மனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்
நம் குரல்
Tuesday, May 8, 2012
புதுக்கவிதை புனையாதே (நாடகம்)
காட்சி 1
(விஜயபுரி நாட்டின் தலைநகர் ராஜபாளையம். பரபரப்பு மிகுந்த நகரின் நடுவேயுள்ள மேடையில் பறை அறிவிப்போனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அவனின் அறிவிப்பைக் கேட்க மக்கள் ஆவலுடன் மேடையை முற்றுகையிடுகின்றனர்.)
பறை அறிவிப்போன்: நாட்டு மக்களுக்கோர் புதுச்செய்தி. நற்றமிழ்ப் புலமை மிக்க இலக்கணப் புலிகளுக்கு இனிக்கும் செய்தி! புதுக்கவிதைப் பிரியர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி! மரபுக் கவிதை மன்னர் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் இனி, பேச்சும் மூச்சும் மரபாக இருக்கவேண்டும் என்பது மன்னரின் ஆணை! புதுக்கவிதை என்று புலம்புவோர் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களின் எழுதுகோல்கள் பறிமுதல் செய்யப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள்.
(வழிபோக்கர் இருவர் பறையறிவிப்பு கேட்டு காதைக் கடிக்கிறார்கள்)
வழிபோக்கன் 1: அநியாயமாக இருக்கிறதே! இந்த அக்கிரமத்தைக் கேட்க நாதியில்லையா? நீதி இங்கே செத்து விட்டதா?
வழிபோக்கன் 2: யாரப்பா நீ?
வழிபோக்கன் 1: நானா? என்னைத் தெரியாதா? நான் தான் புதுக்கவிதைப் போராளி நவீனன்.
வழிபோக்கன் 2: ஓ! புதுக்கவிதைப் போராளியா? ஏனப்பா புலம்புகிறாய்? எது அநியாயம்?
வழிபோக்கன் 1: இதுவரை மரபோ, புதிதோ மக்கள் தாங்கள் விரும்பியதைச் சுதந்திரமாக எழுதினார்கள். இனி இதைத்தான் எழுதவேண்டும் எனச் சட்டம் போடுவது அநியாயம் இல்லையா?
வழிபோக்கன் 2: அது எப்படி அநியாயம் ஆகும்? புதுக்கவிதை என்று கண்டதைக் கிறுக்கி, நல்ல தமிழ் ஏடுகளில் குப்பைகொட்டியவர்களின் கொட்டத்தை அடக்குவது எப்படி ஐயா அநியாயம் ஆகும்? இது நல்ல காரியம்தானே?
வழிபோக்கன் 1: ஆமாம். மரபுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் யார்? மரபுக்கவிஞரோ?
வழிபோக்கன் 2: இல்லையப்பா. வெறும் வழிபோக்கன்தான்.
வழிபோக்கன் 1: வெறும் வழிபோக்கனுக்கே இவ்வளவு வாய்க்கொழுப்பா? நிறுத்தும் ஐயா, நிறுத்தும். ஏதேது விட்டால் புதுக்கவிதை எழுதுவோரை நாடு கடத்துவதற்கும் சிபாரிசு செய்வீர்கள் போலிருக்கிறதே! இருக்கட்டும், இருக்கட்டும் புதுக்கவிதை ஆட்சி ஒரு நாளைக்கு புலராமலா போகப்போகிறது? அப்போது மரபைக் கட்டி அழுபவர்கள் மண்டியிட்டே ஆகவேண்டும்.
வழிபோக்கன் 2: அப்படி ஒருக்காலும் நடக்காது. முதலில் உம் வாயைக் கழுவும். அருவருப்பாகப் பேசி என்னிடம் அறை வாங்கிக் கொள்ளாதீர்கள்.
வழிபோக்கன் 1: அறை வாங்குவதா? உம்மை உதைக்காமல் போனால் புதுக்கவிதை என்னை மன்னிக்காது..
(இருவரும் குத்துக்களைப் பறிமாறிக்கொண்டு சட்டையைக் கிழித்துக்கொண்டு தரையில் உருள.. புலவர் கவிராயரின் தாடி கையோடு வந்துவிட நவீனன் அதிர்ச்சி அடைகிறான்.)
வழிபோக்கன் 1: ஆ.. தாடி.. அப்படியானல் நீங்கள் யார்? ஏன் இந்த மாறுவேடம்?
