நம் குரல்

Thursday, February 24, 2011

எனக்குள் யார் யாரோ


மௌனம் போர்த்திய வாசிப்பு அறையின்
புத்தக அடுக்குகளில்
ஆண்டாண்டு காலமாய்
அவர்கள்
பொறுமையாய்க் காத்திருக்கிறார்கள்

உள்நுழையும் காலடி ஓசைக்காக
ஏக்கங்களைச் சுமந்தபடி
அவர்களின் காத்திருப்பு நீளுகிறது

முகம் தெரியாத அவர்களின் குரல்
மௌன அலைவரிசையில்
அறையெங்கும் உரத்து ஒலிக்கிறது

உள்நுழைந்து ஆசையாய்
புத்தகப் பக்கங்களைப் புரட்டுகையில்
கண்விழித்து கனிவாய்
என்னை நெருங்குகிறார்கள்

அவர்களைக் கைகுலுக்கி வரவேற்கிறேன்
என்னுள் நுழையும் அவர்களுக்கு
என் இதயத்தைத் திறந்து வைக்கிறேன்

கையோடு கொண்டு வந்த எதைஎதையோ
எனக்குள் பரிமாறுகிறார்கள்

அவர்களைப் பிரிந்த பிறகும்
அவர்களோடு கழிந்த நாட்கள்
இன்னும் தேங்கிக் கிடக்கின்றன
என்னுள்ளே சில கனவுகளாய்..
கவிதைகளாய்..
கரைந்துபோகாத சித்திரங்களாய்..

போனதாக நினைத்தவர்களின் குரல்
மனவெளிகளில் நீக்கமற
கேட்டுக்கொண்டே இருக்கிறது

உங்களிடம் பேசிக்கொண்டே
உங்களுக்குக் கேட்காமல்
அவர்களிடமும் பேசுகிறேன்

என்னைக் கொன்றுவிட்டு
என்னையே முகமூடியாய் அணிந்துகொள்ள
அவர்கள் முயலும்போதெல்லாம் தடுக்கிறேன்

அவர்களை அடையாளம் காட்டச் சொல்கிறீர்கள்
மறுக்கிறேன்
ஒன்றுக்குள் ஒன்றாக
அவர்களின் முகங்கள் கலந்து
புதிய முகங்கள் உருவாகின்றன

யார் யாரோ பட்டியலில்
நீங்களும் இருக்கலாம்
நீங்கள் அறியாமலே!


Monday, February 21, 2011

காற்று வெளியில் நிறைந்து..

பழைய நினைவைச் சுமந்தபடி
ஊருக்குத் திரும்பிய நாளில்
காத்திருந்து வரவேற்ற
துக்கச் செய்தியாய்
எங்களை அதிர வைத்தாய்

புல்லாங்குழலில் நுழைந்து
விடைபெற்ற காற்றாய்
நீ புறப்பட்டுப் போயிருந்தாய்
தடயங்கள் இல்லையெனினும்
எங்கும் நீயே நிறைகிறாய்

காற்று வெளியில் சிதறும்
உன் கானமழையின் துளிகளை
ஆசை ஆசையாய் மீண்டும்
மனக் கைகளில் ஏந்துகிறோம்
அவை உயிர்வரை ஊடுருவி
முழுமையாய் நனைக்கின்றன

உன்னுடையது அதிசய வானம்
எவ்வளவு அழுது தீர்த்தாலும்
இந்த மழையின் தீவிரம் தீராது
நனைந்த மனசுகளில் படரும்
ஈரம் என்றும் காயாது

எங்கள் வாலிபப் பொழுதுகளின்
இனிய வசந்தங்களில்
உன் வருகைக்கான
தடயங்களைச் சேகரிக்கிறோம்

பல இதயங்களின்
இனிய சந்திப்புக்கு நீயே
சாட்சியாயிருக்கிறாய்

வாயசைத்த உதடுகளில் பின்னால்
நீ மறைந்திருந்து தோன்றினாய்
உயிர் மீட்டும் குரலாய்
இதய அறைகளில் தேங்கினாய்

கிராமத்து வயல் வரப்புகளில்
ஓடித் திரியும் காற்றாய்
மனவெளிகளில் உலவினாய்

மலைகளின் பாறைகளில் ஏறி
பெயர் எழுதிவைக்கும்
சிறுவர்களின் ஆசை உனக்கிருந்ததா?
அறியோம்!

