நம் குரல்

Saturday, June 18, 2011

ஆடு மேய்த்த அந்த நாட்கள்


நீங்கள் ஆடு மேய்த்ததுண்டா?

நான் மேய்த்திருக்கிறேன்.

என் அம்மா எந்நேரமும் தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் வெற்றிலைப் பாக்குப் பை போல், அந்த நாட்களின் ஞாபகங்கள் என் நினைவின் பிடியில் இன்னமும் இறுக்கமாகவே இருக்கின்றன.

என் பத்து வயதிலிருந்து பதினைந்து வயது வரைக்கும் ரவாங்கை அடுத்து உள்ள சுங்கை சோ தோட்டத்தின் அடர்ந்த ரப்பர்க் காட்டுக்குள் ஆடுகளோடு அளவளாவி வாழ்ந்த அந்த நாள்கள் இருக்கின்றனவே அவை அலாதியானவை. என் ஆராதனைக்கு உரியவை.

அவை எளிதில் அழித்துவிட முடியாத அழுத்தமான கோலங்களாக, காலக் கரையான் அரித்துவிட முடியாத கல்வெட்டுகளாக, அழகிய வார்ப்படங்களாக என்னுள்ளே பதிந்து போயிருக்கின்றன.

அந்த நினைவுகளின் நீரோடையில் மீண்டும் ஒரு முறை ஆசை தீர மூழ்கி எழ, இதோ உங்கள் ஒவ்வொருவரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு என் இளமை நாட்கள் நோக்கிப் பயணப்படுகிறேன்.

ஆடு வளர்ப்பதும் மாடு வளர்ப்பதும் தோட்டப்புற வாழ்க்கையில் இரண்டறக் கலந்துபோன ஒன்றுதான். ஆயினும், ஆடு மேய்க்கும்போது எனக்கு நேர்ந்த அனுபவங்கள் இறுகிக் கிடந்த என் மனத்தை அத்துணை ஆழமாக உழுது போட்டதுதான் எனக்கு விந்தையாக இருக்கிறது.

என் அப்பா ஆடுமாடு வளர்ப்பதில் கைராசிக்காரர். எனக்குப் பத்து வயதானபோது ஆடு மேய்க்கும் பக்குவத்தை எனக்குப் பயிற்றுவித்து என்னை உற்சாகமாத் தட்டிக்கொடுத்து மேய்ச்சல் காட்டுக்கு ஆடுகளோடு அனுப்பி வைத்தவர் அவர்தான்.

அதுவரையில் குண்டு விளையாடவும் பட்டம் விடவும் சைக்கிள் ஓட்டவும் வெட்டுக்கிளி பிடிக்கவும் மட்டுமே தகுதி பெற்றிருந்த நான், பதவி உயர்வு கிடைத்த பூரிப்பில் திளைத்துப் போனேன்.

பள்ளி முடிந்து வீடு வந்து உடைமாற்றிய கையோடு நண்பகல் உணவைத் துரித கதியில் வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு, ‘மே..மே.. எனப் பசி இராகத்தில் குரல் கொடுக்கும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு போனால் மீண்டும் வீடு திரும்ப மாலை மணி ஆறாகிவிடும்.

அப்பொழுதெல்லாம் ஆடுகள் மேய்வதைப் பார்ப்பதே அலாதியாகவும் ரசிப்புக்கு உரியதாகவும் இருந்திருக்கிறது. ஒட்டிய வயிறுகளோடு வந்த ஆடுகள் இலைதழைகளையும் மீனாக்கொடிகளையும் வயிறு புடைக்க மேய்ந்து விட்டு ஆடி அசைந்து தோட்ட மண்சாலையில் நடக்கத் தொடங்கினால் உற்சாகப் பாட்டொன்று எனக்குள் உற்பத்தியாகிவிடும்.

இயற்கையை நேசிக்கவும் அழகாயிருப்பதையெல்லாம் ஆராதிக்கவும் பள்ளியின்றி ஆசிரியரின்றி எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த மஞ்சள் வெயில் பூசிய மாலைநேர நாட்களை, இப்பொழுதும் என்னால் துல்லிதமாக மனக் கண்களால் துலாவ முடிகிறது.

