நம் குரல்

Sunday, December 23, 2018

யாசகம் (சிறுகதை)



1

காலமும் சூழலும் எண்ணங்களை மாற்றி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும்  என்பது மோகனைப் பொறுத்தவரை எத்துணை உண்மை!

தஞ்சோங் மாலிம் பக்கம் புக்கிட் காயு தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, ஐந்தாம் படிவம் வரை ஒப்புக்குப் பள்ளிக்குப் போய் ஆட்டமும் பாட்டமுமாய்க் காலத்தைக் கழித்தவன்தான் அவன். ஐந்தாம் படிவத் தேர்வுக்கு வேண்டா வெறுப்பாய்ப் போய், எல்லாப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவி, இனி என்ன செய்யலாம் என யோசித்தபோது..

“விடுப்பா. உனக்குன்னு ஒரு வழி பிறக்காமலா போயிடும். பாப்போம். போய் கிராணிய  பாரு. இங்க எஸ்டேட்டுல ஒரு வேல போட்டு குடுப்பாரு. நானும் உன்ன பத்தி சொல்லி வச்சிருக்கேன்”  குஞ்சுகளை வெளியே விடாமல் தன்  இறக்கையினுள் அரவணைத்துக் கொள்ளும் தாய்க்கோழியின் நிலை அம்மாவுக்கு.

அப்பாவுக்கோ, அவன் தனக்கு எப்படியோ தப்பிப் பிறந்த தறுதலை.  “தண்டச்சோறு, கூட்டாளிங்க கூட சேர்ந்து வீணா போயிட்டான். எவ்வளவோ சொன்னேன். கேட்டாதானே. இவன ஆடு மாடு மேய்க்க அனுப்பியிருக்கனும், தப்பு பண்ணிட்டேன். இவன் வயசுக்கு நான் எவ்வளவோ பொறுப்பா இருந்தேன்”  நாளிதழ் படித்து நாட்டின் போக்கை ஓரளவு அறிந்தவர் அவர். இவனுக்கு பிறகு இன்னும் மூன்று பேர். எல்லாரையும் கரையேற்றுவது எப்படி என்ற கவலை அவருக்கு.

மோகனுக்கோ எந்தக் கவலையும் இல்லை. தஞ்சோங் மாலிம், ஜூலி பிஸ்கட் பேக்டரியில் வேலை கிடைத்தது. குறைந்த சம்பளம். வீட்டில் வேண்டாம் என்று தடுத்தார்கள். இவன் கேட்கவில்லை. ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து கூட்டாளிகளோடு சந்திப்பு. விடிய விடிய அரட்டை. கூடவே மதுபான வேட்டை. கொஞ்ச நாளில் போதைப் பொருளும் சேர்ந்தது. இளமை முறுக்கு அனுபவி..அனுபவி என்று உந்தித் தள்ளியது.

போதையில் கூட்டாளிகள் இழுத்த இழுப்புகளுக்கு வளைந்து கொடுத்தான். புதிதாய் கேங் ஒன்று அந்த வட்டாரத்தில் தொடங்கப்பட்டு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.  21 என்ற  கேங் எண் அவனுக்குப் பிடித்திருந்தது. அது அவன் பிறந்த தேதி. அதனால் பின்னாளில் வரப்போகும் வில்லங்கம் அவனுக்குத் தெரியவில்லை.

இன்னொரு கேங் அங்கு முன்பே அழுத்தமாய்க் காலூன்றிக் கோலோச்சிக்கொண்டிருந்தது.  அதனோடு வம்பு தும்புகள் வரத்தொடங்கின. கோலாலம்பூரிலிருந்து அந்தக் கேங்கின் தலைவர் வந்து  இரண்டு முறை டேபல் டோக்  நடத்தினார். பலன் இல்லை. நீறுபூத்த நெருப்பாய் இருந்த மோதல்கள் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தன. இரு கும்பல்களும் ஒருநாள் சீனன் உணவகத்தில் மோதிக்கொள்ள பலருக்கும் கத்தி வெட்டு.

மோகன் இரவோடு இரவாகப் புறப்பட்டு  ஜோகூர் தங்காக் பக்கம் போய் சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினான். போலீசார் மூவரைப் பிடித்துச் சிறைக்கு அனுப்பி, இவனைத் தேடிக் கிடைக்காமல் சலித்து ஃபைலை மூடிவிட்டு அடுத்த கேசை கவனிக்கத் தொடங்கிய பின், இவன் சிரம்பான் வந்து சேர்ந்தான்.






2

காலமும் சூழலும் எண்ணங்களை மாற்றி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும்  என்பது குமரனைப் பொறுத்தவரை எத்துணை உண்மை!

ரவூப் நகரையொட்டிய காளித் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் குமரன். அங்குப் போய் தமிழ்ப்பள்ளிக்குப் பின்னால் இருக்கும் அரச மரத்துக்குப் பக்கத்தில் நின்று, “கேசவன் வீடு எது?” என்று கேட்டால் சின்னப் பையனும் அங்கிருக்கும் லயத்தில்  மூன்றாவது வீட்டை நோக்கிக் கைகாட்டுவான். எப்போதோ பூசிய பச்சை சாயம் வெளுத்து, சொறி பிடித்த பலகைகள் கொண்ட வீடு. இரண்டு சிறிய அறைகள் கொண்டது. கேசவன், அவர் மனைவி ராமாயி, ஆறு பிள்ளைகள் என எண்மர் கொண்ட குடும்பத்துக்கு அது வசதியாயில்லை.

தன்னைப்போல் தன் மனைவி ராமாயி தோட்டத்தில் பால் மரம் சீவும் வேலை செய்தபோது கேசவனுக்குக் குடும்பச் செலவைச் சமாளிப்பது சிரமமாயில்லை. ஆனால், ஒருநாள் வழக்கம்போல் ராமாயி பால்மரம் சீவி, பாலைச் சேகரித்து வாளிகளைக் காண்டாவில் மாட்டிக்கொண்டு பால் நிறுத்தும் ஸ்டோரை நோக்கி நடந்தபோது,  முதல்நாள் பெய்த மழையால் சேறும் சகதியுமாக இருந்த செம்மண் சாலையில், தேய்ந்துபோன காலணி வழுக்கிவிட, கீழே விழுந்து வலது காலை உடைத்துக்கொண்ட பிறகு...

இனி என்ன செய்வது என்று கேசவன் கையில் உலர்ந்துபோன ரப்பர் பாலை உரித்தவாறு யோசிக்கத் தொடங்கினார். மூத்தவன் குமரன் மூன்றாம் படிவத்திலும் அடுத்து மாதவி ஒன்றாம் படிவத்திலும் அதைத் தொடர்ந்து நான்கு பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியிலும்  படித்த சூழல் அப்பொழுது.  அன்றாடச் செலவுக்கும்கூட கையில் காசில்லாமல் சமயங்களில் கையைப் பிசைந்தவாறு யாரிடம் உதவி கேட்கலாம் எனத் தவித்தார். மழைத் திட்டி அதிகம் உள்ள மாதங்களில் நிலைமை இன்னும் மோசமானது.

ஞாயிற்றுக்கிழமை ரவூப் தேவாலயத்தில் நடக்கும் பிரேயஸில் கலந்துகொள்ள பக்கத்து வீட்டு எலிசபெத் வந்து ஆறு பிள்ளைகளையும் பரிவோடு அழைத்தபோது மறுப்புச் சொல்ல முடியவில்லை. பிரேயஸ் முடிந்து  மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்து அழைத்து வந்தபோது மனம் நிம்மதியடைந்தது.

கொஞ்ச நாளில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்தார் எலிசபெத். பிள்ளைகளுக்குக் கைச்செலவுக்குப் பணம் கொடுத்தார். அன்போடு தரும்போது எப்படி மறுப்புச் சொல்வது? “நாங்க இருக்கும்போது ஏன் கவலைப்படுறீங்க? கடவுள் படைப்பில நாம எல்லாம் சமம். ஒருத்தருக்கு ஒருத்தர் எப்பவும் ஒதவியா இருக்கணும். கர்த்தரு உங்களுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டாரு. நீங்களும் ஒரு நாளைக்கு தேவாலயம் வாங்க. ஆண்டவனோட பரிபூர்ண ஆசி உங்களுக்குக் கிடைக்கும்

“ஆமாப்பா. நீங்களும் அம்மாவும் வாங்க. அங்க எல்லாரும்  ரொம்ப அன்பா பழகுறாங்க” மூத்தவன் குமரன் அன்போடு அழைத்தான். ஞாயிற்றுக்கிழமை பிரேயஸ்க்கு அழைத்துச் செல்ல காளி தோட்டத்தில் வெள்ளை வேன் வந்தது. கேசவன் மனைவியைத் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அடுத்த மூன்றாவது வாரத்தில் கேசவன் குடும்பம் கர்த்தரின் ஆசி பெற்ற குடும்பமாக மாறியது.

பத்து ஆண்டுகளுக்குப் பின், பெந்தோங் நகரில்  காப்புறுதி நிறுவனத்தில் குமரன் குமாஸ்தாவாக வேலை செய்தபோது அங்கு மேகலாவைச் சந்தித்தான். வேலை நிமித்தமாக அடிக்கடி பேசும் சூழல். அதுவரை பார்த்த பெண்களில் மேகலா தனித்துத் தெரிந்தாள். களையான முகம். அன்பான பேச்சு. கனிவான பார்வை. உதவும் மனம். எல்லாம் குமரனுக்குப் பிடித்திருந்தது. விருப்பத்தைச் சொன்னான்.

“எனக்கும் விருப்பம்தான். உங்க குணம் பிடிச்சிருக்கு. ஆனா, நீங்க மதம் மாறி எங்க வழிக்கு வந்தா இத பத்தி யோசிக்கலாம். நான் மதம் மாற வாய்ப்பே இல்லை. உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்னு சத்தியம் செய்துட்டேன். அத மீற முடியாது” மேகலா தன் முடிவில் உறுதியாய் இருந்தாள்.

குமரன் அதிர்ந்து போனான். அவள் தன் வழிக்கு வருவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அது பெரும்  ஏமாற்றமாய் இருந்தது. பலமுறை பேசிப் பார்த்தான். அவள் தெளிவாக இருந்தாள். அவனின் மனத்தின் அறை முழுக்க அவள் முகம்தான் காட்சி தந்து அலைக்கழித்தது. மறக்க முடியாமல் இரவெல்லாம் கண்விழித்து அவள் நினைவில் உழன்றான். சொல்லொண்ணா வேதனை வாட்டியது. தன்னைச் சுற்றியிருந்தவர்கள் மீது காரணமில்லாமல் வெறுப்பை உமிழ்ந்தான். ஒருநாள் அங்கிருக்கவும் ரவூப் போக விரும்பாமலும் வேலையை விட்டுவிட்டு ரவாங் வந்து சேர்ந்தான்.


3

வேலை தேடி சிரம்பான் நகருக்கு வந்தபோது இருந்த மனநிலை இப்பொழுது மோகனுக்கு இல்லை.

ஆள் மாறிப் போயிருந்தான்.  இன்னும் முப்பது வயதை எட்டவில்லை. இளமை முறுக்கு குறைந்து உடல் தளர்ந்திருந்தது. சவரம் காணாத முகத்தில் பல மாதத் தாடியும் மீசையும் வளர்ந்து ஆளே அடையாளம் தெரியவில்லை. குழிவிழுந்த கண்கள். வலது காதோரம் சின்னத் தழும்பு. எண்ணெய் காணாத தலைமுடி. தோளில் மாட்டிய அழுக்குப் பை. அதில் அவனின் உடைகள். இடையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.  எங்காவது கடைத்தெருவில் அமர்ந்து கையேந்தினால், வழியில் வருவோர் போவோரில் பத்தில் ஐந்து பேராவது காசு போடுவார்கள்.

பல இடங்களில் வேலை தேடி அலுத்து, ஒரு நாள் மதுரா கடை வரிசையில் ஓர் ஓரமாய் அமர்ந்தபோது, யாரோ ஒருவர் அவன் தோற்றத்தைப் பார்த்து மனம்  இரங்கி அவனுக்குப் பணம் தந்துவிட்டுப் போனார். பச்சை நிறத்தில்  ஐந்து ரிங்கிட் தாள் அவன் முன்னே கிடந்தது. அதையே உற்றுப் பார்த்தான். ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்ற அவன் எண்ணத்தை அது மாற்றியது.





4

வேலை தேடி ரவாங் நகருக்கு வந்தபோது இருந்த மனநிலை இப்பொழுது குமரனுக்கு இல்லை.

நான்கு கடை வரிசைகள் கொண்ட சிறிய நகர் அது. எப்போதும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு அல்லலுறும் வாகனமோட்டிகள். பரபரப்பாக அங்குமிங்கும் பயணப்படும் மக்கள். சுற்றுவட்டாரங்களில் இந்தியர்கள் கணிசமாக வாழ்ந்ததால் ரவாங் கடைவீதிகளில் எப்பொழுதும் இந்தியர்களைக் காணலாம். விநாயகர் கோயில் தொடங்கி ரயில் நிலையம் வரையும் பின்னர் பேருந்து நிறுத்தம் உள்ள கடை வீதியிலும் குமரன் கையில் பெட்டியோடு நடந்தான். என்ன செய்யலாம் என்று புலப்படவில்லை.

பின்னர், பத்து ஆராங் போகும் பேருந்தில் ஏறி ரவாங் தமிழ்ப்பள்ளி அருகே இறங்கிக் கால் போன போக்கில் நடந்தான். தமிழ்ப்பள்ளியைக் கடந்து கொஞ்ச தூரத்தில் இருந்த வீடமைப்புப் பகுதியில் வாடகைக்கு வீடு கிடைக்குமா என விசாரித்தான். அவன் நல்ல நேரம். தரை வீடு ஒன்று வாடகைக்கு இருந்தது. உடனே, உரிமையாளரைத் தொடர்புகொண்டு பேசி முடித்தான். மூன்று மாத வாடகையைச் செலுத்தினான். அங்கிருந்து அருகில் உள்ள தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் வேலைக்கு முயன்றான். எதுவும் ஒத்து வரவில்லை.

மறுவாரம், ரவாங் தமிழ்ப்பள்ளி அருகே உள்ள பேருந்து  நிலையத்தில் பேருந்துக்கு இவன் காத்திருந்தபோது, வயதான மூதாட்டியொருவர் பத்து பன்னிரண்டு வயதுள்ள இரு பிள்ளைகள் அருகே இருக்க  கண் கலங்குவதைப் பார்த்தான்.  யாரும் அழுவதைக் கண்டால் இவனுக்குப் பொறுக்காது. விசாரித்தான்.

“அதையேன் தம்பி கேட்கிறீங்க. இதுங்க ரெண்டும் என் மக பிள்ளைங்க. இந்த தமிழ் இஸ்கூலதான் படிக்கிறாங்க. இவன் மூத்தவன் ஆறாவது வகுப்பு. இது நாலாம் வகுப்பு. புருசன் பொண்டாட்டி சண்ட போட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. இவ்வளவு நாளா மக கூடதான் இருந்தேன். இப்ப மகளும் இன்னொருத்தனோட போயிடுச்சு. இதுங்கள நான்தான் பாத்துகிறேன். எனக்கும் வயசாயிடுச்சு. எங்காவது ஹோம் இருந்தா சேத்து விடலான்னு  பாக்குறேன். இந்த பக்கம் ஏதும் இருக்கா? ஒங்களுக்குத் தெரியுமா?” சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துவாறு இவன் முகத்தை ஏறிட்டார்.

குமரன் அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த ஒரு கணத்தில் அவன் மனம் எதையெதையோ எண்ணிப் பார்த்தது. “கர்த்தரே! எனக்கு ஒரு வழி காட்டினீர்” என மனத்திற்குள் பிரார்த்தனை செய்தான். ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்ற அவன் எண்ணத்தை அது மாற்றியது.


5

தலைகீழாக மாறிப்போன தன் வாழ்வை எண்ணிப் பார்த்தால் மோகனுக்கே வியப்பாக இருந்தது.

சிரம்பான் நகரின் மத்தியில் இருக்கும் யாம் துவான் சாலைதான் அவனுக்கு அருள்பாலிக்கும் சாலை. காலை வேளையில் மதுரா ஸ்டோர், ரெங்கசாமி புக் ஸ்டோர், எம்எபி கடை ஆகிய இடங்களில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கும். அங்கு ஒரு கடை முன்னே அமர்ந்து வருவோர் போவோரிடம் கையை நீட்டத் தொடங்கினான். முதலில் இருந்த தயக்கமும் வெட்கமும் ஒரு சில நாள்களிலேயே காணாமல் போயின.

அவனுடைய தோற்றமே பலருக்கு  அவன்மீது இரக்கத்தை வழியச் செய்தது. முதலில் வெறுமனே கையை நீட்டியவன் பின்னர், உள்ளொடுங்கிய குரலில், “அம்மா, ஐயா, அண்ணே” குரல் எழுப்பி அங்கு வருவோரின் கவனத்தை ஈர்த்தான். ஒரு வெள்ளி என்பது பலருக்கும் பெரிய பணமாகத் தெரியவில்லை. தாராளமாகத் தந்தார்கள். குறிப்பாக வார இறுதியில் அவனுக்கு அவர்களின் அன்பு அதிகமாகக் கிடைத்தது.

நண்பகலுக்குள் அங்கு வசூலை முடித்துக்கொண்டு சாலையைக் கடந்து எதிரே இருக்கும் ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ சாலையில் நுழைந்து, ஊட்டி உணவகம், சிம்லா கறி லீவ் உணவகம் ஆகியவற்றின் முன்னால் நடப்பான். அங்குக் கூட்டம் அதிகமாக இருக்கும். தங்கள்  பசி தீர்க்க அங்கு வருவோர் தங்கள் கருணையை அவனுக்குப் பரிமாறிவிட்டுப் போவார்கள். யார் தயவிலாவது வயிறு நிறைய மதிய உணவு கிடைக்கும்.

ஒரு சிலர் அவனிடம் குறுக்கு விசாரணை செய்வார்கள். “உனக்கு என்னா குறை? வேலைக்குப் போக வேண்டியதுதானே? ஏன் இப்படி பிச்சை எடுத்து பொழைக்கிற? நம்ம இனத்துக்கே இது அவமானம். பிச்சை எடுத்து குடிக்கத்தானே இப்படி கையேந்தற?”

அவரவர் தேவைக்கு ஏற்ப பல பொய்களைத் தன் காற்சட்டைப் பைகளில் வைத்திருந்தான்.

“எனக்கு கேன்சர். இன்னும் கொஞ்ச நாளையில செத்துப் போயிடுவேன். எனக்கு கிட்னி போச்சு. இனி ஒண்ணும் பண்ண முடியாதுன்னு டாக்டரு சொல்லிட்டாரு. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. கொஞ்சம் ஒதவி செய்யுங்க இரக்கமற்ற மனங்களையும் வளைக்கும் கலை அவனுக்குக் கைகூடி வந்தது.

யாம் துவான் சாலையில் நடந்து சென்றால் அரை கிலோ மீட்டரில்  ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயம் வந்து விடும் . இரவு பூசைக்குப் பிறகு பிரசாதம் கிடைக்கும். அதைச் சாப்பிட்ட பிறகு, மீண்டும் அங்கிருந்து நடந்து கடை வரிசைக்கு வந்து விடுவான். இரவில் பக்கத்திலேயே மலிவு விலை மதுபானத்தை இரகசியமாக  விற்கும் சீனன் மருந்துக் கடை இருக்கிறது. இரண்டு மூன்று போத்தல் வாங்கி ஊற்றிக்கொண்டு ஏதாவது கடை முன்னே, பழைய பேப்பரை விரித்து, சாக்குப் பையை இழுத்துப் போர்த்திக்கொண்டால் ஒருநாள் பொழுது முடிவுக்கு வரும். சமயங்களில் போதைப்பொருளும் கிடைக்கும். பணம் கொடுத்தால் இங்கு எதுதான் கிடைக்காது?


6

தலைகீழாக மாறிப்போன தன் வாழ்வை எண்ணிப் பார்த்தால் குமரனுக்கே வியப்பாக இருந்தது.

தன் வாடகை வீட்டை ஒரு காப்பகமாக, சமூக பராமரிப்பு இல்லமாக மாற்றலாம் என அவன் முடிவுக்கு வந்தபோது அதற்கு என்ன பெயர் வைக்கலாம் எனச் சிந்தித்தான். கருணை மாளிகை, அன்புக் காப்பகம், அன்பு ஆலயம், கருணைக் காப்பகம் எனப் பலவற்றைச் சிந்தித்து இறுதியில், அன்பு ஆலயம்  என முடிவு செய்தான்.

ஜாலான் குவாலா காரிங் சாலையையொட்டிய வீடு,  எல்லாவற்றுக்கும் வசதியாக இருந்தது. நடந்துபோகும் தூரத்தில் ஒரு பக்கம் தமிழ்ப்பள்ளி. எதிர்ப்புறம் இடைநிலைப்பள்ளி. அன்பு ஆலயத்திற்குப் புதியவர்களைத் தேடிக்கொண்டு வர அவை வசதியாக இருந்தன. பெற்றோரால் புறக்கணிக்கப்படும் அல்லது வறுமையில் வாடும் சிறுவர்கள் அவன் இலக்காக இருந்தனர்.

இருவரோடு தொடங்கிய அன்பு ஆலயம், ஓராண்டுக்குள் பத்து சிறுவர்கள், நான்கு முதியவர்கள் என விரிவடைந்தது அவனுக்கே வியப்புதான். எல்லாச் சிறுவர்களையும் படிக்க வைத்தான்.   சமூக இலாகாவில் முறையாக மனுச்செய்து பதிவுசெய்தான். அன்பு ஆலயம் எனும் பெயர்ப்பலகை வீட்டின் முன்னே அழகாகக் காட்சி தந்தது. ஒவ்வொரு நாளும் அன்பு ஆலயத்தில் ஜெபக்கூட்டத்திற்குக் குமரன் தலைமையேற்றான். அனைவருக்கும் கர்த்தரின் ஆசியும் கருணையும் குறைவில்லாமல் கிடைத்தன. 

ஓராண்டுக்குள் அவனே எதிர்பார்க்காத மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினான். அன்பு ஆலயம் குறித்து விபரங்கள் அடங்கிய கையேட்டை அச்சிட்டுக்கொண்டு,  ரவாங் நகரிலிருந்த கடைகளிலும் அலுவலகங்களிலும் ஏறி இறங்கினான். தொழில் அதிபர்களைத் தொடர்புகொண்டு நன்கொடை கோரினான்.  டத்தோக்கள் அவனது குறியிலக்காக இருந்தனர். குறிப்பாகச் சீனர்கள் அவன் இல்லம் நாடி வந்து பெருமனத்தோடு உதவி செய்தனர்.

துணிமணிகள், மளிகைப்பொருள்கள், வீட்டுக்குத் தேவையான தளவாடங்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி என ஒவ்வொன்றாக வீட்டில் குவிந்தன. வீட்டின் முன்னும் பின்னும் கொஞ்சம் இழுத்துக் கட்டி வீட்டை விரிவுபடுத்தினான். ஆண்டு இறுதியில் நன்கொடை திரட்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான். எதிர்பாராத வகையில் பெரும் நன்கொடை திரண்டது. வங்கிக் கணக்கில் செலவைவிட வரவு அதிகமாகி வந்தது. நிதி திரட்டிக்கொடுக்க தன்னார்வலர்களும் முன்வந்தனர். தானே தேடிப் போய்க் கேட்ட நிலை மாறி மாதந்தோறும் தேடி வந்து கொடுக்கும் நிலை உருவானது.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அன்பு ஆலயத்தில் குடியிருப்போரின்  எண்ணிக்கை இருபத்திரண்டானது. அதற்கேற்ப வரவு செலவும் அதிகரித்தன. முழுநேரப் பணியாளர்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர். 

ரவாங் நகருக்கு வரும்போது கையில் ஒரு பெட்டியோடு அங்குமிங்கும் அலைமோதிய குமரனின் அன்பு ஆலயத்தின் முன் இப்பொழுது ஒரு வேன் நிற்கிறது. பக்கத்தில் அவன் புதிதாய் வாங்கிய தொயோத்தா வியோஸ்.  தான் விரும்பிய மேகலாவும் இப்பொழுது உடனிருந்தால் வாழ்க்கையில் மனநிறைவு கிடைத்திருக்குமே என எண்ணிப் பார்த்தான்.

