நம் குரல்

Monday, September 15, 2014

கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தாபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் சார்பில் ஆண்டுதோறும் மலேசியா ௲ சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவரும் சிறந்த நூலுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. 2013இல் வெளிவந்த நூல்களில் மலேசியக் கவிஞர் ந.பச்சைபாலனின் ‘திசைகள் தொலைத்த வெளி’ கவிதைத் தொகுப்புக்கும் சிங்கப்பூர் சூரிய ரத்னாவின் ‘நான்’ சிறுகதைத் தொகுப்புக்கும் வழங்கப்பட்டன. விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

முஸ்தாபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தாபா முன்னிலை வகிக்க, விழாவுக்குத் தலைமையேற்ற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை விருதுக்குரிய நூல்களைத் தேர்வுசெய்யும் முறை பற்றியும் தேர்வுபெற்ற இரண்டு நூல்களின் சிறப்பினை ஆய்வுரையாக வழங்கினார். முன்னதாக, வரவேற்புரையாற்றிய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், இவ்வாண்டு விருதுபெறும் இரு எழுத்தாளர்களும் தத்தம் நாடுகளில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று எழுத்தாளர்களாக உருவாகிய மண்ணின் மைந்தர்கள் என்றார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத் தலைவர் இராஜாராமும் வாழ்த்துரை வழங்கினார்கள். அறக்கட்டளை உருவாகவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழ்ப் படைப்பாளர்களுக்கு அங்கீகாரம் பெறவும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய பங்களிப்பை இராஜேந்திரன் தமதுரையில் விளக்கினார்.

தொடர்ந்து, விருதுபெறும் படைப்பாளர்கள் பற்றிய தகுதியுரையைத் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் தலைவர் முனைவர் சா. உதயசூரியன் வழங்கினார். நூல்கள் பற்றிய மதிப்புரையை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வ.மகேஸ்வரன் வழங்கினார். பின்னர்,  துணைவேந்தர் முனைவர் ம.திருமலை விருதுபெறும் இரு எழுத்தாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்துத் தங்கப்பதக்கம் வழங்கினார். ந,பச்சைபாலனும் சூரிய ரத்னாவும் ஏற்புரையில் தங்களின் எழுத்துலக ஈடுபாட்டினை விளக்கியதோடு கரிகாற்சோழன் விருதின் உருவாக்கத்திற்குக் காரணமான அனைவருக்கும் தங்கள் நன்றியைப் பதிவு செய்தனர்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப.அருணாசலம் நன்றியுரையாற்றினார். இரு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் இவ்விழா சிங்கப்பூரில் நடைபெறுவது இரண்டாவது முறையாகும். இவ்விழா, தஞ்சாவூர், சிங்கப்பூர், கோலாலம்பூர் என சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.









2 comments:

  1. வணக்கம்

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இனிய வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete