நம் குரல்

Sunday, July 21, 2019

பன்முகக் கலைஞன்


மலேசியாவில்
மோனா லிசா
மோனா லீசா மலேசியாவுக்கு வந்துள்ளார் என்ற தகவல் புலனம்வழி கிடைத்தபொழுது தாமதிக்காமல் கோலாலம்பூரில் அமைந்துள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்குச் (National Art Gallery)  சென்றேன். இதுவரை பார்த்ததெல்லாம் நகல்தானே. இதுதான் உண்மையானது என்ற எண்ணமே என்னை அங்கு உந்தித் தள்ளியது.  நான் சென்ற நாளில் மட்டும் நான்காயிரம் வருகையாளர்கள் என அங்குப் பணியிலிருந்த பொறுப்பாளர் சொன்னார். மோனா லீசாவுக்கு இவ்வளவு இரசிகர்களா என வியந்தேன்.

தம் மந்திரப் புன்னகையால்  உலக மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் மோனா லீசா. காண்பார் கண்களையும் கைது செய்யும் இந்த ஓவியப் பெண்ணுக்கு உயிரூட்டியவர் இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டாவின்சி (1452 – 1519). மோனா லீசாவோடு அவரின் மற்ற 16 அரிய ஓவியங்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு மலேசிய ஓவியக் காதலர்களை நாடி வந்துள்ளது. இவை அவரின் உண்மை ஓவியங்கள் அல்ல. உண்மைக்கு மிக நெருக்கமான, உயர்தர இலக்க மறுஉருவாக்கம் (high definition digital reproduction) மூலம் உயிர்பெற்ற ஓவியங்கள் என்பதை அங்குச் சென்ற பின்னரே அறிந்தேன்.

லியொனார்டோ டாவின்சி  புகழ்பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக் கலைஞர், புதுமைப் புனைவாளர், பொறியியலாளர், சிற்பி, ஓவியர் எனப் பல்துறை மேதையாக விளங்கியவர். அத்துடன் இவர்உடற்கூற்றியல்வானியல்குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார்
உலகில் இதுவரை வாழ்ந்த சிறந்த ஓவியர்களுள் ஒருவராகவும், பன்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார். மண்ணில் இவர்போல் மனிதரும் உண்டோ என வியந்து போற்றப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஓவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். கடைசி விருந்து (The Last Supper),  மோனா லீசா (Mona Lisa) போன்ற ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

உலகில் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், அதன் ஆழ்ந்த இரகசியங்களை அறிய வேண்டும் என்ற தீவிர வேட்கை வாழ்நாள் முழுவதும் இவரை ஆட்டிப் படைத்திருக்கிறது. இதனால் பல துறைகளில் ஈடுபட்டு அவற்றை முடிக்காமல் விட்டுச் சென்றுள்ளார். இவர் வாழ்ந்ததோ போர்க் காலச் சூழல். எனவே, வெனிஸ், நேப்பில்ஸ், மிலன், பாரிஸ் என இடம் மாறிக்கொண்டே இருந்ததால் பலதுறை ஆய்வுகளில் ஈடுபட்டும் அவற்றை முடிக்க முடியவில்லை.லியொனார்டோ டாவின்சி,  வழக்குரைஞர் ஒருவருக்கும் குடியானவப் பெண்ணுக்கும் தாம்பத்திய உறவுக்கு வெளியே பிறந்தவர். அப்பாவுக்குத் தன் மகனும் வழக்குரைஞராக வேண்டும் என விருப்பம். ஆனால், டாவின்சிக்கோ நாட்டம் வேறு. தான் வரைந்த ஓர் ஓவியத்தைக் காட்டி அப்பாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 18ஆவது வயதில் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட ஆண்ட்ரீ தெல் வெரோசியாவிடம் பயிற்சி பெற்றார். ஆண்ட்ரீயின் அறிவியல், கலை ஈடுபாடு டாவின்சியை முழுமையாய் ஆக்கிரமித்தது.

மேலும் அக்காலத்து இயற்கைவாதியும், தத்துவவாதியும், கணித மேதையுமான டோஸ்கனெல்லியின் ஆற்றலும் இவரைப் பாதித்தது. பாரதியைப்போல் இவருக்கும்  சமுதாயத்தின் புறக்கணிப்பு நேர்ந்தது. இதனால், தம் கவனத்தையும் ஆற்றலையும் அறிவுத்தேடலுக்கு முழுமையாகப் பயன்படுத்தினார்.

டாவின்சி பற்றிய சுவைத் தகவலை இணையத்தில் கண்டேன். இவர் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு உண்பவராக இருந்துள்ளார். உயிர்களிடத்தில் அன்பு காட்டும் மனிதரான இவர், கூண்டுகளுக்குள் விற்கப்படும் பறவைகளை வாங்கி வந்து அவற்றை விடுவித்து விடுவாராம். வாடிய பறவையைக் கண்டபோதெல்லாம் வாடிய இவரின் உயிர் இரக்கப் பண்பு போற்றத்தக்கது.