7

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் என்ற மனநிலையில் மோகன் இருந்தான்.

அவன் சிரம்பானுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அங்கு வந்துபோது இருந்த உடல்நிலை இப்பொழுது இல்லை. இன்னும் மோசமாகி விட்டது.  கையில் நான்கு வெள்ளி சேர்ந்துவிட்டால் சீனன் கடைக்குப் போய் உள்ளே மறைவாய்  ஒரு போத்தல் மலிவு மதுபானத்தை வாங்கி ஊற்றிக்கொண்டு வருவான். இது ஒருநாளில் பலமுறை நடந்தது.

உடலும் எவ்வளவு நாளைக்குத்தான் தாங்கும்? உள்ளே ஈரலும் உடல் உறுப்புகளும் கெட்டு அழுகத் தொடங்கி விட்டதற்கு அறிகுறியாக உடல் முழுக்க வலி ஏற்பட்டது. வயிற்று வலி அதிகமாகி எதையும் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டான்.  யாராவது சாப்பாடு வாங்கித் தந்தால் “வேண்டாங்க, சாப்பிட முடியல” என மறுத்தான்.

நடமாட்டம் குறைந்து கடை முன்னே நிரந்தரமாக அமர்ந்து கொண்டான் அல்லது படுத்துக் கொண்டான். கோயிலுக்குப் போய்வர இருந்தவன் முட்டிவலியால் நடக்க முடியாமல் கடைமுன்னே முடங்கிப்போனான். கைகளை ஊன்றி கடைவரிசையில் அங்குமிங்கும் ஊர்ந்து செல்லும் நிலைக்கு வந்து விட்டான். அடிக்கடி அவனை அங்குப் பார்ப்பவர்கள் அவனுக்காக இரக்கப்பட்டார்கள்.

பலர் அவனைக் கண்டால் அருவருத்து ஒதுங்கினார்கள். குளித்து எத்தனை நாள்கள் ஆனதோ? உட்காரும் இடத்திலேயே சிறுநீரும் கழித்துவிடுவதால் அருகில் போனால் நாற்றம் குடலைப் புரட்டியது. எச்சில் ஒழுகும் வாயும் அழுக்கில் தோய்ந்த உடைகளும் நீண்டு வளர்ந்த தலைமுடியும் அவனை அங்கிருந்த மனிதர்களிடையே அந்நியப்படுத்தியது.

சமயங்களில் போதை அதிகமாகி ஏதேதோ நினைவுகளில் மனம் மூழ்கியெழ பிதற்றத் தொடங்கி விடுவான். தஞ்சோங் மாலிமில் தன்னோடு சுற்றிய நண்பர்களைப் பெயர் சொல்லி அழைப்பான். நான் இருக்கேண்டா ஏன் கவலைப்படற என்று அம்மா அணைத்துக்கொண்டார். தறுதல..தறுதல. என்று அப்பா விடாமல்  திட்டினார். யாரோ ஓங்கிய அரிவாள் அவன் முகத்துக்கு நேரே வந்து காதோரம் பாய்ந்தது...

சமூக இலாகாவிலிருந்து வந்த வாகனம் யாம் துவான் சாலையோரம்  நின்றது. யாரோ தகவல் சொல்லியிருக்க வேண்டும். அதன் பணியாளர்கள் மோகனை அங்கிருந்து அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றினார்கள்.

8

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம் என்ற மனநிலையில் குமரன் இருந்தான்.

எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப்  பணத்தைத் திரட்ட வேண்டும் என்பதில் அவன் கவனமெல்லாம் குவிந்தது. புதிய நன்கொடையாளர்கள் பட்டியல் தயாரித்து அவர்களை அணுகினான்.

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று சமூகச் சேவையாளர்களுக்குப் டாக்டர் பட்டம் தருவதாக நண்பர்கள் மூலம் அறிந்து அதற்கு மனு செய்தான். வெறும் குமரனாக இருந்தால் சமூகத்தில் யார் மதிப்பார்கள்? சில ஆயிரம் வெள்ளிகளை நன்கொடையாகத் தந்தான். சில மாதங்களில் டாக்டர் குமரன் எனப் பெயர் அட்டையை அச்சிட்டு மற்றவர்க்குத் தந்தான்.

ஒருநாள் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி பள்ளிக்கு வரும்படி அழைத்தார். “உங்க இல்லத்திலிருந்து ஆறு பேரு இங்க படிக்க வராங்க. ஆனா, அவங்க படிப்பில ரொம்ப பின் தங்கியிருக்காங்க. சுத்தமாவும் வரதில்ல. இடைவேளைக்குச் சாப்பிட கையில காசில்லாம வராங்க. ஏன் நீங்க கவனிக்கிறதில்லையா?”

“பள்ளிக்கு வரும்போது நல்லா சாப்பிட்டுட்டுதான் வராங்க. அதனால கையில காசு கொடுக்க மாட்டோம்.  பள்ளி உடைகள அவங்களே சுத்தமா துவைச்சு போட்டுகிட்டு வருனுன்னு எவ்வளவோ சொல்லிட்டோம். படிக்க சோம்பல் படுறாங்க. இனி கவனிச்சிருக்கிறோம் டீச்சர்” ஒப்புக்குச் சொன்னான்  குமரன்.

“சனி ஞாயிறுல சீனன் சுடுகாட்டைச் சுத்தப்படுத்த வேலைக்கு அழைச்சுகிட்டு போறீங்களாம். சமயங்களில் வீட்டிலேயே கைவினைப் பொருள் செய்யுற வேலைகளைத் தருகிறீங்களாம். படிக்கிற பிள்ளைகளை இப்படி வேலை செய்ய வைக்கலாமா? இது தப்பில்லையா?”

“தப்பில்ல டீச்சர். இந்த வயசிலேயே உழைப்பின் அருமையை அவங்களுக்கு உணர்த்துறோம். வாழ்க்கையில் கஷ்டம் தெரிஞ்சாதான் எதிர்காலத்துல நல்லா வருவாங்க. பள்ளிப்பாடம் மாதிரி இது வாழ்க்கைப் பாடம். எங்க இல்லத்துல எல்லாரும் இத உணர்ந்திருக்காங்க” எதையும் சமாளிப்பதில் குமரன் கைதேர்ந்தவன்.

ஒருநாள், நண்பகல் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் முதியவர் ஒருவர் ரவாங் மேபேங் வங்கியின் முன் சிறு நாற்காலியில் தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தார். கையில் சிறு தட்டு. வங்கிக்கு வருவோர் போவோர் சில்லறை நாணயங்களை அதில்  போட்டுவிட்டுப் போனார்கள். அதை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் அவர் சூடு தாங்காமல் துவண்டு போயிருந்தார்.

“உங்கள எங்கோயோ பார்த்திருக்கேனே.. நீங்க அன்பு ஆலயத்துல உள்ளவர்தானே? இங்கே ஏன் பிச்சை எடுக்குறீங்க? யாரு  உங்கள இங்க அனுப்புனா?” வங்கிக்கு வந்த ஒருவர் விசாரித்தார்.







“அவங்கதான் இங்கே கொண்டு வந்து விட்டாங்க. பிறகு சாப்பாடு கொண்டு வருவாங்க. சாயங்காலம் வந்து வேன்ல ஏத்திட்டுப் போவாங்க” முதியவர் சுருக்கமாகச் சொன்னார். கேட்டவர் அதிர்ந்துபோனார். “அநியாயமாக இருக்கே” அவர் உடனே யாருக்கோ கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இன்னொரு நாள், ரவாங் காவல் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் தன் பேத்தி கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக புகார் செய்து கொண்டிருந்தார். பெண் காவல் அதிகாரி அதை மொழிபெயர்க்க இன்னொருவர் மலாய்மொழியில் எழுதினார்.

அன்று மாலை, சமூக இலாகாவின் வாகனம் அன்பு ஆலயத்திற்கு முன் நின்றது. ஏதோ கோப்புகளுடன் இரு அதிகாரிகள் வீட்டுக்குள் சென்றனர். சற்று நேரத்தில் குமரனை அழைத்து வந்து வாகனத்தில் ஏற்றினார்கள்.



Saturday, December 22, 2018

அம்மா : சில பதிவுகள்



1.              இறுதியாய்..

மீள முடியாத பயணத்திற்கு
அம்மா தயாராகிக் கொண்டிருந்தார்

சொற்களை இழந்த நிலையில்
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக்கொண்டிருந்தோம்

வாழும் நாளெல்லாம்
அம்மா அள்ளி வழங்கிய அன்பும் கரிசனமும்
மனவெளியெங்கும் நிறைந்திருந்தது

ஒரு தலைமுறையின்
இறுதிப் புள்ளியாய்
அடுத்தடுத்த தலைமுறைகளை
கண்நிறைய வாழ்த்திவிட்டு
கண்ணயரப் போகிறார்

“என்னால எங்கும் வர முடியாதப்பா
பாத்து செய்யுங்க”
அம்மா இறுதியாய்ப் பேசிய சொற்கள்
இன்னும் கேட்கின்றன

எல்லாம் கடந்துபோகும் வாழ்வில்
அம்மாவின் நினைவுகளும்
காலநதியில் கரைந்து போகுமோ?

