நம் குரல்

Sunday, March 29, 2015

காணாமல் போகும் மாணவர்கள்



பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் படிவத் தமிழ் மாணவன் கண்ணன் காணாமல் போனான்

தமிழ் நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணனுக்கு என்ன ஆனது என அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் எழும். இந்தச் செய்தியால் சமூகத்தில் ஒரு பரபரப்புக் காய்ச்சலே பரவும். இப்படியொரு செய்திக்காகக் காத்திருக்கும் அறிக்கை மன்னர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? கல்வி அமைச்சு விரைந்து செயல்பட்டு கண்ணனைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வேண்டாம்’. இப்படியெல்லாம் அறிக்கைகள் ஏடுகளை அலங்கரிக்கும்.

மேற்குறிப்பிட்ட செய்தி கற்பனைச் செய்தியன்று. ஒவ்வோர் ஆண்டும் கண்ணனைப்போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் காணாமல் போகும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழைத் தேர்வுப் பாடமாகப் பயின்ற மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்ற பிறகு, பி.எம்.ஆர். தேர்விலும் எஸ்.பி.எம். தேர்விலும் தமிழைப் புறக்கணிக்கும் நிலை முப்பது விழுக்காட்டை நெருங்கிவிட்டது.

கீழ்க்காணும் மாதிரி அட்டவணை, யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இடைநிலைப்பள்ளி சென்ற பிறகு படிப்படியாகச் சரிந்து போவதைக் காட்டுகிறது.


தேர்வு
மாணவர் எண்ணிக்கை
காணாமல் போன மாணவர்கள்
விழுக்காடு
யூ.பி.எஸ்.ஆர்.
14 471


பி.எம்.ஆர்.
12 306
2 165
 14.96%
எஸ்.பி.எம்.
10 657
3 814
 26.36%


இது பற்றித் தமிழ்ச்சமூகம் எந்தவிதமான சலனமுமின்றித் தாமுண்டு தமக்கே உரிய மற்ற சிக்கல்களுமுண்டு என அவற்றிலே உழன்றுகொண்டிருக்கிறது. வழங்கப்பட்ட உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டுப் பிறப்புப் பத்திரங்களுக்கும், அடையாள அட்டைகளுக்கும் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி என்றால் உரத்தக் குரல் கொடுப்பவர்களும் இது பற்றிக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள, இந்நாட்டில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி வருகிறது.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் ஏன் காணாமல் போகிறார்கள்? அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது? இவை பற்றி எண்ணிப்பார்த்தேன். எண்ணிப் பார்த்ததை உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழைவிட்டு விலகிப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு.  தமிழ்ப்பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்தும் ஒரு பகுதி மாணவர்கள் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும்  வாசிப்பு, எழுத்து போன்ற அடிப்படைத் திறன்களை அடையாமல் இடைநிலைப்பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளியோடு தமிழுக்கு முழுக்குப் போட்டுவிட்டு இனி தமிழோடு உறவே வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.

பள்ளியில் கால அட்டவணையில் தமிழ் சேர்க்கப்பட்டுச் சொல்லித் தரப்பட்டாலும் தமிழ் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். தமிழில் தங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள். யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் தோல்வி அல்லது குறைந்த தேர்ச்சி பெற்ற அனுபவம் அவர்களைப் பயமுறுத்துகிறது.



இவர்களில் சிலர், படிவம் ஒன்றிலும், படிவம் இரண்டிலும் தமிழ் படிப்பதாகப் பாவனை செய்தாலும் படிவம் மூன்று வந்தவுடன் பி.எம்.ஆர். தேர்வில் தமிழோடு தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள்.  தமிழ் வகுப்பில், தேசிய, சீனப் பள்ளிகளில் படித்த தமிழறியாத மாணவர்கள் தமிழ் படிக்காமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திற்குப் பிந்திய தமிழ் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் தமிழ் வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.  பெரும்பாலும் போக்குவரத்துச் சிக்கலைக் காரணம் காட்டி வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்.

மாணவர்கள் தமிழ் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைக்குப் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். தமிழ்ப்பள்ளியில் பயின்றவரை தம் பிள்ளைகளின் கல்வியில் ஓரளவு அக்கறை செலுத்திவரும் அவர்கள், இடைநிலைப்பள்ளியில் பிள்ளைகள் தொடர்ந்து தமிழைப் படிக்கிறார்களா என்று கவனிக்கத் தவறுகின்றனர். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு முழுக்குப் போடுகிறார்கள். பாடங்கள் கூடிவிட்டன. அவற்றோடு சிரமமாக இருக்கும் தமிழையும் பிள்ளைகள் சுமக்கவேண்டாமேஎன்று பெருமனத்தோடு பெற்றோரே முடிவுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி.எம்.ஆர். தேர்வுக்குப் பிறகு, படிவம் நான்கில் பாடங்கள் கூடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் படிவம் நான்கில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் சரிகிறது.

என் மகனுக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை. எனவே, தமிழ் வகுப்பில் என் மகனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று பெற்றோரே எழுதிய கடிதங்களைப் பெற்ற ஆசிரியர்கள் உண்டு. தமிழில் குறைவான புள்ளிகளைப் பெறுவதால் ஒட்டுமொத்தத் தேர்ச்சியும் வீழ்ச்சியடைவதும் இதற்குக் காரணமாகிறது.