டாவின்சி பற்றி உளநோய் மருத்துவரான சிக்மண்ட் பிராய்ட் ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் மோனா லீசா ஓவியத்திலுள்ள பெண்ணின் புன்னகை யாருடையதென்ற புதிரை அவிழ்க்கிறார். டாவின்சிக்குக் காதலி கிடையாது. இதே புன்னகையை டாவின்சியின் மற்ற இரு ஓவியங்களிலும் காண முடிகிறது. டாவின்சி களிமண்ணில்  சிரிக்கும் பெண்களின் தலைகளைத் தொடக்கத்தில் செய்துள்ளார். இந்தச் சிரிக்கும் பெண்கள் டாவின்சியின் தாய் கெதரினாவின் புன்னகையை நினைவுபடுத்தியே உருவாக்கப்பட்டவை எனச் சிக்மண்ட் பிராய்ட் முடிவுக்கு வருகிறார். மோனா லீசாவின் புன்னகை, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதது.  ஆனால் காண்பாரை மயக்குவதாக உள்ளது. டாவின்சியின் மன ஆழத்தில் நிலையாய்ப் பதிந்துபோன தாயின் புன்னகைதான் அது என்று அறிந்துகொண்டு மோனா லீசா ஓவியத்தை கூர்ந்து நோக்கினேன். அந்தப் புன்னகையின் அழகும்  ஆழமும் இதயத்தைக் கைது செய்தன.
இதயத்தைக் களவு செய்யும் மோனா லீசா ஓவியம் களவாடப்பட்ட சுவையான சம்பவமும் உண்டு.  21.8.1911 ஆம் நாள் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் இது கயவர்கள் சிலரால் களவாடப்பட்டது. மறுநாள், ஓவியர் லுயி பிரவுட் என்பவர் மோனலிசா ஓவியத்தைக் காண்பதற்காகச் சென்றார். அங்கு மோனலிசா ஓவியத்திற்குப் பதில், நான்கு இரும்பினாலான முறுக்காணிகளைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் அங்கிருக்கும் காவல் அதகாரிகளிடம் அணுகி, வியாபாரத்திற்காக ஓவியத்தைப் புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி கூறினார். சில மணிநேரங்களிலேயே, ஓவியத்தைப் புகைப்படக்காரர்கள் எடுக்கவில்லை என நிரூபணமாயிற்று. அந்த வாரம் முழுக்க, திருடுபோனதற்கான விசாரணைக்காக அருங்காட்சியகம் மூடப்பட்டது

ஓவியம் இனி நமக்குக் கிடைக்காது என்ற நிலையில், அதைத் திருடிய கயவன் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டான். அருங்காட்சியகத்தில் துப்புரவுத் தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர்தான் களவாடினார் என்பது தெரிந்தது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெருங்கையாலியொனார்டோவின் ஓவியம், இத்தாலிக்கே திரும்ப வேண்டும் என எண்ணி நிகழ்த்திய சதியே இதுவாகும்.


மேலும், திருடிய ஓவியத்தை ஏலத்திற்கு விட்டால் இலாபம் கிடைக்குமென பெருங்கையாவின் நண்பன் ஆசையைக் காட்டினான். பின்னர், எடுவார்டோ டி வால்பியர்னோ என்பவர், இந்த ஓவியத்தை ஆறு நகல்கள் எடுத்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு விற்றார். இரண்டாண்டுகளில் பொறுமையிழந்த பெருங்கையா, பிளாரன்சிலுள்ள ஒரு காட்சியகத்தில் ஓவியத்தை விற்கும் பொழுது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இத்தாலியின் அனைத்து இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, 1913ம் ஆண்டு மீண்டும் லாவ்ரேவிற்குத் திரும்பியதுமோனா லீசா ஓவியம். களவாடிய குற்றத்திற்காக, பெருங்கையாவிற்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது. எப்படியோ டாவின்சியின் கனவு ஓவியம் மீட்கப்பட்டது.