2.              பழக்கம்

இடது கைப்பழக்கம் அம்மாவுக்கு
உணவு பரிமாறினாலும்
அடுக்களையிலும் வெளியிலும்
ஏதும் வேலையென்றாலும்
சட்டென்று ஒரு பொருளை
யாரிடமாவது நீட்டினாலும்
முன்னே நீளும்
அவரின் இடக்கை

அம்மாவின் பழக்கங்கள்
என்னிடமும்
நீக்கமற நிறைந்து போயின

இதோ
இறுதியாய் முகம் பார்த்து
கரண்டியின் நுனியில்
சில பால் சொட்டுகளை
அம்மாவின் வாயில் விட
முன்னே நீளுகிறது
என் இடக்கை
































       3.         இறுதிப் பயணத்தில்

அப்பா விடைபெற்றுச் சென்ற
நாளிலிருந்து
மலர்களோடு அம்மாவுக்கு
உறவு முறிந்துபோனது

இறைவழிபாட்டின்போது
பூசை மேடையில்
மலர்களை வைக்கும்போது
அவற்றோடு சினேகம் கொள்வார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்
மலர்களாலும் மாலைகளாலும்
அம்மாவைத் திணறடிக்க முடிந்தது
அவரின் இறுதி ஊர்வலத்தில்


4.              மரங்களைப் போல

வளங்குறைந்த வறண்ட மண்ணில்
வேர் இறக்கி
பிடிமானம் கொண்டெழுந்து 
நிமிர்ந்து கிளைகளெனும் கைகள் நீட்டி
காற்றைச் சலித்தெடுத்து
நிழலும் கனிகளும்
நோய் நிவாரணமும் தரும்
மரங்களைப் போல
அம்மாவும்

பெற்றுக்கொண்டது குறைவாகவும்
அள்ளித் தந்தது அதிகமாகவும்





     5.              ஆசைதீரப் பேசி...

ஆசைதீரப் பேசித் தீர்க்காமல்
அல்லது பிறரின் பேச்சைக் கேட்காமல்
பொழுது போகாது
அம்மாவுக்கு

ஒரு காலத்தில்
அண்டை வீட்டில் போய்
கதைகள் பேசி
அப்பாவிடம் திட்டுகள் வாங்கினார்

தோட்டம் விட்டு
எங்களோடு நகருக்குக்
குடியேறிய நாளிலிருந்து
பேச்சுத் துணையின்றித் தவித்தார்

தொலைக்காட்சியின் நாடகங்களும்
தமிழ்ச்செய்தியும்
அஸ்ட்ரோ விழுதுகளும்
பேச்சுத் துணையாக
மனம் பாவித்தார்

பேச்சுகள் அலுத்து
போதுமென நினைத்த நாளில்
நினைவுகள் தப்ப
ஐயா ஐயா எனச் சொற்களோடு
மௌனமானார்




















                       



                       6.                மலர்களால்

அப்பா விடைபெற்றுச் சென்ற
நாளிலிருந்து
மலர்களோடு அம்மாவுக்கு
உறவு முறிந்து போனது

இறைவழிபாட்டில்
பூசைமேடையில்
மலர்களை வைக்கும்போது
அவற்றோடு சினேகம் கொள்வார்

நீண்ட இடைவெளிக்குப் பின்
வண்ண வண்ண மலர்களாலும்
மாலைகளாலும்
அம்மாவைத் திணறடிக்க முடிந்தது
அவரின் இறுதி ஊர்வலத்தில்
















                             




                       7.              இரகசியம்

67 ஆண்டுகளாக
பலருக்கும் தெரியாமல் இருந்த
அம்மாவின் இரகசியம்
கடைசியில்தான் வெளிப்பட்டது

அக்காள்தான் சொன்னார்
சடங்குகள் முடிந்து
பெட்டியை மூடி
அதன்மேல் இளஞ்சிவப்பில் விரித்தது
அம்மாவின் திருமணச் சேலை என்று


      8.              சிரமம் வேண்டாம்

யாருக்கும்
சிரமம் கொடுக்க வேண்டாம்
என்று நினைக்கும் அம்மா
தன் இறுதி மூச்சை
நிறுத்திக்கொண்டது
ஒரு டிசம்பர் மாதப்
பள்ளி விடுமுறையில்











       9.                ஒரு வரியாய்..

“முன்னொரு காலத்தில
எங்களுக்கு சித்தாயின்னு
ஒரு பாட்டி இருந்தாங்க”

இப்படி ஒரு வரியாய்
சிறு கூற்றாய்
வருங்காலத்தில்
பேரன் பேத்திகள் பேச்சில்
எப்பொழுதாவது
அம்மா எட்டிப் பார்ப்பார்


























       10.              பேசாமல் அமைதியாய்..

எப்பொழுதாவது
சந்தித்துக்கொள்ளும் உறவுகள்
ஏதேதோ காரணங்களால் பிணங்கி
எட்டி நின்றவர்கள்
வாழ்க்கைப் பரபரப்பில்
கைகுலுக்க முடியா நட்புகள்

எல்லாருக்கும்
அவசரத் தந்தி அனுப்பி
ஒருசேர சந்திக்க வைத்த
அம்மா மட்டும்
பேசாமல் அமைதியாய்
ஒதுங்கியிருந்தார்

       11.              சொற்கள்

சுவாசத்தின் வேகம் அதிகரித்து
நெஞ்சக்கூடு ஏறி இறங்க
அம்மாவின் காதுக்குள்
உறவுகள்
இறைநாமம் உச்சரிக்க...

தள்ளி அமர்ந்து
கையறுநிலையில்
கைகளைப் பிசையும்
என மனம் நிறைய
சொற்கள்...சொற்கள்...