இதனை ஆழ்ந்து நோக்கினால், பெற்றோர் - மாணவர் மனநிலைக்கு இன்னொரு காரணமும் மறைவாக இருப்பதை உணரலாம். தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளியோடு போதும். மருத்துவம், பொறியியல், கணினி, போன்ற உயர்கல்விக்குத் தமிழ் பயன்படாது. எனவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ் வேண்டாம்என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வயிற்றுக்காக எந்த மொழியையும் எந்தப் பாடங்களையும் படிக்கலாம். ஆனால், வாழ்க்கை மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆழமான தமிழ் உணர்வு பெற்றோருக்கும் மாணவருக்கும் இருந்தால்தான் தமிழ் புறக்கணிப்புக் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்குப் பிறகு, தமிழ் ஆசிரியர் இல்லாத, தமிழ் வகுப்புகள் நடைபெறாத இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் நிலையோ இன்னும் மோசமானது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி இருந்தும் தொடர்ந்து தமிழைப் படிக்கமுடியாத நிலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை அங்கு இழந்து வருகிறோம். உணர்வுள்ள பெற்றோர்கள் மட்டும்  விடாப்பிடியாக வெளியில் எங்காவது தமிழ், தமிழ் இலக்கிய கூடுதல் வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.

தாய்மொழி வகுப்புகள் நடைபெற வேண்டுமானால் பள்ளியில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற கல்விச் சட்டமும் சில வேளைகளின் சிக்கலை ஏற்படுத்துகிறது. 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் எவ்வளவு போராடினாலும் தமிழ் வகுப்புகள் தொடங்குவது சிரமம்தான்.

மேற்கூறிய காரணங்களைத் தவிர்த்து, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே தமிழ் மாணவர்கள் எண்ணிக்கைச் சரிவுக்குக் காரணமாவது உண்டு.  தமிழ்மொழியில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தால் தமிழ்மொழித் தேர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால் அவர்களிடம் தேர்வைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறும் நிலை உள்ளது. பி.எம்.ஆர். தேர்வில் விடுபடும் மாணவர்கள் அதன் பிறகு, படிவம் நான்கில் தமிழ் வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பர். பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விழுக்காடு அப்பள்ளியின்  தன்மானப் பிரச்சினையாக மாறிவருவதால் தேர்ச்சிபெற வாய்ப்புள்ள மாணவரை மட்டும் தேர்வுக்கு அனுப்பும் சூழலில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் காணும் என்பது திண்ணம்.



எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளது. பல தரப்பினரின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 20.45 விழுக்காடாக இருப்பது (தேர்வெழுதிய 14 471 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களில்) ஏமாற்றத்தைத் தருகிறது. அறிவியல் துறைசார்ந்த உயர்கல்வியில் முனைப்பு காட்டினாலும் தமிழ் இலக்கியத்தின் பயன் அறிந்து அதைப் படித்துச் சுவைக்க மாணவர்களை ஆற்றுப்படுத்தவேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் ஆகிய இரு தரப்பினருக்கும் உண்டு. கீழ்க்காணும் பட்டியல் தமிழ் இலக்கியத்தின் நிலையைக் காட்டுகிறது.


தேர்வு
மாணவர் எண்ணிக்கை
வேறுபாடு
விழுக்காடு
யூ.பி.எஸ்.ஆர்
14 471


எஸ்.பி.எம்.தமிழ் இலக்கியம்
 2 960
(20.45%)
11 511
79.55%


நம் சமூகத்தின்  இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்தக் கவனமும் தமிழ்ப்பள்ளிகளைச் சுற்றியே வருகிறது.  தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்ற உணர்வு பெற்றோர்களிடையே மேலோங்கி உள்ளது. அதோடு, தங்களின் தமிழ்க்கடமை முடிந்துபோனதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பும் உழைப்பும் இடைநிலைப்பள்ளிகளில் நீர்த்துப்போவதை எப்பொழுது உணரப்போகிறோம்?

தமிழ்க்கல்வி குறித்து நாம் ஆயிரம் ஆராய்ச்சி மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தலாம். ஆனால், யாரை மையமிட்டு அவற்றை நடத்துகிறோமோ அவர்களே காணாமல் போகிறார்கள் என்னும்போது நம் முயற்சிகளால் என்ன பயன் விளையப்போகிறது?

தமிழ் எங்கள் உயிர்என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி நிதி திரட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுமொழியாகத் தமிழை நிலைநிறுத்தினார். இன்றைய சூழலில், ‘இடைநிலைப்பள்ளியில் தமிழைக் காப்போம்என்னும் அறப்போராட்டத்தைச் சமூக இயக்கங்கள் தொடங்கிக் கடுமையாகப் போராடினால் ஒழிய இச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்காது.

தமிழ் மாணவரே! தமிழ் மாணவரே
தமிழைப் படிக்கத் தயங்கு கின்றேரே!
தமிழைத் தமிழ் மாணவர் படிக்காமல்
இமிழ்கடல் உலகில் எவர் படிப்பாரே

நம் கவிஞர் பொன்முடி பாடிய இந்தக் கவிதையை இன்னும் எத்தனை காலத்திற்குப் பாடிக்கொண்டிருப்பது?


