நம் குரல்

Friday, February 20, 2015

அறிக்கைகள் எழுதி இன்புற்று..


   ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதை ஆர்வத்தோடு தொடங்கவும் சுவைமிகுந்ததாக மாற்றவும் நாளிதழ்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  மலேசியாவின் மக்கள் தொகையில் நாம் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் நாளிதழ்கள் எண்ணிக்கையில் முதல் நிலையில் இருக்கிறோம். சிறிய சமூகத்தில் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை ஏழு என்பது வியப்புக்குரியதாக இருக்கிறது. பிற இனத்தவரோடு ஒப்பிட்டால் நாம் குறைவாகத்தான் வாசிக்கிறோம். இதற்குப் புள்ளி விபரம் தேவையில்லை. நாம் வாழும் சுற்றுச் சூழலை ஆழ்ந்து அவதானித்தாலே போதும்.

      ஏழு தமிழ் நாளிதழ்கள் என்றாலும் அவற்றின் உள்ளடக்கமும் செய்திகளின் வகைமையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. தமிழ் நாளிதழ்களை  மலாய், ஆங்கில, சீன நாளிதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ வேறுபாடுகளைக் காணலாம். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அறிக்கைகளைக் கூறலாம். மற்றமொழி நாளிதழ்களில் யாரும் விருப்பம்போல் அறிக்கைகள் வெளியிட முடியாது. அரசியல், சமுதாய இயக்கங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் கருத்துகள் செய்திகளாக இடம்பெறும். தலைவர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே நிருபர்கள் நின்றுகொண்டு தேவையானவற்றை மட்டும் அளந்து கொடுக்கிறார்கள். அறிக்கைகள் மிக அரிதாகத்தான் வெளிவரும். அதிலும் நீண்ட அறிக்கைகளுக்கு அறவே வாய்ப்பில்லை.  ஒரு சமுதாயச் சிக்கலென்றால் இரு தரப்பின் கருத்துகளுக்கும் இடமளிக்கிறார்கள். வீணான அறிக்கைப் போருக்கு வாய்ப்பில்லை.  

      ஆனால், தமிழ் நாளிதழ்களோ அறிக்கைகளின் சரணாலயமாகத் திகழ்கின்றன. இயக்கங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி, எல்லா நிலைப் பொறுப்பாளர்களும் அவரவர் பங்குக்கு அறிக்கை எழுதுகிறார்கள். ஆதரவு அறிக்கை, கண்டன அறிக்கை, சமூக நலன் அறிக்கை என பல்வேறு ரூபத்தில் அறிக்கைகள் வருகின்றன. சில நாள்களில் செய்திகளின் இடங்களை அவை நிரப்பி விடுகின்றன. சிலர் ஒவ்வொரு நாளும் காலையில் நாளிதழ்களைப் புரட்டிவிட்டு அறிக்கை எழுதத் தொடங்கிவிடுகின்றனர். ஓர் இயக்கத்தின் தலைவரைக் காலை பத்து மணியளவில் அவரின் அலுவலகத்தில் சந்திக்கப் போயிருந்தேன். நாளிதழ்களைப் படித்துவிட்டு அப்பொழுதே அறிக்கை எழுதிக்கொண்டிருந்தார். அறிக்கைப் போரில் தம் இயக்கமும் தாமும் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதைபதைப்பு பலரிடம் நிலவுவதை உணரமுடிகிறது. இயக்கத்தின் ஆண்டு அறிக்கையில் அறிக்கைகளையும் செயல் திட்டத்தில் இணைத்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நாளிதழ்களில் ஒரே அறிக்கை மயமாக உள்ளது. சிலர் அறிக்கை எழுதுவதற்கே இயக்கத்தை ஆரம்பித்தார்களோ எனச் சந்தேகமாக உள்ளது.

      அப்படியென்றால் நாளிதழுக்கு அறிக்கை எழுதுவது தவறா என்று நீங்கள் வினவலாம். ஒரு சமுதாயச் சிக்கலைத் தீர்ப்பதற்குத் தக்க நேரத்தில் அறிக்கைவழி எழுப்பப்படும் குரல்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை என்பதை மறுக்க முடியாது. தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் அறிக்கைகள் என்பவை பலரும் ஒன்றுகூடி ஒரு பிரச்சினை குறித்துக் கலந்துபேசி கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் களமாக இருக்கின்றன. வாசகர்கள் சுற்றி நின்று கலந்துரையாடலைக் கேட்டுத் தம் எண்ணங்களோடு அவற்றைப் பொருத்திப் பார்க்கிறார்கள். எத்தனையோ முக்கியமான பிரச்சினைகள் நம் சமூகத்தில் எழுந்தபோது எழுதிக் குவிக்கப்பட்ட அறிக்கைகள் அவற்றின் தீர்வுக்கு வழியமைத்துள்ளன என்பதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, எஸ்.பி.எம். தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்ற பிரச்சினை எழுந்தபோது தேர்வில் 12 பாடங்கள் வேண்டும். தமிழும் இலக்கியமும் பயில வாய்ப்பு வேண்டும் என்று அறிக்கைகள்வழி வைக்கப்பட்ட  கோரிக்கைகள் சிக்கலின் தீர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. மேலும், நாளிதழ்களில் வெளிவரும் அறிக்கைகள்வழி மக்களின் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

      நம் சமூகம் தொடர்பான பிரச்சினைகளின் அலசல்கள் மற்ற மொழி ஏடுகளில் குறைவாக வருகின்றன அல்லது அவ்வப்போது ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளும் அளவில்தான் வருகின்றன. இதன் காரணமாகவும் நமக்குள்ளே விரிவாகப் பேச அறிக்கைகள் பயன்படுகின்றன. அதற்காக, எதற்கெடுத்தாலும் அறிக்கை, எப்பொழுதும் அறிக்கை எனப் பலர் அறிக்கைக் கனவிலேயே இருப்பதுதான் நமக்குள் வருத்தத்தை விதைப்பதாக உள்ளது.

      நாளிதழ்களில் வரும் அறிக்கைகள், அதன் தொடர்பான தரப்பின் பார்வைக்குப் போகிறதா என்பது நாம் இன்னொரு கோணத்தில்  சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக, அரசின் பார்வைக்கு ஒவ்வொரு அறிக்கையின்வழி முன்வைக்கப்படும் சிக்கல்கள் போய்ச் சேருகின்றனவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சிலும் தமிழ் நாளிதழ்களில் வரும் கருத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? அதற்காக, தமிழ் தெரிந்த அரசு அதிகாரிகள் எல்லா அரசாங்க இலாகாவிலும் நியமனம் பெற்றுள்ளார்களா? இத்தகைய நியமனத்துக்கான பரிந்துரையை நம்மைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளனவா?

