நம் குரல்

Monday, January 28, 2019

நறுமண இதழ்ப்பெண்ணே!

           
               95 வருட தமிழ் நேசன் நாளிதழ் 
                       நிறுத்தப்படுகிறது





லகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் – கடந்த 95 ஆண்டுகளாக மலேசியத் தமிழ் வாசகர்களையும்சிங்கப்பூர் தமிழ் வாசகர்களையும் மகிழ்வித்த தமிழ் நேசன் – எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது என்ற தகவல் தமிழ் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தகவல் செல்லியல் செய்தித்தளத்தில் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிகைகள் கடும் வணிகப் பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்டு வரும் வரிசையில் தமிழ் நேசனும் இணைகின்றது.

நீண்ட காலமாக மலேசியாவில் தமிழில் வெளிவரும் ஒரே பத்திரிகையாக விளங்கிய தமிழ் நேசன் வெளிவந்த காலகட்டத்தில் பல தமிழ் நாளிதழ்களுடன் வணிக ரீதியான போட்டியை எதிர்நோக்கினாலும்தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருந்தது.

பின்னர் 1960-ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில்தமிழ் முரசு என்ற பத்திரிகையுடன் போட்டியை தமிழ் நேசன் எதிர்நோக்கியது. தமிழவேள் கோ.சாரங்கபாணியால் தொடங்கப்பட்ட தமிழ் முரசுகால ஓட்டத்தில் மலேசியாவில் நிறுத்தப்பட்டுதற்போது சிங்கையில் மட்டும்அரசாங்கத்தின் ஆதரவில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ் முரசு நாளிதழுக்குப் பின்னர் தமிழ் மலர் என்ற பத்திரிக்கை என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையால் தொடங்கப்பட்டுதமிழ் நேசனுக்குப் போட்டியாக சில ஆண்டுகள் வெளிவந்தது. ஆனால்இஸ்லாம் மதத்தை தரக் குறைவாக விமர்சித்த குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்ட காரணத்தால் தமிழ் மலர் உள்துறை அமைச்சால் நிறுத்தப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின்னர்தமிழ் மலர் நிறுவனம் “தினமணி” என்ற மற்றொரு புதிய பத்திரிகையை வெளியிட்டது. எனினும் அந்தப் பத்திரிகையும் கால ஓட்டத்தில் மூடுவிழா கண்டது.   (செல்லியல்)




Sunday, January 27, 2019

இலக்கு 5000 மாணவர்கள்



                  எஸ்.பி.எம்.
            தமிழ் இலக்கியம்




இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியம் தனிப் பாடமாக உள்ளதா?

ஆமாம். கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, எஸ்.பி.எம்.தேர்வில் தமிழ் இலக்கியம் தேர்வுப் பாடமாக இடம் பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்று தமிழ்க்கல்வி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். ஆயினும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள்தாம் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து பயில்கின்றனர். எஸ்.பி.எம் தேர்வில் தமிழோடு இலக்கியத்திலும் சிறப்புத் தேர்ச்சியடையும் வாய்ப்பினைப் பெற்றும் பல மாணவர்கள் தமிழ்மொழியே போதும் என ஒதுங்கிக் கொள்கின்றனர்.


யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடித்து  ஆண்டுதோறும் சுமார் 16 000 மாணவர்கள் இடைநிலைப்பள்ளிக்குப் போகிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழும் இலக்கியமும் பயில்வதில்லையா?

இல்லை என்பதே கசப்பான உண்மை. 16 000 என்ற  எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து எஸ்.பி.எம். தேர்வில் ஏறக்குறைய 12 000 மாணவர்கள் மட்டும் தமிழ் மொழித் தேர்வுக்கு அமர்கின்றனர்.  இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதைக் காட்டிலும் மிகவும் குறைவு. ஒரு கால கட்டத்தில் தமிழ் இலக்கிய மாணவர்கள் 500 பேர் என்ற நிலை இருந்தது.  மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்), தன்னார்வமுள்ள தமிழாசிரியர்கள், பொது அமைப்புகள், தகவல் ஊடகங்கள் எனப் பல தரப்பினரின் முயற்சியினால் 2007இல் 4700க்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வில் ஒரு பாடமாக எடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், தற்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் குறைந்துகொண்டே வருவது வருத்தமளிக்கிறது. தமிழிலக்கிய மாணவர் எண்ணிக்கையை ஐயாயிரமாக அதிகரிக்க வேண்டுமென்பதே இலக்காகும். இவ்விலக்கை அடைய தமிழ் மாணவர்களும் தமிழாசிரியர்களும் பெற்றோர்களும் பொது அமைப்புகளும் துணைநிற்க வேண்டும்.

