நம் குரல்

Saturday, July 9, 2022

 தான்ஸ்ரீ சுப்ரா -  சில நினைவுகள்



1986 ஆம் ஆண்டு. நான் எழுதிய மௌனம் கலைகிறேன் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கும்படி டத்தோ சுப்ராவை அழைக்க  டாமான்சாராவில் அவர் அலுவலகம் சென்றேன். அப்பொழுது அவரின் உதவியாளராக இருந்த எழுத்தாளர் வீ. செல்வராஜ் டத்தோ சுப்ராவைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார். அரசியல் பின்புலம் இல்லாத இளைஞனான என்னிடம்  மிகுந்த அன்போடும் மரியாதையோடும் உரையாடினார் டத்தோ சுப்ரா. நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்க மகிழ்வோடு ஒப்புக்கொண்டார்.

நான் பிறந்து வளர்ந்த ரவாங் சுங்கைச் சோ தோட்டக் கோயில் மண்டபத்தில் நூல் வெளியீடு நடைபெற்றது. 

ம இ கா துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ சாமிவேலுவும் டத்தோ சுப்ராவும் மோதிக்கொண்ட காலகட்டத்தில் இருவரின் ஆதரவாளர்களால் தோட்டமே பிளவுப்பட்டுப் போனது. பள்ளி மாணவனாக  இரு தரப்பின் வாய்ச்சண்டைகளைப் பார்த்திருக்கிறேன். 

டத்தோ சுப்ரா தோட்டத்துக்கு வருகிறார் என்றதும் ஒரு பரபரப்புக் காய்ச்சல் தோட்டத்தில் பரவி விட்டது. தோட்ட நிர்வாகி என்னை அழைத்து தகவலை உறுதிப்படுத்தினார். அது மட்டுமா? டத்தோ சுப்ராவை வரவேற்க அவரே ஏற்பாடுகளைச் செய்தார். 





நூல் வெளியீட்டுக்குப் பெரும் திரளாக மக்கள் திரண்டார்கள். நாளிதழ் செய்தியைப் பார்த்து சுற்றுவட்டார தோட்ட மக்களும் கலந்து கொண்டார்கள்.

எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி குமணனும் கலந்து சிறப்பிக்கச் சம்மதித்தார். ஆனால் வீட்டில் காலில் கண்ணாடி விழுந்து சிறுவிபத்து ஏற்பட்டதால் அவரின் பிரதிநிதியாக வானம்பாடி தியாகு கலந்து கொண்டார்.  

குத்துவிளக்கு ஏற்றி  நூலை வெளியிட்டு டத்தோ சுப்ரா  உரையாற்றினார். அந்த நூல் வெளியீட்டுக்குப் பிறகு அத்துணைப் பெரிய கூட்டத்தைத் திரட்டுவது எனக்கு எப்போதும் சாத்தியமாகவில்லை. நூல் வெளியீட்டின் ஞாபகங்கள் என் நினைவுப் பிடியில் இன்னும் இறுக்கமாக இருக்கின்றன.

மஇகாவில் தலைமை பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பு தான்ஸ்ரீ சுப்ராவுக்குக் கடைசிவரையில் கைகூடாமல் போனது. யாரையும் ஈர்க்கும் வசீகரம் , இனிமையாகப் பழகும் தன்மை, அதிர்ந்து பேசாத குணம்      தான்ஸ்ரீ சுப்ராவை மக்களின் தலைவராக மக்கள் மனங்களில் நிலைபெறச் செய்தன.



மரணம் எல்லாப் பெயர்களையும் அழித்து விடுகிறது. சிலரின் பெயர்களையே அடிக்கோடிடுகிறது. மலேசிய இந்தியர்களின் அரசியல் ஏட்டில் அழிக்க முடியாத பெயராக தான்ஸ்ரீ சுப்ராவின் பெயர் நிலைத்திருக்கும்.


Friday, July 1, 2022

 

புக்கிட்  ஜாலிலில் Tsutaya Books


ஜப்பானின் மிகப்பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனம், ஜூலை ஏழாம் தேதி கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் தனது கிளையைத் திறக்கிறது.  31,000 சதுர அடியில் 264 000 ஜப்பான், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

அங்கு உள்ள கடையில்  சுவைபானம் அருந்திக்கொண்டே புத்தகங்களைக் கண்ணோட்டமிடும் வாய்ப்பு உண்டு.

இனி மின்னூல்தான். அச்சில் வரும் நூல்கள் காணாமல் போய்விடும் என்று பல கதைகளைக் கேட்டோம்.






அப்படியெல்லாம் இல்லை.
  அச்சில் வரும் நூல்களுக்கும் இன்னும் விற்பனை வாய்ப்பு உள்ளது என்பதை இஃது உறுதிப்படுத்துகிறது.

2030க்குள்  மலேசியாவில் இந்நிறுவனம் 55 கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

எல்லாம் சரி. அங்குத் தமிழ் நூல்கள் கிடைக்காதா என்று நாம் கேட்கலாம். மலேசியத் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம்  என்ற ஒன்றை அமைத்துக் கோரிக்கை வைத்தால் அதற்கு வாய்ப்பு அமையலாம்.