      நமக்குள் தீர்த்துக்கொள்ளும் நமக்கான பிரச்சினையெனில் நாம் தமிழில் அறிக்கைகள் எழுதி நாளிதழில் வெளியிடலாம். ஆனால், அரசின் பார்வைக்கு அனுப்பவேண்டுமெனில் தமிழில் மட்டும் எழுதினால் போதுமா? அந்த அறிக்கைகளை நம் தலைவர்கள் படித்துப் புரிந்துகொண்டு நமக்காக சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியுமா? தமிழ் தெரியாத தலைவர்கள் பெருகிவரும் சூழலில் எந்த அறிக்கையைப் படித்து அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வார்கள்?  “அறிக்கையெல்லாம் எதுக்குங்க? எஸ்.எம்.எஸே போதும்” என நவீனத்துக்குத் தாவிவிட்ட தலைவர்களிடையே இன்னும் எந்த நம்பிக்கையில் நாம் தமிழில் அறிக்கைகள் எழுதிக் குவிக்கிறோம்?

      எனவே, சிக்கல்களுக்கு விரைந்து தீர்வுகாண தமிழ் நாளிதழ்களுக்கு அறிக்கை  எழுதி அனுப்பியதோடு அதை மலாய்மொழியில் மொழிபெயர்த்து அதன் தொடர்பான தரப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அறிக்கை எழுதியதன் பலனை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் நாம்  எழுதிய அறிக்கைகளை நறுக்கியெடுத்துக் கோப்புகளில் அடுக்கி அழகு பார்த்து நம்மை நாமே பாராட்டிக்கொள்வதால் பயனேதும் விளையாது என்பதை உணரவேண்டும்.

      “தமிழில் எழுதினால் போதாதா? மலாய்மொழியில் வேறு எழுதவேண்டுமா?” எனக் கேட்போரின் பார்வைக்குப் பின்வரும் இரண்டு  நிகழ்வுகளை முன்வைக்கிறேன்.


நிகழ்வு 1

      ஈப்போவைச் சேர்ந்த நம் நாடு நாளிதழ் நிருபர் மு.ஈ ரமேஸ்வரியின் கவனத்துக்கு ஆயர் கூனிங் பகுதி மக்கள் ஈக்களால் எதிர்நோக்கும் பிரச்சினை வருகிறது. குடியிருப்பாளர் பகுதிக்கு அருகிலிருக்கும் கோழிப்பண்ணையிலிருந்து பெருக்கெடுக்கும் ஈக்களால் அங்கிருக்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக, மழைக்காலங்களில் நிலைமை மோசமாகி அவர்களின் இயல்பு வாழ்க்கையையும், வியாபாரம் மற்றும் உணவகங்களையும் பெரிதும் பாதித்துள்ளது.  “வீட்டில் நிம்மதியாய் உணவு சாப்பிட முடியவில்லை; தண்ணீர் குடிக்க முடியவில்லை, இதற்கு என்றுதான் தீர்வு பிறக்குமோ எனத் தெரியாமல் தவிக்கிறோம்” என்ற அவர்களின் மனக்குமுறலைச் செய்தியாய் வெளியிட்டிருந்தார் மு.ஈ ரமேஸ்வரி.
     


நாளிதழில் செய்தி வந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை இவரே தாப்பா மாவட்ட சுகாதார இலாகாவின் பார்வைக்குக் கொண்டுபோயிருக்கிறார்.  நாளிதழை வாங்கிப் பார்த்த அதிகாரிகள் “இவ்வளவு மோசமாவா இருக்கு? எங்களுக்கு தெரியாம போச்சே என ஆச்சரியம் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் தாப்பா மாவட்ட கால்நடை இலாகாவின் தலைமை அதிகாரி டாக்டர் சித்தி நோர்சுபாயிடாவைச் சந்தித்து நாளிதழ் செய்தி குறித்த தகவலையும் விளக்கத்தையும் ரமேஸ்வரியே வழங்கினார். விபரங்களைக் கேட்டறிந்த அவர், அது குறித்து பேராக் மாநில கால்நடை இலாகா, மாநில அமலாக்கப்பிரிவு மற்றும் சுகாதார இலாகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் ஒரு வாரத்திற்குள் தீர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவதாக நம்பிக்கை தெரிவித்தார். எதனால் ஈ அதிகரிப்பு ஏற்படுகிறது என இலாகாக்கள் ஆயிர் கூனிங் பகுதிக்கு சென்று ஓர் உடனடி ஆய்வையும் நடத்தும் எனத் தெரிவித்த அவர் கிடைக்கப்பெறும் ஆய்வின் முடிவின்படி அதன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு ஈக்களின் தொல்லையிலிருந்து மக்கள் விடுபட்டிருக்கின்றனர்.

ஈக்கள் பிரச்சினைக்கே இவ்வளவு முயற்சிகள், ஆய்வுகள் என்றால் மற்றப் பிரச்சினைகளுக்கு என்ன நிலைமை என்ன எண்ணிப் பாருங்கள். செய்தியை எழுதிய நிருபரே அதனை மலாய்மொழியில் கடிதமாய் எழுதிக்கொடுத்துத்தான் இதனை அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கிறார். அரசு கோப்புகளில் தமிழ் நாளிதழ்ச் செய்தியை நறுக்கி வைக்க முடியாதே! 

நிகழ்வு 2

ரவாங், சூப்பர் மைண்ட் டைனமிக்ஒருங்கிணைப்பாளரும் தன்முனைப்புப் பேச்சாளருமான மு.கணேசன் மற்றும் அவர்தம் குழுவினரின் அயராத  முயற்சியினால் சிலாங்கூர் மாநில நூலகங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் எழுதிய 81 நூல்களை இடம்பெறச் செய்யும் முயற்சி 2013இல்  வெற்றி பெற்றது. நூலக இலாகா நூல்களை விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டது.  ஆனால், கடந்த ஆண்டு,  9 நூலகங்களுக்கு மட்டும், தலா இரண்டு நூல்களாக 18 நூல்கள் மட்டும் போதும் என அறிவித்தது. நூலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பெரும்பாலான நூலகங்களில் தமிழ் வாசகர்களின் வருகை குறைவு என்பது கண்டறியப்பட்டதாம். இந்த அறிவிப்பு எழுத்தாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும், சூப்பர் மைண்ட் டைனமிக் இயக்கம் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து  எழுத்தாளர்களை, சமூக இயக்கங்களை அறிக்கை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தது. நாளிதழில் பல அறிக்கைகள் வந்தன. சிலர் மலாய் மொழியில் நேரடியாக சிலாங்கூர் மாநில நூலக இலாகாவுக்கு மின்னஞ்சல் வழி முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். நாளிதழ் அறிக்கைகளை மொழிபெயர்த்ததோடு நாளிதழ் செய்திகளையும் தலையங்கத்தையும் மாநில  மந்திரி பெசாரின் பார்வைக்கு அனுப்பினார் மு.கணேசன்.



அதன் பிறகே, மந்திரி பெசாருக்கே இப்படியொரு பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, கல்விப்பகுதிக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரிடம் “வாங்கும் நூல்களின் எண்ணிக்கை ஏன் குறைக்கப்பட்டது?” என வினவியிருக்கிறார். அவர், “அப்படியா? ஏன் குறைக்கப்பட்டது?” என மாநில நூலக இலாகா இயக்குநரிடம் கேட்க, அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, பினாங்கு போயிருந்த மு.கணேசனை விரைந்து வரச்சொல்லி, கலந்துபேசி, 79 நூல்கள் ( 2 நடமாடும்  நூலகங்கள் செயல்படாததால்) வாங்கும் திட்டத்தைத் தொடர்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இப்பொழுது சிலர் நாளிதழில், பொங்கி எழுவோம் என வீரவசனம் பேசுவதுபோல இந்தப் பிரச்சினையிலும் அறிக்கைகளை எழுதிவிட்டு நம் கடமை முடிந்ததாகச் செயல்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பிறந்திருக்குமா?

நம் சமூகத்தில் மட்டும் விவாதிக்கும், பேசித் தீர்க்கும் பிரச்சினையெனில் தமிழில் எழுதுவோம். அவை அரசின் காதுக்கும் எட்டவேண்டிய பிரச்சினையெனில் தமிழில் அறிக்கை எழுதியதோடு அரசின் பேசுமொழியாக இருக்கும் மலாய் மொழியிலும் எழுதி அது தொடர்பான தரப்புக்கு அனுப்புவோம்.

தமிழில் மட்டும்தான் எழுதுவோம் எனச் சிலர் அடம்பிடிக்கலாம். ‘அறிக்கைகள் எழுதி இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியார் பராபரமே’ என இவர்களை ஒதுக்கிவிட்டு, பிரச்சினைகளின் முடிச்சவிழ்க்கும் செயல்களில் மற்றவர்கள் முனைப்புக் காட்டவேண்டும். தமிழ் தெரியாத, தமிழ் நாளிதழ்கள் வாசிக்காத தலைவர்களை இனி நம்பிப் பயனில்லை.



Sunday, February 15, 2015

தங்கமீன் பதிப்பகமும் மலேசிய நூல்களும்



தாம் எழுதிய  படைப்புகளை நூலாக்கிப் பார்ப்பதுதான் எழுத்தாளர் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது துன்பக் கனவு போன்றது. படைப்புகளை எழுதி ஏடுகளுக்கு அனுப்பிவிட்டு, அவை அச்சு வாகனத்தில் வருவதைக் காண்பதோடு பலர் மனநிறைவு அடைகிறார்கள். அவற்றை நூலாக்குவதில் உள்ள சிரமத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய முயற்சிகளில் ஈடுபடாதவர்கள் இங்கு அதிகம். நூலைப் பதிப்பிப்பதோடு வேலை முடிவதில்லை. தொடர்ந்து,  நூல் வெளியீடு, நூல் விற்பனை என இருப்பதால் நமக்கேன் வம்பு எனப் பெரும்பாலோர் நூல் கனவைக் கைவிட்டு ஒதுங்கிவிடுகின்றனர்.

இந்நாட்டில் மலாய் மொழியில் எழுதுவோருக்கு இத்தகைய சிரமங்கள் ஏதும் இல்லை. எழுதுவோடு அவர்கள் கடமை முடிந்து விடுகிறது. அவர்கள் படைப்புகளைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு நூலாக்கி விற்பனை செய்வதை மலாய்மொழி வளர்ச்சிக் கழகம் (டேவான் பகாசா டான் புஸ்தாகா) மேற்கொள்கிறது. சிங்கப்பூரில் தேசியக் கலை மன்றம் (National Art
council) மூலம் தமிழ் எழுத்தாளர்கள் நிதி உதவி பெற்று நூல்களை வெளியிடுகிறார்கள்.

மலேசியாவில் நம் தமிழ் எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட ஏன் அரசு  உதவுவதில்லை? அதற்கான முயற்சியை நம் அரசியல் கட்சிகளோ, தமிழ் எழுத்தாளர் சங்கமோ இதுவரை மேற்கொண்டதாகத் தகவல் ஏதும் இல்லை. சக்தி அறவாரியம் மூலம், டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் பிரதமரை அணுகி நிதி உதவிபெற்று, இதுவரை மொத்தம் 15 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த முயற்சி, தேர்தல் காலத் திட்டமா  அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



டேவான் பகாசா டான் புஸ்தாகா போன்ற ஒரு மொழி மையத்தை நாம் அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் நூல்களை வெளியிடும் பணி செம்மையாக நடைபெறும் என்ற சிந்தனையை அமரர் முனைவர் கலியபெருமாள் போன்ற மூத்த படைப்பாளிகள் முன்வைத்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். அவரவரும் அரசிடம் செயல்திட்ட வரைவைச் சமர்ப்பித்து நிதி பெறுவதில் முனைப்பு காட்டுகிறோமே தவிர, பயன்நல்கும் நிலையான திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. எனவே, நம் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு இன்னல்கள் அடுத்த நூற்றாண்டுக்கும் தொடரும் எனத் திண்ணமாய் நம்பலாம்.

உமா பதிப்பகம், ஜெயபக்தி, வல்லினம் போன்ற பதிப்பகங்கள் இந்நாட்டு நூல்களை அவ்வப்போது  பதிப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகமும் இணைந்துள்ளதை மகிழ்வோடு இங்குப் பதிவு செய்கிறேன். இந்தத் தங்கமீன் பதிப்பகத்தை நடத்தி வருபவர் தமிழகத்தில் பிறந்த பாலு மணிமாறன்.

அவரை இங்கு, அப்பாவி சோழன் என்றால் பலருக்கும் தெரியும். 1990களில் மக்கள் ஓசையில் வாரம் ஒரு சிறுகதை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இவர். அரும்பு வார ஏட்டில் பி.ஆர்.இராஜனோடு கைகோர்த்துப் பயணித்தவர். அவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி  (எங்கே நீ வெண்ணிலவே?) அந்த நூல் வெளியீட்டை ஆதி.குணனன் தலைமையில் இங்கு வெளியிட்டவர். எம்.ஏ.இளஞ்செல்வனோடு  இலக்கியச் சர்ச்சையிலும் முனைப்பு காட்டியவர். இரண்டு ஆண்டுகள் மலேசியாவில் வாழ்ந்துவிட்டு சிங்கப்பூருக்கு வேலையிட மாற்றலாகிச் சென்றவர்.

இடம் மாறினாலும் இதயம் ஒன்றுதானே? அதிலும் இவரின் மனமோ இலக்கிய மனம். அங்கும் இலக்கியப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். முதலில், தங்கமீன் இணைய இதழைத் தொடங்கினார். அதில், சிங்கப்பூர், மலேசிய இலக்கிய ஆக்கங்களை வெளியிட்டதோடு, அங்குள்ள சமூக, கலை, ஊடக, விளையாட்டுத் துறைகளில் சாதித்துள்ள தமிழர்கள் பற்றிய அரிய தகவல்களைப் பதிவேற்றினார். அது இணைய வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு தங்கமீன் வாசகர் வட்டத்தைத் தொடங்கினார். விரிவான களத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தவும் வாசகர்களிடையே சந்திப்பு – கலந்துரையாடல் வழி படைப்பாற்றலை வளர்க்கவும் அது கைகொடுத்தது. சிறுகதைப் போட்டி, கவிதைப்போட்டிகளும் நடத்தித் தேர்வாகும் படைப்புகளை நூலாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தமிழகப் படைப்பாளரகளை வரவழைத்து இலக்கிய நிகழ்வுகளும் நூல் வெளியீடுகளும் நடத்தினார். இப்பொழுது தங்கமீன் வாசகர் வட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் எம்.சேகர். இவர் நம் நாட்டு பூச்சோங் எம்.சேகர்தான், இப்பொழுது சிங்கப்பூரில் தமிழாசிரியர்.



தங்கமீன் வாசகர் வட்டத்தின் இலக்கியச் செயல்பாடுகளே தங்கமீன் பதிப்பகம் உருவாகக் காரணமாக அமைந்தன. இதன் மூலம் சிங்கப்பூர், மலேசிய படைப்புகளைத் தேர்வுசெய்து நூலாக்கும் பணியில் இறங்கினார் பாலு மணிமாறன். இதுவரை மொத்தம்  30 நூல்கள். அவற்றில் மலேசிய நூல்கள் 11. பீர்.முகம்மது, கோ. புண்ணியவான், கே.பாலமுருகன், ஏ.தேவராஜன், ந.பச்சைபாலன், வாணி ஜெயம், சீ.முத்துசாமி, பெ.சூரியமூர்த்தி, ஆகியோரின் நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல் உருவாக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தித் தரமான வடிவமைப்போடு நூல்களைப் பதிப்பித்து  வருகிறார். இதன் காரணமாகத் தங்கமீன் பதிப்பக நூல்கள் தனிக் கவனத்தைப் பெறுகின்றன. 2013ஆம் ஆண்டில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாற்சோழன் விருதை வென்ற மலேசியா, சிங்கப்பூரின் இரண்டு சிறந்த நூல்களும் இவரின் பதிப்பித்ததாகும்.

சிங்கப்பூரைத் தவிர்த்துத் தமிழக மண்ணியிலும் தாம் பதிப்பிக்கும் நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பாலு மணிமாறன். அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூரின்  பெண் எழுத்தாளர்களான கமலாதேவி அரவிந்தன், நூர்ஜஹான் சுலைமான், சூரிய ரத்னா, ரம்யா ரமேஸ்வரன் ஆகிய நால்வரின் ஆறு நூல்களின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் கல்கி ஆசிரியர் வெங்கடேஷ், பாடலாசிரியர் நா.முத்துகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தங்கமீன் முயற்சியைப் பாராட்டினர்.

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலத்தில் சென்னையில் மலேசியப் படைப்பாளரிகளின் மூன்று நூல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வையும் பாலு மணிமாறன் தனியாக ஏற்பாடு செய்தார். சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் (நாவல்கள்), பந்திங் சூரியமூர்த்தியின் பெட்டி வீடு (கவிதைகள்), நான் எழுதிய இன்னும் மிச்சமிருக்கிறது (கவிதைகள்) ஆகிய நூல்களே அவையாகும். அந்நிகழ்வில் கலந்துகொண்டு சீ.முத்துசாமியின் நாவல்களை ஆய்வுசெய்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, தமிழக எழுத்தாளர்களுக்கு நிகரான படைப்பாளியாக சீ.முத்துசாமி திகழ்வதை வியந்து பாராட்டினார்.

தங்கமீன் பதிப்பகம் வழி, நம் மலேசிய நூல்கள் சிங்கப்பூர், தமிழகம் ஆகிய இடங்களில் வாசகரிடையே அறிமுகமாவது நம் இலக்கியத்தை பரந்த வாசகத் தளத்துக்கு அழைத்துச் செல்லும் சிறந்த முயற்சியாகும். பீர்.முகம்மது, ஜாசின் தேவராஜன், கே.பாலமுருகன் ஆகியோரை அழைத்துச் சிங்கப்பூரில் அவர்களின் நூல் வெளியீடுகளை நடத்தியுள்ளார் பாலு மணிமாறன்.


சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைப்பது கற்களாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட ஜோகூர் பாலம். அதுமட்டுமல்ல. இன்னொரு பாலமும் உண்டு. அஃது இலக்கியப் பாலம். இரு நாடுகளுக்கிடையே அத்தகைய இலக்கியப் பால நிர்மாணிப்பில் தங்கமீன் பதிப்பகமும் பாலு மணிமாறனும்  முனைப்பு காட்டி வருவது பாராட்டுக்குரியது.