டாவின்சியின் உண்மையான ஓவியங்கள் எட்டு நாடுகளில் உள்ளன. அவை மறுஉருவாக்கம் பெற்று ஒருசேர ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பாக இஃது அமைகிறது. இந்த ஓவியக் கண்காட்சி இத்தாலியில் தொடங்கி உலகம் முழுவதும் பயணிக்க உள்ளது. ஜோர்ஜியா, வார்ஷோ, போலந்து, சீனா ஆகிய நாடுகளில் முடிந்து இப்பொழுது  இந்தக் கண்காட்சி மலேசியாவை அடைந்துள்ளது. இதற்குப் பிறகு, பேங்கோக், மியன்மார் நோக்கிப் பயணப்படும். இவ்வாண்டு உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் லியொனார்டோ டா வின்சியின் 500ஆம் ஆண்டின் நினைவுநாளைக் கொண்டாடி வருகின்றன. அதன் முத்தாய்ப்புக் கொண்டாட்டம் இவ்வாண்டு அக்டோபர் 24இல் பாரீசில்  நடைபெறவுள்ளது. டாவின்சி கலையும் அறிவியலும் பொறியியலும் கலந்து செய்த கலவையோ என வியக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவரின் கலைப்பணியைவிட அறிவியல், பொறியியல் ஆய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் ஏறக்குறைய 13 000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய கலைக் காட்சியகத்தில் அவரின் கையெழுத்தில் அமைந்த குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 15 / 16 ஆம் நூற்றாண்டில் இவர் வரைந்துள்ள மனித உடல் வரைபடம், பறக்கும் எந்திர வடிவமைப்பு,  மனித மூளை, மண்டையோட்டின் வரைபடம், கையின் உடற்கூற்றியியல் ஆய்வுப் படம் என அனைத்தும் இவர் இறைஞானம் பெற்ற அதிசயப் பிறப்போ என வியக்க வைக்கிறது.

மலேசியாவுக்கான இத்தாலியத் தூதர் கிரிஸ்தியானோ மெகிபிந்தோ ஓர் ஓவியர்.  அவர் கூறும் கருத்து நம் கவனத்தை ஈர்க்கிறது. ஓவியம் என்பது உணர்வைவிட கண்ணுக்கு விருந்தாகும் படைப்பு. கவிதையோ கண்களைவிட உணர்வுக்கு விருந்தாகும் படைப்பு. கோலாலம்பூரில் தேசிய கலைக் காட்சியகத்திற்கு வருபவர்கள் லியொனார்டோ டாவின்சி ஓவியங்களில் இழையோடும் கவிதையை ரசித்து அனுபவிப்பார்கள்.

டாவின்சியின் பின்புலம் அறிந்துகொண்டு அவரின் ஓவியங்களைக் காணும்போது அவை இன்னும் பொருள் செறிந்தவையாகத் தெரிந்தன. வருகையாளர்கள் திறன்பேசிகளில் ஓவியங்களைச் சிறைப்பிடிக்க அலைமோதுகிறார்கள். அதீத கனவுகளோடு வாழ்ந்த ஆளுமையின் நினைவுகளில் மூழ்கியெழ, அவரின் கலைப்படைப்புகளைத் தரிசிக்க இஃது அரிய வாய்ப்பு. அங்கிருந்து விடைபெறும்பொழுது சொல்ல முடியாத சோகம் இழையோடும் மோனா லீசாவின் புன்னகை முகமே மனத்தில் நிறைந்திருந்தது

டாவின்சியின் ஓவியக் கண்காட்சி கோலாலம்பூரில் தேசிய கலைக் காட்சியகத்தில்  (National Art Gallery) 15 ஜூலை முதல் 15 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

லியொனார்டோ டாவின்சியின் ஓவியங்களை ரசித்து மகிழப் போய் வாருங்களேன். உங்களுக்காகத் தேசிய கலைக் காட்சியகம் திங்கள் முதல் ஞாயிறுவரை காலை மணி 10 முதல் மாலை மணி 6 வரை திறந்திருக்கிறது.


