நம் குரல்

Sunday, June 26, 2022

 இதுபோல் வாய்க்குமா நாய்களுக்கு வாய்ப்பு?


பேச் என்ற பத்து வயது நாய்,  கணையம் பாதிக்கப்பட்டுக் கடந்த வியாழன் காலமானது. 

இரு முன்னம் கால்களும் அடிபட்டு மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பேச்,  நாய் மீட்போர் இயக்கத்தால் தத்து எடுக்கப்பட்டுப் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு 2  1/3  பகுதிக் கால்களுடன் மீண்டு வந்தது. 

வாடிய நாய்களைக் கண்டபோதெல்லாம் வாடும் நல் உள்ளங்களின் அன்பினால் 10 வருடம் நிறைவாக வாழ்ந்து முடித்துள்ளது பேச். அதனோடு கழித்த இனிய நினைவுகளை இன்று நாளிதழில் சிலர் பகிர்ந்துள்ளனர். 

அதன் நல்லடக்க சடங்கிற்கான அனைத்துச் செலவுகளையும் நிர்வாணா ஆசியா குழுமம்  ஏற்றுக்கொண்டுள்ளது. 

நாயை நாயாகப் பார்க்காமல் சக உயிரியாகப் பார்க்கும் உயர்ந்த உள்ளங்களைப் போற்றுவோம். 

 

எஸ்.பி.எம். தமிழ்மொழி

தேர்வுத் துணைவன்

எஸ்.பி.எம். தேர்வில் நம் மாணவர்கள் பலரின் சிறந்த தேர்ச்சிக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும்   முக்கியப் பாடங்களாய் அமைவதை மறுக்கவியலாது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில், தமிழ்மொழி பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு  உதவும் நோக்கில் புதிய நூலாக எஸ்.பி.எம். தமிழ்மொழி (தாள் 2) – தேர்வுத் துணைவன் எனும் தேர்வு வழிகாட்டி  வெளிவந்துள்ளது. இதனை ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்தலில் பல்லாண்டுகள் அனுபவமிக்க இவர் எழுதிய இரண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நூல்கள் தற்பொழுது மாணவர்களுக்கு  வழிகாட்டும் நூல்களாகப் பயன்பாட்டில் உள்ளன.

எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தில் புதிய தேர்வுத்தாள் அமைப்புக்கு ஏற்ப, , தாள் 2இல் விடையளிக்கும் நுணுக்கங்களைக்  கற்றுத்தரும் நோக்கத்தில் இந்நூல் வெளிவருகிறது. கேள்வி வாரியாகத் தலைப்புகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் விளக்கமும் மாதிரிக் கேள்விகள் – விடைகள் ஆகியவற்றோடு பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மாணவர்களின் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாதிரித்தேர்வுத் தாள்கள் அடங்கிய பயிற்சி நூல்களைப் பெற்று விடையெழுதிய மாணவர்களுக்குக் கேள்வி வாரியான வழிகாட்டலும் பயிற்சியும் நிறைந்த பயனைத் தரும் என்பது உறுதி. ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் இஃது அமைந்துள்ளது.

தேர்வில் சிறந்த தேர்ச்சிக்கு விடாமுயற்சியும் தொடர்ப் பயிற்சியும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மற்றத் தேர்வுப் பாடங்களில் எண்ணிறந்த பயிற்சி நூல்களும் மாதிரித் தேர்வுத் தாள்களும் உள்ளன. ஆனால், தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக்  குறைவு. அந்தக் குறைநீக்க இந்த நூல் நிச்சயம் உதவும். படிவம் 4 & 5 மாணவர்கள் இந்நூலை வாங்கிப் பயன் பெறலாம்.

 மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறைய படங்களோடும் அழகிய வடிமைப்பிலும் 320 பக்கங்களில் குறைந்த விலையில் இந்நூல் உருவாகியுள்ளது. இந்நூலைப் பெற விழைவோர் 012 6025450 (.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள்வழி  இந்நூலைப் பெறலாம்.

 

 

 

படிவம் 4 & 5 - தமிழ் இலக்கியம்

தேர்வுக் களம்


இடைநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் இவ்வாண்டு முதல் (படிவம் 4)  அறிமுகமாகியுள்ளன. டாக்டர் மு.வரதராசனின் வாடா மலர்’, பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகம், ‘கவிதைப் பொழில் (12 கவிதைகள்) ஆகியன அவையாகும். இவ்வாண்டு படிவம் நான்கில் பயிலும் மாணவர்களுக்கு  உதவும் நோக்கில் புதிய பாடநூல்களுக்கான வழிகாட்டி நூலாகத் தேர்வுக் களம் வெளிவந்துள்ளது.

இலக்கியம் கற்பதிலும் கற்பித்தலிலும் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவும் நோக்கில் இந்த இலக்கிய வழிகாட்டி நூல் தயாராகியுள்ளது. இந்நூலை இலக்கிய ஆசிரியர் .பச்சைபாலன் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியப் பரப்பில் தம் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் .பச்சைபாலன், எஸ்.பி.எம். மாணவர்களுக்காக ஏடுகளில் இலக்கியப் பாடத்திற்கான கட்டுரைகளைப் படைத்து வருகிறார். படிவம் 4 & 5 மாணவர்களுக்கு இணையம்வழி தமிழ்மொழி, இலக்கிய வகுப்புகளை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. புதிய தேர்வுத்தாள் அமைப்பு பற்றிய விளக்கமும் உள்ளது. மேலும், நூறு பக்கங்களில் மாதிரிக் கேள்விகளும் அவற்றுக்கு முழுமையான விடைகளும் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் உள்ளதால் அவை சிறந்த பயனைத் தரும்.

தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் மாணவரையும் ஆசிரியரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. 2024வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் இரண்டு முதல் நான்குவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.

இந்நாட்டில்  அரை ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

 கடந்த ஆண்டு, தமிழ் இலக்கியத் தேர்வு எழுதிய மாணவர்கள் சிறந்த தேர்ச்சியை (94.1%) அடைந்துள்ளனர். அவர்களுள் 46.4%  மாணவர்கள் A+, A, A- தேர்ச்சி நிலையைப் பெற்றுள்ளனர். தமிழோடு தமிழ் இலக்கியமும் சிறந்த தேர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதால் தமிழ் மாணவர்கள் இலக்கியமும் பயில்வதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.

 352 பக்கங்களில் அழகிய வடிவமைப்பில், வெளிவந்துள்ள இந்நூலைப் பெற விழைவோர் 0126025450 (.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 


திரை விமர்சனம்

 

மலேசியத் திரைப்படம்

மூன்றாம் அதிகாரம்
மறவன், ஆசான் ஆகிய திரைப்படங்களையும் அசுர வேட்டை, இறைவி திருமகள் காடு ஆகிய தொடர் நாடகங்களையும் வழங்கிய எஸ்.டி. புவனேந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படம் மூன்றாம் அதிகாரம் ஜூன் 23ஆம் முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது

தமிழகத்தில் திரைப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட இவரின் படைப்புகளில் தனித்தன்மைகளைக் காணமுடியும். நடிப்பு, இசை, பாடல்கள்திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி  அனைவரையும் ஈர்க்கும் படமாக  உருவாக்குவதில் கடும் உழைப்பைத்  தருபவர் எஸ்டி புவனேந்திரன். அந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் வகையில் மலேசிய ரசிகர்களின் மனங்களை ஆட்சி செய்ய மூன்றாம் அதிகாரத்தோடு வந்துள்ளார் எஸ்டி புவனேந்திரன்.

 இளம்பெண் ஒருவர் காணாமல் போகிறார். அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர். அவர்களின் சந்தேக வளையத்துக்குள் வந்து போகும் பலரைச் சுற்றிக் கதை நகர்கிறது. தடயவியல் நிபுணர் ஒருவரின் வருகையும் அவரின் செயல்பாடும் கதையை வேறு திசையில் நகர்த்துகிறது.  படத்தின் தொடக்கத்தில் பற்றிக்கொள்ளும் பரபரப்பு கடைசிக் காட்சிவரை நீடித்து நம்மைப் படத்தோடு ஒன்றிவிடச் செய்கிறது.

 படத்தில் ஒவ்வொருவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ஹரிதாஸ், ஜிப்ராயில், கே.எஸ்.மணியம், கவிதா தியாகராஜன், சுரீதா, சரேஸ், ஹம்சினி, குபேன் என நடிகர்கள் தேர்வும் அவர்களின் நடிப்பும் படத்தின் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, ஹரிதாஸ், ஜிப்ராயில் ஆகிய இருவரும் தங்கள் அசாத்திய நடிப்பால் ஈர்க்கின்றனர்.

கதைக்களத்திற்கு ஏற்ப பாலன்ராஜ், ஜெகதீஸ் ஆகியோரின் விறுவிறுப்பான பின்னணி இசையும் காதுக்கினிய பாடல்களும் கவர்கின்றன. திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு ஆகிய ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தியுள்ளார்  இயக்குநர் எஸ்டி. புவனேந்திரன்.படத்தில் கதைக்கு ஏற்ற அறிவியல் சார்ந்த தரவுகளை நன்கு ஆராய்ந்து இணைத்து நம்பகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளனர். திகில், மர்மம், காதல், சோகம், நகைச்சுவை எனச் சுற்றிச் சுழலும் கதையில் இழையோடும் அப்பா – மகள் பாசம் நம் மனத்தை நெகிழ வைக்கிறது. தகவல் ஊடகங்களில் கசியும் நம் தனிப்பட்ட தரவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்களே ஊகிக்கும்படி அமைத்திருப்பதால் படம் முடிந்தும் ரசிகர்களுக்கு அது பேசுபொருளாக இருப்பதை மறுக்க முடியாது. போலீஸ் துப்புத் துலக்கும் விதமும் அதற்குச் சவால் விடும் வில்லன்களின் வியூகமும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

படத்தைப் பார்த்து முடிக்கும்பொழுது   வாழை இலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவை ருசித்துச் சாப்பிட்ட உணர்வே மேலோங்குகிறது. அந்த அளவுக்கு மலேசிய ரசிகர்களின் உணர்வுக்கும் சிந்தனைக்கும் முழுமையான விருந்து பரிமாறியுள்ளார் இயக்குநர் எஸ்டி.புவனேந்திரன்.

 ஆசான்மறவன் திரைப்படங்களைப் போலவே மூன்றாம் அதிகாரமும் வெற்றிப்படப் பட்டியலில் இணைகிறது. அனைவரும் திரையரங்குகளில் குடும்பத்துடன் காண வேண்டிய படம் இது.