(வழிபோக்கன் 2 முகம் மறைத்து ஓடுகிறான்)
வழிபோக்கன் 1: இவரைப் பார்த்தால் அரண்மனைப் புலவர்போல் உள்ளதே! புலவர்க்கு ஏன் மாறுவேடம்? உளவு பார்க்க வந்தாரோ? வழக்கமாய் மன்னர்தானே மாறுவேடத்தில் வருவார்? அதுதானே மரபு! இது மரபுக்கு மீறிய செயலாக உள்ளதே! ஒன்றும் புரியவில்லையே!
(திரை)
காட்சி 2
(நகரை ஒட்டியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீடு. அங்குத் தன் அறையில் எழுதுகோலோடும் ஏடுகளோடும் போராடிக்கொண்டிருக்கிறான் புதுக்கவிதைப் போராளி நவீனன். உள்ளே நுழைகிற அவன் மனைவி மல்லிகா, மன்னனின் ஆணையை நினைவூட்டி அவனை வம்புக்கிழுக்கிறாள்)
நவீனன்: (எழுதிய கவிதையை வாசிக்கிறான்) நட! இன்றுமட்டுமல்ல. நாளையும் உன்னுடையதுதான் நட! வெற்றி தேவதை உன் விலாசத்தை விசாரிக்கும்வரை நட!
உன் கனவுகளைக் கலை! உறக்கத்தை உதறு! சோம்பலைச் சமாதியாக்கு! அவநம்பிக்கையை அறு! சுறுசுறுப்புக்குச் சுருதியேற்று! உத்வேக எண்ணங்களை உனக்குள் விதை! வெற்றிக்கனி மடியில் விழும் வரை நட! (முகத்தில் பெருமித உணர்வு தென்படுகிறது)
மல்லிகா: என்ன இது? இன்னுமா புதுக்கவிதை எழுதுகிறீர்கள்? மன்னரின் ஆணை உங்கள் காதுக்கும் வந்ததுதானே?
நவீனன்: வராமலா? வந்தது! காதுக்கு வந்ததைக் காதளவில் நிறுத்தி கதவடைப்பு செய்துவிட்டேன். என் உயிரனைய புதுக்கவிதையை எழுதாதே என்று எந்தக் கொம்பன் சொன்னாலும் காது கொடுத்துக் கேளேன். எனைத் தொந்தரவு செய்யாதே மல்லிகா போய்விடு!
மல்லிகா: என்ன இது விபரீதம்? மன்னரின் ஆணையை - மக்கள் தலைவனின் கட்டளையைக் குடிமக்கள் மீறுவது மரபல்லவே! உங்களுக்கு இது மறந்தா போய்விட்டது?
நவீனன்: மறப்பேனா? மரபையே மீறிவிட்டுப் புதுக்கவிதைப் போர்க்களத்தில் வாள் ஏந்திப் போராட வந்துவிட்டவன் நான். என்னிடம் போய் மன்னரின் ஆணையை மீறுவது பற்றி அளக்க வந்துவிட்டாயாக்கும்! போ..போ! நான் கவிதையை எழுதி முடிக்கவேண்டும். பொங்கிவரும் என் கற்பனையைக் கெடுக்காதே!
மல்லிகா: ஐயையோ.. புதுக்கவிதை போதை தலைக்கு ஏறி என்னன்னவோ கூறுகிறீர்களே! இனி மேலாவது உங்கள் புதுக்கவிதை அறுவைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்த்தால் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?
நவீனன்: புதுக்கவிதையின் மகத்துவம் தெரியாதவளே! என்ன வார்த்தை கூறிவிட்டாய்? அறுவை என்று கூறி என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற எப்படித் துணிந்தாய்? புதுக்கவிதையில் உன்னைத் திட்டித் தீர்க்கும் முன் எட்டிப்போய்விடு!
மல்லிகா: போதும் உங்கள் வீராப்பு! புதுக்கவிதையில் என்னைத் திட்டினாலும் தீட்டினாலும் எல்லாம் இனி வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே போய் உங்கள் வீரதீரத்தைக் காட்டி விடாதீர்கள்! பிறகு மாட்டிக் கொள்வீர்கள்!
நவீனன்: வீட்டில் மட்டுமல்ல! நாட்டிலும் நடு ரோட்டிலும் எங்கும் என் புதுக்கவிதையின் போரொலி ஒலித்துக்கொண்டே இருக்கும். மரபு என்கிற மாய வலையால் என்னைக் கட்டிப்போட முடியாது!
மல்லிகா: அப்படியானால் நீங்கள் சிறைக்குப் போகவும் தயாரா?
நவீனன்: சிறைக்கு என்ன? தூக்குமேடைக்குப் போகவும் சித்தமாக இருக்கிறேன்! அழைப்பு வரட்டும்! காத்திருக்கிறேன்!
(அப்போது வீட்டின் கதவு ‘படபட’ வென்று கதவு தட்டப்படுகிறது.)
யார் உள்ளே, கதவைத் திறங்கள்!
நவீனன்: இதோ அழைப்பு வந்துவிட்டது! விடைகொடு மல்லிகா!
மல்லிகா: ஐயோ! வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டீர்களே! (அழுகிறாள்)
மல்லிகா கதவைத் திறக்கிறாள். அரண்மனைக் காவலர்கள் இருவர் முகத்தில் கோபம் கொப்பளிக்க விரைவாக உள்ளே நுழைந்து, மன்னரின் ஆணையை மீறிய நவீனனைத் தரதரவென்று இழுத்துச் செல்கிறார்கள்
காட்சி 3
(மரபுக்கவிதை மன்னர் விஜயவர்மனின் அரச சபை. புலவர் பெருமக்கள் பட்டுப் பீதாம்பரங்களில் பழைய மிடுக்கோடு வீற்றிருக்கின்றனர். நூற்றுக்கும் குறையாத புதுக்கவிதைப் போராளிகள் நவீனன் தலைமையில் குற்றவாளிகளாகக் குவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உடல்களில் ஆங்காங்கே காயங்கள் தென்படுகின்றன)
புலவர் கவிராயர்: மரபுக் கவிதையின் மானங்காத்த மன்னா! வாழ்க நின் வீரம்! ஓங்குக உன் புகழ்!
விஜயவர்மன்: புலவர்பெருமானே! நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களைக் கைது செய்துவிட்டோம். இனி புதுக்கவிதை எழுத இந்த விஜயபுரியில் ஆள் இருக்க மாட்டார்கள்.
புலவர்: ஆமாம் இருக்க மாட்டார்கள். நாம் இருக்க விட்டால்தானே!
விஜயவர்மன்: ஹாஹா.. இனி மரபுக்கவிதைக்குப் பொற்காலம்தான்! ஆமாம், யார் இந்த நவீனன்? புதுக்கவிதைப் போராளியாம்! பொடியன்! யாரெங்கே? இழுத்து வாருங்கள்!
(நவீனனை இழுத்து வருகிறார்கள்)
விஜயவர்மன்: எவ்வளவு கொழுப்பு உனக்கு? பேச்சும் மூச்சும் மரபாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டும் அலட்சியப்படுத்தி விட்டாயே. மரபில்லா கவிதை உயிரற்ற உடல் என்பது சிறு குழந்தைக்கும் புரியுமே!
நவீனன்: மன்னர் மன்னா! மறுத்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். இலக்கணத்துக்குள் சொற்களை அடுக்கு அழகு பார்ப்பதுதான் கவிதை என்று பிழையாகப் பொருள் கொள்ள எங்கள் மனம் ஒப்ப மறுக்கிறது. நாங்கள் கவிதையைக் காப்பாற்றிக் போர்வாளாகக் கைகளில் ஏந்தி இருக்கிறோம்!
புலவர்: வேடிக்கையாக இருக்கிறது மன்னா! இவர்களா கவிதையைக் காப்பாற்றியவர்கள்? கவிதை எனும் அற்புதமான வாளை வளைத்து நெளித்து பல்குத்தும் குச்சியாகப் பயன்படுத்தும் இந்தப் பாவிகளை மன்னிப்பதும் பாவம் மன்னா!
நவீனன்: தவறு கவிராயரே! தவறு! மரபு என்னும் அச்சை வைத்துக்கொண்டு நீங்கள் அச்சு முறுக்காக கவிதைகளைச் சுட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள்தானே ஏழைகளின் வேதனையை அவர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாகப் பாடினோம். இதை மறுக்க முடியுமா?
புலவர்: எதுகையும் மோனையும் இல்லாமல் தத்து பித்து என்று உளறுவதுதான் புதுக்கவிதையா? வாக்கியங்களை உடைத்துப் போட்டால் போதுமா?
விஜயவர்மன்: நியாயமான கேள்வி! கவிதை என்ன மலிவாய்க் கிடைக்கும் கடைச் சரக்கா?
நவீனன்: மன்னா! இங்கே இலக்கணப் புலிகள் கவிதையின் வடிவத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். நாங்களோ உள்ளடக்கத்தைத்தான் உரசிப் பார்க்கிறோம்.
புலவர்: மன்னா! ஜோக்குகளைக்கூட கவிதையென்று கூறும் இவர்களின் நாக்குகளைக் அறுக்கவேண்டும்.
