(‘மௌனம்’ 12ஆவது கவிதை இதழில், பா.அ.சிவம் என் கவிதைகள் குறித்துத் தம் கருத்துகளைக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். என் கவிதைகள் பற்றிய முதல் ஆழமான, அழகான பதிவாக இ•து அமைந்துள்ளது. ‘மௌனம்’ தேவராஜனுக்கும் பா.அ.சிவத்திற்கும் நன்றியறிதலோடு இங்கு மீண்டும் வெளியிடுகிறேன்.)
ந.பச்சைபாலனெனும் இடைவெளியை நிரப்பிச் செல்லும் கவிஞன்
இந்தக் கட்டுரைத் தொடருக்கு எண் போடக் கூடாது என எண்ணிக் கொண்டே, இதனைத் தொடங்குகிறேன். இதற்கான காரணத்தைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறேன்.
கவிதைகள் இல்லாது போனால், வாழ்க்கை என்னவாகும் என ஒருநாள் திடீரென எண்ணத் தோன்றியது. அதற்குப் பின்னர், தூங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. நான் கவிதைகளை எதற்காக எழுதுகிறேன்... எனது கவிதைகள் எதைப் பற்றி பேச விரும்புகின்றன? கவிதையில் இதுவரை நான் என்ன அடைந்திருக்கிறேன்...என்ன இழந்திருக்கிறேன்... பிறர் வாசிக்க வேண்டும் என்பதற்காக, நான் தொடர்ந்து எழுத வேண்டுமா ?
சிறிது காலம் எழுதாது போனால், இவன் இலக்கியத்திலிருந்து விலகி வேறொரு பாதைக்குச் சென்று விட்டான் என பிறர் பலவாறு பேசுவார்கள் என்பதற்காக எழுத வேண்டுமா ? இவ்வாறு கேள்விகள், கணங்களைக் கடத்திச் செல்கின்றன.
ஒரு காலத்தில் பத்திரிகையில், இதழ்களில் பெயர் வரவேண்டும் எனக் கவிதைகள் எழுதியது, பின்னர், போட்டிகளில் பரிசு பெற வேண்டும் எனக் கவிதைகளை உருவாக்கியது, பின்னர், தமிழகக் கவிதைகளுக்கு இணையாகக் கவிதைகள் எழுத வேண்டும் என வறுத்திக் கொண்டது, தற்போது எனக்காக நான் கவிதைகள் எழுதிக் கொள்வதாக எனது திசையை நான் நிர்ணயித்துக் கொண்டது...கவிதைகள் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை. நினைத்துப் பார்க்கவே பயமாக, பயங்கரமாக இருக்கிறது.
நான் ஐந்தாம், ஆறாம் படிவங்களில் பயிலும் போது, நயனம் வழி நான் அறிந்த ஒரு சிறந்த கவிஞர்தான் நண்பர் ந.பச்சைபாலன்... அவரது கவிதைகள் பற்றித்தான் இக்கட்டுரையில் விவாதிக்கவுள்ளேன். எனது பள்ளிக் காலங்களிலிலேயே நான் அறிந்த ஒரு கவிஞரை, இன்று நண்பராகக் கொண்டிருப்பது ஒரு வரன் என்றுகூடச் சொல்லலாம். 2002 ஆம் ஆண்டு, பினாங்கு - துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைக் கருத்தரங்கில், அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஆகக் கடைசியாக, இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலையில், லிட்டல் இந்தியா பிரிக்பீல்ட்ஸ்-சில், நாகாஸ் உணவகத்தில், அவருடன் கவிதைகள் பற்றிச் சற்று நேரம் கலந்துரையாடினேன்.
மெளனத்தில் வெளிவந்த கவிதைகள் பற்றியும், எனது கவிதைகள் பற்றியும் விவாதித்தோம். கவிதைகள் மீதான அவரது பார்வை மாறியிருப்பதை நன்கு உணர்ந்தேன். மெளனத்தில் கடந்த இதழில் வெளிவந்த எனது "கைவிடப்பட்டவர்கள்" கவிதை பற்றியும் அவர் என்னோடு பேசினார். மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பு அது.
பல சந்திப்புகள் அவ்வாறு அமைவதில்லை.
ந.பச்சைபாலன் கவிதைகள் இன்று நவீன மொழிநடையை உள்வாங்கிக் கொண்டு, ஒரு சீரான பாதையில் பயணிப்பதை நாம் கவனிக்கலாம். புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் இடையிலான ஒரு பாலத்தை அவர் கடந்திருப்பது மட்டுமின்றி, தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுக்கவிதைக் காலத்தில், அவ்வடிவத்தில் எழுதிய பல கவிஞர்கள்,புதுக்கவிதையைக் கடந்து, நவீன கவிதை முயற்சியில் ஈடுபடாமல், புதுக்கவிதை வடிவத்திலேயே தேங்கி நின்று விட்டதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ந.பச்சைபாலன் அவ்வாறு இல்லை. தன்னைப் புதுப்பித்துக் கொண்டார். புதுக்கவிதை உலகிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நவீனமொழியில் கவிதைகளைப் படைத்து, நமது கவிதை உலகை இன்னொரு மறுமலர்ச்சி காலத்திற்குக் கொண்டுச் சென்றவர்களில் ந.பச்சைபாலனும் ஒருவர் என்று துணிந்து கூறலாம். இன்றைய தலைமுறையில், ம.நவீன், தோழி என வெகுசிலரே புதுக்கவிதை மொழியிலிருந்து நவீ ன மொழிக்குத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு, இங்குப் புதிய அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். புதுக்கவிதை படைப்பில் பலரின் கவனத்திற்கு உள்ளான சுங்கை பெட்டாணி சிவா, அதற்கு முன்னரே எழுதி வந்த கு.தேவேந்திரன் உட்பட மேலும் சிலர், இந்த முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. நவீன மொழி ஆளுமையை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
கோ. புண்ணியவான் , ஏ. தேவராஜன் ஆகியோர் புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதை உலகிற்குப் பெரும் வீச்சுடன் பாய்ந்தவர்கள் என நான் குறிப்பிடுவேன். இருவகைக் கவிதைகளையும் அவர்கள் பெரும் தாக்கத்துடன்தான் படைத்து வருகின்றனர். சீ.அருணின் கவிதைகள், முன்பிலிருந்து ஒரு தனித்துவ அடையாளத்துடன்தான் பதிவு செய்யப்பட்டிருப்பதால், "புதுக்கவிதை- நவீன கவிதை" எனும் கால வெளியைக் கடக்கிற தேவை அவருக்கு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. கே.பாலமுருகன் , எழுதத் தொடங்கியதிலிருந்து, அவரது கவிதைகள் நவீன மொழியின் வெளிப்பாடாகத்தான் அமைந்துள்ளன. புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்குப் பாய்கிற சூழல் அவருக்கு ஏற்படவில்லை என்றே கருதுகிறேன்.
ந.பச்சைபாலன் எனும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த ஒரு கவிஞர், நல்ல மனிதர் என்பதைப் போலவே அவரது கவிதைகளும் அமையப்பெற்றிருக்கின்றன. நான் அவரது கவிதைகளை, நல்ல கவிதைகள் என்று சொல்வதைக் காட்டிலும், ஒழுங்குள்ள கவிதைகள் என்றே சொல்ல விரும்புகின்றேன்.இதற்கு அவர் மீது நான் கொண்டிருக்கும் மரியாதை அல்லது நல்ல அபிப்பிராயம் காரணமாக இருக்கலாம். அதையும் கடந்து, அவர் ஓர் ஆசிரியர் என்பதால், அவரது கவிதைகள், அவரது பணிக்கு ஏற்றாற் போலவே சீராகவே அமைந்துள்ளன.
கடந்தாண்டு, மெளனத்தில் வெளிவந்த அவரது ஒரு கவிதை, அவரது நவீன மொழி ஆளுமையை வெளிப்படுத்தியது. இந்தியர்களின் வாழ்வியலைப் பேசும் கவிதையாக அது அமையப்பெற்றது மேலும் நம்பிக்கையை அளிக்கிறது. நண்பர் கோ.புண்ணியவானின் "அவன் நட்ட மரங்கள்" கவிதை மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கவிதையாகக் கருதப்படுகிறதோ, அது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதையைப் பதிவு செய்துள்ளார் நண்பர் ந.பச்சைபாலன்.
மரண வாக்குமூலம்
என்னை வேடிக்கை பார்க்க
உள்ளே வருகிறீர்கள்
நான் சரிந்து கிடக்கும் அறையின்
சிமெண்டு தரையின் குளிர் வதை
என்னை எழுப்புகிறது
உடலெங்கும் எரியும் இரணங்கள் வழி
கசிந்து வெளியேறுகிறது என் உயிர்
சொல்ல முடியாத இடங்களிலும்
என்னைப் பிடித்துத் தின்கிறது வலி
காலணி மிதித்த இடங்களில்
கன்றிப்போயிருக்கும் தோல்
என் மேல் விளையாடிய கட்டைகளால்
தாறுமாறாய் முதுகிலும் மார்பிலும்
கோடுகள்
சிமெண்டுத் தரையிலும் சுவரிலும்
சிந்திக் கிடக்கும் இரத்தத் துளிகள்
காக்கும் இந்நிலையம் காரணப் பெயர்
என்று நம்பியிருந்தேன்
இ•து இடுகுறிப்பெயரென்பது
இப்போது புரிந்தது
திடீரென அந்நியக் குரல்கள்
அறையை ஆக்கிரமிக்கின்றன
ஐந்தாவது சுற்றுக்கான விசாரணை
தொடங்கி விட்டது
நீங்கள் போய் விடுங்கள்
என் மேல் விழும்
ஒவ்வோர் அடியும் உதையும்
விழுகிறது
உங்கள் அறியாமையிலும்...
- ந.பச்சைபாலன்
தடுப்புக் காவலில் உயிரிழந்த எனது நண்பனின் தம்பி தர்மராஜனின் கதையைத்தான், இக்கவிதை என் கண் முன் கொண்டு வருகிறது. தடுப்புக் காவலில் மோசமாக நடத்தப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் உயிரிழ்ந்தவர்களின் கதைகளை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அதனை ந.பச்சைபாலன் கவிதையாகப்
பதிவு செய்துள்ளார்.
ந.பச்சைபாலனின் இக்கவிதையில், என்னைக் கவர்ந்த வரிகள், இறுதிக் கன்னியில் அமர்ந்துள்ளன. என்மேல் விழும்/ ஒவ்வோர் அடியும்/ விழுகிறது / உங்கள் அறியாமையிலும்... எனும் இவ்வரிகள் தடுப்புக் காவலில் சிலர் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நாம் நமது வேலையில் மூழ்கிப் போயிருக்கும் போக்கையும், பிறர் அழுதால் நமக்கென்ன எனும் சுயநலத்தையும் சாடுவதாக அமைந்துள்ளது. அறியாமையில் இருப்பவர்களால்தானே இதுபோன்ற போக்கைக் கொண்டிருக்க முடியும்? அதற்காக, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் நான் வக்காளத்து வாங்கவில்லை. இக்கவிதையில், என்னை/ வேடிக்கை பார்க்க/ உள்ளே வருகிறீர்கள்/ எனக் கவிஞர் கவிதையைத் தொடங்கியிருக்கும் விதம் கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிற பாங்கை ஏற்படுத்துகிறது. இங்குப் பல கவிதைகள் அவ்வாறு அமைவதில்லை.
கவிதைக்குள் செல்வதே அல்லது முதல் வரி வாசிப்பே சோர்வைத் தருகிறது. ந.பச்சைபாலனின் "மரண வாக்குமூலம்" ஒரு சிறந்த கவிதைக்கான அனைத்துத் தன்மைகளையும் கொண்டுள்ளது. அக்கவிதையை முன்நிறுத்த வேண்டும் எனும் நோக்கத்திலேயே அதனை உங்களின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளேன்.
ந.பச்சைபாலனின் கவிதைகள் ஒழுங்குள்ள கவிதைகள் என நான் குறிப்பிட்டதற்கான சான்றும் மேலுள்ள அவரது கவிதையில் உள்ளது. சொல்ல முடியாத/ இடங்களிலும்/என்னைப் பிடித்துத் தின்கிறது/ வலி... என்று எழுதியுள்ளார். சொல்ல முடியாத இடங்கள் எனும் சொற்றொடருக்குப் பதிலாக, நவீன கவிதைகள் என்ற பெயரில் சிலர் அப்பட்டமான ஆண்குறி அல்லது பெண்குறி சொற்களை வலிந்து திணித்து விடுவார்கள். பச்சைபாலனின் கவிதைகளில் நாம் அவற்றை எல்லாம் காண முடியாது.உடல் உறுப்புகளை மையப்படுத்தி அல்லது உருவகமாக எடுத்துக் கொண்டு எழுதினால்தான் நவீன கவிதை என்று ஒரு தவறான அணுகுமுறையும், தமிழ்க் கவிதைச் சூழலில் உள்ளது. அது போன்ற தவறான புரிதல்களை இவர் கொண்டிருக்கவில்லை என்பதற்கு இக்கவிதை சிறந்த சான்று.
மரண வாக்குமூலம் முன்வைக்கும் விவாதப் பொருளை ஒத்த ஒரு கவிதையை சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் எழுதியிருக்கிறேன் என்பதால் அதனையும் உங்களின் வாசிப்புக்காக தருகிறேன்.
சந்தேகத்திற்கு இடமின்றி
கொலை செய்தவன்
ஜாமினில் விடுதலை...
சந்தேகத்தின் பேரில்
கைதானவன்
லாக்கப்பில் படுகொலை...
- பா.அ.சிவம்
"கடவுள் மீதான வன்முறைகள்" எனும் கவிதையில் கடவுள் எனும் நம்பிக்கையை உடைக்க முயலும் கவிஞர்களுக்குப் பதில் கூறியுள்ளார் பச்சைபாலன். அக்கவிதை பற்றி அவரிடமும் நான் நேரில் கூறியிருக்கிறேன்.
கழிவறைக் காகிதத்தில்
கடவுளின் பெயரைக் கிறுக்கிக் கொண்டு
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான் ஒருவன்...
எனும் இவரது இந்த வரிகள் ம.நவீனுக்காக எழுதப்பட்டவை என்று நான் நினைக்கிறேன்.
தலைதெறிக்க ஓடிவந்தவன்
கடவுள் தன்னைக் கொல்லப் பார்ப்பதாக
புகார் கூறினான் ...
எனும் இந்த வரிகள் மஹாத்மனுக்காகவும்,
நானறிந்த கடவுள்
இறந்து விட்டதாக ஒருவன்
தன்னிலை விளக்கம் தந்தான்...
எனும் இந்த வரிகள் அநேகமாகக் கே.பாலமுருகனுக்காகவும்,
கடவுள் நல்ல கற்பனை என்று
கடவுள் மீது பின்னப்பட்ட சிந்தனைகளைக்
கலைத்துக் கொண்டிருந்தான் ஒருவன்...
எனும் வரிகள் பா.அ.சிவம் எனும் எனக்காகவும் எழுதப்பட்டவை என்று நான் திண்ணமாக நம்புகிறேன். கடவுள் நல்ல கற்பனை எனும் எனது கவிதை, மெளனத்தில் வாசித்திருப்பீர்கள். வெளிப்படையாகவே சொல்கிறேன். எனக்கு இறைநம்பிக்கை உண்டு. ஆனால், என்னைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன் முழுமையாக. நான் நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கு, எனக்கு இறைநம்பிக்கை அவசியமாகிறது. அதே வேளை, கடவுள் வியாபாரமாக்கப்படும் போது, அல்லது கடவுள் மீதான அரசியல் நடவடிக்கைகள் அரங்கேறும்போது, அவற்றைப் படைப்பில் கொண்டு வருவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
சில கவிஞர்கள் உடைத்துப் போடும் கடவுள் நம்பிக்கையை மீண்டும் கட்டுவதற்கான முயற்சியைத்தான் ந.பச்சைபாலன் அக்கவிதையில் மேற்கொண்டிருக்கிறார். மாறாகத், தனிப்பட்ட தாக்குதல் இல்லை என்று என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஹைக்கூ கவிஞராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட ந.பச்சைபாலன், இன்று காலவெளியைக் கடந்து, நவீனமொழியை தன்வசப்படுத்திக் கொண்ட கவிஞராக மிளிர்கிறார். கவிதைகளோடு நின்றுவிடாமல், கவிதை குறித்த விமர்சனங்களையும், எதிர்வினைகளையும் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான்
எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக,
இ•து இத்தனையாவது தொடர் என எண் போட்டு இம்முறை எழுதாததற்குக் காரணம் வேறு ஒன்றுமல்ல. அவ்வப்போது நான் சோம்பேறியாகி விடுவதால், தொடர் விடுபடுகிறது. எண் கூடாமலே போகிறது. அதற்காகத்தான்...