இன்னும் கசிகிறது
காது மடல்களில்இன ஒற்றுமைக்காய் ஒலித்த
துங்குவின் பேச்சு
இன்னும் தெரிகிறது
மங்கலாய்
பட்டொளி வீசிப் பறந்த
அன்றைய கூட்டணிக் கொடி
இன்னும் நிழலாடுகின்றன
அன்றைய பல்லினத் தலைவர்களின்
கைகோர்த்த காட்சிகள்
இன்னும் ஒலிக்கிறது
அன்றைய வானொலிகளின்
உற்சாக எழுச்சி உரைகள்
இன்னும் கேட்கிறது
சயாம் மரண இரயிலின்
தண்டவாள இடுக்குகளில்
சமாதியான உறவுகளின் ஓலம்
இன்னும் பிழிகிறது
நாட்டுக்காய் உயிரிழந்த
இராணுவ வீரர்களின் தியாகம்
இன்னும் மணக்கிறது
கைகளில்
வேறுபாடு மறந்து ஒன்றாய்க்கூடிச்
சுவைத்த உணவுகள்
இன்னும் சுவைக்கின்றன
அன்றைய ஏடுகளில்
நிரம்பி வழிந்து உணர்வூட்டிய
அருமைப் படைப்புகள்
இன்னும் ஓடுகின்றன
நம் வீறுகண்டு பின்வாங்கிய
காலனித்துவ கால்கள்
இன்னும் நனைக்கிறது
இனவுணர்ச்சி கலவாத
தலைவர்களின் அன்புரைகள்
இன்னும் எரிகிறது
மூவினமும் சேர்ந்து மூட்டிய
சுதந்திரத் தீபம்
இன்னும் உயருகின்றன
மூவின மக்களின்
உழைக்கும் கரங்கள்
இப்படி இன்னும் இன்னும்
விரிந்துகொண்டே இருக்கின்றன
நிறம் வெளுக்காத
பழைய காட்சிகள்
எண்ணி எண்ணிப் பார்க்கும்
எந்த நெஞ்சிலும்
உணர்வுப்பூக்கள் மொட்டவிழும்
எந்தச் சூழலிலும்
நம் ஒற்றுமைத் தூண்கள்
உறுதிபெறும்
எந்த இடர்களையும்
நம் இணைந்த கைகள்
இடுப்பு முறிக்கும்
எந்த இன்னலிலும்
எல்லா இனக் கைகளும்
ஆதரவாய் முன்னே நீளும்
எந்த வெற்றியையும்
தம் வெற்றியாய்
உள்ளங்கள் ஏந்திக்கொள்ளும்
எந்த நிலையிலும்
தேசியத்தைச் சுவாசமாய்
இதயங்கள் நிரப்பிக்கொள்ளும்