நம் குரல்

Saturday, December 11, 2010

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதைத் தொகுப்பு (சை.பீர்முகம்மது)



இலக்கிய வகைகளில் நாவலை அடுத்துத் தோன்றிய சிறுகதை இன்று வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கையும் பெரும் வரவேற்பையும் பெற்றிருப்பதை மறுக்க முடியாது. நாவலைப் போன்று முழு வாழ்க்கையையோ வாழ்க்கையின் பல கூறுகளையோ பதிவுசெய்யும் நிலை சிறுகதைக்கு இல்லை. வீட்டின் சன்னலைத் திறந்தால் கண்ணுக்குத் தெரிகிற காட்சி போன்று வாழ்வின் ஒரு சிக்கலை, அனுபவத்தை, மனநிலையை அல்லது உணர்வுநிலையைப் பதிவு செய்யும் ஆற்றல் மிக்கது சிறுகதை இலக்கியம். பரபரப்பான இன்றைய அவசர யுகத்தில் ஒரு பேருந்துப் பயணத்திலோ இரயில் பயணத்திலோ சில மணித்துளிகளில் படிக்கும் வகையில் வாசகன் நெஞ்சுக்கு நெருக்கமாக சிறுகதைகள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் வாசிப்பவர் மனங்களைத் தொடுவதாக, உணர்வூட்டி எழுச்சியடையச் செய்வதாக, ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதாக, சிந்தனைத் தீக்குச்சிகளைத் கொளுத்திப் போடுவதாக சிறுகதைகள் அமைவதுண்டு.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைத் துறையில் தனக்கென அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சை.பீர்முகம்மது. 1959இல் சிறுகதைகள் மூலமாக இலக்கியத்துறையில் நுழைந்து இன்று கவிதை, நாவல், பயணக்கட்டுரை எனப் பல தளங்களில் பயணித்து வருகிறார். ‘வெண்மணல்’ சிறுகதைகள், ‘பெண்குதிரை’ நாவல், ‘கைதிகள் கண்ட கண்டம்’ பயணக்கட்டுரை, ‘மண்ணும் மனிதர்களும்’ வரலாற்றுப் பயணக்கட்டுரை, ‘திசைகள் நோக்கிய பயணம்’ கட்டுரைகள் - இவை படைப்பிலக்கியத்திற்கு இவர் இதுவரை அளித்துள்ள பங்களிப்பாகும். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் 50 ஆண்டுச் சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டும் என்ற இவரின் பரந்த நோக்கையும் அயராத உழைப்பையும் இதன்வழி அறிய முடிகிறது.

இவரோடு இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய பலர் துறவறத்துக்குப் போனாலும் இவரோ 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியான இலக்கியத் தவத்தை மேற்கொண்டு வருகிறார். சிறுகதை வயலில் இறங்கி இவர் தொடர்ந்து உழைத்தற்குச் சான்றாக - அறுவடையை அளந்து பார்ப்பதுபோல் இவரின் 20 கதைகள் அடங்கிய ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ சிறுகதைத்தொகுப்பு திகழ்கின்றது.தொடக்ககால சிறுகதை முதல் அண்மையில் எழுதப்பட்ட சிறுகதை வரை இவரின் 50ஆண்டுகால இலக்கியத் தடத்தையும் இந்தக் கதைசொல்லியின் இலக்கியப் பரிணாமத்தையும் இக்கதைகள் பேசுகின்றன.
ஓர் இலக்கியப் பிரதி என்பது சாதாரண வாசகனைப் பொறுத்தவரை அது அவனது வாசிப்புத் தட்டில் பரிமாறப்பட்ட சுவையான படையல். அவனது புலன்களுக்குக் கிளர்ச்சியூட்டி மொழியால் வசீகரித்து கணநேர இன்பத்துக்குள் ஆழ்த்தினாலே போதும். அவன் பிறவிப் பயனை அடைந்து விடுவான். அதற்குப் பிறகு அந்த இலக்கியப் பிரதிக்கும் அவனுக்குமான உறவு, தொடர்பு அற்றுப்போய்விடும். ஆனால், ஓர் இலக்கியப் படைப்பை, படைப்பாளனின் பின்னணியோடு ஆழ்ந்து நோக்கினால்தான் படைப்பாளனின் வாழ்வு குறித்த பார்வைகள், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் எத்தனிப்பு, மொழி ஆளுமை, படைப்பை உருவாக்குவதில் அவனுக்கு வசப்பட்ட செய்தொழில் நேர்த்தி, எல்லாவற்றையும் சொல்லிவிடாமல் வாசகனுக்கும் மிச்சம் வைக்கும் பாங்கு, நேரிடையாகச் சொல்லாமல் குறியீட்டு உத்தியில் சொல்லும் நிலை, அவனின் பலம் - பலகீனம் யாவும் புலப்படும். இத்தகைய பருந்துப்பார்வையோடு கூடிய விழிப்புணர்வோடு இந்தச் சிறுகதைத் தொகுப்பை அணுகினால்தான் இதனை ஆழமாகப் புரிந்துகொண்டு அனுபவித்து ரசிக்க முடியும்.

