‘ஸ்ரீமுருகன் நிலையம்’
இந்நாட்டு இந்தியரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர். பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பாதம் பதிக்க உதவியும் உத்வேகமும் ஊட்டிவரும் கல்வி நிலையம். இது திருமுருகனின் திருப்பெயரால் தகைசார்ந்த டத்தோ டாக்டர் தம்பிராஜாவாலும் அவர்தம் மாணவர் படையாலும் தொடங்கப்பட்ட அமைப்பு. பலரின் கடுமையான உழைப்பால் திட்டமிட்ட பணியால் இன்று நாடு முழுதும் கிளைகள் பரப்பி, 28 ஆண்டுகளாகச் சிறந்த சமூக அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.
ஸ்ரீமுருகன் நிலையம் என் வாழ்வின் உயர்வுக்கு வழியமைத்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 1985 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியினை முடித்து (ரவூப்) பகாங் மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எப்படியாவது படித்துப் பல்கலைக்கழகம் போகவேண்டும் என்ற எண்ணம் தீயாக என்னுள் கொளுந்துவிட்டு எரிந்த வேளை. எங்கே போய்ப் படிப்பது என்று தவித்தபோது ஸ்ரீமுருகன் நிலையம்தான் கைகொடுத்தது. ரவூப் நகரிலிருந்து நானும் காராக் நகரிலிருந்து நண்பன் ஆவுடையாரும் ஒவ்வொரு வார இறுதியில் செந்தூல் தம்புசாமித் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்ட ஸ்ரீமுருகன் நிலைய ஆறாம் படிவ வகுப்புகளில் சேர்ந்து படித்தோம்.
அங்குக் கிடைத்த முறையான வழிகாட்டலும் தன்முனைப்பு உரைகளும் எனக்குள் உத்வேக விதைகளைத் தூவின. போய்ச் சேர்ந்த மறுவாரமே சரித்திரப் பாடத்தில் தேர்வு. மோசமான புள்ளிகள் கிடைத்தன. தேர்ச்சி பெறாதவர்கள் வகுப்புக்கு முன்னால் அழைக்கப்பட்டோம். அவமானமாக இருந்தது. ஆனால், அந்த அவமானம்தான் பிறகு தேர்வுகளில் எனக்கு வெகுமானத்தைப் பெற்றுத் தந்தது. பாங்கி தேசியப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத்தில் இளங்கலையும் முதுகலையும் பெற்று இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன்.
காஜாங் ஸ்ரீமுருகன் நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராக என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். ஏழு லட்சம் வெள்ளிக்கும் மேலான மதிப்புடைய சொந்த 3 மாடிக் கட்டடத்தில் காஜாங் ஸ்ரீமுருகன் நிலையம் கல்விப் பணியாற்றி வருகிறது. தன்னலமற்ற சேவையாளர்கள் இணைந்துள்ள அமைப்பில் நானும் ஓர் அங்கமாக இருப்பதைப் பெருமையாக எண்ணுகிறேன். என் கனவுகளை நனவாக்கிய ஸ்ரீமுருகன் நிலையத்தின் திருப்பெயரை மனம் மறவாமல் உச்சரிக்கிறது.
அண்மையில் (ஏப்ரல் 17) பெட்டாலிங் ஜெயா ஹில்டன் தங்கும் விடுதியில் ஸ்ரீமுருகன் நிலையத்தின் தேசிய நிலையிலான கருத்தரங்கில் கலந்துகொண்டேன். 28ஆம் ஆண்டாக நடந்த கருத்தரங்கு. நாடு முழுவதுமிருந்தும் நானூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். வழக்கம்போல் சூடான உரைகளும் சுடச்சுடத் தகவல்களும் கிடைத்தன.
ஸ்ரீமுருகன் நிலையத்தின் தோற்றுநர் டத்தோ டாக்டர் தம்பிராஜா, இணை இயக்குநர் திரு. சுரேந்திரன் ஆகிய இருவரின் உரைக்குப் பிறகு, நாட்டின் 13ஆவது தேர்தல் குறித்த சிந்தனைகளைத் துணை அமைச்சர் டத்தோ தேவமணி முன் வைத்தார். 12ஆவது தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் - அதன் விளைவுகள், பிரதமரின் திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார். அதே தலைப்பில், அரசியல் ஆய்வாளர் திரு. அன்புமணி பாலனும் பேசினார். மழைக்குப் பிந்திய காளான்களாக முளைக்கும் அதிகமான அரசு சார்பற்ற அமைப்புகளினால் நம் போராட்டங்கள் நீர்த்துப்போகும் நிலைமையை விளக்கினார்.
ஸ்ரீமுருகன் நிலையத்தின் இணை இயக்குநர் திரு. பிரகாஸ்ராவ் அரசின் உபகாரச் சம்பளம் குறித்த விளக்கத்தை அளித்தார். கருத்தரங்கில் அனைவரையும் கவர்ந்த இன்னொரு முக்கிய அங்கம் மலாய்மொழி வல்லுநர் டாக்டர் கதிரேசனின் ‘இண்டர்லோக்’ நாவல் குறித்த கண்ணோட்டம். அவரின் எட்டு பக்க ஆய்வுக் கட்டுரையில் ஆறு பக்கங்களில் அப்துல்லா ஹ¤சேனின் படைப்புத்திறனைப் பாராட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
ஆனால், கடைசி இரண்டு பக்கங்களில் இரண்டு காரணங்களை முன்வைத்து பள்ளிகளில் இந்நாவல் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். இந்நாட்டுக்கு வந்த இந்தியர்கள் தாழ்ந்த குடிகள் என இழிவுபடுத்துவதாலும் இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டிற்கு வந்தேறிகள் என்ற சிந்தனையை இன்றைய தலைமுறைக்கு அழுத்தமாகக் கூறுவதாலும் பயன் ஒன்றும் விளையாது. இதனால் இன ஒற்றுமைக்கு பெரும் பாதகம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கருத்தை அழுத்தமாக முன்வைத்திருந்தால் ம.இ.கா அனுப்பிய குழுவினர் தம் வாதத்தில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், கதைப்போக்கில் காணும் குறைகளை முன்வைத்து நம் போராட்டத்தில் தோற்றிருக்கிறோம் என டாக்டர் கதிரேசன் கூறினார். நிறைவு அங்கத்தில் துணை அமைச்சர் டத்தோ பழநிவேல் உரையாற்றினார்.
மாலை மணி 4.30க்கு கருத்தரங்கு நிறைவுபெற்றது. தங்கும் விடுதியை விட்டு வெளியேறும் போது இந்தக் குறள்தான் என் நெஞ்சில் இனித்தது:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
No comments:
Post a Comment