இந்த ஆண்டு மேலும் பல தரமான மலேசிய நூல்களை வெளியிட தங்கமீன் பதிப்பகம் விரும்புகிறது. தரமான  படைப்புகள் தங்களிடம் இருப்பதாக நினைப்பவர்கள் பாலு மனிமாறனோடு தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்  +6582793770  (thangameen@hotmail.com)



Saturday, February 14, 2015

ம.இ.காவில் பிரளயம் : இழப்புகளின் காலம்



என்ன நடக்கிறது ம.இ.கா.வில்? கட்சியின் பதிவு ரத்தாகிவிடுமா?  ஏன் ஏடுகளில் இத்தனை அறிக்கைகள்? யார் சொல்வது உண்மை? தலைவர் ஏன் எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்?  மறுதேர்தலை நடத்துவதில் என்ன பிரச்சினை? ஆறு லட்சம் உறுப்பினர்களும் அரசியல் அகதிகளாக ஆகிவிடுவார்களா?

ம.இ.காவின் உறுப்பினரோ இல்லையோ, இந்நாட்டின் ஒவ்வோர் இந்தியனும் மனம் நொந்து கேட்க விரும்பிய கேள்விகள் இவையாகத்தான் இருக்கும். சிலர் தங்களின் ஆதங்கத்தை ஏடுகளில் அறிக்கைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பலர் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் காட்சிகளை ரசித்து மகிழ்கிறார்கள். பெரும்பாலோர் முகஞ்சுழித்து அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்துபோகும் நாளுக்குக் காத்திருக்கிறார்கள். ஆனால், சிக்கல்கள் கையாளப்படும் நிலையைப் பார்க்கும்போது எல்லாம் தீர்வதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும்போல்தான் தெரிகிறது.

ம.இ.கா. பத்தோடு பதினொன்றாக முளைத்த அரசியல் கட்சியல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், ஆகஸ்ட் 1946இல் தோற்றம் கண்ட கட்சியாகும்.  அம்னோ, ம.சீ.சாவோடு இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்த கட்சி. இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், சமயம், சமூக வளர்ச்சிக்காக  அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சி. ஆனால், 79 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட இக்கட்சியின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது எல்லாம் பொய்யாய், கற்பனையாய், பழங்கதையாய்ப் போய்விடுமோ என்ற வருத்தமே மேலோங்குகிறது.

எல்லாச் சிக்கல்களுக்கும் பிள்ளையார் சுழியிட்டது ம.இ.காவில் நடந்த தேர்தல்தான். உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவைக்கான தேர்தலை முறையாக நடத்தியிருந்தால் பிரச்சினைகள் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது. தேர்தலைக்கூட முறையாக நடத்தத் தெரியாத கட்சி என்ற அவப்பெயர் சூழ்ந்து கட்சியின் தோற்றத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட விதம் ஒரு திகில் நாடகத்தைப் பார்க்கும் பரபரப்பு உணர்வை எல்லாரிடமும் ஏற்படுத்திவிட்டது. வாக்குகளை வாங்கப் பணம் தண்ணீராய் அள்ளி இறைக்கப்பட்டதும் கட்சியின் அடுத்தக் கட்ட தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சிக்குச் சிறப்பைச் சேர்க்காது.

நம் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் தலைமைத்துவப் போராட்டம் பெரும் சிக்கலாய் உருவெடுத்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் தொடங்கி, கோயில் நிர்வாகம், சமூக இயக்கங்கள், அரசியல்வரை பதவிகளுக்காகப் அதிகமாகப் போராடுவதும் அடித்துக்கொள்வதும் இயல்பாகிவிட்டது. உளவியல் பார்வையில், இந்திய சமுதாயத்தின் மனப்போக்காக, தனித்த அடையாளமாக,  இயல்பான ஓர் கூறாக இது மாறியுள்ளது. சமுதாய நலனை முன்நிறுத்தும் சிறந்த பண்புகளைப் போற்றும் மனப்பாங்கு இல்லை. விட்டுக்கொடுத்தல், அனைவரையும் அரவணைத்தல், மாற்றுக்கருத்தை மதித்தல், குறை பொறுத்து நிறை காணல், பதவியில் நீண்ட காலம் ஒட்டிகொள்ளாமல் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளித்தல் என எத்தனையோ தலைமைத்துவப் பண்புகள் மறைந்துவிட்டன. தலைமைத்துவப் பண்புகளைப் போற்றாத சமுதாயம் மீட்சி பெற வாய்ப்பில்லை.



கணவன் -  மனைவி உறவில் எழும் சிக்கல் போன்றதுதான் ஓர் அரசியல் கட்சியில் அதன் தலைவர்களிடையே எழும் சிக்கல்கள். கணவன் மனைவியிடையே எழும் ஊடல் இயல்பானது; மிகவும் அவசியமானது. ஆழமான அன்புக்கும் நெருங்கிய உறவுக்கும் அதுவே பாலம் அமைக்கிறது. ஆனால், அஃது உணவில் உப்புபோல் சிறு அளவாக இருக்க வேண்டும். உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் என்கிறார் வள்ளுவர். ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம், உணவில் இடும் உப்புபோல் சிறு அளவாக இருக்கவேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும்.

இன்று, ம.இ.கா.வில் நடக்கும் குளறுபடிகளுக்கு இது மிகவும் பொருந்துகிறது. தலைவர்களிடையே பிணக்கும் கருத்து வேறுபாடுகளும் தோன்றுவது இயல்பு. ஆனால், அது உப்பாக இருக்கவேண்டுமே தவிர அதுவே உணவாகிவிடக்கூடாது. தலைவர்கள். சிக்கல்களை விரைந்து தீர்க்க முயல வேண்டும். அதைவிடுத்து, காலத்தை நீட்டித்த காரணத்தால் மனைவி பலமுறை கைப்பேசியில் அழைத்தும் குறுந்தகவல் அனுப்பியும் கணவன் வீராப்புக் கோபம் காட்டி முறுக்கிக்கொண்டு நின்றதால் இன்று அக்கம் பக்கத்தார், உறவு என்றில்லாமல் நாடே வேடிக்கை பார்க்கும் நிலையில் குடும்பச் சண்டை பெரும்பகையாய் மாறிவிட்டது.

கட்சி நடத்திய தேர்தல் செல்லாது எனச் சங்கங்களின் பதிவதிகாரி கடிதம் அனுப்பிய பிறகு, விரைந்து செயல்பட்டுத் தேர்தல்களுக்கு நாள் குறித்து விரைந்து செயல்பட்டிருந்தால் கால விரயம் ஏற்பட்டு வீண் அறிக்கைப் போர்களும் நிகழ்ந்திருக்காது. இது, ஏதோ மேல்நிலைத் தலைவர்களை மட்டும் பாதிக்கும் சிக்கல்கள் அல்ல. மேல்நிலைத் தலைவர்களிடையே ஏற்படும் மோதலும் பிளவும் கீழ்நிலை வரை (மாநிலம், தொகுதி, கிளை) பெரும் பிளவையும் பிணக்கையும் ஏற்படுத்தியுள்ளன என்பதை பலரும் உணர்வதில்லை. சாமிவேலு – சுப்ரா மோதல்கள் சமுதாயத்தை இரு கூறாக்கி நீண்ட காலம் பிளவுபடுத்தியதை மறுக்கமுடியுமா? அதேபோன்ற சமுதாயப்பிளவு இப்பொழுது தொடங்கியிருக்கிறது. ம.இ.கா. வளாகத்தில் ஒற்றுமைப் பொங்கலைக் கொண்டாடுவது சிறப்புதான். ஆனால், நாடு முழுமையும் சமுதாயத்தில் பல பிரிவாய் வேற்றுமையால் மீண்டும் சிதறத் தொடங்கியுள்ள ம.இ.கா. உறுப்பினர்களை எப்படி ஒருங்கிணைப்பது?

சில வேளைகளில் மௌனமொழி சிறந்த மொழிதான். மறுக்கவில்லை. ஆனால், கட்சியின் தலைவர் பல வேளைகளில் மௌனம் காப்பது பெரும் குழப்பத்துக்கு இட்டுச்சென்றுள்ளது. என்ன நடக்கிறது என ஏடுகளையும் தகவல் ஊடகங்களையும் நாடுவோர் என்ன நடக்கிறது?’ எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இப்படியிருக்குமோ? இல்லை அப்படியிருக்குமோ?’ என ஏதோ முடிவுகளுக்கு வந்துள்ளனர். குறிப்பாக, இப்படியே போனால் நாம் அரசியல் அகதிகள் என்ற கூற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை பலரின் அறிக்கைகள் பிரதிபலித்தன. அகதிகள் என்ற சொல் பயந்த இயல்புகொண்ட சமுதாயத்தை மேலும் பயமுறுத்திவிட்டதது. இதன் விளைவாய் இன்னொன்றையும் காணலாம். தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் பலருக்கு பெரும் வாய்ப்பாய்ப் போய்விட்டது. அவரவரும் விருப்பத்துக்கு அறிக்கை வெளியிட்டு ஏடுகளில் கோபமுகம் காட்டுகிறார்கள். இதுவும் பெரும் பிளவுக்கு வழியமைக்கும் என்பதை மறுக்க முடியாது. அவரவரும் அறிக்கை எழுதி, அறிக்கை படித்து இன்புற்றியிருப்பதன்றி வேறொன்றும் அறியார் பராபரமே எனப் பாடத்தோன்றுகிறது.



ம.இ.காவில் ஏற்பட்டுள்ள குழப்பம் ம.இ.கா. என்ற கட்சியை மட்டுமல்ல. நம் சமுதாயத்தையும் பாதித்துள்ளது.  பல்லின மக்கள் வாழும் சூழலில், நாம் மரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ நம் செயல்கள்தாம் அடித்தளம். நாம் சூழலை மறந்துவிட்டுக் அடிதடிச் சண்டையில் மும்முரம் காட்டினால், அதை அப்படியே படம்பிடித்து முதல் பக்கச் செய்தியாக்க பிறமொழி ஏடுகள் காத்திருக்கின்றன. அதுதான் அண்மையில் நடந்தது. ம.இ.கா. கூட்டங்களில் நாற்காலிகள் பறந்த காலங்கள் உண்டு. அந்தக் காட்சிகள் அரங்கேறும் காலம் மீண்டும் திரும்பும்போல் இருக்கிறது. அந்தக் காட்சிகளுக்காக கேமராக்கள் பசியோடு காத்திருக்கின்றன.

போர் மேகங்கள் உடனே விலகாமல் ம.இ.காவை சூழ்ந்துகொண்டு இருப்பதால் இன்னும் எத்தனையோ இழப்புகள் உள்ளன. தங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக ம.இ.காவின் உதவியை நாடி வருபவர்களைக் கவனிப்பதற்கு நேரமேது? ஒவ்வொரு நாளும் முப்பது நாற்பது பேரைச் சந்தித்துப் பிரச்சினைகளைத் தீர்த்த காலம்போய் “வேணாம்பா, அவங்களே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. நாம போனா எங்க கவனிக்கப்போறாங்க” என ஒதுங்கிப்போகும் நிலைதான் இன்றைய நிலை.

ம.இ.கா. தலைவர்களின் நேரம், உழைப்பு, பணம் என அனைத்தும் குவிமையமாக ஒன்றை நோக்கியே செலவழிக்கப்படுகின்றன. நாடு முழுதும் உள்ள மாநில, தொகுதி, கிளைத் தலைவர்கள் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து விளக்கக்கூட்டங்கள், ஆதரவுக்கூட்டங்கள், எதிர்ப்புக்கூட்டங்கள், சந்திப்புக் கூட்டங்கள் எனப் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிக் களைத்துத் திரும்புகிறார்கள். பொங்கி எழுவோம் என வீர முழக்கங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. ஆக்கத்திற்குச் செலவழிக்க வேண்டிய அனைத்தும், இன்று நெல்லுக்கு இறைக்கவேண்டிய நீரைப் புல்லுக்கு இறைத்த கதையாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

மிக முக்கியமான காலக்கட்டத்தில், நம் இந்திய சமூகம் தொடர்ந்து எல்லாவிதமான இன்னலிலிருந்து மீட்சி அடைவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து உரிமைக் குரலெழுப்பிப் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால், நாம் சூழலின் தீவிரத்தன்மை புரியாமல் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறோம்.  