50 ஆண்டுகள் காலக் கட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதால் இவை பல்வேறு கதைக்களங்களைக் கொண்டிருக்கின்றன. தொடக்கத்தில், சமூகத்தின் விளிம்பு மனிதர்களை, அவர்களின் அவலங்களை, வாழ்க்கை நெருக்கடிகளைப் பதிவு செய்யும் எத்தனிப்பைச் சில கதைகளில் காண முடிகிறது. ‘சிவப்பு விளக்கு’, ‘உண்டியல்’, ‘நெஞ்சின் நிறம்’, ஆகிய கதைகளில் பிச்சைக்காரர்களின் அவல நிலையைக் காட்டும் அதே வேளையில் சமூகப் போக்கையும் இடித்துரைக்கும் கோபத்தையும் உணர முடிகிறது. ‘சிவப்பு விளக்கு’ சிறுகதையில் தன்னோடு பிச்சையெடுத்த அமீது, ஆபெங் ஆகிய இருவரும் முறையே அரசு உதவிலும் சுய முயற்சியிலும் முன்னேறிவிட, காளிமுத்து அனாதையாக இறந்துபோகிறான். அரசின் ஆதரவுக் கரம் நீளாமல் சுயமுயற்சியும் இல்லாமல் தவிக்கும் இன்றைய தமிழர்களின் நிலையை இக்கதை அன்றே பதிவுசெய்திருக்கிறது. ‘உண்டியல்’ சிறுகதையில் நூலகம் அமைக்க நிதி கேட்டு உண்டியல் ஏந்தும் தொண்டர்களுக்கு மனிதர்கள் யாரும் உதவ முன்வராதபோது ஒரு பிச்சைக்காரன் பணம் தந்து உதவுகிறான். ‘நெஞ்சின் நிறம்’ சிறுகதையில் பேருந்து டிக்கெட் வாங்க பணம் இல்லாத பள்ளிக் குழந்தையைக் கண்டெக்டர் இறக்கிவிட முனைந்தபோது ஒரு பிச்சைக்காரன் உதவ முன்வருகிறான்.

‘ஆண்டவனுக்கு ஆண்டவன்’, ‘வெடித்த துப்பாக்கிகள்’ ஆகிய இரண்டும் வரலாற்றுப் பதிவுகளாக அமைந்துள்ளன. ‘ஆண்டவனுக்கு ஆண்டவன்’ சிறுகதையில் சயாம் மரண ரயில்வே அமைக்கும் பணியில் வெறி பிடித்த ஜப்பானியர்களிடம் மாட்டிக்கொள்ளும் சந்தனசாமி, பின்னர் கொடுமைக்கார கர்னல் இம்மாசாகியால் தப்பித்து மலாயாவுக்குத் திரும்புகிறான். திடீர் திருப்பம் அதிர்ச்சியூட்டுகிறது. மனிதாபிமானத்தை எழுத்தாளரின் எழுதுகோல் உயர்த்திப் பிடிக்கிறது. ‘வெடித்த துப்பாக்கிகள்’ சிறுகதையில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடப் புறப்படும் குழுவில் மூன்று வீரர்கள் ஓர் அதிகாரியைக் கொல்ல முயல, அம்மூவரின் உயிரையும் அந்த அதிகாரியே காப்பாற்றுகிறார். இங்கும் மனிதாபிமானமே வெற்றிபெறுகிறது.

இவற்றிலிருந்து மாறுபட்ட கதைக்களங்களையும் மற்ற கதைகளில் காணமுடிகிறது. சமூகப் பொறுப்புணர்ச்சியையும் அவலம் கண்டால் பொங்கும் அறச்சீற்றத்தையும் இவரின் கதைகளில் அடிநாதமாக இழையோடி வருவதைக் காணலாம். பழம்பெருமை பேசிக் காலங்கழித்தல், ஏழ்மையிலும் சினிமாப் பித்திலும் மாட்டி அல்லறுதல், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தஞ்சமடையும் மனிதர்கள், கோயில் பொறுப்புகளில் உள்ளவர்கள் கலையையும் கலைஞர்களையும் மதிக்காத அவலம், அதிகாரத்தை தவறாகச் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகள், சாதியால் உண்டாகும் பிணக்குகள் என பல்வேறு களங்களில் இவரின் கதைகள் உருவாகியுள்ளன.

அண்மைய சிறுகதைகளில் சமூகச் சிக்கலை முன்னிலைப்படுத்தும் கதைகளுக்கு நிகராக தனி மனித உணர்வுகளை மையப்படுத்தும் கதைகளிலும் இவரின் கவனம் திரும்பியிருப்பதைச் சில கதைகள் உறுதிப்படுத்துகின்றன. ‘உக்கிரப் பாம்பு’ சிறுகதையில் சக பால்வெட்டுத் தொழிலாளி தங்கமாவின் வளர்ச்சி கண்டு பொறாமைத் தீயில் சிக்கி அல்லலுறுகிறாள் தனலெட்சுமி. ‘பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்’ கதையில் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் நட்புக்கு முதல் மரியாதை செய்யும் பயாஸ்கோப் மாரி வாசகன் நெஞ்சில் நிறைகிறான்.

கதை சொல்லும் கலையில் இந்தக் கதை சொல்லி நன்கு தேர்ந்திருப்பதை ஒவ்வொரு கதையும் மெய்ப்பிக்கின்றது. கதைகளை வாசிக்கத் தொடங்கினாலே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும் வகையில் ஆற்றொழுக்கு போன்ற மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கிறது. அங்கதமும் கிண்டலும் கேலியும் அடிநாதமாகப் பல கதைகளில் இழையோடி வருகின்றன. சுவையான, யதார்த்தமான உரையாடல்கள் வாசகனின் கையைப் பிடித்து கதைக்குள்ளே அழைத்துப்போகின்றன.

‘எலும்புக்கூடு’, ‘குருதி கசியும் கேமரா’, ஆகிய கதைகள் மாறுபட்ட உத்திகளால் நம் கவனத்தைக் கவருகின்றன. ‘எலும்புக்கூடு’ சிறுகதையில் அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எலும்புக்கூடு தன் வரலாற்றைக்கூறுவதாக கதை அமைந்துள்ளது. தோட்டத் தொழிற்சங்கத் தலைவரான கலியமூர்த்தி தோட்ட நிர்வாகத்தோடு ஏற்பட்ட தகராற்றின் காரணமாக வெட்டிக்கொல்லப்படுகிறான். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த அவன் மற்ற சாதிக்காரர்கள் இடுகாட்டில் புதைக்கப்பட்டதால் தோண்டப்பட்டு அவன் சாதிக்கார இடுகாட்டில் புதைக்கப்படுகிறான். வழக்கு நீதிமன்றம் போய் உடல் தோண்டப்பட்டு மீண்டும் உயர் சாதிக்காரர்கள் இடுகாட்டில் புதைக்கப்படுகிறது. வழக்குச் செய்திகள் பத்திரிகையில் பரபரப்பாகி எலும்புக்கூடு தோண்டியெடுக்கப்பட்டு கண்ணாடிப்பெட்டிக்குள் அடக்கம் செய்து அருங்காட்சியகத்திற்குள் வைக்கப்படுகிறது. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக சுற்றித்திரிந்த கலியமூர்த்தியின் ஆவி எலும்புக்கூட்டுக்குள் நுழைந்து விடுவதாகக் கதை முடிகிறது. சாதிப் பிரிவினையால் பிளவுபட்டுக் கிடக்கும் சமுதாயத்தின் மீது சவுக்கடியாக இந்தக் கதை அமைகிறது.

‘குருதி கசியும் கேமரா’ சிறுகதையும் மாறுபட்ட உத்தியால் சிறப்பைப் பெறுகிறது. ஒரு புகைப்படக் கருவியின் மூலம் தோன்றும் காட்சிகள் வழி கதை நகர்த்தப்படுகிறது. அதிகாரத்தை தவறாகச் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களின் சிரமங்களை இக்கதை வழி உணர்த்துவதில் சை.பீர்முகம்மது வெற்றிபெற்றுள்ளார்.

கருத்து வெளிப்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மக்கூறுகளை எழுத்தாளர் சில கதைகளிலும் கதைகளின் தலைப்புகளிலும் பயன்படுத்தியிருக்கிறார். பழைய இலக்கியங்களின் மீதான இவரின் ஈடுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. ‘வாலி வதை’ சிறுகதையில் இராமாயணத்தைப் படித்துக்கொண்டிருக்கும் கோயில் அர்ச்சகர், சுக்ரீவனைக் காப்பாற்ற வாலியை மறைந்திருந்து தாக்கிய இராமனைப்போல், கோயிலை நாடித் தஞ்சமடைந்தவனைக் காப்பாற்ற ரவுடிகளின் மீது கற்களை வீசித் தாக்குகிறார். ‘தேவத்தேர்’ சிறுகதையில் மகாபாரதக் காப்பியத்தின் பஞ்சபாண்டவர்களைக் கதைப்பாத்திரங்களாக உலவ விடுகிறார். குருஷேத்திரம் முடிந்து உலக ஆசைகளை விடுத்து தேவத்தேரில் ஏறிப் பயணமாக பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியோடு புறப்படுகின்றனர். ஆனால், உலக ஆசையில் மாட்டி அனைவரும் அல்லலுற தருமன் மட்டும் ஒரு கறுப்பு நாயோடு தேவத்தேரில் பயணப்படுகிறான். எளிய உயிர்களைக் காட்டிலும் மனிதர்கள் உலக மாயையில், ஆசையில் மாட்டி அலைக்கழிக்கப்படுவதை இது உணர்த்துகிறது.

எழுதுகோல் ஏந்தி சை.பீர்முகம்மது போவது முயல் வேட்டைக்கு அல்ல. புலி வேட்டைக்கு என்பதை அவரின் சிறுகதைத் தலைப்புகளே வாசகனுக்கு அறிவிப்பு செய்கின்றன. கதைகளை வாசிக்கத் தொடங்கும்போதே வாசகனின் மனத்தை வார்த்துச் சிறுகதைகளுக்குள் அனுப்பும் வேலையை தலைப்புகள் செய்துவிடுகின்றன. எ.கா. வாலி வதை, அசுணப் பறவை, அக்கினி ஸ்தம்பனம், மாயான காண்டம்.

இவரின் எல்லாக் கதைகளிலும் அடிநாதமாக இழையோடி வருவது சமுதாயத்தின் மீதான கரிசனமும் மனத்தில் பட்ட கருத்துகளைத் துணிவாக எடுத்தியம்பும் துணிச்சலும்தான். எந்தக் கதையிலும் பிரச்சார நெடி தூக்கலாகத் தெரியாதவாறு பாத்திர வார்ப்புகள், சுவையாகச் சொல்லப்படும் நிகழ்ச்சிகள், இவருக்கு இசைவாக வசப்படும் மொழி, இவை அனைத்தும் ஒவ்வொரு படைப்பும் வாசகனை ஈர்த்துக்கொள்ளும் வகையில் அவன் வாசிப்புத் தட்டில் பரிமாறப்படுகிறது. இடைவேளை இல்லாமல் சிறுகதை வயலிலே இறங்கி இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் சை.பீர்முகம்மது மூலமாக பல அருமையான சிறுகதைகள் தம்மை எழுதிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டிருக்கும்.

சிறுகதைச் சாலையில் இன்னும் சில இலக்குகளை நோக்கிப் பயணப்பட சை.பீர்முகம்மது அவர்களை வாழ்த்துகிறேன்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வணக்கம்.

    எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களின் சில படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவர் படைப்புகளின் மேல் என் பார்வை அகல விரிவதற்கு உதவிய உங்கள் இந்த ஆய்வு கட்டுரைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

    நம் நாட்டு இளம் எழுத்தாளர்களைப்பற்றியும் சிறிது ஆய்வு செய்யுங்களேன்.

    உங்கள் பார்வைக்கு:
    1. http://bala-balamurugan.blogspot.com/
    2. http://syuvarajan.com/

    மீண்டும் நன்றி :)

    ReplyDelete