நம் குரல்

Monday, June 4, 2012

பதாகைகளின் காலம்




எங்கும் 
வண்ணங்கள் கும்மியடிக்கும் 
அழகிய மொழிகள் தோரணமாய்..
இந்த மொழிக்கு
வாய்மொழியைவிட வலிமை அதிகம்
ஏதாவது பேச நினைப்பவர்
இதனையும் துணைக்கு அழைக்கிறார்

ஏடுகளில் வலம்வரும் தலைவர்கள்
இந்த மொழியை நம்பி
இடம்பெயர்கிறார்கள்
சாலையோரங்களில் 
கடைத்தெருவோரங்களில் நின்று
புன்னகைக்கிறார்கள்
கைகூப்புகிறார்கள்
கையசைக்கிறார்கள்
வரவேற்கிறார்கள்

எல்லா திருநாட்களையும்
நினைவுபடுத்தி மறக்காமல்
வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்
கடந்துபோன பண்டிகைகளை
கையைப்பிடித்து அழைத்து வருகிறார்கள்
பிழையான மொழியிலும்
பிரியமாய்ப் பேசுகிறார்கள்

நிகழ்ச்சிகளின் வாசல்களில்
முந்திநின்று இந்த மொழி 
வருவோர்க்கு
வரவேற்பு மடல் வாசிக்கும்
சந்தைக்கு வந்த புதிய பொருளை
சந்தியில் நின்று 
அழகு மங்கைகளின் துணையோடு
மயக்கு மொழியில் பேசுகிறது
இறப்பு வீட்டிலும்
 இந்த மொழி உச்சரிக்கப்படுகிறது
   நண்பர்களின் சோகத்தை
அழுத்தமாய்ச் சொல்ல..