Sunday, March 22, 2015

இளையோரை ஈர்க்காத இலக்கியம்


      மலேசியத் தமிழ் இலக்கியம், இன்னமும் முதிர்ந்த படைப்பாளிகளின் ஆடுகளமாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலும் முப்பது வயதைக் கடந்தவர்களே அதிகமான படைப்புகளை வழங்கி வருவதைக் காணலாம். விதிவிலக்காகச் சில இளைய படைப்பாளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகங்காட்டுகிறார்கள். இன்னமும் பழைய படைப்பாளிகளின் எழுத்துகளைத்தான் நம் இலக்கியத்தின் சாதனைகளாக நாம் அடையாளம் காட்டி வருகிறோம். மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, இளஞ்செல்வன், ப.சந்திரகாந்தம், மு.அன்புச்செல்வன், முரசு நெடுமாறன், சீ.முத்துசாமி, அ.ரெங்கசாமி, காரைக்கிழார், கோ.புண்ணியவான் என்று தொடரும் இலக்கிய ஆளுமைகளின் பட்டியலில் அவர்களுக்குப் பின் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதற்கான புதிய இளைய படைப்பாளிகள் உருவாகி வருகிறார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். குறிப்பாக, பதின்ம வயதில் இலக்கியம் நேசிக்கும் இளையோர் எங்கே என்ற கேள்வி என்னுள் எழுகிறது.

      நம் கல்விச் சூழலில் இளைய படைப்பாளிகள் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதுதான் உண்மை. தமிழ்ப்பள்ளியில் ஆறாண்டுக் கல்வியோடு இடைநிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குத் தமிழில் தேர்ச்சி பெறுவதே போராட்டமாக இருக்கிறது. வாரத்திற்கு மூன்று பாடவேளை (1 ½  மணி) மட்டும் தமிழ்ப்பாடம் நடக்கிறது. இந்தக் குறைந்த நேரத்தில் தமிழ் படித்துத் தேர்வுக்குத் தயாராகுகிறார்கள். தமிழ்ப்பாடத்தில் இடம்பெறும் இலக்கியக் கூறுகள் தேர்வை மையப்படுத்தி அமைவதால் அதைத்தாண்டி இலக்கியம் வாசிக்கும் நிலைக்கு அவர்கள் பயணிப்பதில்லை. பள்ளி நூலகத்தில் இலக்கியம் நோக்கி அவர்களை ஈர்க்கும் நூல்களும் அதிகம் இருப்பதில்லை. பள்ளியில் நடைபெறும் கருத்தரங்கம், பயிலரங்கம் யாவும் தேர்வில் விடையளிக்கும் நுணுக்கத்தைக் கற்றுத்தரும் களங்களாகவே அமையும். தமிழ்மொழித் தேர்வில், சிறுகதை, நாடகம் எழுதும் கேள்விகள் இடம்பெற்றாலும் மாணவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகிய இரண்டையும் 11 ஆண்டுகளில் முடித்துவிட்டு தமிழில் தேர்ச்சியோடு வெளிவரும் மாணவர்கள் இலக்கியம் படைப்பது பற்றிய அனுபவமும் ஆர்வமும் இல்லாமல் உயர்கல்விக் கல்விக்கூடங்களை நோக்கி நகர்கிறார்கள்.

      தமிழோடு இலக்கியமும் பயிலும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். இரண்டு பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி (ஏ+) பெறுவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. இதைச் சொல்லித்தான் ஆசிரியர்கள் மாணவர்களை இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யுமாறு ஊக்கமூட்டுகிறார்கள். நாவல், நாடகம், கவிதை ஆகிய இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுவதும் இலக்கியப் படைப்பில் ஈடுபடச் செய்வதாகும். ஆனால், நடப்பதென்ன? இடைநிலைப்பள்ளியில் இலக்கியம் பயின்றதோடு மாணவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.    

      தேர்வுக்கு அதிகமான பாடங்களில் தயாராகவேண்டியிருப்பதால் மாணவர்களின் கவனம் முழுதும் பாடநூல்களில் குவிந்து அவற்றிலேயே கூடுகட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். நாட்டு நடப்பும் சமூக நடப்பும் பற்றிய சிந்தனையும் கவனமும் இன்றித் தனித்து வாழ்கிறார்கள். பள்ளிநேரம் முடிந்து பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். வெளியே டியூஷன் வகுப்புகளுக்கும் போகிறார்கள். வார இறுதியிலும் அத்தகைய வகுப்புகள் தொடர்கின்றன. ஞாயிறு ஏடுகளில் வரும் இலக்கியப் படைப்புகளைச் சுவைக்க நேரமும் மனமும் இருப்பதில்லை. இத்தகைய சூழலில் வளரும் இளையோர் இலக்கியத்தைத் தங்களில் வாழ்வில் ஓர் அங்கமாக நினைப்பதில்லை. எனவே, அவர்கள் படைப்பிலக்கியத்தில் இயற்கையாகவே ஈடுபடுவதில்லை.

      இடைநிலைக்கல்வி முடித்துப் பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிக்கும் போகும் மாணவர்களின் நிலையும் இதேதான். தமிழ்த்துறைகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிலும் காலத்தில் இலக்கியம் மீது காட்டும் ஆர்வம் வியப்பைத் தரும். இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், இலக்கியப் போட்டிகளை நடத்துதல், இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்தல் என இலக்கியம் மீது அளவிறந்த ஈடுபாடு காட்டுவோர் கல்வி முடித்து வெளியேறிய பிறகு  இலக்கிய உலகிலிருந்து முற்றாக விலகிக்கொள்கிறார்கள். இலக்கிய ஈடுபாடு என்பது புள்ளிகள் பெறுதல் என்பதைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. விதிவிலக்காகச் சிலர் மட்டும் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.  மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையால் ஆயிரக்கணக்கான தமிழில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உருவாக முடிந்தது. ஆனால், எத்தனை படைப்பிலக்கியவாதிகளை உருவாக்க முடிந்தது என்பது ஆய்வுக்குரிய சிந்தனையாகும்.

      இளையோர் இலக்கியத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப் போவதற்குத் தகவல் ஊடகங்களும் காரணமாக உள்ளன. எல்லாம் சினிமா, எதிலும் சினிமா என்பதே வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் தாரக மந்திரமாக உள்ளது. அறிவிப்பாளர்கள் வாயைத் திறந்தாலே சினிமாத் தகவல்களாக அள்ளிக் கொட்டுகிறார்கள். எழுத்தாளர் அறிமுகம், நூல் அறிமுகம், இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல் போன்றவை இடம்பெற்றால் இலக்கியம் பற்றி உயர்ந்த மதிப்பை மக்கள் மனங்களில் உருவாக்க முடியும். நடிகர்களைக் கொண்டாடும் ஊடகங்கள் எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துகளையும் கொண்டாடும் மனப்போக்கைக் கொண்டிருப்பதில்லை. எனவே, இளையோர்கள் தாங்கள் காணும் யதார்த்த உலகில் இலக்கியத்திற்கான சமூக மதிப்பு இல்லாத நிலையைப் பார்த்து அதில் ஈடுபாடு காட்டாமல் விலகிக்கொள்கிறார்கள்.



      
மேற்கூறிய அனைத்துத் தடைகளிலிருந்து இளையோரை மடைமாற்றி இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்துவது எப்படி? எழுத்தாளர் அமைப்புகள் மனம் வைத்தால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளையோரை படைப்பிலக்கியத்தில் உருவாக்க முடியும். மலேசிய  எழுத்தாளர் சங்கம் இளையோரை மையமிட்ட பட்டறைகளை, கருத்தரங்குகளை (சிறுகதை, கவிதை) நடத்தி வந்துள்ளது. இளையோருக்கான இலக்கிய விருதுகளை ஏற்படுத்தி வழங்கியுள்ளது. ஆனால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஆனந்த விகடனின் மாணவர்ப் பத்திரிகையாளர் திட்டம் போல்  இளையோர் எழுத்தாளர் திட்டத்தை இங்குச் செயல்படுத்தினால் எழுதும் ஆர்வமுள்ளோரை அடையாளம் கண்டு தொடர் முயற்சியால் அவர்களைத் தீவிர இலக்கியம் நோக்கி வழிநடத்தலாம். அவர்களின் படைப்புகளை நூலாக்குவதன் மூலம் எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடலாம்.

      அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படும் மலாய் மொழி வளர்ச்சி நிறுவனமான டேவான் பஹாசா டான் புஸ்தாகா நீண்ட காலமாக, இளையோரை மையமிட்ட பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களின் எழுத்தாற்றலைப் பட்டைதீட்டி வருகிறது. அவர்களின் படைப்புகளை நூலாக்கி வருகிறது. இதன் விளைச்சலாக இன்று சந்தையிலே குவிந்து கிடக்கும் எண்ணற்ற மலாய் நாவல்களைக் குறிப்பிடலாம். உயர்கல்விக்கூடங்களில் பயின்ற மலாய் இளையோர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவல்களை எழுதி வெளியிடுகிறார்கள். நமக்கு அத்தகைய மொழி வளர்ச்சி மையம் உருவாக வேண்டும். அதன்வழி பல்வேறு இலக்கியப் பணிகளை அரசின் உதவியோடு மேற்கொள்ளலாம். இளையோரை இலக்கியம் நோக்கி ஈர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

      இடைநிலைப்பள்ளியில் ஒன்றாம் படிவம் முதல் ஐந்தாம் படிவம்வரை மலாய், ஆங்கிலப் பாடங்களுக்கு நாவல், நாடகம், கவிதை நூல்கள் இணைநூல்களாக உள்ளன. இலக்கியத்தின் பல்வேறு வடிவங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழ், சீன மொழிப்பாடங்களுக்கு அத்தகைய இணைநூல்கள் இல்லை. தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளிவரை வாசிப்பு நூல்கள் இணைக்கப்பட்டால் வாசிப்பின் சுவையை மாணவர்கள் உணரும் சூழல் உருவாகும். அவை பல்வேறு இலக்கிய வடிவங்களிலான நூல்களாக அமைந்தால் நிறைந்த பயனைத் தரும்.


      
இளைய படைப்பாளிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. உலகின் பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தாங்கள் இலக்கியத்தில் ஈடுபட தங்களின் ஆசிரியர்கள் வகுப்பறையில் வாசிப்பின் சுவைகாட்டி தங்களை ஈர்த்த கதையைப் பகிர்ந்துள்ளார்கள். ஆசிரியர்கள் இலக்கியத்தின் சுவைஞர்களாக மாறினால், அல்லது படைப்பிலக்கியவாதிகளாக இருந்தால் தம் மாணவர்களையும் இலக்கியம் நேசிக்கும் மனம் கொண்டவர்களாக மாற்ற முடியும். அதுவே, எழுதும்  ஈடுபாட்டை உருவாக்கும். தேர்வுக்காக மட்டும் மாணவரை உருவாக்கும் பட்டறையாக வகுப்பறையை எண்ணாமல் மனித மனங்களை மேம்படுத்தும் இலக்கியம் எனும் விருந்தைப் பரிமாறும் இடமாக மாற்ற வேண்டும்.

இளையோரை மையமிட்ட இலக்கியப் போட்டிகளை நடத்துவதும் இளையோரை இலக்கியம் நோக்கி ஆற்றுப்படுத்தும் அரிய முயற்சியாகும். மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையும் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கமும் ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகளில் மாணவர்க்கான பிரிவையும் ஏற்படுத்தி அவர்களை எழுதத் தூண்டி வருகின்றன. இத்தகைய போட்டிகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப்பட வேண்டும். போட்டிகளுக்கு எழுதத் தொடங்கிய பலர் பின்னாளில் எழுத்துலகில் தீவிரமாகச் செயல்பட்ட கதைகள் உண்டு.

இளையோர் வாசிப்பதற்கான இலக்கியப் படைப்புகள் மலேசியாவில்  குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கான இலக்கியப் படைப்புகளை இளையோரிடம் நீட்டி அவற்றின் சுவையறிந்து, புரிந்து இலக்கியப் படைப்பு நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகாது. இளையோர் எதிர்நோக்கும் சிக்கல்களும் வாழ்க்கை அனுபவங்களும் கொண்ட படைப்புகள் அவர்களுக்குப் பரிமாறப்படவேண்டும். அவையே, இலக்கியத்தைப் புரிந்துகொண்டு அனுபவிக்க அவர்களுக்கு உதவும். மலாய் மொழியில்  எண்ணற்ற இளையோர் இலக்கிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. 2013ஆம் ஆண்டில், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு இணைந்து, சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டியை நடத்தி 20 கதைகளை நூலாக்கியது. பாராட்டுக்குரிய இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.


      
ஒரு நாளில், பல மணி நேரம் சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவளிக்க இளையோர் தயாராக இருக்கிறார்கள். தங்களுக்குச் சம்பளம் தரும் நிறுவனங்களைவிட இந்தச் சமூக வலைத்தளங்களுக்கு பல மணி நேர உழைப்பைக் கொட்டுகிறார்கள். எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உற்றறிந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். நூறு பக்க நாவலை வாசிப்பதுகூட மலைப்பைத் தருகிறது. ஏடுகளைப் புரட்டித் தகவலை அறியும் ஆர்வம் குன்றி வருகிறது. முகநூலில் ஒரு லைக் போடுவதையே எழுத்துப் பணியாக நினைக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து, தமக்கு வந்ததை மற்றவருக்கு அனுப்பி வைப்பதையே எழுத்துச் செயல்பாடாக எண்ணிச் செயல்படுகிறார்கள்.

ஒவ்வொன்றையும் இலாப நோக்கோடு சிந்திக்கும் வணிகச் சூழலில் சமுதாயமும் நாடும் சிக்கியுள்ளன. பொருளாதார நோக்கில் இது பயன் தருமா என இலக்கியத்தையும் தங்களில் வணிகத் தராசில் நிறுத்துப் பார்க்கிறார்கள். பயன் தராத ஒன்றுக்கு மெனக்கெட பெற்றோர்களும் பிள்ளைகளும் தயாராக இல்லை. இலக்கியத்தின் சிறப்பை உணர்ந்தவர்கள் அதனை உதாசினப்படுத்துவதில்லை. மொழியின் சுவையைக் காட்டியதும், இனத்தின் வரலாற்றைப் பதிவு செய்ததும், மொழியின் செழுமையைப் போற்றிக் காத்ததும், மனங்களைப் பண்படுத்தியதும், தன்னம்பிக்கை ஊட்டி வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமை தந்ததும் இலக்கியமே என்பதறிந்தால் இலக்கியம் சுவைக்காத இளையோரை எண்ணிப்பார்ப்பது மிகுந்த வேதனையைத் தரும்.

Wednesday, March 18, 2015

தூங்கியவனை எழுப்பாதீர்கள்


தூங்கியவனை எழுப்பாதீர்கள் என்று சொன்னேன்
யார் காதிலும் விழவில்லை
அதோ அரைத்தூக்கத்தில் கண்களைக் கசக்கியவாறு
ஏதேதோ பேசுகிறான்

தூக்கத்திலேயே உளறுபவன்
இப்பொழுது கண்களைத் திறந்தவாறு செய்கிறான்

நீங்கள் காதுகளைக் கூர்மையாக்கிக்
அவன் பேச்சைக் கேட்டுப் பார்க்கிறீர்கள்
என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறோமா
என்று அவனுக்கே சந்தேகம்

அவன் சொற்களின்மீது கவனமில்லாதவன்
சொற்கள் மந்திரமாகும் மாயம் அறியாதவன்
சொற்களுள் சூல்கொள்ளும் சூட்சமம் புரியாதவன்
சொற்களுக்குள் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கியவன்
சொற்களில் இடறிவிழுந்து சிரிப்பைச் சம்பாதித்தவன்

அவன் உரைகளை அகழ்வாராய்ச்சி செய்யாதீர்கள்
யார்யாரோ எழுதித் தந்ததை வாசித்துக்காட்டுகிறான்
சொந்த வசனத்துக்கு அவனால் மெனக்கெட முடியாது

ஏதோ மந்திரங்களை உச்சரிக்கிறான் என்று
அவனுடன் இருப்போர்
காற்றில் வதந்தி பரப்புகிறார்கள்
அவை பயத்தின் உளறல் என்பது
அவனுக்கே வெளிச்சம்

சற்று முன் அவன் ஆவேசமாய்ப்
பொங்கியதைக் கண்டு பூரிக்காதீர்கள்
அவனை நெருங்கி இருப்பவருக்குத்தான்
தெளிவாகப் புரியும்
அவனின் ஞாபக மறதி வியாதி

தனக்கு ஆயிரம் கனவு இருப்பதாக
ஒலிபெருக்கியில் அறிவிக்கிறான்
அவை தூக்கத்தில் முகிழ்க்கும் கனவென்பது
அவன் அடிமனமும் அறியும்

அவன் கொட்டாவிவிட
வாயை அகலத் திறந்தால்
சிங்கம் கர்ஜிக்கிறது என
திரைக்கதை, வசனம் எழுதிக்கொள்கிறார்கள்

அவன் மீண்டும் தூங்கப் போகிறான்
அது அவனுக்கே தெரியும்
மாலைகளை அவன் தோளில் ஏற்றி
நீங்கள் வேறு போதையூட்ட வேண்டுமா?

அவன் தூங்கிய பிறகு
நீங்கள் துடித்தெழுந்து அழப்போகிறீர்கள்
பார்த்து ரசிக்க
நான் காத்திருக்கிறேன்

Monday, March 16, 2015

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்: தொடரும் இடர்கள்



     பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் என்ற பரப்புரையின் விளைவாகத் தமிழ்ப்பள்ளிகளில் இந்த ஆண்டு ஒன்றாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழ்க்கல்வி மீது அக்கறையுள்ள அனைவருக்கும் மகிழ்வைத் தரும் செய்தி இது. ஆனால், இதே மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் கல்வி முடித்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும்போது அவர்களில் ஒரு பகுதியினர் தமிழோடு தங்கள் தொடர்பைத் துண்டித்துக்கொள்கின்றனர். ஒன்றாம் ஆண்டில் பயிலும் சுமார் 16 000 மாணவர்களில் 12 000 மாணவர்கள்தாம் பின்னர் எஸ்.பி.எம், தேர்வில் தமிழ்ப் பாடத்திற்கு அமர்கின்றனர். இந்நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. இது பற்றித் தனி ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். தமிழ் இலக்கியத் தேர்வுக்கு அமர்வோரின் எண்ணிக்கை இன்னும் வேதனைக்குரியது. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 3000க்கும் குறைவான மாணவர்கள்தாம் இலக்கியப்  பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.

      அண்மையில், எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 11ஏ+ பெற்று தேசிய அளவில்  மிகச் சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்த பல மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் தேர்வு செய்தவர்கள். காஜாங் சந்தியா, காஜாங் பவித்ரா, சிரம்பான் அஸ்வினி, பினாங்கு ஸ்ரீதரன் போன்ற மாணவர்களின் சிறந்த தேர்ச்சி மற்ற மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. மலாய் இலக்கியப் பாடம், கலைத்துறையில் பயிலும் மலாய் மாணவர்களுக்கு உரிய பாடமாக இருக்கும் நிலையில், தமிழ் இலக்கியமோ அறிவியல் துறையில் பயிலும் நம் மாணவர்களின் தேர்வாக அமைந்துள்ளது. எனவே, அறிவியல், கணிதப் பாடங்களில் திறம்மிகுந்த மாணவர்கள் மொழி, இலக்கியப் பாடங்களில் எளிதாகச் சாதிக்கிறார்கள்.

      ஆயினும், இலக்கியம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 3000ஐக்கூட எட்டாத நிலை வருத்தமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், 10 பாடங்கள் மட்டும்தாம் தேர்வுக்கு எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது 12 பாடங்கள் என்று நிலைநிறுத்தப்பட்டது. தமிழும் தமிழ் இலக்கியமும் எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிந்திய உயர்கல்விக்குக் கணக்கில் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்பினார்கள். இன்றோ, அந்தச் சந்தேகமும் அகன்று, எந்தப் பாடமாக இருந்தாலும் சிறந்த தேர்ச்சியே முக்கியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும், தமிழ் இலக்கியத்தைப் பயில மாணவர்கள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

      இந்நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. ஆனால், பல மாணவர்கள் தமிழ்மொழியே போதும் என ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்த நிலைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சில

பள்ளிகளைத் தவிர்த்து, பெரும்பாலும் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியப் பாடம் கற்பிக்கப்படுவதில்லை. மாணவர்கள் படிக்க ஆசைப்பட்டாலும் பள்ளியில் அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையென்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? எனவே, தமிழே போதும் என மனநிறைவு கொள்கின்றனர். சில பள்ளிகளில், தமிழ் இலக்கியப் பாடத்தால் பள்ளியின் தேர்ச்சி விகிதம் சரிவைக் காண நேரும் என்ற அச்சத்தால் இந்தப் பாடத்திற்குக் கதவடைப்பு செய்யும் நிலையும் உண்டு.


     
மேலும், பள்ளிப்பாடங்களுக்கே நேரம் சரியாக இருக்கிறது. இதனால், அட்டவணையில் தமிழும் இலக்கியமும் இடம்பெற முடிவதில்லை. பள்ளி நேரத்திற்குப் பின்புதான் தமிழ் வகுப்பும் இலக்கிய வகுப்பும் நடக்கின்றன. அவற்றில் அக்கறையோடு கலந்துகொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதில் வியப்பில்லை. தமிழ்ப்பாட வேளையில் இலக்கியத்தையும் கற்பிப்பது ஆசிரியர்களுக்குச் சிரமமான பணியாகும். அந்தப் பணிச்சுமையையும் தங்கள் இலக்கியக் கடமையாய் ஏற்றுக்கொண்டு தமிழ் உணர்வுமிக்க பல ஆசிரியர்கள் இலக்கியம் கற்பித்து வருகின்றனர் நாடு முழுதும் இலைமறைகாயாய் செயல்படும் இத்தகைய ஆசிரியர்களால்தான் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் இன்னும் உயிர்வாழ்ந்து வருகிறது.

      இலக்கியம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலைமையும் உண்டு. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் சுய முயற்சியில் பள்ளிக்கு வெளியே ஆசிரியரைத் தேடிப் பயில்கின்றனர். அவர்களின் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் பெற்றோர்கள் துணை நிற்கின்றனர்.  தமிழாசிரியர்கள், சமூக இயக்கங்கள் இலக்கியப் பாடம் தொடர்ந்து நிலைத்திருக்கத் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.


      தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை 1990களில் மிகவும் குறைந்து, இந்தப் பாடம் தேர்வுப்பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது, மலேசியத் தேர்வு வாரியத்தின் தமிழ்மொழிப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றிய  பி.எம்.மூர்த்தி, தமிழ் உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒருங்கிணைத்து எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நடவடிக்கைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளில் இறங்கினார். பரப்புரையாலும் ஊடகங்களின் ஒத்துழைப்பாலும் தமிழ் இலக்கிய மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. இந்த அமைப்பே பின்னர், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்) என்று பதிவுபெற்ற இயக்கமாக மாறியது.

      இலக்கிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி, கருத்தரங்கம், வழிகாட்டி நூல்கள் வெளியிடுதல், மாணவர்களுக்குத் தேர்வுக் கருத்தரங்கம், அரசின் நிதி உதவி பெற்று மாணவர்களுக்கு இலக்கிய பாடநூல்களை இரவல் முறையில் வழங்குவது எனத் திட்டமிட்ட பல நடவடிக்கைகளை இலக்கியகம் மேற்கொண்டு வருகிறது.


      இலக்கியப் பாடம் நோக்கி மாணவரை எப்படி ஈர்ப்பது என்று பலரும் சிந்திக்கும் வேளையில், அண்மையில் தேர்வு வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை இலக்கிய ஆசிரியர்கள் எதிர்பாராத ஒன்றாகும். பள்ளி தவணை தொடங்கி, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இவ்வாண்டு நான்காம் படிவ மாணவர்கள் புதிய பாடநூல்களைப் பயில வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த அறிவிப்பு வந்திருந்தால் பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் அதனை ஏற்றுத் தங்களைத் தயார்ப்படுத்தியிருப்பார்கள். மாற்றம் உள்ளதா இல்லையா என அறிந்துகொள்ளத் தவித்த ஆசிரியர்கள், ஒரு பதிலும் கிடைக்காத சூழலில் நடப்பிலுள்ள இலக்கிய நூல்களையும் வழிகாட்டி நூல்களையும் வாங்கித்தந்து இலக்கிய வகுப்புகளைத் தொடங்கிவிட்ட பிறகு புதிய மாற்றம் என்ற செய்தி சொல்லிமாளா இடர்களைத் தந்துள்ளது. முதல் தேர்வுக்குப் பெரும்பாலான பள்ளிகள் தயார் நிலையில் இருக்கும் சூழலில் இதோ புதிய நூல்கள், படியுங்கள் என்று புதிய பட்டியலை நீட்டினால் எப்படி? இனிமேல்தான் புதிய பாட நூல்களைத் தேடி வாங்கி வகுப்பை நடத்த வேண்டும். களத்திலே நின்று போராடும் ஆசிரியர்களின் சிரமத்தை பலரும் உணர்வதில்லை.

      புதிய இலக்கிய நூல்களாக, கு.அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி நாடகமும் டாக்டர் மு.வரதராசனின் அகல் விளக்கு நாவலும் தேர்வாகியுள்ளன. இவை இரண்டுமே சிறந்த படைப்புகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மண்ணின் மணம் கமழும் மலேசியப் படைப்புகள் தேர்வுக்கான பாட நூல்களாக வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு, 2013 – 2015 தவணைக்கான பாட நூலாக ஐ.இளவழகின் இலட்சியப் பயணம் தேர்வானது. இனி,  ஐந்து ஆண்டுகளுக்கு மலேசிய நாவலுக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


      
இந்தோனேசிய நாவல்களை நம்பியிருந்த இந்நாட்டு மலாய் இலக்கிய  உலகம், என்றோ அதிலிருந்து மீண்டு, உள்நாட்டு நூல்களையே பாட நூல்களாக ஏற்றுக்கொண்டுள்ளது. எஸ்.டிபி.எம். தேர்வுக்கு ரெ.கார்த்திகேசுவின் அந்திம காலம் நாவல் ஏற்றுக்கொள்ளப்படும்போது எஸ்.பி.எம் தேர்வுக்கு அத்தகைய  வாய்ப்பினை வழங்கினால் என்ன? மலேசியத் தமிழ் இலக்கியம் 140 ஆண்டுகால வரலாற்றைக்கொண்டது என்று பெருமை பேசுகிறோம். உண்மையில் நம் இலக்கியத்தில் இளையோருக்கு ஒன்றும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. 

      புதிய பாடத் திட்டத்தில் கவிதைப் பிரிவில், 12 மரபுக் கவிதைகள் தேர்வாகியுள்ளன. ஆனால், நிகழ்கால கவிதை மொழி என்பது மரபுக்கவிதை மட்டுமல்ல. அதோடு, புதுக்கவிதை, நவீன கவிதை எனப் புதிய பரிணாமம் நோக்கி கவிதைமொழி நகர்ந்துகொண்டிருக்கிறது. இளைய நெஞ்சங்களை இலக்கியம் நோக்கி ஈர்க்க, மரபோடு புதியனவற்றையும் இணைத்து வழங்கவேண்டும். கவிதைத்துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் மூடிமறைத்துவிட்டு ஒரு பகுதியை மட்டும் காட்டி, இதுதான் கவிதையின் முகம் என்று சொல்லி மாணவ இதயங்களை நம்பவைக்க வேண்டுமா? படிவம் ஒன்று முதல் ஐந்துவரை மலாய் இலக்கிய நூல்களில் மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் வாசிக்கும் மாணவர்கள், தமிழ் இலக்கியப் பாடத்தில் ஏன் இல்லை எனக் கேள்வி எழுப்புகிறார்கள். சிங்கப்பூரில் ஏ லெவல் தமிழ்ப்பாடத் திட்டத்தில் மரபுக்கவிதைகளும் புதுக்கவிதைகளும் ஐக்கூ கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மலேசியப் படைப்புகளும் உள்ளன. நம் படைப்புகளுக்கான அங்கீகாரம் அக்கரையில்தான் கிடைக்கும் போலிருக்கிறது. இக்கரையில் என்றும் இல்லை என்பதுதான் இன்றுவரை பதிலாக உள்ளது.



      

இப்படிப் பல்வேறு இடர்களுக்கு இடையே, ஆசிரியர்களும், இயக்கங்களும் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தை நிலைநிறுத்த தொடர்ந்து போராடி வருகின்றனர். அண்மையில், தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் செந்தூல் தமிழ்ப்பள்ளியில் இலவச இலக்கிய வகுப்பினைத் தொடங்கியுள்ளது. மாணவர்களுக்கு இலக்கிய நூல்களையும் இலவசமாக வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வகுப்புகளை நடத்தவும் இவ்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் வே.விவேகானந்தன் அறிவித்துள்ளார். இதுபோன்ற முயற்சிகள்தாம் தொடர்ந்து இந்தப் பாடத்தை நிலைபெறச் செய்யும் அரிய பணியாகும்.

தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பிய பல பெற்றோர்களிடம் “உங்கள் பிள்ளைகள் இலக்கியப் பாடம் பயிலவில்லையா?” என்று கேட்டால், “இலக்கியப் பாடம் அவசியமா?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கவிதையே பதிலாக அமைகிறது:

            இலக்கியம் பயின்றால் இளகிடும் உள்ளம்
            இளமையின் துடிப்பிலும் இதம்குடி கொள்ளும்
            கலக்கிடும் வன்முறைக் காயங்கள் மாறிக்
            காய்மனம் கனிவுறும்! காயங்கள் ஆறும்!
     
            நல்லது அல்லதும் தெள்ளெனத் தோன்றும்
            நலிந்தவர் நெஞ்சிலும் நம்பிக்கை ஊன்றும்
            சொல்லிலும் செயலிலும் சுடர்திறம் பாய்ந்து
            செல்லிடம் யாவிலும் சிறப்புகள் ஒங்கும்!
-    சீனி நைனா முகம்மது
  

Thursday, March 12, 2015

இறப்பு வீடுகளில்


இறப்பு வீடுகளில் மயான அமைதி
பாலைவெளியில் தனித்து ஒதுங்கிய பறவையாய்
தானாக வந்தமர்கிறது

சொற்களைக் குறைவாய்ப் பேசியவாறு
நினைவலைகளை மீட்டியவாறு உரக்கப் பேசுகிறது
ஒவ்வொரு மனமும்

உடைந்து மறையும் நீர்க்குமிழியாய்
கத்தல்களும் கதறல்களும் அவ்வப்போது
பொங்கியெழுந்து கரைகின்றன

வெட்டவெளியில் விழித்திருக்கும் நிலா ஒளியாய்
உறங்கிப்போனவரருகே
ஒளி சிந்திக்கொண்டிருக்கும் விளக்கு


சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள்
சிலர் அழுது ஓய்ந்துவிட்டார்கள்
சிலர் அழுபவர்களைப் பார்த்து
அழுவதெப்படி எனத் திகைத்து யோசிக்கிறார்கள்

இறப்பு வீட்டுக்குரிய ஏதோ மணம்
காற்றில் கலந்து
நாசிகளில் வந்து சேர்கிறது

சிறார்கள் விளையாட வாய்ப்பிருக்குமா
எனக் காத்திருக்கிறார்கள்

நன்கொடை திரட்டும் புத்தகத்தின் பக்கங்கள்
காற்றில் படபடக்கின்றன

பசித்த வயிறுகளை எதிர்பார்த்து
உணவு வகைகள் ஒரு மூலையில்

புதிதாய் வாங்கிய சீட்டுக்கட்டுகளை
ஒரு கூட்டம் கலைத்துப் போடுகிறது
பெரிய எண்ணுக்கும் சிறிய எண்ணுக்கும்
பந்தயம் கட்டுகிறது

நச்சரவமாய் மனங்களில் நுழைந்து
அவர்களை வளைக்கத் தொடங்குகிறது
தீர்ந்து போகாத ஆசை

ஐந்தில் தொடங்கி ஐயாயிரம் வெள்ளிவரை
விடிய விடிய வேட்டை தொடர்கிறது
போதையில் நனைந்த குரல்கள்
கொச்சை வார்த்தைகளில் கைகலக்கின்றன

சீட்டுக்கட்டுகளோடு காணாமல் போகும் கூட்டம்
ஆவலாய்க் காத்திருக்கிறது
அடுத்த இறப்புச் செய்தியை எதிர்பார்த்து