வாசிப்பின் சுவையறிந்து நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமாகிய எத்தனையோ படைப்பாளிகளில் இராஜகுமாரனும் ஒருவர். படிவம் மூன்று முதலே ஏடுகளுக்கு நான் எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது வாசகர் கடிதங்களோடு சிறு சிறு கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தேன். 1978ஆம் ஆண்டில் வானம்பாடி வார இதழின் வருகை எனக்குள் துயில் கொண்டிருந்த கவிதை உணர்வுகளை எழுப்பிக் கவிதையுலகில் என்னையும் ஆற்றுப்படுத்தியது. கவிதைக்குள் என்னை ஈர்த்த படைப்பாளிகளில் இராஜகுமாரனும் முக்கியமானவர். வானம்பாடி வார இதழ் மூலம்தான் இவரின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதி.குமணன், இராஜகுமாரன், அக்கினி, தியாகு, பாலு என அணிவகுத்த ஆசிரியர் குழுவில் இராஜகுமாரனைத் தனித்த ஆளுமையாக அடையாளம் காண முடிந்தது.
நான் எழுதிய முதல் கவிதை வானம்பாடியில் ‘மங்குகள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. அது குறித்து ‘என் முதல் கவிதை’ என்ற கட்டுரையில், இராஜகுமாரன் அல்லது அக்கினி கைபட்டு என் கவிதை சற்று மாற்றங்களோடு வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளேன். என் கவிதைப் பயணத்தைத் தொடக்கி வைத்தவர்களில் இவரையும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.
வானம்பாடியில் வெளிவந்த இராஜகுமாரனின் ‘சாசனங்கள்’ கட்டுரைத் தொடர் அற்புதமான படைப்பாகும். நான் மிகவும் விரும்பி வாசித்த தொடராகும். மலேசியத் தமிழ் இலக்கிய வெளியில் அத்தகைய கனமான, மாறுபட்ட சிந்தனையைக் காண்பது அரிது. இராஜகுமாரன் யார் என்று பலருக்கும் அறிமுகப்படுத்திய கட்டுரைகளாக அமைந்தன. அது நூல் வடிவம் பெற்றிருந்தால் மலேசிய இலக்கியத்திற்குச் சிறந்த படைப்பு கிடைத்திருக்கும். ஒரு படைப்பாளியின் விழித்திருந்த இரவுகள், காலத்தில் கணக்கின் வராமல் காற்றில் கலந்து மறைந்துபோவது எத்தனை துயரமானது, இழப்புக்குரியது என்பதை ஒரு படைப்பாளியாக என்னால் உணர முடிகிறது.
சிறுகதை வடிவத்திலும் இராஜகுமாரன் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர். வெறும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துவிடும் மலேசியச் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டதாக இவரின் சிறுகதைகள் அமைந்துள்ளன. நல்ல வேளையாக அவை தொகுக்கப்பட்டு ‘மனமெல்லாம் கைகள்’ என்ற தலைப்பில் நூலாக வந்துவிட்டன. புறத்தைவிட கதைப்பாத்திரங்களின் அகத்தை ஆராயும் உளவியல் பார்வைகொண்ட கதைகளாக அவற்றை எழுதியுள்ளார்.
1983ஆம் ஆண்டு ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நான் பயின்ற காலம். தமிழ் ஓசையில் பணியாற்றிய இராஜகுமாரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். கல்லூரியில் இடுபணிக்காக அவரின் சிறுகதைகள் குறித்து அவரோடு பேசவேண்டும் என்றேன். மறுக்காமல் வரச் சொன்னார். மறுநாள் மாலை சென்றேன். அலுவலகத்தில் வேலை முடிந்த கையோடு, தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையையும் விரிவாக விளக்கினார். மிகுந்த மனநிறைவோடு விடைபெற்றேன். நான் சிறுகதைத் துறையில் கால் பதித்த காலக்கட்டம் அது. அவரின் விளக்கம் படைப்பாளியான எனக்குப் பயனாக அமைந்தது.
‘இராத்திரிப்பூ’ இவர் எழுதிய நாவலாகும். மாதந்தோறும் ‘ஒரு வெள்ளியில் ஒரு நாவல்’ திட்டத்தில் குயில் நிறுவனத்தின் வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. அந்த நாவலில் இடம்பெறும் ஒரு கருத்து ஏனோ இன்னமும் என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ‘மரணம் ஒரு வீட்டின் கதவைத் தட்டும்போது, அந்த வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் இன்னொரு வீட்டைத் தேடிப் போய்விடும்’. எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள் இவை. மரணத்தின் மாயக்கரம் பிரச்சினைகள் மீது போர்வையைப் போர்த்திவிட்டு அவற்றின் தீவிரத்தைக் குறைத்து விடுகின்றன என்பதை உணர்த்தும் வரிகள் இவை.
