நம் குரல்

Sunday, September 26, 2010

காப்பார் நகரில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு


மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் காப்பார் நகர் தொடர்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று 26.9.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை காப்பார் நகரில் அமைந்துள்ள ராசி அன்பு இல்லத்தில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு நடைபெற்றது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர்நோக்கும் 27 மாணவர்கள் இதனில் பங்கு பெற்றனர். இப்பயிலரங்கை நான் வழி நடத்தினேன்.

இலக்கியக் குழுவின் தலைவர் திரு. சுப்ரமணியம், செயலாளர் திரு. இராமன், செயற்குழு உறுப்பினர் திரு. எம்.எஸ். பாலன் ஆகியோர் முன்னின்று சிறப்பாக ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.

நிகழ்வில் முதல் அங்கமாக, ராசி அன்பு இல்லத்தின் உரிமையாளர் திரு.பரமேஸ்வரன் (MCIS காப்புறுதி நிர்வாகி) மாணவர்களுக்குச் சிறப்பான தன் முனைப்பு உரையை வழங்கினார். காலை வேளையில் அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகத்தையும் கல்வி மீதான நம்பிக்கையையும் ஊட்டிக் கலகலப்பை ஏற்படுத்தினார்.

மாதிரிக்கு: “பிறக்கும்போது தரித்திரத்தோடு பிறக்கலாம். ஆனால், வாழ்வைச் சரித்திரமாக மாற்றவேண்டும். ஆயிரம் பேர் வெற்றி பெற்றால் அதில் நான் ஒருவனும் இடம்பெறவேண்டும். ஒருவர் வெற்றி பெற்றால் அவன் நானாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டும். கமலஹாசன் மட்டுமா உலக நாயகன்? நீங்களும்தான். ஆயிரக்கணக்கான உயிர் அணுக்களோடு போட்டிப் போட்டு ஓர் உயிர் அணுதானே வெற்றிபெற்றது. அதுதானே நீங்கள்!”

நாவல், நாடகம், கவிதை ஆகிய பாடப்பகுதிகளையொட்டி விரிவாக விளக்கினேன். மாணவர்கள் ஆர்வமாய்க் கேட்டனர். கேட்கும் காதுகள் இருந்தால் சலிப்பில்லாமல் பேசலாம்.

காப்பார் நகரில் அயர்வில்லாமல் இலவசமாகத் தமிழ் இலக்கியப் பணியாற்றும் திரு.சுப்ரமணியம், திரு.இராமன் அவர்தம் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். நிறைவான பணி முடித்த உணர்வோடு விடைபெற்றேன்.
Monday, September 20, 2010

ஒவ்வொரு மரமும்..குளிர்சாதனப் பறவைகளின் மெல்லிய கீச்சொலிகள்
நிறைந்து வழியும் காட்டிற்குள் நுழைகிறேன்

எங்கும் முகங்காட்டும் புத்தக மரங்கள்
என்ன இருகை நீட்டி வரவேற்கின்றன

வெளியுலகின் பரபரப்புகள் நீங்கி
மௌனத்தின் ஆட்சியில் மூழ்கிய இடம்

மனித நடமாற்றம் குறைந்து
ஒரு சிலர் மட்டும் வாசம்புரிவதைக் கண்டேன்

யார் யார் நடந்துபோன பாதைகளின் சுவடுகள்
மூலைக்கொன்றாய்த் தெரிகின்றன

யார் யாரோ சொல்லிவிட்டுப் போன
வாழ்வின் இரகசியங்கள் அனுபவங்கள்
சிந்தனைச் சேமிப்புகள்
காடெங்கும் கொட்டிக்கிடக்கின்றன

அவரவர் தலை குனிந்தவாறு
அந்த இரகசியங்களை அவிழ்த்து
ஆராயக் கண்டேன்

பசித்த மனத்தோடு
புத்தக மரமொன்றின் அடியிலமர்ந்து
ஆனமட்டும் முயல்கிறேன்

கொஞ்ச நேரத்தில்
என்னைத் தனக்குள் இழுத்துக்கொண்டு
வேர்களைப் பிடுங்கியவாறு
மண்ணிலிருந்து விடுபட்டு மேலெழும்பி
புதிய பாதைகளில் திசைகளில்
காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கிறது
அதனோடு நானும் பறக்கிறேன்

அது தந்த அனுபவத்தில் மூழ்கி மூழ்கி
கிளர்ச்சியில் மனம் திளைத்துப்
பயணம் முடித்து
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறேன்

அந்த அற்புத அனுபவத்தில்
கைம்மண் அளவாவது கிட்டியதா

கையை விரித்தேன்
கிடைத்தது
நிலக்கடலை அளவுதான்

கடல்நீர் முழுதும் குடிக்க முயன்று
தோற்ற கயலாய்..
இனிப்புக் குவியல்முன் மலைத்துப்போன
சிற்றெறும்பாய்..

கண்முன் விரிந்து கிடக்கும்
அந்தக் காட்டை அதிசயமாய்ப் பார்க்கிறேன்

வாழ்ந்து மறைந்த முன்னோரின் முகங்கள்
மரங்களில் இலைகளில் பதிந்திருந்தன

தவித்துக்கிடக்கும் மனங்கள்
எத்தனை முறை அதனுள் போய்வந்தாலும்
தீர்வதில்லை தாகம்

போதிமரத்திற்காக
புத்தன்போல் அலைந்து திரிந்து
தேடிக் களைத்து அவதியுறாமல்

நம் முன்னே நிமிர்ந்து நின்று
தன் மடியில் கிடத்தி நம்மை அரவணைக்க

காத்திருக்கின்றன
ஒவ்வொரு மரமும்..

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை
Saturday, September 18, 2010

வானத்துக் காட்சிகள்

வானத்திலிருந்து பூமியைக் காண்பது அலாதியானது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இளையோர் இலக்கியம் குறித்து..(விரைவில்)

இதயம் திருடும் ஓவியங்கள்செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் நடைபெற்ற மண்டபத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய ஓவியங்கள் காட்சி தந்தன.

Friday, September 17, 2010

'மௌனம்' கவிதை இதழில் கோ.புண்ணியவான்

'மௌனம் கவிதை' இதழ் பற்றிய என் பார்வை - விரைவில்

Monday, September 13, 2010

செம்மொழி மாநாட்டில்..


இடைநிலைப்பள்ளிகளில் நாடகக்கலைஉலு லங்காட் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கிடையே ‘தமிழ் விழா’ அண்மையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவில் கடந்த ஆண்டு முதல் நாடகப் போட்டியும் இடம்பெற்றது. இம்முறை 9 பள்ளிகள் பங்குபெற்றன. (இன்னும் வரும்..)

மாரான் மரத்தாண்டவர் கோயிலில்..


கோயில்களுக்குப் போய் வருவதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். இதற்கு முக்கியக் காரணம் கடவுள் இருக்கிறார் என்பதை என் ஆழ்மனம் நம்புகிறது. பேய்க்கதைகள் படிக்கப் பிடிக்கும் என்றாலும் பேய் இருப்பதை நான் நம்பவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் வாழ்வில் இதுவரை ஒரு பேயையையும் பார்த்ததில்லை. ஆனால், எனக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருப்பதைப் பல முறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அண்மையில், பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குக் குடும்பத்தோடு போயிருந்தேன். என் மைத்துனர் சுப்ரமணியம் புதிய வாகனம் வாங்கியிருந்தார். எனவே, சிறப்பு பூஜைக்காகச் சென்ற அவரின் குடும்பத்தோடு நாங்களும் சென்றோம். கோலாலம்பூரிலிருந்து 2 1/2 மணி நேரப் பயணம். அகலமான நெடுஞ்சாலையால் அது களைப்பில்லாத பயணமாக அமைந்தது. வழிநெடுக இரு பக்கங்களும் பசுமை போர்த்திய காட்சிகள் கண்களுக்குக் குளுமையாக இருந்தன. ஜெங்கா பெல்டா நிலத்திட்டத்திற்கு நடுவே அடர்ந்த பகுதியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் பெரும்பாலும் மலாய்க்காரர்களின் வசிப்பிடப் பகுதிகள்.

இங்கே எப்படி முருகன் கோயில் தோன்றியது? தல புராணத்தைக் கோயில் உள் கோபுரப் பகுதியில் வரைந்திருக்கிறார்கள். 1870களில் இப்பகுதியில் சாலை அமைக்கும்போது சாலைக்கு நடுவே ஒரு மரம் இடையூறாக நிற்க, வெள்ளைக்கார முதலாளி கட்டளைப்படி அங்கு வேலை செய்த தமிழர்கள் அதனை வெட்டிச் சாய்க்க முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. மரத்திலிருந்து சிகப்பு நிறத்தில் ரத்தம்போல் பிசின் வடிந்திருக்கிறது.

இயந்திரம்கொண்டு சாய்க்க மேற்கொண்ட முயற்சியும் (இயந்திரம் பளுதாகி) தோல்வியில் முடிந்திருக்கிறது. வெள்ளைக்காரர் தாமே மரத்¨தைச் சாய்க்க முயன்றபோது உடல் செயலிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாராம். மரத்தில் ஏதோ சக்தி இருப்பதாகத் தமிழர்கள் எடுத்துச் சொன்னதால் அங்குக் கோயில் எழுப்புவதாக வெள்ளைக்காரர் வேண்டிக்கொண்டாராம். கோயில் எழுப்பப்பட்டதும் அவர் முழுமையாகக் குணம் அடைந்தாராம். கோயிலைச் சுற்றிவரும் சாலை அந்தப் பழைய வரலாற்றைப் பேசுகிறது.

ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்று மாரான் மரத்தாண்டவர் கோயில் கம்பீரமாக காட்சி தந்து நாடி வருவோர்க்கு அருள்பாலிக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது அப்பாவுடன் இந்த கோயிலுக்கு வந்தது நினைவிருக்கிறது. அப்போது, இரண்டு மரங்களுக்கு நடுவே சாலை இருந்தது. குறுகிய இடம் இன்று விஸ்தாரமாகிவிட்டது. முக்கியமான மரம் இருந்த இடத்தில் இன்று கோயில் கருவறையும் அதனைச் சுற்றி அழகிய கோயிலும் அமைந்திருக்கிறது. சீரமைப்புப்பணி முடிந்து அண்மையில் கும்பாபிஸேகம் நடந்திருக்கிறது.

கோயிலின் அமைப்பு சற்று வித்தியாசமானது. பக்தர்கள் சுற்றி நடந்து வருவதற்கு வசதியாக கோயில் வட்டமாக அமைந்திருக்கிறது. பளிங்குத்தரை தனி அழகைத் தருகிறது. கோயிலின் உட்பகுதி பறவைகளின் சரணாலயமாகத் திகழ்கிறது. பலிபீடத்திற்கு அருகிலிருக்கும் மரத்தில் வந்துபோகும் மனிதர்களின் ‘மனசின் மகஜர்களாக’ மஞ்சள் துணியில் முடிச்சுகள் தொங்குகின்றன. என் மகள் பொன்முல்லையும் தன் வேண்டுதலை மஞ்சள் துணியில் கட்டிவிட்டு வந்தாள். கோயில் வளாகத்திற்கு வெளியில் நின்று பார்த்தால் மஞ்சள் நிறத்திலான கோயில் கட்டடம் கண்களைக் கவர்கின்றது.

வழிபாடு, அன்னதானம் முடிந்து காஜாங் நகருக்குப் புறப்பட்டபோது, கோயிலின் தோற்றமும் மஞ்சள் நிறமும் மனத்தின் அறைகளில் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்ந்தேன்

Sunday, September 12, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு -2 வல்லினம் கலை இலக்கிய விழா12.9.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு வல்லினம் கலை இலக்கிய விழா கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் தொடங்கியது. ஜெயமோகனின் உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் திரளாக வந்திருந்தனர். தினேஸ்வரி அறிவிப்பில் மலர்ந்த நிகழ்வில் நான் வரவேற்புரை ஆற்றினேன் (என்னுரையை இதன் இறுதியில் காண்க).

டாக்டர் சண்முகசிவா தலைமையுரையாற்றினார். வல்லினத்தின் வருகையை இலக்கியத்தில் ‘மாற்று அணி’ நான் குறிப்பிட்டதைக் கூறி, வல்லினம் மாற்று அணி அன்று; அனைவரும் விரும்பி அணிய வேண்டிய அணி என்று கருத்துரைத்தார். “எழுத்தாளர்களுக்கு அறச்சீற்றம் வேண்டும். கருத்துக்களையும் எதிர்வினையையும் துணிச்சலோடு முன்வைக்கவேண்டும். வல்லினம் படைப்பாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன். ஆனால், வல்லினம் படைப்பாளிகளின் வட்டம் விரிவடைய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

வல்லினம் ஆசிரியர் மா.நவீன், ‘வல்லினம் மலேசியா-சிங்கை 2010’ இதழ் உருவான கதையை விளக்கினார். பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடம் தற்கால இலக்கியம் குறித்த சிந்தனை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த இதழ் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.

சு.யுவராஜனும் சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களும் ஜெயமோகனை அறிமுகம் செய்தனர். ஜெயமோகன் சில நிகழ்ச்சிகளில் ஒரு சினிமாக்காரராக மட்டும் அறிமுகம் செய்துவைக்கப்படும் நிலையை யுவராஜன் வேதனையோடு குறிப்பிட்டார்.

‘தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் உரையாற்றினார். ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் தமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அதனுள் தான் கண்டடைந்தவற்றையும் விரிவாகக் கூறினார். மூன்று பாகங்களில் அமைந்த அந்நாவலைச் சிரமத்தோடு வாசிக்கத்தொடங்கினாலும் வரலாற்று பிரக்ஞையோடு உளவியல் தன்மைகளின் தொகுப்பாக அமைந்த அது, தமக்கு நாவல் குறித்த பல உண்மைகளை உணர்த்தியதாகக் கூறினார்.

“நாவல் வெறும் நீண்ட கதையாக மட்டும் அமைந்து விடாமல் பல்வேறு தன்மைகளின் தொகுப்புப் பார்வையாக இருக்கவேண்டும். வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையைத் (தரிசனத்தை) தரவேண்டும். நெடுங்காலத்தைக் களமாகக் கொண்டிருக்கவேண்டும். ஒரு கண்ணில் யானையையும் மற்றொரு கண்ணில் சிறு எறும்பையும் காணும் நிலையில் எழுத்தாளன் இருக்க வேண்டும்.” ஜெயமோகனின் நாவல் குறித்த சிந்தனை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அதன்பின் தமிழில் எழுதப்பட்ட சில முக்கிய நாவல்களைத் தொட்டுப் பேசினார்.
புளியமரத்தின் கதை, தலைமுறைகள், ஆழிசூழ் உலகு, காவல் கோட்டம் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவரின் உரைக்குப் பின்னர், கேள்வி - விளக்கம் என மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. இலக்கிய நண்பர்கள் பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துப் பேசியது மனத்திற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. இதற்கு வழியமைத்த வல்லினம் குழுவிற்கு நன்றி.

இலக்கியம் குறித்த உரையாடல்கள் நம்மிடையே மிகவும் குறைவு. பெரும்பாலும் பேசுவதற்கு நம் எழுத்துகளை அனுப்பிவைத்துவிட்டு நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். “உள்ளங்கள் எல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா?” என்று வாலி எழுதினார். இலக்கியத்திற்கு இந்த வரிகள் மிகவும் பொருந்தும். உரையாடல்கள், இலக்கியம் குறித்த ஆழமான புரிதலுக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

( நிகழ்வில் நான் ஆற்றிய உரை)
கடந்த ஆண்டு வல்லினம் கலை இலக்கிய விழா 1 இதே அரங்கில் நடைபெற்றது. கொஞ்சம் கலகலப்போடும் கொஞ்சம் சர்ச்சைகளோடும்.

இம்முறை இவ்விழா ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்துள்ளது. இந்நாட்டில் எஸ்.பி.எம். தேர்வில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் இக்கழகம் அமைக்கப்பட்டுச் செயல்படுகிறது. அதோடு இலக்கிய ஆசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வல்லினத்தின் இலக்கிய முயற்சிக்குத் துணைநிற்பதில் இக்கழகம் மகிழ்ச்சி அடைகிறது.

இந்நாட்டில் இலக்கியம் வளர்க்கும் பணியில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதனை யாரும் மறுக்க முடியாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கருத்தரங்குகள், பட்டறைகள், நூல்வெளியீடுகள், இலக்கியப்போட்டிகள், இலக்கியப் பயணங்கள் என ஒல்லும் வகையெல்லாம் பணியாற்றி வருகிறது. இன்று காலையில் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு நடைபெற்றது. அதில் சிறுகதை குறித்த பல அரிய தகவல்களை எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கினார். அதுபோல மாநிலந்தோறும் இருக்கும் எழுத்தாளர் சங்கங்கள், வாசகர் இயக்கங்கள், ‘மௌனம்’ ‘அநங்கம்’ போன்ற சிற்றிதழ்கள் தத்தம் சக்திக்கு இயன்ற வரையில் பங்களிப்பை வழங்கி வருகின்றன.

‘மௌனம்’ இதழ் மூலம் ஜாசின் தேவராஜன் கவிதைக்கான களம் அமைத்துக்கொடுத்துப் பலரையும் எழுதத் தூண்டி வருகிறார். அதே போன்று ‘அநங்கம்’ இதழ் மூலம் கே.பாலமுருகன் தம் இலக்கியப் பங்கினை ஆற்றிவருகிறார். இணைய வாகனத்தில் ஏற்றி உலகச் சந்தையில் நம் இலக்கியச் சரக்குகளை இடம்பெறச்செய்யும் முயற்சிகள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், அண்மைய காலமாக வல்லின இணைய இதழின் பங்களிப்பும் இந்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத ஒரு கூறாக விளங்கி வருகிறது.

மலேசியத் தமிழ் இலக்கியம் பன்முகங்கொண்டதாக மாறியுள்ளது. பழைய தடத்தில் மரபான இலக்கியங்களை கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றைப் போற்றிக்காக்கும் முயற்சி ஒரு பக்கம் நடைபெறுகிறது. இன்னொரு பக்கத்தில் புதிய இலக்கிய முயற்சிகள் - பழைய தடத்தை மறுதலித்துவிட்டு புதிய இலக்கில் பயணப்படுகின்றன. அரசியல் போலத்தான்.. இனி ஒரு கட்சி என்ற நிலை மாறி பல கட்சிகளின் காட்சிகளைப் பார்க்கிறோம். அரசியலில் மாற்று அணி என்பதுபோல இலக்கியத்தில் மாற்று அணி. வல்லினத்தின் வருகையை நாம் அப்படித்தான் பார்க்கிறோம். இந்த இலக்கிய அணியின் பங்களிப்பு ஆக்கரமாக அமைய வேண்டும் என்பது நமது அனைவரின் எதிர்பார்ப்பாகும்

மாற்று அணி என்பதனால் மற்ற அணிகளைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. தமிழ் இலக்கணத்தில் வல்லினம் மட்டும் போதாது. மெல்லினமும் இடையினமும் தேவைப்படுகின்றன. மூன்று முரண்பட்ட ஒலிகள் இணைந்ததால்தான் அழகிய செம்மொழியை நாம் பெற்றிருக்கிறோம்.

அதுபோல், இலக்கிய வயலில் பலரும் இறங்கி, அவரவர் தம் ரசனைக்கு ஏற்ப, சக்திக்கு ஏற்ப, வாய்ப்புக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப விவசாயம் பார்க்கிறார்கள். அந்த பலதரப்பட்ட முயற்சிகளை வரவேற்போம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தும் எந்த முயற்சியாக இருந்தாலும் எந்த இலக்கிய வடிவத்தில் அவை இருந்தாலும் அவற்றை வரவேற்போம்!

என்னுரை வரவேற்புரை. எனவே, இலக்கியச்சுவை நாடி வந்திருக்கும் அனைத்து உள்ளங்களையும் வரவேற்கிறேன். சிறப்பாக இணைய வாகனத்தில் இலக்கியப் பணியாற்றிவரும் வல்லினத்தைப் பாராட்டுகிறேன்.