தமிழ் இலக்கிய மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால் என்ன ஆகும்?

நம் மாணவர்கள் தமிழும் இலக்கியமும் பயில்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளார்கள். அதன்வழி எஸ்.பி.எம்.தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற்று வருகின்றனர். ஆனால், தேர்வெழுதும் மாணவர் எண்ணிக்கை சரிந்து ஐந்நூறுக்கும் குறைவு என்ற நிலையெனில் இப்பாடம் தேர்வுப் பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. இருக்கும் உரிமையை இழந்துவிட்டால் மீண்டும் அதைப் பெறுவதென்பது எளிதல்ல. மூன்றாம் படிவத்தில் தேர்வுப்பாடமாக இருந்த தெலுங்கு மொழி நீக்கப்பட்டு இன்றும் மீண்டுவர போராடி வருவதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.





                                 இலக்கியப் பாட நூல்கள்
              

மாணவர்கள் ஏன் தமிழ் இலக்கியம் பயிலத் தயங்குகின்றனர்?

இந்த நிலைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. படிவம் 4 அல்லது  5இல் கால அட்டவணையில் தமிழும் இலக்கியமும் இடம் பெறுவதில்லை. பள்ளி நேரத்திற்குப் பிறகு  பிற்பகலில் இந்த வகுப்புகள் நடைபெறும். போக்குவரத்தைக் காரணம் காட்டி இந்த வகுப்புகளைத் தவிர்க்கும்  மாணவர்கள் உண்டு. 

சில பள்ளிகளைத் தவிர்த்து, பெரும்பாலும் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியப் பாடம் கற்பிக்கப்படுவதில்லை. அதைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலைமையும் உண்டு. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் சுய முயற்சியில் பள்ளிக்கு வெளியே ஆசிரியரைத் தேடிப் பயில்கின்றனர். அவர்களின் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் பெற்றோர்கள் துணை நிற்கின்றனர்.  தமிழ் இலக்கியம் பயிலச் சிரமம் என்ற தவறான மனப்போக்கும் மாணவரிடையே உண்டு.  தம் பிள்ளைகள் அதிகமான பாடங்கள் பயிலும் சூழலில் தமிழ் இலக்கியமும் தேவையா எனக் கேள்வி கேட்கும் பெற்றோரும் உள்ளனர்.


தற்போதைய தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் என்னென்ன நூல்கள் இடம்பெற்றுள்ளன?

கவிதை, நாடகம், நாவல் என மூன்று இலக்கிய வகைகளில் மூன்று நூல்கள் இடம்பெற்றுள்ளன. மலேசியத் தேர்வு வாரியம் தேர்வு செய்த 12 கவிதைகள், கு.அழகிரிசாமி எழுதிய கவிச்சக்கரவர்த்தி (நாடகம்), டாக்டர் மு.வரதராசன் எழுதிய அகல் விளக்கு (நாவல்) ஆகியனவே அந்நூல்கள். படிவம் 4, 5 ஆகிய ஈராண்டுகளிலும் இவை மட்டுமே பாட நூல்கள். மாணவர்க்கு உதவும் நோக்கில் குறைந்த அளவில் பாட நூல்கள் உள்ளன.

பாட நூல்கள் மாணவர்களுக்கு இரவலாகத் தரப்படுகின்றனவா?

ஆமாம். இலக்கியகம் முயற்சியில் ம.இ.கா. மூலம் முந்தைய அரசு 4500 பாட நூல்களைப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இரவல் முறையில் 2016 முதல் 2020 வரை இந்நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், பொது இயக்கங்களும் பாடநூல்களை வழங்கித் தம் பங்கினை ஆற்றி வருகின்றன.