நவீனன்: இவர்கள் நாக்கைத்தான் அறுக்க வேண்டும் மன்னா!
புலவர்: மன்னா, தீர்ப்பை வழங்கிவிடுங்கள்
(மன்னர் சற்று குழப்படைகிறார்.)
விஜயவர்மன்: சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு வாய்ப்போர் தேவைதான். ஆனால், அது அக்கப்போராக ஆகிவிடக்கூடாது. இனி, இந்த கவிதைச் சர்ச்சை நாளையும் தொடரும். சபை கலையலாம்.
காட்சி 4
(மல்லிகாவின் வீடு. கணவன் கைது செய்யப்பட்டதால் கவலையாக இருக்கிறாள்.
அப்போது ஊர்த்தலைவன் மாரிமுத்து அங்கே வருகிறார்.)
மாரிமுத்து: மல்லிகா! ஏன் கவலையாக இருக்கிறாய்? உன் கணவனைக் கைது செய்து ஒரு திங்கள் ஆகிவிட்டதே! இன்னுமா விசாரணை முடியவில்லை?
மல்லிகா: (அழுதுகொண்டே) ஆமாம் ஐயா! போனவர் போனவர்தான். இன்னும் இல்லம் திரும்பவில்லை. புதுக்கவிதை எழுதுவது அப்படி என்ன பொல்லாத குற்றமோ தெரியவில்லை. இந்தக் கவிதைச் சண்டை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை.
மாரிமுத்து: (வேதனையோடு) இந்த ஜென்மத்தில் தீராது மல்லிகா!
மல்லிகா: இதை நீங்களாவது தட்டிக் கேட்கக்கூடாதா?
மாரிமுத்து: கேட்கலாமா? உள்ளூர்த் தலைவன் மாரிமுத்து என்று எனக்குப் பெயர்! ஆனால் உள்ளூரின் சிக்கலை மேலிடத்தில் சொல்லவும் வழியில்லை! பசியும் பஞ்சமும் நம்மை வாட்டி வதைக்கின்றன. பல குடும்பங்கள் வறுமை நோயால் வாடி வதங்குகின்றன.
மல்லிகா: மன்னர் என்னதான் செய்கிறார்?
மாரிமுத்து: அவருக்கும் புலவருக்கும் கவிதைச் சண்டைதான் முக்கியம். நாடும் மக்களும் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? நாட்டு நடப்பு மன்னருக்குத் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. வறுமையும் பஞ்சமும் நமக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்களோ என்னவோ!
மல்லிகா: ஐயா, இதை விடக்கூடாது. மக்களை மறந்துவிட்ட இலக்கியத்தை நாலு வார்த்தை நறுக்கின்னு கேட்டாதான் என் மனசு ஆறும்! புறப்படுங்க!
மாரிமுத்து: உன்னுடைய துணிவைப் பாராட்டுகிறேன் மல்லிகா! பொறுத்தது போதும்! இனி பொங்கி எழுவோம். மக்களா? இலக்கியமா? பார்த்து விடுவோம்!
வா, போகலாம்.
காட்சி 5
(அரச சபையில் சூடான விவாதம் நடக்கிறது. மன்னர் கவிஞர்களின் வாய்ச்சண்டையை ரசித்தபடி சிம்மாசனத்தில் சரிந்திருக்கிறார். இடையிடையே குபீரென்று வாய்விட்டுச் சிரித்துப் பூரிக்கிறார். மாரிமுத்து தலைமையில் மக்கள் திரண்டு வருகிறார்கள்)
மாரிமுத்து: வீராதி வீரரே! எங்கள் விஜயவர்மரே! மக்களின் குறைதீர்க்க உங்களை வேண்டிப் பணிகிறோம்., மன்னா
மன்னர்: யார் நீ?
மாரிமுத்து: ராஜபாளையத்தின் உள்ளூர்த் தலைவன் மாரிமுத்து
மன்னர்: என்ன குறை உங்களுக்கு திடீரென்று? ஏன் இவ்வளவு கூட்டம்? நாட்டில் கொள்ளையர் கொட்டம் கூடி விட்டதா? வானம் பொய்க்காமல் பொய்த்து விட்டதா? கடந்த ஆண்டு பஞ்சம் இந்த ஆண்டும் தலைநீட்டி விட்டதா? என்னதான் நடக்கிறது நாட்டிலே?
மல்லிகா: உங்கள் அத்தனைக் கேள்விகளுக்கும் ஆம் என்பதுதான் எங்களின் பதில் மன்னா?
மன்னர்: யார் இந்தப் பெண்?
மாரிமுத்து: உங்களால் சிறைபிடிக்கப்பட்ட நவீனனின் மனைவி மல்லிகா
மன்னர்: ஓ.. நவீனனின் மனைவியா?
மாரிமுத்து: மன்னாதி மன்னா! எங்கள் கவலைகளுக்கும் கொஞ்சம் காது கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறோம்.
மன்னர்: எனக்கும் இங்கே தீராத கவலைதான். மரபுக் கவிதையா? புதுக்கவிதையா? என்கிற அதிமுக்கியமான முடிவுக்காக இங்கே தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நாட்டு நடப்பை நோட்டமிடுவதில் சற்று சுணக்கமாக இருந்துவிட்டேன்.. (சமாளிக்கிறார்)
மாரிமுத்து: மன்னா! கவிதையைப் பற்றிக் கவலைப்பட நீங்களும் புலவர் பெருமக்களும் இருக்கிறீர்கள். ஆனால், எங்களைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?
மன்னர்: ஏன் நான் இல்லையா? மக்களை அடியோடு மறந்துவிட்ட மன்னனாக என்னை நினைத்துவிட்டீகளா?
மல்லிகா: மன்னா! அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியதைச் சொல்கிறேன். மரபுக்கவிதையோ புதுக்கவிதையோ, அது சமூக நோய்களுக்கு மருந்தாக இருக்க வேண்டும்.
மன்னர்: நீ சொல்வதும் சரிதான். நான் மறுக்கவில்லை!
மாரிமுத்து: மானுடத்தை வலியுறுத்த வேண்டும். நம்பிக்கை நசிந்த உள்ளங்களைத் தட்டிக்கொடுத்து எழுச்சி ஊட்ட வேண்டும்.
மன்னர்: என் கருத்தும் இதுதான். மாற்றமில்லை.
மாரிமுத்து: கவிதை என்றால் அதிலே கவித்துவம் வேண்டும். அழகு வேண்டும்.
மல்லிகா: வாழும் கவிதை வடிவத்தில் இல்லை மன்னா?
மன்னர்: என்ன கூறினாய்?
மல்லிகா: வாழும் கவிதை வடிவத்தில் இல்லை மன்னா!
மன்னர்: ஆகா! என்ன அற்புதமான சிந்தனை! எப்படிச் சொல்கிறோம் என்பதிலேயே சண்டையிட்டு எதைச் சொல்ல வேண்டும் என்பதில் கோட்டை விடலாமா? சே.. வீணான விவாதத்தில் ஒரு திங்களைக் கழிந்து போனதே!
நவீனன்: மன்னா, இதைத்தான் நானும் சொல்கிறேன். அவரவர் தமக்குப் பிடித்த வடிவத்தில் எழுதட்டும்! நல்ல கவிதைகளைக் காலம் அடையாளம் காணட்டும்!
புலவர்: மன்னா!
மன்னர்: போதும் புலவரே! போதும். என் தவறு எனக்குப் புரிந்து விட்டது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி! புதுக்கவிதை என்பது சொற்கள் கொண்டாடும் சுதந்திர விழா! அதைத் தடுக்க வேண்டாம். மக்கள் விரும்பியதை எழுதட்டும்! மரபையும் போற்றுவோம், புதிய மரபுகளையும் வரவேற்போம்.
புலவர்: இருந்தாலும் மன்னா, புதுக்கவிதையைப் போய் எப்படி..?
மன்னர்: மக்கள் மாறிவிட்டார்கள் புலவரே! இனியும் நம் அரசு மாறாவிட்டால் நம் அரசையே மக்கள் புரட்சியால் மாற்றிவிடுவார்கள். அதற்கு முன் நாம் மாறிவிடுவோம். வரலாற்றை நீங்கள் படிக்கவில்லையா? வரலாற்றின் படிப்பினை மிக முக்கியம் புலவரே!
(எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம்)
மன்னர்: எல்லாரையும் விடுதலை செய்யுங்கள். இனி, கவிதை எழுத விஜயவர்மன் ஆட்சியில் கட்டுப்பாடுகள் இல்லை மக்கள் பஞ்சம் போக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவை என் ஆணை!
நவீனன்: கவிதையின் விலங்கு உடைத்த விஜயவர்மன் வாழ்க
மல்லிகா: வீராதி வீரர் விஜயவர்மன் புகழ் ஓங்கட்டும்
மாரிமுத்து: மக்கள் நலம் காக்கும் மகேசன் வாழ்க!
(திரை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment