நம் குரல்

Saturday, December 22, 2018

அம்மா : சில பதிவுகள்1.              இறுதியாய்..

மீள முடியாத பயணத்திற்கு
அம்மா தயாராகிக் கொண்டிருந்தார்

சொற்களை இழந்த நிலையில்
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக்கொண்டிருந்தோம்

வாழும் நாளெல்லாம்
அம்மா அள்ளி வழங்கிய அன்பும் கரிசனமும்
மனவெளியெங்கும் நிறைந்திருந்தது

ஒரு தலைமுறையின்
இறுதிப் புள்ளியாய்
அடுத்தடுத்த தலைமுறைகளை
கண்நிறைய வாழ்த்திவிட்டு
கண்ணயரப் போகிறார்

“என்னால எங்கும் வர முடியாதப்பா
பாத்து செய்யுங்க”
அம்மா இறுதியாய்ப் பேசிய சொற்கள்
இன்னும் கேட்கின்றன

எல்லாம் கடந்துபோகும் வாழ்வில்
அம்மாவின் நினைவுகளும்
காலநதியில் கரைந்து போகுமோ?

2.              பழக்கம்

இடது கைப்பழக்கம் அம்மாவுக்கு
உணவு பரிமாறினாலும்
அடுக்களையிலும் வெளியிலும்
ஏதும் வேலையென்றாலும்
சட்டென்று ஒரு பொருளை
யாரிடமாவது நீட்டினாலும்
முன்னே நீளும்
அவரின் இடக்கை

அம்மாவின் பழக்கங்கள்
என்னிடமும்
நீக்கமற நிறைந்து போயின

இதோ
இறுதியாய் முகம் பார்த்து
கரண்டியின் நுனியில்
சில பால் சொட்டுகளை
அம்மாவின் வாயில் விட
முன்னே நீளுகிறது
என் இடக்கை
       3.         இறுதிப் பயணத்தில்

அப்பா விடைபெற்றுச் சென்ற
நாளிலிருந்து
மலர்களோடு அம்மாவுக்கு
உறவு முறிந்துபோனது

இறைவழிபாட்டின்போது
பூசை மேடையில்
மலர்களை வைக்கும்போது
அவற்றோடு சினேகம் கொள்வார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்
மலர்களாலும் மாலைகளாலும்
அம்மாவைத் திணறடிக்க முடிந்தது
அவரின் இறுதி ஊர்வலத்தில்


4.              மரங்களைப் போல

வளங்குறைந்த வறண்ட மண்ணில்
வேர் இறக்கி
பிடிமானம் கொண்டெழுந்து 
நிமிர்ந்து கிளைகளெனும் கைகள் நீட்டி
காற்றைச் சலித்தெடுத்து
நிழலும் கனிகளும்
நோய் நிவாரணமும் தரும்
மரங்களைப் போல
அம்மாவும்

பெற்றுக்கொண்டது குறைவாகவும்
அள்ளித் தந்தது அதிகமாகவும்

     5.              ஆசைதீரப் பேசி...

ஆசைதீரப் பேசித் தீர்க்காமல்
அல்லது பிறரின் பேச்சைக் கேட்காமல்
பொழுது போகாது
அம்மாவுக்கு

ஒரு காலத்தில்
அண்டை வீட்டில் போய்
கதைகள் பேசி
அப்பாவிடம் திட்டுகள் வாங்கினார்

தோட்டம் விட்டு
எங்களோடு நகருக்குக்
குடியேறிய நாளிலிருந்து
பேச்சுத் துணையின்றித் தவித்தார்

தொலைக்காட்சியின் நாடகங்களும்
தமிழ்ச்செய்தியும்
அஸ்ட்ரோ விழுதுகளும்
பேச்சுத் துணையாக
மனம் பாவித்தார்

பேச்சுகள் அலுத்து
போதுமென நினைத்த நாளில்
நினைவுகள் தப்ப
ஐயா ஐயா எனச் சொற்களோடு
மௌனமானார்
                                              6.                மலர்களால்

அப்பா விடைபெற்றுச் சென்ற
நாளிலிருந்து
மலர்களோடு அம்மாவுக்கு
உறவு முறிந்து போனது

இறைவழிபாட்டில்
பூசைமேடையில்
மலர்களை வைக்கும்போது
அவற்றோடு சினேகம் கொள்வார்

நீண்ட இடைவெளிக்குப் பின்
வண்ண வண்ண மலர்களாலும்
மாலைகளாலும்
அம்மாவைத் திணறடிக்க முடிந்தது
அவரின் இறுதி ஊர்வலத்தில்
                             
                       7.              இரகசியம்

67 ஆண்டுகளாக
பலருக்கும் தெரியாமல் இருந்த
அம்மாவின் இரகசியம்
கடைசியில்தான் வெளிப்பட்டது

அக்காள்தான் சொன்னார்
சடங்குகள் முடிந்து
பெட்டியை மூடி
அதன்மேல் இளஞ்சிவப்பில் விரித்தது
அம்மாவின் திருமணச் சேலை என்று


      8.              சிரமம் வேண்டாம்

யாருக்கும்
சிரமம் கொடுக்க வேண்டாம்
என்று நினைக்கும் அம்மா
தன் இறுதி மூச்சை
நிறுத்திக்கொண்டது
ஒரு டிசம்பர் மாதப்
பள்ளி விடுமுறையில்       9.                ஒரு வரியாய்..

“முன்னொரு காலத்தில
எங்களுக்கு சித்தாயின்னு
ஒரு பாட்டி இருந்தாங்க”

இப்படி ஒரு வரியாய்
சிறு கூற்றாய்
வருங்காலத்தில்
பேரன் பேத்திகள் பேச்சில்
எப்பொழுதாவது
அம்மா எட்டிப் பார்ப்பார்


       10.              பேசாமல் அமைதியாய்..

எப்பொழுதாவது
சந்தித்துக்கொள்ளும் உறவுகள்
ஏதேதோ காரணங்களால் பிணங்கி
எட்டி நின்றவர்கள்
வாழ்க்கைப் பரபரப்பில்
கைகுலுக்க முடியா நட்புகள்

எல்லாருக்கும்
அவசரத் தந்தி அனுப்பி
ஒருசேர சந்திக்க வைத்த
அம்மா மட்டும்
பேசாமல் அமைதியாய்
ஒதுங்கியிருந்தார்

       11.              சொற்கள்

சுவாசத்தின் வேகம் அதிகரித்து
நெஞ்சக்கூடு ஏறி இறங்க
அம்மாவின் காதுக்குள்
உறவுகள்
இறைநாமம் உச்சரிக்க...

தள்ளி அமர்ந்து
கையறுநிலையில்
கைகளைப் பிசையும்
என மனம் நிறைய
சொற்கள்...சொற்கள்...2 comments:

  1. வரிகளின் வலியை நானும் கடக்கிறேன்..மெல்ல மெல்ல..

    ReplyDelete