கோயில் வாயிலில் கம்பீரமாக எழுந்து நிற்கும்
கோபுர அழகை அள்ளிப் பருகியவாறு நெருங்கி
வலது பக்கம் திரும்பி
சிறிய நடைபாதையோரம் நடந்தால்
கையேந்தும்
மனிதர்களுக்கு எதிரே
வரிசை பிடிக்கும் கடைகளில் காணலாம்
விதம்விதமாய்க் கடவுள்களை
கண்ணாடிப் பிரேமில் நிலைகொண்டவாறு
ஆயுதங்களோடு அபயக்கரம் நீட்டியவாறு
மௌனம் பூத்த முகத்தில் காட்சி தந்தவாறு
கருணைபொழியும் புன்னகை சிந்தியவாறு
கோபக்கனலில் பொங்கியவாறு
அணிமணி அலங்காரங்களில் மின்னியவாறு
விற்பனைக்குக் காத்திருக்கிறார்கள் கடவுள்கள்
கடைகளிலிருந்து தூதுவர்களின்வழி
அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்கள்
நம்மோடு அழைத்துச் சென்றால்
நம் சிக்கல்கள் தீர வழி பிறக்குமென்றும்
நம் இன்னல்கள் இல்லாதொழியுமென்றும்
நம் கனவுகள் கைகூடுமென்றும்
நம் இல்லங்களில் மகிழ்ச்சி நிறையுமென்றும்
நம் பாதைகளில் முட்கள் மறையுமென்றும்
நம் தீவினைகள் தீருமென்றும்
அங்கிருந்து திரும்பி நடந்து
கோபுரம் கடந்து உள்ளே நுழைகையில்
எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகங்கள் மலர
பார்வையால் விசாரித்தவாறு
நம்மை வரவேற்கின்றன
வழிபாட்டுக்குத் தம்மால் துணைவர முடியுமென்றும்
தலவரலாறு தமக்குத் தெரியுமென்றும்
சிறப்பு வழியில் போகமுடியுமென்றும்
குறைந்த செலவே ஆகுமென்றும்
பிடிவாதமாய்ப் பின்தொடரும் கால்கள்
எல்லாம் தவிர்த்து உள்ளே நடந்து
பார்வை மறைக்கும் கூட்டத்தின் ஊடே
தெரிந்ததாய்க் கற்பிதம்செய்து
கைகூப்பி வணங்கித் திரும்புகிறோம்
மனம் நிறைய அமைதியை நிறைத்தவாறு
வணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்வது உண்மைதான்... இன்று தெய்வங்களும் விற்பனைக்கு வந்து
விட்டது...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மன நிறைவு கிடைக்காது...
ReplyDelete