நம் குரல்

Sunday, December 18, 2011

நானொரு நாடகம் பார்க்கிறேன் (சிறுகதை)“மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப் புள்ளியில் கண்கள் நிலைகுத்தின. அதற்குமேல் என்னால் புள்ளிகளை வாசிக்க முடியவில்லை. கோபம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என் முகமாற்றத்தை மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

எத்தனை விதமான முயற்சிகள்! எவ்வளவு பயிற்சிகள்! பல மாத உழைப்பின் அறுவடையை அளந்து பார்க்கக் காத்திருந்தவனுக்குப் பலன் ஒன்றுமில்லை என்றால் எழும் ஏமாற்றம்தான் என்னையும் துவைத்தது. அரையாண்டுத் தேர்விலேயே இப்படியென்றால் உண்மையான எஸ்.பி.எம். தேர்வில்? நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருந்தது. தேர்வில் ஒட்டுமொத்தத் தமிழ்மொழித் தேர்ச்சி இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்தால்...

தேர்வுத் தாளைத் தயக்கத்தோடு வாங்கினான் கோபால். என் முகத்தில் பரவிய கோபத்தின் கடுமையை உணர்ந்திருக்க வேண்டும்.

“மன்னிச்சிடுங்க சார். இந்த தடவ என்னால பாஸாக முடியல்ல.. அடுத்த தடவ முயற்சி செய்யிறேன்.. எல்லார் முன்னுக்கும் என்ன ஏசாதீங்க சார்..” அருகில் வந்து தாழ்ந்த குரலில் கூறினான். தலை கவிழ்ந்திருந்தது.

“அவமானப்படக்கூடாது என்ற விழிப்பு உணர்வு இருக்கிறது. ஆனால், உழைப்பதற்கான முயற்சி இல்லையே. இங்க உன்ன மாதிரிதானே எல்லாருக்கும் பாடம் நடத்துறேன். எல்லாரும் அக்கறையா பாடத்துல கவனமா இருக்கிறாங்க. ஆனா நீ.... வகுப்புலேயும் கவனமில்ல. வீட்டுப் பாடங்களும் செய்யிறதில்ல.. தாய்மொழியிலேயே தடுமாறுனா எப்படி? எவ்வளவு பயிற்சி கொடுத்திருக்கிறேன். அதையெல்லாம் செய்திருந்தா இப்படி மோசமா இருக்குமா? எப்பப்பார்த்தாலும் ஒரே சிரிப்பு, கும்மாளம். நீயெல்லாம்..” நாக்கு நுனியில் வந்துவிட்ட சொற்களைச் சிரமப்பட்டுத் தடுத்தேன்.

வகுப்பு அமைதியாகிவிட்டது. இருபத்தைந்து மாணவர்களில் ஒருவன் மட்டும் தேர்ச்சிபெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூறு விழுக்காடு வெற்றிக்குக் காய்களை நகர்த்தியவன் கடைசி வினாடியில் தோல்வியைச் சந்தித்தால்..
கோபால் பேசாமல் போய் அவன் இடத்தில் அமர்ந்துவிட்டான். குற்றம் இழைத்தவனின் வேதனையைப்போல் அவன் முகம் வாடிவிட்டது.

அதற்குமேல் பாடத்தில் என்னால் மனம் ஒன்றிச் சொல்லித்தர முடியவில்லை. தேர்வுக் கேள்வியில் சிரமமான பகுதிகளை விளக்கினேன். கட்டுரை என்றாலே மாணவர்க்குக் கசப்பு மருந்தாகிவிடுகிறது. அதில்தான் பலர் புள்ளிகளை இழந்திருந்தார்கள்.

வகுப்பு முடிந்து ஆசிரியர் அறைக்குத் திரும்பினேன். மனம் அமைதியடையாமல் முரண்டு பண்ணியது. கோபாலைப் போன்ற மாணவர்களுக்கு ஆசிரியரின் மனவேதனை புரியுமா?

“சார், இன்னொரு வாய்ப்பு கொடுங்க. நான் எப்படியாவது..” பின்னாலேயே வந்து நின்றான் கோபால்.

“எதற்கு இன்னொரு வாய்ப்பு? அடுத்தமுறை 20 எடுத்து என்ன அவமானப்படுத்தவா? இங்க பார் கோபால். நானும் உன்னை மாதிரிதான் படிப்பில ரொம்ப பின்தங்கி இருந்தேன். ஆனா, நல்லா படிச்சி உயர்ந்த நிலைக்கு வருனும்னு கடுமையா உழைச்சேன். சும்மா வெட்டிக்கதை பேசி காலத்த கழிக்கல. உனக்கு எப்பப் பார்த்தாலும் ஆட்டம் பாட்டம். நான் கொடுக்கிற பாடங்களைச் செய்தாலே போதும். ஆனா நீ செய்யமாட்டே. உனக்குத்தான் படிப்பில ஆர்வம் இல்லையே” ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

“அப்படி இல்ல சார். கொஞ்சம் விளையாட்டா இருந்திட்டேன். சார், நீங்க வேணும்னா பாருங்க. அடுத்த பரீச்சயில நல்ல மார்க் எடுக்கிறேன். இதுக்காக என்ன நாடகத்தில இருந்து எடுத்திடாதீங்க.. உங்களுக்குத்தான் தெரியுமே. நான் நல்ல நடிப்பேன் சார்”

அடுத்த மாதம் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள நாடகப்போட்டிக்காக எங்கள் பள்ளி நாடகக் குழுவில் பங்குபெற கோபாலும் பெயர் கொடுத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு நாடகப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தோம். இம்முறை முதல் இடத்தைக் குறிவைத்து நாடக வேலையைத் தொடக்கியிருந்தேன். கோபாலும் நடிக்கும் திறமையுள்ளவன்தான். ஆனாலும், தமிழ்ப் பாடத்திலேயே தடுமாறும் இவனுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? தமிழில் தேர்ச்சிபெற்ற மற்றவர்களுக்கு அதைத் தரலாமே!

“ஓ, உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? முதல்ல தமிழ்ல உன் திறமையை காட்டு. அப்புறம் நாடகம் பத்தி யோசிக்கலாம். உன்னைவிட தமிழ்ல நல்ல மார்க் எடுத்த கண்ணன், அமுதன், முகிலன் இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்” கோபால் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் முகாமிட்டன. ஒன்றும் பேசவில்லை. போய்விட்டான்.

பள்ளி வேலையில் மூழ்கினாலும் என் எண்ணமெல்லாம் கோபாலைச் சுற்றியே வட்டமிட்டது. எப்படியாவது அவனைத் தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சியை நோக்கி நகர்த்தவேண்டும். மூன்று ஆண்டுகளாகப் பெற்ற நூறு விழுக்காடு தேர்ச்சியை ஒரு மாணவனால் தவறவிடக்கூடாது. குதிரையை மல்லுக்கட்டி ஆற்றுக்குக் கொண்டுபோகலாம். தண்ணீரை அதுதானே குடிக்கவேண்டும்?

@ @ @ @ @ @

மாணவர் வருகைப் பதிவேட்டில் முகவரி இருந்ததால் கோபாலின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. சாலையோர வீடமைப்புப் பகுதியில் நுழைந்து இரண்டாவது வரிசையில் காரை நிறுத்தி வீட்டை நெருங்கினேன்.

மாலை மணி ஆறு. வீட்டில் பேச்சொலி கேட்டது. எட்டிப்பார்த்தேன். “அடியே, உன்னையும் உன் குடும்பத்தையும் அடியோடு அழிக்காம விடமாட்டேன். நீ அழுது ஒண்ணும் இங்கே சாதிக்கமுடியாது.” தொலைக்காட்சியில் ஏதோ நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. கோபாலின் மொத்தக் குடும்பமே நாடகத்தின் உருக்கமான காட்சியில் சிறையாகி இருந்தது. சோகத்தைக் கிலோ கணக்கில் யாரோ பிழிந்துகொண்டிருந்தார்கள். தொடர் நாடகங்கள் பார்ப்பது நம்மவரின் முக்கிய அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிவிட்டதா? இதனைச் ‘சைத்தான் பெட்டி’ என்று சொல்வது சரியாகத்தான் இருக்குமோ? கோபாலைக் காணவில்லை.

