மனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்
நம் குரல்
Saturday, July 10, 2010
போராட்டக் கும்மி
விட்டுவிட்டு நம் மீது
சாட்டையடி விழுகிறதே
நமக்கு உறைக்கிறதா?
ஓரிடத்தில் நட்டுவைக்க
ஆணிகள் வருகின்றன
கண்களுக்குத் தெரிகிறதா?
நம்மை மாட்டிவைக்கச்
சிலுவைகள் தயாராகின்றன
சிந்தைக்கு எட்டுகிறதா?
இன்னும் எத்தனை நாட்களுக்குச்
செவிமடலைக் காயப்படுத்தும்
சிங்கார வசனங்கள்?
உயிரை உருக்கி உருக்கி
இதயங்களில் இனிப்பை வார்க்கும்
வளமான வாக்குறுதிகள்?
இன்னும் எத்தனை நாட்களுக்கு
கண்களையே குருடாக்கும்
கலர்க்கனவுகள்?
நம்பிக்கை பலூன்களைத்
துளைபோடும்
ஏளன ஊசிகள்?
முட்களாய் மாறிப்
பாதங்களையே பதம்பார்க்கும்
பாதுகைகள்?
சிலுவையில் அறைந்தால்
உயிர்த்தெழுதல்
எப்போதுமா சாத்தியம்?
ஆயினும் உயிர்த்தெழுவோம்
நம் இரத்த நாளங்களில்
உயிர் அணுக்களின்
போராட்டக் கும்மி
இன்னும் தொடருவதால்....
மூவாயிரம் ஆண்டுகளாய்
முன்னோரின் மரபணு
இந்நாளும் நம்முள்
இழையோடுவதால்...
நம் முன்னே வாழ்ந்த
நல்லோரின் அறநெறிகள்
நம்மை வழிநடத்துவதால்...
செம்மொழியாம் உயிர்மொழி
உணர்வைப் புதுப்பித்துக்
காலந்தோறும் கனவுகள் ஈந்து
சிந்தையைச் சீராக்குவதால்..
நம்பிக்கை நாற்றுகள்
மனவெளியெங்கும் வேர்பிடித்து
பச்சை இரத்தமாய் நம்முள்
மண்டிக்கிடப்பதால்...
வஞ்சகமில்லாமல் எந்நாளும்
வேர்வையைச் சிந்த
இந்த இனம்
சித்தமாயிருப்பதால்...
தொன்மையின் வேர்கள்
ஆலமரமாகி
வாழும் மண்ணோடு நம்மை
வாழ்விப்பதால்...
அடிக்கப்பட்ட ஆணிகளே
தெறித்துப்போக...
நாம் உயிர்த்தெழுவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment