நம் குரல்

Saturday, February 8, 2020

ஹைக்கூ நேர்காணல்

புரியா மனங்களுக்குப் புலப்படாது ஹைக்கூ நேர்காணல் – வாணிஜெயம்

தமிழில் புதுக்கவிதைக்குப் பிறகு கவனத்தை ஈர்த்த கவிதை வடிவம் ஹைக்கூ. நவீனம் நோக்கிக் கவிதை நகர்ந்துவிட்டாலும் இயற்கைக்கு மீளல், எளிய உயிர்க்கு இரங்கல் என மனிதர்களின் அடிப்படைக்கூறுகளை நோக்கிக் கவனப்படுத்துகிறது  ஹைக்கூ. இன்று உலகின் பல மொழிகளில் ஹைக்கூ எழுதப்படுகிறது. இது ஜப்பானிய கவிதை வடிவமாக இருந்தாலும் அதன் பண்புகள், நாடு, மொழி எனும் எல்லைகளைக் கடந்து பல நாட்டுக் கவிதையுலகில்  சிறப்பிடம் பெற்றுள்ளன. மலேசியாவில் ஹைக்கூ கவிதையில் ஈடுபாடு காட்டிவரும் ந.பச்சைபாலன் ஹைக்கூ பற்றிய தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.


கேள்வி: ஹைக்கூ கவிதையின் தோற்றம் பற்றி விளக்குங்கள்.

பதில்:  ஹைக்கூ கவிதை, ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் அரும்பி, 17ஆம் நூற்றாண்டில் மலர்ந்து, மணந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்த மூன்று வரிகளில் அமைந்த எளிய கவிதை வடிவம். கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்துச் சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் வீசுவது ஹைக்கூ என்று தீ.லீலாவதி குறிப்பிடுகிறார். ரென்கா என்பது ஜப்பானியக் கவிதைகளில் ஒரு வகைப் பழம் பாட்டு ஆகும். அந்தக் குறும்பாட்டிலிருந்து மேலும் இறுகியும் குறுகியும் உருவான வடிவம்தான் ஹைக்கூ. தொடக்கத்தில் புத்த பிக்குகள் ஹைக்கூ கவிதைகள் எழுதினர். ஆனால், 17ஆம் நூற்றாண்டில்  தொக்குகாவா எனும்  நிலையான மைய அரசு உருவானதும் இலக்கிய உலகம் மறுமலர்ச்ச்சி அடைந்தது. ஹைக்கூ மக்கள் இலக்கியமானது.  20ஆம் நூற்றாண்டில்  அது உலகெங்கும் பரவி பல மொழிகளில் இன்று எழுதப்படுகிறது. ஜப்பானிய ஹைக்கூ கவிதை உலகில் நால்வராக பாஷோ, பூஷன், இஸா, ஷிகி ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

கேள்வி: ஹைக்கூ கவிதை தமிழுக்கு எப்படி வந்தது?

பதில்:  ஹைக்கூவைத் தமிழில் அறிமுகப்படுத்தியவரே மகாகவி பாரதியார்தான். 16.10.1916இல் சுதேசமித்திரன் இதழில், ஹைக்கூ பற்றிய கட்டுரையோடு மொழிபெயர்த்த ஹைக்கூ கவிதைகளையும் வெளியிட்டுள்ளார். உயோநே நோகுச்சி என்னும் ஜப்பானியக் கவிஞர் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த மார்டன் ரிவியூ எனும் இதழில் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு பாரதி கட்டுரை எழுதினார். ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ என்ற தமது கொள்கையை இதன்வழி பாரதியார் மெய்ப்பித்துள்ளார். தமிழுக்குப் புதுக்கவிதை, சிறுகதை போன்ற புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்திய பாரதியார்தான் ஹைக்கூவையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.  பின்னர், தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதி தமிழுலகம் அறியச் செய்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கேள்வி : பாரதியார் மொழி பெயர்த்த ஹைக்கூ கவிதையைக் குறிப்பிட முடியுமா?

பதில் : ஹொகூஷி என்ற மாணவரின் வீடு தீயில் எரிந்துவிட்டது. அந்தச் செய்தியைத் தன் குருவுக்குப் பின்வருமாறு எழுதியனுப்புகிறார்:


                                              தீப்பட்டெரிந்து
                                                வீழுமலரின்
                                              அமைதியென்னே!

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்துணை அமைதியுடன் இருக்கிறதோ, அத்துணை அமைதியுடன் ஞானி தனக்கு வரும் துன்பங்களை நோக்குகின்றான். வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால், அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை என்று பாரதியே கவிதைக்கு விளக்கமும் தந்துள்ளார்.

கேள்வி: ஹைக்கூ கவிதையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?

பதில்1990ஆம் ஆண்டில்தான் ஹைக்கூ கவிதையின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான் மொழிபெயர்த்த சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசித்தேன். அவற்றின் இறுக்கம், சொற்களின் சுருக்கம், அர்த்தத்தின் பெருக்கம் என்னை ஒரு கவிதானுபவத்தில் மூழ்க வைத்தது. அவற்றில் ஒன்று. சொந்தக் கிணறு இருந்தும் அதில் நீர் எடுக்காமல் அண்டை வீட்டில் போய் நின்றுகொண்டு ஒருத்தி இப்படிக் குரல் கொடுக்கிறாள்.

                            யாராவது எனக்கு நீர் கொடுங்களேன் 
                            என் கிணற்றைப் பிடித்துக்கொண்டது
                            பூத்த இளங்கொடி
-       சியோனி

முல்லைக் கொடிக்குத் தன் தேரையே தந்து  மகிழ்ந்தான் பாரி வள்ளல். இவளோ, கிணற்றில் படர்ந்துள்ள பூப்பூத்த கொடியைப் பிடுங்கி எறிய மனமின்றித் தன் கிணற்றையே தந்து விடுகிறாள். மூன்று வரிகளுக்குள் மறைந்திருந்து கண்சிமிட்டும் நுட்பமான உணர்வுகளை உங்களால் உணர முடிகிறதா? கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் அமைந்து நமக்குள் ஆச்சரியங்களை அள்ளி இறைக்கும் ஹைக்கூ கவிதையைப் படித்தபோது இந்தப் பழமொழிதான் நெஞ்சில் இனித்தது.  அதன் பின்னரே, ஹைக்கூ கவிதைகளைத் தேடிப் படித்தேன்.  புதிய அனுபவத்தில் திளைத்தேன். சென்னையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் ஹைக்கூவை எனக்கு அறிமுகப்படுத்திய கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் ஹைக்கூ பற்றிக் கட்டுரை படைத்த தருணம் மறக்க முடியாதது.

கேள்வி: ஹைக்கூ கவிதையின் இலக்கணம் அல்லது அதன் தன்மைகள் யாவை?

பதில்: ஹைக்கூவுக்கு இலக்கணம் உண்டு. அவற்றை நன்கு புரிந்து கொண்டால்தான் ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும்.

ஹைக்கூவின் இலக்கணம் 

1.  5 - 7 - 5 என்ற அசை அமைப்பை உடைய மூன்று அடிகளால் ஆன கவிதை வடிவம்.    
     (17 அசைகள் எனும் அமைப்பு தமிழில் தவிர்க்கப்பட்டு மூன்று வரிகள் மட்டும் ஏற்கப்படுகிறது)

2. ஹைக்கூ பெரும்பாலும் பருவங்களின் மாற்றங்களை, அந்த மாற்றங்கள் மனித மனத்தில்   
    ஏற்படுத்தும் பாதிப்புக்களைச் சித்தரிக்கும்.

3. ஹைக்கூவின் முக்கியமான பண்பு அதன் ஜென் தத்துவப் பார்வை. அதன் அடிப்படையை
    ஓரளவிற்காவது புரிந்துகொண்டால்தான் ஹைக்கூவின் ஆழங்களை அடையாளம் காண 
    முடியும்.

4. ஹைக்கூ கவிஞன் வாசகனையும் தன்னைப் போலவே பக்குவம் உடையவனாக மதிக்கிறான்.
    அவனையும் கவிதையின் உணர்வு அனுபவத்தில் பங்கு கொள்ளச் செய்கிறான்.

5. ஹைக்கூவின் மொழியமைப்பு தந்தியைப் போன்றது. வேண்டாத சொற்களை மட்டுமல்ல.      
    வாக்கிய அமைப்புக்கு வேண்டிய இணைப்புச் சொற்களைக் கூட அது விலக்கி விடுகிறது

6. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் அதன் ஈற்றடியில்தான் இருக்கிறது. அது ஒரு திடீர்
    வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையயும் வெளிச்சப்படுத்தும்.

7. ஹைக்கூ ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச்சொற்களையே
    பயன்படுத்தும்.

8. ஹைக்கூ கவிதைக்குத் தலைப்புத்  தேவையில்லை. தலைப்பு இல்லாமலே      
    காட்சியளிப்பதுதான் ஹைக்கூவின் தனிப்பண்பு    

9. ஹைக்கூவில் உவமை, உருவகம் போன்ற அணிகள் இல்லை. ஹைக்கூவின் சிக்கனப் பண்புக்கு ஊறு விளைவிப்பதாலும் எதையும் மிகையில்லாமல் உள்ளபடியே வெளியிட வேண்டும் என்பதாலும் அது அனுமதிக்கப்படுவதில்லை. அப்பட்டமான உணர்வு வெளிப்பாடும் ஹைக்கூவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.       

கேள்வி:   ஜென் தத்துவப் பார்வையைப் பற்றி விளக்குங்கள்.    

பதில்:   எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்க்கும் மனநிலைதான் இது.   இந்த உலகின் ஒவ்வொரு படைப்பும் எல்லையற்ற வாழ்க்கை எனும் மாக்கடலில் எழுந்து மறையும் அலைகள்; சத்தியத்தின் முகச்சாயல் காட்டும் வெளிப்பாடுகள்; சிகரமோ, உயர்ந்த மலையோ,  சின்னஞ் சிறிய பூவோ – எதுவாகினும் அகண்டத்தின் அங்கங்கள்; ஒரே வயிற்றின் உடன்பிறப்புகள்.   இந்த ஜென் தத்துவப் பார்வையோடு ஜப்பானியக் கவிஞர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். அதனால் ஓர் எளிய காட்சி, ஒரு சாதாரண நிகழ்ச்சிகூட வாழ்க்கையின் மர்மத்தை உணர்த்தும் குறிப்பாகி விடுகிறது என்கிறார் அப்துல் ரகுமான்.   

                                                உறங்கவேயில்லை
                                                நிலத்தை விற்ற அந்த இரவில்
                                                தவளைகளின் அழைப்பு
                                                                       
ஜப்பானியக் கவிஞர் ஹொகுஷியின் ஹைக்கூ வரிகள் இவை. வறுமையைப் போக்க வேறுவழியில்லாமல் தன் வயலை விற்றுவிடுகிறார். தன் சொத்தை இழந்ததுகூட அவருக்கு வருத்தமில்லை. தான் வாழ்ந்து பழகிய இயற்கைச் சூழலைப் பறிகொடுத்ததுதான் அவரை வதைக்கிறது. அதனால்தான் தொலைதூர தவளைகளின் ஒலி  அவரின் தூக்கத்தைத் துண்டிக்கிறது.

மனிதன் மற்ற எல்லா உயிர்களைவிட தன்னை உயர்ந்த படைப்பாகக் கருதுகிறான் ஆனால், ஹைக்கூவின் உயிர்நாதமாக இருக்கும் ஜென் புத்தமதத் தத்துவப்பார்வை மனிதனின் இந்தப் பிரமையை உடைத்துப் போடுகிறது. அவன் கண்களை மூடியிருக்கும் மாயத் திரையை விலக்கி விடுகிறது. சின்னஞ் சிறிய பூச்சியோ, புழுவோ, எறும்போ, மனிதனோ அனைத்தையும் ஒரே தாயின் வயிற்றுப் பிள்ளைகளாக அது பார்க்கிறது. அவற்றில் உயர்வில்லை; தாழ்வில்லை. சீறியெழும் கடலில் மறைவதுபோல் ஒவ்வொரு படைப்பும் நிலையில்லாதவை என நினைவுறுத்துகிறது.

மனிதன் ‘தான் உயர்ந்த படைப்பு’ என்ற மனநிலையிலிருந்து கீழே இறங்கி வந்து மற்ற எளிய உயிரினங்களைச் சக உயிராகக் காணுகையில் அவற்றின் சின்னச் சின்ன அசைவுகள், செயல்பாடுகள் கண்களுக்குப் பூதாகரமாகத் தெரிகின்றன. இதனால்தான் ஹைக்கூக்களில் எறும்பு, நத்தை, வண்ணத்துப்பூச்சி, தவளை போன்றவை தனியிடத்தைப் பெறுகின்றன. ஜென் சிந்தனை இன்னும் ஆழமானது. அதன் சிறு துளியே இங்குச் சுட்டப்படுகிறது.


கேள்வி: குறைந்த சொற்களில் எழுதும்போது ஹைக்கூ கவிதை முழுமையற்ற படைப்பாகத் தோன்றுகிறதே?

பதில்: ஹைக்கூ கவிதைகள் முழுமையானதாகவோ தெளிவான கருத்துச் செறிவிடனோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குறைந்த சொற்களில் கவிஞன் தருவதை ஒருங்கிணைத்துப் பார்த்துப் பொருள் கொள்வது வாசகனின் வேலை. ஒரு பாதியைக் கவிஞன் தர மறுபாதியை வாசகன் உணர முழுமையான அனுபவம் கிடைக்கிறது. ஹைக்கூ என்பது பாதி திறந்திருக்கும் கதவு. முழுமையான அனுபவத்தைப் பெற வாசகன்தான் முயல வேண்டும். எல்லாவற்றையும்  சொல்லிவிடாமல் வாசகனுக்கும் மீதம் வைக்கிறான் கவிஞன். ஒவ்வொரு கவிதையிலும் வாசகனும் கூட்டுப் படைப்பாளியாகிறான். கவிஞன் இறங்கிக்கொள்ள வாசகன் அதன் மீது பயணம் போவான் என்கிறார் மேனாட்டறிஞர் ரேமாண்ட் ரோஸ்லிப். ஹைக்கூ, வாசகனின் அறிவு, அனுபவம் சிந்தனை ஆகியவற்றிற்கேற்பப் பொருள் தரும் தன்மையுடையது. எ.கா.

சிள்வண்டு பிடிக்கும் கம்பு
அழைக்கும் அலைகளினால்
கைவிடப்பட்டு தனியே...

கடற்கரையோரம் சிள்வண்டு பிடிக்க வந்தவர், அழகிய அலைகள் கவர்ந்திழுக்க வந்த செயல் மறந்து கால் நனைக்கச் சென்ற காட்சியை ஹெகிகாடோவின் இச்சிறிய கவிதை நயமாய்க் காட்டுகிறது.  இயற்கை அழகில் இதயம் இழப்பவரின் மனநிலை இதில்  வெளிப்படுகிறது.
                            
கேள்வி: ஹைக்கூ கவிதையில் இயற்கைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பதில்:  ஜப்பானியர்களின் வாழ்க்கை இயற்கையோடு இரண்டறக் கலந்தது. இயற்கையே அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கின்றது. வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் என மாறி மாறிவரும் நால்வகைப் பருவங்கள் ஜப்பானியரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இங்கே மலேசியாவில் நால்வகைப்பருவ மாற்றங்களை நாம் அதிகமாக உணர்வதில்லை. ஆனால், அங்கே இந்த மாற்றங்கள் மனத்தில் பாதிப்புகளை விதைக்க அவை இலக்கியங்களில் பதிவு செயப்படுகின்றன.

இயற்கையோடு இத்தகைய நெருங்கிய தொடர்பு ஹைக்கூ கவிதைகளிலும் வெளிப்படுகிறது. என்ன இந்த ஹைக்கூ கவிஞர்கள்? நிலவையும் மரஞ்செடிகளையும் புல்லையும் பூவையும் பாடுகிறார்களே என யோசிப்பவர்களுக்கு இந்த விளக்கம் உதவும் என நம்புகிறேன். இயற்கையை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கும் மனிதனை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிதான் ஹைக்கூ.

                                                இலையுதிர்காலப் பௌர்ணமி
                                                ஒவ்வொரு புல்லின் நிழலிலும்
                                                பூச்சியின் ஓசை
                                                                        -பூசன்                                                        அப்துல் ரகுமான்

இரவு நேரம். கண்களுக்கு எதுவும் புலப்படாத சூழல். புல்லின் நிழலில் பூச்சி இருப்பதையும் காண முடியாத நிலை. ஆனால், பூசன் ஓசை வழியே பூச்சி இருப்பதை உணர்கிறார். இரவு நேரத்தில் துல்லியமாய் ஒலி, ஒளி, நிழல், இருட்டு என அனைத்தையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கும் கவிஞரின் உள்ளம் இதன்வழி புலனாகின்றது.


கடைப் புத்தகங்கள்
கனமான பொருள்
இளவேனில் காற்று
                           -கிடோ

இளவேனில் காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கடையில் புத்தகங்கள் மேல் கனமான பொருள் வைக்கப்பட்டிருக்கிறது. அது காற்றின் வருகையை நமக்கு உணர்த்தும் பொருளாகிறது. நம்மைச் சுற்றி இயற்கையின் வருகையும் மாறுதலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதனால், நமக்கு அது சாதாரணமாகி விடுகிறது. கிடோ போன்ற கவிஞர்களால் ஆழ்ந்து கவனிக்கப்படுகிறது.


கேள்வி: ஹைக்கூ கவிதையில் கற்பனைக்கு இடமுண்டா?

பதில்: இதில் கற்பனைக்கு இடமில்லை. கவிஞன் தான் கண்ட காட்சியில் கற்பனையைக் கலக்காமல் அப்படியே தரவேண்டும். கவிஞன் வாழ்ந்து பெற்ற ஓர் அனுபவத்தைக் கற்பனை கலவாமல் மிகக் குறைந்த சொற்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அது கண்டிப்பாக ஒரு செய்தியையோ அல்லது கருத்தினையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், ஓர் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். சொல்ல வருவதைக் காட்சிப்படுத்துவது சிரமம்தான். தொடர் பயிற்சியும் விடாமுயற்சியும் பலன் தரும்.


கேள்வி: ஹைக்கூ எழுதுவது சிரமமானது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:  உண்மைதான். அதன் வடிவம் எளிமையானது. ஆனால், கவிதை எழுதுவது சிரமமானது. ஹைக்கூ இலக்கணத்தை உள்வாங்கிக் கொண்டு, குறைந்த சொற்களில், அணிகளின்றி,  ஓர் அனுபவத்தை அல்லது ஒரு காட்சியைக் கூர்ந்து நோக்கிப் பதிவு செய்வது சிரமம்தான்.அது விடுகதையாக, புதிராக, கேள்வி – பதிலாக அமைந்து விடக்கூடாது. எளிய உயிர்க்கு இரங்கல், இயற்கைக்கு மீளல் ஆகிய இரண்டு அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்தி கவிதை எழுதிப் பார்க்கலாம். ஹைக்கூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும் என்பார் அப்துல் ரகுமான்.

ஹைக்கூ எழுதும் கலை ஒரு நாளில் கைகூடி வராது. தொடக்க காலத்தில் நான் எழுதிய பல ஹைக்கூக்களை நீக்கியுள்ளேன். சிலவற்றைத் திருத்துகிறேன். தொடர்ந்து எழுதியும், எழுதியதைத் திருத்தியும் பொருந்தி வராததை நீக்கியும் செல்லும் போக்கே தரமான ஹைக்கூக்களை மலரச் செய்யும்.

கேள்வி: மலாய் மொழியில் ஹைக்கூ கவிதை எழுதப்படுகிறதா?

பதில்:  பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் முகமட் சாலே யாப்பார் ஹைக்கூ ஆய்வில் ஈடுபட்டு ‘Zen dan Haiku: Kini yang Abadi dalam Puisi’ எனும் நூலை வெளியிட்டுள்ளார். முகமட் அஃப்பாண்டி ஹசான் ‘Haiku in Malay’ எனும் கவிதை நூலை எழுதியுள்ளார். மலாய் இலக்கிய உலகில் ஹைக்கூ மீதான கவனம் குறைந்திருப்பதை உணர முடிகிறது.


கேள்வி: நீங்கள் எழுதும் ஹைக்கூ கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா?

பதில்: 2007இல் தமிழகம், பொள்ளாச்சியில், நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய சாகித்திய விருதுபெற்ற கவிஞர் புவியரசு, என் ஹைக்கூ கவிதையொன்றைக் குறிப்பிட்டு என்னை முன்னே அழைத்து வாழ்த்தினார். அது என் ஹைக்கூ கவிதைகளுக்குக் கிடைத்த மறக்க முடியாத ஆதரவுக் குரலாகும். அந்தக் கவிதை இதோ:
        
                                 
  வாடகை வீடு மாறும் நாளில்
  அவள் நட்ட செடியில்
  சில பூக்கள்

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் ஏ லெவல் பாடத்திட்டத்தில் என் இரண்டு ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.                                                        ஆர்.எச்.பிளித்

    
கேள்வி:       புதுவைக் கடற்கரை
                  சீறும் அலைகள்  
                  காந்தி சிலை 

 இந்தக் கவிதை எழுதிய உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்.                        