“வணக்கங்க. நான் கோபாலின் தமிழ் ஆசிரியருங்க. கோபால் விசயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கோபால் இல்லீங்களா?” கேள்வியோடு உள்ளே நுழைந்தேன்.

“வாங்க, உக்காருங்க சார். கோபாலு வீட்டுல இல்லையே. எங்க போயிருக்கான்? பந்து விளையாடத்தானே?” கோபாலின் அப்பா கிருஷ்ணன் தன் மனைவியிடம் உறுதிப்படுத்திகொண்டு என்னை ஏறிட்டார். கலைந்த தலைமுடி. சவரம் காணாமல் முகத்தை அப்பியிருந்த வெள்ளைத் தாடி. அவர் நாடக மயக்கத்தில் இருந்தார்.

“என்ன விசயம் சார்? தப்பு ஏதும் பண்ணிட்டானா? அவன் சாதுவாச்சே” கோபாலின் அம்மாவின் முகத்தில் கேள்விக்குறிகள்.

“தப்பு ஒண்ணும் செய்யிலங்க. தமிழ்ப் பாடத்துல கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாம இருக்கான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். பயிற்சிங்க கொடுத்தா செய்யறதில்ல. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப்போக வந்தேன்.” சொல்லிவிட்டு இருவரின் முகங்களைக் கூர்ந்து நோக்கினேன்.

“நல்லா சொல்லுங்க சார். வீட்டுல எங்க படிக்கிறான்? எப்பவும் பந்து விளையாட்டுதான். திடலே கதின்னு கிடப்பான். சாயங்காலம் ஆச்சுன்னா கூட்டாளிங்க வந்திடுவாங்க. அப்புறம் ஆள பார்க்க முடியாது. நீங்க தண்ணி சாப்பிடுங்க சார்” தன்னளவில் எந்தக் தப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் தொனி கிருஷ்ணன் குரலில் தெரிந்தது.

“ஆமாங்க சார். நாங்க என்னா அவன படிக்கவேண்டாம்னா சொல்றோம். வீட்டுல இருந்தாலும் நல்லா டிவியில நாடகத்த பார்த்துக்கிட்டு பொழுத போக்குறான். நாடகம்னா அவனுக்கு அவ்வளவு உசுரு.” கோபாலின் அம்மா நிலைமையை விளக்கினார்.

“நீங்கதான் அவன் படிக்கிற சூழ்நிலைய வீட்டுல ஏற்படுத்தணும். சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்களே டிவிய பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் கோபாலுக்கு எப்படி படிப்புல ஆர்வம் வரும்.” வேறுவழியில்லை. நேரடியாக என் உள்ளக்கிடக்கையைக் கொட்டிவிட்டேன். மூடிமறைத்துப் பேசிப் பயனில்லை.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நாங்க வயசான காலத்துல டிவிய பார்த்துகிட்டு காலத்த கழிக்கிறோம். இவனுக்கு எங்க போச்சு புத்தி? படிக்கிற இவனுக்கு தெரியணும் சார். நாளைக்கி படிச்சி வேலைக்குப் போனா அவந்தான நல்லா இருப்பான்” கிருஷ்ணனின் சொற்களில் சூடு ஏறியிருந்தது. பழியைத் தூக்கி அப்படியே மகனின் மீது போட்டுவிட்டார்.

தொலைக்காட்சி கம்பீரமாகக் கொலுவீற்றிருந்த முன் அறையில் தமிழ் நாளிதழோ நூல்களோ இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லை. சுவரில் நடிகர்கள் விஜயும் அஜீத்தும் ஸ்டைல் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள் தனியாக அமர்ந்து படிப்பதற்கான எந்த வசதியும் அங்கில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. கோபாலுக்கும் தமிழுக்கும் தூரம் நீண்டிருப்பதற்கான காரணம் எனக்குப் புரியத் தொடங்கியது.