                                        வழிகாட்டி நூல்கள்


இந்தப் பாட நூல்களுக்கு வழிகாட்டி நூல்கள் உள்ளனவா?

ஒரு காலகட்டத்தில் வழிகாட்டி நூல்கள் இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தமிழ் இலக்கியம் பயின்றார்கள். இன்று அந்தக் குறை இல்லை.  மாணவர்களின் கைபிடித்து அழைத்துச் சென்று வழிகாட்டும் வகையில் வழிகாட்டி நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதன்வழி மாணவர்கள் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்கின்றனர். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் இந்நூல்கள் துணைபுரிகின்றன.


தமிழ் இலக்கியத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற முடியுமா?

குறைவான பாட நூல்கள், நிறைவான வழிகாட்டி நூல்கள், வழிகாட்டும் ஆசிரியர்கள், தேர்வுக்குத் தயார்செய்ய தேர்வுக் கருத்தரங்குகள், ஏடுகளில் வழிகாட்டிக் கட்டுரைகள் என யாவும் மாணவர்களின் சிறந்த தேர்ச்சிக்கு வழியமைத்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியத் தேர்வின் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்து வருகிறது. பல மாணவர்கள் சிறந்த தேர்வு முடிவைப் பெற்று வருகின்றனர்.





தமிழ் இலக்கியம் பயில பள்ளியில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன செய்வது?

மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் 12 பாடங்கள் வரை பதிந்துகொள்ள முடியும். பள்ளியில் பயில வாய்ப்பில்லாத பாடங்களை வெளியில் வேறு ஆசிரியரிடம் படித்துத் தேர்வுக்குத் தயாராகலாம்.  ஆனால், நான்காம் படிவம் முதலே அப்பாடங்களைப் படித்துவர வேண்டும்.  தாம் படிக்கும் ஆசிரியரிடம் கடிதத்தைப் பெற்றுப் பள்ளியில் தருவதோடு அரையாண்டுத் தேர்வு, இறுதியாண்டுத் தேர்வு போன்றவற்றுக்கும் அமர வேண்டும். மற்றப் பள்ளி இலக்கிய ஆசிரியர்கள் பள்ளிக்குத் தேர்வுத் தாள் அனுப்பி இதற்கு உதவுவார்கள்.

நான்காம் படிவத்தில் இலக்கிய வகுப்புகளில் கலந்துகொள்ளாமல் ஐந்தாம் படிவத்தில் தேர்வுக்குப் பதிந்துகொள்ள முயன்றால் பள்ளியில் அனுமதி தரமாட்டார்கள். பள்ளியின் தேர்ச்சி நிலை பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி நிர்வாகம் இதுபோன்ற  வரும்முன் காப்போன் நடவடிக்கை மேற்கொள்ளும்.

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்குப் பதிந்துகொண்டு தேர்வுக்கு அமர்வது மாணவரின் உரிமை.  தங்கள் பள்ளியில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்கள் / பெற்றோர்கள் தங்கள் மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவின் இணை இயக்குநரிடம் தொடர்பு கொண்டு தக்க ஆலோசனை பெறலாம்.

தமிழ் இலக்கியம் பயில்வதால் தமிழ் மொழித் தேர்விலும் சிறந்த தேர்ச்சி பெற முடியும் என்று கூறப்படுவது உண்மையா?

உண்மைதான். தமிழ் இலக்கியப் பாடத்தில் மாணவர்கள் பெறும் வாசிப்பு அனுபவம், எழுத்துப் பயிற்சி, அவர்களின் சொற்களஞ்சியம் பெருக்கி, மொழி ஆற்றலை மேம்படுத்தும். இதன்வழி தமிழ்மொழித் தாளிலும் சிறந்த தேர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இலக்கியம் பயில்வதால் மாணவர்களுக்கு என்ன பயன்?

