நம் குரல்

Saturday, April 30, 2016

மனம் நிறைய பூக்கள் - 3                                                வட்டங்களில் நாங்கள்


ஒரு வட்டம் என்பது
எப்போதும் ஆகாது எங்களுக்கு

ஒன்றிலிருந்து இன்னொன்றாகப்
புதுப்புது வட்டங்களில் நுழைந்து
வாழ்ந்து பார்ப்பதே அலாதி இன்பம்

ஒவ்வொரு முறையும்
வட்டங்களில் ஓட்டைகள் உள்ளதாக
உணரத்தொடங்கியபோது

வேண்டிய ஒருவருக்குப் பரிவட்டம் கட்டி
சபையேற்ற
இடையூறுகள் முளைத்தபோது

வட்டத்துக்குள் விதியாகும்
சட்டங்களை மதியாமல்
எதிர்மாறாய்த் துருவங்கள்
தலைதூக்கியபோது

வட்டத்துக்குள்ளிருந்து சிலரை
வெளியே தள்ளிக்
கதவடைக்க முடியாதபோது

வட்டத்தின் அளவைச் சுருக்கிச் சுருக்கி
கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் குறுகியபோது

வட்டத்தின் எதிர்காலம் குறித்து
அவநம்பிக்கைகள் மனத்தை அரித்தபோது

வட்டத்திலிருந்து வெளியேறும்
அல்லது வெளியேற்றப்படுபவர்களுக்கு
ஆதரவுக் கரம் நீட்ட முனைந்தபோது

இதே வட்டத்திலிருந்தால்
இனி இலாபமேதும் காணவியலாது
என்றுணர்ந்தபோது

ஒன்றிலிருந்து ஒன்பதாக
பலப் பல வட்டங்களை உருவாக்கினோம்

எல்லா வட்டங்களிலும்
கண்ணுக்குத் தெரிகின்றன
அதிகார பீடங்களில்
வீற்றிருக்கும் தலைகளின் பின்னால்
ஒளிவட்டங்கள்

அந்த ஒளி வாங்கி
வாழ்வுக்குள் வினியோகிக்கும்
வழிதேடுவதிலேயே கழிகிறது காலம்

ஒவ்வொரு வட்டமும்
வெளிப்பார்வைக்கு
ஒரு சுழியமென்பது
வட்டத்துக்குள்ளே இருப்பவர்களுக்கு
ஒரு போதும் தெரிவதேயில்லை


நதி இணைப்பும் நாடுகள் இணைப்பும்கூட
சாத்தியமாகலாம்
வட்டங்கள் இணைப்புக்கு இங்கே
வாய்ப்பே இல்லை

மனம் நிறைய பூக்கள் - 2


வருந்திச் சுமப்பவர்கள்
பாதையெங்கும் கொட்டிக் கிடக்கின்றன
சின்னங்களும் அடையாளங்களும்
கண்டுகொள்ளாமல் கடந்து போவோர் சிலர்
கைநிறைய ஆசையாய் அள்ளிக்கொண்டு
பயணம் தொடர்வோர் பலர்

பயணம் தொடங்கியபோது அவற்றின் நினைப்பின்றி
எல்லாரும் வெறுங்கையோடு
சீந்துவார் யாருமில்லை
காடுகளையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
பாலைவனங்களையும் கடக்கும்போது
சேகரிக்கத் தொடங்கினார்கள்
தங்களுக்குப் பிடித்தமான சின்னங்களை அடையாளங்களை

சிலர் அவற்றை அணிகளாய் அணிந்தனர்
சிலர் அவற்றைப் பொழுதுபோக்காய்ப் போற்றினர்
சிலர் அவற்றை ஆடையாய் ஆராதித்தனர்
சிலர் அவற்றை ஆயுதமாக்க ஆலோசித்தனர்
சிலர் அவற்றை அடையாளமாய் ஆக்கினர்

சின்னங்களும் அடையாளங்களும் வளர்ந்து வளர்ந்து
அவர்களையே வளைக்கத் தொடங்கின
அவற்றைக் கண்டு வணங்கத் தொடங்கினார்கள்
அவற்றிலிருந்து விடுபட முயன்றார்கள்
வேறு வழியின்று
அவற்றை பூஜிக்கத் தொடங்கினார்கள்

தங்கள் சின்னமெனில் போற்றவும்
அடுத்தவர் சின்னமெனில் வெறுக்கவும் காறிஉமிழவும்
மனத்தைப் பழக்கினார்கள்
அவற்றால் தமக்குத் தீங்கு நேருமென எண்ணினார்கள்
அவற்றைக் கண்டு  பயப்படத் தொடங்கினார்கள்
அவற்றால் தம் அடையாளங்களும் சின்னங்களும்
மதிப்பற்றுப் போகுமென முடிவுக்கு வந்தார்கள்

தங்கள் சின்னங்களைப் பாதுகாப்புக் கவசமாய்
தங்களைச் சுற்றி எழுப்பத் தொடங்கினார்கள்
தங்கள் வீடுகளுக்கு அவற்றைச் சன்னல்களாக்கி
அவற்றின் வழியே வெளியே எட்டிப்பார்த்தார்கள்

சின்னங்களும் அடையாளங்களும் மாயக்கரமாகி
கண்களை மறைத்து கழுத்தை நெரித்து
இதயத்தின் ஈரம் நீக்கி
மனிதனெனும் அடையாளம் அழிப்பதை

உணர்வதேயில்லை ஒவ்வொருவரும்

மனம் நிறைய பூக்கள் - 1

இலக்கியம் நேசிக்கும் இதயங்களே,

ஒரு கவிதைத் தொடரோடு உங்கள் இதய வாசல் நாடி வருகிறேன்.

எழுத எழுத என்றும் தீர்ந்து போகாமால் கவிதை மீதான காதல் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் அரும்பிய இந்தக் காதல் இன்னும் என்னைவிட்டு விலகாமல் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. கற்பனாதேவியின் மாயக்கரங்களுக்கு என்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிட்டு அவள் போக்கில் பயணப்பட்டுக் கவிதைக்கான தருணங்களை ஆராதிக்கிறேன்.

கண்ணில் விழும் ஒரு காட்சி, காதில் விழும் ஒரு சொல், உரை நடுவே உதிரும் ஒரு சிந்தனை,
வாசிப்பில் கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல் கவிதைக்கான கணங்களை எனக்குள் உற்பத்தி செய்கின்றன.

பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் கவிதை என்றாலே ஒதுங்கிப் போகும் மனங்களைக் காண்கிறேன். கவிதை பேசும் சாடைமொழி பலருக்குச் சலிப்பூட்டுகிறது. எதையும் வெளிப்படையாய்ப் பேசும் உரைநடையோடு மட்டும் கைகுலுக்க விரும்புகிறார்கள். மொழியின் அழகியலை அள்ளிப் பருகும் இலக்கிய மனம் இன்றைய தலைமுறையில் வெகுவாகக் குறைந்துவிட்டதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். கவிதை நூலை நீட்டினால், “கதை நூலிருந்தால் தாருங்கள்” என்று சிலர் சொல்வது இதை மெய்ப்பிக்கிறது

கவிதை தமிழில் தோன்றிய மூத்த வடிவம். சங்க இலக்கியத்தில் ஆரவாரித்துப் புறப்பட்ட கவிதை நதி, ஒல்கி, ஒசிந்து, ஓடையாகி இன்று நீர்க்கோடாகி மனித மனங்களை நனைக்க முயல்கிறது.

ஓர் படைப்பாளியின் மன உணர்வுகளை நெருக்கமாக வாசகன் உணரும் வாய்ப்பினை கவிதை ஏற்படுத்துகிறது. உரைநடையில் உருவாகும் மற்றப் புனைவுகளில் படைப்பாளி தன்னை மறைத்துக்கொண்டு வேறு முகம் காட்டும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. ஆனால், கவிதையோ படைப்பாளியின் வாக்குமூலமாக, அவனின் உணர்வுகளை வாசகனிடத்தில் விரைந்து கடத்துகிறது.

ஆயினும், கவிதையிலும் முகமூடிகள் உண்டு.  இலக்கிய மோசடிகளில் கொடிநாட்டிக்கொண்டு, தன் காலடியில் மனிதர்களை மிதித்துக்கொண்டு, உரத்த குரலில் மனிதாபிமானம் பேசும் முரணான படைப்பாளியும் நம்மிடையே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. 

வாரந்தோறும் கவிதை எழுதுவதைக் கணக்கெடுத்துக்கொண்டு, நான் கவிதைகளை எழுதிக் குவிப்பதாக அவசரத் தீர்ப்பெழுதும்  விமர்சகர்களைப் புறமொதுக்கிவிட்டு  என் கவிதைப் பயணத்தைத் தொடர்கிறேன்.

கவிதையின் அகமும் முகமும் இன்று வெகுவாக மாறிவிட்டன. இனியும் என் கவிதைகளில் சொல் விளையாட்டு, அலங்காரங்கள், பிரச்சாரத் தொனியைத் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை வாக்குமூலமாக இங்கே பதிவுசெய்கிறேன்.

கவிதைக்கான எதிர்வினைகள் மிகக் குறைவு எனினும், சக பயணியாக உடன் வரும் உங்களுடன், எனக்கான கவிதை மொழியில் உரையாடி, என்னுள் அரும்பிய கலவையான உணர்வுகளை உங்களுக்கு இடமாற்ற இதன்வழி முயல்வேன்.

நம்பிக்கையோடு,

ந.பச்சைபாலன்

                                      காமஞ்செப்பாது..

காமம்
கடக்க முடியாத கடலென்றாலும்
அனைவரையும் நீந்த அழைக்கிறது
மூழ்க வைத்து வேடிக்கை பார்க்கிறது

வேட்கை தீராத வேட்டை நாயாய்
விடாமல் தொடர்ந்து
பலரையும் துரத்தித் துரத்தி
அங்கிங்கெனாதபடி எங்கும் அலைக்கழிக்கிறது

பசியைப்போல் மறைக்க முடியாதெனினும்
அது கண்மூடிப் பொய்த்தூக்கம் கொள்கிறது

காலநேரம் மறந்து எதிர்பார்ப்பைச் சுமந்தவாறு
எப்பொழுதும் விழித்திருக்கிறது

பலரும் அதன்முன் தோல்வியை ஒப்புக்கொண்டு
சரணாகதியடைந்து மண்டியிடுகிறார்கள்

வெற்றிக்கொடி பறக்கும் சாம்ராஜ்யங்களை
ஆசைதீர அசைத்துப் பார்க்கிறது
கவிழ்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது

யாரும் அசைக்க முடியாதென்று நினைத்த
அதிகார பீடங்களைத் தாக்கித்
தரைமட்டமாக்குகிறது

ஒளிந்துகொள்ள இடம் தேடி
பாதுகாப்பெனத் தேர்ந்து
காவியுடையில் மறைந்துகொள்கிறது

முகமூடி அணிந்துகொண்டு
காதலெனும்பேரில் இனிக்கப் பேசுகிறது

அது 
அத்தனை அழகாகவும் இருக்கிறது

இளைய மனங்களின் அறைகளில்
ஒட்டியிருக்கும் தூசிகளைத் துடைக்கிறது

மலரைவிட மெல்லியதாய்
மனங்களை ஈர்க்கிறது

அதனோடு போராடி வெல்வார்முன்
வேறுவழியின்று
அது மண்டியிடுகிறது

இதனை மறுத்தோ கடந்தோ
கடவுளைத் தேடிச் சிலர்

இதன் வழியாகக்
கடவுளைத் தேடிச் சிலர்