எத்தனை இழப்புகள் நமக்கு. கேட்டுப்பெற வேண்டிய உரிமைகளை இழக்கிறோம். சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழக்கிறோம். இன்னும் மிச்சமிருக்கிற தன்மானத்தை இழக்கிறோம். ம.இ.கா. என்ற கட்சியின் மீது இந்திய சமூகம்கொண்ட ஆதரவை இழக்கிறோம். நம் சமூகத்தின், இழப்புகளின் காலமாக மட்டுமே இன்றைய நிலையை என்னால் அவதானிக்க முடிகிறது.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு? செயலாற்றல்மிக்க, நாவன்மைமிக்க, அனைவரையும் அரவணைக்கும் தன்மைமிக்க, பிரச்சினைகள் வந்தால் விரைந்து தீர்க்கும் புதிய தலைமைத்துவம் ம.இ.காவை வழிநடத்தும் நாள் எந்நாளோ, அந்நாளே சமூகத்தின் விடிவுக்கு வழிகாட்டும் நாளாக மலரும். அந்த நாளுக்காகச்  சமூகம் காத்திருக்கிறது.


Tuesday, February 3, 2015

வாசிப்பின் ருசி அறிவோம்


 


38ஆம் ஆண்டாகச் சென்னையில் புத்தகக் கண்காட்சி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் பல லட்சம் பேர் வருகை தந்துள்ளார்கள். நான்கு நாள்கள் பொங்கல் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலில் கண்காட்சி  திருவிழா இடமாக மாறியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இதனில் 6 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். பலதரப்பட்ட மொழி புத்தகங்களுடன் 700 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்களுடன் நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சிக்கு உள்ளூர், வெளியூர் வெளிமாநில வாசகர்களோடு வெளிநாட்டு வாசகர்களும் வந்துள்ளனர்.

37 ஆண்டுகளுக்கு முன் சாதாரண நிகழ்வாகத் தொடங்கப்பட்ட இப்புத்தகக் கண்காட்சி, அனைவரையும் பிரமிக்க வைப்பதாக வளர்ச்சியடைந்துள்ளது. திமுக ஆட்சியின்போது (2006-2011) அரசின் ஆதரவோடு இது புதிய எழுச்சி பெற்றது. பத்திரிகைகளும் தகவல் ஊடகங்களும் இதனை மிகப்  பெரிய நிகழ்வாக மாற்றுவதில் பெரும் பங்காற்றியுள்ளன. இங்குப் பல கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. இவ்வாண்டு மட்டும் விற்பனை 10 கோடி ரூபாய். வாசிப்பின் ருசி காட்டி வாசகர்களைப் புத்தகங்களை நோக்கி ஈர்ப்பதில் இந்நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது.

தாங்கள் வாழும் ஊர்களிலேயே  புத்தகங்களை வாங்கிக்கொள்ள முடியும் என்றாலும் இந்தப் புத்தகக் கண்காட்சி மீது ஏன் இத்தனை ஈர்ப்பு? இங்கு வழங்கப்படும் சிறப்புக் கழிவுகளும் ஒரு காரணம் என்றாலும் அதற்கும் அப்பால் ஜனத்திரளில் நுழைந்து புத்தகக் கடைகளை வலம் வந்து புத்தகங்களை வாங்குவதில் தனி இன்பம் இருப்பதாகப் பலரும் உணர்கிறார்கள். அதனால்தான், ஆண்டுதோறும் வருகையாளர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. மேலும், எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்க முடியும்.



இப்புத்தகக் கண்காட்சியோடு சேர்த்து நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் தொடர் சொற்பொழிவுகள், நூல் அறிமுகங்கள், நடனங்கள், கருத்தாய்வு அமர்வுகள், கலை படைப்புகள் எனப் பயனான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. புத்தகம் வாங்க வருபவர்களை இவை ஈர்த்துக்கொண்டு, எத்தகைய பண்பாட்டுக்கும் பாரம்பரியத்துக்கும் நாம் உரியவர்கள் என்ற பெருமித உணர்வை ஊட்டுகின்றன.  புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளில், பதிப்பகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் 33 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற 100 பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


இத்தகைய புத்தகக் கண்காட்சிக்கான தேவை மலேசியாவில் இருக்கிறதா என எண்ணிப் பார்க்கிறேன். இதே போன்ற புத்தகக் கண்காட்சிகள் மலேசியாவிலும் நடக்கின்றன. ஆனால், எல்லாம் பிற மொழிகளில். இதுவரை பெரிய அளவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி இங்கு நடத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. உமா, ஜெயபக்தி, காசி புத்தக நிறுவனத்தார்கள் ஆங்காங்கே மாநிலந்தோறும் சிறிய அளவில் நடத்திவருகிறார்கள்.

இங்குப் புத்தகப் பதிப்பாளர்கள் குறைவு. ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களே பதிப்பிக்கப்படுகின்றன. பெரும்பாலும் எழுத்தாளர்கள் சுய முயற்சியில் புத்தகங்களைப் பதிப்பிக்கிறார்கள். பின்னர், யாராவது தலைவர்களை நாடி அவற்றை வெளியிட்டு, அந்த வெளியீட்டு நிகழ்வோடு அந்தப் புத்தகத்துக்கு முடிவுரை எழுதிவிடுகிறார்கள். எழுத்தாளர்கள் வாசகனை நாடிப் போவதோ, அல்லது வாசகன் எழுத்தாளரை நாடி போவதோ இங்கு அபூர்வம் என்றுதான் கூறவேண்டும்.

140 ஆண்டுகால இலக்கிய வரலாற்றைக்கொண்ட இந்த மலேசிய மண்ணில் நம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தேவையான புத்தகச் சந்தையை இன்னும் உருவாகவில்லை, அதற்கான எந்தவொரு முயற்சியும் யாராலும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒரு புத்தகத்தின்  ஆயிரம் படிகளை விற்பதற்குப் பலர் பல ஆண்டுகளுக்குக் காத்திருக்கிறார்கள்.



இதனால் விளைந்த பெரிய இலக்கிய சோகம் என்ன தெரியுமா? பல எழுத்தாளர்களின் அரிய படைப்புகள் ஏடுகளில் முகங்காட்டி அச்சு வாகனம் ஏறாமல் காணாமல் போய்விட்டன.  அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் படைப்புகளை வைத்தே நம் இலக்கிய முகத்தை உருவாக்கிக் கொள்ளும் சூழலில் உள்ளோம். நம் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக நாம் கொண்டாடும் கவிதைவேள் கா.பெருமாளின்  ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்துப் படிவங்கள் நூலுருவம் காணாமல் எங்கோ தொலைந்துபோன சோகத்தை யாரிடம் முறையிடுவது? நம் இலக்கிய முன்னோடிகள்’, நம் சிறந்த இலக்கிய ஆளுமைகள் என ஒரு பட்டியலை மட்டும் மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்தால் போதுமா?

நம் இலக்கிய முயற்சிகளின் மீது ஒரு போலித்திரை மூடியிருப்பதாக நான் உணர்கிறேன். இலக்கியப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நூல் வெளியீடுகள் யாவும் பல இயக்கங்களின் ஆண்டுத் திட்டமாக நிறைவேற்றப்படுகின்றன. ஒரு சிறிய வட்டத்தில் அந்த முயற்சிகள் முடங்கிவிடுகின்றன. பத்திரிகைச் செய்தியாக அவற்றை வாசிப்பதோடு வாசகன் தன்னிறைவு அடைகிறான். அவனுக்கும் படைப்புகளுக்குமான உறவு தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.

என்ன செய்வது? பதிப்பாளர்கள்தானே புத்தகங்களை வெளியிட வேண்டும்? என ஒரு தரப்பினர் கேட்கலாம். அவற்றை வாங்குவதற்கு வாசகர்கள் இருந்தால்தானே பதிப்பகங்கள் முன்வரும் என மற்றொரு தரப்பினர் கூறலாம். இந்த விஷயத்தில் சிஷ்யன் தோன்றினால் குரு தோன்றுவான் என்பது எனது கருத்து. புத்தங்களைத் தேடி வாங்கும் வாசகர்களை உருவாக்கினால் எழுத்தாளர்கள் படைப்புகளை நூலாக்குவார்கள். பதிப்பகங்களின் தேவையும் அதிகரிக்கும்.



உலகம் முழுதும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்துகொள்வதில் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மலேசியத் தமிழ் இலக்கியம் என்றால் ஏதோ ஆழம் இல்லாத இலக்கியம் என்ற அவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்க வேண்டுமானால் தரமான படைப்புகள் இங்கு வெளிவர வேண்டும். இந்த மண்ணில் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களும் வாழ்க்கை அவலங்களும் அடைந்த வெற்றிகளும் ஓரளவு நூல்களாக உருவாகியுள்ளன. ஆனால், உலகத் தமிழர்களின் பார்வைக்கு அவற்றைக் கொண்டுபோகும் முயற்சிக்குப் புத்தகக் கண்காட்சிகளே சிறந்த வழியாக இருக்கும்.

இத்தகைய புத்தகக் கண்காட்சியை இங்குத் தொடங்கும் முயற்சி சவால்மிக்கது. பன்னெடுங்கால இலக்கிய வரலாற்றினை உடைய தமிழகத்திலேயே 37 ஆண்டுகளுக்கு முன்புதான் இது சாத்தியமாயிற்று. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் போன்று இங்கும் ஓர் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். அரசின் ஆதரவோடு கோலாலம்பூரில் முதல் புத்தகக் கண்காட்சியை நடத்தலாம். தொடங்குக, மற்றவை எளிதே என்பதற்கேற்ப முதல் முயற்சி தொடர் முயற்சியாகி, நாடு முழுமையும் வாசகர்களின் வரவேற்பை எதிர்பார்க்கலாம்.




இந்தப் புத்தகக் கண்காட்சியில்,  எழுத்தாளர்களுடன் நேரடிச் சந்திப்பு,  தொடர் சொற்பொழிவுகள், நூல் அறிமுகங்கள், கருத்தாய்வு அமர்வுகள், கலைப் படைப்புகள் எனப் புத்தகத் திருவிழாவைப் பொருள் பொதிந்த நிகழ்வாக உருவாக்கலாம். தமிழகப் புத்தகப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் இந்தக் கண்காட்சியில் பங்குபெற வாய்ப்பினை வழங்கலாம். இதன்வழி மலேசிய வாசகர்கள்,  தமிழகப் புத்தகங்களையும் வாங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். தமிழகத்தில் ஜனவரி மாதம் இக்கண்காட்சி நடத்தப்படுவதால் இங்கு ஜூன் அல்லது டிசம்பர் மாதத்தில், பள்ளி விடுமுறையில் நடத்தலாம். கண்காட்சியில் புத்தகம் வாங்க தமிழகம் நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டு வாசகர்கள் மலேசியாவுக்கும்  வருவார்கள்.

இந்தப் புத்தகக் கண்காட்சியினால் இன்னொரு முக்கியமான நன்மையும் உண்டு. போட்டி நிறைந்த சந்தை உருவாக்கப்பட்டால் தரமிக்க புத்தகங்களை உருவாக்கவேண்டும் என்ற முனைப்பு அனைவருக்கும் ஏற்படும். புத்தகத்தின் உள்ளடகத்திலும் அமைப்பிலும் தரமிக்க புத்தகங்கள் உருவாகும். அணிந்துரை, வாழ்த்துரை, அன்புரை, சிறப்புரை, முன்னுரை, ஆய்வுரை என ஏகப்பட்ட உரைகளால் சிக்கித் திணறும் படைப்புகளைக் காப்பாற்றி உலகத் தரமிக்க படைப்புகளாக மாற்றும் முனைப்புகள் முன்னெடுக்கப்படும். 

புத்தகத்துக்கான சந்தை இல்லாத காரணத்தால் நம் இலக்கிய முயற்சிகள் முழுமைபெறாமல் முடங்கிவிடுகின்றன. இந்நாட்டில் இளையோருக்கான இலக்கியம் இன்னும் வளர்ச்சி பெறாமல் தேங்கியிருக்கிறது. உயர்கல்விவரை பாட நூல்களை மட்டும் படிப்பதோடு வாசிப்பை முடித்துக் கொள்ளும் இளையோரையே தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். வாசிப்பின் ருசி காட்டி புத்தகங்கள் நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த தீவிர முயற்சிகள் தேவை. அதற்கு, புத்தகக் கண்காட்சி போன்ற முயற்சிகள் பெரிதும் துணைசெய்யும்.

மனிதப் படைப்பில் மிக உச்சமானது மொழி. அந்த மொழியில் உருவாகும் புத்தகங்களே மனிதனைச் சிந்திக்கத் தூண்டி அறிவு வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. அதிகமாக வாசிக்கும் இனத்திலிருந்தே கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் தோன்றுகிறார்கள். மலேசியத் தமிழர்களின் தொடர் வளர்ச்சிக்கு புத்தகங்கள் மீதான தீராக் காதலும் முக்கியப் பங்காற்ற முடியும்.