இலக்கியம் பயில்வதால் மாணவர்களுக்கு நிறைய பயன்கள் விளைகின்றன. இலக்கியத்தின் நோக்கம் மனித மனங்களை இன்புறுத்துவதும் பண்படுத்துவதுமாகும். இலக்கியம் பயில்வதால் அவர்கள் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறலாம். உயர்கல்வி தொடர அது துணையாய் இருக்கும். அதன் வழி நல்ல வேலை வாய்ப்பினைப் பெறலாம். இலக்கியம் பயில்வது மனமகிழ்வூட்டும் சிறந்தபொழுதுபோக்கு. இலக்கியம் பயில்வதால் இளைய தலைமுறை சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடமாட்டார்கள்.  இலக்கியம்வழி இனத்தின் பண்பாட்டினையும் வரலாற்றையும் அறியலாம். இலக்கியம் பயில்வதால் மாணவர்களும் படைப்பிலக்கியத்தில் ஈடுபடுவர். இப்படிப் பல நன்மைகள் உள்ளன.

மொழியைச் சீர்செய்துகொண்டு பிழையற எழுதவும் பேசவும் தமிழ்மொழிப் பாடம் உதவுகிறது. சிந்தனையைச் சீர்செய்துகொண்டு மனத்தை உயர்த்தி மனித வாழ்வு பற்றிய பார்வையை விரிவாக்கிப் பயன்மிகு வாழ்வு வாழ இலக்கியம் வழிகாட்டுகிறது.  வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும்  அதன் சிக்கல்களை ஆராயவும் இலக்கியம் துணை வருகிறது. இலக்கியத்திற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்கங்கள் உலகில் நூல்களாக அச்சிடப்படுகின்றன. பல நாட்டு அரசுகள் இலக்கியத்திற்காக கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்கின்றன. நம் மலேசிய அரசு, மலாய்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு டேவான் டான் புஸ்தாகா எனும் அமைப்பிற்கு ஆண்டுதோறும் பெருந்தொகையை ஒதுக்கீடு செய்கிறது.

இலக்கியம் வழிதான் தமிழ்மொழியின் அழகையும் அதன் ஆழத்தையும் உணர முடியும். நம் முன்னோர்களின், சமகாலப் படைப்பாளிகளின் சிந்தனைச் சேமிப்பை நாம் பெற முடியும். இலக்கியம் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. இலக்கியம் இல்லாமல் வெறும் பொருளியல் இலாபத்தையே நாடிச் செல்லும் வாழ்வு உண்மையில் பொருளற்ற வாழ்வு.


இலக்கியப் பாடம் குறித்த சிக்கலுக்கும் உதவிக்கும் யாரை நாடுவது?

மாநிலந்தோறும் மாணவர்களுக்கு உதவ தமிழாசிரியர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்பு கொண்டால் ஆங்காங்கே நடக்கும் தமிழ் இலக்கிய வகுப்புகள் குறித்த தகவல்களைப் பெறலாம். மேலும், தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்குகள் பற்றிய விபரம் அறிந்து அவற்றில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Wednesday, January 16, 2019

பெண்மை போற்றுதும்

குளத்தில் கல்லெறிந்தால் சிறுசிறு அலைகள் எழுமே. அதுபோல, அண்மையில் என் பார்வைக்கு வந்த சில ஓவியங்கள் என மனக்குளத்தில் கல்லெறிந்து கற்பனை அலைகளை எழுப்பி விட்டன. இந்தியாவில் மகராஸ்ட்ரா மாநில ஓவியர் சசிகாந்த், தமிழக ஓவியர் இளையராஜா ஆகிய இருவரின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் அவை. அனைத்தும் பெண் ஓவியங்கள். காண்பாரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும்  அற்புத ஓவியங்கள்.

வற்றைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே யாருக்கும் கவிதை உணர்வுகள் பூக்கும். எனக்கும் அதே நிலைதான். மிக அரிதாகவே என் கவிதைகளில் பெண்கள் பாடுபொருளாகியிருக்கிறார்கள். பெண்கள் பற்றிச் சிந்திக்கவும் அவர்களில் உலகத்தில் நுழைந்து மன உணர்வுகளை ஆராயவும் இது வாய்ப்பாக அமைந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து, இந்த ஓவியங்களில் மூழ்கியபோது கவிதைப் பித்துத் தலைக்கேறி நாள் முழுக்க என்னைப் பாடாய்ப் படுத்தியது. இதோ, நான் உற்ற உணர்வுகளைச் சேமித்து உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். முதலில் சசிகாந்த் வரைந்த எட்டு ஓவியங்கள். 


