நம் குரல்

Sunday, January 16, 2011

இண்டர்லோக் நாவலும் இனமான இழிவும் NOVEL INTERLOK - MANGSA PRASANGKA LIAR?தேசிய இலக்கியவாதி டத்தோ அப்துல்லா உசேனின் ‘இண்டர்லோக்’ நாவல் இவ்வாண்டு எஸ்.பி.எம். மாணவர்களுக்கு மலாய் மொழிப்பாடத்தின் இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை யாரும் எதிர்பாராதது. ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தகவல் ஊடகங்களில் இது குறித்த பல்வேறு கருத்துக்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நாவலில் இந்திய இனத்தை இழிவுபடுத்தும் ஒரு சொல்லை நீக்கவேண்டும் அல்லது ஒரு பத்தியை நீக்க வேண்டும் அல்லது நாவலையே நீக்கவேண்டும் என ஒவ்வொரு தரப்பும் தம் வாதங்களை முன்வைக்கிறார்கள். இதற்கான முடிவு என்ன என இந்திய சமுதாயம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசிய மக்களே காத்திருக்கிறார்கள்.

இந்த நாவல் ‘ஒரே மலேசியா’ கொள்கைக்கு வலுவூட்ட அண்மையில் எழுதப்பட்ட நாவல் என்றே பலரும் நினைக்கிறார்கள். இந்த நாவல், நாடு சுதந்திரம் அடைந்த 10 ஆண்டுகள் நிறைவையொட்டி 1967இல் டேவான் பகாசா டான் புஸ்தாகா நடத்திய நாவல் போட்டிக்காக எழுதப்பட்டது. 1910 முதல் 1940 வரை ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களின் பின்னணியையும் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களையும் முன்வைக்கிறது. குறிப்பாக, செமான், சிங் குவாட், மணியம் ஆகியோரின் மூன்று குடும்பங்களைப் பற்றிய கதைகள் மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இறுதி அத்தியாயத்தில், ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையிலிருந்து விடுபட்டு மூன்று இனங்களும் தமக்குள் உதவிக்கொண்டு ஒன்றுபடும் சூழலை நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நாவலையும் கதைப்போக்கையும் ஆழ்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. நல்ல நோக்கத்துக்காக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. மூவின ஒற்றுமையின் முக்கியம் குறித்த சிந்தனையை நாவலில் காணமுடிகிறது. ‘ஒரே மலேசியா’ கொள்கைக்கு ஏற்ப இந்த நாவலின் கருத்துகள் அமைந்துள்ளன. ஆனால், இந்தியர் அடையாளம், பின்னணி குறித்து நாவலில் இடம்பெற்றுள்ள சொல், வாக்கியங்கள் இந்தியரை இழிவுபடுத்துவதாக உள்ளதால் இந்தியரிடையே சினத்தைக் கிளறியுள்ளது.

இழிவுபடுத்துவதாக உள்ளது ஒரு சாராரும் இழிவுபடுத்தவில்லை என்று இன்னொரு சாராரும் முரண்படும் சூழல் செய்திகளாகித் தகவல் ஊடகங்களில் சூடு பறக்கிறது. தமிழ் நாளிதழ்களில் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், நாவல் எரிப்பு என எதிர்ப்புக்குரல்கள் உரத்து ஒலிக்கின்றன. ஆனால், மலாய்மொழி ஏடுகளில் குறிப்பாக, உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான் போன்றவற்றில் இந்த நாவலைத் தற்காக்கும் தீவிர முயற்சிகளைக் காண முடிகிறது.

இந்தியரை இழிவுபடுத்தும் வாசகங்கள் பல இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் பின்வருபவை முக்கியமானவை:

Mereka yang dari arah ke utara sedikit bercakap bahasa Malayalam atau Telugu, tetapi hampir semuanya tahu bahasa Tamil. Malayalam dan Telugu pun berasal dari satu rumpun bahasa Dravidia. Satu perkara besar yang membuatkan mereka senang berkaul adalah kerana mereka tergolong dalam satu kasta Paria. (பக்கம் 211)

வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் மலையாளம், தெலுங்கு மொழிகள் பேசுவார்கள். ஆனால், அனைவருக்கும் தமிழ்மொழி தெரியும். மலையாளமும் தெலுங்கும் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அவர்கள் அனைவரும் இயல்பாகப் பழகுவதற்குக் காரணம் எல்லாரும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள்


Mereka tidak perlu takut akan mengotori sesiapa kalau bersentuhan. (பக்கம் 211)

யாரையும் தொட்டால் தீட்டாகும் என்று அவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

இந்தியரின் கோபத்திற்கு இவையே முக்கிய காரணங்கள். சாதிய உணர்வுகள் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் மண்டிக்கிடந்தாலும் ஏடுகளிலும் எழுத்துகளிலும் அவற்றை வெளிப்படையாக எழுதுவது இல்லை. இந்த உணர்வை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியுமா? இதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணமாக உள்ளது.

மலாய் ஏடுகளில் நாவலைத் தற்காப்பவர்கள் முன் வைக்கும் வாதம், சாதியமுறை இந்திய இனத்தில் இன்னும் உள்ளது. இதைத்தானே எழுதியுள்ளார். இதில் தவறு ஏதும் இல்லையே. அதுமட்டுல்லாமல் இது வரலாறு. அதை எப்படி மாற்றி எழுத முடியும்? இவர்களின் வாதத்திற்கு இணைப்பேராசிரியர் முனைவர் சிவமுருகன், உமாபாகன் அம்பிகைபாகன், பரதன் குப்புசாமி, குமரவேல், சுவா சோய் லெக், லிம் சுவீ தின் போன்றோரைத் துணைக்கு அழைக்கிறார்கள். இவர்களைப் போன்று இன்னும் பலரும் நாவலில் இன இழிவு இல்லை என்று கூறுகிறார்களாம்! அதுமட்டுமல்லாமல், மகாத்மா காந்தி சாதி ஒழிப்புக்குப் பாடுபட்டதையும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள Untouchable, Coolies, Nectar in a Sieve, He Who Rides a Tiger போன்ற நாவல்கள் சாதியக் கொடுமைக்கு வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

(இன்னும்...)No comments:

Post a Comment