ஆடுகளை மேயவிட்டு விட்டு பசுமை படர்ந்த ரப்பர் காடுகளுக்குள் காலாற நடப்பேன். அணிவகுத்து நிற்கும் கித்தா மரங்களின் நேர்த்தி கண்டு வியப்பேன். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் வாரி இறைத்திருக்கும் அந்தி நேர அழகை அள்ளிப் பருகுவேன். மலைக்காடுகளின் மடியில் பாம்புபோல் படுத்திருக்கும் மண்சாலைகளை விழிப்பார்வையால் விசாரிப்பேன்.

ஓ.. அந்த நாள்கள் எனக்குள் அரும்பிய ரசனை உணர்வுகளைத் திருகிவிட்டு, துளிர்விட்ட தளிருக்கு நீர் பாய்ச்சிய எழுச்சி நாள்கள் என்பேன்!

*********************************************
ஒருமுறை ஆடு மேய்க்கப் போகாமல் ‘திட்டி’ போட்ட நாளில், மேய்ந்துவிட்டு கொட்டகை திரும்பிய ஆடுகளின் எண்ணிக்கை சரிதானா என எண்ணிப் பார்க்கிறேன்.

ஒன்று குறைகிறது. மனம் பதைபதைக்கிறது. பேறு காலத்திற்காகக் காத்திருந்த செவலை ஆடுதான் அஃது என்று தெரிந்தபோது பதைபதைப்பு இரட்டிப்பானது. அப்பாவுக்குத் தெரிந்தால் என்னைத் துவைத்து எடுத்துவிடுவாரே என நினைத்தபோது அது மும்மடங்காகியது. பயத்தோடு வீட்டுக்குள் பதுங்கியிருந்தேன்.

மாடுகளுக்குக் கஞ்சி வைத்துவிட்டு பால் கறந்துகொண்டு ஏழரை மணிவாக்கில் வீடு வந்த அப்பா விசயம் தெரிந்து கோபத்தில் கொதித்துப் போனார்.

“ஆட்டோடு வராமல் வீட்டுக்குள் நுழையாதே போடா” எனக் கடுமையான குரலில் கட்டளை பிறப்பிக்கிறார். நான் தேம்பிக்கொண்டே ஆறாம் நம்பர் மலைக்காட்டுப் பக்கம் பயணப்படுகிறேன்.

தோட்ட லயங்களின் மேற்கே, மேட்டுப்பகுதியில் தொடங்கும் மண்சாலையில் அந்தக் கும்மிருட்டு வேளையில் கால் பதித்தபோது அதுவரை அடக்கிவைத்த ஆதங்கம் அவிழ்ந்துகொண்டது.

உலகத்துச் சோகத்தையெல்லாம் மொத்த குத்தகை எடுத்துக்கொண்டவன்போல ஓ..வெனக் கதறிக் கதறி அழுகிறேன். கண்களின் கரைகள் உடைப்பெடுத்துக்கொண்டு தாரை தாரையாகக் கண்ணீர் வழிகிறது.

“என்னை இப்படிப் படைத்து விட்டாயே இறைவா! என் செவலை ஆட்டை வீட்டுக்கு அனுப்பாமல் என்னைச் சோதிக்கலாமா? இஃது அடுக்குமா? நான் பண்ணிய பாவம்தான் என்ன?” அந்தப் பிஞ்சு வயதிலேயே விரக்தியில் வீழ்ந்துபோன வயதான ஒரு முதியவனைப்போல் இறைவனை நொந்துகொண்டு அழுகிறேன்.

பல நாட்கள் தேடியும் ஆசையாய் வளர்த்த அந்தச் செவலை ஆடு கடைசி வரைக்கும் கிடைக்காமலே போனதில் இப்பொழுதும் மனத்திற்குள் இழைகிறது அழுத்தமான வருத்தம். அம்மா எப்போதாவது “பின்னாடி ஒரு முறை ஒரு செவல ஆடு செனையா இருக்கும்போது காணாம போயி, இவனும் கொஞ்ச நாளா மனசு சரியில்லாம....” என்று வெற்றிலைப்பயை அவிழ்த்துக்கொண்டே அந்தப் பழைய தோட்ட வாழ்க்கையை அண்டை வீட்டாரோடு அசைபோடும்போது..

காயம் பட்ட கித்தா மரம் மொக்குத்தட்டி விட்டதைப்போல் அந்தக் கண்ணீர் நாட்கள் மாறாத சோகத்தோடு இன்னமும் முகங்காட்டிக் கொண்டு முன்னே வந்து நிற்கும்.

***********************************************
படிக்கும் பழக்கம் எனக்குப் பிடிகும் பழக்கமாக ஆனதற்கு அந்த ஆடு மேய்த்த நாட்களே அடித்தளமிட்டுள்ள என்பேன். வேர் பிடுங்கிச் சாய்ந்த கித்தா மரத்தின் அடிமடியில் அமர்ந்துகொண்டோ, கித்தாமர நிரைகளில் காணும் சருகுகளில் தலைசாய்ந்துகொண்டோ அம்புலிமாமா கதைகளில் வரும் கதைமாந்தர்களோடு ஒன்றிப் போயிருக்கிறேன்.

அடிக்கடி அவஸ்தைக்குள்ளாக்கியது விக்கிரமாதித்தன்தான். வேதாளத்தின் கேள்விக்கு அவனால் விடைகூற முடியாமல் போய்விடுமோ எனப் பதைபதைப்பு மனத்திற்குள் பரவும். ஆனால், ஒவ்வொரு முறையும் அவனின் சரியான விடையால் மனம் நிம்மதிப் பெருமூச்சுவிடும்.

ஒவ்வொரு நாளும் தனிமை என்னைத் தத்தெடுத்துக்கொண்டு எனக்குள் இருந்த கற்பனையின் ஊற்றுக்கண்ணைத் திறந்துவிட்டு, ஆட்டு இடையனாய் இருந்தவனை அங்குலம் அங்குலமாய்ப் படைப்பிலக்கியத்தின் பக்கம் பாதம் பதிய நடக்கச் சொல்லிக் கொடுத்ததே.. அதை நன்றி உணர்வோடு இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன்.

என்னைப்போலவே ஆடு மேய்க்க வரும் என் வயது ஒத்த தோழர்களோடு ஆண்டு முழுவதும் நுரைத்துக்கொண்டோடும் ஆற்றில் ஆசை தீரக் குதித்துக் கும்மாளம் போட்டதும் பனி கொட்டும் இரவில் முதல் நாள் தோட்டத்தில் பார்த்த படத்தின் கதாநாயகர்களை மனத்தில் படமெடுத்துக்கொண்டு கித்தாமரக் குச்சிகளை ஒடித்துக்கொண்டு வாட்போரில் ஈடுபட்டதும்.... எல்லாம் எளிதில் அழித்துவிட முடியாதவாறு மனத்திற்குள் அப்பிக்கொண்டு விட்டன.

அந்தப் பிஞ்சு வயதிலேயே ஆடுகளுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். சொறி, சிரங்கு வந்த ஆடுகளுக்கு அப்பா தயாரித்துக் கொடுத்த மருந்து எண்ணெயைப்பூசி மருத்துவம் பார்த்திருக்கிறேன். தாய்ப்பால் போதாத ஆட்டுக்குட்டிகளுக்குப் பசும்பாலைப் போத்தலில் நிரப்பி, பாலூட்டி அவற்றைத் தாயன்போடு வளர்த்திருக்கிறேன். தீபாவளி வரும்போதெல்லாம் ஆசையாய் வளர்த்த கிடாவை அப்பா வெட்டிக் கூறுபோடுகையில் எட்டி நின்று பார்த்துக் கண்களைக் கசக்கியிருக்கிறேன்.

அதுதானோ? ஆடுகளோடு கொண்ட அந்த நெருங்கிய சினேகம்தானோ, உயிரினங்களை நேசிக்கவும், ஐந்தறிவு கொண்டவை என அவற்றை அலட்சியப்படுத்தாமல் அன்பு செலுத்தவும் எனக்குக் கற்றுக்கொடுத்தது?

என்னதான் தோட்டப்புற வாழ்க்கையைவிட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக அடிபெயர்ந்தும் குடிபெயர்ந்தும் நகர வாழ்க்கைக்கு நகர்ந்து வந்து விட்டாலும் அந்தப் பழைய உயிர் நாட்களை மறப்பதென்பது எனக்கு ஒண்ணாது.

ஆடு மேய்ப்பது அசிங்கம் என யாராவது அருவருத்துக்கொண்டு முகஞ்சுழிப்பார்களேயானால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆடு மேய்ப்பதென்பது ஒன்றும் அசிங்கமன்று.

அஃது ஓர் அருந்தவம். அந்த அனுபவம் அலாதியானது. அஃது என் நேசிப்புக்குரியது; ஆராதனைக்குரியது.

நான் மேய்த்திருக்கிறேன்.

நீங்கள் ஆடு மேய்த்ததுண்டா?

thangameen.com (Jun)

No comments:

Post a Comment