                                                               சசிகாந்த்

பெண் புதிரானவள்; எளிதில் புரிந்துகொள்ள முடியாதவள். யாரும் அறியாதபடி அவளுக்குள் இரகசியங்கள் உண்டு. அவள் நமக்குக் காட்டும் முகத்தைக் கொண்டு அவளைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆயினும், நாமறியாத வேறு முகத்தை அவள் தனக்குள் வைத்திருக்கிறாள். எதுதான் அவளின் உண்மை முகம்?



 வேறொரு முகம்

ஒவ்வொரு நாளும்
அலுவலகக் கோப்புகளில்
மூழ்கியெழும் அவள்
தானே காட்டும் முகத்திலிருந்து
அவளின் அழகை
அன்பை கரிசனையை
புன்சிரிப்பை
கவலைகளற்ற உற்சாகத்தை
கலகலப்பான பேச்சை
இயல்பான கேலியை
அவரவரும் எடுத்துக்கொண்டு
அவளைத் தங்களுள்
உருவகித்துக்கொள்ள...

அவளுக்கு வேறொரு முகம் இருந்தது
யாரிடமும் காட்டாமல்
தனக்குள் வைத்துக்கொண்ட
முகம்




வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் பெரும்பாலும் அலங்கார அணிவகுப்போடுதான் நம் கண்களுக்குக் காட்சி தருகிறார்கள். அழகாயிருக்கும் பெண்கள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடும் வாழ்க்கை வாரி வழங்கியிருக்கும் வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அந்த அழகு முகங்களுக்குப் பின்னால் நம் கண்ணுக்குத் தெரியாமல் இழையோடும் சோகத்தை  நம்மில் எத்தனை பேர்  உணர முடியும்?

அழகு முகம்

எப்போதும் முகம் பார்த்து
அலங்காரம் செய்துகொள்ளும்
கண்ணாடிதான்

இன்று உற்றுப் பார்க்க
கண்ணீர்க் குளத்தில்
ததும்புகின்றன கண்கள்
கண்களின் கீழே கோலமிடும்
கருவளையங்கள்
எதையோ சொல்லத்
துடிக்கின்றன உதடுகள்
பொலிவை இழந்தன
போதையூட்டும் கன்னங்கள்
மிகையாய்த் தெரியும் சுருள் கேசங்கள்
நெற்றியில் சிறிதும்
பெரிதுமாய் உருமாறும் திலகம்

சட்டென்று யாரோ அழைக்க
காட்சி மறைய
மீண்டும் கண்ணாடியில்
அழகு முகம் தெரிகிறது





















வாழ்க்கை நெடுக  நாம் பல வேளைகளில் யார் யாருக்கோ காத்திருக்கிறோம். மனத்திற்குப் பிடித்த ஒருவன் மணாளனாக வரவேண்டும் எனப் பெண்களும் காத்திருக்கிறார்கள். அந்தக் காத்திருப்பின் அவஸ்தைகளை அவர்கள் மட்டுமே உணர முடியும். தன்னைக்  கடந்துபோகும் ஆண்களில் யார் தனக்கானவன் என்பதை அறிந்துகொள்ள அளவிறந்த ஆவல் மனத்தில் நிறைந்திருக்கிறது. ஆனால், பல வேளைகளில்  தங்கள் ஆசைகளைப் புதைத்துக்கொண்டு சூழலுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து இசைந்துபோவதைத் தவிர அவர்கள் என்ன செய்ய முடியும்?



காத்திருப்பு

ஆசையாசையாய்ச் செய்த
அலங்காரம் முடிந்துவிட்டது

இனி அழைப்பு வரும்வரை
காத்திருக்க வேண்டும்

இடைவெளியில்
எங்கெங்கோ போய்வர முடிந்தது

ஆறாம் வகுப்பில் கடிதம் தந்த கேசவன்
இடைநிலைப்பள்ளியில்
விடாமல் நச்சரித்த பாலு
கல்லூரியில் நெருங்கி வந்த சந்திரன்
அலுவலகத்தில் வழிந்துபேசும் ஆண்கள்
ஏக்கமாய்ப் பார்க்கும்
எதிர்வீட்டுக் கோபால்
பேருந்துப் பயணத்தில்
உரசிப் போவோர்
தெருவில் எதையோ கேட்டுப்
பேச முயன்றவர்கள்
இரண்டு முறை வீடுவரை வந்து
விசாரித்துப் போனவர்கள்