இராஜகுமாரன் வெளியிட்டு வரும் நயனம் இதழ், இந்நாட்டுத் தமிழ் இதழியல் வரலாற்றில் இவரின் பெயரைத் தவறாமல் பதிவு செய்யும் என்பது உண்மை. இதனால், ‘நயனம் இராஜகுமாரன்’ என்ற அடைமொழியே இன்று இவருக்கு நிலைத்துவிட்டது. தமிழகத்தின் குமுதம் இதழின் மலேசியப் பதிப்போ என்று எண்ணும் அளவுக்குக் கையடக்க அளவில் வாசகர் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் நயனம் இதழ் வெளிவந்தது. ஏடுகளில் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இலக்கியத்தை வாசிக்கும் இதயங்களை அரவணைத்து புதிய படைப்புகளை அறிமுகம் செய்தது. நயனத்தின் அழகில் ஈர்க்கப்ப்ட்டு அதன் தீவிர வாசகனாய் நானும் மாறினேன். ஒவ்வொரு வாரமும் நயனத்தின் வருகைக்கு ஏக்கத்தோடு காத்திருந்து அதன் படைப்புகளை வாசித்து மகிழ்வேன். இன்று நயனம் மாத இதழாகி வாசகர் எண்ணிக்கையும் குறைந்திருக்கலாம். ஆனால், பல படைப்பாளிகளுக்குத் தன் கதவுகளை அகலத் திறந்துவிட்டு எழுத வழங்கிய வாய்ப்புகளை யாரும் மறுக்க முடியாது.
நயனத்தில் எழுத எனக்கும் வாய்ப்புகள் வழங்கினார். என் இரண்டு தொடர்கள் நயனத்தில் வெளிவந்தன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்துக்கு மேற்கொண்ட இலக்கியப் பயண அனுபவத்தை, ‘இலக்கியப் பயணத்தில் ஹைக்கூ பாடகன்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதினேன். ஒவ்வொரு வாரமும் இவரே தலைப்புகள் எழுதி தொடரைச் சுவையாக்கினார். ஓவியர் வேலவன் பக்க அமைப்பில் மெருகூட்டினார். பின்னர், அது நூலாக வடிவம் பெற்றபோது, இராஜகுமாரன் அணிந்துரை எழுதி நூலுக்குச் சிறப்புச் சேர்த்தார்.
தொடர்ந்து, ‘என் எழுதுகோலே நெம்புகோலாக’ என்ற கவிதைத் தொடரையும் நயனத்தில் எழுத வாய்ப்பினை வழங்கினார். “எத்தனை வாரம் வேண்டுமானாலும் தொடர்ந்து சுதந்திரமாக எழுதுங்கள்” என்றார். ஐம்பது வாரங்கள் எழுதினேன். இவ்வாண்டு வெளிவந்த ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ கவிதை நூலில் அந்தக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவர் கவிதைத் துறையிலும் தன் பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். புதுக்கவிதைக்காகக் குரல் கொடுத்த தொடக்ககாலப் படைப்பாளர்கள் அணியில் இருந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் தொகுத்த ‘புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’ கவிதை நூலில் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது.
எத்தனை கவிதைகள்
படுக்கை கொப்புளங்களாக
மன முதுகில்
பழுக்கின்றன
விடிந்தால்
எழுத்துக்கூட்டங்களின்
அனுபவ அலுப்பில்
விமர்சன சந்நியாசிகளின்
குறட்டை தாலாட்டில்
லயித்த
இலக்கிய சோம்பேறித்தனத்தால்
இன்று ஒரு கவிதை
எழுதாமல் வீணாகிவிட்டது
(பறிக்கப்படாத பூக்கள்)
இராஜகுமாரனின் மனத்தில் பூத்த எத்தனையோ கவிதைகள் இப்படித்தான் ஏட்டில் முகங்காட்டாமல் மறைந்துவிட்டனவோ? தொடர்ந்து எழுதியிருந்தால் இவரின் மாறுபட்ட சிந்தனையைக் கவிதைகளில் நாம் தரிசித்திருக்க முடியும். நயனத்தில் ‘புது நிலவு’ என்ற பெயரில் எழுதினார். அவை காதல் மனத்தின் பதிவுகளாக, இளைய உள்ளங்களை ஈர்க்கும் கவிதைகளாக அமைந்தன.
‘இணையம்’ என்ற சொல்லை உலகுக்கு வழங்கியவர் இராஜகுமாரன். கோலாலம்பூரில் நூல் வெளியீடுகள், இலக்கியச் சந்திப்புகளில் கலந்துகொண்டு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார். ஆதி.குமணன் இன்று நம்மிடையே இல்லை. அந்தக் குறை தீர்க்க ஆதி.இராஜகுமாரனாக நம்மிடையே வலம் வரும் இவர், இலக்கியம் நேசிக்கும் இதயங்களில் என்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார் என்பது உறுதி.