேலியும் அடிநாதமாகப் பல கதைகளில் இழையோடி வருகின்றன. சுவையான, யதார்த்தமான உரையாடல்கள் வாசகனின் கையைப் பிடித்து கதைக்குள்ளே அழைத்துப்போகின்றன.

‘எலும்புக்கூடு’, ‘குருதி கசியும் கேமரா’, ஆகிய கதைகள் மாறுபட்ட உத்திகளால் நம் கவனத்தைக் கவருகின்றன. ‘எலும்புக்கூடு’ சிறுகதையில் அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எலும்புக்கூடு தன் வரலாற்றைக்கூறுவதாக கதை அமைந்துள்ளது. தோட்டத் தொழிற்சங்கத் தலைவரான கலியமூர்த்தி தோட்ட நிர்வாகத்தோடு ஏற்பட்ட தகராற்றின் காரணமாக வெட்டிக்கொல்லப்படுகிறான். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த அவன் மற்ற சாதிக்காரர்கள் இடுகாட்டில் புதைக்கப்பட்டதால் தோண்டப்பட்டு அவன் சாதிக்கார இடுகாட்டில் புதைக்கப்படுகிறான். வழக்கு நீதிமன்றம் போய் உடல் தோண்டப்பட்டு மீண்டும் உயர் சாதிக்காரர்கள் இடுகாட்டில் புதைக்கப்படுகிறது. வழக்குச் செய்திகள் பத்திரிகையில் பரபரப்பாகி எலும்புக்கூடு தோண்டியெடுக்கப்பட்டு கண்ணாடிப்பெட்டிக்குள் அடக்கம் செய்து அருங்காட்சியகத்திற்குள் வைக்கப்படுகிறது. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக சுற்றித்திரிந்த கலியமூர்த்தியின் ஆவி எலும்புக்கூட்டுக்குள் நுழைந்து விடுவதாகக் கதை முடிகிறது. சாதிப் பிரிவினையால் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயத்தின் மீது சவுக்கடியாக இந்தக் கதை அமைகிறது.

‘குருதி கசியும் கேமரா’ சிறுகதையும் மாறுபட்ட உத்தியால் சிறப்பைப் பெறுகிறது. ஒரு புகைப்படக் கருவியின் மூலம் தோன்றும் காட்சிகள் வழி கதை நகர்த்தப்படுகிறது. அதிகாரத்தை தவறாகச் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களின் சிரமங்களை இக்கதை வழி உணர்த்துவதில் சை.பீர்முகம்மது வெற்றிபெற்றுள்ளார்.

கருத்து வெளிப்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மக்கூறுகளை எழுத்தாளர் சில கதைகளிலும் கதைகளின் தலைப்புகளிலும் பயன்படுத்தியிருக்கிறார். பழைய இலக்கியங்களின் மீதான இவரின் ஈடுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. ‘வாலி வதை’ சிறுகதையில் இராமாயணத்தைப் படித்துக்கொண்டிருக்கும் கோயில் அர்ச்சகர், சுக்ரீவனைக் காப்பாற்ற வாலியை மறைந்திருந்து தாக்கிய இராமனைப்போல், கோயிலை நாடித் தஞ்சமடைந்தவனைக் காப்பாற்ற ரவுடிகளின் மீது கற்களை வீசித் தாக்குகிறார். ‘தேவத்தேர்’ சிறுகதையில் மகாபாரதக் காப்பியத்தின் பஞ்சபாண்டவர்களைக் கதைப்பாத்திரங்களாக உலவ விடுகிறார். குருஷேத்திரம் முடிந்து உலக ஆசைகளை விடுத்து தேவத்தேரில் ஏறிப் பயணமாக பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியோடு புறப்படுகின்றனர். ஆனால், உலக ஆசையில் மாட்டி அனைவரும் அல்லலுற தருமன் மட்டும் ஒரு கறுப்பு நாயோடு தேவத்தேரில் பயணப்படுகிறான். எளிய உயிர்களைக் காட்டிலும் மனிதர்கள் உலக மாயையில், ஆசையில் மாட்டி அலைக்கழிக்கப்படுவதை இது உணர்த்துகிறது.