“கோபாலுக்காக நீங்க கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுக்கணும். பிள்ளைகளுக்காக நாம தியாகம் செய்ய தயாரா இருந்தாதான் அவங்கள வாழ்க்கையில கரை சேர்க்கலாம். வீட்டுல கோபால் படிக்கிறதுக்கு வசதி இருக்கா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....” சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.

நான் விடைபெற்றேன். நெஞ்சம் முழுக்க ஏமாற்றம் நிறைந்திருந்தது.

“அவன் வந்தா சொல்றேங்க சார். பார்ப்போம். ஆண்டவன் அவனுக்கு ஒரு வழிகாட்டாமலா போவான்” இப்போது பாரத்தை ஆண்டவன் மீது தூக்கிப் போட்டுவிட்டு எனக்கு விடைதந்தார்.

வீட்டின் முன்பகுதியைக் கவனித்தேன் அது கவனிப்பாரற்றுப் புல் மண்டிக்கிடந்தது.

@ @ @ @ @ @ @ @

“புறா மூலம் தூது அனுப்பினேனே கிடைத்ததா? ஏன் இன்னும் மறுமொழியில்லை? என எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி இருக்கிறான். என்ன செய்யட்டும் மன்னா? கட்டளையிடுங்கள்” அமைச்சர் முகத்தில் கேள்விக்குறிகள் நிறைந்தன.
“பகை மன்னன் பாண்டியன்தானே? என்ன திமிர் அவனுக்கு? வரட்டும் பார்த்துவிடுவோம். நம் பலம் தெரியாமல் நம்மோடு மோதுகிறான் அந்தப் புல்லன். புறாவுக்கு நேர்ந்த கதிதான் அவனுக்கும். புரிய வைப்போம்” மன்னர் மீசையை முறுக்கினார்.

பள்ளி மண்டபத்தில் நாடக ஒத்திகை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி தவறவிட்ட வெற்றிக்கோப்பையை இம்முறை எப்படியாவது வாகைசூட வேண்டுமே? கடுமையான முயற்சியில் இறங்கிவிட்டோம். அமைச்சர், தளபதி, புலவர், ராணி என எல்லாப் பாத்திரங்களும் கனகச்சிதமாகப் பொருந்தினார்கள். மன்னருக்குத்தான் முறுக்கு போதவில்லை. வாயில் நுழைந்த தமிழும் சிதைந்துகொண்டிருந்தது. குரலில் கம்பீர மிடுக்கும் குறைந்தது. வேறு வழியில்லை. மன்னரை மாற்றிப் பார்த்தேன்.

அப்பொழுதும் திருப்தியில்லை. புதிய மன்னருக்குத் தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணியது. மூன்று நாள் பயிற்சி கொடுத்தால் மன்னரைத் தேற்றலாம் என நினைத்தேன். அது அவ்வளவு எளிதில்லை என்பது புரிந்தது. இன்னும் கொஞ்சம் மிரட்டினால் மன்னர் அழுதுவிடுவார் போலிருந்தது. வேறு வழியில்லை அவரை வைத்துத்தான் எப்படியாவது ஒப்பேத்த வேண்டும்.

“சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. முயற்சி பண்றேன். என்னால முடியும். போன வருசம்கூட நடிச்சேனே” பள்ளி முடிந்து மண்டபத்தில் நடக்கும் ஒத்திகைக்கு நாள் தவறாமல் வந்து ஒரு மூலையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கோபால்தான் மனு செய்தான்.

“இப்பதானே கொடுத்த பாடங்கள செய்ய ஆரம்பிச்சிருக்க. பார்ப்போம். தமிழ்ல நாற்பது புள்ளிய தாண்டுனா உன்ன பரிசீலிக்கலாம். அதுவரைக்கும் நீ வேடிக்கைதான் பார்க்கணும் கோபால்” நான் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவன் முகம் வாடியதைக் கவனிக்கத் தவறவில்லை.

“புல்லனே! யாரிடம் மோதுகிறாய்? இமயத்தில் புலிக்கொடி பொறித்த வீர மரபில் வந்தவர்கள் நாங்கள். உங்களின் தலைகளைப் பந்தாடாமல் எங்கள் வாள்கள் உறையில் உறங்காது” மன்னர் வாளை உருவியபடி எதிரியைப் பார்த்துக் கர்ஜித்தார். குரலில் கடுமை போதவில்லை. பயம்தான் எட்டிப்பார்த்தது. நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

நாடகப் போட்டிக்கு மாணவரை அழைத்துப் போக பெற்றோரின் அனுமதி, உணவு ஏற்பாடு, பேருந்து என பல பணிகளை முடிக்கவேண்டியிருந்தது. இடையிடையே மன்னர் எனக்குள் எட்டிப்பார்த்து என்னைப் பயமுறுத்தினார்.

@ @ @ @ @ @ @ @ @

கோபாலிடமிருந்து வீட்டுப்பாடம் வருவது ஆச்சரியம்தான். ஆனால், வந்தது. எழுத்துப்பிழைகள் குறைந்தபாடில்லை. ஆனாலும், முயற்சியின் முதல்படியில் ஏறத்தொடங்கியிருந்தான். அடிக்கடி ஆசிரியர் அறைக்கு வந்து என்னை எட்டிப்பார்த்தான். பேச்சுக் கொடுத்தான். வீட்டுப்பாடத்தை நீட்டினான். வகுப்பில் கும்மாளத்தைக் குறைத்தான்.

நாடகப்போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள். தொடர்ந்து மன்னரோடு போராடும் சக்தியை நான் இழந்துகொண்டிருந்தேன். நாடகத்தைத் தூக்கி நிறுத்தப்போகும் பாத்திரம் மன்னர்தான், அவரே தடுமாறிச் சொதப்பிக்கொண்டிருந்தால்...

“சார், இந்தாங்க நேத்து நீங்க கொடுத்த கட்டுரை. முடிச்சிட்டேன் சார். வகுப்பறையில் பயிற்சி நூல்களைத் திருத்திக் கொண்டிருந்தவன் தலைநிமிர்ந்தேன். கோபால் கட்டுரை எழுதித் தருவது அபூர்வம். இப்படியாவது தமிழில் தேர்ச்சியை நோக்கி நகர்வானா? மனம் எதிர்பார்ப்புகளை அடுக்கியது.

“ஒரே ஒரு வாய்ப்பு. கொடுத்து பாருங்க. உங்க பேர காப்பாத்துவேன் சார்” கோபாலின் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருந்தது.

“இல்ல கோபால். உன் முயற்சி போதாது. இன்னும் நீ தீவிரமா உழைப்பை தரணும். அது உன்னால முடியுன்னு நான் நம்புறேன்”

@ @ @ @ @ @

நாடகப்போட்டியில் இம்முறை ஒன்பது பள்ளிகள் கலந்துகொண்டன. நான்காம் ஆண்டாக நடக்கும் நிகழ்வென்பதால் எல்லாப் பள்ளிகளும் நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு கடுமையான போட்டியைத் தந்தன. இலக்கிய நாடகமென்பதால் பலவிதமான உடைகளில் மாணவர்கள் சரித்திரக் கதைமாந்தர்களாய் உருமாறி மேடையைக் கலக்கிக்கொண்டிருந்தனர்.

கடைசிக் குழுவாய் எங்கள் பள்ளி மாணவர்கள் மேடையேறினர். நான் நம்பிக்கையோடு சரித்திரப் பாத்திரங்களோடு ஒன்றிப்போனேன்.

“எம் மண்ணில் கால் வைத்தால் பகைவனின் தலையைப் பந்தாடாமல் விடமாட்டோம். புல்லனுக்கு நம் வீரத்தைப் புரிய வைக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். நினைத்ததை அடைந்தே தீருவோம்.” மன்னர் உணர்ச்சிப் பிழம்பாய்ப் பொங்கினார். ஒவ்வொரு பாத்திரத்தின் உடையும் வாளும் அணிகளும் நாடகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருந்தன.

மண்டபத்தில் உள்ளோரின் கையொலி போட்டியின் முடிவைச் சொல்லாமல் சொல்லியது. நாடகம் முடிந்து, திரை மூடியது. மேடைக்குப் பின்னால் நின்றிருந்த என்னை நோக்கி என் நாடகக் குழுவினர் வந்தனர். கோபால் மகுடத்தைக் கழற்றிக் கையில் வைத்திருந்தான். நான் அவனை ஆரத் தழுவிக் கொண்டேன்.

தமிழ் நேசன் (18.12.2011)

Thursday, December 15, 2011

முகம் தொலைத்தல்முகம் மலர்த்தல் எளிது
சிறு புன்னகை, புன்முறுவல்
இதழ்களிடையே தவழவிட்டால் போதும்

முகம் சுளித்தல் எளிது
வாய் இதழ்கள் பிதுக்கி
கண்களில் சிறு வெறுப்பை
உமிழ்ந்தால் போதும்

முகம் மறைத்தல் எளிது
இரு கைகள் கொண்டு
முகத்தை மூடினால் போதும்

முகம் பார்த்தல் எளிது
கண்ணாடி அருகே சென்று
முகம் காட்டினால் போதும்

முகம் மாற்றல் எளிது
முகத்தின் அளவுக்கேற்ப
முகமூடி இருந்தால் போதும்

அவற்றினும் எளிது
முகம் தொலைத்தல்

முகநூலையே நாள்முழுக்க
பார்த்துக் கொண்டு
அதனிலேயே
மூழ்கியிருந்தால் போதும்


நினைவடுக்குகளில்ஒன்றின்மேல் ஒன்றாய் அழுந்திக்கிடக்கும்
நினைவின் அடுக்குகளில்
ஏதேனும் ஒன்றை உருவினாலும்
பழைய முகத்தின் சாயல்
தூசி படிந்த கண்ணாடிக் காட்சியாய்
உயிர் பெறுகிறது

ஒவ்வொன்றிலும்
கடந்துபோன கணங்களின் துயரமோ
மகிழ்ச்சித் துளியோ
சொல்லமுடியாத உணர்வின் கசிவோ
ஏதோ ஒன்று ஒட்டியிருக்கிறது

ஒவ்வொன்றிலும்
யார் யாரோ உடன் வந்து
பெயர் சொல்லி
முகம் காட்டுகிறார்கள்
ஒவ்வொருவரும் இப்போதும்
ஏதோ சொல்ல நினைத்துத் தயங்குகிறார்கள்

ஒவ்வொன்றிலும்
எனை நோக்கிய
பாராட்டுகள், குற்றச்சாட்டுகள், கசப்புகள்
வேதனைகள், கடுஞ்சொற்கள், துரோகங்கள்
வாசிக்கப்படுகின்றன

ஒவ்வொன்றிலும்
எல்லாக் காட்சிகள் மறைந்தும்
ரசமிழந்த கண்ணாடியின் மேல்
காயாமல் எஞ்சியுள்ளன
சில கண்ணீர்த் துளிகள்

Friday, December 9, 2011

அவசரப் பிரிவில் அரைநாள்
யாரையோ தேடி
மருத்துவமனை வந்த நீங்கள்
இங்கே அவசரப் பிரிவில் நுழைந்தது
எதார்த்தமானது

உங்களைக் கடந்துபோகும்
மருந்துநெடிகளை
வெள்ளை ஆடைகளில் பரபரக்கும்
தாதிகளை மருத்துவர்களை
தரையில் சிந்தும் இரத்தத் துளிகளை
உறவினர்களின் கதறல்களை விசும்பல்களை
மூடிய கதவுக்கு முன்னால்
தவிக்கும் முகங்களை
வாசலில் தயார்நிலையில் நிற்கும் ஆம்புலன்ஸை

எதையும்
கடக்க முடியாமல் திகைத்து நிற்கும்
உங்களிடம் யாரோ ஒரு மூதாட்டி
தன் நெருங்கிய உறவுக்கு நேர்ந்த துயரம்பற்றி
அழுதுகொண்டே
பகிர்ந்துகொள்ள வருகிறார்

நீங்கள் அங்கிருந்து
வெளியேற மறந்து
அவரின் அருகிலமர்ந்து
துயரக்கதை கேட்கத் தயாரானது
அபூர்வமானது


முன்னெப்போதும் இல்லாமல்முன்னெப்போதும் இல்லாமல்
வெயிலின் வெட்கை கூடிவிட்டது
மழையின் கோரத் தாண்டவம் நிகழ்கிறது
இயற்கை சீற்றம் அதிகமாகிவிட்டது
நிலம் அடிக்கடி நடுக்கம் காண்கிறது
கடல் பொங்கியெழுந்து நிலம் பார்க்கிறது

முன்னெப்போதும் இல்லாமல்
நாற்காலிகளுக்குப் போட்டி வலுக்கிறது
வார்த்தைகள் தடிக்கின்றன
இனத்துவேஷம் கட்டவிழ்க்கப்படுகிறது
திரைமறைவில் சதிகள் பின்னப்படுகின்றன

முன்னெப்போதும் இல்லாமல்
அன்பளிப்புகள் அதிகமாகிவிட்டன
கையேந்தும் காட்சிகள் கூடிவிட்டன
கருணைக் கைகள் நீளுகின்றன
ஆதரவுக் கரங்கள் தழுவுகின்றன
இதழ்கள் புன்னகை சிந்துகின்றன

முன்னெப்போதும் இல்லாமல்
ஒற்றுமை விரிவாகப் பேசப்படுகிறது
ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஏற்பாடாகின்றன
இனிப்பு அறிவிப்புகள் செய்திகளாகின்றன
வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்படுகின்றன


கிழிக்கப்பட்ட பக்கங்கள்


நானில்லா நேரத்தில் அறைக்குள் நுழைகிறீர்கள்
உங்களின் கைகளில் எப்படியோ
சிக்கிவிடுகிறது என் டைரி

இதழ்களில் வெற்றிப்புன்னகை தவழ
தவிப்போடு பக்கங்களைப் புரட்டி
என் தனிமைக்குள்
என் அந்தரங்கங்களுக்குள்
என் சொல்லாத கதைகளுக்குள்
என் சேமித்த சிந்தனைகளுக்குள்
என் இராத்திரி அறைகளுக்குள்
எனக்கு மட்டுமே புரியும் கிறுக்கல்களுக்குள்
என் இரகசியங்களுக்குள்
நுழைகிறீர்கள்

உங்களை
வன்மையாய்ப் பாதியில்
தடுத்துப் நிறுத்திவிடுகிறது
அதன் கிழிக்கப்பட்ட பக்கங்கள்


Thursday, December 8, 2011

புலம்பெயர்தலின் பேரின்பம்


குகை வாழ்க்கை சலித்து
ஆதிமனிதனின் கால்கள்
நதிக்கரை நோக்கிப் பயணித்தன

அரண்மனை வாழ்வை விடுத்து
விடைகளைத் தேடிப் புறப்பட்டார் சித்தார்த்தன்

ஹென்றி இளவரசரின் கட்டளை சுமந்து
பார்த்தலோமிய டயஸ், வாஸ்கோ டி காமா
புதிய பாதையில் பயணம் தொடங்கினர்

மக்காவின் உதாசீனங்களை உதறிவிட்டு
மதினாவில் வரவேற்கக் காத்திருக்கும்
கரங்களை நோக்கி விரைந்தார்
அண்ணல் நபி

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி
மண்ணுக்கு உரமாகாமல்
சேலத்திலிருந்து குடும்பத்தோடு
புறப்பட்டார் தாத்தா

புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக
சிட்னியிலிருந்து மாமா கடிதம் அனுப்பினார்

அடுத்த மாதம் பாரிசில் நடக்கும்
தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வுக்கு வரும்படி
சிற்றப்பா மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்

கனடா தொரொந்தோ நகரில் வெளிவரும்
தமிழ் நாளிதழ்களை எனக்குத் தபாலில்
அனுப்பினார் அண்ணன்

கடைவாயில் வெற்றிலையை அதக்கிக்கொண்டே
பாட்டி சொன்னார்:
“நட்ட இடத்திலேயே நின்னா மரஞ்செடிக்கு அழகு
மனுசனுக்கு இல்லடா
கால்போன போக்குல போயித்தான் பாக்கணும்
கடிவாளம் கையில இருந்தா கவலையேன் படணும்”

கடைசியாய் நிலா பார்த்ததுமாணவர்கள் கடைசியாய் நிலா பார்த்த
தங்களின் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினர்:

“சார், போன மாசம் இராத்திரியில..”
“தெய்வத்திருமகள் படத்தில விக்ரம் காட்டுவாரு”
“படத்துல பாட்டுக்காட்சியில நிறைய பார்த்திருக்கிறேன்”
“புத்தகத்துலதான் இருக்கே சார்”
“ஓவியத்துல”
“பேஸ்புக்ல அழகழகா நிறைய இருக்கு”
“போன வாரம் சாப்பிட வெளியே போனப்ப”
“ஞாபகம் இல்ல சார்”
“சின்னப் பிள்ளையில அம்மா சோறு ஊட்டும்போது”

நிலாவுக்கும் அவர்களுக்குமான இடைவெளி
கூடியிருப்பது தெரிந்தது

தூக்கம் வெறுத்த நேற்றைய இரவில்
சாலையில் தனியாய் நடக்கையில்
துணையாய் வந்த நிலாவைக் கவனித்தேன்
முன்னைவிட நிலா எல்லாரையும் விட்டு
தூரத்தில்போய் நின்று கண் சிமிட்டியது

Monday, December 5, 2011

பாறையின் இடுக்கில்பாறையின் இடுக்கில்
தவறிய விதைகள்
நீர்குடித்துப் போராடி
முட்டி முளைப்பதுபோல்

உணவைத் தேடி உயரப் பறந்து
சோர்வுறும் சிறகு சுமந்து
கண்டங்கள் தாண்டும்
பறவைகள்போல்

பின்னிய வலைகள்
அறுந்து வீழ்ந்தும்
எச்சிலால் மீண்டும்
பின்னலைத் தொடரும்
சிலந்தியைப்போல்

கூட்டுப் புழுவாய்
சிறைக்குள் ஒடுங்கியும்
ஓட்டை உடைத்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல்

நீரில்லாப் பாலையில்
கனல் கக்கும் வெம்மையில்
பொதிசுமந்து கடமையாற்றும்
ஒட்டகம்போல்

கைத்தடியால் தரைதடவி
கைப்பொருள் தனைவிற்று
தன்னுழைப்பால் நிமிரும்
கண்ணில்லா மனிதர்போல்

பொய்க்காலைப் பொருத்தி
பயிற்சியிலே தேர்ந்து
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
காலில்லா மனிதர்போல்

விளக்கில்லா வீட்டில்
மெழுகுவர்த்தி எரியவிட்டு
நூல்களைப் புரட்டும்
பிடிவாத மாணவனைப்போல்

பனிக்காலம் முழுதும்
வெண்போர்வை போர்த்தி
பொய்யுறக்கம் பூண்டு
வசந்தத்தில் கண்விழிக்கும்
பூமரங்கள்போல்

உன்னைச் சுற்றியும்
வாய்ப்புகள் பறிபோகும்
பள்ளங்கள் தோன்றும்
இடர்கள் இடைமறிக்கும்
சொந்தங்கள் பகையாகும்
முயற்சிகள் முடமாகும்
வழிப்பாதை களவுபோகும்

அவற்றைப்போல்
அவர்களைப்போல்
நீயும் மீண்டு வருவாய்!
மீண்டும் வருவாய்!