   
ஆளுமை

      ‘வெள்ளி நிலவு கவிஞர் வீரமான்நாடறிந்த கவிஞர் வீரமான் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாகக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலை  மணிக்கவிஞர் பாதாசன்வழி அறிந்த சிரம்பான் நண்பர் பெ.அருணாசலம் என்னிடம் கூறினார். அங்கிருந்து வெளியேறிய பின் கிள்ளானில் உள்ள தனியார் சமூகநல இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அடுத்த தகவல் வந்தது. எனக்கு அதிர்வூட்டியது. 
            சில மாதங்களுக்கு முன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைக் கண்டு நலம் விசாரித்து வந்தேன். உடல் நலமடைந்து அங்கிருந்து விடைபெற்றவருக்கு மீண்டும் என்ன ஆனது? ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரைக் காண முகவரி பெற்றுக் கிள்ளானுக்குப் புறப்பட்டேன்.
            இந்நாட்டுத் தமிழாசிரியர்கள், மாணவர்களிடையே கவிஞர் வீரமான் என்றால் உடனே நினைவுக்கு வருபவை எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வுக்குத் தேர்வான அவரின் ஆறு கவிதைகள்தாம். அதிலும் குறிப்பாக, சீனரிடம் எனும் தலைப்பிலான கவிதை மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிகம் கவர்ந்த கவிதை. நம்மிடமிருந்து சீனர்கள் பல பாரம்பரியத் தொழில்களைக் கற்றுக்கொண்டு வணிகம் பெருக்கி வாழ்வில் முன்னேறினார்கள். நாம் அவர்களிடமிருந்து எதைக் கற்றோம்? என அங்கதச் சுவை மிளிர எள்ளல் நடையில் அக்கவிதை அமைந்திருக்கும்.
            தமிழக மண்ணில் பிறந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த கவிஞர் வீரமான், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து கவிதைகளைப் படைத்து வருகிறார். இவரின் கவிதைகள் உணர்ச்சிப் பாங்கும் எளிமையும் எழுச்சியும் மிக்கவை; மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும், இனப்பற்றும் கொண்டவை. மலேசிய வாழ்வைத் தெளிவாகக் காட்டுபவை.
            மாரியப்பன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தமிழகத்தில் கோடியக்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தொடக்கக் கல்வியை இவர் அங்கேயே கற்றார். முதலில் இவரின் தந்தை வீரப்பிள்ளைதான் பினாங்கு வந்தார். “நானும் வரப்போகிறேன்” என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார். “வேண்டாம், வீட்டிலுள்ள வெண்கல சட்டியை விற்றாவது உன்னைப் படிக்க வைக்கிறேன். நீ  தொடர்ந்து படி” என்று அப்பா மறுத்தார். ஆனால், வீரமான் கேட்கவில்லை. பினாங்குக்குக் கப்பலேறிவிட்டார். படிக்கத்தான் இங்கு வந்தார். ஆனால், இந்த மலேசிய மண் அவரை நிரந்தமாய் ஈர்த்து அரவணைத்துக்கொண்டது.1956இல் மலேசியாவிற்கு வந்தவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். பொன்நகை விற்பனைக் கடையில் நீண்ட காலம் பணியாற்றினார். பின்னாளில் இதழியல் துறைக்கு வந்தார். மெய்ப்புத் திருத்தும் பணியும் செய்து வந்துள்ளார். ஆயினும், கவிதைத்துறைதான் மலேசியத் தமிழர்களுக்கு அவரை நன்கு அடையாளங்காட்டியது.
            நல்லாரைச் சேர்ந்தொழுகின் நற்பண்புகள் நிறைவதுபோல், கவிஞர்களை நெருங்கியதால் வீரமான் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். பினாங்கில் அசன்கனி, கரு.திருவரசு, கே.எம்.யூசூப், மூ.சேது  ஆகிய நால்வரும் சேர்ந்து நால்வர் எனும் பெயரில் கவிதை எழுதினார்கள். கையெழுத்து அழகாக இருக்குமென்பதால் வீரமான்தான்


அக்கவிதைகளை எழுதிக் கொடுப்பார். பின்னாளில், காரைக்கிழார், மைதீ.சுல்தான் ஆகியோருடன் வீரமானும் இணைந்து திரிகூடர் எனும் பெயரில் கவிதைகள் எழுதினார்.  அது கவிதை உணர்வுகள் செழித்திருந்த பொற்காலம். கவிபுனையும் ஆற்றலை நன்கு வளர்த்துவிட்டது. தமிழ் மணிமன்றப் பாசறையில் வளர்ந்தவரான இவர் பினாங்கில் அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர். அதன் சொற்பயிற்சி மன்றம் இவரின் திறனை வளர்த்துவிட்டது எனலாம். அதனால்தான்,
                        தமிழணி மணிமன்றம் தந்ததொரு பிச்சையினால்
                        தமிழ்பாடும் கவிஞனென தலைநிமிர்ந்து நிற்கின்றேன்

என்று பாடுகிறார். மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் மாநாடுகளிலும் விழாக்களிலும் நடந்த பாவலரங்குகளில் பங்கேற்றுள்ளார். தலைநகரில் நீண்ட காலம் இயங்கிய கவிதைக்களம் நடத்தியவர்களில் ஒருவராய்த் தொண்டாற்றியுள்ளார். இவர் தம் கவிதைகளைத் தொகுத்து வெள்ளி நிலவு (1979), வீரமான் கவிதைகள் (1994), வீரமான் கவியமுது (2013) ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார். 

            சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழ் நடத்திய வெண்பா போட்டிதான் வீரமானை அறிமுகப்படுத்தியது. தந்தையின் பெயரான வீரப்பிள்ளையோடு தம் பெயரையும் இணைத்து வீரமான் எனும் எனும் பெயரில் போட்டியில் கலந்துகொண்டார். இவருக்குத்தான் முதல் பரிசு. யார் இந்த வீரமான்?” எனப் பலரையும் அது திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பின்னர், பல போட்டிகளில் பரிசுகள்  வென்றுள்ளார். கவிதைத் துறையில் வழங்கிய பங்களிப்புக்காகப்  பல விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ் நேசன் பவுன் பரிசு, தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கக் கவிதைப் பரிசு, டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003), டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு (2017) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

            கவியரசு கண்ணதாசன் பினாங்கு வந்தபோது வீரமான்தான் வரவேற்புக் கவிதை வாசித்தார். மாலைகளைக் கழற்றிப்போட்ட கண்ணதாசன் வீரமானின் வரவேற்புக் கவிதையைப் பத்திரமாக வைக்கும்படி சொன்னாராம். பின்னர் வீரமானை வாழ்த்தி,         
       
                               சேரமான் சிலம்பிற்கண்ட செந்தமிழ் பாடவல்ல    
                           வீரமான் வாழ்க பன்னாள் விளங்கவே கவிதை
என்று எழுதித் தந்தாராம். கண்ணதாசன் தமிழால் வாழ்த்துப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணி மகிழ்கிறார் வீரமான்.
            கடந்தாண்டு,  நண்பர் பெ.அருணாசலம் வீரமான் கவியமுது நூல் வெளியீட்டு விழாவைச் சிரம்பானில் ஏற்பாடு செய்தார். வழக்கமாக நூல் வெளியீடுகளில் குறைவான வருகையாளர்களே கலந்துகொள்கிறார்கள். அதை மாற்றி, வெற்றி விழாவாக்கத் திட்டமிட்டோம்.  நாடு முழுவதும் தமிழாசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களைப் புலனம் வழி தொடர்புகொண்டு ஆதரவு கேட்டோம். எதிர்பாராத வகையில் நூறு பேர் பெயர்களை முன்பதிவு செய்து தம் பங்களிப்பை வழங்கினர். இந்நாட்டு நூல் வெளியீட்டு விழாவில் இப்படியொரு திட்டம் யாரும் செயல்படுத்தியதில்லை. தமிழ்த் தொண்டர் பெ.அருணாசலத்தின் விடாமுயற்சியால், பலரின் பங்களிப்பால் சிரம்பானில் இந்தச் சாதனை படைக்கப்பட்டது. ஐம்பது பேர் கலந்துகொண்டாலும் நூறு பேரின் ஆதரவால் நிகழ்ச்சி சிறப்பானது. உடல்நிலை தளர்ந்த நிலையிலும் கவிஞர் வீரமான் அந்நிகழ்வில் கலந்துகொண்டு தம் அளவிறந்த மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார். காலமெல்லாம் சமூகம் குறித்துச் சிந்தித்த கவிஞரின் உழைப்பை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக அஃது அமைந்தது.            கவிஞர் வீரமானின் மனைவி காலமாகிவிட, இப்பொழுது இவரின் இரண்டு மகன்களும் மகளும் தமிழகத்தில் உள்ளனர்.  ஆயினும், நீண்ட காலமாக இவர் இங்கே, அவர்கள் அங்கே என வாழ்ந்ததால் மலேசியாவில் இருப்பதையே இவரின் மனம் விரும்புகிறது. அதனால்தான், தமிழகம் திரும்பிப் பிள்ளைகளோடு இணையாமல் தம் அந்திம காலத்தை மலேசிய மண்ணில் கழிக்க இவர் மனம் விழைகிறது. கிராமத்தில் இருந்த நிலங்களைத் தம் அண்ணன் தம்பிகளுக்கு எழுதித் தந்துவிட்டார். தஞ்சாவூரில் இருந்த நிலங்களைத் தம் பிள்ளைகளுக்குத் தந்து விட்டார்.  இனி, இவருக்கென்று எதுவும் இல்லை.
            கிள்ளானில், தனியார் சமூகநல இல்லத்திற்குச் சென்று சேர்வதற்குள் என் மனம் பலவற்றை அசை போட்டுப் பார்த்தது. என் எதிர்பார்ப்புக்கு மாறாக, இரண்டு மாடிகள் கொண்ட பெரிய இல்லமாக அஃது இருந்தது. உள்ளே நுழைந்து கவிஞரைத் தேடினேன். பத்துப் பதினைந்து பேர் அங்கே தென்பட்டார்கள். கீழ்த் தளத்தில் வலப்பக்கத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவர் “வாங்க பாலன்” என முகத்தில் புன்னகை மலர வரவேற்றார். வலது காலில் பெரிய கட்டு. தவறிக் கீழே விழுந்ததால் காலில் முறிவு ஏற்பட்டதாகக் கூறினார். அவர் அங்கிருப்பது தெரியாது என்பதால் இன்னும் யாரும் வந்து பார்க்கவில்லை என்றார். உடல் வேதனையும் உள்ளத்தில் சோர்வும் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசினார்.  அங்கு நாளிதழ் வாசிக்கும் வாய்ப்பு இல்லாததால் வெளியுலகத் தொடர்பற்றுத் தனிமையில் இருப்பதாக உணர்கிறார்.
            அது நாற்பது ஆண்களுக்கு அடைக்கலம் தரும் இல்லமாக இருக்கிறது. பெரும்பாலும் முதுமையால் கைவிடப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள். வீரமான் யார் என்பது அங்கு யாருக்கும் தெரியவில்லை. அங்குப் பணியில் இருந்தவர்களிடமும் அதன் உரிமையாளரிடமும் கவிஞரைப் பற்றிக் கூறினேன். கிள்ளானில் வசிக்கும் என் அன்புத் தம்பி செல்வகுமாரை அப்பொழுதே அழைத்துக் கவிஞரின் தேவையைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினேன். “அன்பாய்க் கவனிக்கிறார்கள். இங்கு  குறையொன்றும் இல்லை பாலன்” என்று கைகூப்பி விடை தந்தார்.