எழுதுகோல் ஏந்தி சை.பீர்முகம்மது போவது முயல் வேட்டைக்கு அல்ல. புலி வேட்டைக்கு என்பதை அவரின் சிறுகதைத் தலைப்புகளே வாசகனுக்கு அறிவிப்பு செய்கின்றன. கதைகளை வாசிக்கத் தொடங்கும்போதே வாசகனின் மனத்தை வார்த்துச் சிறுகதைகளுக்குள் அனுப்பும் வேலையை தலைப்புகள் செய்துவிடுகின்றன. எ.கா. வாலி வதை, அசுணப் பறவை, அக்கினி ஸ்தம்பனம், மாயான காண்டம்.

இவரின் எல்லாக் கதைகளிலும் அடிநாதமாக இழையோடி வருவது சமுதாயத்தின் மீதான கரிசனமும் மனத்தில் பட்ட கருத்துகளைத் துணிவாக எடுத்தியம்பும் துணிச்சலும்தான். எந்தக் கதையிலும் பிரச்சார நெடி தூக்கலாகத் தெரியாதவாறு பாத்திர வார்ப்புகள், சுவையாகச் சொல்லப்படும் நிகழ்ச்சிகள், இவருக்கு இசைவாக வசப்படும் மொழி, இவை அனைத்தும் ஒவ்வொரு படைப்பும் வாசகனை ஈர்த்துக்கொள்ளும் வகையில் அவன் வாசிப்புத் தட்டில் பரிமாறப்படுகிறது. இடைவேளை இல்லாமல் சிறுகதை வயலிலே இறங்கி இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் சை.பீர்முகம்மது மூலமாக பல அருமையான சிறுகதைகள் தம்மை எழுதிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டிருக்கும்.

சிறுகதைச் சாலையில் இன்னும் சில இலக்குகளை நோக்கிப் பயணப்பட சை.பீர்முகம்மது அவர்களை வாழ்த்துகிறேன்.

Thursday, October 21, 2010

தீபங்கள் பேசட்டும்!



தீபங்கள் பேசட்டும்
தீமைகளைப் பொசுக்கட்டும்
கோபங்கள் குறையட்டும்
கொடுமைகளும் மறையட்டும்
சாபங்கள் விலகட்டும்
சாதனைகள் மலியட்டும்
தாபங்கள் தீரட்டும்
தடையாவும் நீங்கட்டும்!

உணர்வுகளும் பூக்கட்டும்
உரிமைகளைக் காக்கட்டும்
மனங்களெல்லாம் இணையட்டும்
மகிழ்ச்சியிலே திளைக்கட்டும்
குணங்களையும் வளர்க்கட்டும்
குறையாவும் ஒடுங்கட்டும்
இனநலத்தைப் பேணட்டும்
எழுச்சியிங்குக் காணட்டும்!

ஒளிவெள்ளம் பரவட்டும்
ஊரெல்லாம் ஒளிரட்டும்
விழியெல்லாம் நன்னாளை
விழித்திருந்து நோக்கட்டும்
துளித்துளியாய் நம்வாழ்வு
துயரழித்து மீளட்டும்
வழித்துணையாய் இனவுணர்வு
வாழ்நாளும் தொடரட்டும்!

தொன்றுதொட்ட வாழ்நெறிகள்
தொடராகித் துலங்கட்டும்
ஒன்றுபட்ட நல்லினமாய்
ஓரணியில் திரளட்டும்
இன்றெங்கள் சாதனைகள்
ஏறுமுகம் காணட்டும்
என்றுமிந்த நன்னிலையே
இம்மண்ணில் நிலைக்கட்டும்!

வீணான சண்டைகள்
வேர்பட்டுச் சாகட்டும்
வீணான புன்மொழிகள்
வீரியத்தை இழக்கட்டும்
தானாக நம்பிணக்கு
தணிந்திங்கு மறையட்டும்
தூணாக எழுதுகோலும்
துணையாகிக் காக்கட்டும்!

வன்முறையும் பாழ்நெறியும்
வாழ்விழந்து போகட்டும்
அன்புவழி எங்கள்நெறி
அந்தநிலை ஓங்கட்டும்
பண்புமிகக் குமுகாயம்
பண்பாட்டில் நிமிரட்டும்
இன்னமுதத் தமிழெங்கள்
இதயத்தில் நிறையட்டும்!

Monday, October 11, 2010

சிறுகதைக் கருத்தரங்கும் பிரபஞ்சனின் வருகையும்..











லேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், செர்டாங் இலக்கிய வட்டத்தின் ஆதரவோடு சிறுகதைக் கருத்தரங்கினை 9, 10 அக்டோபர் ஆகிய இரு தினங்களின் கோலாலம்பூர் மிடா தங்கும் விடுதியில் நடத்தியது. 130 இலக்கிய ஆர்வலர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2009ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு, பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு வெளியீடு, திரு. முத்து நெடுமாறனின் ‘இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு: புதிய செய்திகள்’ உரை, சிறுகதைப் பட்டறை - அதன் மீதான கருத்துரை, பங்கேற்பாளர்களின் அனுபவப் பகிர்வு எனப் பல அங்கங்களை இந்த இருநாள் நிகழ்வு கொண்டிருந்தது.

பிரபஞ்சனின் பேச்சு அனைவரையும் கவர்ந்த அங்கம். சிறுகதை குறித்துப் பல கருத்துகளை நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.







Wednesday, October 6, 2010

எந்திரன் எனும் மந்திரன்



எந்திரன் எனும் மந்திரன்

ரஜினிகாந்த் படங்களைப் பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை. சில படங்களில் ரஜினி நடந்தாலும் விரலசைத்தாலும் தஸ்சு..புஸ்சு என்று சத்தம் கொடுத்து வெறுப்பேத்தியது ஒரு முக்கியக் காரணம். தமிழ்ச் சினிமா யதார்த்தத்தோடு கைகுலுக்கி எங்கோ பயணப்பட இன்னும் மசாலாப் படங்களையே தந்து ரசிகனைச் சோதிக்கும் நிலையைச் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இன்னொரு காரணமாகும். (இன்னும்)

Tuesday, October 5, 2010

தோற்றவர் பக்கம்



தோற்றவர் பக்கம்
நான் நின்றுகொண்டிருக்கிறேன்

இடம் மாறச்சொல்லி
என்னை வற்புறுத்துகிறீர்கள்
உங்களின் இனிப்பு வார்த்தைகளைப்
புறந்தள்ளி இவர்களோடு புறப்படுகிறேன்

இங்கே கண்ணீரும் வியர்வையும்
விரக்தியும் வேதனையும்
சரிவிகிதத்தில் சதிராடுகின்றன

தன்னம்பிக்கை முனைகள்
இங்கே முறிந்து கிடக்கின்றன

கனவுத் தோணிகள்
தரை தட்டிக் கவிழ்ந்து கிடக்கின்றன

எதிர்பார்ப்பு வேர்களில் விஷம் பரவி
இற்றுக்கொண்டிருக்கின்றன

துவண்டுகிடக்கும் இவர்களின்
தோள்களை நோக்கி
என் கைகள் நீளுகின்றன

ஆதரவுக்காய்த் தவிக்கும்
இவர்களை நோக்கி
என் அன்பு மொழிகள் கசிகின்றன

காயங்களைத் துடைத்து
மருந்திட்டு ஆற்ற
விரல்கள் விரைகின்றன

வெற்றி முகாமில் மூழ்கிய
உங்களுக்குக்
கண்ணீரின் கனம் தெரியாது

வியர்வைத் துளிகளின்
வேதனை புரியாது

வெற்றி கானத்தை மீட்டி மீட்டியே
அதனுள் கரைந்து
நீங்கள் காணாமல் போவீர்கள்

வெற்றிக்கதையைப் பேசிப்பேசியே
கனவு வளர்ப்பீர்கள்
அதன் சுகலயத்தில் சொக்கிப்போவீர்கள்

உங்களின் உத்வேகத்தை வாங்கி
நெஞ்சுக்கு இடம் மாற்றிக்கொண்டு

உங்களின் வெற்றியின் வியூகங்களை
யூகித்து உள்வாங்கிக்கொண்டு

நெஞ்சு நிறைய கனவுகளை அள்ளி
நிறைத்துக்கொண்டு

தன்னம்பிக்கை முனைகளை
கூர் சீவிக்கொண்டு

ஆறிக்கொண்டிருக்கும்
பழைய காயங்களைப் பொருட்படுத்தாமல்

வெற்றியின் திசைநோக்கி
இவர்கள் புறப்படுகிறார்கள்

இவர்கள் வென்று வந்தாலும்
தோற்று மீண்டாலும்
இவர்கள் பக்கம் எப்போதும் நான்

ந. பச்சைபாலன், மலேசியா

அன்புள்ள ஆசிரியருக்கு...




காலம் என்னதான் தன் மாயக்கரம் கொண்டு நம் மனமேடையில் அரங்கேறிய பல காட்சிகளை மறைத்து விட்டாலும் நினைவுத் தடாகத்தில் பூத்திருக்கும் சில நித்தியப் பூக்களை அதனால் பறிக்க முடிவதில்லை.

இளம் வயதில் பழகிய தோழர்கள், எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் எனக்குள் இன்னும் உதிர்ந்து போகாத பூக்களாய் மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

1969ஆம் ஆண்டு, ரவாங் சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்தேன். கூட்டுறவுச் சங்கத் தோட்டமாகையால் துன் வீ.தி. சம்பந்தன் அவர்களின் பெரும் முயற்சியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அழகான பள்ளிக்கூடம். இயற்கையழகு கொஞ்சும் பசுமை போர்த்திய தோட்டம். தோட்ட லயங்களிலிருந்து நடந்துபோகும் தூரத்தில் பள்ளிக்கூடம் இருந்தது.

மோகன், சுந்தர், செல்வராஜ், இராமசாமி, இராமன், மனோகரன், கலைச்செல்வன் என எனக்கு நிறைய தோழர்கள். ஆட்டம் பாட்டத்திற்குக் குறைவில்லாமல் காலம் கழிந்தது.

அப்போதுதான் திரு.சுப்ரமணியம் தற்காலிக ஆசிரியராக எங்கள் பள்ளிக்கு வந்தார். கண்ணாடி அணிந்து மெலிந்த, உயரமான உருவம். கண்டிப்பானவர் என்பதைப் பறைசாற்றும் பார்வை. ஆனால், பாடம் போதிக்கையில் அவரின் கனிவைக் கண்டோம். அவர் எங்கள் வகுப்பாசிரியராக வந்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

பள்ளி பரிசளிப்பு விழாவுக்காக எங்கள் வகுப்பு மாணவர்கள் நாடகம் படைக்க வேண்டும் என்று முடிவாகி ‘ஆட்டுத் திருடன்’ எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எங்களுக்குப் பயிற்றுவித்தார் திரு.சுப்ரமணியம்.

காவல் அதிகாரியாக சுந்தர். ஆட்டின் உரிமையாளராக செல்வராஜ். ஆட்டுத் திருடனாக நான். ஆடாக மனோகரன் என நடிகர்கள் தேர்வு முடிந்து நாடக ஒத்திகை நடந்தது.

ஆட்டைச் சந்தைக்கு ஓட்டிக்கொண்டு வருகிறான் செல்வராஜ். நான் வழிமறிக்கிறேன். “ஆட்டை எங்கே ஓட்டிக்கொண்டு போகிறாய்?” “சந்தைக்குத்தான். ஏன் ஆட்டை நீ வாங்கப்போகிறாயா?” என்று செல்வராஜ் கேட்கிறான்.

பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கருப்பையா ஆசிரியர் வேகமாக ஓடி வந்தார். எங்கள் ஆசிரியரோடு ஆலோசனை கலந்தார். “பேச்சு நடைக்கு வசனத்தை மாத்து” என்று அவர் செல்வராஜ் பேச வேண்டிய வசனத்தைப் பேசிக் காட்டினார். “சந்தைக்குத்தான் ஓட்டிக்கிட்டு போறேன். ஏன் நீ வாங்கப் போறீயா? நீ என்னா கசாப்பு கடைக்காரனா?”

இந்தப் பாணியிலேயே நாடகம் முழுதும் அமைந்தது. எங்கள் வகுப்பாசிரியர் திரு. சுப்ரமணியம் முழு மூச்சாக எங்களைப் பயிற்றுவித்தார். நான் தேர்ந்த ஆட்டுத் திருடனாக மாறியிருந்தேன். சுந்தர்தான் காவல் அதிகாரிக்கான மிடுக்குப் போதாமல் அடிக்கடி கருப்பையா ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு விழித்தான்.

பரிசளிப்பு விழாவுக்கு நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆவலாகக் காத்திருந்தோம். திடீரென்று ஒரு நாள் எங்கள் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றாலாகிப் போய்விட்டார். முதல் நாடக அரங்கேற்றத்திற்குக் காத்திருந்த நாங்கள் தவித்துப் போனோம். முழங்காலிட்டு நான்கு கால்களில் ஆடாகப் பழகியிருந்த மனோகரன் பெருமூச்சு விட்டான். நல்ல வேளை. கருப்பையா ஆசிரியர் எங்களுக்கு அபயக்கரம் நீட்டினார்.

பரிசளிப்பு விழா அன்று நாங்கள் அரிதாரம் பூசி மெருகு கூட்டிக்கொண்டிருந்தோம். ஆனால், ஆடாக நடிக்க வேண்டிய மனோகரனைக் காணவில்லை. கருப்பையா ஆசிரியர் எனக்கு மீசை வரைந்து திருடனாக மாற்றிக்கொண்டிருந்தார். வகுப்பறைக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த மனோகரனை இழுத்து வந்து ஆடை களைந்து பவுடரை அப்பி சாதுவான ஆடாக மாற்றினார். “மே மே” என்று சட்டென்று எதிர்பார்த்தபடி நல்ல ஆடாக மாறினான் மனோகரன்.


‘ஆட்டுத் திருடன்’ நாடகம் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமைந்தது. நாடகம் முடிந்து வேசத்தைக் கலைத்துக்கொண்டிருந்தபோது எங்கள் நாடக ஆசிரியர் திரு.சுப்ரமணியம் அப்பொழுது அங்கே வந்தார். எங்கள் நடிப்பைப் பாராட்டினார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எனக்கு அது முதல் கலையுலக அனுபவம். தமிழின் மீதான ஈடுபாட்டுக்கு அடித்தளம் அமைத்த நிகழ்வு. 41 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நாடக அனுபவம் இன்னும் பசுமையாய் நெஞ்சில் பதிந்துள்ளது.

இது மட்டுமல்ல. தமிழ்ப்பள்ளியில் எனக்குக் கற்பித்த தலைமையாசிரியர் சூசை, நரசிம்மன், கருப்பையா, சுப்ரமணியம், இரபேல், வர்ணமுத்து, மார்கழி போன்ற ஆசிரியர்களின் தன்னலங் கருதா சேவையுணர்வும் காட்டிய அன்பும் இன்னும் என் இதய அறைகளில் நீக்கமற நிறைந்துள்ளன.

36 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் என் ஆசிரியர் திரு.சுப்ரமணியத்தைச் சந்திக்க நேர்ந்தது. முதுமையின் கோலங்களை முகம் சுமந்தாலும் அதே பழைய கனிவான பழகும் தன்மையை அவரிடம் கண்டேன். ‘ஆட்டுத் திருடன்’ நாடகத்தையும் அன்றைய பழைய நிகழ்வுகளையும் இன்னும் மறவாமல் நினைவு கூர்ந்தார். அப்பொழுது மக்கள் ஓசை நாளிதளில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள். வாழ்வின் ஒரு பகுதியைச் சுவையான கதைகளால், இனிய தமிழால், இலக்கியத்தால், நம்பிக்கை ஊட்டும் சொற்களால், அன்பால், அறியாமையை அகற்றி அறிவூட்டலால் வாழ்வின் பெரும் பகுதிக்கு வண்ணம் தீட்டுகிறார்கள்.

இடைநிலைப்பள்ளியில் திரு.பொன்னழகு, திரு, கோவிந்தன், கல்லூரியில் திரு கந்தசாமி, பல்கலைக்கழகத்தில் முனைவர் ஒஸ்மான் பூத்தே என வாழ்க்கை நெடுக ஆசிரியர்கள் எனக்கு வழிகாட்டியுள்ளனர்.

என் எல்லா ஆசிரியர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ என்று நம் இலக்கியம் ஆசிரியர்களுக்கு உயர்வான இடத்தை வழங்குகிறது. எல்லா ஆசிரியர்களும் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். சில ஆசிரியர்களோ மாணவர்களின் இதயங்களைத் தொடுகிறார்கள்; உணர்வில் நிறைகிறார்கள்; ஊக்கமூட்டி உயர்வை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார்கள்.

இத்தகைய ஆசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மாணவர்களின் மனமேடைகளில் இத்தகைய ஆசிரியர்களின் உருவங்கள் என்றும் நிழலாடிக்கொண்டிருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

Sunday, September 26, 2010

காப்பார் நகரில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு






மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் காப்பார் நகர் தொடர்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று 26.9.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை காப்பார் நகரில் அமைந்துள்ள ராசி அன்பு இல்லத்தில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு நடைபெற்றது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர்நோக்கும் 27 மாணவர்கள் இதனில் பங்கு பெற்றனர். இப்பயிலரங்கை நான் வழி நடத்தினேன்.

இலக்கியக் குழுவின் தலைவர் திரு. சுப்ரமணியம், செயலாளர் திரு. இராமன், செயற்குழு உறுப்பினர் திரு. எம்.எஸ். பாலன் ஆகியோர் முன்னின்று சிறப்பாக ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.

நிகழ்வில் முதல் அங்கமாக, ராசி அன்பு இல்லத்தின் உரிமையாளர் திரு.பரமேஸ்வரன் (MCIS காப்புறுதி நிர்வாகி) மாணவர்களுக்குச் சிறப்பான தன் முனைப்பு உரையை வழங்கினார். காலை வேளையில் அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகத்தையும் கல்வி மீதான நம்பிக்கையையும் ஊட்டிக் கலகலப்பை ஏற்படுத்தினார்.

மாதிரிக்கு: “பிறக்கும்போது தரித்திரத்தோடு பிறக்கலாம். ஆனால், வாழ்வைச் சரித்திரமாக மாற்றவேண்டும். ஆயிரம் பேர் வெற்றி பெற்றால் அதில் நான் ஒருவனும் இடம்பெறவேண்டும். ஒருவர் வெற்றி பெற்றால் அவன் நானாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டும். கமலஹாசன் மட்டுமா உலக நாயகன்? நீங்களும்தான். ஆயிரக்கணக்கான உயிர் அணுக்களோடு போட்டிப் போட்டு ஓர் உயிர் அணுதானே வெற்றிபெற்றது. அதுதானே நீங்கள்!”

நாவல், நாடகம், கவிதை ஆகிய பாடப்பகுதிகளையொட்டி விரிவாக விளக்கினேன். மாணவர்கள் ஆர்வமாய்க் கேட்டனர். கேட்கும் காதுகள் இருந்தால் சலிப்பில்லாமல் பேசலாம்.

காப்பார் நகரில் அயர்வில்லாமல் இலவசமாகத் தமிழ் இலக்கியப் பணியாற்றும் திரு.சுப்ரமணியம், திரு.இராமன் அவர்தம் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். நிறைவான பணி முடித்த உணர்வோடு விடைபெற்றேன்.




Monday, September 20, 2010

ஒவ்வொரு மரமும்..



குளிர்சாதனப் பறவைகளின் மெல்லிய கீச்சொலிகள்
நிறைந்து வழியும் காட்டிற்குள் நுழைகிறேன்

எங்கும் முகங்காட்டும் புத்தக மரங்கள்
என்ன இருகை நீட்டி வரவேற்கின்றன

வெளியுலகின் பரபரப்புகள் நீங்கி
மௌனத்தின் ஆட்சியில் மூழ்கிய இடம்

மனித நடமாற்றம் குறைந்து
ஒரு சிலர் மட்டும் வாசம்புரிவதைக் கண்டேன்

யார் யார் நடந்துபோன பாதைகளின் சுவடுகள்
மூலைக்கொன்றாய்த் தெரிகின்றன

யார் யாரோ சொல்லிவிட்டுப் போன
வாழ்வின் இரகசியங்கள் அனுபவங்கள்
சிந்தனைச் சேமிப்புகள்
காடெங்கும் கொட்டிக்கிடக்கின்றன

அவரவர் தலை குனிந்தவாறு
அந்த இரகசியங்களை அவிழ்த்து
ஆராயக் கண்டேன்

பசித்த மனத்தோடு
புத்தக மரமொன்றின் அடியிலமர்ந்து
ஆனமட்டும் முயல்கிறேன்

கொஞ்ச நேரத்தில்
என்னைத் தனக்குள் இழுத்துக்கொண்டு
வேர்களைப் பிடுங்கியவாறு
மண்ணிலிருந்து விடுபட்டு மேலெழும்பி
புதிய பாதைகளில் திசைகளில்
காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கிறது
அதனோடு நானும் பறக்கிறேன்

அது தந்த அனுபவத்தில் மூழ்கி மூழ்கி
கிளர்ச்சியில் மனம் திளைத்துப்
பயணம் முடித்து
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறேன்

அந்த அற்புத அனுபவத்தில்
கைம்மண் அளவாவது கிட்டியதா

கையை விரித்தேன்
கிடைத்தது
நிலக்கடலை அளவுதான்

கடல்நீர் முழுதும் குடிக்க முயன்று
தோற்ற கயலாய்..
இனிப்புக் குவியல்முன் மலைத்துப்போன
சிற்றெறும்பாய்..

கண்முன் விரிந்து கிடக்கும்
அந்தக் காட்டை அதிசயமாய்ப் பார்க்கிறேன்

வாழ்ந்து மறைந்த முன்னோரின் முகங்கள்
மரங்களில் இலைகளில் பதிந்திருந்தன

தவித்துக்கிடக்கும் மனங்கள்
எத்தனை முறை அதனுள் போய்வந்தாலும்
தீர்வதில்லை தாகம்

போதிமரத்திற்காக
புத்தன்போல் அலைந்து திரிந்து
தேடிக் களைத்து அவதியுறாமல்

நம் முன்னே நிமிர்ந்து நின்று
தன் மடியில் கிடத்தி நம்மை அரவணைக்க

காத்திருக்கின்றன
ஒவ்வொரு மரமும்..

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை




Saturday, September 18, 2010

வானத்துக் காட்சிகள்





வானத்திலிருந்து பூமியைக் காண்பது அலாதியானது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இளையோர் இலக்கியம் குறித்து..(விரைவில்)

இதயம் திருடும் ஓவியங்கள்















செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் நடைபெற்ற மண்டபத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய ஓவியங்கள் காட்சி தந்தன.

Friday, September 17, 2010

'மௌனம்' கவிதை இதழில் கோ.புண்ணியவான்

'மௌனம் கவிதை' இதழ் பற்றிய என் பார்வை - விரைவில்

Monday, September 13, 2010

செம்மொழி மாநாட்டில்..






இடைநிலைப்பள்ளிகளில் நாடகக்கலை











உலு லங்காட் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கிடையே ‘தமிழ் விழா’ அண்மையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவில் கடந்த ஆண்டு முதல் நாடகப் போட்டியும் இடம்பெற்றது. இம்முறை 9 பள்ளிகள் பங்குபெற்றன. (இன்னும் வரும்..)