பதில்:   ஒரு வாசிப்பில் இந்த மூன்று வரிகளில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். ஒரு பயண அனுபவத்தைப் பதிவு செய்யும் சூழலில் எழுதியது இது. 2004இல் மலேசிய எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட இலக்கியப் பயணத்தில் புதுச்சேரியில் கண்ட காட்சியின் பதிவு இது. புதுச்சேரி சுற்றுலாத்துறை அதிகாரி ஆதவன், கடற்கரையோரம் அமைந்துள்ள காந்தி சிலை, ஆயி மண்டபம் ஆகிய இரண்டையும் காண அழைத்துச் சென்றார். இரவு நேரத்தின் அமைதியைக் கடல் அலைகள் உரக்கப் பேசிக் கலைத்தன. நான்கு மீட்டர் உயர காந்தி சிலை. அதைச் சுற்றி எட்டுத் தூண்கள். பிரெஞ்சு இராணுவம் புதுச்சேரியைக் கைப்பற்றி ஆண்டதற்கு இன்னும்  சான்றாக மூன்றாம் நொப்போலியன் ஆட்சியின்போது கட்டப்பட்ட ஆயி மண்டபம் உள்ளது. நகரெங்கும் பிரஞ்சு ஆட்சியின் அடையாளங்கள். சீறும் அலைகள் அந்நியர் படையெடுத்ததை எனக்கு அறிவிப்பதாகத் தோன்றியது. கடற்கரையோரம் உள்ள காந்தியின் சிலை, இந்திய மண்ணில் அந்நியர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர அகிம்சை வழியில் போராடி வென்ற மாபெரும் தலைவரை நினைவூட்டுவதாக உணர்ந்தேன். அன்று கண்ட காட்சியும் உற்ற உணர்வும் கலந்து செய்த படைப்பு இது.


கேள்வி: ஹைக்கூ எழுத விரும்புவோர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:  ஹைக்கூ உலகம் அற்புதமானது;  விரிவானது; ஆழமானது. இதுவரை எனக்குக் கிடைத்த அனுபவம் ஒரு துளி மட்டும்தான். இது வெறும் மூன்று வரி விவகாரம். ஹைக்கூவில் ஒன்றுமில்லை என்று புரியாமல் ஒதுங்கிப் போவோருக்கு ஹைக்கூ என்றும் புலப்படாது. 

ஹைக்கூ நினைக்க நினைக்க நெஞ்சில் இனிக்கும் அனுபவமாகும். இந்தப் பிரபஞ்சத்தின் மர்மங்களை, நாம் சாதாரணம் என்று நினைக்கும் அன்றாட நிகழ்வுகளை, மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் திடீரென திரை விளக்கிக் காட்டும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ. ஹைக்கூ பற்றி பிளித் என்பார் கூறியுள்ள கருத்து நம் சிந்தனைக்குரியது. ஹைக்கூ நம்மைத் தட்டி அழைக்கும் கை; பாதி திறந்திருக்கும் கதவு; தூய்மையாகத் துடைக்கப்பட்ட கண்ணாடி ; இயற்கையின்பால் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம்; பேசாமல் பேசி நம் மனிதாபிமானத்தில் பங்கு கொள்ளும் இலக்கியச் சாதனம்.                                                   ஹென்டர்சன் ஜி. ஹெரால்ட்


கேள்வி: ஹைக்கூ பற்றிய தெளிவுபெற ஆய்வு நூல்கள் உள்ளனவா?

பதில்: தமிழில் நிர்மலா சுரேஷ், லீலாவதி எழுதிய நூல்கள் ஹைக்கூ பற்றிய தெளிவைத் தருகின்றன. ஆங்கிலத்தில் ஆர்.எச். பிளித், கென்னத் யசூதா, ஹெண்டர்சன் ஜி.ஹெரால்ட் எழுதிய நூல்கள் உள்ளன. வில்லியம் ஜே.ஹிக்கின்சன் எழுதிய The Haiku Handbook என்ற நூல் ஒரு முழுமையான விளக்க நூலாகும்.

கேள்வி: நீங்கள் எழுதிய சில ஹைக்கூக்களைக் கூற முடியுமா?

பதில்:                              உணவைக் கொஞ்சம்
                                           சிந்தி உண்ணுங்கள்
                                           எறும்புகள் வரும் நேரம்
    
                                           முறிந்த மரக்கிளை
                                           எதையோ தேடும்
                                           தாய்க்குருவி

                                            புழுதிக் காற்று
                                            இலைகளில்
                                            பூச்சிகளின் தடயம்
                                   
                                             சோம்பல் மாணவன்
                                             பாறை இடுக்கில்
                                             தலைநீட்டும் செடி

                                             மழை பெய்தது
                                             நல்ல வேளை
                                             குடை இல்லை

                                           சாலையோர
                                           குடிசைகள் ஊடே
                                           கோயில் கோபுரம்

                                                 வில்லியம் ஜே.ஹிக்கின்சன்

முகம் - இதழ் 2

14 ஆண்டுகளுக்குப் பிறகு,
காலாண்டிதழாக
முகம் இலக்கிய இதழ் 2
45 பக்கங்களில்
18 படைப்பாளர்களின் பங்களிப்போடு
இவ்வாரம் வெளிவருகிறது.
பத்துமலைத் தைப்பூசத்தில்
ஜெயபக்தி புத்தகக் கடையில்
முகம் இதழைப் பெறலாம்.

Tuesday, February 4, 2020

முகம் - இலக்கிய இதழ்
டிசம்பர் 2005இல் முனைவர் ரெ.கார்த்திகேசுவும் எங்களில் சிலரும் இணைய, ‘முகம்’ முதல் இதழ் அறிமுக இதழாக 25 பக்கங்களில் வெளிவந்தது. எம்.ஏ.இளஞ்செல்வனின் இலக்கியப் பணியை நினைவுகூரும் வகையில் அவர் குறித்த படைப்புகள் அதனில் இடம்பெற்றன. கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய - சிங்கை இலக்கிய மாநாட்டின்போது (2005), தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் முதல் இதழை வெளியிட்டுச் சிறப்பித்தார். எழுத்தாளர்களிடம் படைப்புகளைக் கேட்டுப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதால் முதல் இதழோடு சிற்றிதழ் முயற்சியைக் கைவிட்டோம்.

14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, பிரசவ வைராக்கியம் கலைந்து, மீண்டும் ‘முகம்’ இரண்டாம் இதழ் விரைவில் மலர்கிறது.....
நண்பர்கள் பலரும் இணையும் இலக்கிய இதழ்.
உங்கள் இதய வாசல் நாடி வருகிறது.

புவி எங்கும் தமிழ்க்கவிதை


புவி எங்கும் தமிழ்க்கவிதை
இன்று, தமிழ்ச் சமூகம் உலகெங்கும் பல திசைகளில் விரிந்து பரந்து வாழும் சூழலைக் காண்கிறோம். சங்க காலம் தொடங்கி தமிழர்கள் தங்கள் தாய் மண்ணிலிருந்து வெவ்வேறு திசைகளுக்குப் பயணித்ததைச் சங்க இலக்கியங்கள் சான்று பகருகின்றன. ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சியில் தமிழர்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். ஈழப்போரின் விளைவால் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின் புகலிடங்களாக மாறியுள்ளன. பொருளாதார தேவைகளுக்காகவும் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டில் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் தமிழ்க்குரல் ஒலிக்கும் சூழலை  நம்மால் உணர முடிகிறது.

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கவிதைக் குரலைப் பதிவு செய்யும் நோக்கில் சாகித்திய அகாதெமி,  எழுத்தாளர் மாலனின் முயற்சியில் புவி எங்கும் தமிழ்க் கவிதை எனும் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் மாலன் மூத்த எழுத்தாளர். கவிஞரும் கூட. பரிசுகள் பல வென்ற படைப்பாளி. அயலகத் தமிழ்ப் படைப்புகளில் ஆர்வம்கொண்ட இவர், சாகித்திய அகாதெமிக்காக அயலகச் சிறுகதைத் தொகுப்பையும் உருவாக்கித் தந்துள்ளார். திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியர். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இதற்கு முன்பாக இந்தியா டுடே (தமிழ்)தினமணிகுமுதம்குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும்சன் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். மேலும், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர்.

 தமிழ்க் கவிதை என்னும் நெடுமரம் காலம் காலமாய் நம்மீது கவிதைகளைச் சொரிந்து கொண்டிருக்கிறது. அந்தக் கவிதைகளில் சிலவற்றைக் காற்று உங்கள் கையில் உள்ள இந்தச் சிறு தடாகத்திலும் கொணர்ந்து சேர்த்திருக்கிறதுஎன்று மாலன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

உலகெங்கும் வாழும் தமிழ்க்கவிஞர்களிடமிருந்து கவிதைகளைத் திரட்டி இந்நூலை மாலன் உருவாகியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரக நாடுகளான அபுதாபி, கத்தார், துபாய், ஷார்ஜா இவற்றுடன் கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், சீனம், ஹாங்காங், செஷல்ஸ், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, பப்புவா, நியூ கினி, பிரான்ஸ், மலேசியா, மியான்மர், ஜெர்மனி என ஐந்து கண்டங்களில் உள்ள 22 வாழ்விடங்களிலிருந்து 58 கவிஞர்களிடமிருந்து திரட்டப்பட்ட 71 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மூத்த கவிஞர்களும், பல்கலைக்கழக இளம் நட்சத்திரங்களும் ஒரு சேர இடம்பெறுகிறார்கள். நிலம், காலம், வகை எனப் பல வகைகளில் விரிந்த தொகுதியாக இது திகழ்கிறது.                                        மாலன்

இந்நூலின் பாடுபொருள்கள்  பன்முகம் கொண்டதாகவும் சமகாலக் கவிதைகளின் பாடுபொருள்களை மையமிட்டதாகவும் உள்ளன. இது குறித்து மாலன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தன்னிரக்கம், சுயவியப்பு, நினைவலைகள், அகமலர்ச்சி, போரின் அதிர்வுகள், புலம்பெயர்தலின் இடர்கள், பிரிவாற்றாமை, புதிய நிலங்கள் அளிக்கும் அகச்சிக்கல்கள், மொழியுடனான உறவு, கவிதையியல் சார்ந்தெழும் கேள்விகள், இன்னதென விளக்க முடியா மனக்குமைவு இவை எல்லாவற்றையும் இங்குள்ள கவிதைகளின் பாடுபொருளாகக் காணலாம். மரபான காதல், வீரம், இயற்கை வர்ணனை, கைக்கிளை ஆகியவற்றிலிருந்து தமிழ்ச் சமூகம் நவீன உலகின் பல அடுக்குகள் கொண்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதற்கும் இந்தக் கவிதைகள் சான்றளிக்கும்

71 கவிதைகளும் பல்வேறு வகைப்பாடுகளைக் கொண்டுள்ளதை உணர முடிகிறது. பெண்ணியப் பார்வை கொண்டவை, இருண்மை நிறைந்தவை, குறீயீடுகள் கொண்டவை, படிமங்களாக உணர்த்துபவை, உள்ளொடுங்கிய தொனியில் அமைந்தவை, கதை சொல்லும் கவிதைகள், அங்கதக் குரலில் ஒலிப்பவை, யாப்பமைதி கொண்டவை என அதன் வகைப்பாடுகளை மாலன் பட்டியலிடுகிறார்.