இதோ இசையை மோகிக்கும்
மனமெங்கும் உன் அழியாத பெயர்
அழகிய கல்வெட்டுகளாய்..

இதோ
காற்றுவெளியில் கசியும்
கானமழைக்குக் காது கொடுக்கிறோம்
நீ இன்னமும் நிறைகிறாய்...

(மலேசிய வாசுதேவன் நினைவாக)



Saturday, February 19, 2011

உச்சத்தை அடைந்தவன்


கேமராக்கள் கண்விழித்து
தலைநிமிர்ந்து உற்றுப் பார்த்தன
ஒலிபெருக்கிகள் உயிர்பெற்று
முன்நகர்ந்து நெருங்கின
எழுதுகோல்கள் தலைகுனிந்து
சின்னக் குறிப்பேடுகளோடு
இணைசேர்ந்தன

புன்னகை அணிந்த இதழ்கள்
நிமிர்ந்த மேனி
கனிவான பார்வை
கலையாத கேசம்
கம்பீர நடை
காற்றை விசாரிக்கும் கைகள்

உற்சாகத்தில் நனைந்து
உச்சத்தை அடைந்தவன் வந்தபோது
கண்கள் மொய்த்தன
கடந்துபோகும் கணங்கள் கனமாயின
பரபரப்பாய்க் கால்கள் நெருங்கின

வாயிதழ்கள் அசைந்து
சொற்கள் உயிர்ப்பிக்க
கேள்விகளுக்கு அழகழகாய்ப்
பதிலளிக்கத் தொடங்கினான்

இடையிடையே
வெற்றியின் தருணங்களை
எதிர்நோக்கும் சவால்களை
எதிர்காலத் திட்டங்களை
மனத்தில் ஆசைகளை
ஒவ்வொன்றாக விவரிக்கத் தொடங்கினான்

செய்திகளுக்கான தகவல் சேர்ந்தவுடன்
எல்லாமும் விடைபெறத் தொடங்கிய பொழுதில்
நான் நெருங்கினேன்

யாரிடமும் காட்டாமல் மறைத்துவிட்ட
அவனின் ஆறாத காயங்களை
மறையாத தழும்புகளை
காயாத கண்ணீர்ச் சுவடுகளை
பொல்லாத இடறிய நொடிகளை
சொல்லாத சோகங்களை
நான் சேகரித்துக்கொண்டு வந்தேன்


Monday, February 14, 2011

காதல் படிக்கட்டுகள்

1
நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
நீ வந்து கொண்டிருக்கிறாய்

பயணத்தின்
எந்தப் புள்ளியிலும்
இனி நாம் சந்திக்கமுடியாது

2
துயரங்களை இறக்கிவைக்க
எழுதிவைத்த வரிகளில்
கசிகின்றன

ஊரின் வாயிக்கு அவலாய்
நம் ரகசியங்கள்

3
சினிமாவைக் கொண்டாடும் ரசிகன்
இயக்குநரின் சிரமம் அறிவானா?

நம் காதல் வரிகளில்
மூழ்கியெழும் வாசகனுக்கு
நம் அவஸ்தைகளில்
ஆழம் அறிதல் சாத்தியமா?

4
கவனமாகப் பாதம் பதித்து
ஏறிப்போன படிக்கட்டுகள்

எப்படிக் கால் இடறியதோ
இப்பொழுது திரும்புகிறேன்
புரண்டுகொண்டே
புறப்பட்ட இடத்திற்கு..

5
மனமெங்கும்
ஆறாத காயங்கள்

ஆவலோடு எதிர்பார்த்த
உன் வாயிலிருந்து
கசிந்த வார்த்தைகளால்

6
எல்லாம் உதிர்த்துவிட்டு
இலையுதிர்கால மரமாக
நிற்கிறேன்

வசந்தத்தால் வாழ்த்தாமல்
என் ஆணிவேரையே
அசைத்துப் பார்க்கிறாய்

7
நான் கேட்க நினைத்த
இராகங்களெல்லாம்
காதுக்கு வரவில்லை

உன்னால் எனக்கு
அறிமுகமானதோ முகாரி

8
கை நிறையக் கனவுகளோடு
இதய வாசலுக்கு வந்து

இன்று
பை நிறைய கற்களை
நிறைத்துக்கொண்டு நிற்கும்
கோபக்காரச் சிறுவனாய் நான்

9
காலம் கடந்துபோக
நீ இன்னமும் யோசிக்கிறாய்

நான் தேடுதலை முடித்துக்கொண்டு
புறப்படுகிறேன்
திரும்ப முடியாத பாதையில்

10
நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்
நீ வந்து கொண்டிருக்கிறாய்

ஏதாவது ஒரு புள்ளியில்
நம் சந்திப்பு நிகழலாம்
நிகழாமலும் போகலாம்

Sunday, February 13, 2011

காதலதிகாரம்

1
மழை நின்ற பின்பும்
ஓயாமல் சொட்டும் துளிகளைக்
கைகளில் ஏந்தினேன்
உடலில் ஊடுருவும் குளிர்ச்சியில்
நீ வந்து போகிறாய்..

2
நிலவு அங்கேதான் இருக்கிறது
அதன் அழகை ஆராதிக்கும் மனம்தான்
மாறிக்கொண்டிருக்கிறது
அது கூடுதல் அழகோடு பொலிகிறது
நீ அருகில் இருக்கும்போது..

3
கடன் கொடுத்தவன் நான்
உன் இதய வாசலுக்கு வந்து
திருப்பிக் கேட்கிறேன்

கடன் பெற்றவள் நீ
வெறுப்புகளைச் சில்லறையாய்
என் இதயப் பாத்திரத்தில் விட்டெறிகிறாய்

4
நினைவைவிட கனவையே யாசிக்கிறேன்
அங்குதான்
புன்னகை அணிந்த உன் வாயிதழிலிருந்து
அன்பு மொழிகள் உதிர்கின்றன

5
இருள் படிந்த
இதய அறைகளின் சுவர்களில்
உன் படங்களை மாட்டி வைத்த பின்புதான்
அது ஒளி மழையில் நனைந்து
ஒளிரத் தொடங்கியது

6
இலக்கில்லாமல் பயணம்போன
கால்கள் தயங்கித் தயங்கி நிற்கின்றன
துணைக்கு உன் காலடி ஒலிக்காக
காத்திருக்கின்றன

7
பறப்பதற்குச் சிறகிருந்தும்
கூண்டில் அடைபட்டுக் கிடக்கும்
கிளிக்காக இதயம் கசிந்தாலும்

உன் மனச்சிறையில் வந்து
மாட்டிக்கொள்ளவே மன்றாடுகிறேன்

8
நாம் எப்போதோ
பேசிக்கொண்ட நொடிகளை
அசைபோடுகிறேன்

மனநாடாவில் அவை மட்டும்
திரும்பத் திரும்ப ஒலித்து
உனை உடனழைத்து வருகின்றன

9
ஒரு முறை எழுதி முடித்த
காதல் அத்தியாயத்தில்
திருத்தம் செய்யச் சொல்கிறாய்

நூலை அச்சுக்கு அனுப்பிவிட்ட
மனநிலையோடு நான்
பிழைதிருத்தத்திற்கு வழி இருக்குமா
எதிர்ப்பார்ப்போடு நீ

10
எல்லாக் காதல் கதைகள் போலவும்
நம் கதையும்

ஆசைகளோடும்
திருப்பங்களோடும்
ஏமாற்றங்களோடும்
கூடுதலாக
இன்னும் காயாத
கண்ணீர்த்துளியோடும்


Thursday, February 10, 2011

காதலின் தடயங்கள்



காதலின் தடயங்கள் அழுத்தமானவை
நினைவு அடுக்குகளின் அடியில் சிக்கினாலும்
ததும்பித் ததும்பி அவை மேலெழும்

மறதி நோய்க்கு மாளாமல்
எந்த நிவாரணிக்கும் மசியாமல்
நெடுநாள் நின்று உயிர் தின்னும்

காலத்தின் சீறிப்பாயும் அலைகளும்
அவற்றை அழிக்க முடியாமல்
பின்நகர்ந்து விடுகின்றன

அந்திம காலம்வரை நெஞ்சின் ஓடையில்
கூழாங்கற்களாகவோ
ஆங்கார அருவியாகவோ
ஓசை எழுப்பும்

ஏதாவது பாட்டு வரிகளின் இடைவெளிகளில்
கண்சிமிட்டும் கவிதைகளின் நளினங்களில்
அவளின் முகத்தை வரைந்து ரணமாக்கும்

நினைவுப் புதர்களில் மறைந்திருந்து
எப்போது தலைநீட்டிப் பார்க்கும்
சொல்லவே முடியாது

உள்ளங்கவர் கள்ளியாய் உள்ளே புகுந்து
சுவடில்லாமல் வெளியேறிவிட்டாலும்
நீக்கமற நிறைவது அவளேதான்

சாலையோர மழைநீரில்
தலை நனைக்கும் குருவியாய்
அவளின் நினைவுகளில் மூழ்கியெழும் மனசு

காதலில் வென்றவரைவிட
தோற்றவர் மனங்களில்
தோரணமாய் தொங்கும்
அவளின் பிம்பங்கள்


Friday, February 4, 2011

பாழ்நிலத்தின் பகற்பொழுது


“உங்களுக்குப் புரியுமா?
புரியுமென நீங்கள் தலையசைப்பது
பாவனையன்றி வேறென்ன?

வாழ்ந்த வீடு
கூடி இருந்த உறவுகள்
நெருங்கி வந்த சொந்தங்கள்
நீரூற்றி வளர்த்த பயிர்கள்
அன்போடு அண்டிய பிராணிகள்
பள்ளிக்கூடம், கோயில் எல்லாம்
உடைபட்டு அறுபட்டு குருதி உறிஞ்சப்பட்டு
நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு சிதிலமாக்கப்பட்டு
மண்ணோடு கரைந்தழிந்த

ஒரு பகற்பொழுதின் குரூர வெட்கை
பாழ்நிலத்தில் படர்ந்து அசூரப் பசியோடு
வாய்பிளந்து உடலில் ஊர்ந்து....

‘இச்’கொட்டும் உங்களுக்கு
இவையெல்லாம் புரியுமா?”

புகைப்படக் கண்காட்சியில்
அதன் பொறுப்பாளர் கேட்ட கேள்வி தவிர்த்து
ஆசையோடு அடுத்த படத்திற்கு நகர்கிறேன்.

ஆதியில் இழிவு இருந்தது



ஆதியில் இழிவு இருந்தது
அது சொற்களாக இருந்தது

எங்களின் அறியாமைத் தோலில்
ஊர்ந்து ஊர்ந்து
அது உடலோடு ஒன்றிப்போனது

அதை உரித்துப்போட திராணியற்று
உடைமையாக அணிந்துகொண்டோம்

காலத்தின் சுழற்சியில்
நெம்புகோல்கள் சுழன்று சுழன்று
இழிவுகளை நெம்பி உடலிருந்து
பிரித்துப்போட்டன

வரலாற்றைச் சிக்கலெடுக்க
வந்த கைகள்
மறக்கக்கூடாதென
மீண்டும் பழைய ஆடையை
உடலில் போர்த்த முயல்கின்றன

அவற்றை உதறினாலும்
மீண்டும் போர்த்தவே
அதிகாரத்தின் கைகள் பரபரக்கின்றன

உள்ளங்களில் தீயை வைத்ததால்
இழிவு ஆடையை
தீயிக்குத் தின்னக் கொடுத்தோம்

அதை இனியும் அணிந்தால்தான்
நாங்கள் அரை மனிதனாகும் அவலம் நேரும்

உங்கள் தராசுத் தட்டுகளைச் சமப்படுத்த
எதையாவது இட்டு நிரப்புங்கள்

அதிலே எங்கள் இழிவு ஆடையையும்
இட்டு நிரப்பி
அவை நியாயத் தராசென புளுகாதீர்கள்!

ஆடை கடந்து உடலில் நுழைந்து
எங்களின் இதய அணுக்களின்
வெம்மைப் பெருமூச்சுகளை உணர
உங்கள் இதயங்களில் ஈரம் போதாது