இன்னும் அழைப்பு வரவில்லை
காத்திருப்பின் நேரம் நீளுகையில்

அவன் நினைவில் வந்தான்
தான் விரும்பிச்சென்று பேசியும்
விலகிப் போனவன்






















ந்த நவீன வாழ்வில், ஆண்களைப் போலவே பெண்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கலாம். அதற்குத் தடையேதும் இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஆனால், தம் விருப்பம்போல் அவள் செயல்பட முடியாது என்பதுதான் யதார்த்த வாழ்வின் உண்மையாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகள் அவளைச் சுற்றி எந்நேரமும் கண்காணிக்கின்றன. குடும்ப- சமுதாய மரபுகள், சம்பிரதாயங்கள் இவற்றைப் பின்னிப் பின்னி அவளுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் அவர்கள் பயணிக்க வேண்டும். அவற்றை மீற முடியுமா?


மீனைப்போலவே

கண்ணாடிக் குடுவைக்குள்
நிரம்பிய  நீரைத்
தன்   உலகம் என்றெண்ணி
அங்குமிங்கும்
நீந்திக் களிக்கும்
மீனைப் போலவே
அவளும்

சுற்றிலும்
எல்லைகளற்ற பெருவெளியென
மயக்கும் கண்ணாடிகளும்
நீச்சலைக் கட்டுப்படுத்தும்
எல்லைகளும்






















பெண்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அவிழ்க்க அவிழ்க்கச் சிக்கலாகும் நூல்கண்டைப்போல அவர்களும். பெண்களைப் பற்றி ஆண்கள் போடும் கணக்குகள் பெரும்பாலும் தப்பாகி விடும். பூமியின் பருவநிலை மாற்றங்களையும்கூட சரியாகக் கணித்து விடலாம். ஆனால், பெண்களின் மன உணர்வுகளும் எண்ணங்களும் எப்பொழுது நிறம் மாறும் என்பதை அறுதியிட்டுக் கூறவே முடியாது. இந்தப் புதிர்த்தன்மையே அவளைச் சுவாரசியம் நிறைந்தவளாக மாற்றுகிறது. நாவலின் இறுதிப் பக்கம் வரை வாசகனைப் பரபரப்பான உணர்வலையில் சிக்க வைக்கும் எழுத்தாளன்போல் பெண்களும்.  பெண் எனும் புதிரை யாரால் அவிழ்க்க முடியும்?

புதிர்

அவளுக்குக் கோபம்
எப்பொழுது வரும்
எப்படி வரும்
ஏன் வரும்
தகவலேதும் யாருக்கும் தெரியாமல்
கோபத்தோடு அடிக்கடி
ஒன்றிப்போய் விடுவாள்

அவள் கோபத்திற்குப்
பல நிறங்களுண்டு

ஆதங்கக் கோபம்
திடீர்க் கோபம்
நியாயக் கோபம்
பழைய கோபம்
உப்புச்சப்பற்ற கோபம்
காரியக் கோபம்

எந்த நிறக் கோபமாயினும்
அவள் இன்னும் அழகாய்த் தெரிவது

பொய்க் கோபத்தில்தான்

Monday, January 7, 2019

காலம் கவர்ந்த கலைஞன்





அடர்ந்த தலைமுடியை
வெட்டி நறுக்கி
ஒப்பனையால் நேர்த்தியாக்கி
முகத்தில் தாடையில்
முளைத்த முடிகள்
வழித்தெடுத்து
வழவழப்பாக்கி
தலையைத் திருப்பி
சொடக்கு முறித்து
மசாஜ் செய்து..
கைகள் மிக லாவகமாய் இயங்க
இடையிடையே
உள்ளூர் வெளியூர் அரசியல் அலசி
வியப்பிலாழ்த்தும் நாவிதர்
ஒருநாள்
கடைமூடிக் காணாமல் போனார்
பியூட்டி பார்லரும்
நவீன முடித்திருத்தகங்களும்
பெருகிய காலத்தில்..