            தமிழ்ப்பள்ளியைப் பிறமொழிப் பள்ளியாய் மாற்றிவிடலாம் என ஒரு முறை சமுதாயத்தில் முரணான கருத்து முன்வைக்கப்பட்டபோது கவிஞர்கள் பொங்கியெழுந்து கவிபாடினார்கள். அப்பொழுது வீரமானும் தமிழுக்கோர் அம்மானை எனும் தலைப்பில் எழுச்சிமிகு கவிதையைப் பாடினார். காலத்தின் பதிவாக அஃது என்றும் நிலைத்திருக்கும். அதில் ஒரு கண்ணி:

                         கல்விபெற என்னவழி கற்றோரே சொல்லு”மென்றோம் 
                     கொள்ளிகொண்டு வந்து கொடுக்கின்றார் அம்மானை!
                      கொள்ளிகொண்டு வந்து கொடுக்கின்ற மேதைகட்குச்
                     சொல்லிவைப்போம் இச்சூழ்ச்சி செல்லாதென் றம்மானை!
                                  சூதாட்டக் காயோ சுவைத் தமிழும் அம்மானை!

சமுதாய நலம் காண பாடிய கவிஞரை நாம் சென்று காண்பதும் அவரோடு உரையாடுவதுமே நாம் அவருக்குச் செய்யும் சிறு உதவியாக இருக்கும். உங்களைச் சந்திக்கவும் உரையாடவும் கவிஞரும் ஆவலோடு காத்திருக்கிறார். முகவரி: 
Destiny Klang,
Jalan Petola 10,
Kg Raja Uda,
Port Klang


Friday, July 12, 2019

நினைவுக் கட்டுரை


இலக்கியத் தேனீ
பேராசிரியர் இரா.மோகன் 


டாக்டர் மு.வ. நூற்றாண்டு மலர் வெளியீடு

மதுரையில் பேராசிரியர் இரா.மோகன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அண்மையில் எனக்கு அதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியது. நமக்கு அறிமுகமானவர்களும் அன்பினால் நெருங்கியவர்களும் நம்மைவிட்டு நிரந்தமாய்ப் பிரியும்போது இந்தப் பாழும் மனம் அதை எளிதில் ஏற்பதில்லை. அவர்கள் நம்மோடு பழகிய கணங்களும் சந்தித்துப் பேசியவையும் மனக்கண்ணில் மீண்டும் தோன்றி மறையும். அப்படித்தான் பேராசிரியர் இரா.மோகன் அவர்களுடனான  நினைவுகளை என் மனம் அசைபோட்டுப் பார்க்கிறது.

2004ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமிழகத்திற்கு மேற்கொண்ட இலக்கியப் பயணத்தின்போது மதுரையில் அவரைச் சந்தித்தேன். உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் மணிமொழியன் ஏற்பாடு செய்த இலக்கியச் சந்திப்பில், மலேசிய இலக்கியம்: ஓர் அறிமுகம் எனும் நூலை வெளியிட்டுப் பேராசிரியர் இரா.மோகன் உரையாற்றினார். கேட்பாரைப் பிணிக்கும் நகைச்சுவை கலந்த அவரின் உரை அனைவரையும் ஈர்த்தது. புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அவர் அவை குறித்தும் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய முனைவர் ரெ.கார்த்திகேசு, “சாகித்ய அகாடமி வெளியிடத் திட்டமிட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் மலேசிய இலக்கிய வரலாறும் இடம்பெற வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்னும் அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லையே” என்ற மனக்குறையை முன் வைத்தார். பேராசிரியர் இரா.மோகன் உடனே எழுந்தார். “நீங்கள் மதுரையை விட்டுப் போவதற்குள் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விடுகிறேன்” என்று அவர் கூறிய சொற்களில் உறுதி தெரிந்தது. அஃது உண்மை என்பது அன்றிரவே உறுதியானது. அன்று நள்ளிரவில், மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனைக் கைப்பேசியில் அழைத்து, “முனைவர் ரெ.கா.வுக்கான கடிதம் சென்னையில் சாகித்ய அகடாமி அலுவலகத்தில் தயாராக இருக்கும். சென்னைக்குப் போகும்போது நேரில் பெற்றுக்கொள்ளலாம்” என்ற இனிப்பான தகவலைக் கூறினார். ஒரு செயலை விரைந்து முடிக்கும் அவரின் செயல்திறம் என்னை வியப்பிலாழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியில் தாம் எழுதிய நூல்களை எங்களுக்கு வழங்கினார். அதன் பின்னரே அவரைப் பற்றி ஆழமாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. மு.வ.வின் செல்லப் பிள்ளை எனத் தமிழ்கூறு நல்லுலகத்தில் அழைக்கப்பெறும் இவர், கு.ப.இராஜகோபாலன் சிறுகதைகள் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1972இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சேர்ந்து, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒப்பிலக்கியத்துறைத் தலைவர், புல ஒருங்கிணைப்பாளர், மூத்த பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளார். இவர்தம் நெறிகாட்டுதலில் 24 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். சோர்விலாமல் கடும் உழைப்பில் வாழ்வின் உயர்வை அடைந்தவர் என்பதை இதன்வழி அறிய முடிகிறது.


                            மகள் மருமகனோடு  இரா.மோகன் – நிர்மலா இணையர்

2009இல் மீண்டும்  மதுரைக்குப் பயணம் மேற்கொண்டோம். இம்முறை மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் ம.த.எழுத்தாளர் சங்கமும் இணைந்து, 33 தமிழாசிரியர்களுக்குக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தன. அதைப் பேராசிரியர் இரா.மோகன் முன்னின்று சிறப்பாக ஒருங்கிணைத்தார்; அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று விருந்தோம்பல் செய்தார்; பேருந்துப் பயணத்தில் பட்டிமன்றம் நடத்திக் கலகலப்பூட்டினார்; கோயில்களுக்கும் இலக்கியச் சந்திப்புகளுக்கும் உடன்வந்து துணைநின்றார்; நாடு திரும்பும்வரை சோர்விலாமல் அனைத்துத் தேவைகளையும் சேவகன்போல்  நிறைவுசெய்தார். எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமைய அவர் முக்கியப் பங்காற்றினார்.

ஒரு நாள் அனைவரையும் மதுரையில் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அலங்காரப் பொருள்கள் இல்லை. வரவேற்பறை தொடங்கி உணவருந்தும் இடம்வரை எங்கும் நூல்களே நீக்கமற நிறைந்திருந்தன. இல்லத்தில் நூல்களா? நூல்களுக்குள் இல்லமா?’ என அவற்றை வியந்து பார்த்தோம். அவரின் துணைவி முனைவர் நிர்மலாவும் அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவர்களின் ஒரே அன்பு மகள் மணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட எத்தனை நூல்கள் வாசித்தோம் என்பதுதான் முக்கியம் என்று அறிஞர் கூறிய அமுதமொழிதான் அப்பொழுது நினைவுக்கு வந்தது.

அங்குதான் அவர், தாம் எழுதிய 80 நூல்கள்கொண்ட நிலைப்பேழையைக் காட்டினார். இன்று அந்த எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது. வாழ்நாளெல்லாம் வாசிப்பு, எழுத்து, பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சி, இலக்கியப் பயணம் எனச் சுறுசுறுப்பாக இயங்கிய இலக்கியத் தேனீதான் பேராசிரியர் இரா.மோகன். டாக்டர் மு.வ.வின் நாவல்கள் என்பது இவரின் முதல் நூல் (1972). மு.வ. மீது மிகுந்த பற்றுக்கொண்ட மாணவராக அவர் திகழ்ந்ததின் சான்றாக  அவரைப் பற்றி ஆறு நூல்கள் எழுதியுள்ளார். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் மதுரை மண்ணில் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதிலும் ஈடுபாடு காட்டினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க அழைப்பினை ஏற்றுச் சிறுகதைக் கருத்தரங்கம், புதுக்கவிதைக் கருத்தரங்கம், டாக்டர் மு.வ. நூற்றாண்டு விழா, இலக்கியச் சந்திப்பு, நூல் வெளியீடு எனப் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற பலமுறை மலேசியாவுக்கு வந்துள்ளார். ஒருமுறை சிறுகதைக் கருத்தரங்கில், தேர்வுபெற்ற  இருபது சிறுகதைகளைப் பற்றி கருத்துரை வழங்கினார். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் எல்லாக் கதைகளையும் அலசி ஆராய்ந்து இவர் பேசினார். இவரின் நினைவாற்றல் கண்டு  அனைவரும் வியந்தோம்.

சிறுகதைக் கருத்தரங்கம் முடிந்த மறுநாள், கெந்திங் மலைக்குச் செல்ல வேண்டும் என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார். டாக்டர் மு.வ.வின் மாணவருக்கு ஒருநாள் சாரதியாக உடன் இருந்து உதவும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்காக மகிழ்ந்தேன். பத்துமலையில் முருகனைத் தரிசித்துவிட்டுக் கெந்திங் புறப்பட்டோம்.   மலையை அடையும் வரை வழிநெடுக உற்சாகமாகப் பேசியபடி வந்தார். மலையைச் சூழ்ந்த பசுமை அழகையும் அதன் உச்சியில் அமைந்த கட்டட நேர்த்தியையும் ரசித்தார்.

மாலை திரும்புகையில் டாக்டர் மு.வ. வோடு பழகிய அவரின் அனுபவம் பற்றி நான் ஆர்வத்தோடு கேட்க அவற்றை ஆசையாய்க் கூறினார். தம் காதல் வாழ்விலும் மு.வ.தான் துணை வந்ததாகக் கூறினார். எப்படி என்றேன். தம்முடன் முதுகலை பயின்ற  மாணவியிடம் ஒரு நாள் கையில் வைத்திருந்த நூலை நீட்டி “நல்வாழ்வு வேண்டுகிறேன்” என்றாராம். அதை வாங்கிய மாணவிக்கோ குழப்பம். நூலைப் பார்த்தார். நூலின் தலைப்பு நல்வாழ்வு’. அது டாக்டர் மு.வ.வின் நூல். ஒரு நூலைக் கொடுத்துத் தம் காதலை அழகாகச் சொன்ன விதம்  வியப்பாக இருந்தது. அந்த மாணவிதான் அவரின் துணைவியார் முனைவர் நிர்மலா அவர்கள். திருமணத்திற்கு முன்னால் இவர் தம் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, அன்புள்ள நிலாவுக்கு என்ற நூல் வெளிவந்துள்ளது.                      மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் திரு. கந்தசாமி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைத்தபோது மறுக்காமல் மலேசியா வந்தார். செர்டாங் நண்பர் இராஜேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்விழாவில் நானும் இணைந்துகொண்டேன். எழுத்தாளர்களின் நூல் முயற்சிகளுக்கு அணிந்துரை வழங்கி ஒல்லும்வகையெல்லாம் துணைநின்றுள்ளார். அவை தொகுக்கப்பட்டு, இலக்கியக் கோலங்கள்’, முன்னுரை நாற்பது என இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

2015இல் 9ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு இங்குத் துணைவியாரோடு வந்தபோது, அவர்கள் தனித்தனியே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் துணைவியிடம் இருந்ததால் ஒன்றாகத் தங்கும் வசதியைக் கேட்டிருக்கிறார். முடியாது என்று ஏற்பாட்டுக் குழுவினர் மறுத்துவிட்டனர். உடனே, உதவிக்கு வந்த நண்பர் ஹில்டன் தங்கும் விடுதிக்கு இருவரையும் அழைத்துப் போனார். ஏற்பாட்டுக் குழுவினரை நண்பர் கடுமையாகத் திட்ட, “வேண்டாம் ஐயா. அவர்களைத் திட்டாதீர்கள். அவர்கள் நிலை அப்படி. நாம்தான் பொறுத்துப் போக வேண்டும்” என்று அந்தச் சூழலிலும் அமைதி காத்தார் பேராசிரியர் இரா.மோகன்.

நுண்மாண் நுழைபுலம்மிக்க பேராசிரியராய், இலக்கிய இதயங்களில் நீங்காமல் வீற்றிருக்கும் இலக்கியவாதியாய், எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்தினராய், நகைச்சுவைப் பேச்சில் பழகுவோரை எளிதில் ஈர்ப்பவராய், மற்றவரைக் கடிந்து பேச அறியாதவராய், இம்மண்ணில் 69 ஆண்டுகள் வாழ்ந்த பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா’, இது அவரின் கைப்பேசியின் அழைப்பொலி. வாழ்வில் குறை மறந்து நிறை மட்டும் காணும் உயர்ந்த உள்ளம் அவருடையது.


                                    என் நூலைப் பெறுகிறார் இரா.மோகன்

டாக்டர் மு.வ. அவர்களுக்கு மாணவர்கள் பலருண்டு. ஆனால், இவர் தம் சொல்லால், செயலால், எழுத்தால், மு.வ.வைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். இலக்கியத்தில் பழைமையும் புதுமையும் போற்றும் பண்பாளராக மிளிர்ந்தார். முதல் நாள் கம்பன் பட்டிமன்றத்தில் பேசுவார். மறுநாள் புதுக்கவிதை நூலுக்கு அணிந்துரை எழுதுவார்.

ஒரு மரணத்தில் என்ற கவிதையில் கடைசி வரிகளாய் நான் எழுதியவை நினைவுக்கு வருகின்றன.
                                                தன் குறிப்பேட்டில்
                                                ஒரு பெயரைக்
                                                குறித்துக்கொண்டோ
                                                அழித்துவிட்டோ
                                                காலம் மௌனமாய்க்
                                                கடந்து போகிறது

தமிழ்கூறு நல்லுலகப் பேரேட்டில் பேராசிரியர் இரா.மோகனின் பெயர் என்றும் நிலைபெற்று வாழும் என்பது உறுதி. இறந்தாலும் தொடர்ந்து வாழ்விக்கும் அரிய கலைதான் எழுத்து என்பதை மறுப்பார் யாருமுண்டா?
                 இரா.மோகன் மலேசிய நூலை வெளியிட தமிழண்ணல் பெறுகிறார்                                                      (மயில் இதழ் - ஜூலை 2019)