        22 நாடுகள்
       58 கவிஞர்கள்
 

தமிழ்க்கவிதை உலகில் தங்கள் கவிதைகளால் புகழின் சிகரங்களில் உலவும் மூத்த கவிஞர்களான நுஃமான் (இலங்கை), க.து.மு. இக்பால் (சிங்கப்பூர்), சேரன் (கனடா), அம்பி (பப்புவா நுயூ கினியா) ஆகியோரின் கவிதைகளும் கவிதையுலகில் புதியவர்களான இளையோரின் கவிதைகளும் இந்நூலுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. 
நுஃமானின் துப்பாக்கி பற்றிய கனவு’, நா.சபேசன் (இங்கிலாந்து) எழுதிய "நான் காத்திருக்கிறேன்', அனார் (இலங்கை)எழுதிய "இரண்டு பெண்கள்', கோகுலக் கண்ணனின் (அமெரிக்கா) அகராதியில் விழுந்த குழந்தை’, ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் வசிக்கும் அய்யனார் எழுதிய "முப்பத்தைந்து டிகிரி விடியல்', தீபச்செல்வனின் (இலங்கை)  ஒரு கொரிலாவின் இறுதிக் கணம்’, கனடாவில் வசிக்கும் கவிஞர் வ.ந.கிரிதரன் எழுதிய "நவீன விக்ரமாதித்தனின் காலம்', ஜெஸிலா பானுவின் (துபை) எழுதிய குறையேதுமில்லை  என இத்தொகுப்பில் காணும்  ஒவ்வொரு கவிதையும் நம் கவனத்தை ஈர்க்கின்றன.


    மலேசியக் கவிஞர்கள்     ஐவர்           
இந்தக் கவிதைத் தொகுப்பில் மலேசியாவின் ஐந்து கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கோ.புண்ணியவான், ந.பச்சைபாலன், கே.பாலமுருகன், அகிலன், பூங்குழலி ஆகியோரே அவர்களாவர். கோ.புண்ணியவானின் யாருமற்றவர்களின் மறைவு’, தமிழன்’, ந.பச்சைபாலனின் வீடு திரும்புதல்’, கே.பாலமுருகனின் கடைசிப் பேருந்து’, அகிலனின் பெருங்காதல்’, பூங்குழலியின் இனியவளின் குறிப்பு’, நாயொன்று இறந்தது குறித்த கதை ஆகிய கவிதைகளே அவை.
                                                   கோ.புண்ணியவான்       
                                                கே.பாலமுருகன்          
                                                        பூங்குழலி  
                                                      அகிலன்

கோ.புண்ணியவானின் யாருமற்றவர்களின் மறைவு தனிமையில் வாழ்ந்து இறந்துபோகும் மனிதனின் இறுதிநேர கணங்களைப் பதிவு செய்கிறது. இறப்பை அறியாத  மற்றவர்களின் மனஓட்டத்தையும் இதனில் இணைத்துப் பார்க்கிறார் கவிஞர். அதில் சில வரிகள்:


திரும்ப அழைக்கக்கூடுமென்றே
நம்பித் தொலைக்கிறது
பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்
சேர்ந்தும் சேராது
நிரம்பி மினுக்கிட்டபடியே
காத்திருக்கின்றன குறுந்தகவல்கள்
நடை நண்பர்கள் அழைப்புகள்
நாளை அல்லது நாளை மறுநாள்
வந்துவிடக்கூடுமென
நம்பிக்கையில் நகர்கின்றது
வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள்
பொறுப்பற்றவன் என்ற
நிர்வாகக் கோபத்தில்
கனன்றுவிடுகிறது
ஆடிக்கொருமுறையான
பிள்ளைகளின் தொடர்புகள்
எரிச்சலூட்டி அடங்கும்போது
அப்பா எப்போதும் போலவே
வெளிநாடு சென்றிருக்கலாமென
தேற்றிக்கொள்கின்றனர்

பூங்குழலியின் இனியவளின் குறிப்பு எனும் கவிதை, குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சமாளிக்கும் சூழலில் விளைந்ததாகும். குழந்தைகள் கேள்விகளால் பெரியவர்களைத் திணறடித்தாலும் அதைக் கவிதையாக்கும் வித்தை தெரிந்தவர் பூங்குழலி.

மழை எங்கிருந்து வருகிறது
என்ற நச்சரிப்பில் என் காலைத் தூக்கம்
கலைந்து போனது.
கண்களை அகல விரித்தபடி வெளியே
மழை பெய்வதாக சொன்னவள்
விளையாட போகமுடியாத சோகத்தை மறைத்தபடி
மழை வேடிக்கையில் திளைத்திருந்தாள்.
முகம் கழுவி வந்த என்னை முன் கேட்ட கேள்வி துரத்தியது.
மழை வானத்திலிருந்து வருகிறது என்றேன்.
அது எப்படி வானத்திற்குப் போகிறது என்றாள்.
வெயிலில் சூடாகி
நீர் ஆவியாகி மேலே போய் மேகமாகி
பாரம் தாங்காமல் மேகம்
மீண்டும் மழையாகிறது என்றேன்.
ஏன் மழைநீரில் வானவில் கரைந்து வருவதில்லை என்றபடி
எழுந்து போகிறாள்.
அவளின் கால் சுவடெங்கும் கரைந்து கரைந்து
பதிகிறது வானவில் வண்ணங்கள்
வீட்டின் தரையெங்கும்.

வீடு திரும்புதல் எனும் என் கவிதை, மக்கள் ஓசையில் வெளிவந்தது. ஈழப் போருக்குப் பின் அகதி முகாமில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் சோகத்தை மையமிட்டு இதை எழுதினேன்.

தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும்
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
அவரவரும் தங்கள் வீடுகளுக்கு
கண்ணுக்குத் தெரியாத
மாய இழைகளால்
பின்னப்பட்டுள்ளார்கள் அவரவரும்
தங்கள் வீடுகளோடு

வீடுகளுக்கும் பயணங்களுக்கும்
இடைவெளி நீளுகையில்
பள்ளம் நிரப்பும் நீராய்த் ததும்புகிறது
அன்பும் தாபமும் துயரும் கண்ணீரும்

வாழ்ந்த வீட்டை விலைபேசி விற்க
பழங்கதைகள் நினைவிலாட
கனத்த இதயத்தோடு திரும்பிய கால்கள்

எதையோ தேடி ஓடிக் களைத்து
மீண்டும் பழைய பாதைக்கே மீள
அகால நேரத்தில் திரும்பிய கால்கள்

சிதலமாகிய தோட்ட வீட்டைப்
பிள்ளைகளுக்குக் காட்ட
புல்லும் புதரும் மண்டிய பாதையில்
இதயத் தவிப்போடு பயணப்பட்ட கால்கள்

இறப்புச் செய்தி கேட்டு
பொங்கும் குமுறலை அடக்கியவாறு
ஆறுதலற்ற மனம் அலைமோத
விரையும் கால்கள்

தொலைவிலிருந்தும் அருகிலிருந்தும்
அவரவரும்
தங்கள் வீடுகளுக்குத்
திரும்பிக்கொண்டிருக்க

வீடுகளுக்குத் திரும்பும்
பாதைகள் எங்கே என்று குழம்பியவாறு
தயங்கித் தயங்கி நிற்கின்றன
அகதி முகாமில் கால்கள்

கே.பாலமுருகனின் கடைசிப் பேருந்து கவிதை, ஒரு பெருநகரை மிகவும் கவித்துவமாகக் காட்சிப்படுத்துகிறது. காட்சிகளின் ஊடாக ஒரு பெருநகருக்கான வாழ்வனுபவத்தைக் கவிதை கடத்துகிறது.

கடைசிப் பேருந்திற்காக
நின்றிருந்த போது இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது

மனித இடைவெளி
விழுந்து நகரம் இறந்திருந்தது
சாலையின் பிரதான குப்பைத் தொட்டி
 கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்

பேருந்தின் காத்திருப்பு இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருவன்

நகர மனிதர்களின் சலனம்
காணாமல் போயிருந்தது
விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன

ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்

கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில்.....

ஒரு சிறுமி
சாலையைக் கடந்து வெறுங்கால்களில்
இருண்டுவிட்ட கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசிப் பேருந்து வந்து சேர்ந்திருந்தது

இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைகவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்

கடைசி பேருந்து கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்

அகிலனின் பெருங்காதல் கவிதை அகம் சார்ந்த தன்னுணர்வு அடையாளங்களைப் பற்றியது. தீராத அலைகளைப்போல தன் வாழ்வும் தீராமல் அழைக்கழிப்புக்கு ஆளாகும் நிலையைக் கவிதையில் காட்டுகிறார்.

ஆர்வமாய் நான் பதிக்கும்
அத்தனை தடங்களையும்
அவசர அவசரமாய் அள்ளிக் கொண்டு போகிறது
ஓயாமல்
இந்த அலை

எங்குக் கொண்டு
சேர்த்து வைக்கும்
எனது, அத்தனை தடங்களையும்?
அதற்குத் தெரிந்த வழியில் என்னை நேசிக்கிறது

அடங்காத பெருங்காதலில்
கடல்
அயராத பயணமாய்
நான்

இக்கவிதை நூலை  விரிவும் செறிவும் கொண்டதாக  உருவாக்குவதில் மாலனின் உழைப்பை உணர முடிகிறது. இன்றைய உலகத் தமிழ்க் கவிதைகளின் போக்கினை ஆராய விழைவோருக்கு இஃது அரிய ஆவணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. நிறைவான தொகுப்பாக இதனை உருவாக்கினாலும் உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு தமிழ்க் கவிதையையாவது திரட்டித் தொகுப்பொன்றை உருவாக்கும் கனவு இன்னும் என்னுள் உறங்கிக் கொண்டிருக்கிறது. என்றோ ஒரு நாள் அது கைகூடும்  என்று மாலன் கூறுகிறார்.  உலகெங்கும் வாழும் தமிழ்க் கவிஞர்களை ஒரே தளத்தில் நிறுத்தி அவர்களின் கவிதை மனங்களைப் பேசவைத்த தொகுப்பாளர் மாலன் பாராட்டுக்குரியவர்.